Thursday, November 17, 2016

மோடி = மோ(ச)டி பகுதி (அ)


Modi succeeded in his mission..Indian Intellectuals failed to address..

மோடியை விமர்சிக்கும் பலரும் மோடியினுடைய இந்த செயல்முறை தோல்வியடைந்து விட்டது என்றும், முட்டாள்தனமானது என்றும் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு நிச்சயம் முட்டாள்தனமான ஒன்று கிடையாது. இந்த எமர்ஜென்சியை அறிவிப்பதால் நாட்டில் மிகப் பெரிய சிக்கல்கள் உருவாகும். பல மக்கள் இறக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதெல்லாம் மோடிக்கோ, மோடியை இயக்குபவர்களுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இதனால் கருப்புப் பணத்திற்கோ, கருப்புச் சந்தைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பதும் மோடிக்கு நன்றாகவே தெரியும்.

பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லக் கூடிய பொருளாதார அடியாட்கள் அத்தனை பேரும் "Short term loss..long term gain" னு ஒரே டயலாக்கை பேசுவதெல்லாம் எதேச்சையாக நடக்கின்ற ஒன்றல்ல.

GST மசோதா எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட போதே, இந்த நடவடிக்கைக்கான தேதி என்பது குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்று இவர்கள் பேசுகின்ற Cashless Transcation என்பதற்கான அத்தனை விடயங்களும் GST மசோதா நிறைவேற்றப்பட்ட கணத்திலிருந்தே உருவம் பெற்று விட்டன.

இந்தியாவின் பொருளாதாரத்தினை கிராமப் பொருளாதாரமாக சுய சார்புடையதாக இருக்கிறது. அதனை முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றுவதன் உட்சபட்ச நடவடிக்கையே இந்த தடை நடவடிக்கை.

சிறு வணிகர்கள், காய்கறி விற்பவர்கள், டீக்கடைக்காரர்கள், ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் என அனைவரின் Transactionம் வங்கி மூலமாகத் தான் நடைபெற வேண்டும் என அறிவித்து அனைவரையும் வரிவருவாய்க்குள் தள்ளியிருக்கிறார்கள். இனி இவர்கள் எல்லோரும் Tax Payers.

நாட்டின் பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு கடனை அள்ளிக் கொடுத்து, திரும்ப வாங்க முடியாமல் இருக்கும் வங்கிகளுக்கு ஏழை மக்களின் பணத்தினைக் கொண்டு அதனை நிரப்பும் முடிவே இது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடி தோற்று விட்டார் என்று பேசுவது சரியான வாதமல்ல. ஏனென்றால் மோடியின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல.

சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரின் பணத்தை வங்கிக்குள்ளும், வரிவிதிப்புக்குள்ளும் கொண்டுவர வேண்டும் என்பது உலக வங்கி, IMF, WTO போன்றவற்றின் நீண்ட கால அழுத்தம். அதைத்தான் மோடி அவசர கதியில் நிறைவேற்றியுள்ளார்.

இப்போதே 4000 ரூபாய்க்கு மேல் கையில் பணமாக வைத்திருப்பது குற்றம் என்பதைப் போன்ற சூழலை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலங்களில் நாம் வங்கியில் போடாமல் வைத்திருக்கும் ஒவ்வொரு பணமும் கருப்புப் பணம் என்கிற ரீதியான அச்சுறுத்தல் நம் மீது நடைபெறும்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் PAN கார்டு என்பதன் அடிப்படை இதுதான்.

1 சதவீத கார்பரேட் பண முதலைகளின் நலன்களைக் காப்பதற்காகத் தான் 99% மக்களாகிய நாம் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளோம். நாம் வரிசையில் நின்று நாம் படுகின்ற கஷ்டங்கள் எல்லாமே நம் பணத்தை இந்த வங்கிகளுக்கும், வரியாகவும் கொடுப்பதற்கும், அந்த பணத்தை வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடனாக கொடுப்பதற்கும் தான்.

இந்தியாவின் So called இடதுசாரி கட்சிகளான CPI-ம், CPM-ம் கூட இந்த உண்மையை சொல்லாமல் Modiன் Failure attempt ஆல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

இது மோடி என்ற தனிப்பட்ட பாசிஸ்டின் முட்டாள்தனமான முடிவாக கடந்து செல்லப்பட்டுவிடக் கூடாது. இதற்கு பின்னால் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கான சேவையை காங்கிரசை விட மோடியும், பாரதிய ஜனதாவும் மிகத் துரிதமாக செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

IMF ன் பின்புலத்தில் நடைபெற்ற பொருளாதார மாற்றங்கள் தான் கிரீஸ் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தை நாசமாக்கியது. நம் எல்லோரும் நமக்கான சுயமரியாதையுடனான சுய சார்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது இங்கே சிதைக்கப்படுகிறது.

நாளை பொருளாதார சரிவு, வங்கிகள் திவால் என்றெல்லாம் காரணம் காட்டி நாம் மீண்டும் தெருவில் நிறுத்தப்படுவோம்.

தெருவில் காய்கறி விற்போர், பஞ்சு மிட்டாய் விற்போர், பானி பூரி விற்போர் எல்லாம் வரிகட்ட வேண்டும்.
மத்திய தர வர்க்கத்தினர் எல்லாம் Cashless transaction மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். சிறு வணிகர்கள் கடைகளை மூடி விட்டு ரிலையன்ஸ் Fresh க்கும், வால்மார்ட்க்கும் தரகர்களாக மாற வேண்டும்.

ஆனால் நமக்கு கடனும் கிடைக்காது. கடன் தள்ளுபடியும் நடக்காது. ரேசன் கடைகள் மூடப்படும், விவசாய மானியம் கிடையாது. விவசாயியை அடித்து டிராக்டர்கள் பிடுங்கப்பட்டதும், மாணவர் லெனின் கல்விக் கடனுக்காக அடியாட்களை வைத்து படுகொலை செய்யப்பட்டதும் நமக்கு எப்போதும் நினைவிலிருக்க வேண்டும்.

அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவுக்கும் கடன் உண்டு. கடன் தள்ளுபடி உண்டு. மின்சாரம் இலவசம். தண்ணீர் இலவசம். நிலம் இலவசம். வரி தள்ளுபடியும் உண்டு.

இதற்குத்தான் நம் பணம் வங்கியில் இருக்க வேண்டும். நாம் கடுமையாக உழைத்து சிறுக சிறுக சேர்க்கிற பணத்திற்கு வரியும் கட்ட வேண்டும்.மக்களின் கோபம் சரியான திசையில் போராட்டங்களாக மாற்றப்படாவிட்டால் அனைத்தும் கடைசியில் காங்கிரசுக்கான ஓட்டரசியலில் தான் போய் நிற்கும். பிரச்சினையிலிருந்து நாம் விடுபட முடியாது.


Tuesday, November 15, 2016

கருப்பு பணம் - வங்கி அனுபவம்:



மோடி புதிய இந்தியாவை படைக்கும் பொருட்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக 500/1000 ரூபாய் தாள்களை மதிப்பிழக்க செய்ததன் விளைவு என் மனைவி எனக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணமான சுமார் 4000 ரூபாய் 8 ஐநூறு தாள்களாக வெளிப்பட்டது. அதை மாற்ற வேண்டி என் வங்கியின்  போரூர் கிளைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்றேன். என்னை முதலில் வங்கியில் பாதுகாவலர் வரவேற்று உள்ளே அமர வைத்தார். என்னைக் கண்ட வங்கி மேலாளர் உடனடியாக ஓடி வந்தார். மற்ற ஆண் / பெண் பணியாளர்களும் என்னை சுற்றி வளைத்து என் தேவையை கேட்டறிந்தனர்.
நல்ல நறுமணம் கமழும் ஒரு பெண் அதிகாரி நான் என்ன பழரசம் விரும்பி அருந்துவேன் எனக் கேட்டார்.
நான் '' எந்த பழத்தையும் அப்படியே சாப்பிடுவதே எனக்கு பழக்கம்...இருந்தாலும் உங்களைப் போன்ற அழகான பெண்கள் பழரசம் தரும் போது அதை மறுக்கும் மனோதிடம் எனக்கு இல்லை'' என்றேன். அவர் வெட்கப்பட்டுக் கொண்டே ''மாதுளை பழரசம் அருந்துங்களேன்'' என்றார்.
உடனே வங்கி மேலாளர் '' ஒரு பொம்க்ரேனேட் ஜூஸ்'' என்று வங்கி அலுவலக உதவியாளரை பணித்தார்.
இருபுறமும் பெண் அதிகாரிகள் என்னை பரிவோடு கவனித்துக் கொள்ள மேலாளர் என்னிடம் சில படிவங்களில் கையெழுத்து வாங்கினார்.
பழரசம் வந்தது. அருந்த துவங்கினேன். இருபுறம் அழகான பெண்கள் இருக்கும் போது ஏற்படும் பதட்டத்தில் கையில் இருந்த குவளையில் இருந்து பழரசம் கொஞ்சம் அலும்பி சட்டையில் சிந்தியது. பதறிய இரு பெண்களும் தங்களது சுடிதாரின் சால்வையால் சுத்தம் செய்து ''இப்படியா...சிறுபிள்ளை மாதிரி குடிப்பது...ஏன் இந்த நடுக்கம்? வங்கி மிகவும் குளிராக இருக்கிறதா?....சி.யை சிறிது குறைக்க சொல்லட்டுமா?'' என்றனர். ''இல்லை...தேவையில்ல...'' என்றேன்.
வங்கி மேலாளர் ''இதோ உங்கள் பணத்திற்கு இணையான புதிய ரூபாய் தாள்கள்''
இரண்டு 2000 ரூபாய் தாள்களை தந்து எனது வாகனம் வரை அவரும் பெண் பணியாளர்களும் வந்து வழியனுப்பி வைத்தனர்.
இப்படி தேசம் சுபிட்சமாக இருக்கையில் கூப்பாடு போடுகிறார்கள் தேச துரோகிகள்...!

Friday, October 21, 2016

விடை பெறுதல்: செனெகலிலிருந்து சென்னை வரை (19-10-2016)

விடை பெறுதல்: செனெகலிலிருந்து சென்னை வரை
19-10-2016 அன்று எனது பணிகளை முடித்துக் கொண்டு செனெகல் தேசத்தின் தலைநகரான டக்கர் நகரத்திலுள்ள சென்கோர் லியோபோல்ட் விமான நிலையம் வந்தடைந்தேன். விமானம் மாலை 5.45 மணிக்கு. ஏற்கனவே இணையதளத்தின் வழியே எனது இருக்கைகளை தேர்வு செய்திருந்தேன். விமான நிலையம் நுழைந்ததும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை எனது மூளையின் ஹிப்போகாம்பஸ் உணர்த்தியது. விமான நிலையத்தில் குளிர்சாதன வசதி முற்றுமாக செயலிழந்திருந்தது. எனது பைகளை சென்னை வரை பதிவு செய்துவிட்டு குடியேறல் (இமிக்ரேசன்) சுங்க சோதனைகள் (கஸ்டம்ஸ்) இவற்றை முடித்துக் கொண்டு நடந்த போது எனது உடல் வியர்த்து களைத்திருந்தது. உடல் எனது கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்ததை நானே உணர்ந்தேன். திடீரென பார்வை மங்கியது, தலை சுற்றியது, வாந்தி வந்தது. என்னையும் கட்டுப்படுத்த முடியாமல் வாந்தி எடுத்து அதன் மேலேயே விழப்போகும் சமயம் ''அசேவூ கம்சா சில்வூப்ளே'' என்று ஒரு குரல் தடுக்க உடல் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி போல பக்கவாட்டில் சாய்ந்தது.
எரிகின்ற கோளம் ஒன்று விளிம்பில் இருந்து மையம் நோக்கி அணைந்து கொண்டே வருவது போன்று வெளிச்சம் குறைந்து இருளை நோக்கி பயணித்தது என் பார்வை. நினைவுகள் தவறத் தொடங்கின.
''ஜெயா...எங்கே அ...ம்...மா...அம்மா சொல்லு'' எனது முதல் பள்ளி ஆசிரியை தமயந்தி வந்தார். எனக்கு 7 வயது வரை பேச்சு சரியாக வராது.
''அ..ங்...கு....
''அங்கு இல்லடா....அம்மா...'' அவர் முயற்சியில் தொடர் தோல்வி.
''அம்மா....எனக்கு என் அம்மா வைக்கும் கோலா உருண்டை குழம்பு ரொம்பப் பிடிக்கும்...அம்மா இப்போ இல்லை...ஜூன் 19ஆம் தேதி இறந்து விட்டார்...நானும் போய் சேர்ந்து விட்டால் அம்மா கோலா உருண்டை குழம்பு செய்து கொடுப்பாரா''
''நிறைய வேலைகள் மீதம் இருக்கின்றனவே...என்னை நம்பி 2கோடிகளை முதலீடு செய்த என் நிறுவன இயக்குனர் திரு.கல்யாணராமன், அதற்கு முழு உத்திரவாதம் அளித்த எனது உயர் அதிகாரி திரு.பார்த்தசாரதி...அவ்வளவும் அவ்வளவுதானா? என்னை நம்பி முனைவர். செல்வராஜும், அவர் குழுவும் கிழக்காசிய நாடுகளில் மருந்துகளை பதிவு செய்ய மிகவும் கடுமையான உடல் உழைப்பையும் அறிவாற்றலயும் கோரும் ஏ.சி.டி.டி டொசியர்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் போக்கா...?
அது சரி...ஏன் என் நினைவுகள் கோர்வையாக இல்லாமல் சிதறுகின்றன?
இந்த மாதம் தான் என் மகன் அப்புவிற்கு சைக்கிள் வாங்கினோம். அதற்கு இரண்டாவது முறையாக காற்றுக் கூட அடிக்கவில்லை. அவனுக்கு அடிக்கத் தெரியாது பாவம். என் மனைவிக்கும் தெரியாது. நான் போய்விட்டால் அவன் சைக்கிளுக்கு யார் காற்றடிப்பது?
நான் எங்கே இருக்கிறேன்...டக்கார்...செனெகல்...என் சடலத்தை யாரிடம் ஒப்படைப்பார்கள்....எங்கள் நிறுவன முகவரான திருமதி. ஃபதூ ஞாவிடமா...அல்லது நான் வேலை பார்க்கும் சென்னைக்கா...அல்லது நான் பிறந்து வளர்ந்த மதுரைக்கா? இதை யார் முடிவு செய்வார்கள்?
நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளனவே....ஆண்டாள் பாசுரங்களை ஆராய்ச்சி செய்ய குறிப்பு எடுத்து வைத்திருந்தேன்...சங்ககால பெண்புலவர்கள் பற்றி படிக்க நூல்கள் தேர்வு செய்திருந்தேன்....மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத...முத்துடைத்தாமம்...வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி...கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ...இல்லையே...ஆண்டாள் பாசுரம் இப்படி இராதே...என் நினைவுகள் எங்கே....ஏன் அவை சிதறுண்டு மதயானை அழித்த செவ்வாழைத் தோட்டமாக காட்சி தருகின்றன?...நிறைய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
நான் மற்றவர்களுக்கு கொடுத்ததும் எனக்கு கொடுத்துக் கொண்டதுமாக...நிறைய உள்ளனவே....!
சுஜாதா வாட்சும் மேக்கப் கிட்டும் கேட்டாள்; ஏ.வி.எஸ். பக்கார்டி பிளாக் வாங்கி வரச்சொன்னார்; பாலாஜி தன் மகனுக்கு சாக்லேட் வாங்க சொன்னான்...ராஜி மம்மி மட்டும் தான் ''நீங்க நல்லபடியா போய்ட்டு வாங்க அதுவே போதும் எனக்குன்னு ஒண்ணும் வேணாம்'' என்றார். பிரதிபலன் என்று எதையுமே எதிர்பாராத அன்பு ராஜி மம்மியின் அன்பு. திருமதி. சங்கர நாராயணனுக்கு மாம்பழ வண்ணப்பட்டுப் புடவை வாங்கி தருவதாக உறுதி அளித்திருந்தேன். அது வளர்ந்து பெரியாளான பின்னாடி தான் என்றாலும் இப்போது எல்லாமே இங்கேயே முடிந்து விடும் போலிருக்கிறதே...! இது என்ன விபரீதம்? எனக்கு ஒன்றும் அவ்வளவு வயது ஆகவில்லையே...!கற்க வேண்டிய நூல்களும், கேட்க வேண்டிய பாடல்களும், ரசிக்க வேண்டிய இசை தொகுப்புகளும் நிறைய உள்ளனவே...! இந்துத்துவவாதிகள் பாகிஸ்தானின் கலைஞர்களை நிராகரித்து தேசபக்தியை நிரூபித்த வேளையில் கஜல் கடவுளான மெஹ்தி ஹசனை ரசித்து கொண்டிருந்தேனே...சதத் ஹாசன் மண்டோவை என்னால் நிராகரிக்க  முடியுமா இந்த மடையர்களுக்காக? மானுடத்தின் மீது தணியாத காதல் கொண்ட எவரும் இந்த இருவரையும் எப்படி புறக்கணிப்பது? காதல்...இந்த உலகை இயக்கும் மந்திரச்சொல்...நான் காதலித்த அனைத்து பெண்களும் என் முன்னே வந்தார்கள்...அனைவரும் என்னை புறக்கணித்தவர்கள். அவர்கள் நகர்ந்த உடனேயே என்னை காதலித்த அனைத்து பெண்களும் வந்திருந்தார்கள். அதில் ஒரு பெண்மணி தனது மகளுடனும் பேரக் குழந்தையோடும் வந்து என்னை அந்த சிறுகுழந்தையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?
நான் திரிகோணமிதி, கால்குலஸ் இரண்டையுமே கற்றுத்தரும்படி என் மனைவியிடம் விண்ணப்பித்திருந்தேன். அவளும் சரி என்று சொன்னாள். இன்னும் முதல் பாடம் கூட ஆரம்பிக்கவில்லை...அதற்குள்ளாகவே இப்படியா....!
தேசியத்தலைவர் வந்தார் ''இவரை என்னென்று பேர் சொல்லி அழைப்பீர்கள்?...அருகிலிருந்த அருள், ''அன்பு என்று பெயர் கொடுத்தம் அண்ணா''.
''இவ்வளவு உதவிகள் செய்யும் இவருக்கு ஏன் இவ்வளவு சின்னப்பெயர்?'' சிரித்தார்...மறைந்தார். ''தம்பி...அடுத்ததாக கொஞ்சம் ரத்தம் தேவைப்படுகிறது...ஓயாத அலைகள் முடியும் வரை நாங்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்திட்டுத்தான் இருப்பம்...பாத்திக்கிடுங்க...''அருள் இப்போது எங்கே? கடைசியாக அவரை மதுரை ரயில் நிலையத்தில் பார்த்தேன்...ரயிலில் புத்தகம் படிக்க எனக்கு பிடிக்கும். அதுவும் இயற்பியல் என்றால் சிறப்பு. அணுவின் வெளிவட்டாரத்தில் சுழலும் எலக்ட்ரான் அதன் பாதை, டீப்ராக்லியின் இருமை தத்துவம், நீல்ஸ்போர் எப்படி அந்த எலக்ட்ரான் பயணிக்கும் போது அதன் கோண திசைவேகமாற்றம் (Angular Momentum) nh/2π இன் மடங்குகளாக இருக்கும் என்று ஊகித்தார்....ஷ்ரோடிங்கர் முப்பரிமாண வடிவப் பெட்டியில் ஒரு எலக்ட்ரான் பயணிக்க செலவாகும் ஆற்றலை எவ்வாறு துல்லியமாக கணித்தார்...அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததா...போர் நடக்கும் போது ஒருவனால் இப்படியெல்லாம் சிந்திக்க இயலுமா? என்னால் ஏன் சிந்திக்க இயலவில்லை...என் சிந்தனை எங்கே...? மெண்டலீஃப் எப்படி தனிமங்களை அட்டவணை இட்டார்…ஏன்? மின்மினிப்பூச்சி ஒளிவிடுவது எதனால் என்பதை சில நாட்களுக்கு முன் தான் அறிந்து கொண்டேன். அதன் உடலில் இருக்கும் லூசிபெரின் என்னும் நிறமி ஒளி உமிழும் தன்மை கொண்டது. தனது உணவை செரித்து லூசிஃபெரேஸ் என்னும் நொதியை உற்பத்தி செய்து கொண்டு அது ஓளி உமிழுகிறது. இந்த தகவலை கற்று என்ன பயன்? ஏன் இம்மாதிரி தகவலை சேர்த்து என் மூளையை குப்பைக் கூடையாக்கி வைத்திருக்கிறேன். இந்த குப்பைக் கூடையை என்று சுத்தம் செய்வது? நான் செய்ய வேண்டுமா...எப்போது? இந்நேரம் திருமூலர் சொன்ன மாதரி பேரை நீக்கி பிணம் என்று பேரிட்டிருப்பார்களோ...கூரையிலா காட்டிடை கொண்டு போய் எரிப்பார்களோ...நீரில் மூழ்கி நினைப்பொழிந்து போவார்களோ என் சுற்றத்தார்...எனக்கு பெண் குழந்தைகள் இல்லை...என் அண்ணன்மார்களின் பெண்பிள்ளைகள் தான் நீர்மாலை எடுக்க வேண்டும்...ஆனால் நிலைமையை பார்த்தால் அதற்கு அவசியமே இல்லை போலுள்ளதே...! இது என்ன புதுக் குழப்பம்? குழப்பம்...ஏன் குழம்புகிறேன்...மரணத்தை நெருங்கும் வேளையில் சிந்தனை தொட்டி உடைந்து சிதறுகிறது போலும்...நான் யார்? கற்றபடியும் கற்பித்த படியும் இருந்த பேராசிரியன் அல்லவா...நான் இன்னும் அடிக்கோடிட வேண்டிய காவிய வரிகள், மெய்யுருக்கள், விவாதிக்க வேண்டிய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் முழுக்க ஆற்றலாகவும் பருப்பொருளாகவும் விரவிக் கிடக்கிறதே...அதை எப்படி ஒருங்கிணைப்பது? நானும் பஞ்ச பூதங்களோடு கலந்து விடுவதுதான் இதற்கு தீர்வா? அல்லது என் சிந்தனைகளை எங்கெங்கு விதைத்தேனோ அவையனைத்தும் எனது மாற்றுரு தானே...அப்படித்தானே வள்ளுவனும், கம்பனும், இன்னும் சிலம்பெடுத்த தக்கோன், சீத்தலை சாத்தன், ஒக்கூர் மாசாத்தி, காக்கை பாடினி நச்செள்ளை, நன்னாகன், நப்பசலை என்று இன்று வரை தொடரும் அனைவரும் வாழ்கிறார்கள்..அவர்கள் காலம் கடந்தவர்கள்...வாழ்கிறார்கள்...காலமாகி விட்டார்கள்...ஆனால் நான்? காலம் என்பது பிரபஞ்சத்தின் நான்காவது பரிமாணம் என்றாரே ஐன்ஸ்டீன்....அதை வழி மொழிந்தாரே ஸ்டீபன் ஹாக்கின்ஸ். அப்படி என்றால் நானும் அந்த பரிமாணத்தின் ஒரு பகுதி ஆகி விட்டேனா? நிறைய வேலைகள் மீதம் உள்ளனவே...அப்பு ஃபெரெரோ ரோச்சர் சாக்லேட் கேட்டான். அதை துபாயில் தான் வாங்க வேண்டும். ஆனால் உயிரற்ற சடலத்திற்கு சாக்லேட் விற்பார்களா? அப்படியே அவர்கள் விற்றாலும் அதை எப்படி அப்பு சாப்பிடுவான்?
எல்லையில்லா பால்வீதியில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பது போல என் சிந்தை சிதறி தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. முற்றிலும் சுய நினைவிழந்த எனக்கு என் ரத்தநாளத்தைத் தேடி ஒரு ஆப்பிரிக்க செவிலி மருந்தை ஏற்றினார். ஊசி ரத்தநாளத்தில் ஏற்படுத்திய வலி மூளையை மீண்டும் மெதுவாக சுயநினைவிற்கு கொண்டு வந்தது.
ஆப்பிரிக்க செவிலி மெதுவாக கேட்டார் ''செபோ...கமாவு சாலே?''
எனக்குக் கூடக் கேட்காத அலைவரிசையில் ''வ்வி..சவா பியென்...மெர்சி'' என்றேன்.
''வூ அவே ப்யூதே அல்கோல்?'' (நீ மது அருந்தியிருக்கிறாயா?)
''ந..ஜே ந ப்யுவேபா அல்கோல்'' (இல்லை...நான் மது அருந்துவதில்லை)
''செ கி பாசே?'' (என்ன நடந்தது?)
''ஜேனேசேபா...'' (எனக்கு தெரியவில்லை)
'கமான் தலே வூ.?'' (இப்போ நன்றாக இருக்கிறாயா?)
''சவா பியேன்...மெர்சி..மம்மா'' (நன்றாக இருக்கிறேன் அம்மா)
என்னை கொண்டு வந்து எமிரேட்ஸ் விமானத்திற்கு செல்லும் வாயிலில் கொண்டு வந்து அமர வைத்தார். பத்து மணி நேர தொடர் விமானப்பயணம் குறித்த பயம் வர ஆரம்பித்தது.

Sunday, October 2, 2016

மேற்கு ஆப்பிரிக்கா - சென்னையிலிருந்து துபாய்! 03-10-2016


ஒழுங்கின்மைக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்திற்கும் என்ன ஜென்மபரியந்தமோ நானறியேன். வழக்கம் போல சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானம் ஒரு மணி ஐம்பது நிமிடம் தாமதம். அதைவிடக் கொடுமை அவர்கள் பயன்படுத்தும் தகவல்தொழில் நுட்பம்.
கடந்த ரசியப்பயணத்தில் பாடம் பயின்ற நான், இந்த முறை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையம் சென்றேன். நுழைவு சீட்டு வழங்கும் நபரிடம் எனக்கு கேமரூன் தேசத்தின் தலைநகரமான யாவுண்டே வரைக்குமான மற்ற இரு விமானங்களின் போர்டிங் பாஸ்களையும் வழங்குமாறு வேண்டினேன். அவரோ பரிதாபமாக என்னை நோக்கி '' சார்., என்னோட சிஸ்டத்திலிருந்து கென்யா ஏர்வேஸ் கனெக்ட் ஆக மாட்டேங்குது சார்...சாரி சார்..." நீங்க துபாய் ஏர்போர்ட்ல போயி வாங்கிக்கங்க சார்...ப்ளீஸ் சார்...உங்க பேக்கேஜை யாவுன்டே வரைக்கும் புக் பண்ணிட்டேன் சார்'' என்றார். அவரை குறைகூறி பிரயோஜனம் இல்லை. பாவம் அந்த சிப்பந்தி.
விமான நிலையத்தில் கும்பகோணத்து நண்பர் அறிமுகமானார். ரயில் சினேகம் மாதிரி இது விமான சினேகம். முதல்முறையாக துபாய் செல்லுவதாகவும் அங்கே சைவ உணவுகள் எங்கே கிடைக்கும் என்பதை என்னிடம் கேட்டறிந்தார். தமிழ் பற்றாளரான அவருடன் பேசியதில் காத்திருப்பின் அவஸ்தை குறைந்தது. என்ன ஒரே ஒரு குறை என்றால் அழகான பெண்கள் யாராவது எங்களைக் கடந்தால் அவரது சிந்தனை தப்பிவிடும். மீண்டும் சிந்தனை ரதம் தடத்திற்கு வர நேரம் பிடிக்கும். தீவிர வைணவரான அவர் கும்பகோணத்தை சுற்றியுள்ள பிரசித்த பெற்ற கோயில்களை எடுத்துரைத்தார்.
பேச்சின் நடுவே கேட்டார்.''சார்...உங்களுக்கு பிரபந்தம் தெரியுமா?''
''எதை சொல்றீங்க....நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சொல்றீங்களா?''
''ஆமாம் சார்...படிச்சு பாருங்க சார்...உங்களுக்குத்தான் இந்த மாதிரி சும்மா ஒக்காந்திருக்கிற நேரம் நிறைய கிடைக்குமே...!''
''உண்மை தான்...நான் கொஞ்சம் போல படிச்சிருக்கேன்....!''
''அப்படியா...ஒங்களுக்கு பிடிச்ச ஆழ்வார் யார் சார்?''
''மொதல்ல இந்த சாரை நிறுத்துங்க சார்...உங்களை விட வயசுல நான் ரொம்ப சின்னவன்....எனக்கு பிடிச்சது ஆண்டாள் அந்தம்மா ஆழ்வார் வரிசையில வர்றாங்களான்னு எனக்கு தெரியாது....அடுத்து நம்மாழ்வார் பிடிக்கும்....!
''உங்களுக்கு நம்மாழ்வார் பாசுரத்துல எது பிடிக்கும்?"
யோசிக்காமல் உதிர்த்தேன்.
''புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்''
''இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா...?''
மிக்க கவனத்துடன் அவர் சாரை தவிர்த்ததை நான் ரசித்தேன்.
''நீ என்னதான் பூ போட்டு பெருமாளை அர்ச்சனை/பூஜை செய்தாலும் புண்ணியம் செய்யலைன்னா...மகனே நீ காலிடா அப்படின்னு நம்மாழ்வார் சொல்றாரு..."
''ஏன் நல்லாதான பேசிக்கிட்டு இருந்தீங்க...திடீர்னு என்ன ஆச்சு?''
''இந்த பாசுரத்திற்கு இது தானே பொருள்...நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா...?''
''அப்படி இல்ல...பூமியில் பூக்கும் எல்லா மலர்களும் பெருமாளை வந்து சேர்வதில்லை, புண்ணியம் செய்த மலர்கள் மட்டுமே பத்மனாபம் பாதங்களை வந்தடைகின்றன...அந்த பாதத்தை சேவித்தால் மறு பிறப்பு என்பதே இல்லை...அப்படிங்கறாரு நம்மாழ்வார்...''
''ஓகோ..இனிமே சரி பண்ணிக்கிறேங்க...எனக்கு இந்த பாட்டின் சந்தம் ரொம்ப பிடிக்கும்...அதனால ஒருமுறை படித்தவுடனேயே ஒட்டிக்கொண்டு விட்டது...இல்லேன்னா ஆண்டாள் தான் என்னோட ஃஃபேவரிட்...''
''தெரியும்...பெண்களில் கவிதையில் காமத்தை வழியவிட்டதால் ஆண்டாளை நிறைய பேருக்கு பிடிக்கும்''
''தவறு...ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள சாஃப்ட் போர்னோவிற்காக நான் ரசிக்கவில்லை...மாறாக எனக்குத் தெரிந்து ஆண்டாள் தான் முதல்முதலாக எலமெண்ட் 'ஆஃப் க்யூரியாசிட்டியை தனது கவிதைகளில் தந்தாள் என்பது எனது அனுமானம்''
''இது புதுசா இருக்கே...எப்படி...எப்படி சொல்றீங்க....?''
''கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ...செம்பவள வாய்தான் தித்திருக்குமோ'' அப்படின்னு சொல்லும் போது வார்த்தைகளில் தொக்கி நிற்கும் ''ஓ'' ஒரு சாதாரண வெளிப்பாடு அல்ல. படிக்கிறவனுக்கு ஆண்டாளின் சிந்தனையோடு அவனும் சேர்ந்து பயணிக்க அளிக்கப்படும் வெளி...உங்களுக்கு புரியக்கூடிய எளிய தமிழில் சொல்வதாக இருந்தால் ஸ்பேஸ்....கம்பன் சீதையை சூர்ப்பனகை வர்ணிப்பதாக காட்டும் பாடலில் சீதையின் அழகை ஒரு முற்றுமுடிவான உவமையாக காட்டி கடைசியில் தான் பிரமிப்பை உண்டு பண்ணுவான்...ஆண்டாள் அப்படி அல்ல...ஒவ்வொரு வார்த்தையிலும் உண்டாக்குவாள்..."
''கம்பனோட எந்த பாடலை சொல்றீங்க?''
'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!
அப்படின்னு வர்ணிச்சிட்டே போயி கடைசியில ''சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
அப்படின்னு முடிப்பான்'' எல்லாமே அவனே முடிவு பண்ணி இது இது இப்படி இருந்துச்சி அப்படிங்கறதுல கிக்கே இல்ல சார்?
இது அப்படி இருக்குமோ அது அப்படி இருக்குமோ அப்படின்னு ஏங்க வைக்கும் ஆண்டாள் தான் எனக்கு பிடிக்கும்''
''நல்லா பேசுறீங்க...'நீங்க சொல்ற கம்பனின் பாடல் பற்றி எனக்கு ஐடியா இல்லை
விமானத்திற்கான அழைப்பு வர இருவரும் விமானத்தின் உள்ளே நுழைந்தோம்.
இது மாதிரியான ஆகப் பாடாவதியான விமான சேவையை நான் பார்த்ததே இல்லை. நான் அமர்ந்த இருக்கை அமர்ந்த உடனேயே பின்னால் சாய்ந்தது. பின்னால் இருந்த நண்பர் கோபமாக '' சார்...டேக் ஆஃப் ஆன பின்னாடி சாய்ங்க..சார்'' என்றார்.
நானோ '' ஏங்க நான் என்ன வேணும்னா சாய்றேன்...பின்னால அதுவா போகுதுங்க''
உணவு பரிமாற பட்டது. ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
ஏர்-இந்தியா நிறுவன இயக்குனருக்கு இரண்டு கோரிக்கைகளை வைக்க உத்தேசித்திருக்கிறேன்.
ஒன்று நேரம் தவறாமையை கடைபிடியுங்கள்; இரண்டாவதாக இருக்கைகளை சரி செய்யுங்கள். துணைக் கோரிக்கையாக கருநீல கால்ச்சட்டை அணியும் பணிப்பெண்களை வெள்ளை உள்ளாடை அணியக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். கும்பகோணத்து மாமா ரொம்ப கஷ்டப்பட்டார்.

(03/10/2016 அன்று துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து)



Thursday, September 1, 2016

தோழர்.திருவுடையான் நினைவாக...!

தோழர்.திருவுடையான் நினைவாக...!
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால், 2000ஆம் ஆண்டு ஒரு நவம்பர் மாத இறுதியில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற த.மு.எ.ச நடத்திய கலை இலக்கிய இரவுக்கு நான், நண்பர்கள் கோபால், கனக தாமஸ், வெங்கடேசன் மற்றும் சிலருடன் சென்றோம். கூட்டம் களை கட்டியது. தோழர். திருவுடையான் குரல் அறிமுகமானது அங்கே தான்.
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி சில பேச்சாளர்கள் வந்து சேர காலதாமதமான போது கூட்டத்தை கட்டி வைக்க திருவுடையானின் குரலும் விரலும் பயன்பட்டன. நந்தலாலா பேசி முடித்த பின் தோழர். பாரதிகிருஷ்ணகுமார் (பி.கே) பேச வர வேண்டும். அப்போது அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். பி.கே வர தாமதமாகும் என்ற தகவல் வழிதவறி அவர் வரவில்லை என்று பரவ மக்கள் கூட்டம் மெதுவாக களையத் துவங்கிய நேரம், கணீரென்று ''வாராய்....நீ....வாராய்'' என்ற குரல் அசையும் மக்கள் திரளை நிறுத்தியது. கர்நாடக தேவகாந்தாரியில் அமைந்த இந்த பாடல் மிக எளிதில் எவராலும் பாடக்கூடியது அல்ல. உச்ச ஸ்தாயியில் ஆண் குரலும் கீழ் ஸ்தாயியில் பெண் குரலுமாக ஒலிக்கும் அந்த பாடல் இணையருக்கானது. இருப்பினும் தனது அசாத்திய குரல் வளத்தாலும் கேள்வி ஞானத்தால் தான் பெற்ற அபார இசை பயிற்சியாலும் திருவுடையான் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார். பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரும் இந்த வரியை எப்படி பாடுவார், அந்த வரிக்கு வரும் போது அவர் குரல் எப்படி மாறும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கச் செய்தார். ''ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே'' என்று பெண்ணின் குரல் மென்மையாக ஒலித்து முடிக்கும் போது மிக உயர் அழுத்தத்தில் ஆண் குரலில் ''இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயிர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்'' என்று அவர் பாடுவதை கேட்டது தனி சுகம். ஆர்ப்பரிக்கும் கடலில் பெரிய அலை ஒன்று எழும்பி கரையருகே மடிந்து மண்ணை தனக்குள் வாரி அள்ளி எடுத்துச் செல்வது போன்று அவரது இந்த பாடல் காதுக்குள் இசையாய் நுழைந்து கண்ணில் காட்சியாய் விரிந்தது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்யும் மழை போல அவரது இசையில் நனைந்தோம். கரிசல் கருணாநிதியுடன் இணைந்தும் தனித்தும் சமூக அவலங்களை நையாண்டியோடு எடுத்துரைக்கும் பாடல்களை பாடி செவிக்கு விருந்து வைத்த தோழர். திருவுடையான் இன்று நம்மிடையே இல்லை. தனது குரலாலும் விரலாலும் பிரபஞ்சத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கலைஞனின் உயிர் இயக்கத்தை காலம் நம்மிடமிருந்து களவாடிக் கொண்டது. நான் இந்த வருடம் ஜுன் மாதம் தாயை இழந்து வாடிய போது எனக்கும் ஆறுதல் அளித்தது தோழர்.திருவிடையானின் குரலில் ஒலித்த இந்த பாடல் மட்டுமே...! 
https://www.youtube.com/watch?v=ZCR2vMVlBUw

Wednesday, July 27, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5): 28-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5):
--------------------------------------------------------
ரயிலுக்கான அறிவிப்பு வந்தவுடன் பாதுகாப்பு சோதனையை முடித்து பயணிகள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். எனது முறை வந்தது. பயணச்சீட்டு  ஆய்வாளர் ஒரு பெண்மணி.
''உங்கள் பெயர்?''
''ஜெயசீலன்''
''மன்னிக்கவும்...உங்கள் பெயர் பட்டியலில் இல்லை.."
''அதெப்படி...43ஆம் இருக்கை எனக்காக ஒதுக்கப்பட்டது''
''இல்லை...அது கணபதி என்பவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது''
''அதுவும் நான் தான் ...அது என் தந்தையாரின் பெயர்''
''உங்கள் தந்தை எங்கே?''
''அவர் இந்தியாவில் இருக்கிறார்...ஏன் கேட்கிறீர்கள்?''
''இந்தியாவில் இருக்கும் நபருக்கு எதற்காக இங்கே டிக்கெட் வாங்குகிறீர்கள்?''
''ஐயோ...மேடம் என் பாஸ்போர்ட்டை பாருங்கள் இரண்டுமே நான் தான்''
''அதெப்படி நீங்களும் உங்கள் தந்தையும் ஒன்றாக முடியும்...நீங்கள் சற்று ஒதுங்கி நில்லுங்க...எங்கள் கண்காணிப்பாளர் வந்து விசாரிப்பார்''
சரிதான்...இந்தம்மாவே இப்படி...இதுக்கும் மேல ஒருத்தர் இருக்காரா....சரி என்ன தான் நடக்குன்னு பார்ப்போம். காத்திருந்தேன்.
கண்காணிப்பாளர் வந்தார். பயணச்சீட்டை பார்த்தார். பாஸ்போட்டை பார்த்தார்.
''இது உங்கள் பாஸ்போர்ட் தானா?''
''ஏன் அதிலென்ன சந்தேகம்...என்னுடையது...என்னுடையது தான் ஐயா''
''இல்லியே...நிறைய வித்தியாசம் இருக்கே''
''அதாவது சார்...போன மாதம் என் அம்மா இறந்து விட்டார்..அதனால்....''
''ஹலோ மிஸ்டர்...அதை நான் கேட்கவில்லை...அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?''
''அது தான் சார்....சொல்ல வர்றேன்... அவ்வாறு துக்க சம்பவம் நடக்கும் போது நாங்கள் தலை மழிப்பது வழக்கம்''
''உங்கள் தாயார் இறந்ததற்கு நீங்கள் ஏன் தலைமழிக்க வேண்டும்...அப்படி செய்தால் முடி முளைக்க இரண்டொரு மாதம் ஆகுமே?''
''சார் இப்ப அதுவா பிரச்சினை...இதில் உள்ள பெயர் என்னுடையது தான் ஐயா''
''பெயரில் பிரச்சினை இல்லாவிட்டாலும் புகைப்படத்தில் பிரச்சினை உள்ளதே''
கடவுள் மாதிரி என்னமோ புஷ்கின் வந்தார்.
''ஹாய்...ஜெ என்ன பிரச்சினை?''
''சார்...சார் நீங்களாவது சொல்லுங்க சார்...இந்த பாஸ்போர்ட் என்னுடையது இல்லைன்னு சொல்றார் சார்''
''மிஸ்டர் மிஷேல்! இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் இந்தியாவில் தமிழர் என்னும் தேசியஇனத்தை சார்ந்தவர். தாய் இறந்தால் தலையை மழிப்பது அவர்களின் மரபாக இருக்கலாம். அதற்காக அவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? பாஸ்போர்ட்டை கொடுங்கள்''
ஒருவழியாக பாஸ்போர்ட் கைக்கு வர நிம்மதியாக ரயிலேறினேன்.

மழைக்காலத்தில் மாஸ்கோ(4): 27-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(4):
இப்போது அந்த ரஷ்யத்தாய் களைப்பிலிருந்து மிதமாக விடுபட்டிருந்தார். எனது பெயரைக் கேட்டார். அவரால் உச்சரிக்க முடியவில்லை. என்னமோ புஷ்கின் கூட சற்று சிரமப்பட்டு தான் உச்சரித்தார். நானும் அந்த ரஷ்யத்தாயும் உரையாடத் துவங்கினோம். புஷ்கின் தான் மொழிபெயர்த்தார்.
''மகனே...நீ எங்கிருந்து வருகிறாய்...திருமணம் ஆகிவிட்டதா...எத்தனை குழந்தைகள்?''
''அம்மா...நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்...எனக்கு திருமணம் ஆகி பத்து வயதில் மகனுண்டு''
''பெண் குழந்தைகள் எத்தனை பேர்?''
''இல்லை அம்மா...எங்களுக்கு பிறந்தது ஒரே ஒரு மகன் மட்டுமே''
ஏன்...குழந்தைகளை தொல்லையாக நினைக்கிறீர்கள்? இங்கே எங்கள் ஊரில்தான் பெண்கள் பிள்ளை பெற தயங்குகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் 6 குழந்தைகளை பெற்றேன். அதில் நான்காவது குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் இறந்து விட்டது. அதிபர் பிரஷ்னேவ் குழந்தை பிறந்த போது வாழ்த்தும் இறந்த போது இரங்கலும் தெரிவித்தார். என் கணவருக்கு பிடித்தமான குழந்தை அது. தொடர்ந்து மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் பிறந்தவள் என்பதால் அவள் எங்களை விட்டு பிரிந்த போது எங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என் கணவரின் தங்கை அதற்கு முந்திய ஆண்டு தான் இறந்து போனாள். எனவே தனது தங்கையே மீண்டும் வந்து பிறந்ததாக என் கணவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. என் கணவரின் தங்கை எங்களுக்கு திருமணமான பொழுதுதான் பூப்படைந்திருந்தாள். அவள் கொள்ளை அழகு தெரியுமா? ரோஜாப்பூ நிறத்தில் அவள் கன்னங்கள், சற்றே நீலவண்ண கண்கள், வெள்ளை நிறக்கூந்தல், எப்போதும் தூய வெள்ளையாடையில் தேவதை போன்று பவனி வருவாள். அவளுக்கு திருமணமாகி முதல் பிரசவத்தில் தாயும் சேயும் எங்களை விட்டு பிரிந்தார்கள். எங்கள் நிலத்தில் தான் நாங்கள் அடக்கம் செய்தோம். எங்கள் கிராமத்தின் தேவாலய இடுகாட்டில் எங்களுக்கு இடம் உண்டு. ஆனால் நாங்கள் அதில் அவளை புதைக்க விரும்பவில்லை. எங்கள் முன்னோர்களையும் நாங்கள் எங்கள் நிலத்திலேயே அடக்கம் செய்தோம். அடக்கம் செய்த அன்றிரவு என் கணவர் எங்கள் நிலத்தை விட்டு வீட்டிற்கு வரவே இல்லை. அந்தப் பனியிலும் இறந்த போன தங்கையின் சடலத்தோடு உரையாடிக் கொண்டிருந்தார். பாவம்...அன்பே உருவான மனிதர் அவர். எங்களது மரணத்திற்கு பிறகும் நாங்கள் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். எங்களையும் நிலத்தையும் பிரிக்கவே இயலாது....விவசாயிகளுக்கு நிலம் தான் எல்லாம். விவசாயியும் தாயும் ஒன்று தெரியுமா? தாய் தன்னுள்ளே கருவை சுமந்து இந்த உலகத்திற்கு புதிய உயிரை தருவது போல விவசாயி தன் நிலத்திலிருந்து புதிய தானியங்களை உருவாக்கி இந்த உலகத்திற்கு தருகிறான். இதோ இந்த பையில் இருக்கும் உருளைக்கிழங்குகளும் கேரட்டும் எங்கள் நிலத்தில் விளைந்தவை. அறுவடை முடிந்தபின் இதை முதலில் எங்கள் மூத்தமகன் வசிக்கும் கிராமத்திற்கு எடுத்து சென்று பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டுத்தான் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை செய்வோம். இந்தமுறை அறுவடை முடிந்தபின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் பண்டகசாலை அலுவலர்கள் வந்து கேட்ட போது மறுத்துவிட்டேன். நாங்கள் தனியாருக்கு விற்பதில்லை. உணவை உற்பத்தி செய்வதும் அதை பசித்தவர்களுக்கு சுயநலமின்றி சரியாக பகிர்ந்தளிப்பதும் எங்களை அப்போது வழி நடத்திய தலைவர்கள் கற்றுத்தந்த பாடங்கள். இன்று அவை மாறிக்கொண்டு வருகின்றன. நாங்கள் மாறமாட்டோம். பசிக்கு உணவளிப்பது மாபெரும் அறமல்லவா...அதை இந்த பிறவியில் எங்களுக்கு ஆண்டவன் அளித்திருக்கிறார். அதை எவ்வாறு மறுதளிப்பது? இந்த கிழங்கும் கேரட்டும் எங்கள் மண்ணில் புதைக்கப்பட்ட மூதாதையர்கள் அல்லவா...அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று நீ நம்புகிறாயா?''
இல்லை...சத்தியமாக இல்லை...நீங்கள் அறுவடை செய்யும் ஒவ்வொரு தானியத்தின் வாயிலாக அவர்கள் காலம் கடந்து வாழ்கிறார்கள்...உங்களோடே பயணிக்கிறார்கள்...மரணம் என்பது என்ன...அது தற்காலிக விடுப்பு தானே.... அவர்கள் உங்களிடமிருந்து நிரந்தரமாக ஒரு போதும் பிரியவில்லை என்றே நானும் நம்புகிறேன்''. நான் இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களில் மூத்த தேசியஇனமான தமிழ் என்னும் தேசிய இனத்தை சார்ந்தவன். எங்கள் மரபும் இதேதான். உழுதுண்டு வாழ்வோரை  மற்றவர் தொழுது வாழவேண்டும் என்று போதித்த மரபு என்னுடையது.
''இந்தியாவும் பழைய சோவியத் ஒன்றியம் போலத்தானே?''
''ஆம்...பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்கள் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம்.''
''நல்லது மகனே...நாங்கள் பல்வேறு சோவியத்துகளாக ஒன்றாக வாழந்த போது மகிழ்ச்சியாக இருந்தோம். உக்ரேனின் கோதுமை உஸ்பெகிஸ்தானின் குழந்தைகளின் பசியை போக்கியது, எங்கள் மின்சாரம் உக்ரேன் குழந்தைகள் கல்வி கற்க வெளிச்சம் தந்தது...இப்போது அவை இல்லை....பகைமை உணர்ச்சி தான் மேலோங்கி உள்ளது''
''நீ சமைக்காத கேரட் தின்பாயா?''
''ஓஓ...சமைக்க வேண்டாம்...அப்படியே சாப்பிடுவேன்''
''இந்த கேரட்டை பயிரிட்டு முதல் தளிர்விடும் போது என் கணவரின் தங்கை சிரிப்பது போன்றே இருக்கும். தினமும் காலை தோட்டத்திற்கு சென்று அதை பார்த்து விட்டு வருவேன்...அதில் ஒரு நிம்மதி எனக்கு...''
கையில் தனியாக ஒரு சிறு பையில் நான்கு உருளைக்கிழங்கும் இரண்டு கேரட்டுகளும் வைத்திருந்தார். ஒன்றை எனக்கும் புஷ்கினுக்கும் தந்தார்.
''மகனே! நீங்கள் ஏன் இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது?''
சென்னையிலிருந்து மாஸ்கோ கிளம்பும் போது தான் இரண்டு தென்னைமாறு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். வெறும் தென்னை ஓலையால் கட்டப்பட்ட விளக்கமாறு அது. எனவே பழைய நைலான் கயறால் நன்றாக இறுக்கி கட்டிக் கொடுத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. ஆனால் இதை சொன்னால் அந்தம்மாவிற்கு புரியாது.
''இல்லை அம்மா...முதல் குழந்தை பிறந்தபோதே அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். குழந்தை சற்று கனம் கூடுதலாக இருந்ததாலும் அவள் சற்று பருமனாக இருந்ததாலும் அறுவை சிகிச்சை செய்தே என் மகன் பிறந்தான். அதில் அவள் பட்ட வேதனைகளை நேரில் கண்ட நான் இனி அப்படி ஒரு துயரத்தை அவளுக்கு கொடுக்கக்கூடாது என்று எண்ணினேன்.''
ஓஓ...குழந்தைகள் கூடி ஒரு வீட்டில் வாழ்வதும் அவர்களை வளர்த்தெடுப்பதும் ஒரு பெரிய வரம்...அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
காடும், வீடும் காரும் பணமுமா செல்வங்கள்...குழந்தைகள் அல்லவா உண்மையான செல்வங்கள்...''
''உண்மை'' நான் ஆமோதித்தேன்.
மாஸ்கோவிற்கும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிற்கும் இடையில் உள்ள ஒகுலோவ்கா என்னும் இடத்தில் அவர் இறங்க வேண்டுமெனவும் ரயில் வரைக்கும் இந்த பைகளை சுமந்து வர இயலுமா எனக் கேட்டார்.
இடையில் புகுந்த புஷ்கின் ''அதற்கு அவசியமே இல்லை...நான் வண்டி ஏற்பாடு செய்கிறேன் என்று பேட்டரியால் இயங்கும் வாகனத்தை கொண்டு வர ஆணை பிறப்பித்தார்.
அவர் கிளம்ப எத்தனித்த போது மானசீகமாக அவர் முன் முழங்காலிட்டேன்.
தனது வலது கட்டைவிரலால் என் நெற்றியில் சிலுவை இட்டார்.
மகனே...என் மனம் மிக இலகுவாக உள்ளது....வீட்டில் என் கணவர் படுத்தபடுக்கையாகி விட்டார். வேலையாட்கள் மாலை அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்....பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்தேன். உனக்கும் புஷ்கினிற்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். இனி ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்யும் போது உன்னையும் உன் மகன், மனைவியையும் நினைத்து ஆண்டவரின் வேண்டுவேன்''
பேட்டரி வாகனம் வர ரஷ்ய தாயும் புஷ்கினும் விடைபெற்றனர்.