Sunday, August 23, 2020

உலரும் பிண்டம்...!

 


நீ வருவாய் என காத்திருக்கும்
எனது ஆன்மா...தவிப்பாய்
தகிக்கும் சூரியன் கண்சிமிட்டும் சிற்றோடை 
நிழல் தரும் மரங்களின் கிளைகளில்
குடியிருக்கும் புள்ளினங்களும் என் துணையாய்!

உச்சிப் பொழுதில் எரித்தனர் என்னை
இதே காட்டில் தான் உன்னையும்
உறவுகளுக்கு அஞ்சி  தெருமுனையில் 
முகம் மறைத்து நீ அழுததை 
நான் அறிவேன் இன்னும் ஏன் தாமதம்?

பூதவுடலை விட்டு  விலகி வா
உடலற்று உயிராக வாழ...
மரணத்தின் வாதையை விட
காத்திருப்பின் வாதை கொடிது 
இதே காட்டில் காத்திருக்கிறேன் 
சிற்றோடையில் கால் நனைத்தபடி

காகமாக வருவேன் என
எள்ளும் தண்ணீரும் இறைத்து
பிண்டம் வைத்து 
ஏங்கும் வாரிசுகள்...!

பிண்டம் உலருமுன் வந்து விடு...
காகங்கள் சிதறடிக்கும் முன் 
நாய் வாய்வைப்பதற்குள் 
தின்று பசியாறுவோம்...! 

வரும்போது மறக்காமல் 
கொண்டு வா உன் கண் மை...!
அஞ்சனம் தீட்டிய 
உன் விழிக்குள் விழுந்து  
எழுமுன்பே எரித்து விட்டனர்

கண்ணுக்கு மைதீட்டி
என் கன்னம் பற்றி
கண்களை விழுங்கு
நான் விழத் தயார் 
எரியூட்ட உறவுகளும் தயார்
மையை மட்டும் மறந்து விடாதே....!