Monday, February 27, 2017

சுஜாதா நினைவாக... (சுஜாதா நினைவு நாள்: பிப்ருவரி 27)


எழுத்தாளர் சுஜாதாவை ஒரு அறிவியல் எழுத்தாளராக மட்டுமே சிறுவயதில் அறிந்திருந்த எனக்கு அவரது ''ஸ்ரீரங்கத்து தேவதைகள்'' ஒரு புதிய பிம்பத்தை தந்தது. சுவாரசியமான எழுத்தில் நகைச்சுவை இழையாட ஸ்ரீரங்கத்தை மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டியிருந்தார். அவர் மூலமாகவே பிரபந்தத்தின் சுவையை அறிந்தேன். ஆண்டாளை காதலித்தது அவர் வழியாகவே. அவரை 31-12-2000 ஆண்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நானும் எனது நண்பர் வெங்கடேசனும் சந்தித்தோம். ஒரு 40 நிமிடம் உரையாடினோம். இடையிடையே ஆங்கிலத்தில் பேசிய எனது நண்பரை தமிழிலேயே பேசலாமே என்று அன்புடன் கடிந்து கொண்டார். நவீன இலக்கியத்தில் எனக்கிருந்த ஈடுபாட்டை வெகுவாக பாராட்டினார். பின் நவீனத்துவத்தை அதன் அடிப்படையோடு போதித்தார். வாசிப்பை பரவலாக்கம் செய்வதன் அவசியத்தை உணர்த்தினார். ''ஒரு நாளில் நீங்களும் எழுத்தாளராக பரிணாமம் பெறுவதற்கு சாத்தியம் நிறைய இருக்கிறது'' என்றார். அவரும் வெண்பா எழுதுவார். நானும் எழுதுவேன். அங்கேயே இரண்டு வெண்பாக்கள் நான் சொல்ல, அதை அவர் திருத்தினார். பசுமையான அந்த நினைவுகளின் ஊடே சிந்தித்து பார்க்கையில் நானும் இப்போது மூன்று கதைகள் எழுதி அவருடைய ஆரூடத்தை மெய்ப்பித்து விட்டேன். ஆனால் வாசிக்கத்தான் என் ஆதர்சனமான சுஜாதா என்னும் மிகப்பெரும் ஆளுமை இல்லை. 

Tuesday, February 14, 2017

பொருள் சுமந்த சொற்கள்: சிறுகதை

பொருள் சுமந்த சொற்கள்: (1)
பெரிய கம்பி கிராதி போட்ட தடுப்பு காவல் அரணருகே நின்ற அந்த காவலர் தன்னை மீறி நுழைய முயன்ற ஆட்டோவை நிறுத்தி ''யாரை பாக்கணும்'' என்று ஆட்டோக்காரரை வினவினார். ஆட்டோ உள்ளிருந்த வைத்தியநாத ஐயர் ''கலெக்டர் வீட்ல கணபதி ஹோமம் பண்ணனும்னு சொன்னாங்க...பூஜை சாமான் லிஸ்ட் கொடுக்கலாம்னு வந்தேன்...வேறொன்னுமில்ல...''
''அப்பிடியா...போங்க....'' ஆட்டோக்காரரிடம் ''நேரா போயி இரண்டாவது ரைட்டு திரும்புங்க...முதல் ரைட்ல இருக்குறது கேம்ப் ஆபிஸ்...பின்னாடி தான் பங்களா இருக்கு...மெதுவா போங்க...உங்க போன் நம்பர் சொல்லுங்க சாமி...ரெஜிஸ்டர்ல எழுதணும்''
''நான் போன் வச்சிக்கிறது இல்லங்க...வீட்டு விலாசம் தரட்டுங்களா?''
''இந்த காலத்தில போன் இல்லாம எப்படி..ம்ம்..சரி...கொடுங்க'' காவலர் பதிவேட்டில் எழுதிக் கொண்டார்.
''ஏன்னா...இப்படியா பொய் சொல்வேள்...அந்த நம்பரை கொடுத்தற வேண்டியது தானே...'' என்றாள் கோதை மாமி.
''ஒன்ன வச்சிண்டு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடி..பூனைய மடியிலே கட்டிண்டு சகுனம் பாக்குற மாதிரி....வாய மூடிண்டு பேசாம வா...எதையும் ஒளறி கொட்டிடுடாதே...பகவானே நாளன்னைக்கு கல்யாணத்தை வச்சிண்டு...என்னைய இப்படி படுத்துறயே...பேசாம என் பிராணனை எடுத்துறப் ப்டாதோ...''
''என்னை எதுக்கு கோவிச்சுக்கிறேள்...நாப்பத்தி நாலு வயசில பதினெட்டு வயசு கூட ஆகாத என்னை எதுக்கு கல்யாணம் பண்ணினேள்...இப்போ பெண்ணுக்கு முப்பத்திரெண்டு வயசில கல்யாணம் பண்றதுக்கு நாக்கு தள்றது ஓமக்கு...ம்ஹ்ம்?
''வாயை மூடுறி பைத்தியம்...ஏதாச்சும் பேசின தொலைச்சுப் புடுவேன்...ஆமா...கடவுளே...என்னை ஏன் இப்படி சோதிக்கிற''
ஆட்டோ நின்றதும் வாசற்படியில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த இருவர் இவர்களை நோக்கி திரும்பினர்.
அதில் ஒருவரை பார்த்து ஐயர் ''வேலாயுதம்...என்னை ஞாபகம் இருக்கா...நான் தான் வைத்திஐயர்...பிள்ளையார் கோயில்....காமாட்சி நகர்''
''அடடே...வாங்க சாமி...மறக்க முடியுமா ஒங்கள...எப்படி இருக்கீங்க'' - வேலாயுதம், கலெக்டரின் மாமனார்.
அருகே இருந்த தனது சம்பந்தியிடம் ஐயரை அறிமுகப்படுத்தினார். ''மச்சான், இவரு வைத்திய நாத ஐயர். நம்ம காமாட்சி நகர்ல குடியிருந்தப்ப அங்கே பக்கத்தில இருந்த பிள்ளையார் கோயில் குருக்கள்...நீங்க கோயிலுக்கு போற ஆளு கிடையாது...அதனால உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...''
வேலாயுதம் ஐயரை நோக்கி ''சாமி...இவரு தான் நம்ம சம்பந்தி...காமாட்சி நகர்ல பாய் வச்சிருந்தாரே தையல் கடை அங்க தான் டெய்லர் வேலை பார்த்தாரு...நீங்க சட்டை போடுவரு இல்லை...அப்படியே தைச்சாலும் பாய் கடையில தைக்க மாட்டீங்க...அதுனால நீங்களும் இவரை பாத்திருக்க முடியாது...பரவாயில்லை...வாங்க உக்காருங்க....சொல்லுங்க...இப்போ என்ன விசயமா வந்தீங்க?
''வேலாயுதம்..அம்பிய போலிஸ் பிடிச்சுட்டு போய்ட்டா...நீதான் உன் மருமகன்கிட்ட சொல்லி அவனை வெளியே கொண்டாரனும்...இதோ பாரு நாளைக்கழிச்சு வைதேகிக்கு கல்யாணம் வச்சிருக்கேன்...இவனை போலிஸ் பிடிச்சிண்டு போய்ட்டா...இந்த வயசில என்னால எங்கே போயி யாரை பார்த்து என்ன பண்ண முடியும் சொல்லு...வேலாயுதம்...இருந்திருந்து 32 வயசில அவளுக்கு கல்யாணம்...மாப்பிளையும் என்ன மாதிரி தான்...சின்ன கோயில்..ஆனால் நிறைய ஹோமம், பூசையெல்லாம் செய்வாரு...வரும்படி இரண்டு ஜீவன் சாப்பிட தேறும்...ஏதாவது செய்ப்பா...''
வேலாயுதத்தின் சம்பந்தி, கலெக்டர் குமரேசனின் தகப்பனார் முத்தையா இடைமறித்தார் '''பதறாதீங்க...என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க''
''சார்..ஒங்கள எனக்கு முன்னபின்ன தெரியாது...இருந்தாலும் சொல்றேன்...அவன் கொஞ்சம் வேற மாதிரி பழக்கம் உள்ளவன்...ராத்திரி ரோந்து போறவா இவன பிடிச்சிண்டு போய்ட்டா...''
''வேற மாதிரி பழக்கம் உள்ளவன்னா...?''
''அதாவது கஞ்சா கலந்து சிகரெட் பிடிப்பான்''
கோதை மாமி கோபமாக '''இதோ பாருங்கோ...என் புள்ளையப் பத்தி தப்புதப்பா பேசாதேள்...அவன் கஞ்சாவெல்லாம் பிடிக்க மாட்டான்...தங்கமான பிள்ளை...உடல் வலிக்குதுன்னு கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்பிடுவான் அவ்வளவு தான்...''
ஐயர் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
முத்தையா புரியாமல் விழித்தார். வேலாயுதம் பரிதாபமாக முத்தையாவை பார்த்தார்.
வேலாயுதம் ஐயரை நோக்கி ''சாமி...என்ன இது...நீங்க ஒண்ணு சொல்றீங்க...மாமி ஒண்ணு சொல்றாங்க.....அயோடெக்ஸ் திங்கறானா..என்ன இது?
வேலாயுதம் ''நான் என்னத்தை சொல்வேன்...அம்பிக்கு வேணாத பழக்கம்லாம் சேர்ந்துடுத்து...வெத்திலையில தான் ஆரமிச்சான் அப்படியே சிகரெட், அப்புறம் கஞ்சா இப்போ அயோடெக்ஸ்..."இவளுக்கு புத்தி பேதலிச்சி போச்சு...வைதேகி, அம்பிக்கு அப்புறம் பிறந்த ரெட்டை குழந்தைகள் ராமுவும் லட்சுவும் போனவருசம் சைக்கிள்ல போகும் போது தண்ணி லாறி மோதி ஸ்பாட்ல இறந்து போய்ட்டா...அதிலிருந்து இவளுக்கு அடிக்கடி புத்தி சுவாதீனமில்லா போகுது...என்னால முடிஞ்ச மட்டும் வைத்தியம் பாத்தேன்...மேற்கொண்டு என்னால எதுவும் செய்ய முடியல...!
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிவப்பு விளக்கு சுழல காவல்துறையின் வண்டி ஒன்று உள்ளே நுழைந்தது. அனைவரும் அமைதியாக இருக்கும்படி முத்தையா சைகை காட்டினார்.
மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளே நுழைந்தார். முத்தையாவையும் வேலாயுதத்தையும் பார்த்து வணக்கம் சொன்னவர், ஐயர் கூட இருப்பதை பார்த்து ''என்ன சார் ...வீட்ல எதுவும் விசேசமா...பூஜையா...ஹோமமா?'' என்றார்.
முத்தையா ''அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்...இவங்க நம்ம மச்சானுக்கு வேண்டப்பட்டவங்க...இவங்க பையன போலிஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்களாம்...நாளன்னைக்கு மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கார்...அது தான் எதாவது உதவி செய்ய முடியுமா....ன்னு''
மாவட்ட கண்காணிப்பாளர் ஐயரை நோக்கி ''எந்த ஸ்டேசன் சாமி...என்ன பண்ணினான்னு பிடிச்சிட்டு போனாங்க?''
''இங்க தான் சார்...வ.உ.சி நகர் போலிஸ் ஸ்டேசன்...ராத்திரி ரோந்து போனவா பிடிச்சிட்டு போய்ட்டா''
''யாரையும் நாங்க சும்மா  பிடிக்கிறதில்ல சாமி...சந்தேகம் இருந்தா மட்டும் தான் பிடிப்போம்...உங்க பையன் என்ன பண்ணினான் அதை சொல்லுங்க முதல்ல..''
''அவன் கொஞ்சம் கஞ்சா பிடிப்பான்...செட்டியார் பாலத்துக்கிட்ட''
மாமி தன்னிலை இழந்தவளாக மீண்டும் எகிறினாள் ''அபத்தமா பேசாதேள்...அம்பி அப்படிபட்டவன் இல்லை சார்...கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்பிடுவான் அவ்வளவுதான்...அப்பறம் சத்தம் எதுவும் போட மாட்டான் அமைதியா இருப்பன்...எம்புள்ளையினால ஒரு தொந்தரவும் யாருக்கும் இருக்காது...தங்கம்...''
வேலாயுதம் ''சார்..இதைத்தான் வந்ததிலிருந்து சொல்லிக்கிட்டுருக்காங்க மாமி...ஏன் சார் அயோடெக்ஸ யாராவது சாப்பிட முடியுமா?''
''இல்ல...இது பிரச்சினை வேற மாதிரி போகுது...அயோடெக்ஸ யாரும் சாப்பிட மாட்டாங்க...பஞ்சாப்ல தான் அந்த பழக்கம்...இந்தம்மா சொல்றது அபின்னு நினைக்கிறேன்....நீங்க கொஞ்சம் உள்ளே வர்றீங்களா...''
வேலாயுதமும் முத்தையாவும் ஐயரை காத்திருக்க சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றனர்.
''இதோ பாருங்க சார்...இதென்னவோ நார்காட்டிக்ஸ் கேஸ் மாதிரி தெரியுது..தேவையில்லாம உங்க மகனை இதுல தலையிட சொல்லாதீங்க...பேர் கெட்டு போகும்...நான் என்னால முடிஞ்ச அளவு உதவி பண்றேன்...என்ன ஸ்டேசன் சொன்னாங்க...வ.உ.சி, நகர் தானே...அது நம்ம டிஸ்ட்ரிக்லேயே வராது...காஞ்சிபுரம் ரேஞ்ச்ல வரும்...ஏ.சி.ஜெயராஜ்கிட்ட பேசுறேன்...கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லுங்க...டைம் எடுக்கும்...விசயத்தை கவனமா கையாளணும்...மேட்டரை உங்க புள்ளகிட்ட கொண்டு போகாதீங்க...''
பேசிக் கொண்டிருக்கும் போதே கலெக்க்டரின் மனைவி வந்து கண்காணிப்பாளருக்கு காபி தந்துவிட்டு வேலாயுதத்திடம் ''யாருப்பா அது வெளில?'' என்றாள்.
வேலாயுதம் ''உன் கூட படிச்சானே அம்பி அவனோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க...அம்பியை போலிஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்களாம்...'' என்றார்.
''ஏன்...என்ன பண்ணினான்...அவன் ஒரு அசமந்தமாச்சே...அப்பாவிப்பா அவனுக்கு ஒன்னுமே தெரியாது...பாவம்பா''
காவல்துறை கண்காணிப்பாளர் ''அம்மாடி...நீ இதுல தலையிடாதே...நான் பாத்துக்கிறேன்...வாயும் வயுறுமா இருக்கிறவங்களுக்கு இந்த டென்சனே கூடாது...இன்னைக்கு இண்டர் டிபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்கு...போறதுக்குள்ள வழியில நிறைய முடிவு எடுக்க வேண்டிய சமாச்சாரங்கள் இருக்கு...அவரை பிக்கப் பண்றதுக்குத்தான் நான் வந்தேன்...சீக்கிரம்....போ...போயி உங்க வீட்டுக்காரரை அனுப்பு

கோதை மாமி அந்த பங்களாவே தனக்கு சொந்தமானதைப் போல அங்கிருந்த பூ ஜாடிகளையும் செடிகளையும் காதலோடு வருடிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள். ஐயருக்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
கோதை மாமி ''பாத்தீங்களா டெய்லர் பையன்லாம் கலெக்டர் ஆயிட்டான்...அவனுக்கு ஆட்டோக்காரன் பொண்ணு கொடுத்துருக்கான்...நம்ம இப்படி அவங்ககிட்ட அல்லாடிக்கிட்டு இருக்கோம்...பகவான் எப்படி லோகத்தை மாத்திண்டிருக்கார் பாத்தேளா...?
ஐயர் ஒரு கையாளாகத்தனமான பார்வையுடன் ''அவாள்லாம் படிச்சா...அரசாங்க உத்யோகத்திற்கு போய்ட்டா..ஏன் அம்பிக்கு என்ன கொறைச்சல்...எஸ்.எஸ்.எல்.சில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினவன் தானே...அப்புறம் சகவாசம் சரியில்ல..வெற்றிலை போட்டான் கண்டிச்சேன்...நீ விடலை....புகையிலை போட்டான்...அப்பவும் கண்டிச்சேன்...நீதான் விடலை...அப்புறம் சிகரெட், கஞ்சா இப்போ அயோடெக்ஸ்ல  வந்து நிக்குது...திருவையாறு பாடசாலைக்கு நான் அனுப்பினா நீ போய் கூட்டாந்து பக்கதில வச்சிக்கிறாய்...அழகு பெத்த புள்ளைகள தண்ணி லாரிக்கு தூக்கி கொடுத்துட்டு இப்போ இருக்குறவனையும் தொலைச்சு புடுவோமோன்னு பயமா இருக்கு..ஒன்னை மாதிரி ஒருத்தியையும் வச்சிண்டு...நான் என்னத்தை பண்றது''
கலெக்டர் மனைவி இருவருக்கும் வணக்கம் சொல்லி காபி தந்தாள்.
''ஏண்டி பொண்ணே...ஆட்டோகாரர் வேலாயுதத்தோட பொண்ணு தானே நீயி...ஆமா நெத்திச்சுடி வச்சிருக்கிறயா...இருந்தாக் கொடேன்...கலெக்டர் பொண்டாட்டி நீயி...நெத்திச்சுடி இல்லாம இருக்குமா......வைதேகிக்கு நாளன்னைக்கு கல்யாணம்....நாலு நாள்ல திருப்பி கொடுத்துடுறேன்!
அந்த கர்ப்பிணிப் பெண் மாமியை ஒரு மாதிரியாக பார்த்தாள். ஐயர் தலையில் அடித்துக் கொண்டார்.
''கோதை.. என்னை ஏண்டி கொல்ற...பேசாம வாயை மூடிண்டு இரு...நீ போம்மா...அவளுக்கு கொஞ்சம் சித்தம் சரியில்ல....''

பொருள் சுமந்த சொற்கள்: (2)
சிறிது நேரம் கழித்து கண்காணிப்பாளரும் கலெக்டரும் புறப்பட்டு போக, காரில் ஏறுவதற்கு முன் கண்காணிப்பாளர் வேலாயுதத்தை அழைத்து ''நீங்க அவங்களோட ஸ்டேசன் போயி பையனை கூப்ட்டுக்கோங்க...யாராவது கேட்டா ஏ.சி,ஜெயராஜிகிட்ட நான் பேசிக்கிறதா சொல்லுங்க...விசயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது...சரியா...?''
வேலாயுதம் சட்டையை அணிந்து கொண்டு மாருதி காரை கிளப்பினார். மாமி ஒய்யாரமாக முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
''எனக்கு பின்னாடி ஒக்காரவே பிடிக்காது...முன்னாடி ஒக்காந்தா தான் வேடிக்கை பார்த்துக்கிட்டே வரலாம்''
கார் கலெக்டர் பங்களாவைத் தாண்டி வெளியே வரும் போது மாமி வேலாயுதத்திடம் ''ஏன்...இப்படி ரெண்டு பேரும் உம்முனு வர்றேள்...கொஞ்சம் பாட்டு...பழைய பாட்டு இருந்தா போடுங்கோளேன்...என்று அருகே இருந்த சி.டி,பிளேயரின் ஏதோ பட்டனை தட்ட அதில் சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே என்று பாட்டு உச்ச சத்தத்தில் அலறியது. சத்தத்தை வேலாயுதம் குறைத்தார்.
''இது தனிக்காட்டு ராஜானு ரஜினியும் ஸ்ரீதேவியும் நடிச்ச படம். இந்த பாட்டை படத்தில கட் பன்ணிட்டா...அம்பி அதை அவனோட மொபைல் போனில் போட்டுக்காட்டினான். ஸ்ரீதேவி கட்டியிருக்கிறா மாதிரி அதே வெள்ளைக்கலர் புடவை ஒன்னு ....வாங்கணும்....ஏன்னா வாங்கித் தர்றேளா...''
''வாங்கலாம் கோதை...வாங்கலாம்....மொதல்ல அம்பி வரட்டும்...வேலாயுதம் நீங்க ஒண்ணும் வித்தியாசமா நெனைக்கப் ப்டாது....அவளுக்கு சித்தம் சரியில்லை...எனக்கு ஏன் இப்படி ஒரு எழுத்தை தெய்வம் எழுதுச்சோ தெரியலை...வாழவும் முடியல...சாகவும் வழியில்ல...! ஐயரின் கண்களில் நீர் கோர்த்திருந்ததை கார் ஓட்டிக் கொண்டிருந்த வேலாயுதம் கவனிக்க தவறவில்லை.
''கவலைப்படாதீங்க சாமி...எல்லாம் சரியாயிடும்....வேறென்னத்தை நான் சொல்றது''
கார் சீரான வேகத்தில் சாலையில் போய்க்கொண்டிருக்க, நடைபாதைக்கடையில் தர்ப்பூசணி பழங்கள் விற்பதை மாமி கண்டாள்.
''ஏன்னா...தர்ப்பூசணி சீசன் ஆரம்பிச்சிடுத்து...அம்பி விரும்பி சாப்பிடுவான்...வீட்டுக்கு போகும் போது ஒண்ணு வாங்கணும்...மறந்துடாதேள்...''
''வாங்கலாம்...மொதல்ல அம்பி வரட்டும்....''ஐயருக்கு வார்த்தைகள் வரவில்லை.
கார் காவல் நிலைய வாசலில் நின்றதும் காவலுக்கு நின்ற காவலர் வேலாயுதத்தை கண்டு கொண்டார்.
''ஐயா...நீங்க எங்க இங்க...சொல்லிவிட்டா நாங்களே வந்திருப்போமே....''
''இல்லை அது வந்து...இவங்க நம்மளுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க...இவங்க பையனை பிடிச்சி இங்கதான் வச்சிருக்கிறதா சொன்னாங்க...காலையில எஸ்.பி வீட்டுக்கு வந்தவரு ஏ.சி.ஜெயராஜ்கிட்ட சொல்றேன்...ஸ்டேசன்ல போய் கூப்ட்டுக்கோங்கனு சொன்னாரு...அது தான் வந்தோம்...பையன் உள்ளேதான இருக்கான்..?''
காவலர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ''நீங்க கொஞ்சம் தனியா வர்றீங்களா...?"
''சாமி நீங்க கொஞ்ச நேரம் பின்னாடி அந்த பெஞ்ச்ல ஒக்காருங்க...இதோ வந்துடுறேன்...இங்கே ஏதாவது எழுதிக் கொடுக்கனும்னு நினைக்கிறேன்''
மாமி ''ஏன்னா...அம்பி இங்கே தான் எங்கேயோ இருக்கான்...அவன் வாசனை எனக்கு வருது...நீங்க செத்த இருங்கோ...நானே கண்டுபிடிக்கிறேன்'' என்று காவல் நிலையத்தின் பக்கச்சுவரை ஒட்டி நடந்தாள். ஐயருக்கு அந்த இடத்தில் அமரவோ அதே வேளையில் அங்கிருந்து விலகவோ மனமில்லாமல் நின்றபடியே கையில் பூணூலைப் படித்துக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தார்.

காவலர் வேலாயுதத்திடம் ''ஐயா, சொல்றேன்னு அதிர்ச்சி ஆகாதீங்க...நேத்து ராத்திரி செட்டியார் பாலத்துக்கிட்ட ரெய்டு போனப்பதான் பையன் மாட்டினான்...விசாரிக்கும் போது இன்ஸ்பெக்டர் லேசா தட்டினாரு...பையன் சுருண்டு விழுந்து பேச்சு மூச்சில்லாம இருந்தான்...அப்பறம் கொஞ்சம் நேரத்தில உடம்பு விறைச்சி போச்சு...செத்துப் போய்ட்டான்...மேலதிகாரிங்க யாருக்கும் விசயம் தெரியாது...நீங்க விசயத்தை பெரிசு படுத்தாம இங்கயிருந்து போயிடுங்க...பாடியை திருப்பி செட்டியார் பாலத்துக்கிட்டயே நாங்க போட்டுருவோம்...ஒரு பதினோரு மணி போல போயி எடுத்துக்கோங்க...யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல...இல்லைனா போஸ்ட்மார்ட்டம் அது இதுனு அலையவிட்டு சாகடிப்பானுக...புரிஞ்சுக்கோங்க...''துளியும் பதட்டமில்லாமல் சர்வ சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே போனார்.
வேலாயுதத்திற்கு கால்களுக்கு கீழே பூமி நழுவியது. அருகே இருந்த மரச்சன்னலை பிடித்துக் கொண்டு ''ஐய்யயோ...நான்  அந்த பையன பெத்தவங்களுக்கு என்னன்னு சொல்லி புரியவைப்பேன்...?''
காவலர் ''ரொம்ப முக்கியமான விசயம்...ஒங்க மருமகனுக்கு இது தெரியக்கூடாது...''
வேலாயுதம் ''அப்போ எஸ்.பி...?''
''அவர் டிபார்ட்மெண்ட் ஆளுங்க...அவர் எங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு...''
''ஐயா இது கொலையில்லையா...நாளன்னைக்கு அவன் அக்காவுக்கு கல்யாணம்யா...பாவம் அந்த பொண்ணுக்கு 32 வயசுல இப்போதான் ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு''
''சார்...சொல்றத புரிஞ்சுக்கோங்க...வேணும்னு நாங்க செய்யல...ஒரு கோபத்தில தான் இன்ஸ்பெக்டர் அடிச்சாரு...பையன் சுருண்டுட்டான்...இப்போதைக்கு நான் சொல்றது தான் ஒரே வழி...சீக்கிரம் கிளம்புங்க...பாடியை பதினோரு மணிக்கு பாலத்துக்கிட்ட போயி எடுத்து காரியம் பண்ணிடுங்க...''
தள்ளாடியபடியே வேலாயுதம் ஐயர் அருகே வந்து நின்று எப்படி சொல்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்றார்.
ஜெபித்துக் கொண்டிருந்த ஐயருக்கு அருகே மாமி இல்லாததை கண்ட வேலாயுதம் ''சாமி...சாமி...மாமி எங்கே?'' என்றார்.
நிதானத்திற்கு வந்த சாமி ''இங்கே தான் எங்கேயோ அம்பி இருக்கான்...வாசனை வருதுன்னு சொன்னாள்...தெரியலையே...''
''என்ன சாமி..ஏற்கனவே மாமிக்கு சித்த சுவாதீனம் இல்லை...கொஞ்சம் கவனமா பாத்திக்கிட வேணாமா...ம்ம்''
வேலாயுதம் காவல் நிலையத்தின் பக்கவாட்டுச்சுவரை ஒட்டி ஐயரின் கையை பிடித்துக் கொண்டு நடந்தார். மழையில் நனைந்த சுவர்கள், சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பழைய, புதிய சைக்கிள்கள், மோட்டர் பைக்குகள் என ஈரம் மக்கிப் போன அந்த மண்ணில் புதிதாய் முளைத்த இளந்தளிர்களை மிதித்தபடியே இருவரும் நடந்தனர்.
நீண்ட சுவரின் வலது புறம் திரும்பி இருவரும் மாமியின் குரல் கேட்டு விக்கித்து நின்றனர்.
''அம்பி...இதோ பாரு...அப்பாவும் ஆட்டோக்காரர் வேலாயுதமும் உன்னை கூட்டிண்டு போறதுக்கு வந்திருக்கா...ஆமா...வேலாயுதத்தோட மருமகன் யாரு தெரியுமா...நீ ஒருதலையா லவ் பண்ணினயே லட்சுமி அவளோட ஆத்துக்காரன் தான்...அவன்தாண்டா... இப்போ கலெக்டர்..அவகிட்டதான் வைதேகி கல்யாணத்துக்கு நெத்திச்சுடி கேட்டிருக்கேன்...அப்புறம் மாப்பிள்ளைக்கு வாட்சு போடணுமாம்...நீதான் போடணும்...நம்ம லட்சு ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தப்போ ஹெட்மாஸ்டர் குடுத்தாரே அதைத்தான் எடுத்து வச்சிருக்கேன்...ராத்திரி எடுத்துப்பார்த்தேன்..அது ஓடவே இல்லை...ரெண்டு குலுக்கு குலுக்கினேன்...ஓட ஆரம்பிச்சிடுத்து...ஜானவாசத்துக்கு கார் கேட்டா அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிப்புட்டேன்...அம்பது வயசுக்காரனை இவன் தான் எங்காத்து மாப்பிளைன்னு ஊருக்கு காட்டணுமாக்கும்...இதோ பாரு எந்திரிடா செல்லம்....இனிமே இங்கே இருக்காதே...பேசாம திருவையாறு பாடசாலைக்கு போயிடு...ரெண்டே வருசம் தான்...அப்புறம் ஒன் தோப்பனாருக்கு ஒரு புள்ளையார் கெடச்ச மாதிரி ஓனக்கும் ஒரு புள்ளையார் கெடைக்காமலா போயிடும்...இனிமே அயோடெக்ஸ் சாப்பிடாதேடா...நீ கஞ்சா பிடிக்கிறேன்னு உங்கப்பா கலெக்டர் ஆத்தில வச்சு சொல்றார்...பெத்தவ எனக்கு எப்படி இருக்கும்....என் புள்ள அப்படிப்பட்டவன் இல்லைன்னும் கண்டிச்சி சொல்லிப்புட்டேன்...கண்ணு எழுந்திரிடா...நாளன்னைக்கு வைதேகிக்கி கல்யாணம்...அப்பாவுக்கு வயசாயிடுத்து இல்லையா...நீதானே அவருக்கு ஒத்தாசையா இருக்கணும்...கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் வைதேகிக்கு சாந்தி கல்யாணம் ஆன பின்னாடி நீ கொஞ்சம் போல அயோடெக்ஸ் சாப்டுக்கோ...அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டேன்...சரியா...அப்புறம்...வைதேகியோட புக்காத்துல உனக்கு வேட்டி துண்டுதான் தருவேன்னு சொன்னா நான் தான் அவனுக்கு பேண்ட் சர்ட் எடுத்துக் கொடுங்கோன்னு கட் அன் ரைட்டா சொல்லிபுட்டேன்...பொண்ணோட பொறந்த ஒரே ஆம்பளை நீ...சிம்பிளா வேட்டி துண்டு கொடுத்து கடமையை கழிக்க நெனச்சா நான் விடுவேனா...என்னடா இது உன் முகம் நீ பொறந்தப்போ எப்படி இருந்துச்சோ அப்படியே இருக்கு....உன் அப்பாவோட பொறந்த அத்தைதான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள். அவதான் சொன்னா பாருங்கோ மன்னி குழந்தை சூரியனை ஒடைச்சு எடுத்த துண்டு மாதிரி ஜொலிக்கிதுன்னுட்டு...அதுனால தான் ஒனக்கு ரகுராமன்னுட்டு பேரு வச்சேன்...இப்போ அவ ஆளும் குணமும் மாறிப் போய்ட்டா...பத்திரிக்கை கொடுக்க போனப்பக்கூட ''மன்னி கல்யாணத்த எப்படி பண்ண போறேள்...இந்தாங்க என்னால முடிஞ்சது அப்படின்னு ஒரு பத்தாயிரம் காசு கொடுத்தா என்னவாம்...அவ ஆத்துக்காரனுக்கு என்ன எல்.ஐ.சில பியுனா இருக்குறான்...தினமும் வரும்படி உண்டு...ம்ஹ்ம்...என்னத்தை சொல்ற்து...சரி...சரி....நீ எந்திரி...நம்ம போகலாம்....!

ரகுராமன் சுவற்றின் ஓரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். கண்களிலும் உதடுகளின் வழியே பற்களின் மீதும் வந்தமர்ந்த ஈக்களை விரட்டியபடி மாமி பேசிக்கொண்டேயிருந்தாள். பேசுவதற்கு அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன. அதைக் கேட்பதற்கு ரகுராமன் என்னும் அம்பியின் காதுகளும் திறந்தே இருந்தன....!














Wednesday, February 1, 2017

பட்ஜெட் பலாபலன்கள் 2017-18 (துலாம் முதல் கன்னி வரை)

துலாம்:
துலாம் ராசி குடிமக்களே!
இந்த ஆண்டு பட்ஜெட் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் விதமாக கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு என பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வேலை கிடைக்காது, அயல் நாட்டில் வேலை பார்த்தால் சுபகிரகமான அமெரிக்கா இப்போது பாவகிரகமான டொனால்ட் ட்ரம்பின் சாரத்தில் சஞ்சாரம் செய்வதால் அந்த வேலையும் பறி போகும். அதற்கு மற்றொரு பாதகாதிபதியான மோடியும் உதவுவார்.
பரிகாரம்:
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் சென்று அங்குள்ள தூதரை சிவப்பு ஒயின் கொண்டு வழிபாடு செய்யவும்.
கூடுதலாக, டில்லியில் வீற்றிருக்கும் ஜனாதிபதிக்கு ஏலக்காய் மாலை சாற்றி இரண்டு நெய் தீபம் பிரதி ஞாயிறு ஏற்றவும். இயலாதவர்கள் டாஸ்மாக்கில் ஆஃப் வோட்கா வாங்கி தண்ணீர் கலக்காமல் அடித்து மட்டையாகி விடவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி குடிமக்களே!
ஏற்கனவே ஏழரைச்சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் இப்போது ஜன்ம சனியான மோடியின் மூன்றாம் பார்வையாலும் விரய சனியான ஜெட்லியின் பார்வையாலும் விபரீத விளைவுகளை சந்திக்க இருக்கிறீர்கள், கடன் கொடுத்தவர் கொடுத்த கடனை திருப்பி கேட்பார். வீட்டுக்காரர் வாடகை கேட்பார். பால்காரர் தண்ணீர் அதிகம் கலப்பார். விரயச்சனியான அருண் ஜெட்லி வருமான வரி என்ற பெயரில் அவ்வளவு பணத்தையும் அள்ளி கொண்டு போவார்.
பரிகாரம்:
டெல்லியில் இருக்கும் மோடியில் இல்லம் சென்று அவர் வீட்டின் முன் அமர்ந்து ''ஐயய்யோ எங்களை விட்று''என்று கதறி மனமுருகி வேண்டிக் கொண்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமோசனம் கிட்டும் வாய்ப்புண்டு.
தனுசு:
தனுசு ராசி குடிமக்களே!
உங்களுக்கு இத்தனை பிலிம் காட்டி வந்த மோடியும் அருண் ஜெட்லியும் வக்ரகதியில் இயங்குவதால் அவர்களின் சுயரூபம் தெரிய வரும். வருமானம் இராது ஆனால் வரி கட்டுவீர்கள். கோடி வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் அதானிக்கு காண்டிராக்ட் கிடைக்கும் உங்களுக்கு தெருக்கோடி மட்டுமே கிட்டும். கோவணத்தை இறுக கட்டுக்கொண்டு தூங்குவது மானத்தை காக்கும்.
பரிகாரம்:
டெல்லி சென்று அருண் ஜெட்லிக்கு பால் குடம் எடுத்து அதை அபிசேக ஆராதனை செய்துவர உக்கிரம் குறையலாம். பாலில் கோமியம் கலந்து அபிசேகம் செய்து வர சிறப்புப் பலனுண்டு. அப்படியே பாலில் சிறிது பசுஞ்சாணம் கலந்து மோடிக்கு அபிசேகம் செய்யலாம்.
மகரம்:
மகர ராசி குடிமக்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதியான ஜெட்லி தனது லக்கினாதிபதி வீடான மோடியை பார்ப்பதால் உங்களுக்கு புதுக்கடன் உருவாகும். விவசாயத்திற்காக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் உங்கள் நட்சத்திர நாதனான ஓ.பன்னீர் செல்வமும் கைவிட பூச்சி மருந்து குடித்து உயிர் விட நேரிடும்.
பரிகாரம்: உங்களை தற்காத்துக் கொள்ள கருப்பு நிறத்தில் ஆடை அணியவும். போயஸ்கார்டன் சென்று சின்னம்மாவை தரிசித்து மண் சோறு சாப்பிடுதல் நலம். பூச்சி மருந்திற்கு பதிலாக கோக் அல்லது பெப்சி குடிக்க வலியில்லாமல் எமனிடம் சென்று சேரலாம் என்றும் ஜோதிட விதிகள் கூறுகின்றன.
கும்பம்:
கும்ப ராசி குடிமக்களே>
அருண் ஜெட்லியும் மோடியும் ஒரே வீட்டில் அமர்ந்து உங்கள் லக்கினாதிபதியை மூன்றாம் பார்வையாக பார்ப்பது ஆறுதலைத் தருமென்றாலும் இதை மிகச் சிறப்பான இடம் என்று உறுதியாக கூற இயலாது. வரிச்சுமையும், எரிபொருள் விலையேற்றமும் நீட் தேர்வும் உங்கள் தூக்கத்தை தொலைக்கச் செய்யும்.
பரிகாரம்:
எல்.கே.அத்வானிக்கு வடைமாலையும் ஸ்மிருதி இரானிக்கு எலுமிச்சையில் விளக்கும் ஏற்றி வழிபட பலன் கிட்டும்.
மீனம்:
மீன ராசி குடிமக்களே!
விரக்தியின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தக்கூடிய நிலையில் ஜெட்லியும் மோடியும் நிலைகொண்டுள்ளனர். அவர்களால் உங்களுக்கு வாகன செலவு, கல்வி செலவு, கழிப்பறை செலவு என கண்ணை கட்டும் செலவுகள் வரப்போகின்றன. வக்ரகதியில் இயங்கும் மோடியின் நேரடி பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நாய் உங்களை துரத்திக் கடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பரிகாரம்:
தினமும் ஆஃப் வோட்கா தண்ணீர் மட்டும் கலந்து ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டு வர பலன் கிட்டும். ஐய்யப்பனுக்கோ முருகனுக்கோ மாலை அணிந்து இதை செய்வது கூடுதல் மற்றும் உடனடி பலனைத் தரும்.

பட்ஜெட் பலாபலன்கள்: 2017 18 (மேஷம் முதல் கன்னி வரை)

பட்ஜெட் ஜாதகம்: 2017 18
மேஷம்:
மேஷ ராசி குடிமக்களே! இந்த ஆண்டு உங்கள் ராசியின் அதிபதியாகிய அருண் ஜெட்லி பாதகாதிபதியாகி ஒன்பதாம் இடத்தில் மோடியை பார்ப்பதால் மருத்துவ செலவு அதிகமாகும். உளுந்தம் பருப்பில் சாம்பார் வைப்பதை குறைத்துக்கொண்டு பாசிப்பருப்பில் சாம்பார் வைப்பது மருத்துவ செலவை குறைக்கும். மோடி இந்த வருடம் ஏப்ரல் மாதத்துவக்கத்தில் இருந்து வக்ரகதியில் இயங்குவதால் பாக்கெட்டில் இருக்கும் பணம் வேகமாக கரையும். ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போனால் உங்கள் முறை வரும் போது மெசினில் பணம் தீர்ந்து போயிருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் டாஸ்மாக்கில் கிடைக்கும் பிராந்தி ஒரு குவார்ட்டர் தண்ணீர் கலக்காமல் அருந்தவும்.
ரிஷபம்: ரிஷப ராசி குடிமக்களே! வருடத்தின் ஆரம்பத்திலேயே காளையைக் கொண்டு ஒரு அரசியலை மோடி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக இருந்தாலும் அது முடிவல்ல. உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மோடி இருப்பதால் மனத்தில் ஒரு நிம்மதி இன்மை தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். பணம் கையில் இருந்தாலும் செல்லாது, செல்லும் பணம் இருந்தாலும் பொருள் எதுவும் வாங்கும் விலையில் கிடைக்காது.
பரிகாரம்: டெல்லியில் இருக்கும் பாராளுமன்றம் சென்று ''மோடி வாழ்க'' என்று 101 முறை கோஷம் போட்டு வர பிரச்சினையின் தீவிரம் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசி குடிமக்களே!
இந்த ஆண்டு ஒரு கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொள்ளப் போகிறீர்கள். பத்தில் அருண் ஜெட்லி ஒன்பதில் மோடி. பாவ கிரகங்கள் அடுத்தடுத்த வீட்டில் இருந்தால் மல்லையாவே ஆனாலும் மண்ணாகிப் போவான் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதன்படி உங்களுக்கு கேடுகாலம் துவங்கி விட்டது. நாசமாய் போவதற்கு எல்லாவிதமான திட்டங்களும் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் வாயிலாக தரப்போகிறார்.
பரிகாரம்:
பிரதி மாதம் வருமான வரி அரசு கேட்டபடி கட்டி விடவும். வங்கியில் கடன் வாங்கி திருப்பி தரவேண்டி இருந்தால் வெளிநாடு தப்பி செல்ல ஒன்பதாம் இடத்து மோடி உதவி செய்வார். சரக்கடிக்கும் போது ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்க்க நல்ல பலனுண்டு.
கடகம்:
கடக ராசி குடிமக்களே,
பாதகாதிபதியான அருண் ஜெட்லி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திலிருக்கும் மோடியை வக்ரபார்வை கொண்டு பார்ப்பதால் உங்கள் மனைவி உங்களுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கரையும். மேலும் பிள்ளைகளின் கல்வி செலவை மூன்றாம் இடத்திலிருக்கும் பிரகாஷ் ஜவ்டேகர் பலமடங்கு உயர்த்தி உங்களை கடனாளியாக்குவார்.
பரிகாரம்:
வீட்டில் ஸ்மிருதி இரானி படத்திற்கு எலுமிச்சம் பழம் மாலை சாற்றி வழிபடுவது பிரச்சினைகளை குறைக்கலாம். பிரதி சனிக்கிழமை மாலை விஸ்கியில் சோடா கலந்து குடித்து வர கவலையை சற்று நேரம் மறக்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி குடிமக்களே!
உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான மோடி ஏழாம் பார்வையாக மற்றொரு பாதகாதிபதியான அருண் ஜெட்லியை பார்ப்பது சிறப்பான நிலை அல்ல. சோற்றுக்கே சிங்கி அடிக்க வேண்டி வரும். கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் திணறுவீர்கள். துவரம் பருப்பை அதானி குழுமம் பதுக்கி வைத்து விற்பதால் சாம்பார் வைக்கத் திணறுவீர்கள். கட்டிட தொழிலாளர்கள் மணல் கிடைக்காமல் வேலை இழப்பார்கள்.
பரிகாரம்:
மோடி முன்னாள் ஆட்சி செய்த குஜராத் சென்று அவரால் பாதிக்கப்பட்ட / கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு அஞ்சலி செலுத்தி வர நல்ல பலன் கிட்டும். அடுத்து வரும் தேர்தலில் முகனூலில் இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வர உலகத்திற்கே நன்மை உண்டாகும். வெயில் காலத்தில் பட்ஜெட் அமுலாக்கப்படுவதால் பீர் சாப்பிடவும். ரம்மை தவிர்க்கவும்.
கன்னி:
கன்னி ராசி குடி மக்களே,
இந்த பட்ஜெட்டிற்கு பின்னால் உங்கள் வாழ்க்கை சூன்யமாக போகிறது. வரி கட்டி மாளாது. கடனுக்கு வட்டி கட்டி தீராது. சிகரெட் விலை பன்மடங்கு உயரவிருப்பதால் நிம்மதியாக புகைக்கக் கூட முடியாது. உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் பாதகாதிபதி நீசம் பெற்று மோடியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் பிள்ளைகள் நீட் என்னும் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வி பெறுவது தடைபடும்.
பரிகாரம்:
சென்னை கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள தமிழ் நாடு தலைமை செயலகம் முன்பு அமர்ந்து அங்கே வீற்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு மிக்சர் படைத்து வழிபாடு செய்ய பலன் கிட்டும்