Sunday, December 31, 2017

அன்னமிட்ட கை - சுந்தரி அக்கா, தமிழர் கடல் - 31-12-2017

ஒரு நாள் அலுவலகத்தில் மதியஉணவு இடைவேளையின் போது நண்பர் சக்திசிவக்குமார் தமிழர் கடலின் (மெரினா) சிறப்புக்களை பற்றி எடுத்துரைத்தார். அன்னாரது உரையின் நடுவே தெரியவந்தது யாதெனில் அங்கே மிகப்பிரபலமாக விளங்கும் ''சுந்தரி அக்கா கடை''.
தமிழர் கடல் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அது உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை, கலங்கரை விளக்கம், அவ்வப்போது அரசியல் கோமாளிகள் நிகழ்த்தும் திடீர் தியானங்கள், சமாதியே பிளந்து போகும் அளவுக்கு அடித்து செய்யப்பட்ட தியாகத்தலைவியின் சபதம், குடைமிளகாய் பஜ்ஜி, பலூன் சுடுதல், வாங்கும் வரை மட்டுமே வேலை பார்க்கும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கடற்கரை நெடுக நிற்கும் சிலைகள் அவ்வளவு தான். ஆனால் நண்பர் அதையும் தாண்டி ஒரு விசயத்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறாரே என்று அவரை பாராட்டியதோடு நில்லாமல் அங்கே அழைத்துச் செல்லும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தோம்.
சனிக்கிழமை அன்று நானும் உடன் பணிபுரியும் சுரேந்திரன், சந்தானபாண்டியன் ஆகியோர் நண்பர் சக்தி சிவக்குமார் வழிகாட்டுதலில் விரைந்தோம்.
டிசம்பர் மாதம் குளிர்காலமாதலால் நண்பகல் வெயிலில் எரிச்சல் இல்லை, இருப்பினும் வெயிலின் தாக்கம் பார்வையை கூசச்செய்தது. கடையை கண்டுபிடித்தது ஒரு சாதனை என்றால் வண்டி நிறுத்த இடம் கிடைத்தது மற்றொரு சாதனை. சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளத்தருகே கடற்கரையை ஒட்டி நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சாலையை ஒட்டி அமைந்திருந்த கடையிலிருந்து மக்கள் கூட்டம் வரிசையாக கடல்வரை நீண்டிருந்தது. மனைவிக்கு மதியஉணவை பொட்டலம் கட்டி வாங்கி வருவதாக உறுதி அளித்திருந்த சக்தி சிவக்குமார், கூட்டத்தை பார்த்து திகைத்து போய் உடனடியாக அவரது திருமதியை தொடர்பு கொண்டு சமைத்து உண்ணும்படி அறிவுறுத்தினார்.
வரிசையில்  நின்றபடி எனது பார்வையை சுழலவிட்டேன். அதிபயங்கர பணக்காரர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை, தள்ளுவண்டிக்காரர்கள் முதல் தளுக்காய் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவோர் வரை, குமரிகள் முதல் கிழவிகள் வரை மண்ணின் மைந்தர்கள் முதல் மார்வாடிகள் வரை வரிசையில் நின்றார்கள். அதில் மிகப்பிரபலமான நட்சத்திர விடுதியின் தலைமை சமையற்காரரும் அடக்கம். கடையின் இருபுறமும் கிடைக்கும் சொற்ப நிழலில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த  அவஸ்தை எங்களுக்கு பின்னால் நின்ற நூறு பேருக்கும் அதிகமானவர்களை பார்த்ததும் குறைந்தது.

சுந்தரி அக்கா கடை பிரபலமானது அவரது கணவர் இறந்த பிறகு தான். கணவர் இறந்த பின்னால் கடையை நடத்த முடியாது என்று மூடிவிட்ட சூழலில் அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் கடையை மீண்டும் திறக்கும்படி அக்காவை வற்புறுத்தினர். அந்த ஆட்டோ ஓட்டுனர்களின் புண்ணியத்தில் இன்று ஒரு நாளைக்கு 60கிலோ இறால், 200கிலோ வஞ்சிரம், சில ஆயிரம் முட்டைகள், 200கிலோ அரிசி என்று ஆள்வோர் முதல் ஆளப்படுவோர் வரை அனைவரையும்  சுந்தரி அக்கா தனது கைவண்ணத்தால் அனுதினமும் கவர்ந்திழுக்கிறார்.

பில் வாங்க வரிசையில் நிற்கும் தருணத்தை வீணாக்காமல் நண்பர்களை அறிமுகம் செய்வது உத்தமம்.
சந்தான பாண்டியன் தான் குழுவில் முக்கியமான நபர். துள்ளலான பேச்சுக்கும் துடிப்பான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர். அதுவும் போக அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெரிய படிப்பும் பெரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த போதிலும் இன்றுவரை மணப்பெண் அமையாதது ஏன் என்பது விடுவிக்கப்படாத புதிர். கல்யாண வயதில் பெண் வைத்திருக்கும் நபர்கள் பெண் கொடுக்க விரும்பினால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளலாம். கமிசன் எதுவும் கேட்க மாட்டேன். பிரதிஉபகாரமாக திருமண தினத்தில் மணமேடையில் வைத்து ஒரு பட்டு மயில்கண் அங்கவஸ்திரமும் ஐந்து சவரன் தங்கச்சங்கிலியும் கொடுத்தால் மிகுந்த சங்கோஜத்துடன் ஏற்றுகொள்வேன் என்று உறுதிபடத் தெரிவிக்கிறேன்.
அடுத்து சுரேந்திரன். புன்னகை பூத்த முகத்தை நீங்கள் பார்த்திருக்ககூடும். ஆனால் புன்னகையே முகமாக திகழ்வதை கண்டதுண்டா?  துப்பாக்கியால் சுட்டாலும் சிரிப்பார். சுரேந்திரன் அப்படிப்பட்ட ஆசாமி. வருடம் ஒருமுறை சாமியாகி ஐயப்பனை தரிசனம் செய்ய தவறாமல் செல்வார். காதலித்து திருமணம் செய்தவர். இவரும் பெரிய படிப்பு படித்தவர் தான்.
சக்தி சிவக்குமார் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் மேலாளர். ஊட்டியில் பெரும்புகழ் பெற்ற கல்லூரியான ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் படித்தவர். மனோதத்துவமும் மூளை நரம்பியலும் அவரது பிரத்யேக கவனம் பெற்ற துறைகள். இந்த குழுவில் மிகக்குறைவாக படித்தவன் நான் மட்டுமே. இவர்களோடு உரையாடும் போது கிடைக்கும் சில தகவல்களை கவர்ந்து கொண்டு மற்றவர்களிடம் நானே கண்டுபிடித்ததாக சொல்லி பெயர் வாங்கி விடுவேன். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்தே இதை செய்து கொண்டிருக்கிறேன். இது போன்ற தவறு செய்யும் போது கிடைக்கும் சுவாரஸ்யம் ஒருவிதமான போதை. 
வரிசையில் நின்ற போது இவர் தான் சுந்தரி அக்கா என்று சக்தி சிவக்குமார் சுட்டிக்காட்டினார். கரிய நிறம், மீனவப்பெண்மணிகளுக்கே உரித்தான உழைத்து உரமேறிய உடல், ஆர்ப்பரிக்கும் கடலலைகளை ஒத்த குரல், தன்னிடம் பணிபுரிபவர்களை அடக்கி ஆளும் ஆண்களை ஒத்த ஆகிருதி என ஒரு ராணுவப் படைத்தளபதி போன்று பம்பரமாய் சுந்தரி அக்கா சுழன்று கொண்டிருந்தார்.  பில் வாங்குவதற்கே ஒரு மணி நேரம் ஆனது. பில் வாங்கிய பின்னால் உணவைப்பெற எங்கள் எண் வர காத்திருந்தோம் அதற்கு வேறு தனியே வரிசை . வரிசையில் என்னருகே நின்ற பெண்ணின் அலைபேசி சிணுங்கியது. அலைபேசியை எடுத்துப்பார்த்தவர் அதை அருகே இருந்த தோழியிடம் கொடுத்து 'அத்திம்பேர்டி...வீட்டுக்கு வர நாலு மணியாகும்னு சொல்லு'' என்றார். இன்னார் தான் என்றில்லாமல் சாதிமத வேறுபாடின்றி அக்காவின் மீன் குழம்பிற்கும் இறால் வருவலுக்கும் பொரித்த வஞ்சிரம் மீனுக்கும் காத்திருக்கின்றனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சி தான் ஏற்படுகிறது. சோறும் மீன் குழம்பும் தட்டில் வைத்து கொடுத்து விட்டு இறாலுக்கு காத்திருக்கும்படி பணித்தார் சிப்பந்தி. வஞ்சிரம் மீன் பொரித்துக் கொண்டிருக்கும் அக்காவிடம் பில்லைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம் என்றும் பணித்தார். அங்கேயும் ஒரே கூட்டம். அங்கேயும் வரிசைப்படி தான் டெலிவரி.
இரண்டு பெண்கள் அக்காவிடம் தங்களுக்கு மட்டும் உடனடியாக மீனைத்தரும்படி எங்களுக்கு பின்னால் நின்று கொண்டு வற்புறுத்தினர்.
''பில்லு நம்பர் என்னம்மா?"
''90...தொண்ணூறு''
''அம்மாடி...நீ சோறை சாப்பிட்டுக்கிட்டே இரு...தர்றேன்...இப்ப தான் பில் நம்பர் 52 போய்க்கிட்டு இருக்கு''
''சீக்கிரங்க்கா....இன்னைக்கி பிரதோசம் கோயிலுக்கு போகணும்''
திரும்பி பார்த்த போது அதே ''அத்திம்பேர்'' ஆட்கள் தான்.
அக்கா சிரித்துக் கொண்டே ''புள்ளைக பிரதோசத்துக்கு பிரதோசம் தவறாம வந்துடும்'' என்றார்.
ஜலதோசம் தெரியும் இது என்ன பிரதோசம் என்று சக்திசிவகுமாரிடம் வினவினேன். அவரோ ''அது ஒரு சிறப்பு சிவ வழிபாடு, அதுவும் சனிப்ரதோசம் என்றால் கூடுதல் சிறப்பு'' என்றார்.
உடனே மதுரைக்காரனான எனக்கு மண்டைக்குள் சிந்தனை ஓடியது. சிவன் வழிபாடு..ம்ம்ம்..சிவனென்றால் அவரது மனைவி மீனாட்சி...மீனாட்சின்னா மீன் + ஆட்சி...மேக்சிமம் கவர் பண்ணிட்டேன்...அப்போ சரிதான்''
ஆவி பறக்கும் சோறுடன் சுந்தரி அக்காவின் கைவண்ணத்தில் உருவான மீன் குழம்பு சேர உண்பது ஒரு தனிசுகம். மீன் சோற்றை சுவைத்துக் கொண்டே பொரிக்கப்பட்ட வஞ்சிரம் வரக்காத்திருப்பது துன்பமான இன்பம்.  புளிப்பும் அதற்கு ஈடாக சரிவிகிதசமானமாக காரமும் கலந்த மீன் குழம்பு நாவில் பட்டதும் மூளை நம் புலன்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சியை மின்னஞ்சல் செய்யும்.  கண்ணுக்குள் சொர்க்கம் தெரியும். எனக்கு காலஞ்சென்ற என் தாயார் தெரிந்தார். வீட்டில் மிக்சி இருந்தாலும் அம்மா மீன் குழம்பிற்கு மசாலாவை அம்மியில் தான் அரைப்பார். உணவின் சுவையை கூட்டுவதில் அம்மிக்கல்லுக்கு அலாதியான பங்குண்டு என்பதை சுவைஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். தாயின் காலடியில் சொர்க்கத்தை காணலாம் என்பார் நபிகள் நாயகம் (சல்). சுந்தரி அக்காவின் மீன் சாப்பாட்டிலும் காணலாம் என்கிறேன் நான்.

அனைவருக்கும் மீன் குழம்பும் இறா வருவலும் வஞ்சிரமும் சமைத்துப் போடும் சுந்தரி அக்கா ஒரு சுத்த சைவம் என்பது இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த வியப்புகளின் ஒன்று. ''அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி'' பசியைத் தீர்த்தலே, அழித்தலே  அறம். செய்வது வணிகமாக இருப்பினும் சுந்தரி அக்கா செய்வது மாபெரும் அறம் என்பதில் எனக்கு ஐயப்பாடு துளியுமில்லை.
இந்த புத்தாண்டில் தமிழர் கடற்கரை சென்று சுந்தரி அக்கா விடும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீசில் ஏறி சொர்க்கத்திற்கு சென்று வருவோம் என்று உறுதி பூணுமாறு வாசகர்களை வேண்டுகிறேன்.




Monday, December 18, 2017

செனெகல் - கோரே தீவு - மரணப்பாதை

செனெகல் - கோரே தீவு - மரணப்பாதை
----------------------------------------------------------------------------
எந்த நேரத்தில் நூராவின் தாய் நரகம் என்று சொன்னாரோ தெரியாது. ஆனால், ஐரோப்பிய சமூகத்தின் மீது தீராப்பழியாகவும் சாபத்தின் நிழலாகவும் நிரந்தரமாக நீடிக்கும் வடு அது என்பது அங்கே சென்ற பிறகு தான் புரிந்தது.
செனெகல் தலைநகர் டக்கார் துறைமுகத்திலிருந்து 2கி.மீ தூரமே எனினும் நடுவில் ஒரு போர்க்கப்பல் கவிழ்ந்து கிடப்பதால் சற்று தூரம் சுற்றி வந்து தீவில் பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்.
கோரே தீவு ஒரு சிறிய தீவு. இன்று அங்கே எஞ்சி நிற்கும் சாட்சியங்கள் மனிதமனத்தின் கொடூர பக்கங்கள். ஆப்பிரிக்க தேசமெங்கும் கருப்பின மக்களை பிடித்து வந்து இங்கே தான் சங்கிலியால் பிணைத்து கட்டி வைப்பார்கள். ஒவ்வொரு அறையும் எட்டுக்கு எட்டு சதுர அடி அவ்வளவே. அதில் பன்னிரெண்டு ஆண்களை கைகளை பின்னால் வைத்து ஒரு இரும்புக்கழி கொண்டு கால்களோடு பிணைத்து சங்கிலியால் பூட்டி விடுவார்கள். பெண்களுக்கு ஒரே ஒரு சலுகை அவர்களுடைய அறையில் சிறு நீர் கழிக்க ஒரு குழி உண்டு. ஆண்களுக்கு அதுவும் இல்லை. இங்கு தான் உலகில் முதல்முதலாக பிளேக் என்னும் தொற்றுவியாதி பலநூறு மக்களை காவு வாங்கியது . சிறுவர்களும் இந்த அடிமை வியாபாரத்தில் உண்டு. அவர்களின் வயதுக்கேற்ற விலை. வயதை கண்டுபிடிக்க குழந்தைகளின் பற்களை கொண்டு கணக்கிடுவார்களாம்.
உள்ளே நுழைந்ததும் இருபுறமும் படிக்கட்டுக்கள் உள்ள மேல்த்தளத்திற்கு நூரா அழைத்து சென்றார். அது இன்று யுனெஸ்கோவின் பாதுகாப்பில் அருங்காட்சியமாக பராமரிக்கப்படுகிறது. அடிமைவியாபாரம் நடத்தியோர் பயன்படுத்திய சங்கிலி விலங்குகள், துப்பாக்கிகள் புகைப்படங்கள், பெயர் அட்டவணைகள் காணக்கிடைக்கின்றன.

படிக்கட்டின் கீழே தான் அடிமைகளுக்கான அறைகள். கப்பலிலிருந்து இறக்கப்பட்டதும் இங்கே தான் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை அடைத்து வைப்பார்கள். ''ப'' வடிவில் இருக்கும் அந்த பிராந்தியத்தில் வலதுபுறம் நான்கு அறைகள் ஆண்களுக்கு எதிர்த்திசையில் நான்கு அறைகள் பெண்களுக்கு. படிக்கட்டுகளின் கீழே செங்கோண முக்கோண வடிவில் இருப்பது தண்டனை அறை. நான்கு பேர் கூட இருக்க முடியாத அந்த அறையில் 10பேரை திணித்து மூடி விடுவார்கள். மறுநாள் திறக்கும் போது இரண்டு அல்லது மூன்று பேர் செத்து போயிருப்பார்கள். பிணங்களை அகற்றி விட்டு அடுத்த இரண்டு பேர்களை திணித்து விடுவார்கள். கண் முன்னே சகமனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை தழுவுவதையும், மரணித்த பின்னால் சடலத்தோடு இரவு முழுவதும் கழிப்பார்கள்.
தப்பிக்க முயற்சிக்கும் அடிமைகள் சுட்டுக்கொள்ளப்படுவார்கள். அவர்களை சுடுவதற்கு பிரத்யேக துப்பாக்கிகளும் அங்குண்டு. அவர்கள் விதவிதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவது வாடிக்கை. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்கள். அதில் சிலர் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் அடிமை என்ற விதியும் உண்டு. அடிமைகளாக விற்கப்படுவோர் செய்யும் வேலைக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. உணவும் சொற்ப உடையும் மட்டுமே. இன்று மேற்கு ஐரோப்பா மின்னுவதற்கு காரணம் கருப்பின மக்களின் வியர்வையும் ரத்தமுமே காரணம்.
1997ஆம் ஆண்டு இங்கே வருகை தந்த நெல்சன் மண்டேலா, தண்டனை அறையை பார்த்ததும் கதறி அழுததாக நூரா சொன்னார்.
மானுடம் கண்ட அந்த மாபெரும் போராளியையே நிலைகுலையச் செய்த இடம் கோரே தீவு. வெடித்து அழுத அந்த மனிதன் கேட்டார் ''என் மக்கள் செய்த பிழை என்ன...கருப்பாக பிறந்தது ஒரு குற்றமா...அது இயற்கையின் தேர்வல்லவா? அதற்கு இப்படி ஒரு தண்டனையா?'' இந்த கேள்விக்கு இப்போது விடை கண்டும் பயனில்லை.


அடிமைகளை இந்த அறைகளிலிருந்து பத்து நாட்கள் கழித்து வேறு அறைக்கு மாற்றுவார்கள். அங்கே நாற்பது நாட்கள் வைத்திருப்பார்கள். இந்த அறையின் கட்டுமானம் சற்று வித்தியாசமானது. இந்த அறைகள் இருபக்கமும் முனையில் குவிந்து கப்பலின் தோற்றத்தை ஒத்து இருக்கும். கப்பலில் நாற்பது நாட்கள் பயணத்திற்கு அடிமைகள் தாங்குகிறார்களா என்ற பரிசோதனையில் அடிமைகள் தேர்வாக வேண்டும். அவர்ககள் மட்டுமே கலிஃபோர்னியாவிற்கோ கியுபாவின் கரும்பு தோட்டத்திற்கோ அல்லது பிரேசிலுக்கோ அனுப்பப்படுவார்கள். யார் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து அடிமைகள் பயணிக்கும் திசைகள் மாறும். போர்த்துகீசியர்கள் வாங்கினால் பிரேசிலுக்கும் ஸ்பானியர்கள் வாங்கினால் கியுபாவிற்கும் பயணிக்க நேரும்.


அடிமைகள் தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்படும். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு பின் அவர்களுக்கு தங்களது வேர் தெரியாது அறுபட்டு போகும். இன்று அமெரிக்காவில் இருக்கும் கருப்பின மக்களுக்கு தங்கள் வேர் தெரியாது. இன்று ப்ரேசிலில் இருப்போருக்கும் கியுபாவில் இருப்போருக்கும் இதுவே நிலை.
அடிமை சந்தை பல்கி பெருகிய காலத்தில் இதை எதிர்த்து குரலும் எழுப்பப்பட்டது. ஐரோப்பா முழுக்க பல்வேறு கல்வியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் சிறு சலசலப்பை எழுப்பினார்கள். ஒலௌதா எகியுனோ, வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் போன்றோர் முக்கியமான நபர்கள்.
முதலாளித்துவத்திற்கு உதவ எப்போதுமே ஒரு படித்த சிந்தனையாளர் கூட்டம் இருக்கத்தானே செய்யும். இவர்களின் குரலை நசுக்க மிக முக்கியமான அறிவுசார் ஆராய்ச்சிகள் துவக்கப்பட்டன. அதில் நிறுவப்பட்ட துறைக்கு ஃப்ரெனாலஜி (தமிழில்: மண்டை ஓட்டியல்) என்று பெயர். கருப்பின மக்களை மனித இனத்தில் வைத்திருந்தால் தானே இந்த பிரச்சினை? அதனால் மண்டை ஓட்டியல் ஆராய்ச்சி வாயிலாக இவர்கள் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட ஒரு இனம் என்று நிரூபிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரத் துவங்கின. ஆனால் மனித உரிமைப்போராளிகள் தொடர்ந்து போராடினர். ஆப்ரஹாம் லிங்கன் தனது உயிரை பலி கொடுத்தார். கடைசியாக மார்டின் லூதர் கிங் வரை பல உயிர்களை பலிகொடுத்தே மனிதனாக அங்கீகாரம் பெற்றனர். கால் நூற்றாண்டு விடுதலை கண்ட தென் ஆப்பிரிகாவில் இன்றும் சமூக அந்தஸ்து மிகப்பெரும் கேள்விக்குறியே. (செனெகல் பயணம் நிறைவு பெற்றது)






Saturday, December 16, 2017

கினியாவிலிருந்து செனெகல்....டக்காரை நோக்கி...! (2) 22-08-2017

வாழ்க்கை ஒரு அபத்தம் என்பார் ஃப்ரான்சிஸ் காஃப்கா. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். கணவனின் சடலம் எதிரே இருக்க தன்னைச் சுற்றி நான்கு குழந்தைகள் அமர்ந்திருக்க ஆலியாவிற்கு என்ன செய்வதன்றே புரியவில்லை. மொழி தெரியாத தேசம். ஆலியாவிற்கும் அவரது குழந்தைகளுக்கும் தெரிந்த ஒரே மொழி அரபி. செனெகலில் யாரும் அரபி பேசமாட்டார்கள். யோலோஃப் என்னும் உள்ளூர் மொழியும் ஃப்ரென்ச் மொழியும் தான் பேசுவார்கள். அதுபோக பல்வேறு உள்ளூர் வழக்கு மொழிகளும் உண்டு. ஆனால் நூராவின் குடும்பத்திற்கு அரபி தவிர இவை அனைத்துமே அன்னிய மொழிகள் தான். இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய மீனவர்கள் உதவினார்கள். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்த போது அங்கிருந்த மீனவ மக்கள் சந்தையில் கூலி வேலை கிடைக்கும் என்றும் ஆனால் அது நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது என்றும் கூறினர். எனவே ஆலியா தனது மகனையும் உடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். நூரா தனது ஒரு வயது தங்கையை கவனித்துக் கொள்வதாக ஏற்பாடு. கடின உழைப்பின் வாயிலாக கூலித்தொழிலாளியாக இருந்து  மீன் வியாபாரி ஆனார். மொத்த விற்பனையாளர் ஆனார். மகனுக்கு படகு வாங்கித் தந்தார். நூராவிற்கு ஏர்கபான் விமான நிறுவனத்தின் விமானியை திருமணம் செய்து வைத்தார். நூராவின் தங்கையை ஒரு பொறியாளருக்கு திருமணம் செய்து வைத்தார். வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த போது ஆலியாவின் மகன்கள் சென்ற படகு புயலில் சிக்கி அவர்களின் உயிரைக் குடித்தது. நூராவின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து போனார். கணவர் இறந்த போது நூரா நிறைமாத கர்ப்பிணி. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த சூழலில் அந்த குடும்பத்தில் மீண்டும் இடி விழ ஆலியா நொறுங்கிப் போனார். இந்தமுறை ஆலியா குழந்தைகளைப் வீட்டிலிருந்தபடி கவனித்துக் கொள்ள நூரா புதிய தொழிலை துவக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கும் பழைய துணிகளை வாங்கி துவைத்து சந்தையில் விற்கும் தொழில் தான் அது. கண்டெயினர்களில் வந்திறங்கும் துணிகளை தரம் பிரித்து வாங்கி துவைத்து சந்தைக்கு கொண்டு போய் விற்க வேண்டும். ஆப்பிரிக்காவில் மக்கள் பயன்படுத்தும் துணிகள் பெரும்பான்மையானவை இவ்வாறு வருபவை தான். 

ஆலியா தன் பிள்ளைகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் தனது பூர்வீக நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருந்தார். பாலஸ்தீனத்தின் தேசிய கவி மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. உணர்ச்சி பொங்க சொல்லிக்காட்டுவார். கவிதை அரபு மொழியில் இருந்தாலும் அதை சொல்லிக்காட்டும் போது சொற்களுக்குள் அவர் உணர்ச்சியை செலுத்தும் வேகமும் அதற்கு ஈடாக முகபாவமும் உடல் மொழியும் அவரது கணீரென்ற குரலும் இணைந்து உருவாக்கும் அனுபவ வெளிப்பாட்டை காணுவது அற்புதமான தருணங்கள். 

ஒருமுறை நான் அவரிடம் அவருடைய நீண்ட நாள் ஆசை எதுவெனக் கேட்டேன். 
''ஜேசீ...செனெகல் வந்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டன. என் வாழ்க்கை முடிவதற்குள் நான் வாழ்ந்த அல்-பிர்வா கிராமத்தையும் நான் வாழ்க்கைப்பட்ட பெயித் ஃபஜ்ஜாருக்கும் ஒருமுறை சென்று வர வேண்டும். எனது கணவர் முதல் பிரசவத்திற்கு நான் பிறந்த அல்-பிர்வா கிராமத்திற்கு அனுப்பவில்லை. இஸ்ரேலிய ராணுவம் எனது கிராமத்தை முற்றிலுமாக தரைமட்டமாக்கி விட்டது. பெயித் ஃபஜ்ஜாரில் எனது கணவரின் வீட்டில் தான் என் மகன் பிறந்தான். நூரா பிறந்தாள். மற்ற இரு குழந்தைகளும் அந்த சிறிய வீட்டில் தான் பிறந்தன. இறைவன் அந்த வாய்ப்பை கொடுப்பானா என்று தெரியவில்லை...உனக்கு ஒன்று தெரியுமா மஹ்மூத் தர்வீஷ் சொல்லுவார் ''வீடு என்பது நினைவுகளின்றி வேறில்லை''...உண்மை தானே...செங்கலும் மண்ணுமா வீடு?  வீடு என்பது மனிதர்களும் அவர்களின் அழிக்க முடியா ஞாபகங்களும் தானே....''
நான் ''உண்மை...மனிதர்கள் என்பவர்களே நினைவுகளின் தொகுப்பு தானே...யாசர் அராஃபத் மறைந்து விட்டார், அவருடன் இணைந்து போரிட்ட பல்வேறு வீரர்களின் உடல் இந்த மண்ணில் விழுந்து உரமாகி விட்டது...ஆனால் அவர்கள் நமது நினைவுகளின் ஊடே வாழத்தானே செய்கிறார்கள்'' என்றேன்.
''.இன்ஷா அல்லா என்றாவது ஒரு நாள் பூரண விடுதலை பெற்ற பாலஸ்தீனத்தில் பாதம் பதிக்க வேண்டும்....''
''உங்கள் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்...''
''நாளை ஞாயிற்றுகிழமை என்ன செய்யப்போகிறாய்?''
''நூராவுடன் கோரே தீவிற்கு செல்லலாம் என்று இருக்கிறேன்''
''போய்ப்பார்... மனிதமனத்தின் கோரப் பக்கங்களை அங்கே காணலாம்...இன்று மானுட விடுதலை பேசுவோரும் அதற்காக போராடுவோரும் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய நரகம் அது...'' 
மறுநாள்  காலை 8மணிக்கு நூராவும் நானும் கோரே தீவிற்கு சென்றோம். (தொடரும்)

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்
               -மஹ்மூத் தர்வீஷ் 
எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!
(தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ஏ.நுஃப்மான்)


Tuesday, December 12, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - செனெகல் (21-08-2017)

கினியாவிலிருந்து செனெகல்....டக்காரை நோக்கி...!
இயற்கைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. அவற்றில் அழகானது, அமைதியானது, கோரமானது, கொடூரமானது என்று பலவகை உண்டு. செனெகலின் தலைநகரான டக்கார் (Dakar) இயற்கையின் அழகான முகங்களில் ஒன்று. கினியாவின் தலைநகரான கொனாக்ரியிலிருந்து டக்கார் ஒரு மணி நேரப்பயணம். விமான நிலையம் வரும் வழியில் பெருமழை நகரத்தை திணறடித்துக் கொண்டிருந்தது. வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் மழையும் சேர்ந்து கொள்ள நகரமே மூச்சு திணறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல 15கி.மீ தூரத்தை 2மணி நேரத்தில் கடந்து விமான நிலையம் வந்து ஏர்கோத்திவார் (ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த விமான நிறுவனம்) விமான கவுண்டரை அணுகி நுழைவுச்சீட்டு கேட்டேன். ஒரு நிமிடத்தில் முடியும் இந்த வேலை பதினைந்து நிமிடமாகியும் முடியவில்லை. கையில் போர்டிங் பாஸ் வந்த போது தான் எனக்கு காரணம் புரிந்தது. அது முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டிருந்தது. உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் இப்படி போர்டிங் பாஸ் வழங்கி நான் பார்த்ததில்லை. காரணம் கேட்டபோது அந்த சிப்பந்தி ''இங்கே பிரிண்டர் கிடையாது சார்., எமிரேட்ஸ் கவுண்டரில் மட்டும் தான் இருக்கும்., நாங்கள் மதியம் சாப்பிடப்போகும் போது பயணிகளின் பெயர் பட்டியலை எடுத்துட்டு போயி எழுதி வச்சிடுவோம்., இன்னைக்கு அது முடியலை'' என்றார். அவர் மீது பரிதாபம் கொள்ள முடிந்ததே ஒழிய கோபம் கொள்ள முடியவில்லை.
கொனாக்ரிக்கும் டக்காருக்கும் இடையே அதிக தூரமில்லை. டக்கார் செல்ல விசா தேவையில்லை. யாரும் எப்போதும் செல்லலாம். புதிய ஜனாதிபதி மாக் கி சால் வந்தது முதல் இந்த எளிமையான ஏற்பாடு. விமான நிலையத்தில் வரவேற்க தோழி நூரா மிலேஹம் காத்திருந்தார். வாழ்க்கையில் நான் சந்தித்த எத்தனையோ பெண்களில் நூராவிற்கு ஒரு தனி இடம் உண்டு.  அவரது குடும்பம் பாலஸ்தீனத்தில் இருந்து குடிப்பெயர்ந்த ஒன்று. 1970களின் துவக்கத்தில் இஸ்ரேலில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் அராபியர்களை யூதப்படைகள் வேட்டையாடத் துவங்கிய ஒரு நள்ளிரவில் நூராவின் தந்தை தனது நான்கு குழந்தைகளுடன் தப்பி ஓடி வந்தார். நூராவின் தந்தை முகம்மது அபுபக்கர் ஒரு கட்டிட கூலித்தொழிலாளி. அப்போது நூராவிற்கு வயது ஐந்து. அவரது அண்ணனுக்கு வயது ஏழு. தம்பிக்கு வயது மூன்று. அடுத்ததாக ஒரு தங்கை ஒரு வயது. ஆசியாவும் ஆப்பிரிக்காவும் சந்திக்கும் சினாய் தீபகற்பத்திற்கு அடைக்கலம் புகுந்தார்.  சினாய் தீபகற்பத்தில் வேலை வாய்ப்புக்கள் சரியாக கிடைக்காத காரணத்தால் ஒரு மாதம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அங்கிருந்து அலெக்சாண்ரியாவில் ஒரு பணக்காரரின் வீட்டில் வீட்டு வேலை செய்ய நூராவின் தாய்க்கு வாய்ப்பு கிடைத்தது. நூராவின் தாய் ஆலியாவிற்கு தற்போது வயது 70. வயது முதிர்ச்சி காரணமாகவோ கடின உடல் உழைப்பு காரணமாகவோ மூட்டுகள் தேய்ந்து போய் அதிகம் நடமாட முடியாமல் இருக்கிறார். எனக்கு அவரை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அராபிய மகாராணியை பார்க்கும் பிரமை தோன்றும். இப்பொது முதுமையின் தடயங்கள் முகத்தில் தென்பட்டாலும் அவரது கண்களில் எப்போதும் ஒரு அமைதியும் கருணையும் தென்படும். ஒரு மூன்று மாதத்தில் அந்த பணக்கார முதலாளியின் நடவடிக்கைகளில் மாறுதல் தென்பட ஆரம்பித்தது. நூராவின் தந்தையை அடிக்கடி வெளியூருக்கு அனுப்பி விட்டு அந்த தனிமையில் நூராவின் தாயை அடைய முயற்சி செய்தார். இதை அறிந்த அந்த பணக்காரரின் மனைவி ஒரு நள்ளிரவில் குடும்பத்தை ஒரு சிறிய சரக்குக் கப்பலில் ஏற்றி தப்பிக்க வைத்தார். கைக்குழந்தையுடனும் பச்சிளங்குழந்தைகளுடனும் அந்த பெற்றோர் கப்பலேறினர். கையில் ஆறு ரொட்டி துண்டுகள். குடிப்பதற்கு குடிநீர். சிறிதளவு பணம். எங்கே அந்த கப்பல் போகிறது என்று யாருக்கும் தெரியாது. கோதுமை, உருளைக்கிழங்கு, வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் அந்த ஆறு ஜீவன்கள் பயணப்பட்டன. நான் ஒருமுறை நூராவின் தாயாரிடன் கேட்டேன் ''எந்த தைரியத்தில் இம்மாதிரி பயணப்பட்டீர்கள்? பாலஸ்தீனத்தில் எங்காவது ஒளிந்து கொண்டு கலவரம் முடிந்தவுடன் சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே?''
ஆலியா சொன்னார் '' ஜேசீ கலவரம் எப்படி நடக்கும் என்று உனக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட பூமியில் பிறந்து வளர்ந்தவன் நீ. கலவரத்தை இஸ்ரேலிய யூத அரசு ஏன் நடத்தியது, இப்போதும் நடத்துகிறது என்று உனக்கு தெரியுமா? கலவரம் என்பது அவர்களுடைய ராணுவத்திற்கு பயிற்சி. ராணுவத்திற்கு உணர்ச்சிகள் மரத்து அற்றுப்போக வேண்டும். அவர்கள் உயிரின் வேதனையை நேரில் கண்டு பழக வேண்டும். பத்து முறை பார்த்தால் பதினோராவது முறை பதட்டம் வராது மாறாக துணிச்சல் வரும்.  உனக்கு ஒன்று சொல்லட்டுமா? பெரிய மைதானத்தில் ஐம்பது அடி நீளமுள்ள கூர்மையான முள்கம்பியை தொய்வின்றி கட்டுவார்கள். பிடித்துவைத்துள்ள மக்களில் சிறு குழந்தையை பெற்றவர்களிடமிருந்து பிடுங்குவார்கள். இருவர் குழந்தையின் கைகளை ஆளுக்கொன்றாக பிடித்துக்கொள்ள இருவர் குழந்தையின் கால்களை ஆளுக்கொன்றாக பிடித்துக்கொள்ள முள்கம்பியின் மத்தியில் குழந்தையில் உடலை அழுத்திய வண்ணம் நால்வரும் ஓடுவார்கள். பெற்றவர்கள் கண் முன்னாலேயே குழந்தை குடல் சரிந்து துடிதுடித்துச் சாகும். அவர்களுக்கு இது ஒரு பயிற்சி. உனக்கு அதைக்காண மனோதிடம் இருக்கிறதா? நூராவிற்கு இப்போது வயது ஐம்பது. இப்போது கூட அவளுக்கு தும்மல் வந்தாலே எனக்கு பதறுகிறது. அனைத்து பெற்றோர்களுக்குமே அப்படித்தானே? அது ஒரு சாபம். தன் கண் முன்னே பிள்ளைகளை துள்ளத்துடிக்க பறிகொடுப்பது...பெரும் சாபம்...வயது பெண்களோ அல்லது என்னை மாதிரி பல குழந்தைகளை பெற்ற தாய்மார்களோ கிடைத்தால் போதும் குதறி விடுவார்கள். பெற்றோர் முன்பாக பிள்ளைகளையும் கணவன் முன்பாக மனைவியையும்...ச்சே...நாங்கள் அந்த சாபக்கேட்டிலிருந்து தப்பிக்கவே பாலஸ்தீனத்திலிருந்து ஓடி வந்தோம்....இப்போது நினைத்தாலும் பதறுகிறது. எங்கள் நிலத்தில் நாங்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் கொஞ்ச நஞ்சமல்ல.''
நான் கேட்டேன் '' அந்த சூழலை எதிர்கொள்ளும் ஆற்றலை எங்கிருந்து பெற்றீர்கள்?''
காஸா எல்லைப்பகுதியிலிருந்து தப்பித்த போதும் பதினேழு நாட்கள் சரக்குக் கப்பலில் பயணித்த போதும் குரானின் ஹதீஸ்களை ஓதிக்கொண்டே இருந்தோம். பகலில் வெயிலில் குழந்தைகள் வியர்த்து மயங்கும். இரவில் பனியில் அவர்களது உடல்கள் நடுங்கும். உருளைக்கிழங்கு இருந்த சாக்குகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவோம். அது கொஞ்சம் கதகதப்பாக இருக்கும். கையில் இருந்த ஆறு ரொட்டித்துண்டுகளையும் மூட்டையிலிருந்த வெங்காயங்களையும் மட்டுமே உண்டோம். இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் கஷ்டப்பட்டோம். அலெக்சாண்டிரியாவிலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் மொராக்கோ தேசத்தை வந்தடைந்தது. அந்தக்கப்பலை செலுத்திய மாலுமிகள் எங்களை அங்கிருந்து மற்றுமொரு கப்பலில் ஏற்றிவிட்டார்கள். அவரகள் மிகவும் நல்ல மனிதர்கள். தங்களிடம் மீதமிருந்த உணவுப்பொருட்களையும் குடி நீரையும் சிறிது அமெரிக்க டாலர்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். அந்த கப்பல் செனிகல் தேசத்தின் டக்காரை வந்தடைந்த போது நூராவின் தந்தை மிகவும் பலவீனமாகி விட்டார். ஒருவழியாக பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம் என்று நிம்மதி பிறந்தது. டக்காருக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு படகில் எங்களை இறக்கி விட்டார்கள். போதிய ஆவணங்கள் இல்லாததால் துறைமுகம் வழியாக நுழைய முடியாது. இறங்கி விட்டோம் ஆனால் எங்கே தங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஒரு மீனவக்குடியிருப்பில் உதவி கேட்டு போய் நின்றோம். கருணைமிக்க அவர்கள் எங்கள் நிலைமையைக் கண்டு மனமிறங்கி ஒரு தகரக் கொட்டகையையும் சில பாத்திரங்களையும் துணிமணிகளையும் கொடுத்து உதவினர். நூரா பெரிய மனுஷி ஆகும் வரை நான்கு குழந்தைகளுடன் நான் அங்கே தான் இருந்தேன்''
எனக்கு வியப்பாக இருந்தது. உடனே கேட்டேன். ''நான் என்றால் நூராவின் அப்பா எங்கே சென்றார்?''
பெருகி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் சொன்னார் ''டக்கார் வந்திறங்கிய முதல் நாள் எங்களை வீட்டில் அமர்த்திவிட்டு மீனவர்களுடன் கடலுக்கு சென்றவர் பத்தே நிமிடத்தின் சடலமாக திரும்பி வந்தார்''
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் எனது புலன்கள் செயலற்று போவதை நானே உணர்ந்தேன். மெதுவாக அவரது கரம் பற்றினேன் '' என்ன நடந்தது?''
''தெரியலை ஜேசீ...தெரியலை...இன்னவரைக்கும் தெரியலை...படகை கரையிலிருந்து கடலுக்குள் தள்ளுமாறு மீனவர்கள் பணிக்க அதிக அழுத்தம் கொடுத்து தள்ளியவரின் இதயம் நின்று போனது...எங்கள் வாழ்க்கையும் முடிந்து போனது'' (தொடரும்)








Saturday, October 28, 2017

கையில் மறையும் நாணயம் (28-10-2017)

கையில் மறையும் நாணயம்
அதிகாலை வந்த அலைபேசி அழைப்பை என் மனைவி ஏற்கவில்லை. காரணம், அது பெயர் தெரியாத ஒரு அழைப்பு என்பதனால். ஆனால் மீண்டும் அதே எண்ணிலிருந்து ரெஹனா அழைத்த போது தவிர்க்க இயலவில்லை.
''என்ன அண்ணி காலையில நீங்க தான் கூப்பிட்டீங்களா...போன் தலையணைக்கு கீழே இருந்ததுனால எனக்கு சத்தம் கேட்கலை'' என்றாள்.
''மாமா தவறிட்டாரு'' அவ்வளவு தான் ரெஹனாவால் பேச முடிந்தது.
உடனடியாக கிளம்பியாக வேண்டும். இது தவிர்க்க இயலாத / கூடாத காரியம். இயற்கை எய்திய எனது தாய்மாமா ஷேக்ராஜா எனப்படும் ராஜா மாமா என் பெற்றோரைக் காட்டிலும் சிறுவயதில் அதிக முறை குளிப்பாட்டியவர். வளர்ந்த பிறகு பொருளாதார ஆபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அத்தையுடன் சேர்ந்து அபயக்கரம் நீட்டியவர்.  சென்னையிலிருந்து காரில் மதுரை 6மணி நேரப்பயணம். பயணம் முழுக்க என் ஞாபகங்களை மாமாவே ஆக்கிரமித்திருந்தார்.

கட்றாபாளையத்தெருவை ஐப்பசி மாத மழை நன்கு நனைத்திருந்தது. பகல் வெயில் இறங்கி மாலை எழக் காத்திருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தைகள் சுற்றி நிற்க ராஜா மாமா நடுநாயகமாக மத்தியில் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் முக்கியமான நபர் நான், எனது தம்பி, தமிழ் அத்தையின் மகள்களான வனிதாவும் மீனாவும் அடுத்து ராஜி அத்தையின் குட்டிப்பாப்பாக்கள் ஹேமாவும் ரதியும். வெள்ளை நிறத்தில் கை வைத்த பனியன் சாம்பல் நிறத்தில் கட்டம் போட்ட கைலி, தங்க பிரேம் போட்ட கண்ணாடி முகத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் புன்னகை இதுதான் மாமா. கையில் அலுமினியத்தாலான இருபது பைசா நாணயம். அந்த எண்கோண வடிவ அலுமினிய காசை மாமா இப்போது தனது கை வழியே உடலுக்குள் செலுத்தி மேஜிக் செய்ய போகிறார். அதற்குத்தான் குழந்தைகள் கூடியுள்ளனர். குழந்தைகள் அனைவருடைய பார்வையும் மாமாவின் கையிலிருந்த இருபது பைசா நாணயத்தின் மீது குவிந்திருந்தது. வலது கையின் மணிக்கட்டிலிருந்து மெதுவாக கையின் மையம் நோக்கி மாமா நாணயத்தை அழுத்தத் துவங்கினார். குழந்தைகளிடையே பேச்சு குறைந்து முணுமுணுப்பாகி பின்பு அது மௌனத்தை நோக்கி அந்த இருபது பைசா நாணயத்தோடே நகர்ந்தது. இடது கை கட்டைவிரலால் அழுத்தப்பட்டிருந்த அந்த நாணயம் வலது கையின் மையப்பகுதிக்கு வந்த போது மறைந்திருந்தது. நாணயத்தை காணவில்லை. எங்கே போனது என்றும் தெரியவில்லை. ஒரே ஆரவாரம்....குழந்தைகள் குதூகலத்தோடு துள்ளிக் குதித்தனர். அருகிலிருந்த தமிழ்அத்தையின் மகள் வனிதா மட்டும் ''பெரியப்பா நம்மள ஏமாத்துறாரு....அதெப்படி காசு ஒடம்புக்குள்ளே போகும்?'' என்றவாறு குழம்பியபடி தலை சொறிந்து கொண்டே விலகினாள். எனக்கு அது தந்திரம் என்று மட்டும் புரிந்தது ஆனால் எப்படி என்று தெரியவில்லை. எப்படியாவது இந்த நுட்பத்தை தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தும் தனது இறுதி மூச்சுவரை மாமா கற்று தரவில்லை. 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பள்ளிவாசலை ஒட்டிய தெரு தான் கட்றாபாளையத்தெரு. இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் அந்த பகுதியின் மையத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் இருந்தது. தேவாலயத்தை ஒட்டிய குறுகலான சந்துகளில் கிறுத்துவர்கள் அதிகம் வசித்தார்கள். அதிகாலை  பள்ளியிலிருந்து எழும் பாங்கோசை கேட்டுத்தான் பெண்களும் ஆண்களும் துயில் எழுவார்கள். ரம்ஜான் என்றால் இந்தி திரைப்பட பாடல்கள் காதை பிளக்கும். கிறுஸ்துமஸ் என்றால் தமிழ்ப்பாடல்கள் காதை கிழிக்கும். இருவரது பண்டிகைக்கும் அனைவரும் பேதமின்றி காசு கொடுப்பார்கள். ஒன்றாகவே கொண்டாடுவார்கள். தீபாவளிக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பார்கள். ஜாதியோ மதமோ அங்கே கிடையாது. தேவாலயத்தின் மேற்கு சுவரை ஒட்டி இருந்த எங்கள் காம்பௌண்டில் ஆறு வீடுகள். மேலே ஓடு வேய்ந்த இரண்டு வீடுகள். கீழே நான்கு வீடுகள். அனைத்தும் நூறு சதுர அடிக்கும் குறைவான ஒண்டுக்குடித்தனங்கள். பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகள். தமிழ் அத்தை மாடியில் குடியிருந்தார். அருகே சிரோண்மணீ டீச்சர் குடியிருந்தார். தமிழ் அத்தைக்கு தமிழரசி என்று பெயர் வைத்தது எம்.ஜி.ஆர் என்பதில் அளவு கடந்த பெருமை.  ராஜா மாமா டவுண் ஹால் ரோட்டில் ரேடியோ வியாபாரம் செய்து வந்தார். அதற்கு முன்பு கைக்கடிகாரம் ரிப்பேர் செய்து வந்தார். மாமாவிற்கு அம்மா செய்யும் கறிக்குழம்பு என்றால் மிகவும் இஷ்டம். கோலா உருண்டை குழம்பு என்றால் இன்னும் இஷ்டம். குழந்தைகள் அனைவருக்கும் சூரியா அத்தை செய்யும் பிரியாணி இஷ்டம். ரம்ஜான் அன்று அந்த பிரியாணிக்காக காத்திருப்பது ஒரு தனி சுகம். மாமா அத்தையின் உறவினர்கள் எங்களுக்கும் உறவினர்கள். அந்த பிராந்தியத்தின் எங்கள் காம்பௌண்டும் அத்தையின் வீடும் முன்னுதாரணமாக திகழ்ந்தது. என் பால்ய பருவம் முழுவதும் அங்கேயே கழிந்தது. இந்த நான்கு வீடுகளுக்கும் ஒரே ஒரு கழிப்பறை ஒரே ஒரு குளியலறை. மேலே ஒரே ஒரு கழிப்பறை. மாடி வீட்டுக்காரர்கள் குளியல் வீட்டுக்குள்ளே தான்.  எதிரே இருந்த மாமா வீட்டில் தான் நானும் என் உடன் பிறந்த சகோதர்களும் குளிப்போம். மாமா தான் குளிக்க ஊற்றுவார். மாநகராட்சி வழங்கும் தண்ணீர் தான் குளிக்க, குடிக்க சமைக்க மற்ற அனைத்திற்கும். மாமா வீடு சுமார் 150 சதுர அடி கொண்ட இரண்டு மாடி கொண்ட தனி வீடு. ஆறு வீட்டு குழந்தைகளும் ஒன்றாகவே வளர்ந்தோம். 
மாமா பல்வேறு சாதனைகளை முதல்முறையாக அந்த பிராந்தியத்தில் நிகழ்த்தி காட்டினார். முதன்முதலாக தொலைக்காட்சி வந்தது அவர் மூலமாகத்தான். எங்களுக்கு பக்கத்து தெருவான சுண்ணாம்புக்காரத் தெருவில் ஒரு கருப்பு வெள்ளை போர்டபிள் டிவியை வைத்து வெள்ளிக்கிழமை ''சித்ரகார்'' பார்க்க தலைக்கு பத்து காசு வசூல் செய்து வந்தார் ஒரு ஆசாமி.  சித்ரகார் பார்ப்பது அன்றைய நாட்களில் கௌரவமான விசயம். இதன் மூலம் தமது வீட்டில் டிவி இருக்கிறது என்ற கௌரவம் கிடைப்பதோடு சில இந்தி ந்டிகர்களின் பெயரும் நமக்கு தெரியவரும். மாமா தனது வீட்டில் புது 21 இஞ்ச் டிவியை கொண்டு வந்து வைத்து அதில் இலவச ஒளிபரப்பை துவங்கினார். கேஸ் அடுப்பு, மாவரைக்கும் கிரைண்டர், குக்கர் என்று  அடிக்கடி புதுவிதமான பொருட்களை கொண்டு வந்து அசத்துவார். எங்கள் பகுதியில் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்ததும் அவரே. 

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென மாமா அத்தையுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது நாங்கள் கட்றாபாளையத்தெருவை காலி செய்து விட்டு ஐயர் பங்களா சென்று விட்டோம். நனைந்த சட்டையுடனும் வெயிலில் ஸ்கூட்டர் ஓட்டிக் களைத்த முகத்துடன் வந்தவர் ''ஒரு தாம்பாளம் இருந்த கொடும்மா'' என்றார். எனது தாயாரும் ஒரு தாம்பாளத்தை எடுத்து நீட்ட பையிலிருந்து ஒரு பச்சை வண்ணப்புடவை, தேங்காய், வாழைப்பழம் வைத்து என் அம்மாவிடம் நீட்டினார். காரணம் கேட்ட போது ''இது நல்ல தங்காள் வருசம்னு சொன்னாங்க...கூடப்பிறந்த பெண் பிள்ளைகளுக்கு பச்சைக்கலர்ல சேலை கொடுக்கணும்னு சொன்னாங்க...அந்த முறையை ஒரு அண்ணனா செஞ்சுட்டு போலாம்னு வந்தேன்'' என்றார். என் தாயாரோடு பிறந்த தாய்மாமன்மார் எட்டு பேர். ஒருவர் கூட இதை செய்யவில்லை. தான் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத ஒரு சமூக நடைமுறையை மிக பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றினார். 
மாமா நன்றாக கதை சொல்லுவார். பாதாள பைரவி திரைப்படத்தின் கதையை அவர் சொல்லக்கேட்பது ஒரு அற்புதமான அனுபவம். தோட்ட ராமன் நேபாள மந்திரவாதியுடன் காட்டுக்குள் புகும் காட்சிகளை ஸ்பெசல் எஃபெக்டுடன் விவரிப்பார். 
மாமாவிடம் ஒரு வயலெட் நிற புல்லட் பைக் இருந்தது. வீட்டிலிருந்து தெருமுனை வரை அவர் முதுகை பற்றிக்கொண்டு பலமுறை சென்றிருக்கிறேன். வெறும் நூறு அடி தூரம் தான் அந்தப்பயணம். ஆனால் அது தரும் பெருமை அளவிட முடியாதது. இன்று நான் மேற்கொள்ளும் சர்வதேச விமானப் பயணங்களைக் காட்டிலும் கூடுதல் கௌரவம் மிக்கது. தெருமுனையையும் சாலையையும் இணைக்கும் வகையில் ஒரு சரிவு அமைக்கப்பட்டிருக்கும். அதில் புல்லட் இறங்கும் அந்த அரை வினாடி அலாதியானது. மாமா அந்த புல்லட்டை தினமும் கழுவுவார். வண்டியின் சத்தத்தை வைத்தே அதன் பிரச்சினையை கண்டுபிடித்து விடுவார். அவரது அக்காள் கணவர் சிம்மக்கல் நூலகம் அருகே ஒர்க் ஷாப் வைத்திருந்தார். புல்லட் ரிப்பேரில் அவரும் அவருடைய சகோதரர்களும் விற்பன்னர்கள். தமிழக காவல்த்துறையின் வண்டிகள் பெரும்பாலும் அங்கே தான் பழுது பார்க்கப்படும். வண்டியின் சத்தம் கேட்டு அது இந்த போலிஸ் அதிகாரி தான் என்று சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்களிடம் மட்டுமே வண்டியை சர்வீஸ் செய்வார். ஒருமுறை மதுரையிலிருந்து நெடுங்குளம் வரை அவரோடு புல்லட்டில் சென்ற அனுபவம் உண்டு. மாமாவிற்கும் எனது பெரியப்பாவிற்கும் ஒருவிதமான அலாதியான நட்பு உண்டு. படித்துவிட்டு ஒரு பேப்பர் கடையில் சிலகாலம் சொற்ப சம்பளத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் கணக்குகளை ஆராய்ந்த வணிகவரித்துறை அலுவலர்கள் அதில் சில குளறுபடிகள் இருப்பதாக நோட்டீஸ் விட்டார்கள். எங்கள் கடை உரிமையாளர் எனது பெரியப்பாவின் உதவியை என் மூலமாக நாடினார். பெரியப்பா வணிகவரி அலுவலராக இருந்தார். அதன்பொருட்டு ஒருமுறை வணிகவரித்துறை அலுவலகம் செல்ல நேரிட்டது. அங்கு பன்னிரெண்டு வணிகவரி வட்டங்கள் உண்டு. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு வணிகவரி அலுவலர். பெரியப்பா முதல் தளத்தில் இருந்தார். எங்கள் கடையை கண்காணிக்கும் அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. நானும் பெரியப்பாவும் மூன்றாவது மாடிக்கு சென்றோம். அங்கே வெளியில் இருக்கும் பெஞ்ச்சில் கவலை தோய்ந்த முகத்துடன் மாமா அமர்ந்திருந்தார். பெரியப்பா மாமாவிடம் ''என்னாச்சு...ஏன் இங்க ஒக்காந்துருக்கீங்க....?' என்றார்.
''நேத்து உங்காளுக கடைக்கு வந்து பில் புக்ஸ் அப்புறம் கணக்கு புத்தகத்தை எடுத்துட்டு வந்துட்டாங்க...அதுதான்...'' என்று இழுத்தார்.
பெரியப்பா வேகமாக வணிகவரி அலுவலர் அறைக்குள் நுழைந்தார் தனியாக. பெரியப்பா நுழைந்த பத்தாவது வினாடி துணைவணிகவரி அலுவலர் தெறித்து ஓடிவந்தார். தனது அறையிலிருந்து, மாமாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்தையும் எடுத்து வந்து ஒப்படைத்தார்.
''பாய்...நீங்க அவர்கிட்ட ஒரு வார்த்தை நான் வாங்கிட்டேன்னு சொல்லிட்டு போய்டுங்க பாய்...ப்ளீஸ்'' என்றார்.
பெரியப்பா சி.டி.ஓ அறையிலிருந்து வெளிப்பட்டார் '''வாங்கிகிட்டீங்களா....?' என்றார். மாமா நன்றியோடு ''ரொம்ப தாங்க்ஸ் மச்சான்'' என்றார். ''நீங்க கிளம்புங்க இனிமேல் பிரச்சினை வராம நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சி.டி.ஓ அறைக்குள் நுழைந்தார். 
உதவி வணிகவரி அலுவலர் என்னை மெதுவாக அழைத்தார் ''தம்பி...அவர் யாரு?''
''அவர் என்னோட மாமா'' என்றேன்.
''அவர் என்னோட தங்கச்சி வீட்டுக்காரர்னு சொன்னாரு''
''என்னங்க இது பைத்தியக்காரத்தனமா இருக்கு...அவர் எங்க பெரியப்பா...அவரோட தங்கச்சி வீட்டுக்காரர்னா எனக்கு மாமா முறை தான வேணும்...இதுல என்ன உங்களுக்கு  கன்ஃப்யூசன்?''
''இல்லை இவரு முஸ்லீமாச்சே அதுனால ஒரு கன்ஃப்யூசன்..ம்ம்''
''அவரு முன்னாடி இதை சொல்லிடாதீங்க...தொலைச்சுடுவாரு...''
''நான் இப்படி கேட்டேன்னு அவர்கிட்ட சொல்லிடாதப்பா...'' என்று எங்கள் கடைக்கணக்கை உடனடியாக முடித்துத் தந்தார்.
அன்றிலிருந்து பெரியப்பா இருக்கும் வரை மாமாவின் ரேடியோ கடைக்குள் நுழைய யாருக்கும் தைரியம் வந்ததில்லை.

மதுரைக்குள் எனது கார் நுழைந்த போது மழை பெய்ய துவங்கியிருந்தது. ஷாமியானாவின் கீழே மக்கள் குழுமியிருந்தனர். அப்துல் சித்தப்பா கண்ணீர் தேங்கிய கண்களுடன் ''போப்பா...போய் பாரு'' என்றார். மய்யத்தை குளிப்பாட்டி வாசனை திரவியங்கள் தடவி கபுர் துணியால் சுற்றி வீட்டின் மையத்திற்கு எடுத்து சென்றனர். அத்தையை பார்க்க வேண்டும்...ஆனால் பெண்களின் கூட்டம் தடுத்தது. கலங்கிய விழிகளுடன் நின்ற அமீர் அக்காவிடம் ''அக்கா...அத்தையை பார்க்க முடியுமா?'' என்று கேட்டேன். ''நீ மருமகனில்லையா...அதனால 40 நாளைக்கு பார்க்க  முடியாது'' என்றார். சடலத்தை தாங்கிய ஆம்புலன்ஸ் மசூதியை நோக்கி மழையோடு பயணித்தது. மசூதியில் வைத்து தொழுகை முடிந்தபின் சடலம் கபுர்ஸ்தான் எனப்படும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மழை நீரால் நிரம்பியிருந்தது மயானம். ஈரமண்ணில் புதைந்து எழுந்தன கால்கள். சாகுல் அண்ணன் என்னை கவனமாக புல்தரையில் நடத்தி கூட்டிச் சென்றார். வெட்டப்பட்ட குழியிலும் மழை நீர் தேங்கியிருந்தது. பெயர் தெரியாத உறவினர் ஒருவர் குழியில்  இறங்கி தேங்கியிருந்த நீரை ஒரு வாளியில் அள்ளி எடுத்தார். வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டிருந்த மாமாவின் சடலத்தை உள்ளே கிடத்தினர். குழியின் பக்கவாட்டில் தென்னை ஓலைகள் கிடத்தப்பட்டு சவுக்கு கழிகள் எதிர்ப்பக்கச் சுவரிலிருந்து 45 டிகிரி கோணத்தில் பதிக்கப்பட்டன. குழிக்கு வெளியே நீண்டிருந்த தென்னை ஓலைகள் குழிக்கு உள்ளே கூடி மடிக்கப்பட்டன. கடைசி மண்ணை எடுத்து போடச்சொன்னார் ஒரு பெரியவர். மூன்று முறை மண்ணை அள்ளி குழிக்குள் வீசி விட்டு விலகும் போதுதான் மாமா எங்களை விட்டு பிரிந்தார் என்ற எண்ணம் மேலோங்கத் துவங்கியது. 
மாமா இனி வரமாட்டாரோ...இல்லை எங்கோ வானில் நட்சத்திரமாகவோ அல்லது மழை தாங்கிய மேகமாகவோ நமது தலைக்கு மேல் எப்போதும் இருப்பாரோ...அவருடைய இறுதி மூச்சுக்காற்று தான் இந்த மரத்தின் இலைகளை அசைக்கின்றனவா...எண்ணங்களும் அதற்கு எதிர்வினைகளும் மூளைக்குள் முட்டிமோத நடையில் தடுமாற்றம் ஏற்பட்டது. 

மயானத்தின் வாயிலை நெருங்கையில் ஒரு மூன்று வயது சிறுவன்    '’மாமா...மாமா....மேஜிக்...மாமா'' என்று ஓடினான். மயானத்தில் யாருமேயில்லை அமைதி பெருகி ஒரு அமானுஷ்யமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. மாமா அதே கட்டம் போட்ட வேட்டி கை வைத்த வெள்ளை பனியன், தங்க பிரேம் போட்ட கண்ணாடியோடு வந்தார்.
சிறுவன் தனது கால்ச்சட்டையிலிருந்து ஒரு இருபது காசு நாணயத்தை மாமாவிடம் கொடுத்து ''மேஜிக் மாமா...மேஜிக்'' என்றான்.
மாமா சிரித்தவாறு மணிக்கட்டிலிருந்து நாணயத்தை மேல் நோக்கி செலுத்த துவங்கினார். முழங்கை அருகில் வந்த போது நாணயம் மறைந்து போயிருந்தது. சிறுவன் ஆர்ப்பரித்து சிரித்தான்....''மாமா இன்னொரு மேஜிக்'' மற்றுமொரு நாணயம்....மீண்டும் சிரிப்பு....!
மைதானத்தின் வாயிலிருந்து எனது கார் வரை அந்த சிரிப்பு சத்தம் துரத்திக்கொண்டே வந்தது....கண்ணில் பெருகிய நீரை வானம் தனது பெருந்தூறலால் வழித்துக் கொண்டு ஓடியது. காரில் ஏறி மயானத்தை விட்டு விலகியதும் சிரிப்புச்சத்தமும் விலகியது. மாமாவும் சிறுவனும் ஆளில்லா மயானத்தில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்....முடிவுகள் மட்டுமே சாத்தியப்படும் அந்த பூமியில் ஒரு முடிவுறாத விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது....!


Sunday, August 20, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(3) - அசோக் வாஸ்வானி என்னும் அற்புதம்:

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(3) - அசோக் வாஸ்வானி என்னும் அற்புதம்:
இந்த பயணத்தில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று அசோக் வாஸ்வானி அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பு. தனது 27ஆம் வயதில் தான் பார்த்துக் கொண்டிருந்த  வேலையை விட்டுவிட்டு கினியாவில் தொழில் துவங்க முயற்சி செய்த போது சிலர் அவரை ஏற இறங்க பார்த்தனர். பலர் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். அவர்களின் கூற்றில் பிழையில்லை. காரணம் அன்றைய சூழலில் கினியா தொழில் துவங்குவதற்கு உகந்த நாடு அல்ல. கினியாவில் குடிமை பாதுகாப்பு என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கே  அரசாங்கங்கள் உறுதி செய்யாத சூழல். இப்போதும் அதுவே நிலைமை. ஆனால் அசோக் வாஸ்வானி துணிந்து அந்த முடிவெடுத்தார். பொருட்களை வாங்கி விற்பதில் துவங்கி உற்பத்தியை நோக்கி முன்னேறினார். அது மிக இலகுவான பயணம் அல்ல. கினிய அரசாங்கத்திற்கு அதிகமாக வரி கட்டும் தனி நபர் என்ற நிலைக்கு உயர்ந்தார். பெயிண்ட், ஞெகிழிப் பொருட்கள், ஞெகிழி குழாய்கள், பைகள், வடங்கள் என்று உற்பத்தித்துறையில் சாதித்துக்காட்டினார். இன்று அவரது அலுவலகங்கள் உலகமெங்கும் விரவி கிடக்கின்றன. இந்தியாவிற்கான கௌரவ தூதரும் கூட.
இடையில் 2004ல் அவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒரு வினோதமான பிறவியாக பிறந்தது. அந்த குழந்தைக்கு உணவுக்குழாய் பிறப்பிலேயே இல்லை. நண்பர்கள் குழந்தைதான் முக்கியம் எனவே தொழிலை மூடிவிட்டு குழந்தையை காப்பாற்ற ஆலோசனை கூறினர். சென்னை அப்பொலோவில் 5 மாதங்கள் வைத்து காப்பாற்றிய பின் அதை ஃப்ரான்சில் புகழ் பெற்ற நிக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றார். அந்த போராட்டமான காலங்களில் அசோக் மீண்டும் ஒரு துணிச்சலான முடிவெடுத்தார். நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தனது அதிகாரிகளுக்கு கொடுத்தார். காசோலையில் கையெழுத்திடுவது, மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வது, விற்று பணவசூல் செய்வது, ஊழியர்களை பணியிலமர்த்த்வது சம்பளம் வழங்குவது என அனைத்தையும் நிர்வாகிகள் முடிவுக்கு விட்டார். அப்போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எச்சரித்தனர். செய்யாதே ஏமாற்றப்படுவாய், அனைத்தையும் இழந்து விடுவாய் இது நிச்சயம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அசோக் தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்தார். குழந்தையையும் காப்பாற்றினார். இதன் மூலம் அசோக் நமக்கு சில பாடங்களை கற்று தருகிறார்.
1) மனிதர்களை நம்புங்கள் (ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; ஒரு சிலர் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக அனைவரையும் சந்தேகிப்பது அறமாகாது)
2) எதிலும் துணிந்து முடிவெடுங்கள் (காலம் தான் செல்வம்; முடிவெடுக்க காலம் கடத்துபவர்கள் ஒரு போதும் வெல்வதில்லை)
3) உழைக்க தயங்காதீர்கள் (சோம்பேறிகளுக்கு முன்னேற்றமுமில்லை; அதனால் அவர்களுக்கு வருத்தமும் இல்லை. சாதனையாளர்களே உழைக்கிறார்கள், உழைப்பவர்களே சாதிக்கிறார்கள்)

தொழில் சம்பந்தமான விவாதங்கள் நிறைவுற்ற பிறகு பகல் உணவிற்காக சாப்பாட்டு கூடத்திற்கு அழைத்து சென்றார். பகலுணவை தனது தொழிலில் முடிவெடுக்கும் அதிகாரமிக்க அதிகாரிகளுடன் உண்பதை தனது நிறுவன கலாச்சாரமாகவே வைத்திருக்கிறார். 200 இந்தியர்கள் அவர்களில் 40பேர் தமிழர்கள் என்று ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள்.
பகலுணவு முடிந்த பிறகு தனது தொழிற்சாலையை சுற்றி காண்பிக்க என்னை அழைத்துச் சென்றார். அலுவலக வாயிலை விட்டு இறங்கும் போது இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் இந்த பிராந்தியத்தின் கட்டுப்பாடு முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் பணம் கொடுத்தால் சேவை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். '' நீங்கள் இருவரும் இங்கே வந்தது உங்கள் அமைச்சருக்கு தெரியுமா?'' என்றார். திரும்பி தனது அலுவலக வரவேற்பாளரிடம் ஜனாதிபதி ஆல்ஃபா கோண்டேவை உடனடியாக அழைக்கும்படி குரல் கொடுத்து திரும்பும் வேளையில் இரண்டு அதிகாரிகளும் தொழிற்சாலையின் முகப்பு வாயில்வரை ஓடிக்கடந்திருந்தனர்.
தொழிற்கூடத்தில் ஒரு புறம் ஞெகிழிப் பொருட்கள், மறுபுறம் வர்ணப்பூச்சுக்கள், மற்றொரு புறம் இணையதளத்திற்கான கம்பி வடங்கள் என்று பல்வேறு பகுதிகள் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
தொழிற்கூடத்தின் ஒரு மூலையில் இரு பெரிய இயந்திரங்கள் வடிவ அச்சுக்களை கடைந்து கொண்டிருந்தன. அது என்னவென்ற புரியாமல் உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையை புரிந்த கொண்ட அசோக் ''ஜேசீ...பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்த ''டை'' என்னும்
வடிவ அச்சுக்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தோம்.. இன்று அதை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்'' என்றார்.
நான் கேட்டேன் '' நீங்கள் என்ன படித்தீர்கள்...பொறியியலா...?'' எனது தோளைத்தட்டி சிரித்துக் கொண்டே அசோக் சொன்னார் ''பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி''
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ''படிப்பிற்கு அறிவிற்கும் துளியும் தொடர்பில்லை.




Saturday, August 19, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(2) - 19-08-2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(2)
கினியாவின் தலைநகரில் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஜன்னல் வழியாக கொனாக்ரி நகரத்தைப் பார்த்தேன். ஒரு நகரமே தகரத்தை ஆடையாக்கி இழுத்து போர்த்தி இருந்த மாதிரி தோற்றமளித்தது. நெல்வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே தென்னை வளர்ந்து நிற்பதை போன்று தகரக் கூரைகளுக்கு நடுவே சில உயரமான கட்டிடங்கள் தென்பட்டன. குடியேறல் துறையில் எனது கடவுச்சீட்டைப் பார்த்த அதிகாரி உங்களை அழைத்துச் செல்ல தூதரகத்திலிருந்து கார் வந்திருப்பதாக சொன்னார். சொன்னபடியே ஓட்டுனரும் பாதுகாப்பு அதிகாரியும் தயாராக இருந்தனர். சுமார் 15கி.மீ தூரத்தை கடக்க ஒண்ணரை மணி நேரமானது.  குண்டும் குழியுமான சாலைகள். நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நிச்சயம். நடுச்சாலையில் இளைஞர்களும் யுவதிகளும் தண்ணீர் பொட்டலங்கள், கடலைபருப்பு, செருப்பு, டார்ச் லைட்டுகள், எலி மருந்து, ஜட்டி,பனியன் என அனைத்தையும் சாலையின் இருமருங்கிலும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கினியா தங்கமும் வைரமும் அலுமினியத் தாதுப்பொருளான பாக்சைட் மற்றும் இரும்பு போன்ற கனிம வளங்கள் இருந்தும் வறுமையில் வாடுகிறது. வல்லாதிக்க நாடுகளின் சுரண்டலாக இருக்குமோ என ஆராய்ந்த பொழுது இவற்றை சுரண்டுபவர்களில் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்பதை நினைக்கும் போது பெருமை கொள்ள இயலவில்லை. இங்கிருந்து தங்கம் மண்ணோடு அடிமாட்டு விலைக்கு (கௌ பக்தாஸ் மன்னிக்க வேணும்) வாங்கி அதை துபாயில் விற்பவர்கள் மார்வாடிகள். வைரத்தை வாங்கி ஹாங்காங் அல்லது பெல்ஜியத்தில் பட்டை தீட்டி சர்வதேச சந்தையில் விற்பவர்கள் குஜராத்திகள். இரும்பும் அலுமினியமும் மண்ணாகப் போய்விட்டு இந்த மண்ணின் மைந்தர்கள் பிச்சை எடுக்க சட்டி, பானையாக திரும்பி வருகிறது. மூலதனங்கள் பாய்மமாக மாறி சர்வதேச சந்தையை ஒரு குக்கிராமமாக மாற்றி விட்ட சூழலில் இம்மக்கள் தங்கள் காலுக்கு கீழே உள்ள செல்வத்தை அன்னியர்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு பஞ்சபராதாரியாக வாழ்கிறார்கள். இதை ஒரு சராசரி மனிதனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வயிறு வீங்கிய குழந்தைகள், கல்வியில்லா இளைஞர்கள், வேலையில்லா ஜனத்திரள் என்று ஒரு தேசமே விபத்தில் அடிபட்டு ரத்தமிழந்த ஒருவன் உயிர்வளிக்கு (ஆக்சிஜன்) ஏங்குபவனைப் போல் தோற்றமளித்தது.

கி.பி 15ஆம் நூற்றாண்டில் அடிமை சந்தையை போர்த்துகீசியர்கள் துவக்கிய போது கினியாவும் செனெகலும் முக்கியமான மையங்களாக இருந்தன. மனித வரலாற்றில் தொற்று நோய்கள் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது இந்த பிராந்தியத்தில் தான். செனெகலுக்கு அருகில் இருக்கும் கோரே தீவில் தான் பிளேக் என்னு உயிர்க்கொல்லி நோய் தாக்கியது. அன்றிலிருந்து இன்று வரை நோய்களின் தாயகமாகவே இந்த பிராந்தியம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. பிளேக்கிலிருந்து எபோலா வரை என்று தனி ஆவர்த்தனமே வாசிக்கலாம். அவ்வளவு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எபோலாவின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்று கற்றுத்தரும் நமது பாடத்திட்டம் அது ஏன் என்று கேள்வி கேட்க கற்றுத்தரவில்லை. நிதர்சனம் என்பது ஆப்பிரிக்கா இருண்ட கண்டமாக பராமரிக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் குப்பை தொட்டி ஆப்பிரிக்கா. ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பயன்படுத்தி தூக்கி எறிந்த ஓட்டை ஒடிசலான வாகனங்களே இங்கே போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கு ஆடை என்பதே ஏற்கனவே ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் ஆடைகள் தான்., உள்ளாடைகள் உட்பட. இங்கே வந்து குவியும் இந்த ஆடைகளை துவைத்து சந்தையில் விற்கிறார்கள். அதுவே அவர்கள் மானத்தை மறைக்கின்றது.

மழை எப்போதும் பெய்யும்; வெயில் எப்போதும்  அடிக்கும். எப்போது மழை பெய்யும் எப்போது வெயிலடிக்கும் என்பதை எந்த ஊர் ரமணனும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் பழகிப்போன மக்கள் இவற்றை பற்றி கவலை கொள்வது கிடையாது. கொளுத்தும் வெயிலில் கோட் சூட் போட்டுக்கொண்டு நடக்கும் மக்களை பார்க்க முடியும். அதுவும் அமெரிக்காவில் யாரோ போட்டு தூக்கி எறிந்த சாயம் போன ஒன்று. பெண்கள் அணியும் ஜீன்ஸ் பேண்டும் அவ்வாறே. உதட்டு சாயம் இல்லாத பெண்களை காண்பது அரிது. கனத்த கருப்பு உதடுகளுக்கு சிவப்பு சாயம் துளியும் பொருந்தாது என்பதை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.

கினியாவின் பணத்திற்கு கினியா ஃப்ராங்க் என்று பெயர் அதற்கு சர்வதேச சந்தையில் மதிப்பு கிடையாது. ஒரு யூரோவிற்கு கினியாவின் பணம் 10500 தருகிறார்கள். நான் தங்கியிருந்த ஓட்டலில் தெரியாத்தனமாக 50யூரோவை மாற்றினேன். அவர்களோ 5,25,000 கினியன் ஃப்ராங்க் தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழித்தேன். நமது ஒரு ரூபாய் இவர்கள் மதிப்பில் 150 கினியன் ஃப்ராங்க். ஒண்ணரை லிட்டர் தண்ணீர் 6000க்கு விற்கப்படுகிறது (நமது ரூபாய்க்கு 40). ஆண்களை விட பெண்களே அதிகம் உழைக்கிறார்கள். குடும்பத்தை பேணுகிறார்கள். அதிகம் குழந்தை பெறுகிறார்கள் பத்து பெற்றால் மூன்று அல்லது நான்கு பிழைக்கிறது. குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகம் உள்ள நாடு கினியா. சமூக பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியில் நடமாடும் சூழல் முற்றிலுமாக இல்லை. நான் இந்திய ஒன்றியத்திற்கான கௌரவ தூதரான திரு. அசோக் வாஸ்வானி அவர்களை சந்திக்க சென்ற போது ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரி உடன் வந்தார். அன்றிலிருந்து நான் செனிகல் தலை நகரான டக்கார் திரும்பும்வரை அவர் என்னுடனே இருந்தார். அது ஒரு அசூயை உணர்வை ஏற்படுத்தினாலும் பாதுகாப்பு என்பது முதன்மையானது என்பதால் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
(தொடரும்...)



Thursday, August 17, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் – கினியா (1) 18-08-2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா
கடந்த வாரம் அலுவலகம் வந்த நண்பர் ரகு ''மழைக்காலத்தில் மாஸ்கோ'' என்ற பயணக்கட்டுரை தேசத்தின் குரல் இதழில் வெளியான போது நன்கு வரவேற்பு பெற்றதாகவும் நான் தொடர்ந்து ஏன் உக்ரேன் மற்றும் கஜகஸ்தான் பயணத்தைப் பற்றி எழுதவில்லை என்றார். எழுத நேரம் கிடைக்கவில்லை என்னும் வழக்கமாக சொல்லும் பதிலையே சொல்லி வைத்தேன்.  இந்த முறை ஆப்பிரிக்கா பயணஅனுபவங்களை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல என்றும் வேலைச்சுமைக்கு இடையே களைப்பு நிவாரணியாக கருதியே நான் எழுதுகிறேன் என்றும் சொன்னேன். அவர் சமாதானமானதாக தெரியவில்லை. எனவே எழுதத் தூண்டிய தோழர். ரகுவிற்கு இந்த பயணக் கட்டுரை சமர்ப்பணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து தேசங்களுக்கும் பயணித்திருந்த போதிலும் கினியா எனப்படும் தேசத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறை. அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் ஆப்பிரிக்காவின் மூக்கு என வர்ணிக்கப்படும் கினியாவின் தலை நகரமான கொனாக்ரிக்கு பயணம் மேற்கொள்வது என்று முடிவான சூழலில் இவ்வளவு தூரம் சென்ற பிறகு அருகே இருக்கும் செனிகலுக்கும் ஐவரி கோஸ்ட்டிற்கு போய்விட்டு வர வேண்டியது தானே என்று எங்கள் நிறுவன இயக்குனர் பணித்தார். அதுக்கென்ன போனா போச்சு என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு பயணத்திற்கு ஆயத்தமானேன்.
சென்னையிலிருந்து துபாய் நான்கு மணி நேரப் பயணம். துபாயிலிருந்து கொனாக்ரிக்கு பத்து மணி நேரப் பயணம்...இடைவிடா பயணம். தூரம் 7457 கி,மீ. மட்டுமே. பயணம் துவங்கியது ஆகஸ்ட் 15தேதி. சுதந்திரதினம் என்பதால் விமான நிலையத்தில் எட்டடுக்கு பாதுகாப்பு என்று புதிய தலைமுறை செய்தி கூறியது. எனவே இரவு 9.45 மணி விமானத்திற்கு 6.30மணிக்கே கிளம்பினேன். அது என்ன எட்டடுக்கு பாதுகாப்பு என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தது. விமான நிலையத்தின் நுழைவாயிலில் கார் நுழையும் போது ஓட்டுனரை வினவினேன் ''அது என்னது பாஸ்...எட்டடுக்கு பாதுகாப்பு...ஒண்ணையும் காணோம்...?'
''இதோ இருக்கே....இந்த பக்கம் நாலு...அந்த பக்கம் நாலு...அவ்வளவுதான்...'' என்றார். இரும்பு தடுப்புகள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கூட்டி பார்த்தால் ஏழு தடுப்புக்கள் தான் இருந்தன. அடப்பாவிகளா...இதுலயுமா மோசடி என்று வியந்தபடி விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் இறங்கினேன். வழக்கம் போல கூட்டம் களை கட்டியது. எமிரேட்ஸ் விமானத்தின் போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு குடியேறல் பிரிவில் கடவுசீட்டில் முத்திரை பெற்றுகொண்டு பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்ற போது பாஜக எம்.பி இல.கணேசனும் இருந்தார். அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அதற்கான 1992ஆம் ஆண்டு வரலாற்றை விவரிக்க இங்கே இடமில்லை என்பதால் கடந்து செல்கிறேன்.

விமானத்தில் எனக்கு வர்த்தக வகுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியான இருக்கை. சுவையான உணவு பரிமாறப்பட்டது. துபாய் வந்திறங்கிய போது 12.30 மணி. அடுத்த விமானம் 7.55 மணிக்கு. எமிரேட்ஸ் நிறுவனத்தின் விருந்தினர் கூடத்தில் இடம் பெற்று, வசதிகள் இருந்தும் தூங்க முயற்சித்து தோற்றுப்போனேன். கைவசம் இருந்த எம்.வி.வெங்கட் ராம் எழுதிய காதுகள் நாவலை வாசிக்க துவங்கினேன். 1993 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் விருது பெற்ற நாவல். ஆடிட்டரி ஹல்லூசினேசன் என்னும் வினோதமான மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் என்னும் கதாநாயகனின் கதை. சற்றே பிசகினாலும் ஆபாசமென வாசக சமூகம் முத்திரை குத்த சாத்தியமிக்க கதையை தனது அசாத்திய எழுத்து வன்மையினால் பேரிலக்கியமாக உருவாக்கியிருந்தார் எம்.வி.வி. 
சற்றேறக்குறைய 17 ஆண்டுகள் மூளை, நரம்பியல் மற்றும் மனோத்தத்துவத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாசிப்பனுவத்தை சுவாரசியமாக்கியிருந்தது. படிக்கும் போதே என் காதுகளுக்குள்ளும் குரல்கள் கேட்க துவங்கின. உற்று கவனித்த போது ''என்னோட ரெண்டு கோடி எங்கேடா?'' என்று ஒரு குரல் துள்ளியமாக கேட்டது. அது எங்கள் நிறுவன நிதித்துறை தலைவர் திரு.துர்கா பிரசாத்தினுடையது. நான் அந்த இரண்டு கோடி ரூபாயை எனக்காக வாங்கவில்லை. எனது ஏற்றுமதி துறைக்கான அடிப்படை கட்டுமான மற்றும் நிர்வாக செலவிற்காக வாங்கியது தான். இருந்த போதிலும் திருப்பி தந்து விடுகிறேன் என்று நான் சொன்ன காலஅளவிற்குள் திருப்பித்தர இயலாததால் நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி இது தான். எனவே, வெளி இடங்களில் அவரை காண நேர்ந்தால் எதிர் சந்துக்குள் சென்று மறைந்து கொள்வேன். அலுவலகம் என்றால் என் முதன்மை அதிகாரி திரு. பார்த்தசாரதி அவர்களின் முதுகின் பின்னால் ஒளிந்து கொள்வேன். 
பயணம் மிகச்சரியாக 7.55க்கு துவங்கியது. முதன்மை விமானி நபில் அலி அஹ்மெத் மற்றும் துணைவிமானி அல்.அலி கத்ரி இருவரும் விமானம் செல்லும் பாதையையும் பயணிக்கும் நேரத்தையும் அரபியிலும் பின்பு ஆங்கிலத்திலும் விளக்கினார்கள். 7457 கி,மீ தூரத்தை துபாய், ஜெட்டா, டெஹ்ரான், சூடான், எத்தியோப்பியா, சாட், நைஜீரியா, நீஜர், ஐவரி கோஸ்ட், சியாராலியோன் வழியாக பூமிக்கு மேலே 40000 அடி உயரத்தில் பறக்கும் என்றும் பயணிகள் தின்று விட்டு உறங்குமாறும் பணித்தார்கள். கடுமையான அலுப்பு தரும் பயணம் அது. தொலைக்காட்சியில் தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் அதே கண்கள் (புதியது), அச்சம் என்பது மடைமையடா, நானும் ரவுடி தான், துருவங்கள் பதினாறு போன்ற தீஞ்சுவை, மாஞ்சுவை காவியங்கள் ஓவியங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏற்கனவே துருவங்கள் பதினாறு பார்த்து விட்ட நிலையில் நம்பிக்கை தரும் இயக்குனரான கவுதம் மேனனின் ''அச்சம் என்பது மடைமையடா''வை தேர்ந்தெடுத்தேன். டைட்டிலில் இசை ஏ.ஆர்..ரகுமான் என்று பார்த்தவுடனேயே சுவாரசியம் பாதியாக குறைந்தது. படமும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. சிம்பு தனது புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் கன்யாகுமரி கிளம்பியதும் நானும் டி.வியை ஆஃப் செய்துவிட்டு காதுகள் நாவலுக்குள் நுழைந்தேன். (தொடரும்)

Wednesday, April 26, 2017




மீண்டும் மீண்டும்...!
ஏதோ ஒரு காரணம் சொல்லி
உன்னிடம் இருந்து அடிக்கடி
விடை பெற நினைக்கிறேன்
பிரியும் போது நீ தரும்
முத்தத்திற்காக....!

Monday, February 27, 2017

சுஜாதா நினைவாக... (சுஜாதா நினைவு நாள்: பிப்ருவரி 27)


எழுத்தாளர் சுஜாதாவை ஒரு அறிவியல் எழுத்தாளராக மட்டுமே சிறுவயதில் அறிந்திருந்த எனக்கு அவரது ''ஸ்ரீரங்கத்து தேவதைகள்'' ஒரு புதிய பிம்பத்தை தந்தது. சுவாரசியமான எழுத்தில் நகைச்சுவை இழையாட ஸ்ரீரங்கத்தை மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டியிருந்தார். அவர் மூலமாகவே பிரபந்தத்தின் சுவையை அறிந்தேன். ஆண்டாளை காதலித்தது அவர் வழியாகவே. அவரை 31-12-2000 ஆண்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நானும் எனது நண்பர் வெங்கடேசனும் சந்தித்தோம். ஒரு 40 நிமிடம் உரையாடினோம். இடையிடையே ஆங்கிலத்தில் பேசிய எனது நண்பரை தமிழிலேயே பேசலாமே என்று அன்புடன் கடிந்து கொண்டார். நவீன இலக்கியத்தில் எனக்கிருந்த ஈடுபாட்டை வெகுவாக பாராட்டினார். பின் நவீனத்துவத்தை அதன் அடிப்படையோடு போதித்தார். வாசிப்பை பரவலாக்கம் செய்வதன் அவசியத்தை உணர்த்தினார். ''ஒரு நாளில் நீங்களும் எழுத்தாளராக பரிணாமம் பெறுவதற்கு சாத்தியம் நிறைய இருக்கிறது'' என்றார். அவரும் வெண்பா எழுதுவார். நானும் எழுதுவேன். அங்கேயே இரண்டு வெண்பாக்கள் நான் சொல்ல, அதை அவர் திருத்தினார். பசுமையான அந்த நினைவுகளின் ஊடே சிந்தித்து பார்க்கையில் நானும் இப்போது மூன்று கதைகள் எழுதி அவருடைய ஆரூடத்தை மெய்ப்பித்து விட்டேன். ஆனால் வாசிக்கத்தான் என் ஆதர்சனமான சுஜாதா என்னும் மிகப்பெரும் ஆளுமை இல்லை. 

Tuesday, February 14, 2017

பொருள் சுமந்த சொற்கள்: சிறுகதை

பொருள் சுமந்த சொற்கள்: (1)
பெரிய கம்பி கிராதி போட்ட தடுப்பு காவல் அரணருகே நின்ற அந்த காவலர் தன்னை மீறி நுழைய முயன்ற ஆட்டோவை நிறுத்தி ''யாரை பாக்கணும்'' என்று ஆட்டோக்காரரை வினவினார். ஆட்டோ உள்ளிருந்த வைத்தியநாத ஐயர் ''கலெக்டர் வீட்ல கணபதி ஹோமம் பண்ணனும்னு சொன்னாங்க...பூஜை சாமான் லிஸ்ட் கொடுக்கலாம்னு வந்தேன்...வேறொன்னுமில்ல...''
''அப்பிடியா...போங்க....'' ஆட்டோக்காரரிடம் ''நேரா போயி இரண்டாவது ரைட்டு திரும்புங்க...முதல் ரைட்ல இருக்குறது கேம்ப் ஆபிஸ்...பின்னாடி தான் பங்களா இருக்கு...மெதுவா போங்க...உங்க போன் நம்பர் சொல்லுங்க சாமி...ரெஜிஸ்டர்ல எழுதணும்''
''நான் போன் வச்சிக்கிறது இல்லங்க...வீட்டு விலாசம் தரட்டுங்களா?''
''இந்த காலத்தில போன் இல்லாம எப்படி..ம்ம்..சரி...கொடுங்க'' காவலர் பதிவேட்டில் எழுதிக் கொண்டார்.
''ஏன்னா...இப்படியா பொய் சொல்வேள்...அந்த நம்பரை கொடுத்தற வேண்டியது தானே...'' என்றாள் கோதை மாமி.
''ஒன்ன வச்சிண்டு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடி..பூனைய மடியிலே கட்டிண்டு சகுனம் பாக்குற மாதிரி....வாய மூடிண்டு பேசாம வா...எதையும் ஒளறி கொட்டிடுடாதே...பகவானே நாளன்னைக்கு கல்யாணத்தை வச்சிண்டு...என்னைய இப்படி படுத்துறயே...பேசாம என் பிராணனை எடுத்துறப் ப்டாதோ...''
''என்னை எதுக்கு கோவிச்சுக்கிறேள்...நாப்பத்தி நாலு வயசில பதினெட்டு வயசு கூட ஆகாத என்னை எதுக்கு கல்யாணம் பண்ணினேள்...இப்போ பெண்ணுக்கு முப்பத்திரெண்டு வயசில கல்யாணம் பண்றதுக்கு நாக்கு தள்றது ஓமக்கு...ம்ஹ்ம்?
''வாயை மூடுறி பைத்தியம்...ஏதாச்சும் பேசின தொலைச்சுப் புடுவேன்...ஆமா...கடவுளே...என்னை ஏன் இப்படி சோதிக்கிற''
ஆட்டோ நின்றதும் வாசற்படியில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த இருவர் இவர்களை நோக்கி திரும்பினர்.
அதில் ஒருவரை பார்த்து ஐயர் ''வேலாயுதம்...என்னை ஞாபகம் இருக்கா...நான் தான் வைத்திஐயர்...பிள்ளையார் கோயில்....காமாட்சி நகர்''
''அடடே...வாங்க சாமி...மறக்க முடியுமா ஒங்கள...எப்படி இருக்கீங்க'' - வேலாயுதம், கலெக்டரின் மாமனார்.
அருகே இருந்த தனது சம்பந்தியிடம் ஐயரை அறிமுகப்படுத்தினார். ''மச்சான், இவரு வைத்திய நாத ஐயர். நம்ம காமாட்சி நகர்ல குடியிருந்தப்ப அங்கே பக்கத்தில இருந்த பிள்ளையார் கோயில் குருக்கள்...நீங்க கோயிலுக்கு போற ஆளு கிடையாது...அதனால உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...''
வேலாயுதம் ஐயரை நோக்கி ''சாமி...இவரு தான் நம்ம சம்பந்தி...காமாட்சி நகர்ல பாய் வச்சிருந்தாரே தையல் கடை அங்க தான் டெய்லர் வேலை பார்த்தாரு...நீங்க சட்டை போடுவரு இல்லை...அப்படியே தைச்சாலும் பாய் கடையில தைக்க மாட்டீங்க...அதுனால நீங்களும் இவரை பாத்திருக்க முடியாது...பரவாயில்லை...வாங்க உக்காருங்க....சொல்லுங்க...இப்போ என்ன விசயமா வந்தீங்க?
''வேலாயுதம்..அம்பிய போலிஸ் பிடிச்சுட்டு போய்ட்டா...நீதான் உன் மருமகன்கிட்ட சொல்லி அவனை வெளியே கொண்டாரனும்...இதோ பாரு நாளைக்கழிச்சு வைதேகிக்கு கல்யாணம் வச்சிருக்கேன்...இவனை போலிஸ் பிடிச்சிண்டு போய்ட்டா...இந்த வயசில என்னால எங்கே போயி யாரை பார்த்து என்ன பண்ண முடியும் சொல்லு...வேலாயுதம்...இருந்திருந்து 32 வயசில அவளுக்கு கல்யாணம்...மாப்பிளையும் என்ன மாதிரி தான்...சின்ன கோயில்..ஆனால் நிறைய ஹோமம், பூசையெல்லாம் செய்வாரு...வரும்படி இரண்டு ஜீவன் சாப்பிட தேறும்...ஏதாவது செய்ப்பா...''
வேலாயுதத்தின் சம்பந்தி, கலெக்டர் குமரேசனின் தகப்பனார் முத்தையா இடைமறித்தார் '''பதறாதீங்க...என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க''
''சார்..ஒங்கள எனக்கு முன்னபின்ன தெரியாது...இருந்தாலும் சொல்றேன்...அவன் கொஞ்சம் வேற மாதிரி பழக்கம் உள்ளவன்...ராத்திரி ரோந்து போறவா இவன பிடிச்சிண்டு போய்ட்டா...''
''வேற மாதிரி பழக்கம் உள்ளவன்னா...?''
''அதாவது கஞ்சா கலந்து சிகரெட் பிடிப்பான்''
கோதை மாமி கோபமாக '''இதோ பாருங்கோ...என் புள்ளையப் பத்தி தப்புதப்பா பேசாதேள்...அவன் கஞ்சாவெல்லாம் பிடிக்க மாட்டான்...தங்கமான பிள்ளை...உடல் வலிக்குதுன்னு கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்பிடுவான் அவ்வளவு தான்...''
ஐயர் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
முத்தையா புரியாமல் விழித்தார். வேலாயுதம் பரிதாபமாக முத்தையாவை பார்த்தார்.
வேலாயுதம் ஐயரை நோக்கி ''சாமி...என்ன இது...நீங்க ஒண்ணு சொல்றீங்க...மாமி ஒண்ணு சொல்றாங்க.....அயோடெக்ஸ் திங்கறானா..என்ன இது?
வேலாயுதம் ''நான் என்னத்தை சொல்வேன்...அம்பிக்கு வேணாத பழக்கம்லாம் சேர்ந்துடுத்து...வெத்திலையில தான் ஆரமிச்சான் அப்படியே சிகரெட், அப்புறம் கஞ்சா இப்போ அயோடெக்ஸ்..."இவளுக்கு புத்தி பேதலிச்சி போச்சு...வைதேகி, அம்பிக்கு அப்புறம் பிறந்த ரெட்டை குழந்தைகள் ராமுவும் லட்சுவும் போனவருசம் சைக்கிள்ல போகும் போது தண்ணி லாறி மோதி ஸ்பாட்ல இறந்து போய்ட்டா...அதிலிருந்து இவளுக்கு அடிக்கடி புத்தி சுவாதீனமில்லா போகுது...என்னால முடிஞ்ச மட்டும் வைத்தியம் பாத்தேன்...மேற்கொண்டு என்னால எதுவும் செய்ய முடியல...!
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிவப்பு விளக்கு சுழல காவல்துறையின் வண்டி ஒன்று உள்ளே நுழைந்தது. அனைவரும் அமைதியாக இருக்கும்படி முத்தையா சைகை காட்டினார்.
மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளே நுழைந்தார். முத்தையாவையும் வேலாயுதத்தையும் பார்த்து வணக்கம் சொன்னவர், ஐயர் கூட இருப்பதை பார்த்து ''என்ன சார் ...வீட்ல எதுவும் விசேசமா...பூஜையா...ஹோமமா?'' என்றார்.
முத்தையா ''அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்...இவங்க நம்ம மச்சானுக்கு வேண்டப்பட்டவங்க...இவங்க பையன போலிஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்களாம்...நாளன்னைக்கு மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கார்...அது தான் எதாவது உதவி செய்ய முடியுமா....ன்னு''
மாவட்ட கண்காணிப்பாளர் ஐயரை நோக்கி ''எந்த ஸ்டேசன் சாமி...என்ன பண்ணினான்னு பிடிச்சிட்டு போனாங்க?''
''இங்க தான் சார்...வ.உ.சி நகர் போலிஸ் ஸ்டேசன்...ராத்திரி ரோந்து போனவா பிடிச்சிட்டு போய்ட்டா''
''யாரையும் நாங்க சும்மா  பிடிக்கிறதில்ல சாமி...சந்தேகம் இருந்தா மட்டும் தான் பிடிப்போம்...உங்க பையன் என்ன பண்ணினான் அதை சொல்லுங்க முதல்ல..''
''அவன் கொஞ்சம் கஞ்சா பிடிப்பான்...செட்டியார் பாலத்துக்கிட்ட''
மாமி தன்னிலை இழந்தவளாக மீண்டும் எகிறினாள் ''அபத்தமா பேசாதேள்...அம்பி அப்படிபட்டவன் இல்லை சார்...கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்பிடுவான் அவ்வளவுதான்...அப்பறம் சத்தம் எதுவும் போட மாட்டான் அமைதியா இருப்பன்...எம்புள்ளையினால ஒரு தொந்தரவும் யாருக்கும் இருக்காது...தங்கம்...''
வேலாயுதம் ''சார்..இதைத்தான் வந்ததிலிருந்து சொல்லிக்கிட்டுருக்காங்க மாமி...ஏன் சார் அயோடெக்ஸ யாராவது சாப்பிட முடியுமா?''
''இல்ல...இது பிரச்சினை வேற மாதிரி போகுது...அயோடெக்ஸ யாரும் சாப்பிட மாட்டாங்க...பஞ்சாப்ல தான் அந்த பழக்கம்...இந்தம்மா சொல்றது அபின்னு நினைக்கிறேன்....நீங்க கொஞ்சம் உள்ளே வர்றீங்களா...''
வேலாயுதமும் முத்தையாவும் ஐயரை காத்திருக்க சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றனர்.
''இதோ பாருங்க சார்...இதென்னவோ நார்காட்டிக்ஸ் கேஸ் மாதிரி தெரியுது..தேவையில்லாம உங்க மகனை இதுல தலையிட சொல்லாதீங்க...பேர் கெட்டு போகும்...நான் என்னால முடிஞ்ச அளவு உதவி பண்றேன்...என்ன ஸ்டேசன் சொன்னாங்க...வ.உ.சி, நகர் தானே...அது நம்ம டிஸ்ட்ரிக்லேயே வராது...காஞ்சிபுரம் ரேஞ்ச்ல வரும்...ஏ.சி.ஜெயராஜ்கிட்ட பேசுறேன்...கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லுங்க...டைம் எடுக்கும்...விசயத்தை கவனமா கையாளணும்...மேட்டரை உங்க புள்ளகிட்ட கொண்டு போகாதீங்க...''
பேசிக் கொண்டிருக்கும் போதே கலெக்க்டரின் மனைவி வந்து கண்காணிப்பாளருக்கு காபி தந்துவிட்டு வேலாயுதத்திடம் ''யாருப்பா அது வெளில?'' என்றாள்.
வேலாயுதம் ''உன் கூட படிச்சானே அம்பி அவனோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க...அம்பியை போலிஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்களாம்...'' என்றார்.
''ஏன்...என்ன பண்ணினான்...அவன் ஒரு அசமந்தமாச்சே...அப்பாவிப்பா அவனுக்கு ஒன்னுமே தெரியாது...பாவம்பா''
காவல்துறை கண்காணிப்பாளர் ''அம்மாடி...நீ இதுல தலையிடாதே...நான் பாத்துக்கிறேன்...வாயும் வயுறுமா இருக்கிறவங்களுக்கு இந்த டென்சனே கூடாது...இன்னைக்கு இண்டர் டிபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்கு...போறதுக்குள்ள வழியில நிறைய முடிவு எடுக்க வேண்டிய சமாச்சாரங்கள் இருக்கு...அவரை பிக்கப் பண்றதுக்குத்தான் நான் வந்தேன்...சீக்கிரம்....போ...போயி உங்க வீட்டுக்காரரை அனுப்பு

கோதை மாமி அந்த பங்களாவே தனக்கு சொந்தமானதைப் போல அங்கிருந்த பூ ஜாடிகளையும் செடிகளையும் காதலோடு வருடிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள். ஐயருக்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
கோதை மாமி ''பாத்தீங்களா டெய்லர் பையன்லாம் கலெக்டர் ஆயிட்டான்...அவனுக்கு ஆட்டோக்காரன் பொண்ணு கொடுத்துருக்கான்...நம்ம இப்படி அவங்ககிட்ட அல்லாடிக்கிட்டு இருக்கோம்...பகவான் எப்படி லோகத்தை மாத்திண்டிருக்கார் பாத்தேளா...?
ஐயர் ஒரு கையாளாகத்தனமான பார்வையுடன் ''அவாள்லாம் படிச்சா...அரசாங்க உத்யோகத்திற்கு போய்ட்டா..ஏன் அம்பிக்கு என்ன கொறைச்சல்...எஸ்.எஸ்.எல்.சில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினவன் தானே...அப்புறம் சகவாசம் சரியில்ல..வெற்றிலை போட்டான் கண்டிச்சேன்...நீ விடலை....புகையிலை போட்டான்...அப்பவும் கண்டிச்சேன்...நீதான் விடலை...அப்புறம் சிகரெட், கஞ்சா இப்போ அயோடெக்ஸ்ல  வந்து நிக்குது...திருவையாறு பாடசாலைக்கு நான் அனுப்பினா நீ போய் கூட்டாந்து பக்கதில வச்சிக்கிறாய்...அழகு பெத்த புள்ளைகள தண்ணி லாரிக்கு தூக்கி கொடுத்துட்டு இப்போ இருக்குறவனையும் தொலைச்சு புடுவோமோன்னு பயமா இருக்கு..ஒன்னை மாதிரி ஒருத்தியையும் வச்சிண்டு...நான் என்னத்தை பண்றது''
கலெக்டர் மனைவி இருவருக்கும் வணக்கம் சொல்லி காபி தந்தாள்.
''ஏண்டி பொண்ணே...ஆட்டோகாரர் வேலாயுதத்தோட பொண்ணு தானே நீயி...ஆமா நெத்திச்சுடி வச்சிருக்கிறயா...இருந்தாக் கொடேன்...கலெக்டர் பொண்டாட்டி நீயி...நெத்திச்சுடி இல்லாம இருக்குமா......வைதேகிக்கு நாளன்னைக்கு கல்யாணம்....நாலு நாள்ல திருப்பி கொடுத்துடுறேன்!
அந்த கர்ப்பிணிப் பெண் மாமியை ஒரு மாதிரியாக பார்த்தாள். ஐயர் தலையில் அடித்துக் கொண்டார்.
''கோதை.. என்னை ஏண்டி கொல்ற...பேசாம வாயை மூடிண்டு இரு...நீ போம்மா...அவளுக்கு கொஞ்சம் சித்தம் சரியில்ல....''

பொருள் சுமந்த சொற்கள்: (2)
சிறிது நேரம் கழித்து கண்காணிப்பாளரும் கலெக்டரும் புறப்பட்டு போக, காரில் ஏறுவதற்கு முன் கண்காணிப்பாளர் வேலாயுதத்தை அழைத்து ''நீங்க அவங்களோட ஸ்டேசன் போயி பையனை கூப்ட்டுக்கோங்க...யாராவது கேட்டா ஏ.சி,ஜெயராஜிகிட்ட நான் பேசிக்கிறதா சொல்லுங்க...விசயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது...சரியா...?''
வேலாயுதம் சட்டையை அணிந்து கொண்டு மாருதி காரை கிளப்பினார். மாமி ஒய்யாரமாக முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
''எனக்கு பின்னாடி ஒக்காரவே பிடிக்காது...முன்னாடி ஒக்காந்தா தான் வேடிக்கை பார்த்துக்கிட்டே வரலாம்''
கார் கலெக்டர் பங்களாவைத் தாண்டி வெளியே வரும் போது மாமி வேலாயுதத்திடம் ''ஏன்...இப்படி ரெண்டு பேரும் உம்முனு வர்றேள்...கொஞ்சம் பாட்டு...பழைய பாட்டு இருந்தா போடுங்கோளேன்...என்று அருகே இருந்த சி.டி,பிளேயரின் ஏதோ பட்டனை தட்ட அதில் சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே என்று பாட்டு உச்ச சத்தத்தில் அலறியது. சத்தத்தை வேலாயுதம் குறைத்தார்.
''இது தனிக்காட்டு ராஜானு ரஜினியும் ஸ்ரீதேவியும் நடிச்ச படம். இந்த பாட்டை படத்தில கட் பன்ணிட்டா...அம்பி அதை அவனோட மொபைல் போனில் போட்டுக்காட்டினான். ஸ்ரீதேவி கட்டியிருக்கிறா மாதிரி அதே வெள்ளைக்கலர் புடவை ஒன்னு ....வாங்கணும்....ஏன்னா வாங்கித் தர்றேளா...''
''வாங்கலாம் கோதை...வாங்கலாம்....மொதல்ல அம்பி வரட்டும்...வேலாயுதம் நீங்க ஒண்ணும் வித்தியாசமா நெனைக்கப் ப்டாது....அவளுக்கு சித்தம் சரியில்லை...எனக்கு ஏன் இப்படி ஒரு எழுத்தை தெய்வம் எழுதுச்சோ தெரியலை...வாழவும் முடியல...சாகவும் வழியில்ல...! ஐயரின் கண்களில் நீர் கோர்த்திருந்ததை கார் ஓட்டிக் கொண்டிருந்த வேலாயுதம் கவனிக்க தவறவில்லை.
''கவலைப்படாதீங்க சாமி...எல்லாம் சரியாயிடும்....வேறென்னத்தை நான் சொல்றது''
கார் சீரான வேகத்தில் சாலையில் போய்க்கொண்டிருக்க, நடைபாதைக்கடையில் தர்ப்பூசணி பழங்கள் விற்பதை மாமி கண்டாள்.
''ஏன்னா...தர்ப்பூசணி சீசன் ஆரம்பிச்சிடுத்து...அம்பி விரும்பி சாப்பிடுவான்...வீட்டுக்கு போகும் போது ஒண்ணு வாங்கணும்...மறந்துடாதேள்...''
''வாங்கலாம்...மொதல்ல அம்பி வரட்டும்....''ஐயருக்கு வார்த்தைகள் வரவில்லை.
கார் காவல் நிலைய வாசலில் நின்றதும் காவலுக்கு நின்ற காவலர் வேலாயுதத்தை கண்டு கொண்டார்.
''ஐயா...நீங்க எங்க இங்க...சொல்லிவிட்டா நாங்களே வந்திருப்போமே....''
''இல்லை அது வந்து...இவங்க நம்மளுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க...இவங்க பையனை பிடிச்சி இங்கதான் வச்சிருக்கிறதா சொன்னாங்க...காலையில எஸ்.பி வீட்டுக்கு வந்தவரு ஏ.சி.ஜெயராஜ்கிட்ட சொல்றேன்...ஸ்டேசன்ல போய் கூப்ட்டுக்கோங்கனு சொன்னாரு...அது தான் வந்தோம்...பையன் உள்ளேதான இருக்கான்..?''
காவலர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ''நீங்க கொஞ்சம் தனியா வர்றீங்களா...?"
''சாமி நீங்க கொஞ்ச நேரம் பின்னாடி அந்த பெஞ்ச்ல ஒக்காருங்க...இதோ வந்துடுறேன்...இங்கே ஏதாவது எழுதிக் கொடுக்கனும்னு நினைக்கிறேன்''
மாமி ''ஏன்னா...அம்பி இங்கே தான் எங்கேயோ இருக்கான்...அவன் வாசனை எனக்கு வருது...நீங்க செத்த இருங்கோ...நானே கண்டுபிடிக்கிறேன்'' என்று காவல் நிலையத்தின் பக்கச்சுவரை ஒட்டி நடந்தாள். ஐயருக்கு அந்த இடத்தில் அமரவோ அதே வேளையில் அங்கிருந்து விலகவோ மனமில்லாமல் நின்றபடியே கையில் பூணூலைப் படித்துக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தார்.

காவலர் வேலாயுதத்திடம் ''ஐயா, சொல்றேன்னு அதிர்ச்சி ஆகாதீங்க...நேத்து ராத்திரி செட்டியார் பாலத்துக்கிட்ட ரெய்டு போனப்பதான் பையன் மாட்டினான்...விசாரிக்கும் போது இன்ஸ்பெக்டர் லேசா தட்டினாரு...பையன் சுருண்டு விழுந்து பேச்சு மூச்சில்லாம இருந்தான்...அப்பறம் கொஞ்சம் நேரத்தில உடம்பு விறைச்சி போச்சு...செத்துப் போய்ட்டான்...மேலதிகாரிங்க யாருக்கும் விசயம் தெரியாது...நீங்க விசயத்தை பெரிசு படுத்தாம இங்கயிருந்து போயிடுங்க...பாடியை திருப்பி செட்டியார் பாலத்துக்கிட்டயே நாங்க போட்டுருவோம்...ஒரு பதினோரு மணி போல போயி எடுத்துக்கோங்க...யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல...இல்லைனா போஸ்ட்மார்ட்டம் அது இதுனு அலையவிட்டு சாகடிப்பானுக...புரிஞ்சுக்கோங்க...''துளியும் பதட்டமில்லாமல் சர்வ சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே போனார்.
வேலாயுதத்திற்கு கால்களுக்கு கீழே பூமி நழுவியது. அருகே இருந்த மரச்சன்னலை பிடித்துக் கொண்டு ''ஐய்யயோ...நான்  அந்த பையன பெத்தவங்களுக்கு என்னன்னு சொல்லி புரியவைப்பேன்...?''
காவலர் ''ரொம்ப முக்கியமான விசயம்...ஒங்க மருமகனுக்கு இது தெரியக்கூடாது...''
வேலாயுதம் ''அப்போ எஸ்.பி...?''
''அவர் டிபார்ட்மெண்ட் ஆளுங்க...அவர் எங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு...''
''ஐயா இது கொலையில்லையா...நாளன்னைக்கு அவன் அக்காவுக்கு கல்யாணம்யா...பாவம் அந்த பொண்ணுக்கு 32 வயசுல இப்போதான் ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு''
''சார்...சொல்றத புரிஞ்சுக்கோங்க...வேணும்னு நாங்க செய்யல...ஒரு கோபத்தில தான் இன்ஸ்பெக்டர் அடிச்சாரு...பையன் சுருண்டுட்டான்...இப்போதைக்கு நான் சொல்றது தான் ஒரே வழி...சீக்கிரம் கிளம்புங்க...பாடியை பதினோரு மணிக்கு பாலத்துக்கிட்ட போயி எடுத்து காரியம் பண்ணிடுங்க...''
தள்ளாடியபடியே வேலாயுதம் ஐயர் அருகே வந்து நின்று எப்படி சொல்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்றார்.
ஜெபித்துக் கொண்டிருந்த ஐயருக்கு அருகே மாமி இல்லாததை கண்ட வேலாயுதம் ''சாமி...சாமி...மாமி எங்கே?'' என்றார்.
நிதானத்திற்கு வந்த சாமி ''இங்கே தான் எங்கேயோ அம்பி இருக்கான்...வாசனை வருதுன்னு சொன்னாள்...தெரியலையே...''
''என்ன சாமி..ஏற்கனவே மாமிக்கு சித்த சுவாதீனம் இல்லை...கொஞ்சம் கவனமா பாத்திக்கிட வேணாமா...ம்ம்''
வேலாயுதம் காவல் நிலையத்தின் பக்கவாட்டுச்சுவரை ஒட்டி ஐயரின் கையை பிடித்துக் கொண்டு நடந்தார். மழையில் நனைந்த சுவர்கள், சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பழைய, புதிய சைக்கிள்கள், மோட்டர் பைக்குகள் என ஈரம் மக்கிப் போன அந்த மண்ணில் புதிதாய் முளைத்த இளந்தளிர்களை மிதித்தபடியே இருவரும் நடந்தனர்.
நீண்ட சுவரின் வலது புறம் திரும்பி இருவரும் மாமியின் குரல் கேட்டு விக்கித்து நின்றனர்.
''அம்பி...இதோ பாரு...அப்பாவும் ஆட்டோக்காரர் வேலாயுதமும் உன்னை கூட்டிண்டு போறதுக்கு வந்திருக்கா...ஆமா...வேலாயுதத்தோட மருமகன் யாரு தெரியுமா...நீ ஒருதலையா லவ் பண்ணினயே லட்சுமி அவளோட ஆத்துக்காரன் தான்...அவன்தாண்டா... இப்போ கலெக்டர்..அவகிட்டதான் வைதேகி கல்யாணத்துக்கு நெத்திச்சுடி கேட்டிருக்கேன்...அப்புறம் மாப்பிள்ளைக்கு வாட்சு போடணுமாம்...நீதான் போடணும்...நம்ம லட்சு ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தப்போ ஹெட்மாஸ்டர் குடுத்தாரே அதைத்தான் எடுத்து வச்சிருக்கேன்...ராத்திரி எடுத்துப்பார்த்தேன்..அது ஓடவே இல்லை...ரெண்டு குலுக்கு குலுக்கினேன்...ஓட ஆரம்பிச்சிடுத்து...ஜானவாசத்துக்கு கார் கேட்டா அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிப்புட்டேன்...அம்பது வயசுக்காரனை இவன் தான் எங்காத்து மாப்பிளைன்னு ஊருக்கு காட்டணுமாக்கும்...இதோ பாரு எந்திரிடா செல்லம்....இனிமே இங்கே இருக்காதே...பேசாம திருவையாறு பாடசாலைக்கு போயிடு...ரெண்டே வருசம் தான்...அப்புறம் ஒன் தோப்பனாருக்கு ஒரு புள்ளையார் கெடச்ச மாதிரி ஓனக்கும் ஒரு புள்ளையார் கெடைக்காமலா போயிடும்...இனிமே அயோடெக்ஸ் சாப்பிடாதேடா...நீ கஞ்சா பிடிக்கிறேன்னு உங்கப்பா கலெக்டர் ஆத்தில வச்சு சொல்றார்...பெத்தவ எனக்கு எப்படி இருக்கும்....என் புள்ள அப்படிப்பட்டவன் இல்லைன்னும் கண்டிச்சி சொல்லிப்புட்டேன்...கண்ணு எழுந்திரிடா...நாளன்னைக்கு வைதேகிக்கி கல்யாணம்...அப்பாவுக்கு வயசாயிடுத்து இல்லையா...நீதானே அவருக்கு ஒத்தாசையா இருக்கணும்...கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் வைதேகிக்கு சாந்தி கல்யாணம் ஆன பின்னாடி நீ கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்டுக்கோ...அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டேன்...சரியா...அப்புறம்...வைதேகியோட புக்காத்துல உனக்கு வேட்டி துண்டுதான் தருவேன்னு சொன்னா நான் தான் அவனுக்கு பேண்ட் சர்ட் எடுத்துக் கொடுங்கோன்னு கட் அன் ரைட்டா சொல்லிபுட்டேன்...பொண்ணோட பொறந்த ஒரே ஆம்பளை நீ...சிம்பிளா வேட்டி துண்டு கொடுத்து கடமையை கழிக்க நெனச்சா நான் விடுவேனா...என்னடா இது உன் முகம் நீ பொறந்தப்போ எப்படி இருந்துச்சோ அப்படியே இருக்கு....உன் அப்பாவோட பொறந்த அத்தைதான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள். அவதான் சொன்னா பாருங்கோ மன்னி குழந்தை சூரியனை ஒடைச்சு எடுத்த துண்டு மாதிரி ஜொலிக்கிதுன்னுட்டு...அதுனால தான் ஒனக்கு ரகுராமன்னுட்டு பேரு வச்சேன்...இப்போ அவ ஆளும் குணமும் மாறிப் போய்ட்டா...பத்திரிக்கை கொடுக்க போனப்பக்கூட ''மன்னி கல்யாணத்த எப்படி பண்ண போறேள்...இந்தாங்க என்னால முடிஞ்சது அப்படின்னு ஒரு பத்தாயிரம் காசு கொடுத்தா என்னவாம்...அவ ஆத்துக்காரனுக்கு என்ன எல்.ஐ.சில பியுனா இருக்குறான்...தினமும் வரும்படி உண்டு...ம்ஹ்ம்...என்னத்தை சொல்ற்து...சரி...சரி....நீ எந்திரி...நம்ம போகலாம்....!

ரகுராமன் சுவற்றின் ஓரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். கண்களிலும் உதடுகளின் வழியே பற்களின் மீதும் வந்தமர்ந்த ஈக்களை விரட்டியபடி மாமி பேசிக்கொண்டேயிருந்தாள். பேசுவதற்கு அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன. அதைக் கேட்பதற்கு ரகுராமன் என்னும் அம்பியின் காதுகளும் திறந்தே இருந்தன....!














Wednesday, February 1, 2017

பட்ஜெட் பலாபலன்கள் 2017-18 (துலாம் முதல் கன்னி வரை)

துலாம்:
துலாம் ராசி குடிமக்களே!
இந்த ஆண்டு பட்ஜெட் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் விதமாக கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு என பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வேலை கிடைக்காது, அயல் நாட்டில் வேலை பார்த்தால் சுபகிரகமான அமெரிக்கா இப்போது பாவகிரகமான டொனால்ட் ட்ரம்பின் சாரத்தில் சஞ்சாரம் செய்வதால் அந்த வேலையும் பறி போகும். அதற்கு மற்றொரு பாதகாதிபதியான மோடியும் உதவுவார்.
பரிகாரம்:
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் சென்று அங்குள்ள தூதரை சிவப்பு ஒயின் கொண்டு வழிபாடு செய்யவும்.
கூடுதலாக, டில்லியில் வீற்றிருக்கும் ஜனாதிபதிக்கு ஏலக்காய் மாலை சாற்றி இரண்டு நெய் தீபம் பிரதி ஞாயிறு ஏற்றவும். இயலாதவர்கள் டாஸ்மாக்கில் ஆஃப் வோட்கா வாங்கி தண்ணீர் கலக்காமல் அடித்து மட்டையாகி விடவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி குடிமக்களே!
ஏற்கனவே ஏழரைச்சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் இப்போது ஜன்ம சனியான மோடியின் மூன்றாம் பார்வையாலும் விரய சனியான ஜெட்லியின் பார்வையாலும் விபரீத விளைவுகளை சந்திக்க இருக்கிறீர்கள், கடன் கொடுத்தவர் கொடுத்த கடனை திருப்பி கேட்பார். வீட்டுக்காரர் வாடகை கேட்பார். பால்காரர் தண்ணீர் அதிகம் கலப்பார். விரயச்சனியான அருண் ஜெட்லி வருமான வரி என்ற பெயரில் அவ்வளவு பணத்தையும் அள்ளி கொண்டு போவார்.
பரிகாரம்:
டெல்லியில் இருக்கும் மோடியில் இல்லம் சென்று அவர் வீட்டின் முன் அமர்ந்து ''ஐயய்யோ எங்களை விட்று''என்று கதறி மனமுருகி வேண்டிக் கொண்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமோசனம் கிட்டும் வாய்ப்புண்டு.
தனுசு:
தனுசு ராசி குடிமக்களே!
உங்களுக்கு இத்தனை பிலிம் காட்டி வந்த மோடியும் அருண் ஜெட்லியும் வக்ரகதியில் இயங்குவதால் அவர்களின் சுயரூபம் தெரிய வரும். வருமானம் இராது ஆனால் வரி கட்டுவீர்கள். கோடி வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் அதானிக்கு காண்டிராக்ட் கிடைக்கும் உங்களுக்கு தெருக்கோடி மட்டுமே கிட்டும். கோவணத்தை இறுக கட்டுக்கொண்டு தூங்குவது மானத்தை காக்கும்.
பரிகாரம்:
டெல்லி சென்று அருண் ஜெட்லிக்கு பால் குடம் எடுத்து அதை அபிசேக ஆராதனை செய்துவர உக்கிரம் குறையலாம். பாலில் கோமியம் கலந்து அபிசேகம் செய்து வர சிறப்புப் பலனுண்டு. அப்படியே பாலில் சிறிது பசுஞ்சாணம் கலந்து மோடிக்கு அபிசேகம் செய்யலாம்.
மகரம்:
மகர ராசி குடிமக்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதியான ஜெட்லி தனது லக்கினாதிபதி வீடான மோடியை பார்ப்பதால் உங்களுக்கு புதுக்கடன் உருவாகும். விவசாயத்திற்காக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் உங்கள் நட்சத்திர நாதனான ஓ.பன்னீர் செல்வமும் கைவிட பூச்சி மருந்து குடித்து உயிர் விட நேரிடும்.
பரிகாரம்: உங்களை தற்காத்துக் கொள்ள கருப்பு நிறத்தில் ஆடை அணியவும். போயஸ்கார்டன் சென்று சின்னம்மாவை தரிசித்து மண் சோறு சாப்பிடுதல் நலம். பூச்சி மருந்திற்கு பதிலாக கோக் அல்லது பெப்சி குடிக்க வலியில்லாமல் எமனிடம் சென்று சேரலாம் என்றும் ஜோதிட விதிகள் கூறுகின்றன.
கும்பம்:
கும்ப ராசி குடிமக்களே>
அருண் ஜெட்லியும் மோடியும் ஒரே வீட்டில் அமர்ந்து உங்கள் லக்கினாதிபதியை மூன்றாம் பார்வையாக பார்ப்பது ஆறுதலைத் தருமென்றாலும் இதை மிகச் சிறப்பான இடம் என்று உறுதியாக கூற இயலாது. வரிச்சுமையும், எரிபொருள் விலையேற்றமும் நீட் தேர்வும் உங்கள் தூக்கத்தை தொலைக்கச் செய்யும்.
பரிகாரம்:
எல்.கே.அத்வானிக்கு வடைமாலையும் ஸ்மிருதி இரானிக்கு எலுமிச்சையில் விளக்கும் ஏற்றி வழிபட பலன் கிட்டும்.
மீனம்:
மீன ராசி குடிமக்களே!
விரக்தியின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தக்கூடிய நிலையில் ஜெட்லியும் மோடியும் நிலைகொண்டுள்ளனர். அவர்களால் உங்களுக்கு வாகன செலவு, கல்வி செலவு, கழிப்பறை செலவு என கண்ணை கட்டும் செலவுகள் வரப்போகின்றன. வக்ரகதியில் இயங்கும் மோடியின் நேரடி பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நாய் உங்களை துரத்திக் கடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பரிகாரம்:
தினமும் ஆஃப் வோட்கா தண்ணீர் மட்டும் கலந்து ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டு வர பலன் கிட்டும். ஐய்யப்பனுக்கோ முருகனுக்கோ மாலை அணிந்து இதை செய்வது கூடுதல் மற்றும் உடனடி பலனைத் தரும்.

பட்ஜெட் பலாபலன்கள்: 2017 18 (மேஷம் முதல் கன்னி வரை)

பட்ஜெட் ஜாதகம்: 2017 18
மேஷம்:
மேஷ ராசி குடிமக்களே! இந்த ஆண்டு உங்கள் ராசியின் அதிபதியாகிய அருண் ஜெட்லி பாதகாதிபதியாகி ஒன்பதாம் இடத்தில் மோடியை பார்ப்பதால் மருத்துவ செலவு அதிகமாகும். உளுந்தம் பருப்பில் சாம்பார் வைப்பதை குறைத்துக்கொண்டு பாசிப்பருப்பில் சாம்பார் வைப்பது மருத்துவ செலவை குறைக்கும். மோடி இந்த வருடம் ஏப்ரல் மாதத்துவக்கத்தில் இருந்து வக்ரகதியில் இயங்குவதால் பாக்கெட்டில் இருக்கும் பணம் வேகமாக கரையும். ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போனால் உங்கள் முறை வரும் போது மெசினில் பணம் தீர்ந்து போயிருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் டாஸ்மாக்கில் கிடைக்கும் பிராந்தி ஒரு குவார்ட்டர் தண்ணீர் கலக்காமல் அருந்தவும்.
ரிஷபம்: ரிஷப ராசி குடிமக்களே! வருடத்தின் ஆரம்பத்திலேயே காளையைக் கொண்டு ஒரு அரசியலை மோடி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக இருந்தாலும் அது முடிவல்ல. உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மோடி இருப்பதால் மனத்தில் ஒரு நிம்மதி இன்மை தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். பணம் கையில் இருந்தாலும் செல்லாது, செல்லும் பணம் இருந்தாலும் பொருள் எதுவும் வாங்கும் விலையில் கிடைக்காது.
பரிகாரம்: டெல்லியில் இருக்கும் பாராளுமன்றம் சென்று ''மோடி வாழ்க'' என்று 101 முறை கோஷம் போட்டு வர பிரச்சினையின் தீவிரம் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசி குடிமக்களே!
இந்த ஆண்டு ஒரு கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொள்ளப் போகிறீர்கள். பத்தில் அருண் ஜெட்லி ஒன்பதில் மோடி. பாவ கிரகங்கள் அடுத்தடுத்த வீட்டில் இருந்தால் மல்லையாவே ஆனாலும் மண்ணாகிப் போவான் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதன்படி உங்களுக்கு கேடுகாலம் துவங்கி விட்டது. நாசமாய் போவதற்கு எல்லாவிதமான திட்டங்களும் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் வாயிலாக தரப்போகிறார்.
பரிகாரம்:
பிரதி மாதம் வருமான வரி அரசு கேட்டபடி கட்டி விடவும். வங்கியில் கடன் வாங்கி திருப்பி தரவேண்டி இருந்தால் வெளிநாடு தப்பி செல்ல ஒன்பதாம் இடத்து மோடி உதவி செய்வார். சரக்கடிக்கும் போது ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்க்க நல்ல பலனுண்டு.
கடகம்:
கடக ராசி குடிமக்களே,
பாதகாதிபதியான அருண் ஜெட்லி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திலிருக்கும் மோடியை வக்ரபார்வை கொண்டு பார்ப்பதால் உங்கள் மனைவி உங்களுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கரையும். மேலும் பிள்ளைகளின் கல்வி செலவை மூன்றாம் இடத்திலிருக்கும் பிரகாஷ் ஜவ்டேகர் பலமடங்கு உயர்த்தி உங்களை கடனாளியாக்குவார்.
பரிகாரம்:
வீட்டில் ஸ்மிருதி இரானி படத்திற்கு எலுமிச்சம் பழம் மாலை சாற்றி வழிபடுவது பிரச்சினைகளை குறைக்கலாம். பிரதி சனிக்கிழமை மாலை விஸ்கியில் சோடா கலந்து குடித்து வர கவலையை சற்று நேரம் மறக்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி குடிமக்களே!
உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான மோடி ஏழாம் பார்வையாக மற்றொரு பாதகாதிபதியான அருண் ஜெட்லியை பார்ப்பது சிறப்பான நிலை அல்ல. சோற்றுக்கே சிங்கி அடிக்க வேண்டி வரும். கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் திணறுவீர்கள். துவரம் பருப்பை அதானி குழுமம் பதுக்கி வைத்து விற்பதால் சாம்பார் வைக்கத் திணறுவீர்கள். கட்டிட தொழிலாளர்கள் மணல் கிடைக்காமல் வேலை இழப்பார்கள்.
பரிகாரம்:
மோடி முன்னாள் ஆட்சி செய்த குஜராத் சென்று அவரால் பாதிக்கப்பட்ட / கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு அஞ்சலி செலுத்தி வர நல்ல பலன் கிட்டும். அடுத்து வரும் தேர்தலில் முகனூலில் இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வர உலகத்திற்கே நன்மை உண்டாகும். வெயில் காலத்தில் பட்ஜெட் அமுலாக்கப்படுவதால் பீர் சாப்பிடவும். ரம்மை தவிர்க்கவும்.
கன்னி:
கன்னி ராசி குடி மக்களே,
இந்த பட்ஜெட்டிற்கு பின்னால் உங்கள் வாழ்க்கை சூன்யமாக போகிறது. வரி கட்டி மாளாது. கடனுக்கு வட்டி கட்டி தீராது. சிகரெட் விலை பன்மடங்கு உயரவிருப்பதால் நிம்மதியாக புகைக்கக் கூட முடியாது. உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் பாதகாதிபதி நீசம் பெற்று மோடியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் பிள்ளைகள் நீட் என்னும் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வி பெறுவது தடைபடும்.
பரிகாரம்:
சென்னை கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள தமிழ் நாடு தலைமை செயலகம் முன்பு அமர்ந்து அங்கே வீற்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு மிக்சர் படைத்து வழிபாடு செய்ய பலன் கிட்டும்

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டும் தேசிய கீதமும் - 22/01/2016


சனிக்கிழமை (22/01/2016) மதியம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
ராமாபுரம் சிக்னல் தாண்டி டி.எல்.எஃப் அருகே போராட்டக்குழு குழுமியிருந்தது. வளாகத்தின் பிரதான வாயிலில் வாகனங்கள் வரும் வழியில் பாதியை மறைத்து போராட்டக்குழுவினர் அறவழியில் கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். வளாகத்திலிருந்து வெளியே வரும் வாகனங்களுக்காக சாலை வாகனங்கள் ஒருபுறம் நிறுத்தப்பட்டன. இந்த இடைவெளியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் என்னை அணுகி போராட்டம் குறித்த எனது பதிவை கேட்டார்.
''சார்...இந்த போராட்டம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
''நான் போராட்டத்தை ஆதிரிக்கிறேன்...போராட்டக்குழுவோடு இணைந்திருக்கிறேன்...எங்கள் பாரம்பரியத்தை காப்பது எங்கள் கடமை''
''இவர்கள் கோஷம் போடும் போது பிரதமரையும் முதல்வரையும் கடுமையாக விமர்சிக்கிறார்களே அது தவறல்லவா?''
''எதனால் அதை தவறு என்கிறீர்கள்?''
''இல்ல சார்....இத செஞ்சது காங்கிரசு ஆட்சி...அதுக்கு மோடி என்ன செய்வாரு?''
''காங்கிரசு செஞ்சது அவ்வளவும் தப்பு...நாங்க வந்தா அம்புட்டையும் தூக்கி நட்டமா நிறுத்துவோம்னு தானே அவரு சொன்னாரு...இப்போவும் நாங்க அதைத்தான் சொல்றோம்...அவர்கள் செய்தது தவறு...நீங்கள் அதை சரி செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம்.''
''தேசியக்கொடியை தலைகீழாக பிடிப்போம்...அரைக்கம்பத்தில் பறக்க விடுவோம்னு சொல்றாங்களே...இதெல்லாம் தப்பில்லையா சார்''
''தேசியக்கொடி ஒரு அடையாளம்...முதலில் இந்தியா ஒரு தேசமல்ல...அது பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு...அனைத்து தேசங்களின் தனித்தன்மையையும் பண்பாட்டையும் காக்கும் வரைக்கும் தான் இந்த அடையாளம் செல்லுபடியாகும்...!''
''இந்தியா ஒரு தேசமில்லையா...எப்படி சார்...தேசியகீதம்னு சொல்றோமே''
''அது வடமொழிங்க....தமிழர்களாகிய நாங்கள் ''நாட்டுப்பண்'' என்று தான் சொல்வோமே ஒழிய தேசியகீதம்னு அதை சொல்லமாட்டோம்''
செய்தியாளர் ஒலிவாங்கியை பிடுங்கிக் கொண்டு மின்னலாய் மறைந்தார்.