Wednesday, July 27, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5): 28-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5):
--------------------------------------------------------
ரயிலுக்கான அறிவிப்பு வந்தவுடன் பாதுகாப்பு சோதனையை முடித்து பயணிகள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். எனது முறை வந்தது. பயணச்சீட்டு  ஆய்வாளர் ஒரு பெண்மணி.
''உங்கள் பெயர்?''
''ஜெயசீலன்''
''மன்னிக்கவும்...உங்கள் பெயர் பட்டியலில் இல்லை.."
''அதெப்படி...43ஆம் இருக்கை எனக்காக ஒதுக்கப்பட்டது''
''இல்லை...அது கணபதி என்பவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது''
''அதுவும் நான் தான் ...அது என் தந்தையாரின் பெயர்''
''உங்கள் தந்தை எங்கே?''
''அவர் இந்தியாவில் இருக்கிறார்...ஏன் கேட்கிறீர்கள்?''
''இந்தியாவில் இருக்கும் நபருக்கு எதற்காக இங்கே டிக்கெட் வாங்குகிறீர்கள்?''
''ஐயோ...மேடம் என் பாஸ்போர்ட்டை பாருங்கள் இரண்டுமே நான் தான்''
''அதெப்படி நீங்களும் உங்கள் தந்தையும் ஒன்றாக முடியும்...நீங்கள் சற்று ஒதுங்கி நில்லுங்க...எங்கள் கண்காணிப்பாளர் வந்து விசாரிப்பார்''
சரிதான்...இந்தம்மாவே இப்படி...இதுக்கும் மேல ஒருத்தர் இருக்காரா....சரி என்ன தான் நடக்குன்னு பார்ப்போம். காத்திருந்தேன்.
கண்காணிப்பாளர் வந்தார். பயணச்சீட்டை பார்த்தார். பாஸ்போட்டை பார்த்தார்.
''இது உங்கள் பாஸ்போர்ட் தானா?''
''ஏன் அதிலென்ன சந்தேகம்...என்னுடையது...என்னுடையது தான் ஐயா''
''இல்லியே...நிறைய வித்தியாசம் இருக்கே''
''அதாவது சார்...போன மாதம் என் அம்மா இறந்து விட்டார்..அதனால்....''
''ஹலோ மிஸ்டர்...அதை நான் கேட்கவில்லை...அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?''
''அது தான் சார்....சொல்ல வர்றேன்... அவ்வாறு துக்க சம்பவம் நடக்கும் போது நாங்கள் தலை மழிப்பது வழக்கம்''
''உங்கள் தாயார் இறந்ததற்கு நீங்கள் ஏன் தலைமழிக்க வேண்டும்...அப்படி செய்தால் முடி முளைக்க இரண்டொரு மாதம் ஆகுமே?''
''சார் இப்ப அதுவா பிரச்சினை...இதில் உள்ள பெயர் என்னுடையது தான் ஐயா''
''பெயரில் பிரச்சினை இல்லாவிட்டாலும் புகைப்படத்தில் பிரச்சினை உள்ளதே''
கடவுள் மாதிரி என்னமோ புஷ்கின் வந்தார்.
''ஹாய்...ஜெ என்ன பிரச்சினை?''
''சார்...சார் நீங்களாவது சொல்லுங்க சார்...இந்த பாஸ்போர்ட் என்னுடையது இல்லைன்னு சொல்றார் சார்''
''மிஸ்டர் மிஷேல்! இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் இந்தியாவில் தமிழர் என்னும் தேசியஇனத்தை சார்ந்தவர். தாய் இறந்தால் தலையை மழிப்பது அவர்களின் மரபாக இருக்கலாம். அதற்காக அவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? பாஸ்போர்ட்டை கொடுங்கள்''
ஒருவழியாக பாஸ்போர்ட் கைக்கு வர நிம்மதியாக ரயிலேறினேன்.

மழைக்காலத்தில் மாஸ்கோ(4): 27-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(4):
இப்போது அந்த ரஷ்யத்தாய் களைப்பிலிருந்து மிதமாக விடுபட்டிருந்தார். எனது பெயரைக் கேட்டார். அவரால் உச்சரிக்க முடியவில்லை. என்னமோ புஷ்கின் கூட சற்று சிரமப்பட்டு தான் உச்சரித்தார். நானும் அந்த ரஷ்யத்தாயும் உரையாடத் துவங்கினோம். புஷ்கின் தான் மொழிபெயர்த்தார்.
''மகனே...நீ எங்கிருந்து வருகிறாய்...திருமணம் ஆகிவிட்டதா...எத்தனை குழந்தைகள்?''
''அம்மா...நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்...எனக்கு திருமணம் ஆகி பத்து வயதில் மகனுண்டு''
''பெண் குழந்தைகள் எத்தனை பேர்?''
''இல்லை அம்மா...எங்களுக்கு பிறந்தது ஒரே ஒரு மகன் மட்டுமே''
ஏன்...குழந்தைகளை தொல்லையாக நினைக்கிறீர்கள்? இங்கே எங்கள் ஊரில்தான் பெண்கள் பிள்ளை பெற தயங்குகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் 6 குழந்தைகளை பெற்றேன். அதில் நான்காவது குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் இறந்து விட்டது. அதிபர் பிரஷ்னேவ் குழந்தை பிறந்த போது வாழ்த்தும் இறந்த போது இரங்கலும் தெரிவித்தார். என் கணவருக்கு பிடித்தமான குழந்தை அது. தொடர்ந்து மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் பிறந்தவள் என்பதால் அவள் எங்களை விட்டு பிரிந்த போது எங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என் கணவரின் தங்கை அதற்கு முந்திய ஆண்டு தான் இறந்து போனாள். எனவே தனது தங்கையே மீண்டும் வந்து பிறந்ததாக என் கணவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. என் கணவரின் தங்கை எங்களுக்கு திருமணமான பொழுதுதான் பூப்படைந்திருந்தாள். அவள் கொள்ளை அழகு தெரியுமா? ரோஜாப்பூ நிறத்தில் அவள் கன்னங்கள், சற்றே நீலவண்ண கண்கள், வெள்ளை நிறக்கூந்தல், எப்போதும் தூய வெள்ளையாடையில் தேவதை போன்று பவனி வருவாள். அவளுக்கு திருமணமாகி முதல் பிரசவத்தில் தாயும் சேயும் எங்களை விட்டு பிரிந்தார்கள். எங்கள் நிலத்தில் தான் நாங்கள் அடக்கம் செய்தோம். எங்கள் கிராமத்தின் தேவாலய இடுகாட்டில் எங்களுக்கு இடம் உண்டு. ஆனால் நாங்கள் அதில் அவளை புதைக்க விரும்பவில்லை. எங்கள் முன்னோர்களையும் நாங்கள் எங்கள் நிலத்திலேயே அடக்கம் செய்தோம். அடக்கம் செய்த அன்றிரவு என் கணவர் எங்கள் நிலத்தை விட்டு வீட்டிற்கு வரவே இல்லை. அந்தப் பனியிலும் இறந்த போன தங்கையின் சடலத்தோடு உரையாடிக் கொண்டிருந்தார். பாவம்...அன்பே உருவான மனிதர் அவர். எங்களது மரணத்திற்கு பிறகும் நாங்கள் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். எங்களையும் நிலத்தையும் பிரிக்கவே இயலாது....விவசாயிகளுக்கு நிலம் தான் எல்லாம். விவசாயியும் தாயும் ஒன்று தெரியுமா? தாய் தன்னுள்ளே கருவை சுமந்து இந்த உலகத்திற்கு புதிய உயிரை தருவது போல விவசாயி தன் நிலத்திலிருந்து புதிய தானியங்களை உருவாக்கி இந்த உலகத்திற்கு தருகிறான். இதோ இந்த பையில் இருக்கும் உருளைக்கிழங்குகளும் கேரட்டும் எங்கள் நிலத்தில் விளைந்தவை. அறுவடை முடிந்தபின் இதை முதலில் எங்கள் மூத்தமகன் வசிக்கும் கிராமத்திற்கு எடுத்து சென்று பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டுத்தான் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை செய்வோம். இந்தமுறை அறுவடை முடிந்தபின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் பண்டகசாலை அலுவலர்கள் வந்து கேட்ட போது மறுத்துவிட்டேன். நாங்கள் தனியாருக்கு விற்பதில்லை. உணவை உற்பத்தி செய்வதும் அதை பசித்தவர்களுக்கு சுயநலமின்றி சரியாக பகிர்ந்தளிப்பதும் எங்களை அப்போது வழி நடத்திய தலைவர்கள் கற்றுத்தந்த பாடங்கள். இன்று அவை மாறிக்கொண்டு வருகின்றன. நாங்கள் மாறமாட்டோம். பசிக்கு உணவளிப்பது மாபெரும் அறமல்லவா...அதை இந்த பிறவியில் எங்களுக்கு ஆண்டவன் அளித்திருக்கிறார். அதை எவ்வாறு மறுதளிப்பது? இந்த கிழங்கும் கேரட்டும் எங்கள் மண்ணில் புதைக்கப்பட்ட மூதாதையர்கள் அல்லவா...அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று நீ நம்புகிறாயா?''
இல்லை...சத்தியமாக இல்லை...நீங்கள் அறுவடை செய்யும் ஒவ்வொரு தானியத்தின் வாயிலாக அவர்கள் காலம் கடந்து வாழ்கிறார்கள்...உங்களோடே பயணிக்கிறார்கள்...மரணம் என்பது என்ன...அது தற்காலிக விடுப்பு தானே.... அவர்கள் உங்களிடமிருந்து நிரந்தரமாக ஒரு போதும் பிரியவில்லை என்றே நானும் நம்புகிறேன்''. நான் இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களில் மூத்த தேசியஇனமான தமிழ் என்னும் தேசிய இனத்தை சார்ந்தவன். எங்கள் மரபும் இதேதான். உழுதுண்டு வாழ்வோரை  மற்றவர் தொழுது வாழவேண்டும் என்று போதித்த மரபு என்னுடையது.
''இந்தியாவும் பழைய சோவியத் ஒன்றியம் போலத்தானே?''
''ஆம்...பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்கள் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம்.''
''நல்லது மகனே...நாங்கள் பல்வேறு சோவியத்துகளாக ஒன்றாக வாழந்த போது மகிழ்ச்சியாக இருந்தோம். உக்ரேனின் கோதுமை உஸ்பெகிஸ்தானின் குழந்தைகளின் பசியை போக்கியது, எங்கள் மின்சாரம் உக்ரேன் குழந்தைகள் கல்வி கற்க வெளிச்சம் தந்தது...இப்போது அவை இல்லை....பகைமை உணர்ச்சி தான் மேலோங்கி உள்ளது''
''நீ சமைக்காத கேரட் தின்பாயா?''
''ஓஓ...சமைக்க வேண்டாம்...அப்படியே சாப்பிடுவேன்''
''இந்த கேரட்டை பயிரிட்டு முதல் தளிர்விடும் போது என் கணவரின் தங்கை சிரிப்பது போன்றே இருக்கும். தினமும் காலை தோட்டத்திற்கு சென்று அதை பார்த்து விட்டு வருவேன்...அதில் ஒரு நிம்மதி எனக்கு...''
கையில் தனியாக ஒரு சிறு பையில் நான்கு உருளைக்கிழங்கும் இரண்டு கேரட்டுகளும் வைத்திருந்தார். ஒன்றை எனக்கும் புஷ்கினுக்கும் தந்தார்.
''மகனே! நீங்கள் ஏன் இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது?''
சென்னையிலிருந்து மாஸ்கோ கிளம்பும் போது தான் இரண்டு தென்னைமாறு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். வெறும் தென்னை ஓலையால் கட்டப்பட்ட விளக்கமாறு அது. எனவே பழைய நைலான் கயறால் நன்றாக இறுக்கி கட்டிக் கொடுத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. ஆனால் இதை சொன்னால் அந்தம்மாவிற்கு புரியாது.
''இல்லை அம்மா...முதல் குழந்தை பிறந்தபோதே அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். குழந்தை சற்று கனம் கூடுதலாக இருந்ததாலும் அவள் சற்று பருமனாக இருந்ததாலும் அறுவை சிகிச்சை செய்தே என் மகன் பிறந்தான். அதில் அவள் பட்ட வேதனைகளை நேரில் கண்ட நான் இனி அப்படி ஒரு துயரத்தை அவளுக்கு கொடுக்கக்கூடாது என்று எண்ணினேன்.''
ஓஓ...குழந்தைகள் கூடி ஒரு வீட்டில் வாழ்வதும் அவர்களை வளர்த்தெடுப்பதும் ஒரு பெரிய வரம்...அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
காடும், வீடும் காரும் பணமுமா செல்வங்கள்...குழந்தைகள் அல்லவா உண்மையான செல்வங்கள்...''
''உண்மை'' நான் ஆமோதித்தேன்.
மாஸ்கோவிற்கும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிற்கும் இடையில் உள்ள ஒகுலோவ்கா என்னும் இடத்தில் அவர் இறங்க வேண்டுமெனவும் ரயில் வரைக்கும் இந்த பைகளை சுமந்து வர இயலுமா எனக் கேட்டார்.
இடையில் புகுந்த புஷ்கின் ''அதற்கு அவசியமே இல்லை...நான் வண்டி ஏற்பாடு செய்கிறேன் என்று பேட்டரியால் இயங்கும் வாகனத்தை கொண்டு வர ஆணை பிறப்பித்தார்.
அவர் கிளம்ப எத்தனித்த போது மானசீகமாக அவர் முன் முழங்காலிட்டேன்.
தனது வலது கட்டைவிரலால் என் நெற்றியில் சிலுவை இட்டார்.
மகனே...என் மனம் மிக இலகுவாக உள்ளது....வீட்டில் என் கணவர் படுத்தபடுக்கையாகி விட்டார். வேலையாட்கள் மாலை அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்....பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்தேன். உனக்கும் புஷ்கினிற்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். இனி ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்யும் போது உன்னையும் உன் மகன், மனைவியையும் நினைத்து ஆண்டவரின் வேண்டுவேன்''
பேட்டரி வாகனம் வர ரஷ்ய தாயும் புஷ்கினும் விடைபெற்றனர்.









மழைக்காலத்தில் மாஸ்கோ:(3)


----------------------------------------------------
27ஆம் தேதி காலை எட்டு மணிக்கு தயாராக இருக்க மருத்துவர்.வினய் உத்தரவிட்டு சென்றார். ஒரு நாளைக்கு சராசரியாக 200கி.மீ தூரம் பயணம் செய்து கலைத்துப் போன இருவருக்கும் வேறு வழியில்லை. மாஸ்கோ நகரத்தின் பிரதான மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் மருந்துக்கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். மதியம் 1.30க்கு லெனிங்கிராட் என்று அன்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று இன்றும் அழைக்கப்படும் ஊருக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை ஊகித்து நமது சாரதி நிகோலாய் மிகச்சரியாக 8மணிக்கு ஆஜராக வேண்டுமெனவும் 11.30க்கு மீண்டும் ஹோட்டல் காஸ்மோஸ் வந்து லெனிங்க்ராட்ஸ்கி பக்சல் (பக்சல் என்றால் ரஷ்ய மொழியில் ரயில் நிலையம் என்று பொருள்) சென்று தொடர்வண்டியை பிடிக்க வேண்டும் எனவும் மரு.வினய் உத்தரவிட்டிருந்தார். நிகோலாய் மிகச் சரியாக 8 மணிக்கு வந்தார். மாஸ்கோவின் மத்திய நகரிலிருந்து மேற்கு நோக்கி வாகனத்தை செலுத்தினார். வண்டியை எடுத்த 3ஆவது நிமிடத்தில் 120 கி.மீ வேகம் என அதன் டிஜிட்டல் மானிட்டர் காட்டியது. நான் மிரண்டு போய் ''நிகோலாய்...கொஞ்சம் மெதுவாக போலாமே'' என்றேன். என் உத்தரவை சிரமேற்கொண்டு ஏற்ற நிகோலாய் அதை உடனடியாக 119க்கு குறைத்தார். ஆய்வுகளை முடித்துவிட்டு ஹோட்டல் வந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டேன். நிகோலாய் ஒரு யோசனை சொன்னார். அருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாக எதிர்ப்புற சாலைக்கு சென்று இடது புறம் செல்லும் டாக்சியை பிடித்தால் விரைவாக சென்று விடலாம் இல்லையெனில் கடினம் என்றார். உடனே திட்டத்தை செயல்படுத்தினேன். சுரங்கப்பாதை வழியாக சென்று டாக்சி பிடித்து ரயில் நிலையத்திற்கு 12.15க்கெல்லாம் வந்து சேர்ந்தேன்.
மாஸ்கோ நகரம் மிதமான வெயிலில் இதமாக இருந்தது. பெண்கள் அனைவரும் மார்பிலிருந்து இடுப்புக்கு கீழே நான்கு விரற்கிடை அளவிற்கு மட்டும் உடையுடுத்தி நகரத்தை வெப்பத்தை மேலும் குறைத்துக் கொண்டிருந்தார்கள். கையில் கைப்பைக்கு அடுத்து எல்லோர் கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. ஏன் இவர்கள் இவ்வாறு உடை அணிகிறார்கள் என்ற ஆய்வை பாங்காக் விமான நிலையத்தில் ஆய்வு செய்ய துவங்கிய போது நண்பர். பேராசிரியர். அ. மார்க்ஸ் அவர்கள் நீண்ட பயணத்தின் வசதி பொருட்டு அவ்வாறு அணிகிறார்கள் என்று அந்த ஆய்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இங்கும் அதே கதை தான். ஆனால் பாங்காக் மாஸ்கோவிடம் பிச்சை வாங்கணும். அக்டோபர் மாதத்திலிருந்து பெப்ருவரி வரை இவர்கள் உடல் அனைத்தையும் மூடிக்கொண்டு தான் ஜீவிக்க முடியும். எனவே இந்த இளவேனிற்காலத்தில் இவ்வாறு உடை உடுத்து தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கிறார்கள் என்று உணர்ந்தேன். எனவே இனி குளிர்காலத்தி மாஸ்கோவிற்கு செல்லும்படி என்னை வற்புறுத்தக்கூடாது என நிர்வாகத்திற்கு கடுமையான எச்சரிக்கை விட உத்தேசித்திருக்கிறேன்
நேரம் 12.30 ஆன போது ஒரு மூதாட்டி கையிரண்டிலும் இரு பெரிய பைகளை சுமந்து கொண்டு படியேற முயற்சித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பையை அவர் தவற விட ஓடிச்சென்று அவரையும் அந்த பைகளையும் தாங்கினேன்.
இதைக்கண்ட இன்னும் இரு வாலிபர்கள் என் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் பைகளை ஏந்திக்கொள்ள நான் அந்தத்தாயை ரயில் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி அமரும் நாற்காலியில் அமர வைத்தேன். ரயிலுக்கு நேரமானதால் வாலிபர்கள் விடைபெற்றனர். பாதுகாப்பு அதிகாரி என்னமோ புஷ்கின் (என்னமோ என்றால் தமிழ் என்னமோ இல்லை இது ரஷ்ய மொழியில் 'என்னமோ'') என்னை விசாரித்தார். அற்புதமான ஆங்கிலம் அவருடையது. விசாரித்த போது 1989ஆம் ஆண்டு மாஸ்கோ பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதல் மாணவராக வந்து அதிபர் கோர்பச்சேவிடம் விருது வாங்கியதாக தெரிவித்தார். விருது வழங்கிய கோர்ப்பசேவ் அவரை கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்ற அழைக்க இவரோ நான் நீட்சேயின் ரசிகன் எனக்கும் கம்யூனிசத்திற்கு ஒத்துவராது என்று அங்கேயே பதில் சொல்லிவிட்டார். அதற்கு கோர்ப்பசேவ் ''உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை நிர்பந்திக்க நீ வெறுக்கும் கம்யூனிசம் என்னை அனுமதிக்காது'' என்றாராம். 

Tuesday, July 26, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(2)- 26-07-2017

மழைக்காலத்தில் மாஸ்கோ(2)- 26-07-2017
-------------------------------------------------------------------------
அதிகாலையா நள்ளிரவா என்று நிர்ணயிக்க இயலாத 3.05மணிக்கு அபுதாபி விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ பயணம் துவங்கியது. தூக்கம் கலைந்ததும் பயணம் தந்த அலுப்பும் இணைந்து கொள்ள நிலைகொள்ளாமல் தவித்தது உடல். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவம் வழியாக துணைக்கு வந்தார். பீஷ்மர் தன் தந்தை சந்தனுவிற்காக சத்தியவதியின் தந்தையிடம் தான் இனி பிரம்மச்சாரியாகவே வாழப்போவதாக உறுதி அளித்துக் கொண்டிருந்தார். பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள்ளாகவே தூக்கம் கண்களை தழுவ அயர்ந்தேன்.
பணிப்பெண் காலை சிற்றுண்டிக்காக எழுப்பினார். அவித்த உருளைக் கிழங்கும் முட்டையும் தயிரும் பரிமாறப்பட்டது. காலை சரியாக 7.15க்கு மாஸ்கோ தெமோஜெடொவோ விமான நிலையத்தில் இறங்கினேன். குடியேறல் பிரிவில் இருந்த அதிகாரி எனது பாஸ்போட்டில் இருக்கும் புகைப்படத்திற்கும் எனது தற்போதைய தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கூறி அதை உயரதிகாரி ஒருவர் வந்து உறுதிப்படுத்த வேண்டுமென்றார். ஆங்கிலம் தெரியாத அவருக்கு எனது தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் என்பதையும் அதன் பொருட்டு நான் தலை மழிக்க வேண்டியதாயிற்று என்று சொல்லிப் புரியவைப்பதற்கும் போதும் போதுமென்றாகி விட்டது. அடுத்து சுங்க அதிகாரிகளின் சோதனை. தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்ற போதும் நான் வைத்திருந்த பெண்களுக்கான பாடிவாஷ் குப்பிகளில் இரண்டை அவர் உரிமையுடன் எடுத்துக் கொண்டார். வெளியே வந்த போது ஜனாரும் அவருடைய கணவரையும் காணவில்லை. கலவரமானேன். என்னுடைய செல்பேசியில் ரோமிங்க் வசதி உண்டென்ற போதிலும் ரஷ்யாவில் அது வேலை செய்ய மறுத்தது. அருகில் இருந்த ரஷ்ய பெண்மணியிடம் அவருடைய செல்பேசியை தரமுடியுமா என்று கேட்டேன். புன்னகையோடு தந்தார். ஜனாரை அழைத்த போது அவர் 2ஆம் நுழைவு வாயிலில் காத்திருப்பதாகவும் நான் காத்திருக்கும் முதல் நுழைவு வாயிலுக்கு வருவதாகவும் சொன்னார். அடுத்த 5நிமிடத்தில் கணவருடன் ஆஜரானார். நான் தங்கவிருந்த விடுதியான ஹோட்டல் காஸ்மோஸ் மிக அருகாமையில் அதாவது 70 கி.மீ தூரத்தில் இருந்தது. 1.45 மணி நேர பயணத்திற்கு பின் விடுதி வந்தடைந்தோம்.

ஹோட்டல் காஸ்மோஸ் 1787 அறைகளைக் கொண்ட பிரம்மாண்டமான விடுதி. 1980 ஆம் ஆண்டு ரஷ்யா நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. சற்றே ஓய்வெடுக்க கண்ணயர்ந்தேன், ஆழ வேர்விட்டு பரந்து கிளை பரப்பி விழுது கொண்டு பூமியோடு தொடர்ந்து சங்கமிக்கும் ஒரு ஆலமரத்தின் கீழே வாழும் ஒரு சிறு எறும்பு போன்ற உணர்வு ஏற்பட்டது. 

மழைக்காலத்தில் மாஸ்கோ:25-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ:
ஞாயிற்றுக்கிழமை அபுதாபி வழியாக மாஸ்கோ பயணம். முன்பதிவு உறுதியானதும் எனது ரஷ்ய தோழி ஜனார் கொசம்குலோவாவை அழைத்து வருகையை தெரிவு படுத்தினேன், அவரும் அவரது துணைவரும் உடனடியாக அவர்களது சமையலறையை சுத்தம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். இவருக்கும் பருப்பு ரசம் வைத்து தருவதாக கடந்த ஒண்ணரை ஆண்டுகாலமாக ஸ்கைப் வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆசை காட்டி வந்தேன். இப்போது தப்பிக்க இயலாது. எனவே துவரம் பருப்பு, கடுகு, பெருங்காயம், பட்டை வற்றல், மிளகு போன்றவற்றையும் எனது பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டேன். மல்லித்தழை இல்லாமல் ரசம் சுவைக்காது, எனவே எனது மனைவி அதை ஒரு நெகிழிப்பையில் காற்றுப் புகாவண்ணம் சுற்றிக் கொடுத்தாள். அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்த போது அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். அனுமார் வால் போல வரிசை நீண்டு நான் செல்ல வேண்டிய எத்திஹாட் நுழைவு வாயிலுக்கருகில் 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். முக்கால் மணிநேரம் காத்திருந்து உள்ளே நுழைந்து போர்டிங் பாஸ் வாங்கி இமிக்ரேசன் பிரிவுக்கு சென்ற போது அங்கே ஒரு ஆயிரம் பேர் காத்திருந்தனர். எனது அபுதாபி விமானத்தின் புறப்பாடு இரவு 9.35மணிக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரிசையில் சென்றால் கண்டிப்பாக விமானத்தை தவற விட்டுவிடுவேன். அது உறுதி. காரணம் குடியேறல் பிரிவை கடந்து பாதுகாப்பு சோதனைக்காக காத்திருந்தவர்கள் அதை விட அதிகம். எனவே குறுக்கு வழியில் என்ன செய்ய முடியும் என்று யோசித்த பொழுது தூதரக அதிகாரிகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பிரத்யேக கவுண்டரில் ஒரு அதிகாரி சும்மா அமர்ந்து கொண்டு பல் குத்திக் கொண்டிருந்தார். அவரை அணுகினேன். அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ உடனே என் கடவு சீட்டில் முத்திரை குத்தி இந்த தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றினார். அவருக்கு அருகில் இருந்த சிறப்பு பாதுகாப்பு சோதனை அதிகாரி உடனே என்னை அழைத்தார். என்னை ஒரு வெளி நாட்டு தூதர் என்று எண்ணி விட்டார் போலும். ஆனால் விதி வேறொரு ரூபத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. எனது பெயரை எத்திஹாட் விமான அதிகாரி ஒருவர் பகிரங்கமாக பொது அறிவிப்பு மூலமாகஏலம் விட்டுக் கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது எனது பைகளை சோதனை இட வேண்டுமென்றும் அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். என்னடா இது...துவரம் பருப்பும், பெருங்காயமும் தடை செய்யப்பட்ட பொருட்களா...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?
நான் எனது நண்பர்களுக்காக எடுத்து சென்ற வாசனை திரவியங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டு தனியே ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அதை நான் பாலித்தீன் கொண்டு அதற்கான இயந்திரத்தின் உதவியோடு சுற்றி வைத்திருந்தேன். ஒரு பைக்கு 300 ரூபாய் கொடுத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுங்க அதிகாரிகள் அதை நிர்வாணப் படுத்தியிருந்தனர். நேரம் 09:18. என்னோடு வந்த எத்திஹாட் அதிகாரி அதில் உள்ள வாசனை திரவியங்கள் அனைத்தையும் நீக்க வேண்டுமென சுங்க அதிகாரிகள் கோருவதாக தெரிவித்தார். என்னோடு இன்னொரு பயணி முறையான மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமல் நிறைய மருந்துகளை சுமந்து வந்ததால் அதையும் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். ஒரு வழியாக வாசனை திரவியங்களை நீக்கி அதை மீண்டும் முறையாக கட்டி சேர்ப்பதற்குள் மணி 9.35 ஆகி விட்டது. எத்திஹாட் அதிகாரி, அடில் என்பது அவரது நற்பெயர், பொறுமையாக விமானிக்கு எடுத்துச் சொல்லி விமானத்தை தாமதப்படுத்தி என்னையும் மற்றொரு பயணியையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தின் இரண்டாம் தளம் விரைந்தார். அறிவிப்பாளர் எனது பெயரை ஏலம் விட்டு இது இறுதி அழைப்பு என்று சொல்லும் போது திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் கதாநாயகன் நுழைவது போன்று நுழைந்தேன். அனைத்து பயணிகளும் எங்கள் இருவருக்கும் சாபமிட்டபடி காத்திருந்தனர்.
வான்வழியே 3064 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டுமெனவும் கடல் மட்டத்திலிருந்து 35,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் எனவும் முதன்மை விமானி அபு சலீம் குரைஷி தெரிவித்தார். எனக்கு மூச்சு வாங்கியது. என் 88கிலோ உடலை என்னாலேயே சுமக்க இயலவில்லை என்பதை உணர்ந்தேன். விமானத்தில் நுழைந்ததும் குடிக்க தண்ணீர் கேட்டேன். பணிப் பெண்ணோ எனக்கு எலுமிச்சை சாறு தந்து இளைப்பாற்றினார்.
விமானம் என்னை சுமந்து கொண்டு தரையிலிருந்து ஆகாயத்தை தொட்ட போது வழக்கமாக புத்தகம் படிக்கும் வழக்கமுள்ள நான் பாடல் கேட்க எனது அலைபேசியை இயக்கினேன். எப்போதோ கேட்டு நிறுத்தி வைக்கப்பட்ட பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வித்யாசாகர் இசையில் நடிகர் ஸ்ரீகாந்தின் கேள்விகளுக்கு பாடகி ஹரிணி தனது இசையால் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஸ்ரீகாந்த்: ம்ம்ம்....காதல்
ஹரிணி: நம் நான்கு கண்ங்களில் தோன்றும் ஒற்றை கனவடா...
யார் எழுதியது? தெரியவில்லை....சென்னை திரும்பியதும் சைதை  துரைசாமியை சந்தித்து பாடலாசிரியருக்கு சிலை வைக்க ஒரு விண்ணப்பம் தர உத்தேசித்திருக்கிறேன்.
விமானத்தில் உணவு பரிமாறும் சமயம், வழக்கமாக நான் வெளிநாடு செல்லும் போது ''என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா'' என்று ஜனகராஜ் பாணியில் குதித்து கூத்தாடும் ஒரு குழுவும் திரும்பி வருகையில் நான் கொண்டு வரும் இலவச மதுபானக் குப்பிகளை கவர ஒரு குழுவும் எப்போதும் காத்திருக்கும். அவர்களுக்கு மதுபான குப்பிகளை சேகரிக்க ஆயத்தமானேன். விமானத்தின் முதல் வரிசையில் முதல் ஆளாக இருந்ததால் பணியாள் என்னிடமே அவரது கணக்கைத் துவக்கினார். நானோ வழக்கம் போல ''டூ லார்ஜ் வோட்கா வித் லெமெனேட்'' என்றேன். அவன் சிறிய 50மிலி கொள்ளளவு கொண்ட இரண்டு குப்பி தருவான் என்பது எனது எண்ணம். ஆனால் அவன் குனிந்து ஒரு பெரிய அப்சொலுயூட் வோட்கா பாட்டிலை திறந்து ''ரெண்டு லார்ஜையும் இப்பவே குடுக்கவா...இல்லைனா அடுத்த ரவுண்டு வரும் போது தரவா'' என்று வெடிகுண்டு வீசினான். இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. நான் விமானப் பயணங்களில் மது அருந்துவதில்லை. அதுவும் போக இவன் கொடுப்பதை கொண்டு செல்வது எவ்வாறு என்று குழம்பி எனக்கு வேண்டாம் என்றேன். அருகில் இருந்த நபர் திருநெல்வேலிக்காரர். அவன் கொடுத்ததை மறுபேச்சில்லாமல் எதுவும் கலக்காமலேயே வாங்கி குடித்து பணியாளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ''சார்...போதுமா'' என்று பணிவாக பணியாள் வினவ '' இன்னொரு லார்ஜ் கொடுங்க...அதில கொஞ்சம் தண்ணி மட்டும் கலந்துடுங்க'' என்றார். அதிர்ச்சியிலிருந்து மீளாமலே பணியாள் நகர்ந்தார்.
அபுதாபி வந்திறங்கிய போது நள்ளிரவு மணி 12.30.

மாஸ்கோ விமானம் அதிகாலை 3..05க்கு...காத்திருக்கிறேன்....பயணம் தொடரும். என்னோடு எஸ்.ராமகிருஷ்ணனும், சதத் ஹாசன் மண்டோவும், ராகுல சாங்கிருத்யனும் அவர்களின் படைப்புகள் வாயிலாக பயணிக்கிறார்கள். வாசகனுக்கு ஏது தனிமை?

Tuesday, May 31, 2016

கலவியும் கவிதையும் (4) - (பெரியதாக ஒரு சிறுகதை)

கலவியும் கவிதையும் (4) - (பெரியதாக ஒரு சிறுகதை)
எது ஒன்று அழகாக இருக்கிறதோ அதன் மீது காதல் வயப்படுவதோ அல்லது காமவயப்படுவதோ இயல்பு என்றே கருதுகிறேன். எது அழகு என்பதற்கான வரையறை தனிநபர் உளவியல் சார்ந்தது.
கவிஞர் தன் பகுதி உடலை மறைத்தபடி என்னருகே வந்து காதோரம் ரகசிய தொனியில் ''போய் குளிச்சிட்டு வர்றீயா?''
பாதி மயக்கத்தில் இருந்த நான் தள்ளாடியபடியே குளியலறையை நோக்கி நடந்தேன்.
ஹோட்டலின் குளியலறை பிரம்மாண்டமானது. ஷவரில் வெதுவெதுப்பாக மிதமான வேகத்தில் பாய்ந்து வந்த வெண்ணீர் குளிக்கும் அனுபவத்தை மேன்மையுற செய்தது. இந்த தருணத்தில் குளியலறை திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பினேன்.
கவிஞர் சுடிதாரின் மேலாடையை மட்டும் அணிந்தபடி என்னை நோக்கி வந்தார்
''ஷவரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு''
சொன்னபடி செய்தேன். அருகில் வந்து என் காதோரம் அவரது தேவையைக் கிசுகிசுத்தார்.
''நான் எப்பவுமே அப்படிதான் குளிப்பேன்'' என்றேன்.
''இல்ல...எங்காளுகன்னா அந்த பிரச்சினை இல்ல...அதுனாலதான்...நீ தப்பா எடுத்துக்காத..''
''புரிந்தது...நோ பிராப்ளம்...நீங்க போங்க...நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்''
''வந்து....?''
''வந்து என்ன....?''
'இல்லை...இன்னொரு கவிதை எழுதலாமான்னு கேட்டேன்''
''ஏங்க...பேப்பரும் பேனாவும் இருந்தா நம்ம பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருக்கிறதா என்ன...இருந்தாலும் இங்கே எல்லாமே உங்க இஷ்டம்''
''சீக்கிரம் வந்துடு...எத்தனை மணிக்கு ஃப்ளைட்....மிட்நைட் 2.45 தானே?''
''ஆமா....நிறைய நேரம் இருக்கு...கவலைப் படாதீங்க...நாம கவிதையில்ல...காவியமே இயற்றலாம்...''
''ச்சீ...லூசு...'' முதல்முறையாக வெட்கப்பட்டார். அந்த வெட்கத்தில் துளியும் போலித்தனமில்லை.
திரும்பி நடந்த போது அவரோடு சேர்ந்து திரும்பிய சுடிதாரின் மேலாடை விலக்கத்தில் கருமேகத்தை கிழிக்கும் மின்னலென தெரிந்தது சிவந்த தொடைகள். குளியலறையிலிருந்து வெளிவந்த போது கவிஞர் கட்டிலில் இரண்டு தலையணைகளை ஒன்றன்மீது ஒன்றாக வைத்து அதன் மீது வலது கையால் தன் தலையை தாங்கியபடி காத்திருந்தார். ஈரமான துண்டை கழட்டாமல் கட்டிலில் அமர்ந்து ஒரு நிமிடம் என் பார்வையை கவிஞரின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஓடவிட்டேன். சுடிதாரின் பிளவுகளில் தென்பட்ட சிவந்த தொடையில் ஒரு மச்சம் கவனத்தை ஈர்த்தது. வலதுகை ஆட்காட்டி விரலால் தொட்டேன்...
''அதிர்ஷ்ட மச்சமா இது?''
''அதிர்ஷ்டம் இல்ல அடிவாங்கிக் கொடுத்த மச்சம்''
''அடியா...யார் அடிச்சா...மச்சத்திற்கும் அடிக்கும் என்ன சம்பந்தம்?''
''அது வேணாமே....இப்போ எதுக்கு அந்த சோகக்கதை?''
''இல்ல...எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்''
''ஒரு நாள் என் ஹஸ்பெண்டிடம் இது எனக்கு அதிர்ஷடமான மச்சம் என்று சொல்ல அவர் ''நீ ஒரு தரித்திரம்...உனக்கென்னடி அதிர்ஷடம் வேண்டிக்கிடக்குன்னு பளார்னு அறைஞ்சுட்டாரு...நான் கவிதை / கதை எழுதுறதுனால அவருக்கு ஒருவிதமான காம்ப்ளெக்ஸ்...ஆமா...நீ உன் வைஃபை அடிப்பியா?''
''இல்லை...ஒருபோதும் இல்லை...என்னைவிட வலிமை குறைந்தவர்களை நான் ஒருபோதும் தாக்குவதில்லை''
''உனக்கு இந்த மச்சத்தை பார்த்தா என்ன தோணுது?''
''அதிர்ஷடம் என்றதும் உன் மச்சம் ஞாபகம்...அழகு என்றதும் உன் மொத்தம் ஞாபகம்..அப்படிங்கற பாட்டு வரி தான் ஞாபகத்திற்கு வருது'
''என்ன பாட்டு அது''?
பழனிபாரதி எழுதுனது...படம் பெயர் நினைவில்லை...கார்த்திக் முழுக்கை சட்டை போட்டிருப்பார்...ரோஜா தொப்புளை மறைத்து சேலை கட்டியிருப்பார்...ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...அப்படின்னு துவங்கும்...நல்ல மெலோடி...எனக்கு ரொம்பப் பிடிக்கும்''
''வேறென்ன ஞாபகம் வருது?''
''செந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண் உடலை என்னெவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்''
பாடலின் கடைசி வரியை உச்சரித்து முடிக்கும் முன்பே கவிஞர் உதட்டருகே நெருங்கி இருந்தார்.
நெற்றியும் மூக்கின் நுனியும் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இருவரது மூச்சுக்காற்றும் கூடி முயங்கிக் கொண்டிருந்தன.
மீண்டும் ஒரு கவிதையை கவிஞர் மிக நுட்பமாக வடித்துக் காட்டினார்.
மிகச்சரியாக இரவு பத்துமணிக்கு விமான நிலையம் வந்தடைந்தோம்.
''எங்கே உன்னோட போர்டிங் பாசை காட்டு''
''ஏன்...சீட் நம்பர் தெரியணுமா....41கே''
''எப்படிடா இது....என்னோட நம்பர் 41ஜே...நம்பவே முடியலேல்ல''
''இது நமது வாழ்க்கையின் இந்த கணத்து தேர்வு...அவ்வளவுதான்''
''பொத்துறியா...ஓரேடியா தொறக்கிற...சீட் பக்கத்து பக்கதுல அமைஞ்சதுக்கு இவ்வளவு பெரிய தத்துவமா?''
''சரி வாங்க...நம்ம முதல்ல சாப்பிட போவோம்....இங்க டேஸ்ட் ஆஃப் இந்தியான்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு...நல்லா இருக்கும்''
நாங்கள் நின்று கொண்டிருந்த இம்மிக்ரேசன் கவுண்டருக்கு அருகிலேயே இருந்தது அந்த உணவகம். அன்றைய சிறப்பு மட்டன் பிரியாணி.
வயிறாற உணவருந்தி விமானத்தில் அருகருகே அமர்ந்தோம்.
தமிழில் இருப்பதிலேயே மோசமான திரைப்படங்கள் குறுந்தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தன. எங்களை சுமந்து கொண்டு அந்த அலுமினியப் பறவை ஆகாயத்தில் பறந்த போது கவிஞர் காதுகளை பாடல் கேட்பதற்காக தயார் படுத்தியிருந்தார். அவரது  மொபைல் போனிலிருந்து பாடல்கள் காதுகளுக்குள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கண்களால் எனக்கும் வேண்டுமா எனக்கேட்டார். சரி கேட்போமே என்று ஒரு இயர்போனை எனது காதுகளுக்குள் பொருத்தினேன்.
இளையராஜாவின் இசை காது வழியாக நேராக இதயத்தில் பாய்ந்தது. ஜென்சி தனது காந்தக்குரலால் ஈர்த்தார்.
''ஆயிரம் மலர்களே மலருங்கள்...அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்...காதல் தேவன் காவியம்...நீங்களோ நாங்களோ...நெருங்கிவந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்...ஆயிரம் மலர்களே மலருங்கள்..''
காந்தத்தின் இரு துருவங்களுக்கு இடையே சிக்கிய இரும்புத்துகள்கள் போல ஜென்சி தனது குரலால் எங்கள் இதயங்களை கட்டிப்போட்டார்.
திடீரென்று பாடலை கவிஞர் நிறுத்தினார்.
''ஆமா...சினிமா பாட்டுக்கு வார்த்தை மாத்தி போட்டு பாடுவேன்னு சொன்னியே...இந்த பாட்டுக்கு ஒரு மாத்துப்பாட்டு எழுது பார்க்கலாம்''
இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் விமானத்தின் உள்ளே பாட ஆரம்பித்தேன்.
''ஆயிரம் டவுசரு கிழிஞ்சது....அதுல ஒண்ணு என்னுது...நல்லது....கிழிஞ்சு போன டவுசரு...புதுசுதான் தைச்சது டெய்லர் கடையில் உள்ளது...உள்ளது''
வழக்கம் போல வெடித்து சிரிக்க தயாரானார் கவிஞர். இந்தமுறை நான் அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தினேன். ஆனால் கைகளால் அல்ல. இமைகள் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போன்று சிறகடித்தன. இருபது வினாடிகளுக்கு பின் அவர் விடுதலை பெற்றார். அவர் மெல்லும் சூயிங்கம் பெயரை விமானம் சென்னையில் இறங்குவதற்கு முன்பாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
''ப்பிசாசு...இப்படியா பண்ணுவ''
''எல்லோரும் தூங்க ஆரம்பிச்சாச்சு...இப்போ போயி அவங்கள எழுப்பிவிடணுமா?''
''ஆமா...உங்க வீட்டுக்காரரு அடிப்பாரு சொன்னீங்களே என்னென்ன காரணத்துக்கு அடிப்பாரு?''
''அதை ஏன் கேக்குற....காரணமே இல்லாம அடிப்பாரு...ஒருநாள் ரசம் ஏன் தண்ணியா இருக்குண்ணு அறைஞ்சாரு''
''அப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?''
''அப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது...ஆனா நான் அவரை வேற மாதிரி பழிதீர்த்துக்குவேன்...நேத்து ராத்திரி நடந்தது அவரை பழிவாங்க நான் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை...ஒனக்கு இது புரியாது...''
விமானம் தரையிறங்கிய போது சென்னையில் மணி காலை 8.15
இமிக்ரேசனில் பெரிய கூட்டம். கவிஞர் நேராக வெளிநாட்டு தூதர்களுக்கான சிறப்பு கவுண்டரை நோக்கி என்னையும் இழுத்துக் கொண்டு நடந்தார். மிக எளிதாக வெளியேறினோம். கீழே சுங்க அதிகாரிகளின் சோதனையையும் மிக எளிதாக கடந்து வெளியே வந்தோம். நான் ஃபாஸ்ட் ட்ராக் டாக்சியில் முன்பதிவு செய்து பில்லை எடுத்துக் கொண்டு வரும்வரை கவிஞர் காத்திருந்து என்னோடே வெளியே வந்தார்.
நான் எப்படி விடைபெறுவது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
''சரி...எல்லாத்தையும் மறந்துட்டு உன் வேலையை பாரு...புரிஞ்சதா?''
திடீரென எங்கேயிருந்தோ சிவப்பு விளக்கு சுழல ஒரு அரசு வாகனம் வர அதில் ஏறி மின்னெலென மறைந்தார்.
எனக்கு வியர்த்தது. இவர் யார்...இவர் அவர் இல்லையா...அவர்தான் இவர்...எனக்கு நன்றாகத் தெரியும்...அதே முகம்...அதே உதடு...அதே பல்வரிசை...வலக்கை மணிக்கட்டில் மச்சம்...பெரிய பாதம்...நீண்ட விரல்கள்...அதே கொச்சையான ஆங்கிலம்...அவர்தான் இவர்....இவருக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்...இவர் யார்...அன்று புத்தக அறிமுகவிழாவில் சந்தித்த நபர் யார்...ஐயோ இது என்ன புதுவிதமான விபரீதம்?''
இத்தனை குழப்பத்திற்கிடையே டிரைவர் எனது பைகளை காருக்குள் திணித்து வண்டியை போரூரை நோக்கி செலுத்தத் தொடங்கியிருந்தார் மனம் தொடர்ந்து கலவரத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்து கொண்டிருக்க எனது நாசி பல்வேறு மணங்களை உணரத் தொடங்கியிருந்தது.
கார் நந்தம்பாக்கம் வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அது சீராக நெடுநேரம் பிடிக்கும் என்று கருதிய டிரைவர் '' சார்...ஐ.டி.பி.எல் காலணி வழியா குறுக்கே போயி ஈவிகேஎஸ். இளங்கோவன் வீடு வழியா போய்டலாம் சார்'' என்றார்.
'''எப்படியாவது போங்க சார்'' என்றேன் சுரத்தே இல்லாமல்.
அங்கேயும் எங்களைப் போன்றே ஒத்தசிந்தனை கொண்டோரால் போக்குவரத்து நெரிசல்.
வெறித்து வானத்தைப் பார்த்தேன். மேகம் இல்லாத வானம் எனக்கு உவப்பைத் தரவில்லை. பக்கவாட்டில் பார்வையை செலுத்தினேன்.
பெரிய மரங்களால் சூழப்பட்ட அந்த பிராந்தியத்தில் காலை வெப்பம் குறைவாக இருந்தது.
ஒரு அணில் மரத்திலிருந்து இறங்கி வந்து கீழே விழுந்து கிடந்த பழக்கொட்டையை எடுக்க விரைந்து வந்தது. எதிர்பாராமல் எங்கேயிருந்தோ வந்த வெருகுப் பூனை அந்த அணிலை கவ்விக் கொண்டு காருக்கு பின்திசையில் சென்றது. அதிர்ந்து போய் கார்க்கதவு வழியே எட்டிப்பார்க்க இயன்ற அளவு கழுத்தைத் திருப்பினேன். என் பார்வை பூனையை நோக்கியும் கார் அதற்கு எதிர்த்திசையிலும் விரைந்தன.




Monday, May 23, 2016

யானைமலைப் பயணம்: 16-05-2016


தமிழக வாக்காளர்கள் தனக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது இந்த போலிஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நான் மதுரையில் என் மாமியார் வீட்டில் கட்டிலில் அமர்ந்தபடி மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அருகே இருந்த என் மகன் அப்பு ''எங்கேயாவது வெளியில் போகலாமாப்பா'' என்றான்.
வெளியே வானம் தான் தேக்கி வைத்திருந்த மேகங்களில் இருந்து தவணை முறையில் தண்ணீரை தாரை வார்த்துக் கொண்டிருந்தது.
இருப்பினும், நெடுநாள் ஆசையான யானைமலை அடிவாரத்தில் இருக்கும் சமணர்குகைக்கு செல்ல முடிவெடுத்தேன்.
நண்பர் வேலுவின் ஆட்டோவை வரவைத்து நானும் என் மனைவியும் மகனும் சென்றோம்.
எங்கள் வீட்டிலிருந்து 15.கி.மீ தொலைவில் தான் யானைமலை இருந்தது. மழை பெய்து ஓய்ந்த மாலையில் வெயிலின் தாக்கமில்லை. நிதானமான வேகத்தில் யானைமலையின் அடிவாரத்தை அடைந்த போது தான் அந்த குகைக்கு செல்லும் பாதை தற்காலிகமாக ஒருவாரம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்புவுக்கு மூட் அவுட்டாகி விட்டது. அவனது குறிக்கோள் சமணர் குகையை பார்ப்பதல்ல, ஆட்டோ பயணம் அவ்வளவே. இருப்பினும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டால் எதிர்கால வரலாறு என்ன சொல்லும்? ஆட்டோ ஓட்டுனரும் குடும்ப நண்பருமான வேலுவிடமே கேட்டோம்.
அவர் அருகே இருக்கும் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு போகலாம் என்றும் பின்பு அங்கேயிருந்து அருகில் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோயிலுக்கும் அதனருகே இருக்கும் பிரதியங்கிராதேவி கோயிலுக்கும் செல்லலாம் பரிந்துரைத்தார்.
சரி...எப்படியும் ஆட்டோவிற்கு வாடகை கொடுத்தே ஆகவேண்டும் எனவே செல்லலாம் என்றாலும் கூட வெறும் பெருமாள்,முருகன் மற்றும் அம்மன் போன்ற காரணிகள் என்னை உற்சாகப்படுத்தவில்லை.
இதை உணர்ந்த வேலு நரசிங்க பெருமாள் கோவிலில் விற்கப்படும் புளியோதரையின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.
மற்ற கோயில்களில் வழங்கப்படும் புளியோதரைக்கும் இங்கு விற்கப்படும் புளியோதரைக்கும் பெரிய வேறுபாடு உண்டென்றும் அது யானைமலையை ஒட்டி அமைந்துள்ள ஊற்று நீரில் செய்யப்படுவதால் பிரத்யேக சுவையை பெறுகிறது என்றார். இதை உறுதி செய்ய முதலில் ஒரு பொட்டலம் வாங்கி சுவைபார்த்து பின்பு கூட சன்னிதிக்கு செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
புளியோதரை எனக்கு பிடித்தமான ஒன்று. பள்ளியில் படிக்கும் போது எங்கள் வீட்டிலிருந்து 5.கி.மீ தொலைவில் உள்ள விரகனூர் அணை, 10கி.மீ தொலைவில் உள்ள விமான நிலையத்திற்கு இன்ப சுற்றுலா(?) செல்லும் போது அம்மா கட்டித்தரும் புளியோதரை பொட்டலத்தை பிரிக்கும் போது அதன் மணமும் அதில் ஒளித்து வைக்கப்பட்ட முட்டையும் அம்மாவின் அன்பும் ஒருசேர வெளிப்படும். அந்த தருணங்கள் வாழ்வின் மறக்க இயலாத மறக்க கூடாத தருணங்கள். எனவே புளியோதரையின் பொருட்டு பெருமாளை சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
அது ஒரு குடவரைக்கோயில். பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வட்டெழுத்துக்களும் தெலுங்கு எழுத்துக்களும் பாலி மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும் நிரம்பிய கோயில். இரண்டே இரண்டு சன்னிதிகள். ஒன்று பெருமாள் மற்றொன்று தாயார். தரிசம் முடிந்தது. இனி புளியோதரை. மடப்பள்ளியில் செய்யப்பட்டது என்று விற்பனையாளர் தெரிவித்தார். மற்ற கோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளியே செய்யப்பட்ட பிரசாதங்கள் விற்கபடும் சூழலில் இங்கே அவர்களே சுயமாக செய்து விற்கிறார்கள். அபாரமான சுவை. ஆளுக்கு இரண்டு பொட்டலங்கள் வாங்கி சாப்பிட்டோம். இரவு உணவு முடிந்தது.
அருகே நடை தூரத்தில் பாலதண்டாயுதபாணி கோயில். தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகன் ராஜ அலங்காரத்தில் இருந்தார்.
கோயில் மலையின் மீது இருந்த பெரும்பாறையின் மீது நிர்மாணிக்க பட்டிருந்தது. ஆகாயத்தில் கரிய மேகங்கள் சூழத் தொடங்கின.
இருள் கவிழும் நேரம். வானம் ஒரு பெருமழைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. மெல்ல பாறை மீது ஏறி அருகே இருந்த பிரதியங்கரா தேவி சன்னதிக்கு சென்றோம். சுற்றுச் சுவர்கள் கருமை நிற மரத்தால் அமைக்கப்பட்டிருக்க உள்ளே அம்மன் சிலை மஞ்சள் நிறத்தில் சிங்கத்தின் முகத்தை ஒத்த அமைப்புடன் பார்க்கவே ஒருவித கிலியை மனத்தில் உண்டுபண்ணியது.
சன்னிதியின் உள்ளே எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு விளக்கு சூழலின் அமானுஷ்யத் தன்மையை அதிகப்படுத்தியது. எதிரே இருந்த மண்டபத்தில் அமர்ந்தோம். மங்கிய ஒளியில் வழக்கத்தைக் காட்டிலும் மதுரை மிக ரம்மியமாக இருந்தது. அப்பு மழை வரும்வரை அங்கேயே அமர்ந்திருக்கலாம் என்றான். மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம். நாங்கள் வீடு திரும்பும் வரைக்கும் காத்திருந்து வானம் பெருமழையைக் கொட்டித் தீர்த்தது. அடுத்த முறை சமணர் குகைக்கு போவதற்கு முன்னால் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்று புளியோதரை சாப்பிட வேண்டும்.