Monday, August 5, 2019

மரைக்காயர் வீட்டு தொலைபேசி (சிறுகதை)


கடலாடி என்னும் அந்த கடற்கரை ஓர கிராமத்தின் நெடிய மாடவீதியில் வெயில் மட்டுமே நிறைந்திருந்தது.  உப்புக்காற்றின் பிசுபிசுப்பு மக்களின் உடலையும் உயிரையும் வருத்திய உச்சி வேளை. வெயிலினால் வெளிச்சத்தாலும் வெப்பத்தாலும் துவண்டு போயிருந்தது  வீதி . ஆடுமாடுகள் கூட வெளியே அலையாமல் நிழலில் ஒதுங்கின. அவ்வப்போது காற்று வீதியின் இருமுனைகளிலும் இருந்த முருங்கைமரத்தின் இலைகளை அசைத்துப்பார்த்தது. கருமை நிற நாய் ஒன்று எங்காவது உணவு கிடைக்காதா என்று ஏங்கி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று வாசனை பிடித்து சென்றது.
வீதியின் மையத்தில் இருந்த அந்த பெரிய காரை வீட்டின் முன்னால் பந்தல் வேய்ந்து கொண்டிருந்த இருவரைக் கடந்து வீட்டின் படிக்கட்டில் கால் வைத்த வெள்ளை நிற துப்பட்டியில் தனது மெல்லிய உடலை மறைத்துக்கொண்டு சென்ற மரியம் பீவியை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.

''ஏய் யாரும்மா அது...சொல்லாம கொள்ளாம''
மரியம் பீவி ஒரு கணம் நின்று குரல் வந்த திசையை நோக்கி ''மரியத்தை போக வேணாம்னு சொல்ற ஆம்பள இந்த கடலாடில யாருடா இருக்கா?''
பந்தல் வேய்ந்து கொண்டிருந்த மாரிச்சாமி ''ஐய்யயோ...அத்தை நீங்களா...நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன்''

''அட நாயே...உங்காத்தா பெத்து போட்ட உடனே நீ பாத்த முதல் மூஞ்சியே என்னோடது தாண்டா...நீ என்னைப்பாத்து யாருன்னு கேக்குற...ம்?''
ஏதோ ஒன்று இயல்பு நிலைக்கு மாறாக நடக்கிறது என்பதை உணர்ந்த தவசி வெளியே ஓடி வந்தார். மரியத்தை கண்டதும் மிகவும் பவ்யமாக ''வா அக்கா'' என்றார்.
''மருவாதி இல்லாத இடத்தில கால் வைக்க மாட்டா இந்த மரியம்....தெரிஞ்சுக்கோ'' என்றவாறு வீதியிலிருந்து வீட்டினுள் நுழைய ஏற வேண்டிய படிகளில் ஏறி மூன்றாவது படியில் நின்று திரும்பி திண்ணையில் அமர்ந்தாள். தன்னை யாரென்று மாரிச்சாமி கேட்டதை மரியத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  மூச்சு வாங்க அமர்ந்து வலது காலை இடது தொடைக்கு கீழே போட்டு ஒரு காலை முன்னும் பின்னும் ஆட்டி கொண்டிருந்தாள்.

தவசி கண்களாலேயே மாரிச்சாமியிடம் 'என்னடா இது' என்றார். அவனும் கண்களாலேயே 'தெரியாம நடந்து போச்சு' என்றான்.
அமைதியாக இருந்த சூழலை கிழித்தது மரியத்தின் தீர்க்கமான குரல்                ''டேய் தவசி....நேத்து மரைக்காயர் வீட்டுக்கு போன் வந்துச்சு''
தவசி தனது முழு கவனத்தையும் மரியத்தின் மீது செலுத்தினார்                          'சாதிக் பேசினானா?''
''ம்ம்...இந்த பெருநாளுக்கு வர்ரேம்னு சொன்னான்''
''ரொம்ப சந்தோசம்க்கா''
''நீ என்ன பண்ற...நேரா கமுதி போயி காதர்மைதீன்கிட்ட முடிவா என்ன சொல்றான்னு கேட்டுட்டு வந்துடு...இருவத்தேழாங்கிழமை அன்னைக்கி நிச்சயம்...பெருநாள் முடிஞ்சு கல்யாணம்''
தவசி எதுவும் பேசாமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்.
''என்னடா பதிலே பேசாம நிக்கிற?''
''அக்கா., நானும் பலதடவை ஒங்கிட்ட சொல்லிட்டேன்...இதுல ஜாயிராவுக்கு விருப்பமில்லாத மாதிரி தெரியுது''  என்று இழுத்தார்.
''நானும் காதரும் முடிவு செஞ்ச பின்னாடி இவ யாரு நடுவுல?''
''அக்கா...காதரு நம்மோளோட பொறந்தவன்...நம்மளோடயே வளர்ந்தவன்..ஆனா ஜாயிரா அப்படியா... வெளியே இருந்து வந்தவ...அதுவும் போக என்ன இருந்தாலும் பெத்தவள்ல..."
''பெத்தாளா...எப்பிடி...இல்லை எப்படிங்கறேன்...முட்டை போட்டு குஞ்சு பொரிச்சாளா?''
மரியம் எரியும் கேள்விக்கணைகள் எப்போதும் இப்படித்தான். பெரும்பாலும் சராசரி மனிதமனத்தின் ஊகங்களுக்கு அப்பாற்பட்டவை.  ஆனால், இந்த கேள்வியை தவசி எதிர்பார்க்கவில்லை. எனவே தவசி திகைத்துத்தான் போனார். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று விழித்தார்.
''என்னக்கா கேள்வி இது...இப்போ புள்ளைக்கு கல்யாணமாகி மாப்பிள்ளையோட இங்கேயே இருந்தா அது ஒரு மாதிரி..அதைவிட்டுட்டு கல்யாணம் பண்ணி இவளை இங்கே விட்டுட்டு அவன் அரேபியால ஒக்காந்துக்கிட்டான்னா...அதுனால யோசிப்பா போலருக்கு'' என்று சமாளித்தார்.
''ஏலேய்...காதரு இந்த நாய இழுத்துக்கிட்டு வந்தப்ப இருக்க வீடு, உடுத்த துணிமணி திங்க சோறு கொடுத்தது நானு..இன்னைக்கு என் கூட சம்பந்தம் பண்ண கசக்குதா அவளுக்கு...?"
''அப்போ நாசர் மாமா செஞ்சதை ஞாயம்னு சொல்றியா....70வயது கிழவனுக்கு 17வயசு பொண்ணை கட்டி வைக்கிறது நியாயமா அக்கா...நீயே சொல்லு...அந்த புள்ளைக்கு ஒரு ஆசை இருக்காது...பணக்காரன், அரசியல்வாதி, நெறையசொத்து இருக்குன்னா புள்ளைய தூக்கி கொடுத்துர்றதா...''

''அல்லா எழுதின எழுத்துன்னு போகவேண்டியது தான்...அதுக்குன்னு பெத்தவங்களை விட்டுட்டு ஒடி வர்றதா...ஏலேய்...அவன் இவளை இழுத்துட்டு வரும் போது அவளுக்கு பதினேழு வயசு...அவனுக்கு இருவது வயசு..கையில சோலி மயிரு எதுவும் கிடையாது....நான் தான் அவனை கறிக்கடையில கல்லாவுல நிக்க வச்சேன்...ஆளாக்கி விட்டேன். இன்னைக்கு வீடு வாசல் வண்டி வாகனம்னு வந்ததும் பழசெல்லாம் அவனுக்கு மறந்துடுச்சில்லே...!''

''நான் போயி பேசுறேங்க்கா...'' இப்போதைக்கு இதற்கு முற்றுபுள்ளி வைப்பதே உத்தமம் என்ற முடிவுக்கு தவசி வந்து விட்டார்.
''ஆமா எங்கே ஒம்பொண்டாட்டி...வீட்டுக்கு மனுச மக்க வந்தா உள்ள வாங்கன்னு கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி குடுக்க  மாட்டாளா... ஏய்...அடியேய்...அம்சு....அம்சவே...ணீ....''குரல் வீடு முழுக்க எதிரொலித்தது.

மரியத்தின் குரல் கேட்ட மாத்திரத்தில் அடுக்களையிலிருந்து சொட்டும் வியர்வையை முந்தானையில் துடைத்துவிட்டு பதட்டமாக தோளை சுற்றி மறைத்துக்கொண்டு மரியாதையுடன் ''கும்புடுறேன் மதினி'' என்றாள் அம்சவேணி, தவசியின் மனைவி.

மரியம் ஏற இறங்க பார்த்தபடியே '' என்னடி...வீட்டுக்கு மனுச மக்க வந்தா உள்ள வாங்க கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி குடுக்க மாட்டியா...ம்?''

''ஐய்யயோ அப்படி இல்லை மதினி...மதியம் சம்பந்தகாரக வர்றாக...அதுனால அடுக்களையில வேலையா இருந்தேன்...நீங்க வந்ததை கவனிக்கலை...ரசம் தாளிச்சிட்டிருந்தேன்...''

''ரசம் தாளிச்சியா...திமிரு...முத்துப்பிளச்சி வகையறா கொத்துச்சாவி இடுப்புல தொங்குதுல அந்த திமிரு..''
''வேணும்னா கொத்துச்சாவியை நீங்களே வச்சிக்கங்க மதினி...என்னெருந்தாலும் நீங்க பொறந்தவுக...நான் புகுந்தவ தானே..."
''ஏலேய் தவசி என்னடா ஒம் பொண்டாட்டி எதிர்பாட்டு பாட்றா''
சூழல் தீவிரமாக திசைமாறுவதைக் கண்ட தவசி மரியத்தின் கவனத்தை திசைதிருப்பினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று உணர்ந்தார். அதற்கு சரியான ஆயுதம் குழந்தைகள்.
'''ஐயய்யே...என்னக்கா நீ ஒண்ணு அவளோட சரிக்குசரி மல்லுக்கட்டிக்கிட்டு...சின்னவன் வந்திருக்கான் கூடவே மருமக வந்திருக்கு...பேத்தி வந்துருக்கு...போய் புள்ளைகள பார்த்து ரெண்டு நல்லவார்த்தை சொல்லிட்டு போவியா...அதை விட்டுட்டு இவகிட்ட நின்னு மல்லுகட்டிட்டு...''
கணவனின் நோக்கத்தை புரிந்து கொண்ட அம்சவேணி ''உள்ள வாங்க மதினி...இருந்து சாப்டுட்டு தான் போகணும்'' என்றாள்.
''மருவாதி இல்லாத வீட்ல கால் வைக்க மாட்டா இந்த மரியம்''
''ஐயோடா...என்ன மரியாதை கொறைஞ்சு போச்சாம் இப்போ ஒங்களுக்கு...வாங்க மதினி''
''சின்னவன் இப்போ எங்கே வேலைல இருக்கான்?''
''அமெரிக்காவுல'' என்றவர் தெரியாமல் உளறி விட்டோமே என்று தவசி உணரும் முன் ''அது எங்கேடா இருக்கு அமெரிக்கா?'' என்றாள் மரியம்.

மரியம் பீவிக்கு இப்போது பூகோள பாடம் எடுப்பது சாத்தியமில்லை. எனவே, ஏதாவது சொல்லி சமாளிப்பது தான் சாலச்சிறந்தது என்று ''அது இங்கதாங்க்கா இருக்கு...நம்ம விருது நகர்  பக்கத்துல மல்லாங்கிணறு இருக்குல்ல அங்கேயிருந்து கிழக்காம மூணு மைல்ல இருக்கு...இங்க பக்கதில்ல தான்''
''அதுதானே பார்த்தேன்....எல்லோரும் என்னை மாதிரி புள்ளைய அரேபியாவுக்கு அனுப்ப முடியுமா...?
''அது சரிதான்க்கா..உன்னை மாதிரி யாராலும் அனுப்ப முடியாது''
முழங்காலில் கையை ஊன்றியபடி படியேறி வீட்டினுள் நுழைந்தாள்.
''சமுத்துரம்...ஏய் சமுத்துரம்...சமுத்துர பாண்டி....''
சத்தம் கேட்டு தவசியின் இளையமகன் சமுத்திரபாண்டியன் வந்தான்....'அத்தேய்'...என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான்.
சமுத்திர பாண்டியனின் மனைவி செல்வி வந்து கைகூப்பி வணக்கம் சொன்னாள்.
அந்த பெரிய வீட்டின் நடுவே சதுர வடிவில் உயர்ரக இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மூலையிலும் ஜாடிகள் பிளாஸ்டிக் பூக்கள் நிரம்பி செயற்கையாக பணக்காரத்தனத்தை காண்பித்துக் கொண்டிருந்தன.
இரண்டு இருக்கைகள் சந்திக்கும் மூலையில் கீழே அமர்ந்து கொண்டாள் மரியம்.
'அத்தே...மேலே ஒக்காருங்க அத்தே...'
'இருக்கட்டும் சமுத்திரம் இது தான் எனக்கு வசதி...''
''எப்படி இருக்கீங்க அத்தே...''
''அது கெடக்கட்டும்....நேத்து மரைக்காயர் வீட்டுக்கு போன் வந்துச்சி....''
''மச்சான் வர்றாரா...? ''வியப்புடன் கேட்டான் சமுத்திரம்.
''ஆமா...இந்த பெருநாளைக்கு வர்றேன்னு சொன்னான்...அவனோட சினேகிதகாரன் ஒருத்தன் வட நாட்டுக்காரனாம்..அவனோட ஊருல இருந்து ரெண்டு பனாரஸ் பட்டுச்சேலை கொண்டாந்து சாதிக் நீ இதை கொண்டு போயி உன்னோட அம்மாக்கு குடுன்னு குடுத்தானாம்...இவன் என்ன சொன்னான் தெரியுமா?''
''என்ன சொன்னாரு?''
''அம்மா உனக்கு மாம்பழக்கலர் தானே பிடிக்கும் அதை நீ எடுத்துக்கோ சொல்லிட்டு...இன்னொரு சேலையை யாருக்கு கொடுக்கப் போரேன்னு சொன்னானு தெரியுமா?'' குரல் ஏற்ற இறக்கமாக ரகசியம் பேசுவது போல் தனது கழுத்தை சமுத்திரத்தை நோக்கி நீட்டினார் மரியம் பீவி. சமுத்திரமும் முன்வந்து அந்த செய்தியை ஆவலாய் பெற வந்தவன் ''ஜாயிரா சித்திக்கு தானே?''  என்று சொல்லிவிட்டு ஒரு வெடிச்சிரிப்பு சிரித்தான்.
''அடி கழுத...எல்லா பயபுள்ளைகளும் ஒரே மாதிரி தான் இருக்கு...அது போகட்டும் ஏங்கண்ணு...நீ பள்ளிக்கூடத்துக்கு பஸ்ல  போறதுக்கு அட்டை தானே கொண்டு போவே?''
''எது...பஸ்பாஸை சொல்றீகளா?....ஆமா...அத்தை...பஸ்பாஸ் அட்டை மாதிரி தான் இருக்கும்''
''எம்மகனுக்கு அதெல்லாமில்ல...வீட்டுக்கு வந்த ஏட்டையா சொல்லிப்புட்டாரு...இதோ பாரு மரியம்...ஒம்மகன் புசுக்கு புசுக்குன்னு அரேபியா போய்ட்டு வருவான் போல தெரியுது...அட்டை போட்டு அரசாங்கத்துக்கு கட்டுபடியாகாது...புஸ்தகமா போட்டு தர்றோம் வந்து வாங்கிட்டு போகச்சொல்லுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு''
குழம்பிய முகத்துடன் செல்வி ''வாட்ஸ் தட் சாம்?' என்றாள்.
சமுத்திரம் இடது கை நடுவிரலால் நெற்றியின் மையத்தில் தேய்த்துக் கொண்டு சன்னமான குரலில் '' பாஸ்போர்ட்...பாஸ்போர்ட்' என்றான்.
''பாப்பா என்ன கேட்குது?''
''அது ஒண்ணுமில்லை அத்தை நீங்க சொல்லுங்க...''
''அப்புறம் அரேபியாவோட ராசா அவரே கையெழுத்து போட்டு நீங்க இங்க வந்து வேல பாருங்க...தங்குறதுக்கு இடம், சாப்பாடு எல்லாம் கொடுத்துர்றோம் அப்பிடின்னு லெட்டர் போட்டாரு''
செல்வி மீண்டும் குழப்பத்துடன் ''வாட் இஸ் திஸ் சாம்?' என்றாள்.
''வொர்க் பெர்மிட்...வொர்க் பெர்மிட்'' என்றான் மெதுவாக.
''பாப்பா என்ன கேட்குது?''
''அது ஒண்ணுமில்ல அத்தை நீங்க சொல்லுங்க''
''பாப்பா எந்த ஊரு? ''
''பென்சில்வேனியா''
''எங்கே போனியாம்?''
''எங்கே போனியாம் இல்லைங்க...பென்சில்வேனியா இது அமெரிக்காவுல இருக்கு''
''அமெரிக்கா....பொல்லாத அமெரிக்கா...இங்கே மல்லாங்கிணறுகிட்ட இருக்கே அது தானே?''
''அதே தான் அத்தை...சட்டுன்னு கண்டுபிடிச்சிடீங்களே...''
''இல்லேனா...மகன அரேபியாவுக்கு அனுப்பிட்டு நா இங்க பொழைக்க முடியுமா?''
இரண்டு பேரின் பேச்சைக்கேட்டு வெறுத்துப் போன செல்வி '' சாம்...திஸ் இஸ் ரிடிகுலஸ்'' என்று வெடித்தாள்.
''பாப்பா என்ன சொல்லுது?''
''ஒண்ணுமில்ல அத்தே நீங்க சொல்லுங்க''
''ஏய் புள்ள...ஒங்க வீட்டுல என்ன சொல்லி வளர்த்தாக...வீட்டுக்கு மனுச மக்க வந்தா ஒரு தேயிலை தண்ணி போட்டு குடுக்கக்கூடவா சொல்லித்தரலை..போயி அரை சக்கரை போட்டு டீ எடுத்துட்டு வா பாப்போம்''
மரியத்தின் பேச்சு புரியாமல் செல்வி சமுத்திரத்தை நோக்கி ''வாட் இஸ் ஷீ ஆஸ்கிங்?' என்றாள்.
சாம் அவளுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். ''ஷீ வாண்ட்ஸ் எ கப் ஆஃப் டீ வித் ஹாஃப் ஷுகர்''
வலது காலை தரையில் ஓங்கி உதைத்து அடுக்களை நோக்கி நடந்தாள்.
சமுத்திரமும் மரியமும் தங்களது உரையாடலை தொடர்ந்தனர்.

அடுக்களையில் நுழைந்ததும் நுழையாததுமாக தனது மாமியாரிடம் ''யாரு அத்தை இந்த லூசு?'' என்றாள்.
பதறிப்போய் மருமகளின் வாயைப்பொத்தினாள் அம்சவேணி.
''பட்டுனு அப்பிடி வார்த்தையை விட்டுராத கண்ணு...ஒங்க மாமாக்கு கேட்டுருச்சினா ஒடஞ்சு போய்டுவாக...எப்படி இருந்த பொம்பளை தெரியுமா...நா வாக்கப்பட்டு வந்தப்ப இவுகள பாத்து பயந்து நடுங்குவேன்...நா மட்டுமில்ல...எல்லோரும் தான்...எங்க மாமனாரோட கூட்டாளிக பத்து பதினஞ்சி பேரு...அவுக யாருக்கும் பொம்பள புள்ளைக கிடையாது...இது ஒண்ணு தான் பொண்ணு அதுவும் போக மத்தவுக எல்லோரும் இளையவுக...அதுனால அவுக எல்லாருக்கும் இவுக மேல அப்படி ஒரு பாசம்...மரியாத...எனக்கு தெரிஞ்சு என்னோட மாமனார்  எல்லார்கிட்டயும் பேசிட்டு கடைசியா ''நீ என்ன சொல்ற மரியம்'' அப்பிடின்னு இவுககிட்ட கேட்டுதான் முடிவு எடுப்பாக...எனக்கு கல்யாணத்துல தாலில நாத்தனார் முடிச்சி போட்டதே இந்தம்மா தான்...யார் குடும்பத்துலயும் நல்லதுன்னாலும் சரி கெட்டதுன்னாலும் சரி...இந்தம்மா தலைமையில தான் நடக்கும்...பந்தல் போடுறவன்ல இருந்து பந்தி போடுறவன் வரைக்கும் அம்புட்டு பேரையும் அடக்கி ஆண்டுபுடுவாக மரியம் மதினி....சாதாரணமான பொம்பளைன்னு நெனெச்சிடாத....ஒன்னோட மாமனாரை பொருத்தவரைக்கும் மரியம் மதினிக்கு டீத்தண்ணி கொடுக்குறது மாசானக்கருப்புக்கு கிடா வெட்டி படையல் போடுறது ரெண்டும் ஒண்ணு தான்...போய் டீ போட்டுக்கொடு...''
''ஆனா பேச்சு வார்த்தைலாம் ஒரு மாதிரி இருக்கே அத்தே''
''மதி பெரண்டு போய்டுச்சி தாயி...ஒரு வீட்டுல ஒரு எழவு விழுகலாம் ரெண்டு எழவு விழுகலாம்..அஞ்சு எழவு விழுந்து கேள்வி பட்டிருக்கியா? அது இவுகளுக்கு நடந்தது... இவங்க பொண்ணை ராமேஸ்வரத்துல கட்டிகொடுத்தாங்க..அவுகளுக்கு மீன் வியாபாரம்...பெரிய படகு வச்சிருந்தாங்க...பிரசவத்துக்கு இங்க வந்தப்போ...குழந்தை இறந்தே பிறந்தது..கொஞ்ச நேரத்துல பொண்ணும் இறந்து போச்சு...அப்பெல்லாம் இப்போ இருக்குற மாதிரி போன் வசதி கிடையாது...இவுக வீட்டுக்காரரு மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு சொன்னப்போ அங்கே இருந்து ஒரு இடி விழுந்துச்சி...இவுக மருமகனை சிலோன் காரங்க சுட்டுட்டாங்கன்னு...கேட்ட மாத்திரத்தில இவுக வீட்டுக்காரர் உசிரு போய்டுச்சி...எதுக்கும் அசராத உன்னோட மாமனாரே இடிஞ்சி போய் ஒக்காந்துட்டாரு...சரின்னு அரேபியாவுக்கு தகவல் சொல்ல இவுக மகன் வேலை பாக்கிற கம்பெனிக்கு போன்போட்டு பேசினா அங்கேருந்து இன்னோரு இடி விழுந்துச்சி...சாதிக் ஏதோ கொலைகேசில மாட்டி அவன் தலையை வெட்டிட்டாங்கலாம். அதுவும் அன்னைக்கு தான் நடந்திருக்கு...என்ன செய்வா ஒரு பொம்பள..ம்ம்ம்...அன்னையோட இந்தம்மாவுக்கு எல்லாம் முடிஞ்சி போச்சி..சரியான மானஸ்தி...யாருக்கிட்டயும் எதுவும் கை நீட்டி வாங்காது...உங்க மாமா தான் இப்போ தான் ஏதோ கவர்மெண்ட்ல ஆதரவற்றோர் பென்சன் தர்றாங்களாமே அதுக்கு ஏற்பாடு பண்ணி உன் மகன் தான் அரேபியாவுல இருந்து பணம் அனுப்புறான்னு நம்பவச்சி சமாளிச்சிட்டு இருக்காங்க...உம் புருசனும் அப்பிடியே தான் பேசுவான்...அந்தம்மா ஒலகமே தனி....புருசன், மகள், பேரன், மருமகன் எல்லாரும் செத்துப்போனது தெரியும்...மகன் செத்துப்போனது தெரியாது...இன்னமும் மகன் பெருநாளைக்கு வர்ரான்னு மரைக்காயர் வீட்டுக்கு போன் வந்துச்சுன்னு சொல்லிக்கிட்டு வாழ்ந்திட்டு இருக்கு...!
செல்விக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
''அவங்ககிட்ட பாத்து பேசு கண்ணு...எனக்காக...மாமாக்காக...சரியா?'' போ...டீய கொண்டு போயி குடு...இருந்து சாப்டுட்டு போகச்சொல்லு''

உடைந்த மனதுடனும் தளர்ந்த நடையுடனும் செல்வி தேநீர் டம்ளரையும் வட்டையையும் சேர்த்து மரியத்தின் முன்னால் பவ்யமாக வைத்து விட்டு சமுத்திரத்தின் அருகே அமர்ந்தாள்.
வீட்டின் பின்கட்டிலிருந்து முகம் கழுவி துண்டால் முகத்தை துடைத்தபடியே தவசி இவர்களை கடந்து சென்றார்.
சென்ற தவசியை நிறுத்தியது மரியத்தின் குரல் ''டேய் தவசி...'
தவசியின் முதுகு கேள்விக்குறி போல் வளைந்து ''அக்கா'' என்றார்.
செல்வி மிரண்டு போனாள். அவளுக்கு தெரிந்த மாமானார் தவசி சராசரி மனிதனல்ல. கரிய நிறம், நெடிய உருவம், விரிந்த தோள்கள், பரந்த மார்பு, கடின உழைப்பாலும் பொறுப்பான உணவுக்கட்டுப்பாட்டாலும் வலுப்பெற்ற தேக்குமர தேகம். தூய வெள்ளை வேட்டியும் மென்மஞ்சள் நிற சட்டையும் அணிந்து நின்றால் கடந்து செல்லும் எவரும் ஒரு கணம் நின்று கைகூப்பச் செய்யும் மறவர்குல மதயானை. அவரே குனிகிறார் என்றால் யார் இந்தப் பெண்?
''நீ என்ன பண்ற...நேரா செங்கப்படை போயி...நம்ம பேச்சி மதினியோட மகன் மாரியப்பன்ட்ட சொல்லி ஒரு தோப்பு பம்புசெட்டோட வேணும்னு சொல்லிட்டு வந்துடு...இந்த பெருநாளைக்கு சாதிக்கு வர்ரேம்னுருக்கான்...இருவத்தேழாங்கிழமை அட்வான்ச போட்டுபுட்டு பெருநாளைக்கு அப்புறம் பத்திரம் போட்டுக்கிருவோம்னு சொல்லிட்டு வந்துடு...பம்பு செட்டு இல்லாத தோப்பு எனக்கு வேணவே வேணாம் கண்டிச்சு சொல்லிட்டு வந்துரு...சரியா?''

''செஞ்சிருலாம்க்கா''

சமுத்திரத்தை நோக்கி ''பேங்கில பணத்தை லட்சலட்சமா வச்சிருக்கிறதுல என்ன பிரயோஜனம் கண்ணு...நீயே சொல்லு...ரூம்ல வச்சா சினேகித காரணுக கடன் குடுன்னு தொந்தரவு பண்றாகலாம்...நேத்து மரைக்காயர் வீட்டுக்கு போன் பண்ணி பேசும் போது சாதிக்கு சொன்னான்''

''நீங்க சொல்றது சரிதான் அத்தே...தோப்பு ஒண்ணு வாங்கி போட்டா...அதுவும் நல்லது தானே''

அந்த நேரம் வீட்டின் மாடியிலிருந்து வந்த வடிவேலு ''மாப்ள ஃபோனை சார்ஜ்ல போட்டீரா...ரொம்ப நேரமா மணி அடிச்சிட்டே இருக்கு...யாரோ ஆண்டர்சனாம் யு.எஸ்னு காட்டுது...போய் பாருங்க'' என்றதும் சமுத்திரம் செல்வி மரியம் இருவரையும் மறந்து தலைதெறிக்க ஓடினான்.

சற்று நேரம் அந்த இடம் கணமான அமைதியால் சூழப்பட்டது. மரியத்தையும் செல்வியையும் தவிர வேறு யாரும் இல்லை. மௌனம் மட்டும் நிரம்பியிருக்க அந்த புராதான வீட்டின் நடு அரங்கில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் முள் நகரும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அமைதி இறுக்கத்தை அதிகப்படுத்தியது.    வட்டையில் தேநீரை ஊற்றி சூடு தணித்து மெதுவாக குடித்து கொண்டிருந்த மரியம் ஒரு கணம் செல்வியை உற்று நோக்கினார். சுற்றும்முற்றும் பார்வையை சுழல விட்டார். அந்த பார்வையின் நோக்கத்தை செல்வியால் புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த நிலைத்த பார்வையில் குடி கொண்டிருந்த வெறுமை  எந்தவிதமான அர்த்தத்தையும் அவளுக்கு கற்பிக்கவில்லை. தான் இருப்பது பாதுகாப்பான வீடுதான் என்றாலும் மெலிதான பயம் ஒன்று செல்வியை கவ்வ ஆரம்பித்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவான குரலில் அந்த மௌனத்தை கலைத்தாள்.
''என்னம்மா எதுவும் வேணுமா?''
மீண்டுமொருமுறை வீடெங்கும் பார்வையை சுழற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்த மரியம் ''கண்ணு! நீ கட்டாத பழைய சேலை இருந்தா ஒண்ணு கொடேன்...யாரும் வர்றதுக்குள்ள சீக்கிரம் போய் எடுத்தார்றியா''
செல்விக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை...ஒரு கணம் மரியத்தை உற்று நோக்கினாள்.
செல்வியின் பார்வையை உள்வாங்கிய மரியம் சட்டென்று தான் கையில் வைத்திருந்த தேனீர் குவளையை கீழே வைத்துவிட்டு எழுந்தார். வெள்ளை துப்பட்டியை இறுகப்பற்றிக்கொண்டு என்ன நடக்கிறது என்று செல்வி ஊகிக்கும் முன்னால் அந்த இடத்தை விட்டு வேகமாக மாயமாய் மறைந்தார்.

சுய நினைவுக்கு வந்த செல்வி ''அத்தே....ய்'' என்று அலறினாள்.
சத்தத்தை கேட்டு அடுக்களையிலிருந்து அம்சவேணியும் பக்கத்து அறையிலிருந்து சட்டையை அணிந்தவாறு தவசியும் மேல்மாடியிலிருந்து சமுத்திரமும் ஓடோடி வந்தனர். செல்வி அம்சவேணியிடம் பதட்டத்துடன் நடந்ததை பகிர்ந்து கொண்டாள்.  உடனடியாக தவசியும் சமுத்திரமும் தெருவின் இருபுறமும் ஆளுக்கொரு திசையில் மரியத்தை தேடி ஓடினர்.
தவசி இங்குமங்கும் ஓடினார். தெருவில் மனித நடமாட்டம் இல்லை. தெருவின் முதல் வீடான ஆசிரியர் ராமநாதனின் வீட்டின் முருங்கைமரத்தின் நிழலில் ஒரு நாய் மட்டும் உறங்கிக்கொண்டிருந்தது. களைத்துப்போன தவசி வீட்டிற்குள் நுழையும் போது சமுத்திரம் ஏற்கனவே வந்திருந்தான்.
மீண்டும் மௌனத்தால் நிரம்பியது வீடு.  வியர்வைத்துளிகள் பூத்திருந்த தவசியின் முதுகை தனது சேலை முந்தானையால் துடைத்தபடி அம்சவேணி கேட்டாள் ''இப்போ என்னங்க பண்றது?''
நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து விதானத்தை நோக்கி விட்டுவிட்டு இருக்கையில் கை ஊன்றி எதுவும் பேசாமல் நின்றார் தவசி.  எவ்வளவு முயற்சி செய்தும் பதட்டமும் பரிதவிப்பும் அடங்க மறுத்தன.

''என்னங்க.....'' மீண்டும் தவசியின் கவனத்தை கலைத்தாள் அம்சவேணி.
எவர் முகத்தையும் பார்க்காமல் தலை கவிழ்ந்தபடியே சொன்னார்.

''இனிமே மரைக்காயர் வீட்டுக்கு ஃபோன் வராது அம்சு''
(முற்றும்)

Monday, June 10, 2019

அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாட் நினைவாக...!



11-12-2011 அன்று தான் கிரீஷ் கர்னாட் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா எதிரே அமைந்திருக்கும் புக் பாய்ண்ட் அரங்கில் மாலை 5.00 மணிக்கு நான் நுழைந்த போது தற்கால தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப வெறும் பத்து நபர்கள் சிதறிக்கிடந்தனர். விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் 'வெளி' ரங்கராஜன், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி மற்றும் திரைப்பட நடிகர் சண்முக ராஜா. இவர்களில் எவரும் அப்போது வந்திருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பகத்தின் அதிபரும் எனது நண்பருமான கண்ணன் இருந்தார். நூலை மொழிபெயர்த்த எழுத்தாளர் பாவண்ணன் கூட அப்போது அரங்கில் இல்லை.

ஆனால் கிரீஷ் கர்னாட் இருந்தார். அரங்கின் மூலையில் கிரீஷ் கர்னாடும் கவிஞர் சல்மாவும் உரையாடிக் கொண்டிருந்தார். சல்மாவின் உடைந்த ஆங்கிலத்திற்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
கவி.சல்மா என்னை கிரீஷ் கர்னாட் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சற்று நேரத்தில் இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக இருக்கும் கார்த்திகை செல்வன் வந்து இணைந்தார். அப்போது அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அரங்கினுள் நுழையும் முன்பே அவர் எழுதி பாவண்ணன் மொழி பெயர்த்தஅக்னியும் மழையும்’ நூலை வாங்கிவிட்டேன்.
அவரிடம் நூலை கொடுத்து கையெழுத்து கேட்டேன்.
யாருக்காக இந்த புத்தகம் வாங்குகிறாய்? என்றார் தெளிவான ஆங்கிலத்தில்.
நானும் ஆங்கிலத்திலேயே எனது மகனுக்காக என்றேன்.
''How old is he....You look so young...' என்றார்.
'He is five years old'' என்றேன்.
சல்மா சிரித்து விட்டார். கிரீஷ் வியப்புடன் என்னை நோக்கி ''Don't you think this book is too much for a five year old kid?''
''Of course, I am aware of that. But, he has to read your writings at least once in his lifetime'' என்றேன்.
கையெழுத்து போட புத்தகத்தின் முதல் பக்கத்தை திறந்தார்.
''What is his name?''
''சரவண விக்னேஷ்'' என்றேன்.
பெயரை எழுதி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார்.

சல்மா உடைந்த ஆங்கிலத்தில் உங்கள் தாய்மொழியில் கையெழுத்திடலாமே என்றார்.
''It is unfortunate that I can speak Konkani, but can't read and write since I was educated in Kannada medium school...nevertheless, Kannada is also my mother tongue...'' என்று சொன்னவாறு கன்னடத்தில் கையொப்பமிட்டார்.

''Sir, with due respect to your accolades, may I ask you a question?'' என்றேன்.
''Sure ....Why not?'' என்றார்.
''How can an individual have two mother tongues?'' என்ற எனது கேள்வியை சிரிப்புடன் எதிர்கொண்டவர் ''An individual cannot have but an Indian can'' என்றார்.
இந்த வித்தியாசமான பதிலில் வியந்து போய் ''How...How it is possible....I can have only one mother and only one mother tongue rest all foreign languages....ain't they?''
கிரிஷ் தனது பதிலை கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார்.
It is a fact that an individual cannot have two mothers and therefore two mother tongues. But it is also  a fact that in country like India where people migrate from one state to another are vulnerable. Because, they are forced to learn the language of the land and could speak mother tongue at home only. That’s the reason I forego my mother tongue. Even today I regret for not being able to write and read Konkani.
நான் சந்தித்து உரையாடிய மகத்தான இலக்கிய ஆளுமைகளில் கிரீஷ் கர்னாட் மறக்க இயலாதவர்.  அவருடன் பேசிய அந்த 25 நிமிடங்கள் என் வாழ்வின் அற்புத தருணங்கள்.
சென்னையில் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தில் எட்டாண்டு காலம் பணிபுரிந்தாலும் தமிழை பேசவோ எழுதவோ கற்க  முடியாமல் போனதை எண்ணி வருந்துவதாக ஏற்புரையில் குறிப்பிட்டார். அமைதியான நதி மீது ர்ப்பாட்டமில்லாமல்  மிதந்து செல்லும் இலை போல அவருடைய பேச்சு அன்று இருந்தது. விழாவின் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து அவருடைய பேச்சை கேட்டு ரசித்தேன். பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கும் முன் என்னை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு இறங்கினார். கிரீஷ் இன்று மறைந்து விட்டார். ஆனால் அவருடைய அந்த புன்னகை மட்டும் என்றும் என்னுடன் இருக்கும். ஆலிசின் அற்புத உலகத்தில் வரும் பூனையின் சிரிப்பை போல....!








Monday, March 18, 2019

விஞ்ஞானப் பயணம் - வெனிஸ் நகரத்திலிருந்து (3)

பதோவா பல்கலைகழகத்தின் அடுத்த சிறப்பம்சம் அங்குள்ள உலகின் முதல் உடற்கூறியல் ஆய்வகம். பிணத்தின் மீது ஆய்வு செய்வது கத்தோலிக்க திருச்சபை தடை செய்திருந்த காலம். எந்த மதமும் அறிவியலுக்கு துணை நின்றதில்லை என்பதை மக்கள் இன்று வரை உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பெண்களுக்கு பட்டமளிக்க கத்தோலிக்க திருச்சபை மறுதலித்து வந்தது என்பது ஒரு வரலாற்று உண்மை. திருச்சபை தலைவர் பெண்களுக்கு பட்டமளிக்க மறுத்து வந்தார். அந்த தடைகள் அனைத்தையும் மீறி முதல்முறையாக 1678ல் தனது முனைவர் பட்டத்தை அதுவும் கணிதத்தில் பெற்றார் எலினா லூக்ரேசியா. பல்கலைகழக வளாகத்தின் மைய மண்டபத்தின் நுழைவாயிலில் அவருக்கு இன்று சிலை வைத்துள்ளனர்.



உடற்கூறியல் ஆய்வகம் செயல்பட பிணங்கள் தேவை. கல்லறையை தோண்டி பிணத்தை எடுத்துவர இரண்டு திருடர்களை பல்கலைகழகம் பயன்படுத்தியது. பிணம் எப்போது கிடைக்கும் என்று தெரியாத காரணத்தால் எந்நேரமும்  தயாராக இருக்கவேண்டும். மூன்று அடுக்கு கொண்ட சிறிய அறையில் தரைத்தளத்தில் பிணத்தை கிடத்தி பேராசிரியர் ஆண்ட்ரூ வெசாலியஸ் ஆய்வு செய்ய முதல் தளத்தில் பேராசியர்கள் நின்று கொள்ள அடுத்த தளத்தில் மாணவர்கள் நின்று கொண்டு அதை வரைந்து குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.
இங்கே வாசகர்கள் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத அந்த நாட்களில் இது எப்படி சாத்தியமானது? உடற்கூறியல் என்பது மிக நுட்பமாக கவனித்து கற்றுகொள்ள வேண்டிய பாடம். ரத்த நாளங்களும் திசுக்களும் எலும்பின் வகைகளும் அவற்றின் இயல்புகளை பதிவுசெய்து ஒப்பீடு செய்து கற்றாக வேண்டும். வயதும் நோயும் முக்கியமான காரணிகள். ஒளியற்ற அந்த பிணவறையில் கீழேயும் மேலேயும் மாணவர்கள் மெழுகுதிரிகளை பிடித்துக்கொள்ள அந்த வெளிச்சத்தில் ஆய்வைப்பார்த்து பதிவு செய்ய வேண்டும். இதிலும் ஒரு சிக்கல் உண்டு. மெழுகுதிரி எரிய ஆக்சிஜன் வேண்டும். மூடிய அறைக்குள் மாணவர்கள் விடும் மூச்சுக்காற்றின் கார்பன்-டை-ஆக்சைடு எரியும் திரியை அணைக்கும். மெழுகுதிரி எரிய எரிய அறைக்குள் ஆக்சிஜனின் அளவு குறையும். யாரேனும் மயக்கமடையும் வாய்ப்போ மரணமடையும் வாய்ப்போ உண்டு. அவ்வாறு அனேக உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. அவை அனைத்தையும் தாண்டியே நாம் இன்றைய நமது உடற்கூறியல் அறிவை பெற்றுள்ளோம். பலருடைய உயிர்த்தியாகத்தாலேயே இது சாத்தியமானது. 1543ல் முதல் உடற்கூறியல் கையேடு பேராசிரியர் ஆண்ட்ரூ வெசாலியஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.


பின்னாளில் புகழ் பெற்ற மருத்துவர். வில்லியம் ஹார்வி உடலின் ரத்த ஓட்டத்தை பற்றிய ஆய்வுகளை வெளியிட இந்த நூல் உதவியது. இன்றும் ரத்த சுழற்சி மண்டல ஆய்வின் தந்தை என்று மரு.வில்லியம் ஹார்வி போற்றப்படுகிறார்.

பல்கலைகழகம் எங்கும் புகழ்பெற்ற ஆய்வாளர்களின் படங்கள் சுவற்றில் வண்ண ஓவியமாக திகழ்கின்றன. கோபர் நிகஸ் (வானியல் ஆய்வாளர், போலந்து) இங்கே தான் பணியாற்றினார்.

பல்கலைகழகத்தை சுற்றி பார்த்த பின் அடுத்து பதோவா தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்தோம். உலகின் மிகத்தொன்மையான பூங்காக்களில் இதுவும் ஒன்று.
பூங்காவின் மையத்தில் வென்னீர் ஊற்று ஒன்று உண்டு. நம் ஊராக இருந்தால் அங்கே கோயில் கட்டி உண்டியல் வைத்திருப்போம். ஆனால் அவர்கள் வெப்ப நாடுகளில் மட்டும் மலரும் பூக்களை பயிரிட்டுள்ளார்கள்.



விதவிதமான பூக்களையும் காய்களையும் பிரசவித்த தாவரங்களை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை பெற்றோம்.
தாவரவியல் பூங்காவை அடுத்து இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த லாஸ்ட் க்ருசேட் திரைப்படத்தில் வரும் சான் பர்னாபா தேவாலயத்திற்கு சென்றோம். இத்தாலியில் இருந்த போது ஒரு இடத்திலும் பிச்சைக்காரர்களை காண முடியவில்லை. இந்த தேவாலய வாசலில் இரண்டு பிச்சைக்காரர்களை கண்டோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஞாபகப்படுத்திக் கொண்டால் ஒருவித தனிமகிழ்ச்சியை அளிக்கும் இடம் இது. ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய இந்த திரைப்படம் மிக சுவாரஸ்யமானது. ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இயேசு நாதர் பயன்படுத்திய கோப்பை ஒன்றை தேடும் கதை. கதைக்களம் இரண்டாம் உலகப்போர் நிகழும் சமயம் ஆதலால் படத்தில் ஹிட்லர் ஒரு காட்சியில் தோன்றுவார். படத்தின் இறுதிக்காட்சி புனையப்பட்ட ஒன்றே ஆயினும் உணர்ச்சிகரமாக இருக்கும். வாய்ப்புள்ளவர்கள் பார்க்கவும்.




அடுத்த நாள் இத்தாலியின் புகழ்பெற்ற புற்று நோய் ஆராய்ச்சி கழகத்திற்கும், மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் செல்ல வேண்டும்.
மானுட வாழ்க்கையை தனது கொடுங்கரங்களால் நசுக்கும் இந்த நோய்க்கான தீர்வை நோக்கி ஆராய்ச்சியாளர்கள் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அங்கே செல்வதற்கு முன் இதன் பின்னால் இருக்கும் மிகப்பெரிய சந்தை மதிப்பும் அதனூடே செயல்படும் வணிக தந்திரங்களை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.                                                                                 
                                                                                                                                    (தொடரும்)

Thursday, January 17, 2019

விஞ்ஞானப் பயணம் - வெனிஸ் நகரத்திலிருந்து (2)


வெனிஸ் விமான நிலையத்திலிருந்து பதூவா நகரம் 63கி.மீ தூரத்தில் அமைந்திருந்தது. நாங்கள் அபேனோ க்ராண்ட் விடுதிக்குள் நுழைந்ததும் எங்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஓடோடி வந்து வரவேற்றார். லாரா நேரி என்பது அம்மையாரின் திருநாமம். எங்களைக் கண்டதும் ''உங்களோட வாட்சப் நம்பருக்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தேன்...நீங்கள் ஏன் எடுக்கவில்லை அப்புறம் மெயில் கூட அனுப்பிச்சேன்...பாத்தீங்களா?'' என்றார் அப்பாவியாக.  மரியா கடுப்பில் இருந்தாள். ''17 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வரும் போது இம்மாதிரி சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்...நாங்கள் தான் பொறுத்துக் கொள்ளவேண்டும்...எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை....'' என்றேன்.



அன்றைய இரவு, விருந்தினர் அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு அளிக்கப்பட்டது. எதிலும் காரமும் இல்லை உப்புமில்லை. காரம் என்றால் அவர்களுக்கு தெரிந்தது மிளகு மட்டும் தான். நான் அவித்த மீனும் ரொட்டித்துண்டுகளும் பழங்களும் சாப்பிட்டேன். இயேசுவின் ரத்தம் ஆறாக ஓடியது. மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக ஃப்ரான்சு மற்றும் இத்தாலியினருக்கு ஒயின் என்பது உணவின் ஒரு பகுதி. நம் மக்கள் மது அருந்துவது போன்று அவர்கள் அருந்துவதில்லை. போதையில் நினைவிழந்து சாலையில் விழுந்து கிடப்பதில்லை. எனவே மது அருந்துதல் அங்கே நம்மூரைப் போல ஒரு சமூகபிரச்சினையே இல்லை.



திருமதி. லாரா நேரி மறுநாளுக்கான செயல்திட்டத்தை விவரித்தார். காலை இத்தாலி வணிகர் பேரவை தரும் வரவேற்பைத் தொடர்ந்து பதோவா பல்கலைக்கழகம் மற்றும் பதோவா தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்து விட்டு வணிகர் சங்கம் சென்று வரவேற்பு மற்றும் அறிமுககூட்டத்தை முடித்து விட்டு பதோவா பல்கலைகழகம் சென்றோம்.

இங்கே தான் 18 ஆண்டு காலம் கணிதவியல் துறையின் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் கலிலியோ இருந்தார். அவரை ஒரு இயற்பியலாளர் என்று இதுகாறும் கருதிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்த செய்தி வியப்பை ஏற்படுத்தியது. கலிலியோ அடிப்படையில் கணிதமேதை. அதையும் தாண்டி அவருக்கு வானியல் மற்றும் இயற்பியலில் மிதமிஞ்சிய ஆர்வம் இருந்தது. பைசா நகரத்தில் இருக்கும் சாய்ந்த கோபுரத்தில் அவர் நிகழ்த்திய இறகு நாணய சோதனை பிரசித்தி பெற்ற ஒன்று. புவி பொருட்கள் மீது செலுத்தும் விசை மாறாதது எனவே அது ஒரு மாறிலி என்றும் கண்டறிந்தார். ஆனால் அதை பரிசோதனை வாயிலாக நிரூபித்த அவர் கணித ரீதியாக நிரூபிக்கும் முன் மரணடந்தார். அவர் மரணமடைந்த ஆண்டு ஐசக் நியூட்டன் பிறந்தார். அவரே புவி ஈர்ப்பு விசையை கணித சமன்பாடு வாயிலாக புவி ஈர்ப்பு மாறிலியை நிறுவினார்.  வெற்றிடத்தில் இறகும் இரும்புக்குண்டும் ஒரே அளவில் ஈர்க்கப்படுகின்றன என்பதை யூட்யூபில் இன்றும் காணலாம்.

https://www.youtube.com/watch?v=QyeF-_QPSbk


கலிலியோ பற்றி பல்வேறு விதமான சித்திரங்கள் அங்கே கிடைத்தன. பல்கலைக்கழகத்தில் மிக அதிக ஊழியம் பெற்ற பேராசிரியர் அவர் தான். ஆள் நல்ல குள்ளம் மற்றும் மாபெரும் கஞ்சன். கலிலியோ வகுப்பெடுக்கும் வளாகம் சதுர வடிவ தரைத்தளமும் அதன் விதானங்கள் சுற்றுச்சுவரிலிருந்து மையத்தை நோக்கி எழும்பும் கூம்பு வடிவமும் கொண்டவை.

வகுப்பின் மையத்திலிருந்து வாயில் வரை படிக்கட்டு பாணியில் கீழிருந்து மேலாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே இறுதி வரிசை மாணவர்கள் கலிலியோவின் குரலை கேட்க முடியுமே தவிர அவரை பார்க்க முடியாது. எனவே அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலிலியோவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். அதாவது, வகுப்பின் நடுவே மரத்தாலான மேடை ஒன்றை அமைப்பது, அதன் மீதேறி அவர் பாடம் எடுத்தால் அனைவரும் அவரை நன்கு கவனிக்கமுடியும் என்றனர். கலிலியோ ''நல்ல யோசனை...உடனே செயல்படுத்துங்கள்....ஆனால் என்னிடம் காசு எதுவும் கேட்கக்கூடாது'' என்றபடி நடையைக் கட்டினார். மாணவர்கள் நிதி திரட்டி மேடை அமைத்து தந்தனர்.



கலிலியோ வகுப்பில் கணிதம் கற்பித்துவிட்டு ஓய்வு நேரத்தில் வானியல் ஆராய்ச்சியிலும் இயற்பியல் ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தினார். அவருக்கு ஒரு வித்தியாசமான குணம் இருந்தது. வாழ்வியல் சம்பவங்களைக்கூட ஒரு கணிதசமன்பாடாக மாற்றி சமன் செய்தால் தான் அன்றிரவு தூக்கம் வரும். வேலைக்காரன் வராவிட்டால் கூட அதை ஒரு நிகழ்தகவு தத்துவத்தின் (Probability Theory) அடிப்படையில் சமன்பாடாக மாற்றி விடுவார். (இது பற்றி தெரியாத வாசகர்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கணித / இயற்பியல் மாணவர்களை அணுகலாம். பையன் பதில் சொன்னால் ஒழுங்காக கல்லூரிக்கு போய் படிக்கிறான்னு அர்த்தம். இல்லைனா கட் அடிச்சுட்டு ஊர் சுத்துறான்னு அர்த்தம்) அப்படிப்பட்ட மனிதனுக்கு டாலமியின் புவிமையக்கொள்கையின் பால் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. நிலவு தேய்வதும், வளர்வதும், கிரகணத்தின் போது காணக்கிடைக்கும் பூமியின் நிழல், சந்திரனின் நிழல், பூமிக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள தூரம் (சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான தூரத்தை அவருக்கு முன்பே க்ரேக்கர்கள் பாரலாக்ஸ் முறைப்படி அளந்திருந்தனர்) இந்த தரவுகளின் அடிப்படையில் கலிலியோ சமன்பாடுகளை உருவாக்க அவை இடிபட்டன. ஆனால், அவர் சூரியனை மையத்திற்கு தள்ளி பூமியை சுற்றுப்பாதைக்கு கொண்டு வந்து கணக்கிடும் போது சமன்பாடுகள் சமனிலை அடைந்தன. இதைக் கண்ட கலிலியோ தனது ஆராய்ச்சியை தீவிரப்படுத்த அன்றைய கத்தோலிக்க மதம் அதிர்ந்து போனது.

இறைவன் படைத்த உலகில் பூமியே மையத்தில் இருக்க, சூரியன் அதை சுற்றி வருகிறது. அதை மாற்ற அற்ப மானுடனான ஒருவன் முற்படுவதா? அதை திருச்சபை அனுமதிப்பதா? திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் கலிலியோவை அழைத்துவர செய்தார். விசாரணை துவங்கியது.

''என்ன தம்பி....உடம்பு எப்படி இருக்கு....ம்ம்...ஏதோ சூரியன் தான் நடுவில் இருக்கு...பூமி அதை சுற்றி வருதுன்னு...பசங்களுக்கு பாடம் நடத்துறியாமே...உண்மையா?'' என்று அன்பொழுக கேட்டார்.

மிரண்டு போன கலிலியோ '''ஐயா...அப்பிடி ஒண்ணுமில்லீங்க....ஆண்டவர் இப்படி படைச்சிருக்காரே...அதுக்கு பதிலா சூரியனை நடுவுல வச்சிருந்தா எப்படி இருக்கும்னு பசங்க கேட்டாய்ங்க....அப்படி இருக்குற மாதிரி கற்பனை பண்ணி வியாசம் எழுதச்சொல்லி வீட்டுப்பாடம் கொடுத்தேன்...அம்புட்டுதான் ஆண்டவரே...'' என்றார்.

''பாத்து தம்பி...மண்டை பத்திரம்'' என்று கருணையோடு அனுப்பி வைத்தார் போப்பாண்டவர்.

ஒரு விஞ்ஞானிக்கே உண்டான தேடலும் தாகமும் கொண்ட கலிலியோ தொடர்ந்து தனது ஆராய்ச்சியில் முனைப்போடு செயல்பட்டு உண்மையை கணித ரீதியாக நிரூபணம் செய்தார். மாணவர்களோடு ஒரு விதமான தயக்கத்துடனே பகிர்ந்து கொண்டார்.

இந்தமுறை போப்பாண்டவர் அழைத்து விசாரணையை தனது அடியாட்களோடு வேறுவிதமாக நடத்தினார்.

தலைகீழாக தொங்கவிடப்பட்ட கலிலியோவின் உடலில் போப்பாண்டவரின் அடியாட்கள் சில பயிற்சிகளை மேற்கொண்டனர்.

கலிலியோ இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தார். இப்போது சமயோசிதமாக செயல்பட்டு இங்கேயிருந்து தப்பிக்க வேண்டும். உயிர் பிழைத்தால் உண்மையும் பிழைக்கும். எனவே, போப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பூமியே மையப்புள்ளி என்றும் சூரியனே பூமியை சுற்றி வருகிறது என்றும் தாம் ஒப்புக்கொள்வதாகவும் தனக்கு தலைசுற்றுவதால் இப்போதே விடுவிக்கும்படியும் வேண்டினார். ''மகனே அப்படி வா வழிக்கு ஆராய்ச்சியா பண்ற ஆராய்ச்சி...ஆண்டவர் படைப்பையே ஆராய்ச்சி பண்றியா....இனிமே இந்த மாதிரி கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறாக பேசினா நான் போப்பாகவே இருக்க மாட்டேன்....நாஸ்தியாயிடுவே....ஓடுறா...'''என்று விரட்டினார் போப்.

கலிலியோ அன்றிரவு ஆராய்ச்சி குறிப்புக்களை படியெடுத்து தனது மாணவர்களில் நான்கு பேரை தேர்ந்தெடுத்து  திசைக்கொருவராக அண்டை நாட்டு ஆசிரியர்களிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பி வைத்தார். அவ்வாறு தப்பித்த ஆராய்ச்சி குறிப்புகள் தான் இன்று நமக்கு கிடைக்கின்றன.

ஆனால் அதே காலகட்டத்தில் கலிலியோ போன்று தலைவணங்காமல் கத்தோலிக்க திருச்சபையை தனது அறிவாயுதத்தால் எதிர்த்த அறிவியலாளரும் இருந்தார். அந்த விஞ்ஞானியின் பெயர் ''புருனோ''.



கலிலியோவை விசாரித்ததை போன்றே புருனோவையும் விசாரித்தார். புருனோ மசியவில்லை. தான் கண்ட உண்மையை மாற்றி உரைக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார். இறுதியாக போப்பாண்டவர் இவ்வாறாக தீர்ப்பெழுதினார் ''புருனோ, கத்தோலிக்க நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுகிறான் எனவே மரண தண்டனை விதிக்கிறேன்''.

புருனோ உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டார். ஆனால் உண்மையை எரிக்க முடியுமா? எந்த தெருமுனையில் வைத்து புருனோ எரித்துக் கொள்ளப்பட்டாரோ அதே இடத்தில் அவர் சிலையாக இன்றைய தலைமுறைக்கு சத்தியத்தின் சாட்சியாக தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபை உண்மையின் முன்னால் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருக்கிறது. சத்தியத்திற்கு ஏது சாவு?

(தொடரும்)


Thursday, January 10, 2019

விஞ்ஞானப் பயணம் - வெனிஸ் நகரத்திலிருந்து



செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் எங்கள் நிர்வாக இயக்குனர் என்னை அழைத்து ''நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை இத்தாலி போக வேண்டியிருக்கும். போய்ட்டு வந்துடு'' என்று சொல்லிவிட்டு எனது பதிலுக்குக் கூட காத்திராமல் இணைப்பை துண்டித்தார். அவருக்கு தெரியும் ''சார்., நவம்பர் 11ஆம் தேதி எனக்கு தலைவலி சார் ... அதனால இரண்டு நாள் லீவு வேணும் சார்'' என்று நான் கேட்டுவிடும் அபாயம் இருப்பதை முன் கூட்டியே உணர்ந்த அவர் உத்தரவை மட்டும் பிறப்பித்து விட்டு தகவல் தொடர்பை துண்டித்தார்.
உறவினர்கள் தகவல் கேள்விப்பட்டதும்  ''கழுதை கெட்டா குட்டிச்சுவரு'' என்று ஒதுங்கினார்கள். நண்பர்களில் சிலர் பெருமை கொண்டார்கள். காரணம் அழைத்தது இத்தாலியின் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இத்தாலி வணிக முகவாண்மை. பயணத்திட்டத்தின் முதன்மைக்கூறு அங்கிருக்கும் பதுவா பல்கலைக்கழகத்திற்கும் அதன் கீழ் இயங்கும் மூலக்கூறு வேதியியல் தொழிட்நுட்பக்கழகத்திற்கும், வெனிஸ் புற்று நோய் ஆய்வு நிறுவனத்திற்கும் சென்று வரவேண்டும். இதுவே பயணத்தின் சிறப்பம்சம். இந்தியாவில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்குத்தான் அழைப்பு. அதில் ஒன்று எங்கள் நிறுவனம்.
நண்பர்கள் சிலர் குழம்பினார்கள்.
''இவனுக்கும் பல்கலைகழகத்திற்கும் என்ன சார் சம்பந்தம்?''
''அட அதை விடுங்க சார்...பல்கலைகழகம் ரெண்டாவது...முதல்ல அறிவுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? மைசூர் போண்டாவில் கூட ஒரு மாதிரியா மைசூரை கண்டு பிடிச்சிடலாம் சார்...இவன்கிட்ட அறிவின் சாயல்னு துளியும் கிடையாதே....என்ன கொடுமை இது?''
குழம்பியவர்கள் அவரவர் பொருளாதார வலிமைக்கேற்ப வெளிநாடு மற்றும் ராணுவ சரக்குகளிடமும் ஒன்றுமில்லாதவர்கள் டாஸ்மாக் நோக்கியும் விரைந்தனர்.
இதைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத நான் இத்தாலிக்கும் தமிழனான எனக்கும் உள்ள வரலாற்று தொடர்பை ஆராய முனைந்தேன்.
இதற்கிடையில் இத்தாலிய அரசு எனக்கும் பயணச்சீட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில் முன்பதிவு என பல ஏற்பாடுகளை விரைந்து செய்து முடித்துவிட்டது.

இத்தாலிக்கும் தமிழர்களான நமக்கும் பன்னெடுங்கால தொடர்பு உண்டு. இன்றைய இத்தாலி அன்று இல்லை. இன்றைய இத்தாலியின் ஒரு பகுதி வெனிஸ் பேரரசாகவும் மற்றொரு பகுதி ரோமப்பேரரசின் கீழும் இருந்தது. ரோமாபுரியிலிருந்து வந்து பாண்டிய நாட்டின் முத்து, பவளம், பட்டாடைகள், மிளகு, தேன் போன்றவற்றை வாங்கி வணிகம் செய்து வந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் யவனர்கள் என்று குறிப்பிடப்படுவது ரோமாபுரிவாழ் வணிகர்களைத்தான். ரோமிலிருந்து துருக்கி வழியாக ஐரோப்பாவை கடந்து அரேபியா பின்பு அங்கிருந்து தமிழகம் வந்து வணிகம் செய்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுரை உறங்கா நகரமாக இயங்கியது. தேனை அதிகமாக உற்பத்தி செய்யும் கேந்திரங்களில் மதுரையும் ஒன்று. மதுரைக்கு மதுரை என்று பெயர் வரக்காரணமும் அதுவே. மது என்றால் தேன் என்று தான் அன்றைய பொருள்...இன்றும் கூட. இந்த பிராந்தியத்தில் மருதமரங்கள் நிரம்பியிருந்த காரணத்தால்  கிராமத்து மக்கள் ''மருதை'' என்றும்  குறிப்பிடுவர்.
இத்தாலியில் இருந்து மதம் பரப்ப வந்த காண்ஸ்ட்டாடின் பெஸ்கி என்னும் பாதிரியார், வீரமாமுனிவர் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் கற்று தேம்பாவணி என்னும் காவியத்தை இயற்றினார். சதுர் அகராதி படைத்தார். பரமார்த்தகுரு கதைகள் எழுதினார். அதைவிட அவர் ஆற்றிய அரும்பணி தமிழ் எழுத்து  முறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள். அதற்கு முன்பு வரை நமக்கு மெய்யெழுத்துக்களுக்கு புள்ளி வைக்கும் பழக்கம் இல்லை. காரணம், பனை ஓலையில் எழுதும் போது எழுத்தாணி கொண்டு புள்ளி வைத்தால் அது பொத்தலாகி விடும். பனை ஓலையின் ஆயுளும் குறையும். அதே போல 'ஏ' என்ற எழுத்து இல்லை. 'எ' என்று எழுதி அதன் கீழே கோடு ஒன்று கிழிப்பர் அல்லது அதன் தலைமேலே பொட்டொன்று வைப்பர். வீரமாமுனிவர் தான் 'எ' என்னும் எழுத்தின் கீழே ஒரு இழுப்பை இழுத்துவிட்டார்.
தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று. காலத்திற்கு ஏற்றவாறு தொழிட்நுட்பவளர்ச்சிக்கு தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் இயல்பை தன்னகத்தே கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே. இந்தப் பண்புகள் இல்லாத சமசுகிருதம், லத்தீன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகள் செத்துப்போயின. இத்தாலிக்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் செய்து கொண்டே துணிமணிகளுடன் சென்னை பன்னாட்டு விமான முனையம் வந்தடைந்தேன். நள்ளிரவு மணி 1.50க்கு விமானம். சென்னையிலிருந்து ஃப்ராங்க்ஃப்ர்ட் பின்பு அங்கிருந்து வெனிஸ் என்பதாக பயணம். சென்னையிலிருந்து ஃப்ராங்க்ஃப்ர்ட் 10 மணி நேரப்பயணம். அங்கே 4 மணிநேரக் காத்திருப்புக்கு பின் வெனிஸ் ஒண்ணரை மணி நேரம்.
ஃப்ராங்க்ஃப்ர்ட் செல்லும் லுஃப்தான்சா விமானத்தில் ஜெர்மானிய பாட்டிகள் வரவேற்றனர். அமெரிக்கா செல்லும் பயணிகளே அதிகம். எனது இருக்கைக்கு அருகே ஒரு மாமாவும் மாமியும் அமெரிக்காவிலிருக்கும் தனது மகன் வீட்டுக்கு பயணம். மாமா ஜோதிட சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று மாமி மூலமாக தெரிய வந்தது.
''ஏன்னா சகுனம் ஜாதகம் பார்த்தேளா இல்லியா ஒன்னும் பிரச்சினையில்லையே....''
''பாத்துட்டேண்டி...அதிலும் நீ கும்ப ராசி பார்த்தியா...இன்னைக்கு அமோகமா இருக்கு...உனக்கு மாற்றுமதத்துக்காரா ஒத்தாசையா இருப்பா...குடை இல்லாட்டி போனா ரெயின் கோட் இலவசமா கிடைக்க வாய்ப்பிருக்குன்னா பாத்துக்கோயேன்...அமோகமா இருக்க போறது நமக்கு''
எனக்கு வியப்பாக இருந்தது. ஜோதிடத்தில் வீடு வாங்கலாம், கல்யாணம் பண்ணலாம் என்று கணித்து சொல்வார்கள். குடை கிடைக்கும் வடை கிடைக்கும் என்றெல்லாம் கணிக்க முடியுமா? இவரை மாதிரி ஒருத்தரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். எனது எதிர்காலம் பற்றி மாமா எப்படி கணிக்கிறார் என்று பார்க்கலாம். மாமாவிடம் பேச்சுக் கொடுத்தேன். துளியும் யோசிக்காமல் இருக்கைக்கு முன்னே இருந்த வாந்தி கவரில் எனது ஜாதகக் கட்டத்தை வரைந்தார்.
''மிதுன ராசி ....சிம்ம லக்னம்...நீர் உருப்படறதுக்கு வாய்ப்பே இல்லையே''
''அதுதான் எனக்கே தெரியுமே....வேறேதாவது உங்களுக்கு தெரியுதா?
''இதோ பாரும் உம்மோடத மட்டும் வச்சிண்டு ஒன்னும் பண்ண முடியாதுங்காணும்....ஆம்படையா அப்புறம் புள்ளாண்டானோட கட்டம் இருந்தா தான் ஏதாவது சொல்ல முடியும்...இல்லைனா இது ஒரு வீணாப்போன ஜாதகம்'' என்றளவில் எனது எதிர்காலம் குறித்த கணிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அரைத்தூக்கத்தில் இருந்த பயணிகளை தலைமைப்பணிப்பெண்ணின் அழைப்பு நிமிர்ந்து அமரச்செய்தது. அதாவது வதக்கப்பட்ட காய்கறிகள் வைத்து சுற்றப்பட்ட சப்பாத்தி வழங்கப்படும் என்பதாக அறிவிப்பு. உண்மையிலேயே சுவையாக இருந்தது. பணிப்பெண்கள் அனைவரும் பாட்டிகள் என்பதால் பயணிகள் அனைவரும் நித்திரைக்கு விரைந்தனர். அது ஏனோ தெரியவில்லை ஜெர்மானிய பணிப்பெண்களிடம் ஒரு பணிவோ பணி நேர்த்தியோ இல்லை. ஒருவித மூர்க்கத்தனம் இருந்ததை உணர்ந்தேன்.

தூங்கி எழுந்த போது பேய் மழையோடு ஃப்ராங்க்ஃபர்ட் எங்களை வரவேற்றது. மாமா குஷியாகி விட்டார். ''ஜிட்டு...நான் சொன்னேனோலில்லியோ பார் மழை பெய்யறது...நம்ம எல்லோருக்கும் குடை கொடுக்கப் போறா...'' என்றார். நானும் மாமாவின் ஜோதிட அறிவு குறித்து வியந்தபடி விமானத்தின் கதவருகே வந்தேன். அங்கே குடையுமில்லை படையுமில்லை.. எல்லோரும் நனைந்தபடியே இறங்கி பேருந்தில் ஏறினார்கள். மாமா பவ்யமாக சென்னை ஆங்கிலத்தில் ''மழையில் நனைஞ்ச படி எப்படி எறங்குறது...குடை தர மாட்டேளா? என்றார். மூதாட்டி பணிப்பெண்ணோ ''குடையும் கிடையாது வடையும் கிடையாது...எறங்குங்க .ம்...நேரமில்ல...அடுத்த போர்டிங் ஸ்டார்ட் பண்ணனும்....சீக்கிரம்'' என்றார் கோபமாக. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு முன்பாக குடியேறல் பிரிவில் விசாவில் நுழைவு அனுமதி முத்திரை பெற வேண்டும். செங்கன் விசா வைத்திருப்போர் முதல்ல் நுழையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முத்திரையை வாங்கி விட்டால் அடுத்து எங்கும் வாங்க வேண்டியதில்லை. இத்தாலிக்கு ஜெர்மனி வாயிலாக செல்வோர் இரண்டு விமானத்திற்கும் இடையே மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். இல்லையெனில் படாத பாடு படவேண்டியிருக்கும். விமானத்தை தவறவிடும் வாய்ப்புக்கள் அதிகம். நானும் நுழைவு முத்திரை பெற்று காத்திருந்து வெனிஸ் வந்து இறங்கிய போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து என்னை விட்டுவிட்டு எப்போதோ சென்றிருந்தது. நான் கையில் அழைப்பிதழை வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தேன். அங்கே யாரும் ஆங்கிலம் பேச மாட்டார்கள். நமக்குத்தான் அப்படி ஒரு வியாதி உண்டு, ஆங்கிலத்தில் பேசினால் அதை ஒரு கௌரவமாக கருதுவோம். ஆனால் இங்கிலாந்தின் மிக அருகாமையில் இருக்கும் இத்தாலியில் ஒருவருக்கும் அந்த வியாதி இல்லை. நான் குறுக்குமறுக்குமாக விமான நிலையத்தில் அலைந்து கொண்டிருந்த அதே வேளையில் இன்னொரு அபலை அங்கே அதே அழைப்பிதழோடு அலைந்து கொண்டிருந்தது. அந்த அபலையின் பெயர் மரியா. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர். இருவரும் ''நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரால் கைவிடப்பட்டோர் சங்கம்'' என்ற ஒன்றை ஆரம்பித்தோம். உடனடியாக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பதோவா என்னும் ஊரில் இருக்கும் க்ராண்ட் அபேனோ என்னும் நட்சத்திர விடுதிக்கு செல்வது என்ற தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தினோம். வழிநெடுக மரியா புலம்பிக்கொண்டே வந்தாள். ''எங்க வீட்டுக்காரரு அப்பவே சொன்னாரு....இலவசமா டிக்கெட் தர்றான், ஹோட்டல் தர்றான்னு போகாதே...நட்டாத்துல விட்டுருவானுகன்னு....நான் கேட்கலை...இப்போ அவதி படுறேன்....ஒருத்தனுக்கும் இங்கிலீஷ் தெரியலை.....நல்ல வேளை நீ இருந்தே...இல்லைன்னா...நெனெச்சுப்பாக்கவே பயமே இருக்கு....'
(தொடரும்)