Sunday, August 20, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(3) - அசோக் வாஸ்வானி என்னும் அற்புதம்:

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(3) - அசோக் வாஸ்வானி என்னும் அற்புதம்:
இந்த பயணத்தில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று அசோக் வாஸ்வானி அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பு. தனது 27ஆம் வயதில் தான் பார்த்துக் கொண்டிருந்த  வேலையை விட்டுவிட்டு கினியாவில் தொழில் துவங்க முயற்சி செய்த போது சிலர் அவரை ஏற இறங்க பார்த்தனர். பலர் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். அவர்களின் கூற்றில் பிழையில்லை. காரணம் அன்றைய சூழலில் கினியா தொழில் துவங்குவதற்கு உகந்த நாடு அல்ல. கினியாவில் குடிமை பாதுகாப்பு என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கே  அரசாங்கங்கள் உறுதி செய்யாத சூழல். இப்போதும் அதுவே நிலைமை. ஆனால் அசோக் வாஸ்வானி துணிந்து அந்த முடிவெடுத்தார். பொருட்களை வாங்கி விற்பதில் துவங்கி உற்பத்தியை நோக்கி முன்னேறினார். அது மிக இலகுவான பயணம் அல்ல. கினிய அரசாங்கத்திற்கு அதிகமாக வரி கட்டும் தனி நபர் என்ற நிலைக்கு உயர்ந்தார். பெயிண்ட், ஞெகிழிப் பொருட்கள், ஞெகிழி குழாய்கள், பைகள், வடங்கள் என்று உற்பத்தித்துறையில் சாதித்துக்காட்டினார். இன்று அவரது அலுவலகங்கள் உலகமெங்கும் விரவி கிடக்கின்றன. இந்தியாவிற்கான கௌரவ தூதரும் கூட.
இடையில் 2004ல் அவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒரு வினோதமான பிறவியாக பிறந்தது. அந்த குழந்தைக்கு உணவுக்குழாய் பிறப்பிலேயே இல்லை. நண்பர்கள் குழந்தைதான் முக்கியம் எனவே தொழிலை மூடிவிட்டு குழந்தையை காப்பாற்ற ஆலோசனை கூறினர். சென்னை அப்பொலோவில் 5 மாதங்கள் வைத்து காப்பாற்றிய பின் அதை ஃப்ரான்சில் புகழ் பெற்ற நிக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றார். அந்த போராட்டமான காலங்களில் அசோக் மீண்டும் ஒரு துணிச்சலான முடிவெடுத்தார். நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தனது அதிகாரிகளுக்கு கொடுத்தார். காசோலையில் கையெழுத்திடுவது, மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வது, விற்று பணவசூல் செய்வது, ஊழியர்களை பணியிலமர்த்த்வது சம்பளம் வழங்குவது என அனைத்தையும் நிர்வாகிகள் முடிவுக்கு விட்டார். அப்போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எச்சரித்தனர். செய்யாதே ஏமாற்றப்படுவாய், அனைத்தையும் இழந்து விடுவாய் இது நிச்சயம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அசோக் தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்தார். குழந்தையையும் காப்பாற்றினார். இதன் மூலம் அசோக் நமக்கு சில பாடங்களை கற்று தருகிறார்.
1) மனிதர்களை நம்புங்கள் (ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; ஒரு சிலர் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக அனைவரையும் சந்தேகிப்பது அறமாகாது)
2) எதிலும் துணிந்து முடிவெடுங்கள் (காலம் தான் செல்வம்; முடிவெடுக்க காலம் கடத்துபவர்கள் ஒரு போதும் வெல்வதில்லை)
3) உழைக்க தயங்காதீர்கள் (சோம்பேறிகளுக்கு முன்னேற்றமுமில்லை; அதனால் அவர்களுக்கு வருத்தமும் இல்லை. சாதனையாளர்களே உழைக்கிறார்கள், உழைப்பவர்களே சாதிக்கிறார்கள்)

தொழில் சம்பந்தமான விவாதங்கள் நிறைவுற்ற பிறகு பகல் உணவிற்காக சாப்பாட்டு கூடத்திற்கு அழைத்து சென்றார். பகலுணவை தனது தொழிலில் முடிவெடுக்கும் அதிகாரமிக்க அதிகாரிகளுடன் உண்பதை தனது நிறுவன கலாச்சாரமாகவே வைத்திருக்கிறார். 200 இந்தியர்கள் அவர்களில் 40பேர் தமிழர்கள் என்று ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள்.
பகலுணவு முடிந்த பிறகு தனது தொழிற்சாலையை சுற்றி காண்பிக்க என்னை அழைத்துச் சென்றார். அலுவலக வாயிலை விட்டு இறங்கும் போது இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் இந்த பிராந்தியத்தின் கட்டுப்பாடு முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் பணம் கொடுத்தால் சேவை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். '' நீங்கள் இருவரும் இங்கே வந்தது உங்கள் அமைச்சருக்கு தெரியுமா?'' என்றார். திரும்பி தனது அலுவலக வரவேற்பாளரிடம் ஜனாதிபதி ஆல்ஃபா கோண்டேவை உடனடியாக அழைக்கும்படி குரல் கொடுத்து திரும்பும் வேளையில் இரண்டு அதிகாரிகளும் தொழிற்சாலையின் முகப்பு வாயில்வரை ஓடிக்கடந்திருந்தனர்.
தொழிற்கூடத்தில் ஒரு புறம் ஞெகிழிப் பொருட்கள், மறுபுறம் வர்ணப்பூச்சுக்கள், மற்றொரு புறம் இணையதளத்திற்கான கம்பி வடங்கள் என்று பல்வேறு பகுதிகள் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
தொழிற்கூடத்தின் ஒரு மூலையில் இரு பெரிய இயந்திரங்கள் வடிவ அச்சுக்களை கடைந்து கொண்டிருந்தன. அது என்னவென்ற புரியாமல் உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையை புரிந்த கொண்ட அசோக் ''ஜேசீ...பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்த ''டை'' என்னும்
வடிவ அச்சுக்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தோம்.. இன்று அதை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்'' என்றார்.
நான் கேட்டேன் '' நீங்கள் என்ன படித்தீர்கள்...பொறியியலா...?'' எனது தோளைத்தட்டி சிரித்துக் கொண்டே அசோக் சொன்னார் ''பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி''
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ''படிப்பிற்கு அறிவிற்கும் துளியும் தொடர்பில்லை.




Saturday, August 19, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(2) - 19-08-2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(2)
கினியாவின் தலைநகரில் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஜன்னல் வழியாக கொனாக்ரி நகரத்தைப் பார்த்தேன். ஒரு நகரமே தகரத்தை ஆடையாக்கி இழுத்து போர்த்தி இருந்த மாதிரி தோற்றமளித்தது. நெல்வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே தென்னை வளர்ந்து நிற்பதை போன்று தகரக் கூரைகளுக்கு நடுவே சில உயரமான கட்டிடங்கள் தென்பட்டன. குடியேறல் துறையில் எனது கடவுச்சீட்டைப் பார்த்த அதிகாரி உங்களை அழைத்துச் செல்ல தூதரகத்திலிருந்து கார் வந்திருப்பதாக சொன்னார். சொன்னபடியே ஓட்டுனரும் பாதுகாப்பு அதிகாரியும் தயாராக இருந்தனர். சுமார் 15கி.மீ தூரத்தை கடக்க ஒண்ணரை மணி நேரமானது.  குண்டும் குழியுமான சாலைகள். நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நிச்சயம். நடுச்சாலையில் இளைஞர்களும் யுவதிகளும் தண்ணீர் பொட்டலங்கள், கடலைபருப்பு, செருப்பு, டார்ச் லைட்டுகள், எலி மருந்து, ஜட்டி,பனியன் என அனைத்தையும் சாலையின் இருமருங்கிலும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கினியா தங்கமும் வைரமும் அலுமினியத் தாதுப்பொருளான பாக்சைட் மற்றும் இரும்பு போன்ற கனிம வளங்கள் இருந்தும் வறுமையில் வாடுகிறது. வல்லாதிக்க நாடுகளின் சுரண்டலாக இருக்குமோ என ஆராய்ந்த பொழுது இவற்றை சுரண்டுபவர்களில் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்பதை நினைக்கும் போது பெருமை கொள்ள இயலவில்லை. இங்கிருந்து தங்கம் மண்ணோடு அடிமாட்டு விலைக்கு (கௌ பக்தாஸ் மன்னிக்க வேணும்) வாங்கி அதை துபாயில் விற்பவர்கள் மார்வாடிகள். வைரத்தை வாங்கி ஹாங்காங் அல்லது பெல்ஜியத்தில் பட்டை தீட்டி சர்வதேச சந்தையில் விற்பவர்கள் குஜராத்திகள். இரும்பும் அலுமினியமும் மண்ணாகப் போய்விட்டு இந்த மண்ணின் மைந்தர்கள் பிச்சை எடுக்க சட்டி, பானையாக திரும்பி வருகிறது. மூலதனங்கள் பாய்மமாக மாறி சர்வதேச சந்தையை ஒரு குக்கிராமமாக மாற்றி விட்ட சூழலில் இம்மக்கள் தங்கள் காலுக்கு கீழே உள்ள செல்வத்தை அன்னியர்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு பஞ்சபராதாரியாக வாழ்கிறார்கள். இதை ஒரு சராசரி மனிதனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வயிறு வீங்கிய குழந்தைகள், கல்வியில்லா இளைஞர்கள், வேலையில்லா ஜனத்திரள் என்று ஒரு தேசமே விபத்தில் அடிபட்டு ரத்தமிழந்த ஒருவன் உயிர்வளிக்கு (ஆக்சிஜன்) ஏங்குபவனைப் போல் தோற்றமளித்தது.

கி.பி 15ஆம் நூற்றாண்டில் அடிமை சந்தையை போர்த்துகீசியர்கள் துவக்கிய போது கினியாவும் செனெகலும் முக்கியமான மையங்களாக இருந்தன. மனித வரலாற்றில் தொற்று நோய்கள் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது இந்த பிராந்தியத்தில் தான். செனெகலுக்கு அருகில் இருக்கும் கோரே தீவில் தான் பிளேக் என்னு உயிர்க்கொல்லி நோய் தாக்கியது. அன்றிலிருந்து இன்று வரை நோய்களின் தாயகமாகவே இந்த பிராந்தியம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. பிளேக்கிலிருந்து எபோலா வரை என்று தனி ஆவர்த்தனமே வாசிக்கலாம். அவ்வளவு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எபோலாவின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்று கற்றுத்தரும் நமது பாடத்திட்டம் அது ஏன் என்று கேள்வி கேட்க கற்றுத்தரவில்லை. நிதர்சனம் என்பது ஆப்பிரிக்கா இருண்ட கண்டமாக பராமரிக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் குப்பை தொட்டி ஆப்பிரிக்கா. ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பயன்படுத்தி தூக்கி எறிந்த ஓட்டை ஒடிசலான வாகனங்களே இங்கே போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கு ஆடை என்பதே ஏற்கனவே ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் ஆடைகள் தான்., உள்ளாடைகள் உட்பட. இங்கே வந்து குவியும் இந்த ஆடைகளை துவைத்து சந்தையில் விற்கிறார்கள். அதுவே அவர்கள் மானத்தை மறைக்கின்றது.

மழை எப்போதும் பெய்யும்; வெயில் எப்போதும்  அடிக்கும். எப்போது மழை பெய்யும் எப்போது வெயிலடிக்கும் என்பதை எந்த ஊர் ரமணனும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் பழகிப்போன மக்கள் இவற்றை பற்றி கவலை கொள்வது கிடையாது. கொளுத்தும் வெயிலில் கோட் சூட் போட்டுக்கொண்டு நடக்கும் மக்களை பார்க்க முடியும். அதுவும் அமெரிக்காவில் யாரோ போட்டு தூக்கி எறிந்த சாயம் போன ஒன்று. பெண்கள் அணியும் ஜீன்ஸ் பேண்டும் அவ்வாறே. உதட்டு சாயம் இல்லாத பெண்களை காண்பது அரிது. கனத்த கருப்பு உதடுகளுக்கு சிவப்பு சாயம் துளியும் பொருந்தாது என்பதை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.

கினியாவின் பணத்திற்கு கினியா ஃப்ராங்க் என்று பெயர் அதற்கு சர்வதேச சந்தையில் மதிப்பு கிடையாது. ஒரு யூரோவிற்கு கினியாவின் பணம் 10500 தருகிறார்கள். நான் தங்கியிருந்த ஓட்டலில் தெரியாத்தனமாக 50யூரோவை மாற்றினேன். அவர்களோ 5,25,000 கினியன் ஃப்ராங்க் தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழித்தேன். நமது ஒரு ரூபாய் இவர்கள் மதிப்பில் 150 கினியன் ஃப்ராங்க். ஒண்ணரை லிட்டர் தண்ணீர் 6000க்கு விற்கப்படுகிறது (நமது ரூபாய்க்கு 40). ஆண்களை விட பெண்களே அதிகம் உழைக்கிறார்கள். குடும்பத்தை பேணுகிறார்கள். அதிகம் குழந்தை பெறுகிறார்கள் பத்து பெற்றால் மூன்று அல்லது நான்கு பிழைக்கிறது. குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகம் உள்ள நாடு கினியா. சமூக பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியில் நடமாடும் சூழல் முற்றிலுமாக இல்லை. நான் இந்திய ஒன்றியத்திற்கான கௌரவ தூதரான திரு. அசோக் வாஸ்வானி அவர்களை சந்திக்க சென்ற போது ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரி உடன் வந்தார். அன்றிலிருந்து நான் செனிகல் தலை நகரான டக்கார் திரும்பும்வரை அவர் என்னுடனே இருந்தார். அது ஒரு அசூயை உணர்வை ஏற்படுத்தினாலும் பாதுகாப்பு என்பது முதன்மையானது என்பதால் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
(தொடரும்...)



Thursday, August 17, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் – கினியா (1) 18-08-2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா
கடந்த வாரம் அலுவலகம் வந்த நண்பர் ரகு ''மழைக்காலத்தில் மாஸ்கோ'' என்ற பயணக்கட்டுரை தேசத்தின் குரல் இதழில் வெளியான போது நன்கு வரவேற்பு பெற்றதாகவும் நான் தொடர்ந்து ஏன் உக்ரேன் மற்றும் கஜகஸ்தான் பயணத்தைப் பற்றி எழுதவில்லை என்றார். எழுத நேரம் கிடைக்கவில்லை என்னும் வழக்கமாக சொல்லும் பதிலையே சொல்லி வைத்தேன்.  இந்த முறை ஆப்பிரிக்கா பயணஅனுபவங்களை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல என்றும் வேலைச்சுமைக்கு இடையே களைப்பு நிவாரணியாக கருதியே நான் எழுதுகிறேன் என்றும் சொன்னேன். அவர் சமாதானமானதாக தெரியவில்லை. எனவே எழுதத் தூண்டிய தோழர். ரகுவிற்கு இந்த பயணக் கட்டுரை சமர்ப்பணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து தேசங்களுக்கும் பயணித்திருந்த போதிலும் கினியா எனப்படும் தேசத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறை. அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் ஆப்பிரிக்காவின் மூக்கு என வர்ணிக்கப்படும் கினியாவின் தலை நகரமான கொனாக்ரிக்கு பயணம் மேற்கொள்வது என்று முடிவான சூழலில் இவ்வளவு தூரம் சென்ற பிறகு அருகே இருக்கும் செனிகலுக்கும் ஐவரி கோஸ்ட்டிற்கு போய்விட்டு வர வேண்டியது தானே என்று எங்கள் நிறுவன இயக்குனர் பணித்தார். அதுக்கென்ன போனா போச்சு என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு பயணத்திற்கு ஆயத்தமானேன்.
சென்னையிலிருந்து துபாய் நான்கு மணி நேரப் பயணம். துபாயிலிருந்து கொனாக்ரிக்கு பத்து மணி நேரப் பயணம்...இடைவிடா பயணம். தூரம் 7457 கி,மீ. மட்டுமே. பயணம் துவங்கியது ஆகஸ்ட் 15தேதி. சுதந்திரதினம் என்பதால் விமான நிலையத்தில் எட்டடுக்கு பாதுகாப்பு என்று புதிய தலைமுறை செய்தி கூறியது. எனவே இரவு 9.45 மணி விமானத்திற்கு 6.30மணிக்கே கிளம்பினேன். அது என்ன எட்டடுக்கு பாதுகாப்பு என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தது. விமான நிலையத்தின் நுழைவாயிலில் கார் நுழையும் போது ஓட்டுனரை வினவினேன் ''அது என்னது பாஸ்...எட்டடுக்கு பாதுகாப்பு...ஒண்ணையும் காணோம்...?'
''இதோ இருக்கே....இந்த பக்கம் நாலு...அந்த பக்கம் நாலு...அவ்வளவுதான்...'' என்றார். இரும்பு தடுப்புகள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கூட்டி பார்த்தால் ஏழு தடுப்புக்கள் தான் இருந்தன. அடப்பாவிகளா...இதுலயுமா மோசடி என்று வியந்தபடி விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் இறங்கினேன். வழக்கம் போல கூட்டம் களை கட்டியது. எமிரேட்ஸ் விமானத்தின் போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு குடியேறல் பிரிவில் கடவுசீட்டில் முத்திரை பெற்றுகொண்டு பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்ற போது பாஜக எம்.பி இல.கணேசனும் இருந்தார். அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அதற்கான 1992ஆம் ஆண்டு வரலாற்றை விவரிக்க இங்கே இடமில்லை என்பதால் கடந்து செல்கிறேன்.

விமானத்தில் எனக்கு வர்த்தக வகுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியான இருக்கை. சுவையான உணவு பரிமாறப்பட்டது. துபாய் வந்திறங்கிய போது 12.30 மணி. அடுத்த விமானம் 7.55 மணிக்கு. எமிரேட்ஸ் நிறுவனத்தின் விருந்தினர் கூடத்தில் இடம் பெற்று, வசதிகள் இருந்தும் தூங்க முயற்சித்து தோற்றுப்போனேன். கைவசம் இருந்த எம்.வி.வெங்கட் ராம் எழுதிய காதுகள் நாவலை வாசிக்க துவங்கினேன். 1993 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் விருது பெற்ற நாவல். ஆடிட்டரி ஹல்லூசினேசன் என்னும் வினோதமான மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் என்னும் கதாநாயகனின் கதை. சற்றே பிசகினாலும் ஆபாசமென வாசக சமூகம் முத்திரை குத்த சாத்தியமிக்க கதையை தனது அசாத்திய எழுத்து வன்மையினால் பேரிலக்கியமாக உருவாக்கியிருந்தார் எம்.வி.வி. 
சற்றேறக்குறைய 17 ஆண்டுகள் மூளை, நரம்பியல் மற்றும் மனோத்தத்துவத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாசிப்பனுவத்தை சுவாரசியமாக்கியிருந்தது. படிக்கும் போதே என் காதுகளுக்குள்ளும் குரல்கள் கேட்க துவங்கின. உற்று கவனித்த போது ''என்னோட ரெண்டு கோடி எங்கேடா?'' என்று ஒரு குரல் துள்ளியமாக கேட்டது. அது எங்கள் நிறுவன நிதித்துறை தலைவர் திரு.துர்கா பிரசாத்தினுடையது. நான் அந்த இரண்டு கோடி ரூபாயை எனக்காக வாங்கவில்லை. எனது ஏற்றுமதி துறைக்கான அடிப்படை கட்டுமான மற்றும் நிர்வாக செலவிற்காக வாங்கியது தான். இருந்த போதிலும் திருப்பி தந்து விடுகிறேன் என்று நான் சொன்ன காலஅளவிற்குள் திருப்பித்தர இயலாததால் நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி இது தான். எனவே, வெளி இடங்களில் அவரை காண நேர்ந்தால் எதிர் சந்துக்குள் சென்று மறைந்து கொள்வேன். அலுவலகம் என்றால் என் முதன்மை அதிகாரி திரு. பார்த்தசாரதி அவர்களின் முதுகின் பின்னால் ஒளிந்து கொள்வேன். 
பயணம் மிகச்சரியாக 7.55க்கு துவங்கியது. முதன்மை விமானி நபில் அலி அஹ்மெத் மற்றும் துணைவிமானி அல்.அலி கத்ரி இருவரும் விமானம் செல்லும் பாதையையும் பயணிக்கும் நேரத்தையும் அரபியிலும் பின்பு ஆங்கிலத்திலும் விளக்கினார்கள். 7457 கி,மீ தூரத்தை துபாய், ஜெட்டா, டெஹ்ரான், சூடான், எத்தியோப்பியா, சாட், நைஜீரியா, நீஜர், ஐவரி கோஸ்ட், சியாராலியோன் வழியாக பூமிக்கு மேலே 40000 அடி உயரத்தில் பறக்கும் என்றும் பயணிகள் தின்று விட்டு உறங்குமாறும் பணித்தார்கள். கடுமையான அலுப்பு தரும் பயணம் அது. தொலைக்காட்சியில் தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் அதே கண்கள் (புதியது), அச்சம் என்பது மடைமையடா, நானும் ரவுடி தான், துருவங்கள் பதினாறு போன்ற தீஞ்சுவை, மாஞ்சுவை காவியங்கள் ஓவியங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏற்கனவே துருவங்கள் பதினாறு பார்த்து விட்ட நிலையில் நம்பிக்கை தரும் இயக்குனரான கவுதம் மேனனின் ''அச்சம் என்பது மடைமையடா''வை தேர்ந்தெடுத்தேன். டைட்டிலில் இசை ஏ.ஆர்..ரகுமான் என்று பார்த்தவுடனேயே சுவாரசியம் பாதியாக குறைந்தது. படமும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. சிம்பு தனது புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் கன்யாகுமரி கிளம்பியதும் நானும் டி.வியை ஆஃப் செய்துவிட்டு காதுகள் நாவலுக்குள் நுழைந்தேன். (தொடரும்)