Monday, March 18, 2019

விஞ்ஞானப் பயணம் - வெனிஸ் நகரத்திலிருந்து (3)

பதோவா பல்கலைகழகத்தின் அடுத்த சிறப்பம்சம் அங்குள்ள உலகின் முதல் உடற்கூறியல் ஆய்வகம். பிணத்தின் மீது ஆய்வு செய்வது கத்தோலிக்க திருச்சபை தடை செய்திருந்த காலம். எந்த மதமும் அறிவியலுக்கு துணை நின்றதில்லை என்பதை மக்கள் இன்று வரை உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பெண்களுக்கு பட்டமளிக்க கத்தோலிக்க திருச்சபை மறுதலித்து வந்தது என்பது ஒரு வரலாற்று உண்மை. திருச்சபை தலைவர் பெண்களுக்கு பட்டமளிக்க மறுத்து வந்தார். அந்த தடைகள் அனைத்தையும் மீறி முதல்முறையாக 1678ல் தனது முனைவர் பட்டத்தை அதுவும் கணிதத்தில் பெற்றார் எலினா லூக்ரேசியா. பல்கலைகழக வளாகத்தின் மைய மண்டபத்தின் நுழைவாயிலில் அவருக்கு இன்று சிலை வைத்துள்ளனர்.



உடற்கூறியல் ஆய்வகம் செயல்பட பிணங்கள் தேவை. கல்லறையை தோண்டி பிணத்தை எடுத்துவர இரண்டு திருடர்களை பல்கலைகழகம் பயன்படுத்தியது. பிணம் எப்போது கிடைக்கும் என்று தெரியாத காரணத்தால் எந்நேரமும்  தயாராக இருக்கவேண்டும். மூன்று அடுக்கு கொண்ட சிறிய அறையில் தரைத்தளத்தில் பிணத்தை கிடத்தி பேராசிரியர் ஆண்ட்ரூ வெசாலியஸ் ஆய்வு செய்ய முதல் தளத்தில் பேராசியர்கள் நின்று கொள்ள அடுத்த தளத்தில் மாணவர்கள் நின்று கொண்டு அதை வரைந்து குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.
இங்கே வாசகர்கள் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத அந்த நாட்களில் இது எப்படி சாத்தியமானது? உடற்கூறியல் என்பது மிக நுட்பமாக கவனித்து கற்றுகொள்ள வேண்டிய பாடம். ரத்த நாளங்களும் திசுக்களும் எலும்பின் வகைகளும் அவற்றின் இயல்புகளை பதிவுசெய்து ஒப்பீடு செய்து கற்றாக வேண்டும். வயதும் நோயும் முக்கியமான காரணிகள். ஒளியற்ற அந்த பிணவறையில் கீழேயும் மேலேயும் மாணவர்கள் மெழுகுதிரிகளை பிடித்துக்கொள்ள அந்த வெளிச்சத்தில் ஆய்வைப்பார்த்து பதிவு செய்ய வேண்டும். இதிலும் ஒரு சிக்கல் உண்டு. மெழுகுதிரி எரிய ஆக்சிஜன் வேண்டும். மூடிய அறைக்குள் மாணவர்கள் விடும் மூச்சுக்காற்றின் கார்பன்-டை-ஆக்சைடு எரியும் திரியை அணைக்கும். மெழுகுதிரி எரிய எரிய அறைக்குள் ஆக்சிஜனின் அளவு குறையும். யாரேனும் மயக்கமடையும் வாய்ப்போ மரணமடையும் வாய்ப்போ உண்டு. அவ்வாறு அனேக உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. அவை அனைத்தையும் தாண்டியே நாம் இன்றைய நமது உடற்கூறியல் அறிவை பெற்றுள்ளோம். பலருடைய உயிர்த்தியாகத்தாலேயே இது சாத்தியமானது. 1543ல் முதல் உடற்கூறியல் கையேடு பேராசிரியர் ஆண்ட்ரூ வெசாலியஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.


பின்னாளில் புகழ் பெற்ற மருத்துவர். வில்லியம் ஹார்வி உடலின் ரத்த ஓட்டத்தை பற்றிய ஆய்வுகளை வெளியிட இந்த நூல் உதவியது. இன்றும் ரத்த சுழற்சி மண்டல ஆய்வின் தந்தை என்று மரு.வில்லியம் ஹார்வி போற்றப்படுகிறார்.

பல்கலைகழகம் எங்கும் புகழ்பெற்ற ஆய்வாளர்களின் படங்கள் சுவற்றில் வண்ண ஓவியமாக திகழ்கின்றன. கோபர் நிகஸ் (வானியல் ஆய்வாளர், போலந்து) இங்கே தான் பணியாற்றினார்.

பல்கலைகழகத்தை சுற்றி பார்த்த பின் அடுத்து பதோவா தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்தோம். உலகின் மிகத்தொன்மையான பூங்காக்களில் இதுவும் ஒன்று.
பூங்காவின் மையத்தில் வென்னீர் ஊற்று ஒன்று உண்டு. நம் ஊராக இருந்தால் அங்கே கோயில் கட்டி உண்டியல் வைத்திருப்போம். ஆனால் அவர்கள் வெப்ப நாடுகளில் மட்டும் மலரும் பூக்களை பயிரிட்டுள்ளார்கள்.



விதவிதமான பூக்களையும் காய்களையும் பிரசவித்த தாவரங்களை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை பெற்றோம்.
தாவரவியல் பூங்காவை அடுத்து இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த லாஸ்ட் க்ருசேட் திரைப்படத்தில் வரும் சான் பர்னாபா தேவாலயத்திற்கு சென்றோம். இத்தாலியில் இருந்த போது ஒரு இடத்திலும் பிச்சைக்காரர்களை காண முடியவில்லை. இந்த தேவாலய வாசலில் இரண்டு பிச்சைக்காரர்களை கண்டோம். திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஞாபகப்படுத்திக் கொண்டால் ஒருவித தனிமகிழ்ச்சியை அளிக்கும் இடம் இது. ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய இந்த திரைப்படம் மிக சுவாரஸ்யமானது. ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இயேசு நாதர் பயன்படுத்திய கோப்பை ஒன்றை தேடும் கதை. கதைக்களம் இரண்டாம் உலகப்போர் நிகழும் சமயம் ஆதலால் படத்தில் ஹிட்லர் ஒரு காட்சியில் தோன்றுவார். படத்தின் இறுதிக்காட்சி புனையப்பட்ட ஒன்றே ஆயினும் உணர்ச்சிகரமாக இருக்கும். வாய்ப்புள்ளவர்கள் பார்க்கவும்.




அடுத்த நாள் இத்தாலியின் புகழ்பெற்ற புற்று நோய் ஆராய்ச்சி கழகத்திற்கும், மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் செல்ல வேண்டும்.
மானுட வாழ்க்கையை தனது கொடுங்கரங்களால் நசுக்கும் இந்த நோய்க்கான தீர்வை நோக்கி ஆராய்ச்சியாளர்கள் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அங்கே செல்வதற்கு முன் இதன் பின்னால் இருக்கும் மிகப்பெரிய சந்தை மதிப்பும் அதனூடே செயல்படும் வணிக தந்திரங்களை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.                                                                                 
                                                                                                                                    (தொடரும்)