Monday, December 19, 2016

ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி

ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (1)
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ - நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வசிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் தூங்கிக் கொண்டிருந்த
என்னை நான் தங்கியிருந்த அன்னை லாட்ஜ் வாட்ச்மேன் டேவிட்டின் குரல் எழுப்பியது.
''32...32....32''
எழும்பி வந்து பார்த்தேன்.
''ஒங்களை பார்க்க ஒரு பொம்பள வந்திருக்கு''
வேகமாக கீழே இறங்கி வந்து பார்த்த போது ஆயிஷா மதினி ஆட்டோவில் அமர்ந்திருந்தாள். மார்கழி பௌர்ணமி வெளிச்சத்தில் கருப்பு துப்பட்டாவில் ஒளிந்திருந்த மதினியின் முகம் கறையற்ற நிலவாக பிரகாசித்தது. 
'என்ன மதினி...ஏதாவது அவசரமா...நீங்க போயி இங்க..அதுவும் இந்த நேரத்தில.'' என்று பதட்டத்துடன் கேட்டேன்.
''ஒண்ணுமில்ல...நாளைக்கி அவுக வாராக...12 மணிக்கு திருவனந்தபுரம் வந்துருவாகலாம்...ஜோஸ் வீட்டுக்கு இப்பதான் போன் வந்துச்சு....வீட்டுக்கு வர சாயங்காலமாயிடும்...காலைல நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வாரியா... மேலேயிருந்து கொஞ்சம் சாமானை எடுக்கணும்''
சொல்லும்போதே மதினியின் கண்களில் காதலனுக்காக காத்திருக்கும் காதலியின் துடிப்பும் பரபரப்பும் நிரம்பியிருந்தது.
''நீங்க போங்க மதினி...நான் காலைல வர்றேன்'' என்றேன்.
நண்பர் ஹக்கீம் பாயின் மனைவியான ஆயிஷா மதினி அறிமுகமானது 99ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான். ஒரு மருத்துவ விற்பனை பிரதிநிதியாக நான் நெல்லூரிலிருந்து பணிமாற்றலாகி வந்த நேரம். கிறிஸ்டியன் காலேஜ் ரோட்டில் நண்பர் சங்கரின் ஏவிஎஸ் லைப்ரரியில் தான் ஹக்கீம் பாயை சந்தித்தேன். சங்கர் நூலகத்தோடு மேடை கச்சேரிகளில் ட்ரம்ஸ் வாசிப்பதையும் தொழிலாக வைத்திருந்தார். அந்த குழுவில் ஹக்கீம் பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில் பாடுவார். அவர் மேடையில் பாடும் ''நிலவே என்னிடம் நெருங்காதே'', ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' போன்ற பாடல்களை ரசிக்க நாகர்கோவிலில் ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. சங்கரின் இசைக்குழுவின் பாடகி லீமாஜோசுடன் அவர் இணைந்து பாடும் ''செந்தூர் முருகன் கோவிலிலே...ஒரு சேதியை நான் கேட்டேன்... கேட்டேன்'' என்ற பாடல் மேடையில் இசைக்கப்படும் பொழுது பாடலின் இடையே ஒரு மந்திர ஸ்தாயியில் ஹக்கிம் பாய்      '' நாளை வருவான் நாயகன் என்று நல்லோர்கள் சொன்னாரடி'' என்று இணையும் போது கைத்தட்டு அள்ளும் என்று சங்கர் அடிக்கடி சொல்லுவார். சிலவேளைகளில் நூலகத்திலேயே ஹக்கிம் பாய் பாடிக்காட்டுவார். ஆனால் நிலையான வருமானமோ அல்லது அதில்  வரும் வருமானம் போதாததாலோ தேங்காய் பட்டிணத்தில் இருந்த பூர்வீக வீட்டை அடமானம் வைத்து அரபு நாடுகளில்  கட்டிடம் கட்டும் கூலித்தொழிலாளியாகப் போனார். அவ்வாறு சென்று விடுமுறைக்காக திரும்பிய தருணத்தில் தான் நான் அவரை சந்தித்தேன். அறிமுகமான சில மணித்துளிகளில் தனது வசீகர புன்னகையாலும் குளிர்ந்த வார்த்தைகளாலும் நெஞ்சுக்கு நெருக்கமானார். 
''தம்பி...இங்க பாருங்க காலுல ஏதோ கரையான் மாதிரி வந்து அரிச்சிக்கிட்டே இருக்கு....இந்தவாட்டி மெடிக்கலு பிரச்சினை ஆயிடுமோன்னு பேடிச்சு வருது...நீங்க கொஞ்சம் பாருங்க...''
ஹக்கீம் பாய் என் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் டை கட்டிய தோற்றத்தையும் பார்த்து மருத்துவர் என்று முடிவு செய்து விட்டார்.
''ஐய்யயோ...பாய் நான் ஒரு சாதாரண மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ்...டாக்டர் இல்லை... இருந்தாலும் என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும்…எங்கே காட்டுங்க பார்ப்போம்'' என்றேன்.
தனது பேண்டை மடித்து காட்டினார். நன்கு சிவந்த பாதங்களில் ஆங்காங்கே மரப்பட்டை போன்று திட்டுக்கள். 
''பாய்..இது சாதாரண எக்சீமா தான்...பயப்பட வேண்டியதில்ல...நான் மருந்து தாரேன்....''
''எங்கே தாம்சம்?'' என்றார் குமரித்தமிழில்.
''இங்கே தான் அன்னை லாட்ஜ்ல...டதி ஸ்கூல் ஜங்சன்''
நாகர்கோவில் கோர்ட் ரோடில் டத்தி ஸ்கூலுக்கு எதிரில் வசந்தம் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் அன்னை லாட்ஜ் பிரம்மச்சாரிகளின் சொர்க்கம். குடும்பத்தை விட்டு தனியே வாடும் வாலிப வயோதிக அன்பர்களின் புகலிடம். அங்கிருந்து கலெக்டர் ஆபிஸ் போக டத்தி ஸ்கூலுக்கு ஒட்டி ஏறுமுகமாக செல்லும் சாலையில் நடந்தே சென்று விடலாம். 

''நம்ம வீடு இங்க தான் ராமவர்மாபுரம்...ஏல சங்கரு..நாளைக்கு தம்பிய கூட்டிட்டு வீட்டுக்கு வாலே...''என்றார்.
''கண்டிப்பா...நீரு வீட்ல சொல்லி தேத்தண்ணி ஏற்பாடு பண்ணும்'' என்றார் சங்கர்.
மறுநாள் நானும் சங்கரும் ராமவர்மாபுரம் சென்றோம். கலெக்டர் ஆபிசுக்கு எதிரே இருக்கும் ரஜே ஆஸ்பத்திரிக்கு அருகே உள்ள குறுகலான சாலையின் வழியே ராமவர்மாபுரத்தை எளிதில் அடையலாம். எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீட்டிற்கு பின்புறம் தான் ராமவர்மாபுரம்.. குறுக்கும் நெடுக்குமாக மிகக் குறுகலான அந்த பிராந்தியத்தினுள்ளே நுழைந்து சரியாக வெளியே வருவது நாகர்கோயிலின் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. சின்னஞ்சிறிய சந்துகளால் ஆன பகுதி அது. சங்கர் தனது பைக்கை ஒரு மூலையில் நிறுத்தி விட்டு         ''ஜேசீ...அந்த கடைசி வீட்டு பெல்லை அடிச்சி பாயை எழுப்புங்க...'' என்றார்.
அந்த பிராந்தியத்தில் வாகனத்தை நிறுத்துவது பிரம்மபிரயத்தனமான செயல். சங்கர் ரொம்ப கஷ்டப்பட்டார். நான் அழைப்புமணியை அழுத்தினேன். கதவு திறந்தது அச்சு அசலாக இந்தி நடிகை மீனாகுமாரி உயிர்பெற்று வந்தது போன்ற ஒரு பேரழகு முகம் தென்பட்டது.
ஆயிசா மதினியின் போட்டோவையும் மீனாகுமாரியின் போட்டோவையும் அருகருகே வைத்து யாரேனும் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து சொன்னால் அவர்களுக்கு சென்னைக்கு மிக அருகாமையில் பெங்களூருக்கு பக்கத்தில் அரை கிரவுண்டு இடம் இலவசமாக தருவேன். பரவசத்தில் வார்த்தை வராமல் 'ஙே'' என்று விழித்துக்கொண்டிருந்தேன். சங்கரும் வரவில்லை...அவர் வண்டியோடு போராடிக்கொண்டிருந்தார். 
''யாரு வேணும்?'' மென்மையான குரல்.
''ஹக்கீம் பாய் வீடு....'' என்று இழுத்தேன்.
மின்னலடிக்கும் புன்னகையுடன் ''உள்ள வாங்க'' என்றார்.
''ஏங்க...உங்களைத்தேடி ஆளுக வந்திருக்காக...''
குளித்து தலை துவட்டியபடி மேலாடை இன்றி லுங்கியுடன் ஹக்கீம் பாய் வந்தார்.
''அடடே...வாங்க தம்பி...சங்கரு எங்கே...அவன் வரல?''
''இல்லை பாய்..அவரு வண்டியை பார்க் பன்ண முடியல...அங்கே சந்துகிட்ட போராடிக்கிட்டு இருக்காரு''
''அது ஒரு பிரச்சினை தம்பி.  இந்த ஏரியாவுல... வண்டிய ரஜே ஆஸ்பத்திரிக்கிட்ட நிறுத்திட்டு நடந்துவர வேண்டியது தானே...ஏய் ஆயிஷா தம்பிக்கு தேத்தண்ணி போடு...சீக்கிரம்''
''பாய்...இந்த மருந்து போட்டு பாருங்க...நல்லாருக்கும்'' என்று என்னிடம் இருந்த ''Elocon Lotion'' குப்பிகளை கொடுத்தேன்.
'இது களிம்பு மாதிரி இல்லையே....இத என்ன செய்றது தம்பி'' 
''வீட்டில் டெட்டாலும் பஞ்சும் இருந்தா கொடுங்க பாய்''
''ஏய்...ஆயிஷா...தம்பி ஏதோ கேக்குறான் பாரு''
டெட்டாலும் பஞ்சும் வர '' இங்கே உக்காந்து காலை காட்டுங்க'' என்றேன்.
நானே அவரது பாதங்களை சுத்தம் செய்து எவ்வாறு மருந்திட வேண்டும் என்று காட்டினேன்.
''ரொம்ப நன்றி தம்பி...எங்கே மத்தவனைக் காணோம்...இன்னுமா வண்டிய நிறுத்துறான்..ம்ம்''
''பாய்..கை கழுவணுமே...கொஞ்சம் சோப் கிடைக்குமா...''
''ஏய்...ஆயிஷா...தம்பிக்கு பாத்ரூமை காட்டு...உள்ளே போங்க தம்பி''
இன்னொருவர் வீட்டு குளியலறைக்குள் நுழைவது போன்ற பாவகாரியம் வேறெதும் இல்லை என்று நம்பும் ஜீவராசி நான். 
அங்கு எதுவேண்டுமானாலும் இருக்கும். இருப்பினும் ஒரு சங்கோஜத்துடன் சென்றேன். அடுக்களைக்கு எதிரில் தான் இருந்தது பாத்ரூம்.
'''சும்மா உள்ள போங்க''என்றார் ஆயிஷா.
அவ்வளவு சுத்தமான குளியலறையை நான் அதுவரை பார்த்ததில்லை. சுவற்றில் கறையில்லை. தேவையற்ற ஆடைகள் இல்லை. இருந்த பொருள்கள் சோப்பு, ஷாம்பு அனைத்திலும் ஒரு ஒழுங்கு இருந்தது. அறை எங்கும் பழைய சிந்தால் சோப் வாசனை.
வீட்டில் நுழையும் போதே கவனித்தேன். செருப்புக்கள் மிக நேர்த்தியாக வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளின் யூனிஃஃபார்ம் ஷூக்கள் கூட மிக ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. அடுப்படி மிக சுத்தமாய் இருக்க அந்த சிறிய வீட்டின் ஒட்டுமொத்த நேர்த்தி ஒருவித பயத்தையே உண்டுபண்னியது.
''ரொம்ப தாங்க்ஸ்ங்க'' என்றேன்.
சிரித்துக் கொண்டே ''எதுக்கு?'' என்றார்.
பதில் சொல்லாமல் நின்றேன்.
''ஒங்காளுகல்ல அண்ணன் பொண்டாட்டிய எப்பிடி கூப்புடுவீங்க?''
''மதினி...அண்ணி...அத்தாச்சி...இப்படி ஏதாவது ஒண்ணு''
''என்னைய மதினின்னே கூப்பிடு''
பழகிய பத்து நிமிடத்தில் உரிமையாய் உரையாடத் துவங்கினாள்.
தேநீர் வரவும் சங்கர் வரவும் சரியாய் இருந்தது. தேயிலையும் பாலும் அளவிடற்கரிய அன்பும் கலந்த பானத்தை சுவைப்பது அற்புதமாக இருந்தது. அடுத்த சில வாரங்களில் நான் அவர்களது குடும்பத்தில் ஒருவனானேன். அவர்கள் குடும்பத்தில் யாருக்கேனும் தலைவலித்தாலும் வயிறு வலித்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை கேட்ட பின்பே மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மருத்துவரை நானே பரிந்துரைக்கும் நிலைக்கு உயர்ந்தேன்.
யாரிடம் அறிமுகப்படுத்தினாலும் உறவு முறையோடு மட்டுமே அறிமுகம் செய்வாள். சுன்னத் என்னும் மார்க்க கல்யாணம், நிக்காஹ் என்னும் திருமண அழைப்பிதழ்கள் தக்கலை, மார்த்தாண்டம், மிடாலம், குலசேகரம், பூதப்பாண்டி என்று அனைத்து சுற்று வட்டாரங்களிலிருந்தும் வந்து குவிந்தன. அனைவரும் உரிமையோடு மாப்பிள்ளை என்றும், தம்பி என்றும் அழைக்க ஆயிசாவோட கொழுந்தன் என்றும் பெயர் பெற்றேன்.

ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (2)
காலையில் வீட்டிற்கு சென்ற போது மதினி வீட்டையே தலைகீழாக மாற்றியிருந்தாள். 
''மேல ஒரு புது மெத்தை இருக்கு...அத இறக்கி தர்றியா...இதுல ஜீனத் மூத்திரம் பேஞ்சு நாறிப்போயி கிடக்கு''
முக்காலி மீது ஏறி பரண் மேல் அமர்ந்தேன். சாமான்களை விலக்கி உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மெத்தையை இறக்கினேன்.
அதிலிருந்து வெளிப்பட்ட டெலிவரி சலான் தேதி இரண்டாண்டுகளுக்கு முன்னால் எனக் காட்டியது.
''மதினி...ரெண்டு வருசமாவா மேலே போட்டு வச்சிருந்தீங்க...?''
''அத ஏன் கேக்குற...போனவாட்டி வந்தப்ப ஒரு நாள் கூட அந்த மனுசன் வீட்டுல தங்கல...ஆஸ்பத்திரியே கதின்னு கிடந்தாரு''
''ஏன் மதினி...என்னாச்சு...?''
''வீட்டுக்குள்ள நுழஞ்ச மனுசன் குளிச்சிட்டு சரியாக்கூட சாப்பிடல...பணத்தை தூக்கிக்கிட்டு திருநெல்வேலிக்கு இக்பாலோட போய்ட்டாரு...அவங்க பூர்வீக வீட்டை அடமானம் வச்சுத்தான் அவரு அரேபியாவுக்கு போனது...வந்தவுடனேயே அதை மீட்டு அவங்க வாப்பா கையில கொடுக்கணும்னு கிளம்பி போயிட்டு வரும் போது ஒரே வவுத்தவலினு துடிச்சிட்டாரு...அப்புறம் மத்தியாஸ் ஆஸ்பத்திரிக்கு போயி ரூபன் டாக்டரை பார்த்தோம்...அவரு உடனே குடல்வால் ஆபரேசன் செய்யணும்...இல்லைனா பொழைக்க மாட்டாரு அப்படின்னு சொல்லிட்டாரு.. இந்தமுறை அவங்களுக்கு இருந்த 30 தென்னை உள்ள தோப்பை அடமானம் வச்சு ஆபரேசன், ஆஸ்பத்திரின்னு செலவு செஞ்சோம்....ஒங்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா...ரெண்டு வருசம் கழிச்சு வந்த அந்த மனுசன் ஒரு நாள் கூட சந்தோசமாயில்ல...''
''விடுங்க மதினி...மனுசன் நல்லாயிருந்தா எவ்வளவு வேணும்னாலும் சம்பாதிச்சடலாம்...ஒடம்பு முக்கியம்ல மதினி''
மெத்தையை மாற்றி போட்டுவிட்டு செட்டிகுளம் ஜங்க்சனிலிருந்து கறி வாங்கி கொடுத்துவிட்டு கிளம்பும் வேளையில் மீண்டும் மதினி அழைத்தாள். 
''டவர் ஜங்சன் பக்கம் உனக்கு வேலை இருக்காப்பா?''
''ஏன் மதினி...எதுவும் வேணுமா?
''நம்ம ரஷீத் கடையில துணி கொடுத்திருக்கேன்...வாங்கிட்டு வந்துர்றியா?''
''நான் இப்போ உமர் டாக்டரை பார்க்க போவேன்...வரும் போது வாங்கிட்டு வந்துர்றேன்''
மார்கழி குளிர் குமரி மாவட்டத்தை அந்த பகல்வேளையைக் கூட ரம்மியமாக்கியிருந்தது.
டாக்டர் உமர் புகழ்பெற்ற காது,மூக்கு, தொண்டை நிபுணர். டவர் ஜங்க்சனிலிருந்து நேரே சென்றால் கட்டபொம்மன் ஜங்க்சன் அதன் அருகில் பெரிய மருத்துவமனை வைத்திருந்தார். பார்த்துவிட்டு ரஷீத் கடையில் புகுந்தேன்.
''ஏய்...மாப்ளே...என்ன இந்த பக்கம்...நா பையமாருக்கு தைக்கிறதில்லடே....ஹே...ஹே...ஹே''
''இல்ல மச்சான்...ஆயிஷா மதினி துணி வாங்கிட்டு வரச் சொன்னாங்க...அதுதான் வந்தேன்''
''ஏடே...மத்தவன் ஊருலருந்து வர்றானா?''
''ஆமா மச்சான்... ஹக்கிம் பாய் மதியம் வர்றாரு...''
''அவன் வந்தாம்னா ஒன் மதினியாளுக்கு இது அவசியமே இருக்காதுடே...ஹே...ஹே...ஹே''
பேசிக்கொண்டே உயரம் குறைத்து தைக்கப்பட்ட மூன்று உள்பாவாடைகளை செய்தித்தாளில் மடித்து கொடுத்தார்.
அவருடைய பேச்சை நான் ரசிக்கவில்லை என்பதை உணர்ந்த ரஷீத் ''மாப்ளே...கோவிச்சிக்காதீரும்...நம்மள மாதிரி வயசு புள்ளைக அப்படித்தான் பேசிக்கணும்...ஹே...ஹே...ஹே''
நான் முறைத்தேன். அதற்குள் தேனீர் வரவழைத்திருந்தார் ரஷீத் மச்சான். எப்போது தேனீர் சொன்னார் என்று தெரியாது. ரஷீத் மச்சான் ஒரு பெரிய கேளிக்கை பேர்வழி. வரைமுறையில்லாமல் அனைவரையும் கிண்டல் செய்வார். ஆனால் யாரும் கோவித்துக்கொள்ள மாட்டார்கள்.
 ''ஒமக்கும் எனக்கும் ஒரே வயசா...ம்ம்...ஒம்பேரன் வயசு எனக்கு ஞாபகத்தில வையும்...''
வீட்டிற்கு வரும் போது ராஜன் நாடார் நின்று கொண்டிருந்தார். ஒரு காலத்தில் மரக்கடை, இசைக்குழு என்று வாழ்ந்து பின்பு சகவாசத்தினால் கெட்டு நிற்கும் வினோத பிறவி. ராஜன் நாடார் இப்போதெல்லாம் செட்டிக்குளம் ஜங்க்சனில் சக்ரவர்த்தி தியேட்டருக்கு எதிரில் உள்ள இரும்புக்கடையில் அமர்ந்து தேச விசாரணையில் மட்டும் ஈடுபடுவார். மற்றபடி அவருடைய செயல்பாடுகள் ஒன்றும் சொல்றமாதிரியெல்லாம் இல்லை. மகன்கள் நல்ல அரசு வேலைகளில் இருப்பதால் சாப்பாடிற்கு கவலை இல்லை. ஹக்கிம் பாய்க்கு இவர் மீது ஒரு தனி மரியாதை. ஆனால் மதினிக்கு இவரை கண்டாலே பிடிக்காது. ஹக்கிம்பாய் அவரை சகலை என்று தான் கூப்பிடுவார். அதனால் எனக்கும் சகலையாகிப் போனார்.
''என்ன அண்ணாச்சி இந்த பக்கம்...?''
''ஏலே...மத்தவன் ஊருல இருந்து இன்னைக்கி வருதாம்னு தாணு சொன்னாம்ல...நெசமா''
''அதுக்குள்ள மூக்குல வேர்த்துருச்சா ஒமக்கு..ம்ம்''
''இல்லடே..போனவாட்டி அவன் கொண்டு வந்த சரக்கை தாணு வாரிக்கிட்டு போய்ட்டாண்டே...இந்த வாட்டி விடுறதாயில்ல...ஆமாம்...''
''அண்ணாச்சி...இதெல்லாம் ஒரு பொழப்பா...ஒமக்கு என்ன கொறச்சல்...பசங்க நல்ல வேலையில இருக்காணுக...கௌரவமா வீட்டோட இருந்தா என்ன..ம்ம்?''
''ஏலே...ஒனக்கு வயசு பத்தாதுடே...நா வாழ்ந்த வாழ்க்கைய...பொழச்ச பொழப்ப ஹக்கிம்ட்ட கேட்டு பாரு...ஏன் ஒன் மதினியாளுக்கிட்ட கூட கேளு...இன்னைக்கி நாதியத்து போனேண்டே...நீங்களெல்லா அறிவுரை சொல்லுதீக...''
''அறிவுரை இல்ல அண்ணாச்சி...வசதியில்லாதவர்னா பரவாயில்ல...பசங்க வசதியா இருந்தும் நீர் இப்படி இருந்தா சங்கடமாயிருக்குல்ல..அதுக்கு சொன்னேன்''
''நீ ஒண்ணும் புடுங்க வேண்டாம்...மத்தவன் வந்தவுடனே எனக்கு வேண்டியதை ஒதுக்கி வை....ஒனக்கு புண்ணியமா போகும்...நான் சக்ரவர்த்தி தியேட்டர்கிட்ட இரும்புக்கடையில தான் ஒக்காந்திருப்பேன்...வந்து கொடுத்துட்டு போயிடு...''
அவர் சென்று விட்டார் என்று உறுதியான மறுநொடியே ஆயிஷா மதினி கதவை திறந்தாள்.
''எத்தனை வாட்டி சொன்னாலும் நீயும் அவரும் திருந்த மாட்டீக''
''இல்ல மதினி...வாழ்ந்து கெட்ட மனுசன்...பாக்க பாவமாயிருக்குல்ல...அதுதான்''
''அந்தாளு ஒரு...'' என்று சொல்லுமுன்பே அந்த குறுகிய சந்தின் வாயிலும் முக்கிய வீதியும் இணையும் இடத்திலிருந்து மூன்று முறை ஹார்ன் ஒலி கேட்டது.
''ஏய்...அவுக வந்துட்டாகடே...போ...போ...போய்ப்பாரு..." மதினி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தாள்.

ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (3)
ராமவர்மாபுரத்தில் கார் வரும் போகும் சத்தம் புதிதல்ல. இருப்பினும் மதினி மிகத்துல்லியமாக ஹக்கிம் பாயின் வருகையை உணர்ந்திருந்தாள். அவள் சொன்னது மெத்தச் சரி. வந்தது ஹக்கிம் பாய் தான். பாய்ந்தோடி காரில் இருந்த இரண்டு துணிப்பையையும் அவர் தூக்கிக்கொள்ள நைலான் கயிறு போட்டு கட்டிய இரண்டு பெட்டிகளை நானும் டிரைவரும் ஆளுக்கொன்றாக சுமந்து கொண்டோம். 
ஹக்கிமை பார்த்த மாத்திரத்தில் ஆயிஷா மதினி கண்களில் காதலும் காமமும் கருணையும் சரிவிகித சமானமாக பிரவாகம் எடுத்தன. நாங்கள் இருந்ததால் கண்களாலேயே அவற்றை ஹக்கிம் பாய்க்கு பரிமாறினாள். ஹக்கிம் பாயும் மிக நுட்பமாக அதற்கு பதில் தெரிவித்தார். 
''புள்ளைகளை எங்கே காணோம்?''
நானும் அப்போது தான் கவனித்தேன். பிள்ளைகளைக் காணோம். 
''இக்பால் வீட்டுல எல்லோரும் சினிமாவுக்கு போனாக ...நாந்தான் அனுப்பி வச்சேன்''
''பகல்ல எதுக்குடி சினிமா?''
''இல்ல...அது வந்து....அதுகளுக்கும் பொழுதுபோகனும்ல...!'' மதினி இழுத்தாள்.
ஹக்கிம் புரிந்து கொண்டார்.
''குளிக்கிறீகளா...தேத்தண்ணி போடட்டா''
''ஒரு நிமிசம் பொறு....தம்பி...சகலை வந்தாரா?''
''இப்போ எதுக்கு அவரை கேக்குறீக'' மதினி பதறினாள்.
ஹக்கிம் அதை கண்டுகொள்ளாமல் ''அதுல ரெண்டு ஜேபி ஸ்காட்ச் இருக்கு...ஒண்ண சகலைகிட்டயும் ஒண்ண சங்கர்ட்டயும் கொடுத்துர்றியா?''
பெட்டியை திறந்து எடுக்குமுன் ஹக்கிம் குளிக்க சென்றிருந்தார். ஏர்போர்ட் செக்கிங் முடித்த அடையாளங்களும் அதை சுற்றியிருந்த பாலித்தீன் ராப்பர்களையும் களைந்து எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. வீடு முழுவதும் குப்பை. மதினிக்கு பிடிக்காத விசயம் குப்பை. பொறுமையாக எடுத்து வீட்டிற்கு வெளியே எறிந்தேன். எறிந்து விட்டு திரும்பி வீட்டிற்குள் நுழையும் வேளை மதினி கண்களாலேயே என்னை அழைத்தாள். காதோரம் மெதுவாக கிசுகிசுத்தாள்.
''இந்த கருமத்தை கொண்டு போய் கொடுத்துட்டு நீ லாட்ஜுக்கு போய்டு...நாளைக்கு பகல்ல சாப்பிட இங்கே வந்துடு...மதினி பிரியாணி செய்யப்போறேன்'' 
''சரி மதினி...ஆனா நாளைக்கு வரமுடியாது...ஜெயசேகரன் ஹாஸ்பிடல் போகணும்,,,நீங்க பாயை கவனியுங்க'' எனக்கு மதினி மாதிரி கிசுகிசுக்க முடியாத கணமான குரல்.
''ஏன் வரமுடியாதுங்குறான்..என்னவாம்?'' குளித்து முடித்த ஹக்கிம் தலையை துவட்டியபடியே வந்தார். மதினி கண்களால் ஜாடை செய்தாள்.
''அது ஒண்ணுமில்ல பாய்...நாளைக்கு பிரியாணி செய்றாகளாம்...சாப்பிட வரச்சொல்லுறாக..."
''ஆஹான்...ஏன் அதிலென்ன பிரச்சினை?''
''இல்ல பாய்...நாளைக்கு ஜெயசேகரன் ஹாஸ்பிடல்ல வேலை...டாக்டர் ரஞ்சித் அப்புறம் டாக்டர், சாபு இவங்களை பாக்குறதுக்குள்ள 4மணிக்கு மேல ஆயிடும்..அது தான்.. இவங்க ரெண்டு பேருக்கிட்டயும் அப்பாயிண்மெண்ட் கிடைக்கிறதே கஷ்டம் பாய்...!.''
''சரி...அப்போ காலையில வந்துடு...உங்கிட்ட் கொஞ்சம் விவரம் கேக்கணும்''
''சரி...பாய் நான் காலையில வர்றேன்...'' என்று இரண்டு பாட்டில்களை எடுக்கும் போது ரஷீத் மச்சான் செய்தித்தாளில் சுற்றியிருந்த துணி உருண்டை கீழே விழுந்தது.
''என்னது அது?'' என்று ஹக்கிம் பாய் கேட்க, ஜாக்கெட் என்று நானும் உள்பாவாடை என்று மதினியும் சொல்ல பாய் எங்கள் இருவரையும் குழப்பத்துடன் பார்த்தார்.
''ஏண்டி...இந்த வேலையெல்லாமா இவனை செய்யச் சொல்லிக்கிட்ருக்க...ம்ம்''
''இல்லை உமர் டாக்டரை பாக்க போறேன்னு சொன்னான். அதனால அப்படியே ரஷீது கடையில உயரம் கம்மி பண்ணச்சொன்னத வாங்கியாரச் சொன்னேன்...வேறொன்னுமில்ல..!
பாய் இருவரையும் முறைத்தார்.
நான் பதில் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன். 
மார்கழி மாதம் அந்த மாலைவேளையில் நகரத்தை குளிராலும் மென்மையான இருளாலும் போர்த்தியிருந்தது. சந்து திரும்பி நிலா வெளிச்சத்தில் கே.பி ரோட்டில் ஹைமாவதி ரஜே ஆஸ்பத்திரிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்ட எனது டிவிஎஸ் சாம்ப் வண்டி அருகில் வரும் போது தான் உரைத்தது. வண்டி சாவி எங்கே? மீண்டும் நடந்தேன். அதற்குள் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டு பக்கவாட்டு படுக்கையறையின் சன்னல் வழியே நீலநிற இரவு விளக்கின் வெளிச்சம் வெள்ளைநிற திரைச்சீலை தாண்டி காம்பவுண்ட் சுவரை வண்ணமயமாக்கியிருந்தது.
அறையிலிருந்து கொலுசின் சிணுங்கல் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க ஸ்தம்பித்துப் போன நான் கதவை தட்டுவதா அல்லது மணியை அழுத்துவதா என்ற குழப்பத்தில் தயங்கியபடியே நின்றேன்.
ஏதாவது செய்து விட வேண்டும் ஆனால் அது அவர்களை பதட்டமடைய வைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருந்தேன். 
அந்த சந்தில் அதுவே கடைசி வீடு. அந்த பிராந்தியமே மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. மெதுவாக அந்த மௌனத்தை கலைத்தது மதினியின் மென்மையான குரல் சற்றே அழுத்தமாக அறையிலிருந்து ''இது என்ன புதுப் பழக்கம்?''
சரி..இனி பொறுப்பதில்லை என்று கதவை தட்டினேன்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பின் கதவிற்கு பின்னாலிருந்து ''யாரது'' என்னும் குரல். ''நான் தான் பாய்...வண்டி சாவி டிவி மேலே இருக்கு...கொஞ்சம் எடுத்து தர்றீகளா?''
ஒரு பக்கமாக திறந்த கதவின் இடுக்கில் இருந்து ஒரு கை வெளிப்பட்டு சாவியும் குரலும் மட்டும் வந்தது..''காலையில வந்துருடே''
''தாங்க்ஸ் பாய்''
மார்கழி பௌர்ணமிக்கு மறுநாள் நிலவின் அளவிலோ ஒளியிலோ பெரிய வேறுபாடு இல்லை. சாலை விளக்குகள் எதுவும் எரியவில்லை. ஹைமாவதி ரஜே க்ளினிக் வரைக்கும் இரவின் இருளை நிலவொளி தின்று கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து வெகுவாக குறைந்திருந்தது. மெல்லிய காற்று வருட இலைகள் மரத்தின் கிளைகளோடு மௌனமொழியில் பேசிக்கொண்டிருந்தன.
எனது காதோரம் யாரோ கிசுகிசு குரலில் பேசுவது போன்ற பிரமை      '' என்ன இது புதுப்பழக்கம்''. அது என்ன? குழப்பத்திற்கு மாறாக எனக்கு அடக்க முடியாத சிரிப்பு தான் வந்தது.

ஆண்டாள் - ஆயிஷா - மார்கழி (4)
மறுநாள் காலை வெட்டூர்ணிமடத்தில் இருக்கும் ஒவன் ட்ரஸ்ட் நூலகத்தில் எனது ஃப்ரென்ச் வகுப்பை முடித்துக் கொண்டு ஹக்கிம் பாய் வீட்டிற்கு சென்றேன்.
இடியாப்பமும் பாலும் காலை உணவாக பரிமாறப்பட்டது. பாலில் மிக நேர்த்தியாக வெட்டப்பட்ட வாழைப்பழம், பேரிச்சம் பழம். கிஸ்மிஸ் பழம், முந்திரிபருப்பு என்று மதினி வெறுமனே காய்ச்சிய பசும்பாலை பிரம்மாண்டமாக்கியிருந்தாள். ஹக்கிமுக்கு பரிமாறும் போது கண்களில் காமமும் காதலும் வடியும். எனக்கு பரிமாறும் போது அன்பும் அருளும் நிரம்பி வழியும். மதினி ஸ்கை ப்ளூ நிறத்தில் நைட்டியும் அதற்கு எதிரான அடர்நீலவண்ண துப்பட்டாவால் தலையிலிருந்து கழுத்து வழியாக மார்பு வரை போர்த்தியிருந்தாள். மதினியின் முகம் நித்ய பௌர்ணமி அதற்கு மேலும் மெருகூட்டியது அந்த அடர் நீல வண்ண துப்பட்டா. சற்று உன்னிப்பாக கவனித்தேன். எளிதில் யாரும் கண்டுகொள்ள முடியாதபடி மெல்லிய ரோஜா நிறத்தில் உதட்டு சாயம் பூசியிருந்தாள். அன்று நான் கண்டது அது நாள் வரை பார்த்திராத முகம். மகிழ்ச்சியும் நிறைவும் கனிந்த ஒரு தோற்றம்.  அந்த சூழலின் தன்மைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் காதுகளில் மென்மையான குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ''இது என்ன புது பழக்கம்?''
இனி தாமதிக்கக் கூடாது. உடனடியாக கிளம்ப வேண்டும். கிளம்ப எத்தனித்த போது ஹக்கிம் பாய் நிறுத்தினார். 
''இந்த தடவை ஒரு வாரம் தான் லீவு...ஆமா...ஏஜெண்ட் வேற ஆளு...ஒடனே கிளம்பணும்..மெடிக்கலு புதுசா பண்ணனும்....கால்ல இந்த கரையானுக்கு நீ கொடுத்த மருந்து நல்லா இருந்தது...ஆனா நான்தான் தொடர்ந்து போடாம விட்டுட்டேன்...நீ நம்ம கோட்டாறு ஆஸ்பத்திரில ஒனக்கு தெரிஞ்ச டாக்டர்மாருகிட்ட சொல்லி சர்டிபிகேட் வாங்கித்தரணும்''
சமையற்கட்டுக்கு அருகில் தலையை குனிந்தவாரு மதினி நின்று கொண்டிருந்தாள்.
''அதுக்கென்ன பாய்...ஒண்ணும் பிரச்சினை இல்ல...டாக்டர்.பிரவீன் நம்மாளு தான்...வாங்கிடலாம்...நான் நாளைக்கி கூட்டிட்டு போறேன்''
அனைத்தும் நல்லபடியாய் முடிந்து ஹக்கிம் விமானம் ஏறினார். மதினி பழைய தோற்றத்திற்கு திரும்பினாள்.
மார்கழியில் சனிக்கிழமை மாலை மது அருந்துவது ஒரு நல்ல பழக்கமாக இருந்தது அன்று. டத்தி ஸ்கூல் ஜங்சனுக்கு எதிரில் இருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு அருகாமையிலேயே அந்த மதுக்கடை இருந்தது.
நானும் நண்பர் ராமகிருஷ்ணனும் அங்கே ஐக்கியமானோம். ஹக்கிம் பாயின் உறவினர்களும் தேங்காய்பட்டிணத்தை சேர்ந்தவர்களுமான
நசீரும் யாசினும் அங்கே தென்பட்டார்கள்.
''ஏய்...மாப்ளே...மத்தவனுக்கு என்ன நடந்துச்சு தெரியுமாடே...?'' என்றனர்.
நான் குழப்பத்துடன் ''யார்...யாருக்கு என்ன ஆச்சு?'' என்றேன் புரியாமல்
''போன வாரம் போனானே ஹக்கிமு...கட்டிடம் இடிந்து விழுந்து ஸ்பாட்லயே மௌத்தாயிட்டானாம்...தெரியாதா...?''
மது அருந்தாமலே மயக்கம் வந்தது. ஒட்டுமொத்த மதுக்கூடமே சுற்றியது. நான் ஒரு வாரம் ஊரில் இல்லை. அலுவலக விசயமாக  சென்னை சென்றிருந்தேன். ஒருவாரம் தானே ஆச்சு...அதற்குள்ளாகவா...ஐயய்யோ...மதினி...!
வாங்கிய மதுக்குப்பியை திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடினேன். வீடு இருட்டடைந்து இருந்தது. கதவை தட்டலாமா...மணியை அழுத்தலாமா...இரண்டுமே செய்தேன். இளையவள் ஜீனத் கதவை திறந்தாள். மரணம் குறித்தோ அது ஏற்படுத்தும் வாழ்வியல் வெற்றிடம் குறித்தோ புரிந்து கொள்ளமுடியாத வயசு ஜீனத்திற்கு.
உள்ளே மூத்தவள் பர்வீன் மடியில் படுத்திருக்க மதினி விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நான் தான் ட்யூப் லைட்டை போட்டேன். திடுக்கிட்டு விழித்தவள் என்னைக் கண்டு வீறிட்டு அழுதாள். 
''இதுக்கா...இதுக்குதானா..என்னை படைச்சே ரப்பே.....வந்தாகளே மனுசன்...எதுக்கு..அவுக முகத்தை கடைசியா காமிச்சிட்டு போகத்தானா...அன்னைக்கி ராத்திரி கூட ''ஆயிஷா...மார்க்கத்துல மறுபிறப்புக்கு இடமில்ல...ஆனா...நான் இன்னும் பத்து பிறப்பு எடுக்கணும்னுடி உங்கூட வாழ்றதுக்குன்னாரே....கோவப்பட்டேன்...ஆனா எங்கே மொகம் கோணிருமோன்னு என்ன இது புது பழக்கம்னேன்....ஒரு பிறப்பைக்கூட முழுசா அனுபவிக்காம இப்பிடி போய்ட்டாரே...எங்களை அனாதியாக்கிட்டு போய்ட்டாரே...இந்த பெண்டு புள்ளைகளை வச்சிக்கிட்டு நா என்னத்த செய்வேன்...!
முதல்முறையாக ஆயிஷா மதினியை தொட்டேன். 
''எப்போ...என்ன ஆச்சு''
பதில் சொல்லாமல் என் தோள்களில் சாய்ந்து அழுதாள்...அடக்க முடியாத அழுகை…பேச்சு வரவில்லை…என்னென்னவோ உளறினாள்.
இறுதியாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபடி ''எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்வியா...அந்த மய்யத்தை (உடலை) மட்டும் இங்கே கொண்டு வந்துடு...அந்த மனுசன் உடம்பை ஒரு தடவை தொட்டுப்பாக்கணும்..கஷ்டம்ங்கறாங்க''
''நான் பண்றேன் மதினி...நான் பண்றேன்....''
மருத்துவ விற்பனை பிரதிநிதி சங்கத்தின் வாயிலாக குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மோகனை தொடர்பு கொண்டு தூதரக நடவடிக்கை மேற்கொண்டோம்.  ஹக்கிம் பாயோடு சேர்ந்து 12 தொழிலாளிகள் இந்தியர், பங்களாதேசி, பாகிஸ்தானி, இரானி என சகலவிதமானவர்களும் அந்த உயரமான கட்டிடத்தின் பக்கச்சுவர் சரிந்து விழுந்து அகால மரணமடைந்தனர் என்றும் உடல்கள் மிகமோசமாக சிதைந்து விட்டன என்றும் உத்தேசமான உடல் தான் கிடைக்கும் என்றும் அங்கேயே அடக்கம் செய்வது நல்லது என்று தகவல் வந்தது. 
மதினி நொறுங்கிப் போனாள்.
''நான் என்னத்தை பண்ணுவேன்...ச்சீ என்ன ஒடம்பு இது...என்ன உசிரு இது...இதையெல்லாம் கேட்டுட்டு இன்னும் சாகாம...ச்சே...அன்னைக்கி   நீ வந்திட்டு போனதும் வயிறு பசிச்சதய்யா...ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் அவுக தொடுற மாதிரியே இருக்குய்யா...நான் இன்னும் ஏன் உசுரோட இருக்கேன்...இந்த ஒடம்பு எதுக்கு...இந்த உசுருதான் எதுக்கு!''

என்ன பதில் அவளுக்கு ஆறுதல் தரமுடியும் என்று தெரியாததால் இதற்கு எதுவும் பதில் சொல்லாமல் ''புள்ளைக இருக்குல்ல மதினி..நாம வாழ்ந்து தான ஆகணும்'' என்று பொதுவாக சொல்லிவைத்தேன்.

அன்னை லாட்ஜிற்கு நடந்தே வந்தேன். தேய்பிறை நிலவு ஏதோ சொல்ல நினைத்து சொல்ல இயலாமல் தேய்ந்து கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மதினியையும் குழந்தைகளையும் பார்க்க நினைத்தேன். போகவில்லை. திங்கள் கிழமை என் தலைமை அலுவலகத்தில் இருந்து நான் பதவி உயர்வு பெற்றுவிட்டதாகவும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உடனடியாக பதவி ஏற்க வேண்டும் எனவும் தகவல் வந்திருந்தது. செவ்வாய்க்கிழமை மதினியை பார்க்க போனேன். சந்தின் முனையிலேயே கவனித்தேன். யாரோ வந்து அவளுக்கு ஆறுதல் சொல்லி விடைபெற்று கொண்டிருந்தனர். என்னை நட்புடன் ஒரு பார்வை பார்த்து கடந்து சென்றனர். கதவை நான் தட்ட, மதினி மௌனமாக கதவை திறந்தாள் கண்களாலேயே வா என்றாள். நித்ய பௌர்ணமி என்று நான் பார்த்து வியந்த முகம் கருமேகம் மறைத்த நிலவாய் எனக்கே பார்க்க பிடிக்கவில்லை. திறக்காத ஒரு ஏர்மெயில் கவரை கையில் திணித்து விட்டு ''தேத்தண்ணி போடவா'' என்றாள்.

''இல்ல வேணாம்...கொஞ்சம் தண்ணி மட்டும் போதும்'' என்றேன்.
கவரை பிரித்தேன். 
ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம். உடல்கள் அடையாளம் காண இயலாவண்ணம் சிதைந்து போனதால் அதை அங்கேயே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாகவும் இறந்தோரின் குடும்பதிற்கு 6லட்சம் ரூபாய்கள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர்.
நண்பர். ஹுசைன் வேலை பார்க்கும் ஸ்டேட் பாங்கில் ஒரு வங்கி கணக்கை மதினியின் பெயரில் துவக்கி கொடுத்துவிட்டு வீடு திரும்பிய பின் தான் என் பணி மாற்றல் குறித்த விவரத்தை சொன்னேன். பெருகி வந்த கண்ணீரை துடைத்த படியே சொன்னாள் ''நீ போ...நீ ஒன் பொழப்பப் பாரு...இந்த தரித்தரம் பிடிச்ச சிறுக்கிக்காக நீ எதுக்கு கஷ்டப்படணும்...ஒனக்கும் அம்மா, அப்பா தங்கச்சி இருக்காகல்ல...போ...ஆனா மதினியை மறந்திடாத...''
எதுவும் பேசாமல் வந்தேன். இதயம் கனத்திருந்தது. உடல் எங்கும் ஒரு இனம் புரியாத வலி. மருந்துகளாலோ மதுவாலோ அதை குணப்படுத்த இயலாது என்றும் காலமே அதற்கு மருந்து என்று மட்டும் புரிந்தது. 
மார்கழி மாதம் கடைசி நாள் நாகர்கோயிலிலிருந்து ஜோத்பூர் வந்து, பின்பு பத்தாண்டுகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் பயணப்பட்டு மீண்டும் மதுரை வந்து ஒரு முறை நாகர்கோயில் வந்த போது மதினியை காண விழைந்தேன். 
பாரதப்போர் முடிந்து ராதையை காணச் சென்ற கிருஷ்ணனின் மனநிலையில் அப்போது நானிருந்தேன். மாலை மயங்கி இரவு மலரும் நேரம் நான் தங்கியிருந்த பார்வதி இண்டர் நேஷனல் ஹோட்டலில் இருந்து எஸ்.எல்.பி பள்ளி மைதானம், டத்தி ஸ்கூல் வழியாக கலெக்டர் ஆபிஸ் வந்து அதன் எதிர் திசையில் ராமவர்மாபுரம் நோக்கி நடந்தேன். செல்லும் வழியில் மதினி என்னை எப்படி எதிர்கொள்வாள் என்று சிந்தித்தபடியே நடந்தேன். சென்று மதினி குடியிருந்த தெருவரை பயணித்த நான், கிருஷ்ணன் ராதையை காணாமல் திரும்பியதைப் போன்றே நானும் திரும்பினேன். அதே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்...பல ஆண்டுகளுக்கு முன்னாள் நான் சிரித்துக்கொண்டே வந்தது நினைவிற்கு வந்தது....''இது என்ன புது பழக்கம்'' காதோரம் யாரோ கிசுகிசுக்க...இந்த முறை சிரிக்க முடியாமல் அழுது கொண்டே நடந்தேன்...வானத்தில் ஆண்டாள் பாடிய முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது....!