Saturday, April 23, 2016

அடையாறு அனந்தபத்மநாபனும் மணிமேகலையும்: 23-04-2016

காலை அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருந்தேன். என் பன்மாடிக்குடிலின் மேலடுக்கில் குடியிருக்கும் நண்பர் என்னை பதட்டத்தோடு அணுகினார்
''ஜேசீ இன்னைக்கு ஆஃபிஸ் போறீங்களா? சாந்தோம்லதான உங்க ஆஃபிஸ்? என்னைய அடையாறில் ட்ராப் செய்யமுடியுமா?
ஏன் சார் என்னாச்சு...எதுக்கு இவ்வளவு டென்சன்?
''இல்ல...வந்து இன்னைக்கி என்னோட ஜென்மநட்சத்திரம். அதனாலஅடையார் அனந்தபத்மநாபசாமி கோயிலில் போய்அர்ச்சனை செய்யணும்''
''ஓ...உங்களுக்கு பர்த்டேயா...பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...''
''அட அது இல்லையா...அதுஏப்ரல் 26ஆம் தேதி...இது வந்து நட்சத்திரநாள்...எங்களுக்கு நட்சத்திரம் தான் முக்கியம்''
''சரி...கோயில்அடையாறில் எங்கே இருக்கு?''
கேட்டதற்கு காரணம் இருக்கிறது.  மெயின்ரோட்டில்   என்றால் இறக்கி விட்டுட்டு நாமபாட்டுக்கு போயிடலாம். உள்ளே என்றால் ஒருவழிப்பாதை என்றும் நோஎன்ட்ரி என்றும் பல்வேறு விடைகாணஇயலா புதிர்கள் நிரம்பிய Maze என்பார்களே அதுமாதிரியான மாயவலைஅது.
என்னது...கோயில்தெரியாதா? காந்திநகர்ல இருக்கே...ரொம்பஃபேமசான டெம்ப்லாச்சே அது...இதுகூடவா தெரியாது'' நண்பர்வியப்பில்ஆழ்ந்தார்.
''காந்திநகர்ல க்ராண்ட்ஸ்வீட்ஸ் தெரியும்... பொருளுக்கு பணம் கட்டிவிட்டு காத்திருக்கையில் சூடான பொங்கலோ சுவையான சுண்டலோ தருவார்கள். இரண்டுமுறை சாப்பிட்டிருக்கிறேன்...ஆனால் கோயிலை நான் பாக்கலையே''
''அங்கேயிருந்து நேரே போனா....மலர் ஹாஸ்பிடல் வருமே''  நண்பர்.
தெரியுமே...2010 நவம்பர் மாதம் போயிருந்தேனே... நண்பர் கிஷோர் அட்மிட் ஆயிருந்தார் .சைலஜா என்னும் மலையாளி நர்ஸ்தான் அவருக்கு ஈசிஜி எடுத்தார் .அவருக்கு இடதுகையில் ஆறுவிரல் இருந்தது. வலதுகை மோதிரவிரலில் பவளம்பதித்த மோதிரம் போட்டிருந்தார். இடதுகால் சாக்ஸ் கொஞ்சம் கிழிந்திருந்தது...ஊர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரி...பத்மனாபசாமி கோயிலை நான் பாக்கலையே...!
க்ராண்ஸ் ஸ்வீட்டுக்கும் மலர் ஹாஸ்பிடலுக்கும் நடுவிலே தான் கோயில்இருக்கு...அடக்கடவுளே...  மாமிமட்டும் என் வண்டியில் ப்யூட்டிபார்லர் போகாம இருந்திருந்தா நானே போயிருப்பேன்... இப்போ வர்றீங்களா இல்லையா?
டென்சன்  ஆகாதீங்க சார்...லெஸ் டென்சன் மோர் வொர்க்...மோர் டென்சன் லெஸ்வொர்க்...வாங்கபோகலாம்'' என்றேன்.

எனக்கு இந்த மாதிரி அசாதாரணமான சூழலில் தான் கோயிலுக்கு போகும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. போனால் செருப்பு தொலைந்து போகும் அபாயம் இருப்பதை (Murphy's law) அனுபவஅறிவு தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. கடந்தமுறை ஐய்யப்பன்கோயிலில் என் செருப்பு    (எண் - 8) தொலைந்து போனதும் புதுசெருப்பு காதிம்ஸில் வாங்கினேன் (விலை 15% கழிவுபோக ரூ.819). அதை தொலைக்க மனமில்லை. இருப்பினும் நண்பருக்கு உதவவே வண்டியை கிளப்பினேன். கோயில் அவர் சொன்ன மாதிரி க்ராண்ஸ் ஸ்வீட்டுக்கும் மலர் ஹாஸ்பிடலுக்கும் நடுவிலே தான் கோயில் இருந்தது.
ஜேசீ...நீங்களும்வாங்களேன்...ரொம்ப சக்தி வாய்ந்த கோயில்...''

கோயில், மருத்துவமனை, குழந்தைகள் இருக்கும் வீடு, பெரியவர்கள் இருக்கும் வீட்டிற்கு போகும் போது வெறும்கையுடன் போகக்கூடாது என எனது பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன் சமீபத்தில் தான் அறிவுறுத்தியிருந்தார்.

நண்பரிடமே கேட்டேன் '' சார்..பெருமாளுக்குஎன்னபிடிக்கும்?''
''பெருமாள்அலங்காரப்பிரியர்...துளசி அல்லது தாமரை ஏதாவது வாங்கிக்கங்க...என்று என்னை சொல்லிவிட்டு அவர் அர்ச்சனை செட், தாமரைப்பூமாலை, ஒரு நெய்டப்பா என்று என்னென்னவோ வாங்கினார்.
நான் துளசிமாலை மட்டும் வாங்கினேன் (விலை ரூ.20)
கோயில் அதிநவீனமாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் சன்னிதி. நண்பர் பிள்ளையாரை கண்டுகொள்ளாமல் பெருமாளை நோக்கி விரைந்தார். பத்மநாபசாமி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்க அவருக்கு கீழே பூதேவி சீதேவி இருவரும் வீற்றிருக்க பெருமாளின் வலதுகரம் சிவலிங்கத்தை தொட்டபடி இருந்ததைக் காணமுடிந்தது.
அவரது  மேனி  முழுக்க தாமரைமலர்களாலும் சம்பங்கிமாலைகளாலும் துளசிஇலைகளாலும் மிகநேர்த்தியாக ஒருதேர்ந்த இசைக்கலைஞனின் தொகுக்கப்பட்ட இசைக்குறிப்புகள் போல் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டிருந்தன.  இது போன்ற அலங்காரம் செய்த பெருமாளை பார்த்துதான் ''பச்சைமாமலை போல்மேனி; பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா அமரரே..ஆயர்தம் கொழுந்தே...இச்சுவை ஞான்பெறினும்; இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டே அரங்கமா நகருளானே'' என ஆழ்வார் பாடியிருக்க வேண்டும்.
சன்னிதிக்கு நேரே மூன்றுவரிசை படிக்கட்டுக்கள் அமைக்கப்ப்ட்டிருந்தது. பக்தர்கள் அமர்ந்து தியானித்து கொண்டிருந்தனர். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டும் போது முகத்திற்கும், மார்பிற்க்கும் பின்பு பாதத்திற்கும் காட்டப்பட்டது. பாதத்தை பார்க்கும் போது நண்பர் பரவசம் அடைந்தார். திரும்பி வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னிதி,  அடுத்து லக்ஷ்மி நரசிம்மர் சன்னிதி. அதற்கு எதிரே அரசமரம் சிவன்சன்னிதி என்று ஒரு போர்டு .நான் நண்பரை அங்கே துரத்தலாமா என்று யோசித்து பின்பு அதை கைவிட்டேன். பிள்ளையாரையே கைவிட்டவர் சிவனை என்ன செய்வார் என்று எண்ணி எடுத்த முடிவு அது.
ஆனால் நண்பரோ...ஜேசீ...நீங்க வேணும்னா போயி சிவன் சன்னிதியை பாத்துட்டு வாங்களேன்...நான் அங்கே வரமாட்டேன்'' என்றார் நண்பர்,
ஏன்...சார்'' என்றேன் நான் பரிதாபமாக...
நாங்கள் தீவிர வைணவர்கள்...எங்கள் வைணவ சம்பிரதாயத்தில் பெருமாளுக்குள்ளேயே எல்லாம் அடக்கம்...நீங்கபோயிட்டுவாங்க''
என்னடா...இது மதுரைக்கு வந்த சோதனை சரி வந்தது வந்தோம் அந்த மனிதனையும் பாத்துட்டு போவோமே என்று சென்றேன். மிக எளிமையான சன்னிதி. சிவலிங்கத்திற்கு மேலே ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சொட்டுசொட்டாக தீர்த்தம் வடிந்து சிவலிங்கத்திற்கு அபிசேகம் நடந்து கொண்டிருந்தது. அருகிலிருந்த பக்தர் ஒருவர் ''சார்..நீங்களும் கொஞ்சம் அந்த குழாய்ல தண்ணி பிடிச்சு ஊத்துங்க சார்'' என்றார்.
நானும் கொஞ்சம் தண்ணீர் பிடித்து ஊற்றினேன். அதற்குள் நண்பர் வெளியே வந்து கொடிமரத்தை வணங்கி பிரசாத வரிசையில் முண்ணனியில் நின்று கொண்டிருந்தார். அந்த வரிசையில் நின்றால் நான் அலுவலகம் போய் சேரமுடியாது என்ற காரணத்தினாலும் புதுசெருப்பு என்னவானது என்ற பதட்டத்தினாலும் வாசலை நோக்கி விரைந்தேன். நண்பர் ஆட்டோ பிடித்து செல்வதாக ஏற்பாடு.
நான் வண்டியை எடுக்க பூக்கடைக்கு வந்தேன். பிச்சைக்காரர்கள் வரிசையாய் அமர்ந்திருக்க எனது தற்போதைய கொள்கைப்படி ஆளுக்கு பத்துரூபாய் கொடுத்தேன்.  (இரண்டு வேளை அம்மா உணவகத்தில் சாப்பிட வழிசெய்யும் உபாயம்). பிளாட்ஃபாரத்தில் உக்காந்திருந்த இரண்டு வயது குழந்தை ஒன்று ''என்..கு..என்..கு'' என்று ஓடிவந்தது. கரியநிறமாய் இருந்தாலும் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் வனப்பு.. எண்ணெயைப் பார்த்தே இராத தலைமுடி... கன்னத்தில் திருஷ்டிபொட்டு ...இடுப்பில் சிகப்பு அரைஞாண் கயிறு மட்டும்...துணி இல்லை... கண்களில் குறும்பு கலந்த சிரிப்பு..  .கையில் எப்போதோ யாரோ கொடுத்த லாலிப்பாப். சிறுகுழந்தை என்று எண்ணி இருபது ரூபாயை கொடுத்தேன். இப்போது குழந்தையின் கண்களில் வெற்றிப் புன்னகை. அடுத்த விநாடியே அது மறைந்து பணத்தை என்ன செய்வதென்று தெரியாத வியப்பு கலந்த பார்வை. திடீரென எங்கிருந்தோ முளைத்த ஒரு கரியகரம் அந்த பணத்தை பிடுங்கியது. பணத்தை பறி கொடுத்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. அந்த நபர் கீழேயிருந்த தனது துண்டை எடுத்து நிமிர்ந்த வேளையில் மற்றொரு கரம் அவர் கன்னத்தை தாக்கியது. அடிவாங்கியது அவர் என்றாலும் பொறி கலங்கியது போலிருந்தது எனக்கு.
குடிகார...நாயே...பச்சப்புள்ளகிட்டயிருந்து பணத்த புடுங்கற...குடுறா பணத்தை....''   அந்த நபர் பாதுகாப்பிற்காக வந்த தலைமை காவலர்.
சார்...நான் வேணும்னா அந்த குழந்தைக்கு பணம் கொடுத்துறேன் சார்...என்றேன் நான்.
அவரோ '' நீங்க போங்க சார்...இவனெல்லாம் உயிரோட விடக் கூடாது..குடிகார நாயி.''
அந்த நபர் துளியும் சலனமில்லாமல் இருபது ரூபாயை தூக்கி தலைமைக் காவலரிடம் கொடுத்து விட்டு சாலையின் எதிர்திசையை நோக்கி நடந்தார். இரண்டடி எடுத்து வைத்துவிட்டு அந்த பூக்காரியை நோக்கி ''ம்ம்...நீயெல்லாம்ஒருபொண்டாட்டி...தூ...'' துப்பிய எச்சில் வெயிலில் தகித்துக் கொண்டிருந்த தார்ச்சாலையின் மத்தியிலே போய் விழுந்தது.
''ஆமாமா...ஊரறிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தபாரு'' குரல் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பினேன். குனிந்தபடி பூக்கட்டி கொண்டிருந்த பெண்மணி துளியும் பதட்டப்படாமல் பூக்கட்டும் நேர்த்தியிலேயே வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.
"குழந்தைக்கு பேரு என்னம்மா?
'' மணிமேகலை''
அடடா...கோவலன் & மாதவியின் புனிதப்படைப்பு. பொருத்தமான பெயர் தான். அமுதசுரபி கொண்டு இப்புவியில் பசிப்பிணி போக்கிய  கதாபாத்திரம் இன்று கையேந்தி நின்று கொண்டிருக்கிறது. அடுத்தமுறை அடையாறு பத்மனாபசாமி கோயிலுக்கு போகும் போது பெருமாளுக்கு துளசி வாங்குகிறேனோ இல்லையோ இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளும் ஒரு சிலேட்டும் இரண்டு பலப்பமும் மணிமேகலைக்கு வாங்கி கொண்டு போக வேண்டும்.


Tuesday, April 19, 2016

வீடு திரும்புதல்: 31 Aug'15

பாங்காங் சுவர்ண பூமி விமான நிலையத்தில் 10மணி நேரம் காத்திருப்புக்கு பின் தாய்தமிழகம் திரும்பினேன். வெளிநாட்டு விமான நிலையங்களில் காத்திருப்பது போன்ற ஒரு கொடுமையான விடயம் வேறொன்றும் இல்லை. நான் இருந்த வாசலில் இருந்து எனது விமானத்திற்கு செல்லும் வாசல் 960மீட்டர் தூரத்தில் இருந்தது. அதாவது சுமார் ஒரு கிலோ மீட்டர். அது விமான நிலையம் மட்டுமல்ல., பெரும் வணிக வளாகமும் கூட. அனைத்து பொருள்களும் மிக மலிவான விலையில் கிடைத்தன. ஒரு காபியின் விலை 280ரூ. மற்றவற்றை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். இந்தியப் பயணிகள் ஸ்காட்ச் விஸ்கி வாங்குவதிலும் ஐரோப்பிய பயணிகள் வாசனை திரவியங்கள் வாங்குவதிலும் பேரார்வம் கொண்டிருந்தனர். நான் இரண்டுமே வாங்கவில்லை போதுமான அளவு பணமிருந்தும். குடிப்பதில்லை என்பதால் ஸ்காச் விஸ்கியும் குளிப்பதால் வாசனை திரவியங்களும் தேவைப்பட வில்லை.
களைத்துப்போய் காத்திருந்த வேலையில் விமானம் தாமதம் என்னும் செய்தி வந்தது. இந்த தகவலை எவ்வாறு என் மனைவிக்கு தெரிவிப்பது என்று குழம்பியிருந்தேன். மொபைல் போனில் வைஃபை இணைப்பை ஏற்படுத்த முயற்சித்து தோற்றுப்போனேன். இரண்டாம் தளத்தில் இலவச இணைய வசதி இருப்பதை கேள்விப்பட்டு விரைந்து ஓடினேன். முகனூல் பக்கத்தை திறந்து நண்பர்கள் யாரேனும் இணைப்பில் உள்ளனரா என்று தேடினேன். கவிஞர். சல்மா மட்டும் இருந்தார். அவருக்கு தகவல் தந்து மனைவியிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு விமானம் ஏறினேன்.
கவிஞர். சல்மா என் மனைவியை அழைத்து தகவலை தெரிவித்து விட்டார்... எனவே என் மனைவி பதட்டமில்லாமல் காத்திருந்தார். வீடு திரும்பினேன்...!

தாய்லாந்தில் தமிழ்பெயர்:2 Aug 31, 2015 11:59am

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 நான் பாங்காகிலிருந்து சென்னை வந்த விமானத்தின் தலைமை பணிப்பெண்ணின் பெயர் ''விலையில்ரத்னா". வயது தோராயமாக 50 இருக்கலாம். இவருக்காவது அவர் பெயரின் பொருள் தெரியுமா என ஆர்வ உந்துதலால் அவரிடமே வினவினேன். மிகத் தெளிவாக ''விலைமதிக்க முடியாத அரிய வகை பொக்கிஷம்'' என்றார். இது தமிழ்ப்பெயர் தெரியுமா உங்களுக்கு என்றேன். பொறுமையாக சொன்னார். ''இந்த பிராந்தியத்தில் தமிழையும் எங்களையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான ஊர்ப்பெயர்கள், பொருட்பெயர்கள் தமிழில் உள்ளன. நாங்கள் தமிழ் பேச முடியாதவர்கள். ஆனால் எங்களையும் மீறி தமிழ் எங்களோடு சேர்ந்து பயணிக்கிறது'' என்றார். நண்பர் ஒரிசா பாலு தமிழ் மொழியின் தாக்கம்     தமிழர்களின் கடல்பயணங்களின் வாயிலாக சர்வதேச அளவில் எந்த அளவிற்கு பரவியுள்ளது குறித்து விரிந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். ஆய்வுக்குரிய பல்வேறு தகவல்களின் களஞ்சியம் அவர். நண்பர்கள் அவரது ஆய்வுக்குறிப்புகளை இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

தாய்லாந்தில் தமிழ்பெயர்:1 .26 ஆக'15

status.26 ஆக'15
தாய்லாந்தில் தமிழ்பெயர்:1
இன்று யாங்கூனிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் பாங்காக் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். விமானத்தில் எனக்கு காலை உணவு தந்து உபசரித்த பெண்ணின் பெயரை உற்று நோக்கினேன். வியந்து போனேன் அந்த பெண்ணின் பெயர் ''பொதிகை''. உங்கள் பெயருக்கு பொருள் தெரியுமா என அந்தப் பெண்ணிடம் கேட்டேன். '' அதெல்லாம் தெரியாது சார்... இது எங்க அப்பத்தாவின் (தகப்பனாரின் தாயார்)பெயர்'' என்றார். தாய்லாந்தில் தமிழ்ப்பெயர். தமிழ் நாட்டில் மோனிகா, யாஷிகா, என்று ஏதேதோ பெயர்கள். தமிழாராய்ச்சியில் தலைப்பு கிடைக்காமல் திண்டாடுவோர் ''தாய்லாந்தில் தமிழ்ப்பெயர்கள்'' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்யலாம். தலைப்புக்கான சேவைக்கட்டணம்* செலுத்தினால் போதுமானது. விமானத்திலிருந்து விடைபெறும் போது வாயிலில் நின்று எல்லோருக்கும் நன்றி சொன்ன அவள் எனக்கு மட்டும் சிறப்பு புன்னகை ஒன்றை பரிசளித்தாள்.
(*சேவைக்கட்டணம் முன்னறிவிப்பின்றி மாறுதலுக்கு உட்பட்டது)

எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம்:


மேலாளரின் கேள்வி: உங்கள் பெயர் என்ன?
எனது பதில்: அது இங்கே தான் எங்கேயாவது இருக்கும். வேறு ஏதாவது முக்கியமானதா இருந்தா கேளுங்க...
மேலாளரின் கேள்வி: இந்த அளவிற்கு திமிரை எங்கள் நிறுவனம் பொறுத்துக் கொள்ளாது
எனது பதில்: நானும் அப்படித்தான் ஐயா, அற்பத்தனமான கேள்விகளை என்னாலும் பொறுத்துக்கொள்ள இயலாது.
(அருகே இருந்த தலைமை நிர்வாக அதிகாரி என்னை உடனடியாக தேர்வு செய்தார்)

நவராத்திரி: பதிவிட்டது: Oct 19, 2015 12:44pm

ஞாயிற்றுகிழமை அன்று கொலு பார்க்க வருமாறு நண்பர் வேண்டுகோள் விடுத்தார். வந்தால் எனது மனைவிக்கு ஜாக்கெட் துணியுடன் கூடிய தாம்பூலமும் எனக்கு சுண்டலும் கிடைக்கும் என்றார். நண்பரின் மனைவி செய்யும் சக்கரை பொங்கல் பிரசித்தமானது. பதமாக வடிக்கப்பட்ட பச்சரிசி சாதத்தில் இரண்டு மடங்கு வெல்லமும் அளவாக நெய்யும் ஆங்காங்கே தென்படும் வறுத்த முந்திரிப்பருப்புடன் கூடிய சர்க்கரைப் பொங்கலை சுவைப்பது ஒரு தனி அனுபவம். சூடாக இருப்பின் கூடுதல் சிறப்பு.  மெனுவை மாற்றி சுண்டலுக்கு பதில் சக்கரை பொங்கல் செய்ய இயலுமா என்றேன். பொங்கல் சனிக்கிழமை செய்யப்பட்டதால் சுண்டல் என்பதில் மாற்றமில்லை என்றார். சரி போவோம் என்று மனைவி மகன் என குடும்பமாக சென்றேன். நண்பர் வரவேற்று கொலுவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அம்பாள் இந்த ஒன்பது நாட்களும் மற்ற தெய்வங்களின் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு பரிபூரண சக்தியாக பத்தாம் நாள் விஜயதசமி அன்று மகிசாசுரனை வதம் செய்தாள் என்கிறது புராணம். கதை நன்றாக இருந்தது. கற்பூர ஆராதனை முடிந்தவுடன் சுண்டல் வழங்கப்படும் என்றார். கற்பூரம் கொழுத்தப்படும் நேரம். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. நண்பரின் மனைவி என்ன இது அபசகுனம் என்றார். நான் தான் கதவை திறந்தேன். பச்சை பட்டுப்பாவாடை சட்டையுடன் ஒரு நான்கு வயது குட்டி தேவதை நின்று கொண்டிருந்தாள். பளீரென்று உடை உடுத்தி காண்போரை ஒரு கணம் சுண்டியிழுக்கும் தோற்றம். காதுகளுடன் மௌன மொழியில் தொடர்ந்து பேசும் ஜிமிக்கி. சிரிக்கும் பொழுது ஒரு மின்னல் ஜிமிக்கியில் பட்டுத் தெறித்து ஒடியது. நான் சுய நினைவிற்கு வருவதற்குள் நண்பர் வந்து விட்டார்.                                                                                       நண்பர் ''சுபத்ரா.... சாட்சாத் அம்பிகையே வந்திருக்காடீ...வந்து பாரு...''  என்றார். நண்பர் மனைவியை முழுப்பெயர் சொல்லி அழைப்பது கடும் கோபத்திலும் காதலிலும் மட்டுமே. இல்லையெனில் வெறும் சுபா மட்டுமே. இது காதலா கோபமா என அறியாத சுபா மாமி பதறி ஓடிவந்தார். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழந்தை விழித்தது. நண்பரோ அம்பிகையின் காதணி பௌர்ணமி நிலவானதைக் கண்ட அபிராமி பட்டர் போன்று உணர்ச்சி பிழம்பாக இருந்தார். நான் தான் அந்த குட்டி தேவதையிடம் பேசினேன்.
''என்னம்மா வேணும்... நீங்க யாரு?
''கேஸ் ஸ்டவ் லைட்டர் வேலை செய்யலை...அம்மா தீப்பெட்டி வாங்கிட்டு வரச் சொன்னாங்க''
(நண்பரின் வீட்டிற்கு மேல்தளத்தில் புதிதாக குடிவந்த குடும்பம் என புரிந்தது)
''உங்க பேர் என்ன?''
''மௌஷ்மி'' என்றாள்.
சுபா மாமி தீப்பெட்டி எடுத்து கொடுக்க நண்பரோ ''அம்பாள்...பாயம்மா ரூபத்துல வந்துருக்கா சார்'' என்றார்.
சுண்டல் பரிமாறப் பட்டது. நாவில் நிற்கும் சுவை. எனது மகனும் நன்கு சாப்பிட்டான். எனது மனைவிக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது. விடைபெறும் முன் சுபா மாமி கேட்டாள் ''ஜேசீ சுண்டல் நல்லாயிருந்ததா?''
''ஏன் நல்லா இருந்துச்சே...அப்பு கூட நல்லா சாப்பிட்டானே'' என்றேன். (அப்பு என் மகனின் செல்லப்பெயர்)
''இல்ல...இப்போ தான் நான் சாப்பிட்டு பார்த்தேன்...உப்பு போட மறந்துட்டேன்'' என்றார்.
எல்லாம் அம்பிகையின் (மௌஷ்மியின்) கைங்கர்யம்.

மழையோடு வாழ்தல்: பதிவிட்டது: Nov 21, 2015 11:29am


காலையில் போரூரில் இருக்கும் எனது இல்லத்திலிருந்து கிளம்பி சாந்தோம் நெடுஞ்சாலையில் இருக்கும் எனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். கிண்டி ரயில் நிலையம் அருகில் வந்ததும் பெரும் தூறல் விழ ஆரம்பித்தது. தலைக்கு மேலே புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ரயில் பாலம். வண்டியை ஓரமாக நிறுத்தி மழையாடை அணிந்தேன். பாலம் ஏறி ஸ்பிக் அலுவலகம் வந்ததும் மழை இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தேன். வானம் கிண்டி ரயில் நிலையத்தை மட்டும் தனது தூறல்களால் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது....நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!

Monday, April 18, 2016

கி.பி.2254 மாசிக் களரி :




இரண்டாண்டுக்கு ஒருமுறை நிகழும் மாசிக்களரி எங்கள் குலதெய்வ வழிபாடு. இம்முறை ஒரு புதுவித அனுபவத்தை தந்தது. மதுரையிலிருந்து கமுதி, அங்கிருந்து சாயல்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறு கோயில். பகவதி அம்மனும் பரஞ்சோதி அம்மனும் இரு கன்னி தெய்வங்களாக வீற்றிருக்க, அவர்களுக்கும் அந்த இரு அம்மன்களின் வாரிசுகளான எங்களுக்கும் காவலாக தொட்டிச்சி, குப்பச்சி தொடங்கி செந்தளையன், மாசானக்கருப்பு ஈராக 18 காவல் தெய்வங்களும் உள்ள கோயில். மாசி அமாவாசைக்கு அடுத்த நாள் இவர்களை குலதெய்வமாகக் கொண்ட அனைத்து மக்களும் அந்த பிராந்தியத்தில் கூட நானும் எனது மனைவியும் மகனும் இணைந்து கொண்டோம். நண்பகல் சுமார் 12.30 மணியளவில் மாசானக்கருப்பு களரி ஆட கலுமரத்தை நோக்கி முழு உக்கிரத்துடன் ஓடிவர அதற்கென பிரத்தியேக வாத்தியங்கள் முழக்கப்பட்டன. ஒட்டு மொத்த பிராந்தியமே ஒரு சிதறுண்ட மனநிலையில் பித்து நிலையில் இருந்தது. எத்தனையோ ஆண்டுகளாக பார்த்து வரும் எனக்கு இந்த முறை அந்த வாத்தியக்கருவிகளில் இசையில் என் மனம் பேதலிக்கத் துவங்கியதை உணர்ந்தேன். ஒரு முப்பது நிமிடம் நானும் அந்த பரவச நிலையில் ஆழ்ந்திருக்க களரி ஆடிய மாசானக்கருப்பு பேய் பிடித்தவர்களை பேயோட்டத் துவங்கியது. வழக்கதிற்கு மாறாக, இம்முறை பல பெண் பேய்கள் சுடிதார் அணிந்து சவுக்கடி வாங்கின. சவுக்கின் சுழற்றலுக்கு பேய்கள் சிதறி ஓடின. நானும் களரி ஆட முடியுமா என்று அங்கிருந்த ஒரு பெரிசிடம்* கேட்டேன். என் பூர்விகத்தை கேட்டபின்பு அவர் ஒரு கணக்கு போட்டு 236ஆண்டுகள் கழித்து களரி ஆடும் முறை எங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றார். ஒவ்வொருமுறை பணி பொருட்டு இந்த தேசத்தை விட்டு அன்னிய தேசப் பயணம் மேற்கொள்ளும் போதும் எனது தந்தையார் சொல்லும் வார்த்தை ''தைரியமா போய்ட்டு வாப்பா...நீ போறதுக்கு முன்னாடி நம்ம மாசானகருப்பு அங்க நிக்கும்''. ஒட்டுமொத்த குடிமை சமூகமும் பாதுகாப்பற்ற சூழலில் வசிக்கும் புர்க்கின ஃபாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க தேசத்திலும், கேளிக்கை அலைமோதும் தாய்லாந்திலும், அமைதி தவழும் மயான்மரிலும் மாசானக் கருப்பு என்னோடு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். 236 ஆண்டுகள் கழித்து அதாகப்பட்டது கி.பி 2254ஆம் வருடத்தில் நான் உயிரோடிருக்க மாட்டேன். ஆனால் என் வாரிசுகளோடு மாசானக் கருப்பு மட்டும் எப்போதும் இருக்கும்.
(*பெரியவர் என்றும் பாடம்)

அஞ்சப்பரும் ஆண்டவனும்:17-04-2016


ஞாயிற்றுகிழமை சென்னை நகரம் அனல் காற்றில் அவிந்து கொண்டிருக்க, அடுக்களைக்குள் புகப்பயந்த இல்லத்தரசிகள் மதிய உணவிற்காக அஞ்சப்பர் உணவகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மனைவி இருந்தும் தனித்து விடப்பட்ட நானும், மனைவியே இன்னும் அமையாத என் மைத்துனனும் அந்த ஜோதியில் கலந்தோம். பிரியாணியும் மட்டன் சுக்கா வருவலும் வரக் காத்திருந்தோம். வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகம் இருந்தாலும் அமைதியும் அதிகம் இருந்தது. உணவகத்தை குறைந்த ஒளியும் ரம்மியமான இசையும் இளங்குளிரும் நிறைத்திருந்தன. பார்சல் பிரிவை நோக்கி ஒரு பெரியவர் வியர்த்து நனைந்த சட்டையோடு உள்ளே நுழைந்து ''இரண்டு மட்டன் பிரியாணி பார்சல் கொடுங்க'' என்றார்.
''முன்னூற்றி எழுபது ரூபாய் கொடுங்க'' - இது ஓட்டல் சிப்பந்தி.
''முன்னூற்றி எழுபது ரூபாயா....ஆ'' ஒண்ணு எவ்வளவுங்க?
ஒரு பிரியாணி 185 ரூபாய்...பில் போடவா...வேணாமா?
ஒரு பிரியாணிய ரெண்டு பேரு சாப்பிட முடியுமாய்யா?
ஏங்க...என்னங்க பேச்சு இது...உங்க வீட்டு ஆளுங்க யாரு...அவங்க எவ்வளவு சாப்பிடுவாங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?
ரெண்டும் பிராயத்து பிள்ளைக இல்லய்யா...சின்னதுக...12 வயசு...அப்பறம் 10 வயசு...
அதெல்லாம் எனக்கு தெரியாது...பில் போடவா...வேணாமா...'' குரலை உயர்த்தினார் சிப்பந்தி.
ஐயா..எங்கிட்ட 230ரூவா இருக்கு...ஒரு பிரியாணியும் மீதி ஐம்பது ரூவாய்க்கு வெறும் பிரியாணி சோறும் தர முடியுமாய்யா''
ஏங்க... இது ஓட்டலுங்க...காய்கறி கடையா என்ன...மிச்சம் இருக்குற சில்லறைக்கு பச்சமொளகா குடுக்க...
''சரிய்யா...ஒண்ணே ஒண்ணு கொடுங்க...''
நாங்கள் பிரியாணியை காலி பண்ணிவிட்டு பின் வெண்சோறு வாங்கி ரசமும் மோரும் கலந்து சாப்பிடும் வரை பெரியவர் உணவகத்தின் வாசலில் யோசனையோடு நின்று கொண்டிருந்தார். கைகழுவி விட்டு வரும் போது மறைந்திருந்தார்.
வயிறு நிறைந்திருந்தாலும் மனம் நிறையவில்லை. ஒரே சிந்தனையாகவே இருந்தது. அந்த பிரியாணிக்காக அவர் வீட்டில் காத்திருக்கும் அந்த குழந்தைகளின் ஏக்கம் நிறைந்த கண்கள் நிழலாடின. அவர் அதை எப்படி பகிர்ந்து கொடுப்பார்? ஒருவேளை அந்த குழந்தைகள் இன்னும் வேண்டுமென்றால் என்ன பதில் சொல்லுவார்? விரக்தி கோபமாய் மாறினால் அவர்களை அடிப்பாரோ? ச்சே...!
வெளியே நகரம் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்த மாதிரி மனசும் தகித்துக்கொண்டிருந்தது...
அருகில் இருந்த தேநீர் கடையில் இருந்து ஜேசுதாஸ் குழந்தைகளுடன் பாடிக் கொண்டிருந்தார்.
'இறைவன் உலகத்தைப் படைத்தானாம்!
ஏழ்மையை அவன் தான் படைத்தானாம்!
ஏழ்மையை படைத்தது அவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?''
ஆமாம்...எதற்காக?

Thursday, April 14, 2016

தனிமையும் தயிர்சாதமும்:


ஒரு ஆண்டில் இந்த தேசம் எத்தனை பருவமாற்றங்களை சந்திக்கிறதோ அதைவிட அதிகமான பருவமாற்றங்களை எனது வாழ்க்கை சந்திக்கிறது. ஒரே ஆண்டில் கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம் ஆகவும், சராசரி குடும்பஸ்தனாகவும், வெளிநாடுகளில் அதிநவீன ஐந்து நட்சித்திர   விடுதியில் தங்கி ஒரு மகாராஜா போன்ற வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் அமையும் எனது ராசிக்கட்டத்தை ஆராய விருப்பமுடையோர் என்னை சுயவிலாசமிட்ட ஐந்து ரூபாய் தபால்தலை ஒட்டிய தபால் உறையுடன் அணுகலாம். எனது மகனின் ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாள் மனைவியும் மகனும் மதுரை சென்று விட்டனர். தனிமை எனக்கு புதிதல்ல. எனது 20வயது முதல் 30வயது வரை அதுவே என் வாழ்க்கை முறை. ஆனால் திருமணத்திற்கு பின் அதுவே கொடுமையானது. துன்பத்தின் சுவடு படியாத இன்பம் கிடையாது என்பார் கண்ணதாசன். இந்த இரண்டு மாத துன்பத்திற்கு பின் எனக்கு கிடைக்கும் இன்பம் அலாதியானது. பிரச்சினை ஒன்றே ஒன்று தான் உணவு. மனைவி இருந்தவரை அதுவொரு விடயமே இல்லை. ஆனால் சென்னை போன்ற பெருநகரத்தில் இதுவொரு வினோதமான பிரச்சினை. நடுத்தரமான உணவகங்களில் கூட மதியஉணவின் விலை ரூ.80லிருந்து ரூ.90வரை. பணம் ஒரு பொருட்டல்ல என்ற போதும் ஆரோக்கியத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழல். தர்மம் தலைகாக்கும் என்பார்கள்., தலையை காக்குதோ இல்லையோ வயிற்றை காக்கும் என்பது என் அனுபவம். மனைவியும் மகனும் கோடை விடுமுறைக்காக பிரியும் தருணம் நான் ஆப்பிரிக்காவின் கென்யதேசம் சென்றிருந்தேன். அலுவலகம் திரும்பியவுடன் எனது மதியஉணவுப் பிரச்சினையை நண்பர் சங்கரநாராயணன் ஏற்றுக்கொண்டார். சில உடற்கூறு பிரச்சினை காரணமாக அவர் மதிய உணவாக தயிர்சாதம் மட்டுமே எடுத்துக் கொள்வார். அவரோடு சேர்த்து எனக்கும் எடுத்துவரத் தொடங்கினார். மாதுளை முத்துக்களும் பச்சை திராட்சையும் அளவிடற்கரிய அன்பும் கலந்து திருமதி. சங்கரநாராயணன் செய்யும் தயிர்சாதத்தை உண்பது ஒரு பேரனுபவம். கொளுத்தும் சென்னை வெயிலில் அந்த தயிர்சாதம் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர குளிரவைக்கும் ஆற்றல் பெற்றது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பார் அய்யன் வள்ளுவர். வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கும் வாழும் உயிர்களுக்கெல்லாம் என்பான் பாரதி. இவ்வாறு சோறிடும் இருவருக்கும் என்ன கைமாறு செய்வதன்று திருவள்ளுவரும் பாரதியும் எனக்கு சொல்லத்தரவில்லை. எனவே, வளர்ந்து பெரியாளான பின்பு திருமதி. சங்கர நாராயணனுக்கு மாம்பழ வண்ண பட்டுப்புடவையும் திரு. சங்கர நாராயணனுக்கு பச்சைப்பட்டு அங்கவஸ்திரமும் எடுத்துத்தர உத்தேசித்திருக்கிறேன்.

Tuesday, April 12, 2016

காதல் திருமணமும் லெக் பீஸ் பிரியாணியும்: 11-04-2016








இன்று என்னுடன் பணிபுரியும் சகோ. எட்வின் அவர்களின் தம்பியின் திருமணம். அழைப்பிதழை பிரித்துப் பார்த்தவுடனேயே நான் இதில் பங்கு கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்,. மணமகன் - ராபின்சன்; மணமகள் - வைஷ்ணவி...புரிஞ்சிருக்குமே...அதே தான். சாதிமறுப்பு மட்டுமல்ல...மத மறுப்பு திருமணமும் கூட. இதை தவறவிட்டால் மிகப்பெரும் வரலாற்றுப்பிழையாகி விடும். மேலும் விருந்தினர்களுக்கு கோழி பிரியாணியும் பன் அல்வாவும் வழங்கப்படும் என்று எட்வின் அளித்த உத்திரவாதம் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்தியது. அழைப்பிதலில் 7மணி என்று குறிப்பிட்டிருந்ததால் சரியான நேரத்திற்கு நாங்கள் சென்று விட்டோம். மணமகன் மட்டும் தேவாலயத்திலிருந்து சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார். மணமகள் நவீன தமிழ்த் திருமண மரபுப்படி ப்யூட்டி பார்லரிலிருந்து நேரடியாக அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். புகைப்படம் எடுக்கும் சடங்கு தொடங்கியது. நண்பர்கள் மொய்கவரைக் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்தனர். நானோ, முதல் பந்தியில் அமர்வதில் உள்ள அவசியத்தையும் மேலும் கீழுமாக கனலில் வெந்த கோழி பிரியாணியை மூடியைத் திறந்தவுடன் ஆவி பறக்க உண்பதின் முக்கியத்துவத்தை சுருக்கமாக எடுத்துரைத்து அவர்களை பந்தியை நோக்கி ஓட்டினேன். எங்களைப் போன்று ஒத்த சிந்தனை கொண்ட நூறு பேரால் பந்தி ஏற்கனவே நிரம்பியிருந்தது. சோகத்துடன் காத்திருந்து இரண்டாம் பந்தியில் அமர்ந்தோம். முதல் பந்தியை தவற விட்ட சோகத்தை எனக்கு கிடைத்த லெக்பீஸ் போக்கியது. இரண்டாம் முறை கொடுத்த பிரியாணியில் மேலும் ஒரு பெரிய கறித்துண்டு நான் உண்ணும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே உண்டேன். பன் அல்வா, கத்தரிக்காய் கூட்டு வெங்காய தயிர் பச்சடி என மெனுவை அமர்க்களப்படுத்தியிருந்தார் எட்வின். தற்கால தமிழ் சமூகச்சூழலில் இது போன்ற காதல் திருமணங்கள் மட்டுமே சேரியையும் அக்ராகாரத்தையும் அழித்து, ஏற்றத்தாழ்வுகளை போக்கி, தீண்டாமையை மாய்த்து புதிய சமூக கட்டமைப்பை ஏற்படுத்தும். இந்த முயற்சியில் தனது பங்களிப்பை நல்கிய மணமக்களை தமிழும் இனிமையும் போல, குறளும் பொருளும் போல, உருதும் கஜலும் போல, ஜென்னும் பட்டாம்பூச்சி போல வாழ வாழ்த்தி விடைபெற்றோம்.
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது
(கஜல் கவிதை பிதாமகர் - மிர்ஜா காலிப்)
சென்னை நகரம் வெம்மையால் தகித்துக் கொண்டிருக்க எங்கள் உள்ளம் மட்டும் குளிர்ச்சியாக...மிக்க மகிழ்ச்சியாக...!

அன்னதானமும் செருப்பும்:


நேற்று மாலை வீட்டிற்கு வந்த வெங்கி அண்ணா தற்கால மருத்துவத்துறையின் போக்குகள் குறித்து விவாதித்த பின் ஞாயிற்றுகிழமை அன்று கரையான்சாவடியில் இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான் அதில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வெங்கி அண்ணா எனக்கு உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர். மறுக்க இயலாமல் ஒப்புக்கொண்டேன். ஞாயிற்றுகிழமை பூஜை முடிந்து சோறு போடும் நேரத்தை சரியாக தெரிந்து கொண்டு கோயில் சென்றடந்தேன்.
கோயிலின் நெடிய மரக்கதவுகள் மூடி இருந்தன. பக்கவாட்டில் இருந்த ஒரு சிறிய கதவை திறந்து கொண்டு வெங்கி அண்ணா என்னை நேராக அன்னதான கூடத்திற்கு அழைத்து சென்றார். முழுக்க முழுக்க கேரள பாணியில் அமைக்கப் பட்டிருந்த கோயில் நிசப்தமாக இருந்தது. ஒவ்வொரு சன்னிதியின் மேற்கூரையும் கேரள பாணியில் ஓடுகள் பதிக்கபட்டு பக்கவாட்டிலிருந்து மேல் நோக்கி எழும்பி சென்றன. கோயிலின் மத்தியில் இருந்த விதானத்தில் இருந்து சூரிய ஒளி கீழ் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. பக்கவாட்டு சுவர்கள் பரப்பும் இருளும் மேலிருந்து கீழ் நோக்கி பாயும் வெளிச்சமும் கூடி முயங்கி, பொருளை சுமக்கும் சொற்களைப் போல கோயில் அமைதியை சுமந்து அமானுஷ்ய சூழலை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் சாப்பாட்டு மேசையில் காத்திருக்க, அன்னதான ஒருங்கிணைப்பாளர் என்னையும் பரிமாறும்படி கேட்டுக் கொண்டார். மூளையின் அடி ஆழத்திலிருந்து இலையை போடு அல்லது அப்பளத்தை போடு (இரண்டுமே எடை குறைவு என்ற கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவு) என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டு எனது வாய்வழியே அது வெளிப்படும் முன் முட்டைகோஸ் கூட்டு நிரம்பிய வாளியும் கரண்டியும் என் கையில் திணிக்கப்பட்டது. சமைத்தலும் அதை நளினமாக பரிமாறுவதும் ஒரு கலை. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட. கூட்டை இலையில் நான் பரிமாறிய அழகைக் கண்ட அன்னதான ஒருங்கிணைப்பாளர் பதறி விட்டார். ''சார்...கொஞ்சமா வைங்க சார்...இன்னும் 200 பேருக்கு வேணும் சார்'' என்றார். இதைக்கண்ட அதிதி ஒருவர் ''இங்கே பாரு...சாமியே குடுத்தாலும்...பூசாரி விட மாட்டேங்குது...நீங்க நல்லா வைங்க தம்பி'' என்றார். அன்னதானம் என்பது நிதானத்தோட செய்யப்பட வேண்டிய ஒன்று என்று உணர்ந்தேன். அந்த பந்தி முழுக்க நானும் வெங்கி அண்ணாவும் இன்ன பிற தன்னார்வ நண்பர்களும் பரிமாறினார்கள். நாங்களும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். மூன்று மாதங்களுக்கு முன் என் மாமனார் எனக்கு வாங்கி கொடுத்த விகேசி ப்ரைடு செருப்பு (எண்-8) களவாடப்பட்டிருந்தது. உள் மனத்திலிருந்து ''ஏதாவது செய்...ஏதாவது செய்...என்ற ஆத்மாநாமின் கவிதை வரிகள் ஒலிக்கத்தொடங்கின. கவிதைவரியின் தீவிரத்தை காலில் பரவிய வெப்பம் திசைதிருப்பியது. உள்ளே சன்னிதிகளில் இருந்த தெய்வங்கள் கையறு நிலையில் என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தன...!

விமானத்தில் உணவும் மதுவும்:


நைரோபியிலிருந்து துபாய்க்கு புதன்கிழமை மதியம் 4.30க்கு கிளம்பிய விமானத்தில் குஜராத்தியரின் கூட்டம். வழக்கம் போல கடைசி இருக்கையை கேட்டு வாங்கிகொண்டேன். பயணசீட்டை முன்பதிவு செய்த முகவர் என் பெயரை உத்தேசித்தோ, எனது நிறுவனத்தின் பெயரை உத்தேசித்தோ இந்து உணவை பதிவு செய்து விட்டார். எல்லோரும் தந்தூரி சிக்கனும் பிரியாணியும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்கு வெண்சோறும் கீரையும் பரிமாறப்பட்டது. பணிப்பெண்ணிடம் இதை மாற்ற முடியுமா என நான் வினவ, அவளோ இது பிரத்யேகமாக எனக்காக கொண்டுவரப்பட்டது என்றும் இதை திரும்ப எடுத்துச்செல்ல முடியாது என்றும் மறுத்து விட்டாள் (அம்மணி லெபனான் தேசத்தை சேர்ந்தவர் பெயர் - ஆயிசா). அதை வாங்கி வைத்துக் கொண்டு ''தேமே'' என்று விழித்துக் கொண்டிருந்தேன். விமானத்தின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த ஒளி உமிழும் நட்சத்திர ஸ்டிக்கர்கள் என்னைப் பார்த்து பரிதாபமாக சிரித்துக் கொண்டிருந்தன (தற்குறிப்பேற்ற அணி...?)ஆனாலும் ஒரு நம்பிக்கை கீற்று தெரிந்தது. எமிரேட்ஸ் நிர்வாகம் எனக்கு ஒரு உணவு கூப்பன் வழங்கி இருந்தது. அதைக் கொண்டு துபாய் விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட 10 உணவகங்களில் சாப்பிட இயலும். ஆனால் ஒரே ஒரு விதி அதை 12மணிக்குள்ளாக பயன்படுத்தப்பட வேண்டும். துபாய் வந்திறங்கிய போது மணி 11.20. நான் இறங்கிய இடத்திலிருந்து டேஸ்ட் ஆஃப் இந்தியா உணவகத்தை அடைய 20 நிமிடம் நடக்க வேண்டும். சுமார் 1.8கி.மீ தூரம். துரிதமாக நடந்தும் கடக்க இயலாத சூழல்...காரணம் கூட்டம்..நெரிசல். உணவகத்தை அடைந்த போது அன்றைய தினம் கோழி பிரியாணியும் சால்னாவும் தயிர் பச்சடியும் சுடச்சுட இருந்தது. வங்களாதேசத்தை சேர்ந்த சகோதரர். ரஷீத் அன்பொழுக பரிமாறினார். சாப்பாட்டுத்தட்டில் அதிகமாக உணவைப் பார்த்துவிட்டால் எனக்கு முகத்திலடித்து விடும். அப்படி ஒரு வியாதி எனக்கு. சிறுகசிறுக பரிமாறப்பட வேண்டும், குறிப்பாக அசைவ வகை உணவுகள். என்னோட சுரையா அத்தை பிரியாணி செய்வதில் வல்லவர். அதைவிடப் பிரமாதமாக எனக்கு பரிமாறுவார். அருகில் நின்று கொண்டு சிறுகசிறுக எடுத்து வைப்பார். சூடான பிரியாணியும் சுகந்தமான மணமும் அதை அன்பொழுக பரிமாறும் அழகும் எனது வாழ்வின் சுகமான தருணங்கள். ரஷீத் அவ்வாறே பரிமாறினார். ''வேணும்கிறத கூச்சப்படாம கேட்டு சாப்பிடுங்க சார்...ஃபிக்சட் அளவு தான் சார் இங்கே...ஆனால் நான் கேக்குற அளவு கொடுப்பேன் சார்...சிலர் கொஞ்சமா சாப்பிடுவாங்க...சிலர் நல்லா சாப்பிடுவாங்க...அட்ஜஸ்ட் ஆயிடும் சார்...நீங்க சாப்பிடுங்க'' என்றார். சாப்பிட்டதும் சென்னை ஃபில்டர் காபி ஒன்றும் கொடுத்தார். இனி நான் முன்பதிவு செய்யும் போது நான் இந்து அல்ல தமிழன் என்பதையும் எனது உணவை பிறர் தீர்மாணிப்பது உரிமை மீறல் என்றும் முகவரை அறிவுறுத்தி நல்ல அசைவ உணவு உண்ணத் திட்டமிட்டிருக்கிறேன்.
விமானத்தில் தாராளமாக மது பரிமாறப்பட்டது. நானும் என் பங்கிற்கு 50மி.லி கொள்ளளவு கொண்ட பக்கார்டி வெள்ளை ரம் வாங்கி சேமித்து வைத்திருக்கிறேன் (நான் வன்மது அருந்துவதில்லை). உடன் பணிபுரிவோருக்கு பகிர்ந்தளித்தது போக இன்னும் 8குப்பிகள் கைவசம் உள்ளன. முகனூல் உறவுகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். முதலில் வந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். நேரில் வந்து பெற்றுக்கொள்வோருக்கு ஊறுகாய் பொட்டலம் இலவசமாக வழங்க உத்தேசித்திருக்கிறேன்.

துபாயிலிருந்து நைரோபிக்கு: பிரேமம்....!


சனிக்கிழமை மாலை துபாயிலிருந்து நைரோபி பயணம். நான் அமர்ந்திருந்த இருக்கையான 40Jக்கு அருகில் 41Kவில் ஒரு பெண்மணி வந்தமர்ந்தார். அமைதியான கேர்ள் டூ நெஃஸ்ட் டோர் என்பார்களே அதைப்போன்று...அவரை கடந்து செல்லும் கேரள தேசத்து நண்பர்கள் மட்டும் அவரைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் கடந்து சென்று கொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கக் கேட்ட போது மிகவும் வெட்கப்பட்டு நாசூக்காக அதை மறுத்தார். பொறுத்துப் பொறுத்து பார்த்த நான் அவரை புன்னகைத்து கடந்து சென்ற ஒரு நண்பரை தடுத்து நிறுத்தி யார் அந்த பெண்மணி என்று வினவினேன். அவர் என்னை வேற்றுகிரக ஜீவராசியை பார்ப்பது போன்று பார்த்தார். ''ஒங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?'' என்றார். நான் என் ஒரே மகன் மீது சத்தியம் செய்து தெரியாது என்றேன். நண்பர் என்னை மன்னித்து அந்த வரலாற்று சிறப்புமிக்க தகவலை உதிர்த்தார். அதாகப்பட்டது அந்த பெண்மணி தான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ''பிரேமம்'' திரைப்ப்டத்தின் கதாநாயகியாம்...சாய்பல்லவி என்பது அவரது திருநாமம். என்னுடைய பொதுஅறிவை எண்ணி நானே என்னை நொந்து கொண்டேன்... தாயகம் திரும்பிய உடன் அந்த படத்தை யூடோரண்டில் பதிவிறக்கம் செய்து பார்த்து எனது அறிவை ஒரு அங்குலம் நீட்டித்துக் கொள்ள உறுதி பூண்டுள்ளேன்...! வேறு வழி?

நைரோபியில் பருப்பு ரசம்: 05-04-2016


எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று சமைப்பது. சமையல் இன்றும் ஆண்களுக்கான துறை என்று தீவிரமாக வாதாடும் கழகத்தின் ''நிரந்தர பொதுச்செயலாளர்'' மற்றும் ''கழகத்தின் காவல் தெய்வம்'' நான். எனது கென்ய தேசத்து இறக்குமதிளார் மற்றும் விநியோகிப்பாளர் துளு பேசும் கன்னடர், அவர் மனைவி மராத்தியர். கண்டிப்பாக வீட்டிற்கு வந்து பருப்பு ரசம் வைத்துத்தர வேண்டுமென்று இரண்டு ஆண்டுகளாக தொடர் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். இந்தமுறை தப்ப இயலவில்லை. செவ்வாய் கிழமை கடுமையான பணி அழுத்தம் காரணமாக அதிலிருந்து விடுவித்துக் கொள்ள நண்பர் ஒரு இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். நான் பருப்புரசம் வைப்பதாக ஒப்புக்கொண்டேன். நன்கு பராமரிக்கப்பட்ட அந்த அடுமனையில் துரிதமாக செயல்பட்டு பருப்பு ரசம் வைத்தேன். இந்த ஊரில் துவரம் பருப்பை ஏதோ எண்ணெயில் ஊறவைத்துக் கொடுக்கிறார்கள்., ஏனென்று தெரியவில்லை. அதைக் கழுவ மட்டும் நேரம் எடுத்துக் கொண்டேன். நான் பிரம்மசாரியாக திருப்பதியிலும் ஜோத்பூரிலும் குப்பைக் கொட்டிய காலங்களில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மிகத்துரிதமாக அடுமனையில் செயல்படுவது எனது பாணி. திருமணத்திற்கு பின் என் மனைவி அடுமனையை தனது சர்வாதிகாரத்தை பயன்படுத்தி எடுத்துக்கொண்டதால் 13ஆண்டுகளாக அவள் மட்டுமே ஆட்சி செய்த துறை அது. எனவே, நீண்ட இடைவெளிக்கு பின்னால் சமையல் செய்தது ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. பருப்பு ரசத்திற்கு இறுதிகட்டமாக சிறிதளவு நெய்யில் கடுகு, உ.பருப்பு. பட்டை வற்றல், கருவேப்பிலை போட்டு சிறுது பெருங்காயமும் இட்டு தாளித்து தட்டை வைத்து மூடி 5 நிமிடம் கழித்து திறக்க சொன்னேன். நண்பரின் மனைவி திறந்த பொழுது தனது இரண்டாவது பீர் குப்பியை காலி செய்திருந்த நண்பரை ரசத்தின் மணம் அடுமனைக்கு இழுத்துக் கொண்டு வந்தது. அந்த வீட்டிலிருந்தோர் மட்டுமல்ல வானம் பெருமழை பொழிந்து ரசத்தை உண்ணும் அனுபவத்தை பிரம்மாண்டப்படுத்தியது....இனி ஒவ்வொரு முறை நைரோபி செல்லும் போதும் கண்டிப்பாக நான் பருப்பு ரசம் வைப்பேன்...ஆனால் அப்போதெல்லாம் மழை பொழியுமா....? தெரியாது...!

காத்திருப்பு(2) : 02-04-2016

காத்திருப்பு:
சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானம் ஒரு மணி நேர தாமதமாம்.
அது குறித்த பிரச்சினை எனக்கொன்றும் இல்லை. எனது அடுத்த விமானமான துபாய் - நைரோபிக்காக காத்திருக்கும் நேரம் குறையும்.
எனக்கு கவலை என்னென்னா காஞ்சிபுரம் இட்லி இப்போ சூடா இருக்குமா...இருக்காதா?
என்னதான் அவர்கள் மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்து தந்தாலும் சுவை குன்றிவிடும் என்று எனக்கு ஒரு ஐயப்பாடு எழுந்துள்ளது...
சகோதரி.நூர்ஜஹானைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...ஆளைக் காணோம்...ம்ம்!

காத்திருப்பு: 02-04-2016

காத்திருப்பு: 02-04-2016
சர்வதேச பயணங்களில் கொடுமையான விடயம் விமான நிலையத்தில் காத்திருப்பது. 
இன்று துபாய் வழியாக கென்ய தேசத்தின் தலைநகரான நைரோபி பயணம்.
எமிரேட்ஸ் விமானத்தில் காஞ்சிபுரம் இட்லி தருவதாக வாக்களித்தனர் அதன் சிப்பந்திகள். சூடாக பரிமாறும்படி எனது தரப்பு கோரிக்கையை போர்டிங் பாஸ் வழங்கிய சகோதரி.நூர்ஜஹானிடம் தெரிவித்தேன். ஆவண செய்வதாகவும் துபாயிலிருந்து நைரோபி செல்லும் பயணத்தில் கோழி பிரியாணி வழங்கப்பட இருப்பதாகவும் கூறி எனது ஆவலை அதிகப்படுத்தினார். பார்த்து விட்டு...மன்னிக்கவும்...சுவைத்து விட்டு சொல்கிறேன். சந்திக்கலாம்.