Thursday, September 1, 2016

தோழர்.திருவுடையான் நினைவாக...!

தோழர்.திருவுடையான் நினைவாக...!
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால், 2000ஆம் ஆண்டு ஒரு நவம்பர் மாத இறுதியில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற த.மு.எ.ச நடத்திய கலை இலக்கிய இரவுக்கு நான், நண்பர்கள் கோபால், கனக தாமஸ், வெங்கடேசன் மற்றும் சிலருடன் சென்றோம். கூட்டம் களை கட்டியது. தோழர். திருவுடையான் குரல் அறிமுகமானது அங்கே தான்.
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி சில பேச்சாளர்கள் வந்து சேர காலதாமதமான போது கூட்டத்தை கட்டி வைக்க திருவுடையானின் குரலும் விரலும் பயன்பட்டன. நந்தலாலா பேசி முடித்த பின் தோழர். பாரதிகிருஷ்ணகுமார் (பி.கே) பேச வர வேண்டும். அப்போது அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். பி.கே வர தாமதமாகும் என்ற தகவல் வழிதவறி அவர் வரவில்லை என்று பரவ மக்கள் கூட்டம் மெதுவாக களையத் துவங்கிய நேரம், கணீரென்று ''வாராய்....நீ....வாராய்'' என்ற குரல் அசையும் மக்கள் திரளை நிறுத்தியது. கர்நாடக தேவகாந்தாரியில் அமைந்த இந்த பாடல் மிக எளிதில் எவராலும் பாடக்கூடியது அல்ல. உச்ச ஸ்தாயியில் ஆண் குரலும் கீழ் ஸ்தாயியில் பெண் குரலுமாக ஒலிக்கும் அந்த பாடல் இணையருக்கானது. இருப்பினும் தனது அசாத்திய குரல் வளத்தாலும் கேள்வி ஞானத்தால் தான் பெற்ற அபார இசை பயிற்சியாலும் திருவுடையான் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார். பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரும் இந்த வரியை எப்படி பாடுவார், அந்த வரிக்கு வரும் போது அவர் குரல் எப்படி மாறும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கச் செய்தார். ''ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே'' என்று பெண்ணின் குரல் மென்மையாக ஒலித்து முடிக்கும் போது மிக உயர் அழுத்தத்தில் ஆண் குரலில் ''இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயிர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்'' என்று அவர் பாடுவதை கேட்டது தனி சுகம். ஆர்ப்பரிக்கும் கடலில் பெரிய அலை ஒன்று எழும்பி கரையருகே மடிந்து மண்ணை தனக்குள் வாரி அள்ளி எடுத்துச் செல்வது போன்று அவரது இந்த பாடல் காதுக்குள் இசையாய் நுழைந்து கண்ணில் காட்சியாய் விரிந்தது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்யும் மழை போல அவரது இசையில் நனைந்தோம். கரிசல் கருணாநிதியுடன் இணைந்தும் தனித்தும் சமூக அவலங்களை நையாண்டியோடு எடுத்துரைக்கும் பாடல்களை பாடி செவிக்கு விருந்து வைத்த தோழர். திருவுடையான் இன்று நம்மிடையே இல்லை. தனது குரலாலும் விரலாலும் பிரபஞ்சத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கலைஞனின் உயிர் இயக்கத்தை காலம் நம்மிடமிருந்து களவாடிக் கொண்டது. நான் இந்த வருடம் ஜுன் மாதம் தாயை இழந்து வாடிய போது எனக்கும் ஆறுதல் அளித்தது தோழர்.திருவிடையானின் குரலில் ஒலித்த இந்த பாடல் மட்டுமே...! 
https://www.youtube.com/watch?v=ZCR2vMVlBUw