Wednesday, July 1, 2020

அப்பா வருவார்...(சிறு கதை)



வெள்ளை நிறக் காரின் பின்புறம் அந்த பெட்டியையும் மூடப்படாத காரின் கதவையும் சேர்த்து வைத்து கட்டியிருந்தனர். மாணிக்கம் மாமாவும் அப்பாவின் நண்பர்களும் அதை கவனமாக இறக்கி வீட்டின் வாசப்படி அருகே வைத்தனர். பளபளவென இருந்த எவர்சில்வர் பெட்டி பெரியதாக இருந்தது. எனது முகம் அதில் பளிச்சென்று தெரிந்தது. ஆனால் ஒரு புறம் பார்க்கும் போது எனது தலை நீண்டும் மற்றொரு புறமிருந்து பார்த்தால் முகம் அகன்றும் தெரிந்தது. எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்போது எனக்கு வயது ஐந்து.
அப்பா, அம்மா நான் மூன்று பேரும் தான் அடிக்கடி மாணிக்கம் மாமாவின் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போவோம். எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. அந்த இடம் முழுக்க பரவியிருந்த வாசனை எனது நாசியில் நுழைந்து என் மூளைக்குள் வினோத அனுபவத்தை உண்டு பண்ணியது. இந்த அனுபவத்திற்காகவே மீண்டும் மீண்டும் நான் அம்மா அப்பாவுடன் ஆஸ்பத்திரிக்கு போனேன். அதைவிட மகிழ்ச்சியான விசயம் ஆட்டோ. அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நடுவே நின்று கொண்டு மாணிக்கம் மாமா ஆட்டோ ஓட்டும் போது நானும் வாயாலேயே வண்டி ஓட்டுவேன். மாமாவின் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு 'டுர்...டுர்...டுர்றென்று வாயால் ஓசை எழுப்பிக்கொண்டே ஆஸ்பத்திரி வரைக்கும் ஓட்டும் போது அம்மா திட்டுவாள்.
''டேய் கையக்காலை வச்சிக்கிட்டு சும்மா வாடா...அவரை வண்டி ஓட்ட விடு....நீ ஒரு தொல்லைடா...ச்சே...நீயெல்லாம் என்ன பொறப்போ?''
''திட்டாதம்மா...கொழந்தைனா அப்படித்தான் இருப்பான்...இல்லைனா தான் பிரச்சினை....''
''நீங்க தான் மெச்சிக்கணும்....அஞ்சு வயசுப் பிள்ளை மாதிரியா இருக்கான்...எதுக்கெடுத்தாலும் ஏன் எப்படி எதுக்குனு கேள்வி..பெரிய ஆளுக பண்றதெல்லாம் தானும் பண்ணனும்....வயசுக்கேத்த மாதிரி நடந்துக்க வேணாம்,...ஒவ்வொருத்தர் வீட்லயும் புள்ளைக எப்படி இருக்கு...?.''
''அஞ்சு வயசுப்பையன் வேற எப்படி இருப்பான்?''
''ஊர்ல ஓலகத்தில வேற அஞ்சு வயசு பையனே கிடையாதா....எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாருங்க...!''
நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாணிக்கம் மாமாவை விட வேகமாக ஆட்டோ ஓட்டுவேன்.
டாக்டர் அப்பாவை பரிசோதித்து விட்டு ஒரு துண்டு சீட்டில் ஏதோ எழுதி நர்சை அழைத்தார்.
''இவருக்கு பில்ருபின் பார்த்து சீக்கிரம் சொல்லுங்க..." என்றார்.
அந்த நர்ஸ் மிக அழகாக இருந்தார். என்னைப் பார்த்து சினேகமாக புன்னகை புரிந்தார். நானும் அப்பாவோட போவேன் என்று அடம் பிடித்தேன். அம்மா தடுத்தாள். ''அங்கே போனால் ரத்தம் எடுப்பாங்க நீ பயப்படுவே வேண்டாம் நீ போக வேண்டாம்'' என்று கூறினாள்.
அந்த நர்ஸ் தான் '' என் கூட வா...நான் உன்னை கூட்டிட்டு போறேன்...ஒண்ணும் பயப்படாதே'' என்றார்.
நான், அப்பா, மாணிக்கம் மாமா மூவரும் டாக்டர் அறை இருந்த அதே தளத்தின் மூலையில் இருந்த சிறிய அறைக்கு சென்றோம். நர்ஸ் அப்பாவின் முழங்கைக்கு மேலே ஒரு பட்டையை இறுக்கமாக அணிவித்து விட்டு ஊசியால் மிக கவனமாக ரத்த நாளம் ஒன்றை லாவகமாக கண்டுபிடித்து ரத்தத்தை எடுத்தார்.
நர்ஸ் ''உனக்கும் ஒரு டெஸ்ட் எடுக்கலாமா?'' என்றார் சிரித்துக்கொண்டே.
நான் பயந்து மாணிக்கம் மாமாவின் பின்னால் பதுங்கினேன்.
அரைமணி நேரம் கழித்து ரிப்போர்ட் வந்தது. டாக்டர் அப்பாவை திட்டினார்.
''இனிமே என்னால ஒண்ணும் பண்ண முடியாது...நீங்க நேரா ராயப்பேட்டை போய்டுங்க...நான் லெட்டர் தர்றேன்...!''
அம்மா மெதுவாக அழுதாள். எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு ஜாலியாக இருந்தது. ராயப்பேட்டை எவ்வளவு தூரம் இருக்கும் என்று சிந்தனையில் மூழ்கினேன்.
மாணிக்கம் மாமாவிடம் கேட்டேன். அவர் ''ஒரு இருவது கிலோ மீட்டர் இருக்கும்டா...அரை அவர்ல போய்டலாம்'' என்றார்.
அந்த ஆஸ்பத்திரியிலிருந்து ராயப்பேட்டை வந்தோம். இந்த ஆஸ்பத்திரி ரொம்ப பெருசா இருந்தது. அந்த ஆஸ்பத்திரி மாதிரி சுத்தம் இங்கே இல்லை. அப்பாவை பரிசோதித்த மருத்துவர் அவருடைய பேராசிரியரிடம் அழைத்துச் சென்றார்.
பேராசியர் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த போது அவர் பெயர்ப்பலகையை எழுத்துக்கூட்டி படித்தேன். சின்ன...மாட...சாமி...கொஞ்சம் சத்தமாக படித்து விட்டேன்.
பேராசிரியர் தனது அறையை விட்டு வெளியே வந்து என்னை பார்த்து சிரித்தார். ''எங்கப்பாவுக்கு அடுத்து என் முழுப்பெயரை சொல்லி கூப்பிட்டது நீ தாண்டா...?
மாமா என் வாயை அவரது கைகளால் மூடினார்.
பேராசிரியர் ''அவனை விடுங்க...அவன் அப்படித்தான் இருப்பான்...அப்படித்தான் இருக்கணும்...உள்ளே வாங்க...'' என்றார்.
அவர் அப்பாவிடம் கொஞ்சமாகவும் என்னிடம் நிறையவும் பேசினார்.
''படிச்சு என்னவாகப் போற....?''
''நானும் உங்களை மாதிரி டாக்டர் ஆகப் போறேன்....ஆமா நீங்க என்ன டாக்டர்...ஊசி போடுற டாக்டரா?''
கலகலவென சிரித்தார்.
''இல்லை...நான் ஒரு ஹெபடாலஜிஸ்ட்....என்னை மாதிரி நீயும் ஹெபடாலஜிஸ்ட் ஆகணுமா?''
''எங்கப்பா ஆட்டோ ஓட்றாரு...அவரால படிக்க வைக்க முடியுமா டாக்டர்...?''
''எங்கப்பா கார்ப்பரேசன்ல குப்பை அள்ளினார். நான் நன்றாக படித்தேன். டாக்டர் ஆனேன்...அதனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை...நீயும் டாக்டர் ஆகலாம்...ஆகணும்...!
அவர் அப்பாவை நோக்கி ''போய் ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டு வந்துடுங்க'' என்றார்.
என்னை நோக்கி ''எக்ஸ்ரே ரிப்போர்ட்டோட என்னை வந்து பார்க்கணும்...சரியா?'' என்றார்.
அங்கிருந்து எக்ஸ்ரே எடுக்கும் அறைக்கு வந்தோம். நானும் அப்பாவோடு உள்ளே போவேன் என்று அடம் பிடித்தேன். அனுமதி கிடைக்கவில்லை. மாணிக்கம் மாமா என்னை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வந்தார்.
''வடை சாப்பிடுறியாடா....''
அங்கே விதவிதமான பலகாரங்கள் இருந்தாலும் சிகப்பு கலரில் இருந்த பஜ்ஜி என்னை நோக்கி அழைப்பது போல் தோன்றியது.
நான் கையை நீட்டி ''எனக்கு அது வேண்டும்'' என்றேன்.
''எது...பஜ்ஜியா...வாழைக்காயா...உருளைக்கிழங்கா?'' என்றார்.
''இதுல ஒண்ணு..அதுல ஒண்ணு''
சாப்பிட்டேன். சுவையாக இருந்தது. மாணிக்கம் மாமா டீ மட்டும் குடித்தார்.
மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த போது அம்மாவும் அப்பாவும் அங்கேயே காத்திருந்தார்கள். மாமா விசாரித்த போது ''வரிசையில் தான் வரணுமாம் வெயிட் பண்றோம்'' என்றனர்.
சற்று நேரத்தில் அந்த பேராசிரியரே அங்கு வந்து எங்களுக்கு முதலில் எடுக்குமாறு அறிவுறுத்தினார். கூடவே என்னையும் உள்ளே அனுமதிக்க செய்தார். அந்த அறையில் இருந்த நபரிடம் ''வருங்கால டாக்டர்யா...இவனுக்கும் எக்ஸ்ரே எடுக்குறத காட்டு'' என்றார்.
அப்பாவின் சட்டையை கழட்டி இரண்டு கம்பிகளுக்கு நடுவே நிறுத்தினார்கள். அவருடைய முதுகில் ஒரு மஞ்சள் நிற விளக்கொளி பாய்ந்தது. அதில் இருந்த கூட்டல் அடையாளத்தை முன்னும் பின்னும் நகர்த்தி ஒரு கட்டத்தில் மூச்சை இழுத்துப் பிடிக்கச் சொன்னார்கள்.
'டக்' என்ற ஒரு ஒலி கேட்டது. அவ்வளவு தான்.
''நீங்க போகலாம்'' என்றார்.
நானோ ''ரிப்போர்ட்..ரிப்போர்ட்'' என்று கத்தினேன்.
அவர் சிரித்துக்கொண்டே ''எல்லாம் வரும் போடா...மாடசாமி டாக்டர்கிட்ட போங்க...வரும்'' என்றார்.
ரிப்போர்ட் வந்தது. பெரிய காக்கி கவரில் ஒரு ப்ளாஸ்டிக் சீட். அதை எடுத்து தனக்கு இடது பக்கத்தில் இருந்த வெள்ளைப் பெட்டியில் செருகி விளக்கை போட்டதும் நான் பயந்து விட்டேன். என்ன இது கருப்பு வெள்ளையில் என்னவோ மாதிரி இருந்தது. இது தான் அப்பாவா...இல்லை இது என் அப்பா இல்லை...///
டாக்டர் மாடசாமி உதட்டை பிதுக்கினார்.
''எதுக்கும் ஒரு எம்.ஆர்.ஐ எடுத்துறது பெட்டர்...இங்கேயே எடுத்துறலாம்...வெளியே போனா...நாலாயிரம் ஐயாயிரம் செலவாகும்...'' ஒரு துண்டு சீட்டில் எழுதி என்னிடம் தந்து ''என்ன டாக்டர்...அப்பாவுக்கு எம்.ஆர்.ஐ எடுக்கலாமா?'' என்றார். நான் மகிழ்ச்சியாக 'ஓ' என்றேன். என் கன்னத்தை கிள்ளி 'குட் பாய்' என்றார்.
அந்த அறை ஆஸ்பத்திரியின் அசுத்தத்திற்கு துளியும் சம்பந்தமே இல்லாமல் தூய்மையாக இருந்தது. அப்பாவின் உடையை அகற்றி ஒரு பச்சை நிற அங்கி அணிவித்தனர். பெரிய வெள்ளை நிற குழாய் வளையம் போலிருந்தது அதன் கீழ்ப்பகுதியில் படுக்கை. அப்பாவை படுக்கவைத்து மெதுவாக உள்ளே அனுப்பினர்.
அங்கே இருந்த டாக்டர் ' பயமா இருந்தா கண்ணை மூடிக்கங்க'' என்றார்.
சிறிது நேரம் கழித்து அப்பா வெளியே வந்தார். அங்கே இருந்த மருத்துவர் மாடசாமி மருத்துவரை தொலைபேசி வாயிலாக அழைத்தார். அவரும் வந்தார். இருவரும் பேசிக்கொண்டார்கள். எதுவுமே புரியவில்லை.
'' டாக்டர்! க்ராஸ் ஹெபடொமெகலி...இட் இஸ் கோயிங் டு பி அ ட்ஃப் டாஸ்க் ஃபார் யூ....வெரி டிஃபிகல்ட் டூ மேனேஜ்'' என்றார் ஒருவர்.
''லெட் மி ட்ரை'' என்றார் மாடசாமி.
அந்த ரிப்போர்ட் இன்னும் பெரிதாக இருந்தது.
அம்மா கொண்டு வந்திருந்த பைக்குள் அதை வைக்கவே முடியவில்லை. மீண்டும் வீட்டிற்கு வந்தோம். மறுநாள் காலை தான் அந்த பளபளக்கும் பெட்டி வந்தது. ஒரு மணி நேரத்தில் வீட்டின் முன்பாக ஒருவர் வந்து கம்பு ஊன்றி துணியாலான பந்தல் போட்டார். சிலர் வந்து அம்மாவிடம் பேசிவிட்டு சென்றார்கள்.
மாமாவிடம் இந்த பெட்டி எதற்கு என்று கேட்டபோது ''அப்பாவை இன்னைக்கு வேற ஒரு டெஸ்ட் எடுக்க கூட்டிட்டு போறோம்...அதுக்குத்தான்'' என்றார்.
''மாமா...நானும் கூட வருவேன்...''
''கண்டிப்பா...நீ இல்லாம அப்பாவை இந்த டெஸ்ட்டுக்கு அனுப்ப முடியாது....'
நான் டாக்டராகவே ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.
சிறிது நேரத்தில் ஏதோ எரியும் வாசனை. தெருவின் முனையில் சிலர் நெருப்பை மூட்டி தட்டு போன்ற வாத்தியத்தை சூடாக்கி கொண்டிருந்தனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் அந்த பகுதியில் அந்த இசை காதை பிளந்தது. நாடி நரம்புகளை தூண்டும் இசை. அவர்கள் இசையை முழங்கிக்கொண்டே ஆடியது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.
நான், கோபால், கர்ணன் மற்றும் ராமு நால்வரும் இணைந்து அவர்களோடு ஆடினோம்.
ஒரு மணி நேரம் ஆடியிருப்போம். சரியான ஆட்டம். கர்ணனும் கோபாலும் களைத்துப் போய் உட்கார்ந்து விட்டனர். நானும் ராமுவும் வாத்தியக்காரர்களுடன் இணைந்து ஆடினோம். அவர்கள் எங்கள் இருவரையும் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். திடீரென்று பெரியப்பா சோமு வந்தார். என்னை மட்டும் பிரித்துக் கொண்டு போய் மாணிக்கம் மாமாவின் முன்னே நிறுத்தினார்.
''டேய்...என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே...அது இவன் அப்பன்டா ...ஆடவிட்டு வேடிக்கை பார்க்குற நேரமா இது...அறிவில்லை உனக்கு?''
மாமா பதில் சொல்லாமல் வானத்தை பார்த்தார்.
''இதோ பார் ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது...தாங்காது...ஏற்பாடெல்லாம் நான் பார்த்துக்குறேன்....நீ இவனை கூட்டிட்டு போய்ட்டு நான் போன் பண்ணப்பறம் நேரா இங்கே வந்துடு...''
மாணிக்கம் மாமா என் கரம் பற்றினார்.
''வடை சாப்பிடுறியாடா....?'
''ஓ...வாழைக்காய்ல ஒண்ணு...உருளைக்கிழங்கில ஒண்ணு''
''வா...இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு மாமா சொல்றபடி மட்டும் தான் கேட்கணும்...சரியா?''
''ஏன் மாமா?''
''ஒண்ணுமில்ல...அப்பாவுக்கு எடுக்கப் போற டெஸ்ட் அப்படி...இது ரொம்ப பெரிய டெஸ்ட்...அதுனால தான்...''
நடந்து மெயின் ரோடு வந்து டீக்கடையில் பஜ்ஜி தின்று விட்டு வழக்கமாக போகும் பாதையை விட்டு விலகி நான்கு தெரு சுற்றி வந்த போது வீட்டின் அருகே ஒரு பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது.
இரண்டு அழகான தங்க மயில்கள், மேலே பளபளக்கும் கூரை...அதன் நடுவே அப்பா படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
பெரியப்பாவும் மாமாவும் தெரு முனையில் இருந்த அடிகுழாயில் என்னை குளிக்க வைத்தனர்.
பெரியப்பா மாமாவிடம் ''அவ்வளவு தூரம் நடப்பானாடா...?''
நான் ''எனக்கு கால் வலிக்குது மாமா'' என்றேன்.
''வேணாம் மச்சான் இவன் வண்டில ட்ரைவர்கிட்ட ஒக்காந்து வரட்டும்''
''ட்ரைவர்கிட்ட ஒக்காந்துகிட்டா கொள்ளியை யாரு தூக்குறது?''
''பாத்துக்கலாம்....அவன் வண்டில வரட்டும்...ஒரு மணி நேரம் பறை அடிக்கிறவங்களோட சேர்ந்து ஆட்டம் போட்டிருக்கான்...அவனால நடக்க முடியாது''
அப்பா பின்னால் தூங்க நான் ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள வண்டி மெதுவாக ஊர்ந்தது.
நான் ட்ரைவரிடம் '' சீக்கிரம் போங்க...ஏன் இவ்வளவு மெதுவா போறீங்க...இந்த வண்டி ஆட்டோ மாதிரி வேகமா ஓடாதா?'' என்று கேட்டேன். ட்ரைவர் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தார். இது ஆஸ்பத்திரி போகும் பாதை இல்லையே....ஒரு வேளை ராயப்பேட்டை ஆஸ்பத்திரி இல்லாம வேறெங்காவது போறோமா...எங்கே?
அது முக்கியமல்ல. அந்த இசை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இவர்கள் ஏன் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்? அவர்களோடு அப்பாவின் நண்பர்கள் ஆடிக்கொண்டே வந்தனர். அப்படி என்றால் ஏதோ மகிழ்ச்சியான விசயம் ஒன்று நடந்திருக்கிறது. அதிலும் அப்பாவின் நண்பர் ஒருவரின் ஆட்டம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. வலது காலை தூக்கும் போது இடது கை மேலெழ இடது கால் தூக்கும் போது வலது கை மேலேழ இடுப்பில் இருந்த லுங்கியை வாயில் கவ்விக்கொண்டு அவர் ஆடிய ஆட்டம் பார்த்து கண்ணில் நீர் வர சிரித்தேன்.
மாணிக்கம் மாமா என் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் ஓடிவந்து மாமாவின் காதில் ஏதோ சொல்ல அவர் அதிர்ச்சியாகி நின்று விட்டார். குறுக்கே மாடுகளின் கூட்டம் கடந்து சென்றதால் மயில் வண்டியும் நின்றது.
''என்னடா சொல்ற....?''
''ஆமாண்ணே....செல்லம்பட்டி பெரியம்மா தான் சொன்னாங்க...மொட்டை போட வேண்டாமாம்...''
மாணிக்கம் மாமா நடை தளர்ந்து போனது.
எல்லோரையும் வெளியே நிறுத்தி விட்டு ஆறுபேர் மட்டுமே உள்ளே வரவேண்டும் என்று ஆஸ்பத்திரியில் சொன்னார்கள். மாமா எங்கள் இருவரையும் தவிர்த்து நான்கு பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் தான் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை ஆஸ்பத்திரிக்குள்ளே தூக்கிக்கொண்டு வந்தனர். அப்பாவை நிறைய முறை இந்த மாதிரி அவருடைய நண்பர்கள் வீட்டுக்கு கொண்டுவந்ததை பார்த்திருக்கிறேன். மறுநாள் காலை அப்பாவுக்கு நல்ல திட்டு கிடைக்கும். அப்பா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார்.
கரிய நிற கதவு ஒன்று திறக்க அதிலிருந்து வெளிப்பட்டது ஒரு இரும்பு மேடை. அதில் அப்பாவை கிடத்தினர். மாமா அனைவரையும் வெளியேறச் சொன்னார்.
அங்கே இருந்த டாக்டர் ''கடைசியா முகத்தை பார்த்துக்கோங்க...'என்றார். எனக்கு புரியவில்லை.
வழக்கத்திற்கு மாறாக மாணிக்கம் மாமா இறுக்கமாக இருந்தார்.
இரும்பு மேடை கருப்பு கதவின் பின்னால் தானே நகர்ந்தது.
டாக்டர் ''திரும்பி பார்க்காம போங்க'' என்றார்.
மாமா என்னை அழைத்துக் கொண்டு திரும்பி நடந்தார்.
எதிரே வந்த நண்பரிடம் ''ஆட்டோ சாவியை குடுத்துட்டு...கலயத்தை வாங்கிட்டு வீட்டுக்கு வாங்க....நான் இவனை கூட்டிட்டு போறேன்''
ஆட்டோவில் ஏறினோம்.
நான் வழக்கம் போல மாமா பின்னால் நின்று கொண்டு ஆட்டோ ஓட்ட ஆயத்தமானேன்.
அவர் ஆட்டோ சாவியைப் போட்டு ஸ்டார்ட் செய்ததும் கேட்டேன்.
''மாமா...அப்பா வரலை....?''
''வருவான்டா....டெஸ்ட் முடிச்சிட்டு வருவான்''
அஞ்சு வருசமாச்சு...அப்பா இன்னும் டெஸ்ட் முடிச்சிட்டு வரலை.
(முற்றும்)