Thursday, August 23, 2018

ஆண் நன்று (சிறுகதை)

அந்த அரசு குடியிருப்பின் அனைத்து வீடுகளும் தொலைக்காட்சி நெடுந்தொடரில் மூழ்கி இருந்தன. பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் சுவர்கள் கூடிய விரைவில் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின. வெளியில் நின்ற மரங்களின் இலைகள் கூட அசையாமல் சூழலின் வெப்பத்தை தணிப்பதற்கு உதவி செய்ய மறுத்த மாலைப்பொழுது. வெட்கையை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே  விளையாடும் குழந்தைகளின் சத்தம். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த பொழுதின் இறுக்கம் அந்த பழைய பெரிய வீட்டை சற்று அதிகமாகவே பாதித்திருந்தது. 
விழுப்புரம் என்னும் அந்த 'விழுமியபுரம்'' மாவட்டத்தின் திட்ட அலுவலர் சஞ்சய் குமாரை நிலைகொள்ளவிடாமல் செய்தன தொலைக்காட்சியின் அலைவரிசைகள்.
எதிலும் நிலைக்காத கண்களும் மனமும் செய்தி தொலைக்காட்சியை தெரிவு செய்தது.
சஞ்சய் விழுப்புரம் மாவட்டத்ததின் திட்ட அலுவலர். ஆட்சியருக்கு அடுத்து அதிகாரம் படைத்த பதவி. தந்தையை சிறுவயதிலேயே இழந்தவன். தாயால் மட்டுமே போற்றி பாதுகாக்கப்பட்டவன். 
அவனுடைய தாய் பின்னால் அமர்ந்து இந்த உலகத்திற்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று ஜெயகாந்தனின் நாவலில் ஆழ்ந்திருந்தாள். செய்திகளுக்கு இடையே ''சற்று முன் வந்த தகவல்'' என்று செய்தியாளர் தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் என்ற அறிவிப்பை தந்தார். தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டதாக செய்தியாளர் கூறிவிட்டு விவரங்களை வாசிக்கலானார்.
அதுவரை ஜெயகாந்தனிடம் மூழ்கியிருந்தவள் செய்தியை கேட்டு தொலைக்காட்சியின் மீது கவனத்தை திருப்பினாள்.
மதுரை - தணிகாசலம்
திருச்சி - வெங்கடேஸ்வரன்
விழுப்புரம் - ஜே.பி. அருண்
கடலூர் - சஞ்சீவ் பாட்டியா.....விவரங்களை செய்தியாளர் தொடர்ந்தார்.

மிக வேகமாக கடந்த விவரங்களுக்கு இடையே வந்த புகைப்படங்களில் அந்த மூன்றாவதாக வந்த புகைப்படம் மட்டும் அவளுக்கு அதிர்வை ஏற்படுத்தியது.
28 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே முகம். அவன் தானா இது?
சஞ்சய் யார் இந்த புது கலெக்டர்? உனக்கு முன்னாடியே தெரியுமா....?
''இல்லைமா...இது கொஞ்சம் புது ஆளா தெரியுது....இரு நான் நாராயணண்ட்ட பேசுறேன்...''
''டேய்...இவன் என்னவோ அந்த ஜே.பியோட பையன் மாதிரி தான் தெரியுது....''
''ஐயோ..ஆரம்பிச்சிட்டியா...ஏம்மா இப்படி இருக்க....அந்தாளு நீ வேணாம்னு சொல்லிட்டு போயி முப்பது வருசம் ஆகுது...நீ இன்னுமா அவரை நினைச்சிட்டு இருக்குற? உன்னை மாதிரி ஒரு தேவதை வலிந்து போய் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டதுக்கு அப்புறமும் வேணாம்னு சொன்னான்னா அவன்லாம் ஒரு ஆம்பளையா?''
''பின்னே உங்க அப்பா மட்டும் ஆம்பளையா...தனக்கு கேன்சர் இருக்குன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி ஒரு புள்ளையை கொடுத்துட்டு செத்துப்போனவன் ஒரு ஆம்பளையா...அவர் சாகும் போது எனக்கு 22 வயசு...உனக்கு 7மாசம்....அவரோட தோப்பனாரும் அம்மாவும் வந்து ''எம்புள்ள எதையும் அனுபவிக்காம போய்ச்சேர்ந்துடப்டாதுன்னுட்டு இப்படி செய்துட்டோம்...அந்த ஆத்மா வானுக்கும் பூமிக்கும் இடையிலே தீராத ஆசைகளோட அல்லாடப்டாதுன்னுட்டு இப்படி செய்ய வேண்டியதா போச்சி....தயவு செய்து எம் பெண்டுகளை சபிச்சிடாதம்மான்னு கால்ல விழுந்தா....கால்ல விழுந்தா சரியா போச்சா...உனக்கு ஆம்பளைன்னா என்னான்னு தெரியுமா...உண்மையா இருக்குறவன் தான் ஆம்பளை...அந்த விசயத்துல ஜே.பி எவ்வளவோ மேல்...உண்மையான ஆம்பிளைனா அவன் தான்...அம்மாடி! என் குடும்பம் ஒரு காதல் கல்யாணத்தை தாங்காது....என் குடும்ப சூழ்நிலை வேறு ...உங்க குடும்ப சூழ்நிலை வேறு...ஐ காண்ட் அஃபோர்ட் அ லவ் நௌ அப்படின்னு சொன்னான் பாரு அது ஆம்பளைத்தனம்...'' மூச்சிரைக்க பேசி ஓய்ந்தாள்.
''பின்னே எதுக்கு வருசாவருசம் திதி குடுக்குற...உன்னை ஏமாத்திட்டு செத்துப்போனவனுக்கு எதுக்கு ஸ்ரார்த்தம்...பூசை...தர்ப்பணம்?''
''சுயநலம்...அதுகூட உனக்காகத்தான்...பித்ரு தோசம் வந்து உன் சந்ததியை பாதிச்சிரக் கூடாது பாரு அதுக்காக....''
சொல்லிவிட்டு மௌனமாக தனது அறையை நோக்கி நடந்தாள். 

கட்டிலில் படுத்தவாறு நினைவுகளில் பின்னோக்கி நடந்தாள். அவனை எப்போது நான் பார்த்தேன்...இல்லை பார்ப்பதற்கு முன்பு அவனது குரல் தான் என்னை கவர்ந்தது...திருநெல்வேலி ஜங்சனில் பெருமாள் தெற்கு ரதவீதியில் பேரின்ப விலாஸ் தியேட்டருக்கு அருகில் இருக்கும் வாணி விலாஸ் காம்பௌண்ட் என்னும் பிராமணர் குடியிருப்பில் சில குடும்பங்களும் பல மருத்துவ விற்பனை பிரதிநிதிகளும், பெரும்பாலும் திருமணமாகதவர்கள், தங்கியிருந்த காலம் அது. நான் கல்லூரிக்கு கிளம்பும் போது ஜே.பியை பார்த்திருக்கிறேன். ஒடிசலான தேகம், தேடல் நிறைந்த கண்கள், எப்போதும் வெளிர் நிற ஆடைகளில் தான் காணப்படுவான். வேலைக்கு கழுத்தில் டை இல்லாமல் போகமாட்டான். ஒரு மழைநாள் இரவில் உடை மாற்ற மேல்மாடிக்கு சென்ற போது தான் அந்த குரல் என் காதில் விழுந்தது.
''கவிஞர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவது ஒருவித மூட நம்பிக்கை...ஆங்கில இலக்கியத்தில் மகாகவி என்று போற்றப்படும் பைரன் ஒரு கவிதையில் கூறுகிறார் ''அன்பே...என் காதல் எவ்வளவு உயர்வானது தெரியுமா...இதோ ஓங்கி உயர்ந்து மேகத்தை முத்தமிடத் துடிக்கும் இந்த பைன் மரத்தை போன்றது....'' இதுவரை சரி...பைன் மரம் உயரமானது தான்...ஆனால் அடுத்த வரியை பாருங்கள்...''அன்பே என் காதல் எவ்வளவு ஆழமானது தெரியுமா...பூமியின் மையத்தை நோக்கி ஊடுருவிச்செல்லும் இந்த பைன் மரத்தின் வேர்களை போன்றது'' பைரனுக்கு தெரியாது....பைன் மரத்தின் வேர்கள் பக்கவாட்டில் விரவி செல்லுமே ஒழிய கீழ் நோக்கி ஒருபோதும் செல்லாது...கவிதையை ரசிப்பது ஒரு மனோபாவம் அவ்வளவுதான்...அதை உணர்ச்சி நிலையிலிருந்து அறிவுநிலைக்கு நகர்த்தும் போது சுவை குறைந்து விடுகிறது....ரொம்ப எளிமையா சொல்றேனே....மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள்'' அப்படின்னு சினிமா பாட்டை கேட்டுட்டு பேசாம போயிடனும்...அதை விட்டுட்டு ஆண்மயிலுக்குத்தானே தோகை..பெண் மயிலுக்கு தோகை கிடையாதே...அப்படின்னா மாதவி ஆணா பெண்ணா இல்லை ரெண்டுகெட்டானா என்று சிந்தித்தால் குழப்பும்''  

யார் இவன்...இவ்வளவு தீர்க்கமாக தனது தரப்பு வாதத்தை முன்வைக்கும் லாவகம் எனது பேராசியர்களுக்கு கூட வாய்ப்பதில்லையே...அதுவும் லார்ட் பைரன். 
ஆடையை மாற்றாமல் ஈரத்துடன் இருந்ததை பார்த்த அம்மாதான் என்னை சுயநினைவிற்கு கொண்டு வந்தாள்.
''என்னடி...ஈரத்துணியைக் கூட மாற்றாமல் கனவு கண்டுக்கிட்டு''
இவனை நான் சந்தித்தே ஆக வேண்டும். மெடிக்கல் ரெப்ரெசண்டேடிவ் குடியிருக்கும் பகுதியில் இருப்பவர்களில் நன்கு பரிச்சயமானவன் ராமச்சந்திரன் தான்...அவனைக் கேட்டால் இவனைப் பற்றிய விவரம் கிடைக்கும். காலை காஃபிக்கு மோகன் கடைக்கு செல்லும் ராமச்சந்திரனை நிறுத்திக்கேட்டேன்.
''நேத்து ராத்திரி யார் லார்ட் பைரனைப் பத்தி பேசினது...சத்தியமா நீ இல்லைன்னு தெரியும்...வேறு யார்?''
''எனக்கு அவ்ளோ அறிவிருந்தா நான் ஏண்டி மருந்துப்பையத் தூக்கிட்டு தெருத்தெருவா அலையுறேன்...அது  புதுசா நம்ம ரூம்ல சேர்ந்துருக்கிற ஜே.பாலசுப்ரமணியன்..சுருக்கமா ஜே.பி...பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கான்...மற்றபடி சொல்லிக்கிற மாதிரி வேறெதுவும் இல்லை...''

அவன் பேசுவதை கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆவல் என்னை தீயாய் பற்றியது. சண்டை போட்டு அந்த ஜன்னலோர கட்டிலை என் அக்காவிடமிருந்து பெற்றேன். ஒவ்வொரு நாளும் அவன் குரலுக்கு ஏங்கினேன். அவனும் வஞ்சம் வைக்காமல் பேசினான்.

இரவு விவாதங்களில் அவன் தொடாதத் தலைப்பே இல்லை. சரளமான மொழிவளம் அவனுடைய மிகப்பெரிய சொத்து. ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் ஆகாயத்தையும் தமிழில் தாழ்வாரத்தையும் தொடும் சொல்லாட்சி. தமிழ் பேசும் போது தமிழனாகவும் ஆங்கிலம் போது ஐரோப்பியனாகவும் மாறும் உச்சரிப்பு. கேள்வி கேட்டமாத்திரத்தில் வந்து விழும் தகவல்கள். அதற்கு சான்றாக இலக்கிய மேற்கோள்கள். ஒருமுறை சாதியை பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் வந்த விவாதத்தில் குழுமியிருந்த நண்பர்கள் ஒரு அணியாகவும் இவன் தனித்தும் விடப்பட்டான். ஆனால் தனது அபாரமான வாதத்திறமையால் அனைவரையும் தெறிக்கவிட்டான். தமிழ்ச்சமுதாயத்தில் சாதிக்கும் குலத்துக்குமான தொடர்பையும் வேறுபாட்டையும் சேரமான் இளஞ்சேரலாதன் காக்கைபாடினி நச்செள்ளை இருவருக்குமான காதல் வழி நின்று நிறுவினான். பேச்சினிடையே ''காக்கைபாடினி நச்செள்ளை, புறநானூற்றில் 288ஆவது பாடல் 'நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென் தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் என்று' தொடங்கி முழுச்செய்யுளையும் வரிவிடாமல் சொல்லிவிட்டு அதற்கு கலைஞர். கருணாநிதி புதுக்கவிதை நடையில் எழுதிய உரையையும் சொன்னான்...பேச்சா அது....ம்ஹூம்..குற்றாலத்து அருவி வெள்ளம் போன்று கொட்டித்தீர்த்தான்....வெள்ளம் அவனது நண்பர்களுக்கு கிடைத்தாலும் அந்த சாரலை ஜன்னல் வழியே அனுபவித்தேன். அப்போதே முடிவு கட்டினேன்...வாழ்ந்தால் இவனோடு தான் வாழ்க்கை இல்லையெனின் அது வீண்'''

முதலில் ராமச்சந்திரனை பிடித்து இவனை சந்திக்கும் வாய்ப்பை பெற வேண்டும். இரண்டு முறை பதில் சொன்ன ராமச்சந்திரன் மூன்றாவது முறை கண்டுபிடித்துவிட்டான்.
''என்னடி...லவ்வா...அவன் யாரு..அவன் குலம் என்ன...கோத்திரம் என்ன...உங்கப்பா மூணு பெண்களை வச்சிண்டுருக்கார்...ஏதாவது அறிவோட தான் பேசுறியா...''
''ராமு...அவங்கள நான் கன்வின்ஸ் பண்றேன்...நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ராமு....''
''யாரடி கன்வின்ஸ் பண்ணப்போற...உங்கப்பாவையா...இல்லை உங்க அக்காளுக்கு மாப்பிள்ளை கொடுக்கப்போறவனையா...இல்லை உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கொடுக்கப்போறவனையா...இல்லை உங்க மாமாக்களையா...அடிப்பைத்தியம்....இதெல்லாம் நடக்குற காரியமா...இந்த கருமத்தை எல்லாம் விடு... அவனும் நீயும் பக்கத்துல நின்னு பாருங்க...கொஞ்சமாச்சும் மேட்ச் ஆகுதான்னு...நீ தேவதைடி...உனக்கு இருக்குற அழகுக்கு ஒரு ராஜகுமாரன் வருவான்...மனசை போட்டு குழப்பிக்காத....அவன் நல்லா பேசுவான் ஒத்துக்கிறேன்...அதுக்குன்னு உனக்கு அவன் புருசனா....ஐயோ நெனெச்சாலே குமட்டுது...அவன் அப்பா ஒரு தினக்கூலி அவன் வீட்டுல இன்னவரைக்கும் கரண்ட் வசதி கிடையாது....தெரியுமா...!

சரி ராமு இதற்கு ஒத்துவரமாட்டான்...நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். துணிந்து அவனிடம் பேசினேன். அவனும் நன்றாகத்தான் பேசினான். ஆறு மாதத்தில் சந்திக்க நாள் குறித்தேன்.

அவனிடம் வாகனம் எதுவும் கிடையாது. நடந்து தான் வேலைக்கு போவான். வெளியூருக்கு என்றால் பஸ்சில் செல்வான். அவன் தென்காசிக்கு செல்லும் நாளை கண்டுபிடித்தேன். பேருந்து நிலையம் வரை அவன் பின்னாடியே சென்று நானும் அவன் ஏறிய பேருந்தில் ஏறினேன். நான் படித்த ராணி அண்ணா கல்லூரிக்கு தென்காசி செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் என்பதால் சந்தேகமே வராது. பேருந்தில் என்னைக் கண்டதும் குழம்பியவன் சற்று நேரத்தில் தெளிந்து கண்களால் என்னை அழைத்தான். அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.
பேருந்தின் இரைச்சலையும் தாண்டி தெளிவாக கேட்டது அவனது குரல்.
''என்ன இந்த பக்கம்?''
''நான் எப்பவுமே இந்த ரூட்ல தான் காலேஜுக்கு போவேன்...''
''எந்த காலேஜ்?''
''ராணி அண்ணா காலேஜ்...பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் செகண்ட் இயர் படிக்கிறேன்''
''குட்...எனக்கும் லிட்ரேச்சர்ல ஆர்வம் உண்டு....டைம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறது எனக்கு பழக்கம்''
''தெரியும்..''
''எப்படி...எப்படி,,,என்னைப் பற்றி எப்படி உங்களுக்கு தெரியும்?'' வியப்புடன் கேட்டான்.
''தினமும் ராத்திரி நீங்க உங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுறத நான் கேட்பேன்''
''ஓகோ....ஒட்டு கேட்கிறது தப்பில்லை?''
''எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்...பிராமணர்களை முன்னேறிய சமூகம்னு சொல்றீங்க...அவர்களுக்கு ரிசர்வேசன் கிடையாதுன்னு சொல்றீங்க...ஆனா இன்னைக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத பிராமணர் குடும்பங்கள் இருக்கு...கோயில்ல தட்டுல கிடைக்கிற அஞ்சோ பத்தோ தான் அவர்கள் வருமானமே...அவர்களுக்கு என்ன தீர்வு?''
''நீங்க சமூக ஏற்றத்தாழ்வையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் போட்டு குழப்பிக்கிறீங்க....சாதியால் பிளவுபட்ட சமூகத்தில் சாதிரீதியான இட ஒதுக்கீடு தானே தீர்வாக இருக்க முடியும்...பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பிராமணர்களுக்கு உதவித்தொகை கேட்டு போராடுங்கள்...அது சரி...அது உங்கள் உரிமையும் கூட...சாதி பிறப்பின் அடிப்படையில் வருவது மேலும் மாற்ற இயலாலது...மதம் மாறமுடியும்...சாதி மாறமுடியுமா...பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஸ்திரத்தன்மை அற்றவை எனவே அதன் அடிப்படையில் ரிசர்வேசன் என்பது முறையற்றது. முதலில் ரிசர்வேசன் இடஒதுக்கீடு என்பதே தவறு மறுபங்கீடு ரீடிஸ்ட்ரிப்யூசன் என்பது தான் சரியான சொல்லாக இருக்க முடியும்.
''என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?''
''பொருளாதாரம் என்பதை....என்னது என்ன கேட்டீங்க?''
''என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்''
''உங்க காலேஜ் வந்துருச்சு இறங்குறீங்களா?''
''அது கிடக்குது காலேஜ்...தினமும் போறது தானே...!''
கடந்து சென்ற கண்டக்டரிடம் தென்காசிக்கு டிக்கெட் வாங்கினாள்
"நாம இப்போ ரிசர்வேசனை பத்தி தான பேசிக்கிட்டு இருந்தோம்"
''இது கூட ரிசர்வேசனைப் பத்தினது தான்...மனசுலயும் மனையிலேயும் உங்க பக்கத்தில ஒக்கார்றதுக்கு ரிசர்வேசன்''
''இல்லைங்க...ஐ காண்ட் அஃபோர்ட் அ லவ் நௌ....என் குடும்ப சூழல் உங்களுக்கு தெரியாது...நான் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்...உங்களுக்கு புரியாது''
''என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?''
''உங்களை யாருக்குத்தான் பிடிக்காது....இந்த மாதிரி ஒரு தேவதையை பிடிக்காதுன்னு சொல்ல நான் என்ன முட்டாளா இல்லை பைத்தியமா...பட் ஐ டோண்ட் நோ வெதர் ஐ டிசர்வ் யூ ஆர் நாட்...ஆனால் ஒருவிதத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்...''
''எதுக்கு?''
''என்னையும் ஒரு மனிதனாக அங்கீகாரம் செய்ததற்கு...இந்த உலகத்தில் ஒரு உயிர் என்னையும் விரும்பும்  என்று எனக்கு நிரூபித்தற்கு...ஆனால் நான் பலவீனமானவன்...ஒரு பெண் வலிய வந்து தரும் அன்பைக்கூட சுமக்கமுடியாத வலுவில்லாதவன்...உங்கள் அழகுக்கு நல்ல கணவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கண்டிப்பாக கிடைக்கும்...என்னால் அதை தரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை...ஐ ஆம் சோ சாரி...''
ஆலங்குளம் தாண்டி பஸ் பாவூர்சத்திரம் வந்தவுடன் ஒன்றும் பேசாமல் இறங்கி சென்றேன்.

அடுத்த ஆறுமாதம் எனது விடாமுயற்சிகள் தோல்வியைத்தழுவின.
காலையில் எழுந்து கோலம் போட நான் வைத்த புள்ளிகள் அலங்கோலமாகின. கல்லூரித் தேர்வுகளில் மதிப்பெண் தொடர் வீழ்ச்சி.
திடீரென்று ராமு தான் அந்த தகவலை சொன்னான். தகவலா அது...பேரிடி...
''ஜே.பி நாளைக்கு ரூமை காலி பண்றான்...அவனுக்கு மல்டி நேசனல் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு...கர்னாடாகாவுல சிமோகா 
டிஸ்ட்ரிட்க் போறான்...உனக்கும் நல்ல காலம் பொறந்துருச்சு''
சிமோகா போறதுக்கு முன்னாடி அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான். என்னிடம் பார்வையாலே விடைதந்தான். நான் கண்களாலேயே '' என்னை மறந்துட மாட்டியே'' என்று கசிந்தேன்.
28 வருசம் ஓடி இன்று அவனுடைய வாரிசைப்பார்க்கும் வாய்ப்பு....நான் அவனை பார்க்க வேண்டும்...அவனைத் தொட வேண்டும்..அவனை தொட்டு அவன் மூலமாக ஜே.பியை தொடவேண்டும்...
ஒரு நாள் சஞ்சயிடம் அருணை வீட்டுக்கு சாப்பிட அழைக்குமாறு கூறினேன்.
''அம்மா! நான் கண்டிப்பா அழைச்சிட்டு வர்றேன்; ஆனா உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது பேசி என் பொழப்பை கெடுத்துடாதே....'' என்றான்.

மீண்டும் அவன் நினைவுகள் சுழலாய் என்னை அலைக்கழித்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். மீண்டும் நான் அவனை சந்திக்க போகிறேன். அவன் அன்று பார்த்த நானும் இன்றைய நானும் ஒன்றா...எது மாறியிருக்கிறது? கண்ணாடி முன் நின்று ஆலோசித்தேன். என் வலதுகை நடுவிரலை நெற்றியிலிருந்து புருவமத்தி, நாசி நுனி, கழுத்து வரை ஓடவிட்டேன்....எதுவும் மாறவில்லை...உடலும் உள்ளமும் அப்படியேதான் இருக்கிறது...தலையை வலது தோள்ப்பட்டையில் சாய்த்துப்பார்த்தேன்...பின்பு இடது தோள்...மேல் கீழாக...இல்லை நான் மாறவில்லை..அவனுடைய நினைவுகளே என்னை இந்த துடிப்போடு வைத்திருக்கிறது...இந்த ஐம்பது வயதிலும் ஒரு பெயர்சொல்ல முடியாத உணர்ச்சி பகல் வானத்து நட்சத்திரம் போல் மின்னுகிறதே...இதன் பெயர் என்ன?

வாழ்க்கையின் சமன்பாடுகள் புதிரானவை. சதுரங்கப்பலகையில் ஒருபுறம் நானும் மறுபுறம் விதியுமாக ஆடிய ஆட்டத்தில் நானே தோல்வியை தழுவியிருக்கிறேன். இந்த தோல்வியை ஈடுசெய்யப்போவது எது? ஜே.பி என்னை மறந்திருப்பானா...இல்லை வாய்ப்பே இல்லை...என்னைப் போலத்தான் அவனும் வாழ்ந்திருக்க வேண்டும்...! 
மதிய உணவிற்குப்பின் அன்று அசந்து தூங்கியவளை சஞ்சய் வந்து எழுப்பினான்.
''அம்மா...அருண் வந்தருக்காரும்மா...சீக்கிரம் கீழே வா....அம்மா டோண்ட் கெட் எமோஷன்...ஓ.கே?"
துள்ளி எழுந்தேன். அருண் என்னிலிருந்து உதித்திருக்க வேண்டியவன்...என் உதிரம் குடித்து, என் உயிரை சுவாசித்து என் சதையை தின்று என்னிலிருந்து பிரிந்து இந்த மண்ணில் விழுந்திருக்க வேண்டியவன்...!
சுழலும் மரப்படிகளில் வேகமாக இறங்கி கதவருகே மறைந்து நின்று அருணை பார்த்தேன்....பார்த்தேன் என்று சொல்வதை விட அவனை பார்வையாலே அள்ளிப்பருகினேன் என்றே சொல்லவேண்டும். அவனே தான் ...அன்று பார்த்த அதே ஜே.பியின் இளமை வடிவம்...!
வேகமாக மூச்சு வாங்கி வந்து நின்றவளை பார்த்து வணங்கினான் அருண்.
''வணக்கம்...ஆண்ட்டி''
''நான் உனக்கு ஆண்ட்டி இல்ல...அம்மா"
சஞ்சய் அதிர்ந்து போய் ''அம்மா...ப்ளீஸ்''
அருண் ''இருக்கட்டும் சஞ்சய்...அம்மான்னு தான் இருக்கட்டுமே...அதுனால என்ன இப்போ''
''அருண்....அப்பா எப்படி இருக்காரு...எனக்கு உங்க அப்பாவை நல்லாத் தெரியும்...சஞ்சய் சொன்னானா?''
''இல்லியே...எங்கப்பாவை உங்களுக்கு எப்படி தெரியும்''
''அவர் திருநெல்வேலியில ரெப்ரெசெண்டேட்டிவா வேலை பார்த்த போது எங்க காம்பௌண்ட்ல தான் தங்கியிருந்தார்... உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா...நான் உங்கப்பாவுக்கு ப்ரபோஸ் பண்ணினேன்...அவர் குடும்பச்சூழல் ஐ காண்ட் அஃபோர்ட் லவ் நௌ அப்படின்னுட்டார்...''
சஞ்சய் ''அம்மா...ப்ளீஸ் இப்போ பழசைப் போட்டு கிளறாதே...!''
அருண் '' சஞ்சய்....லீவ் ஹெர் அலோன்...நீங்க சொல்லுங்கம்மா''
''இனிமேல் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லப்பா...இனி இதைப்பேசி என்னாகப்போகுது...உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அம்மா செஞ்சு தாரேன்....வடை செய்யட்டுமா இல்லை பனியாரம் செய்யட்டுமா...உனக்கு பனியாரம் பிடிக்குமா?''
''சஞ்சய் நீ போய் கொஞ்சம் வெல்லம் மட்டும் வாங்கியாந்துடு...''
''சார் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வந்துடுறேன்'' சஞ்சய் வெளியே கிளம்பினான்.
''அருண்...எப்போ ஐ.ஏ.எஸ் கிளீயர் பண்ணின?''
''இப்போ தான் இரண்டரை வருசம் ஆச்சு"
''அதுக்கு முன்னாடி...''
''2012ல்ல பி.டெக் மெக்கானிக்கல் மெட்ராஸ் ஐ.ஐ.டில முடிச்சிட்டு லார்சன் அண்ட் டூப்ரோல  வொர்க் பண்ணினேன்...'அப்புறம் ஐ,ஏ.எஸ் கிளீயர் பண்ணினதும் சென்னைல ராஜ்பவன்ல போஸ்டிங்...அங்கே இரண்டு வருசம் இருந்தேன். அப்புறம் செகரட்ரியேட்ல ஆறுமாதம்...இப்போ இங்கே வந்துருக்கேன்..."
அப்பா எப்பவாவது என்னை பற்றி பேசிருக்காரா?''
''எனக்கு தெரிஞ்சு இல்லை...ஆனால் அவர் உங்களை மறந்துருப்பாருன்னு நான் நம்பலை...''
''ஏன்...எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?''
''தெரியலை...My intuition says so...''
அவன் கைகளை பிடித்தேன்....''அப்படியே அவரை மாதிரியே பேசுற''
சஞ்சய் வெல்லத்தோடு வந்தான்....நான் அவனை தொட்டுப்பார்த்த திருப்தியுடன் சமையலறைக்குள் நுழைந்தேன்.

அருணுக்குள் பல்வேறு கேள்விகள்...விடைகாண இயலாமல் தவித்தான்.
இப்படி ஒரு பெண்ணை மறுக்க அப்பாவிற்கு எப்படி மனசு வந்தது....என்னதான் குடும்ப சூழல் என்றாலும் தானே வலியவந்து தனது காதலை வெளிப்படுத்திய பெண்ணை ஒரு ஆண் அவ்வளவு எளிதில் மறக்கமுடியுமா? அப்பா மறந்திருக்க மாட்டார்...ஏதேனும் ஒரு வடிவில் இந்த பெண்ணை நினைவுபடுத்திக்கொள்ளும் ஒரு முறையை அவர் கைக்கொண்டிருப்பார்...அது என்ன? what is that mechanism by which he never forgets this beautiful woman? பனியாரம் தின்றுவிட்டு நன்றி கூறி விட்டு காரை நோக்கி சஞ்சயுடன் அருண் நடந்தான். ஒரே ஒரு பதில் தான் இந்த அனைத்து கேள்விகளுக்கும்...அது என்ன?
சஞ்சய் கார் கதவை திறக்கும் போது அருணுக்கு மின்னலென வெட்டியது அந்த கேள்வி '' சஞ்சய்...அம்மாவோட பேரு என்ன?''
''சார்...என்ன கேட்டீங்க?''
''அம்மாவோட பேரு என்ன?''
''அருணா...அருணா விஸ்வநாதன்''
(முற்றும்)



Saturday, August 11, 2018

மெல்ல நடக்கும் நதி (பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து)

நதிக்கரை அருகே
கவிதை தருவாய்
என்று காத்திருக்க
வந்ததும் வராததுமாய்
வரிகளின் முதல்ச்சீரை
மேலிருந்து கீழாக
எழுதி மறைந்தாய்

இதுவரை அகப்படவில்லை
மறுசீர் எதுவும்...
தெள்ளிய நதிநீர் மீது
புறாவின் சிறகும்
ஒற்றைச்செண்பகப்பூவும்
இரண்டையும் மனம் தொடர
சொற்களும் பின் தொடர்கின்றன

மதியற்ற நானும்
என் முன்னே
விதி போன்று நதியும்
பிரளயத்திற்காக காத்திருக்கும்
பிரபஞ்சமா என் மனம்?

(11-08-2018 அன்று தாய்லாந்தின் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து)


Wednesday, August 8, 2018

தி.மு.க = திருக்குவளை முத்துவேல் கருணாநிதி

கடந்த பத்து தினங்களாக இருந்து வந்த வேதனை சற்றே தணிந்தது. அந்த தொண்ணூற்றைந்து வயது உயிரை மருத்துவர்கள் போராடித் தான் காத்து வந்தனர். ஆயினும் பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும், புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்; மலர்ந்தன உதிரும்; உதிர்ந்தன மலரும் என்பதை அறியாதவர் அல்ல கருணாநிதியும் அவரது தொண்டர்களும். எண்பது ஆண்டு கால பொதுவாழ்வில் கருணாநிதி நமக்கு விட்டு சென்றிருக்கும் படிப்பினைகள் ஏராளம். அதை உவத்தல் காய்த்தலின்றி பதிவிடுவதே எனது நோக்கம். நன்கு சூடேற்றப்பட்ட கத்தி வெண்ணெயை வெட்டுவது போன்று ஒரு அலசலை முன்வைக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.



என் சமகாலச் சமூகம் கண்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் அசைக்க இயலா தலைவர் கருணாநிதி என்பதை முதலிலேயே பதிவு செய்து விடுகிறேன்.



திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுக்கு ''கலைஞர்'' எதிரிக்கட்சி நண்பர்களுக்கு ''தீயசக்தி'' ஆயினும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி கருணாநிதி என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள்.



நான் பிறந்த போது கருணாநிதி தான் தமிழகத்தின் முதல்வர். நான் பள்ளி செல்ல துவங்கிய போது ஆட்சியை கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் இழந்திருந்தார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை அவரை கருணாநிதியால் வெல்ல இயலவில்லை. ஆனால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்று பேசும் உடன்பிறப்புகள் அவரால் ஏன் எம்.ஜி.ஆரை வெல்ல முடியவில்லை என்ற கேள்விக்கு மௌனத்தையே பதிலாக தருகிறார்கள். உயர்நிலைப்பள்ளி முடித்த போது கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. இதற்கு பின்னால் சர்வதேச ''மாமா'' சு. சாமியும் அன்றைய பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் இருந்த சுபோத்கான் சகாயும் இருந்தனர். அதன் பின்பு சு.மாமா ராஜிவ்காந்தியை போட்டுத்தள்ளி விட்டு பழியை தி.மு.க மீது போட ஜெயலலிதா முதல்வரானார்.

ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் கேலிக்கூத்தாக்கிய ஜெ.வின் அந்த ஆட்சி 96ல் நிறைவு பெறும் போது கருணாநிதி மீண்டும் முதல்வரானார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமிழக அரசியலை தன்னை சுற்றி நிகழுமாறு பார்த்துக் கொள்வதில் கருணாநிதி வல்லவர். ஆட்சியில் இருக்கும் போது சட்டம் ஒழுங்கு குறித்த அக்கறை அவர் பதவியை விட்டு இறங்கியதும் தலைகீழாக மாறுவது கண்கூடு.



தனது ஆட்சியில் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு கட்டணமாக அவரது குடும்பத்தாரும் அமைச்சர் பெருமக்களும் சில ஆயிரம் கோடிகளை எடுத்துக் கொண்டனர் என்பதிலும் ஐயமில்லை. அவருடைய சுற்றத்தாரின் சொத்துக்கள், மேனாள் அமைச்சர்களின் சொத்துக்களின் விவரங்களை எடுத்து அலசினால் புரியும்.

1) சுயமரியாதை திருமணச்சட்டம்

2) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்

3) முதல் பட்டதாரி இட ஒதுக்கீடு

4) மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்

5) தகவல் தொழிட்நுட்ப தொழிற்பேட்டைகள்

6) கனரக இயந்திர தொழிற்சாலைகள்

7) மருத்துவ காப்பீட்டு திட்டம்

8) பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்

மேற்கண்ட கருணாநிதியின் திட்டங்கள் எதுவுமே அவரை தொடர்ச்சியாக பதவியில் இருக்க விடவில்லை என்பதே யதார்த்தம், இலவசம் என்று தூக்கி கொடுத்த பிறகும் கூட. இதன் பின்னே இருக்கும் சித்தாந்த அரசியல் அல்லது வெகுஜன அரசியல் என்னவென்று நாம் ஆராய்ந்தே தீர வேண்டும்.



கருணாநிதியின் அரசியலை கூர்ந்து நான் கவனிக்கத் தொடங்கியது எனது பதின்ம வயதுகளில் தான். அப்போது மதுரையின் மேலமாசி வீதி -வ்டக்கு மாசி வீதி சந்திப்பில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும். நள்ளிரவு 11 மணிக்கு மேல் தான் கருணாநிதி பேசத்துவங்குவார். அது ஒண்ணரை மணி வரை நீளும். பேச்சின் இடையே வரும் இலக்கிய மேற்கோள்கள், சிறுகதைகள், சிலேடைகள் என ரசிக்கத்தக்க கூறுகள் ஏராளமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அதற்கு முன்பு அதிமுகவினர் கூட்டம் நடத்தியிருந்தால் அதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தரும்படி அவரது உரை அமையும். (சான்று: எம்.ஜி,ஆரை திமுகவினர் மலையாளத்தான் என்று வசை பாட அதற்கு பதில் தந்த எம்.ஜி.ஆர் தனது பூர்வீகம் தஞ்சை என்றும் தான் மன்றாடியர் பரம்பரை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு கருணாநிதியின் பதில்; ''ஆம் அவர் மன்றாடியர் பரம்பரை தான் டெல்லியில் ''மன்றாடிய பரம்பரை'')

கருணாநிதியிடம் இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அவரது உழைப்பு. தனது வாழ்நாளின் இறுதிவரையிலும் அரசியல் பணிகளை செய்து கொண்டே இருந்தார். உடல் நலம் பேண தேவையான பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது சமரமற்ற உணவு முறை கவனிக்கத்தக்க ஒன்று. அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று இறந்தவுடன் அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். இது நடந்தது அவருடைய அறுபதாவது அகவையில். ஆட்சியில் இருப்பவருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது அவருக்கு பிடித்தமான ஒன்று. எம்,ஜி.ஆர் ஆட்சியின் பட்ஜெட் ரகசியங்கள், கோப்புகளின் நகர்வு, திட்டங்களில் நடைபெறும் பேரங்கள் என்று அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பார். எனவே எம்.ஜி.ஆர் சாராய வியாபாரிகள் தருவதை கருணாநிதியிடம் பகிர்ந்து கொண்டதாக கூட ஐ.ஏ.எஸ் வட்டாரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ''நீங்க தானே தலைவரே ஆட்சியில இருக்கீங்க...அவருக்கு எதுக்கு கொடுக்கணும்..''என்று சாராயம் உற்பத்தி செய்யும் தேசபக்தர்கள் கேட்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் முறைத்தாக தகவல்.



விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இல்லை. அது அதிமுகவினர் வணங்கும் இதய தெய்வமாக இருந்தாலும் சரி, திமுகவினர் போற்றி புகழும் கருணாநிதியாக இருந்தாலும் சரி குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலே நமது மரபு.

கருணாநிதி தவறிய தருணங்கள் என்று நிறைய உண்டு. கண்ணதாசன் கூறியதைப் போன்று வாழ்வில் ஒரு கட்டத்திற்கு பின்னால் தனது குடும்பம் சுற்றியே அவரது அரசியலை நகர்த்தினார். இதற்காக இனநலனை கூட காவு கொடுக்க அவர் தயங்கியதில்லை என்பது எனது அவதானிப்பு. இதை மறுப்பவர்கள் என்னோடு விவாதம் செய்யலாம். அது அறிவுப்பூர்வமானதாகவும் சான்றுகளின் அடிப்படையிலும் அமைதல் வேண்டும்.



முதலாவதாக நெருக்கடி நிலை விவகாரம். நெருக்கடி நிலையின் போது மிகவும் பாதிக்கப்பட்டது திமுக தான். எண்ணற்ற தொண்டர்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்தனர். ஆனால் அதே இந்திரா காந்தியை அழைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார். நெருக்கடி நிலையில் இழந்த உயிர்களின் மதிப்பை பற்றி யோசிக்கவே இல்லை. சர்க்காரியா கமிசன் அறிக்கையை வைத்து நடுவண் அரசு மிரட்டியதாக தகவல்.

தமிழ்மொழியை நீதிமன்ற அலுவல் மொழியாக பத்தாண்டு காலம் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த போது சாதிக்கவே முடியவில்லை. காரணம் மந்திரி பதவி மீது இருந்த அக்கறை தமிழ்மொழி மீது இல்லை என்பது வெள்ளிடை மலை. மும்மொழிக்கொள்கை, இருமொழிக்கொள்கை என்று பல்வேறு நாமகரணங்கள் சூட்டப்பட்டாலும் ஆட்சிமொழிக் கொள்கையை பற்றி பேசக்கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் உறுதிமொழி வாங்கிவிட்டு பதவிகள் தந்தார்களோ என்னவோ?

கருணாநிதி பதவி பேரத்தை மிகத்திறமையாக நடத்துவதில் வல்லவர். தனது மகன் அழகிரிக்கு யாதொரு தகுதியும் இல்லை என்று தெரிந்தும் உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையை போராடி பெற்றார். இதன் பொருள் அழகிரி இந்த துறையில் வல்லவர் என்பதாலோ அல்லது இந்திய உரத்துறை/மருந்துப்பொருள் உற்பத்தி/விற்பனை துறை/ வேதிப்பொருட்கள் துறையில் தற்சார்பு அடைவது என்ற திமுகவின் இலட்சிய வேட்கையினாலோ அல்ல. சில்லறை அதிகம் அவ்வளவே. அது போன்றே தயாநிதி மாறன். அவரும் தன் பங்குக்கு தொலைபேசித்துறையின் இணைப்பை தனது அண்ணனின் நிறுவனத்திற்கு தந்து தாத்தாவின் பெயரைக் கெடுத்தார். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு அழியாக்கறையாக திமுகவின் மேல் விழுந்துள்ளது. யார் அதை துடைப்பது?



2ஜி அலைக்கற்றை ஒதுக்கலில் ஆ.ராசா ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் கோடி ஊழல் செய்து விட்டார் என்று நானும் நம்பவில்லை. ஆனால் தனக்கோ / கனிமொழிக்கோ பிரதிபலன் இல்லாமல் இந்த ஒதுக்கீடை அவர் செய்தார் என்பதையும் நம்பவில்லை. நீரா ராடியாவுடன் ராஜாவும் கனிமொழியும் ஏன் ராசாத்தியும் கூட உரையாடியது இன்றும் கேட்க கிடைக்கிறது. வெறும் பத்து லட்சம் ஒப்பந்தத்திலேயே 40% அடிக்கும் போது இவ்வளவு பெரிய தொகை கைமாறும் போது அதில் சிறுபலாபலன் இருக்கத்தான் செய்யும். ராஜாவோ கனிமொழியோ பொருளாசை அற்றுப்போனவர்கள் அல்லர் என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

இறுதியாக ஈழ விவகாரம், இதில் கருணாநிதி செய்தது பச்சை துரோகம் என்று தான் நான் சொல்வேன். இந்திய ஒன்றியத்துடனான கைகோர்ப்பு என்றளவில் மட்டுமல்லாது தமிழக மக்கள் போராடும் போதெல்லாம் அதை ஒடுக்கினார். சிறு இயக்கங்கள் துண்டு பிரசுரம் அடிக்கக்கூட வாய்வழி தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. மே17 இயக்கம் நெல்லூர் சென்று சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் அடித்துக் கொண்டு வந்தார்கள். உளவுத்துறை ஐ.ஜி ஜாபர் சேட் இந்த பணியில் முக்கிய பங்காற்றினார். அவரது மகளுக்கு அரசு இடம் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்றங்களில் இடதுசாரிகள் இலங்கைக்கு எதிராக தீர்மாணம் கொண்டு வந்தால் காங்கிரசோடு சேர்ந்து அதை தோற்கடித்தனர்.

காலை உணவிற்கு பகல் சூப்பிற்குமிடையே அவர் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அந்த உண்ணாவிரதம் வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடியது. போர் நிறுத்தம் வேண்டி மக்கள் மனிதசங்கிலி நிகழ்த்திய போது ''நான் உள்ளுக்குள்ளேயே அழுவது எத்தனை பேருக்கு தெரியும்'' என்ற வசனங்கள். எப்போது ஈழப்பிரச்சினை வந்தாலும் அன்றே தீர்மானம் போட்டேன், அன்றே சட்டசபையில் பேசினேன், கடிதம் எழுதினேன், இரவு ராசாத்தி  இட்லியை தட்டில் வைக்கும் போது ஈழவிடுதலை குறித்து பேசினேன், காலை தயாளு காபி கொடுக்க வரும்போது கூட தனி ஈழமே தீர்வு என்ற எனது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று பேசுவாரே ஒழிய அன்றைய காங்கிரசு ஆட்சியை கவிழ்த்து அதை சர்வதேச பிரச்சினையாக்க வேண்டிய வரலாற்று கடமையை கருணாநிதி தவற விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.



இறுதியாக சமூகநீதியை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாக செயல்படுத்திய கருணாநிதி செய்யத் தவறிய ஒன்று உண்டு. அற நிலையத்துறை அமைச்சராக அவர் இதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை நியமிக்கவில்லை என்பதே அது. காமராஜர் ஆட்சியில் பரமேஸ்வரனை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு அடுத்து வேறு யாரும் அந்தப்பதவியில் நியமிக்கப்படவில்லை. இது கருணாநிதி தவிர்த்திருக்கக் கூடிய தவறு செய்திருக்க வேண்டிய சாதனை. ஏனோ அவர் இதை செய்ய மறுத்துவிட்டார்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டியே கருணாநிதியையும் அவரது அரசியலையும் நாம் கணித்தாக வேண்டும். ஒரு படைப்பாளியாக அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். சமஸ்கிருதம் கலந்த தமிழ் திரையில் ஆட்சி செய்த போது அழகுத்தமிழை அரியணையில் ஏற்றியவர்.

''வசந்தசேனை வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய், நம்மை சுற்றி வளைத்திட்ட மலைப்பாம்பு''

போன்ற உவமான உவமேயங்களும், ''ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் அதைப்போல'' போன்ற உவம உருபுகள், தெள்ளிய தமிழில் உரையாடல்களை நடிகர்களின் திறமைக்கு ஏற்ப வடிக்கும் நேர்த்தி. சிவாஜி என்றால் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பல பக்க வசனங்கள், எம்.ஜி.ஆர் என்றால் எண்ணிக்கையில் சொற்பமான ஆனால் கூரிய வலிமையான சொற்கள் என்று தேர்ந்த சமையல்காரனின் பக்குவத்துடன் சமைத்துத்தரும் சமையல்காரர் அவர்.



கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டினை, அவரது தொண்டர்கள் தில்லி வழியே செயல்படுத்த தவறியிருப்பினும், நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் 'நமஸ்காரம்' கிடையாது. வணக்கத்தை பிரபலபடுத்தியது, முன்னிலை படுத்தியது அரசியல் படுத்தியதில் கருணாநிதியின் பங்கே அதிகம்.  திருக்குறளை பேருந்துகளில் பொறித்தது, குமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது, என்று எங்கு திரும்பினாலும் அவரது முத்திரை. அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதமே ஒரு பேரிலக்கியம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அவரது கடிதம் ஒன்றை பாடமாகவே வைத்திருந்தனர்.



''தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்க்கு தோன்றலின் தோன்றாமை நன்று'' கருணாநிதி அரசியலிலும் திரைத்துறையிலும் புகழோடே தோன்றினார்...புகழோடே மறைந்தார். தனது புகழ் வெளிச்சத்தை ஆரிய இருள் மறைத்த போதெல்லாம் தனது அசாத்திய திறமையால் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட உதயசூரியன் கருணாநிதி.

''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே....'' அந்த குரலை இனி என்று கேட்போம்?