Monday, September 21, 2020

அடவி (சிறுகதை)

 

இருண்டு கிடந்தது காடு. காட்டை இரண்டாக பிளந்தது தார்ச்சாலை. வணிக போக்குவரத்து இல்லாவிடினும் வனத்துறையினரின் வாகனத்திற்காக அமைக்கப்பட்ட சாலை பாதகமின்றி இருந்தது. பருத்து உயர்ந்து செழித்து வளர்ந்த மரங்கள் சூரியக்கதிர்களை பகைகொண்டு அனுமதிக்க மறுத்தன. கோடைகாலம் என்ற போதிலும்  காடு குளிர்ந்த காற்றால் நிரம்பியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்பது போல் நீர் குடித்த மேகங்கள் மரங்களின் இலைகளை முத்தமிட்டபடியே சூழ்ந்திருந்தன. வனவிலங்குகள் சமூக விலங்குகளின் பாதிப்பின்றி நடமாடிக் கொண்டிருந்தன. பகல்பொழுதை இரவாக்கி வைத்திருந்த வனத்தின் இருளை கிழித்துக்கொண்டு விளக்கின் துணைகொண்டு சீரான வேகத்தில் முன்னேறியது காவல்துறையின் இரண்டு வாகனங்கள். முதலில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இரண்டு கைதிகள் மற்றும் உணவு மூட்டைகளுக்கு மத்தியில் கைகள் பின்புறமாக விலங்கு பூட்டப்பட்டு மயங்கிக்கிடந்தான் கதிர்.

அதைத்தொடர்ந்து சென்ற நவீன வாகனத்தில் ஒட்டுனர் இருக்கையில் ஏட்டு சுந்தரம் மற்றும் பின்னிருக்கையில் இரு இணை ஆணையர்கள். வாகனத்தின் கதவுகள் இருக பூட்டப்பட்டிருந்த போதிலும் சுந்தரம் மெதுவாகவே பேசினார்.

''ஐயா...இங்கிருந்து இன்னும் 20 கிலோமீட்டர் போனோம்னா ரோடு ரெண்டா பிரியும்ங்க...அங்கே இருந்து வலது பக்கம் ஒரு கி,மீ போய்ட்டோம்னா நம்ம இடம் வந்துடும்...ஒரே நாள்ல சோலிய முடிச்சிபுட்டு நாளைக்கு காலை கிளம்புனோம்னா  ராத்திரி கீழே கேம்ப் ஆபிசுக்கு வந்துடலாம்ங்க...''

இணை ஆணையர் ஆனந்த்குமார் சர்மா '' அது என்னவோ அவ்வளவு சீக்கிரம் முடியற வேலையில்லை சுந்தரம்...இவன்கிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல் வாங்க வேண்டியிருக்கு....நமக்கு தேவையான தகவல் அவ்வளவும் கிடைச்ச பிறகுதான் மற்றதை செய்ய செய்ய முடியும்''

''.கே....நீங்க சொல்றது சரிதான்...இந்த மாதிரி ஆளுக கடுமையான பயிற்சி எடுத்துருப்பாங்க...சித்ரவதையை எப்படி தாங்கிக்கிறதுங்கற ப்ராக்டிஸ் அவர்களுக்கு இயக்கத்துல சேர்ந்த நாள்ல இருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கு...மத்திய பிரதேசத்தில நான் வேலை பாத்தப்ப நேரடியாகவே பாத்திருக்கேன்...'' என்றார் இணை ஆணையர் கோவிந்தராஜன்.

 

''என்னங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க...இன்னைக்கு நம்ம பண்ணப்போற விசயம் இருக்கே அதுக்கு இவன் தாங்க மாட்டான்...மற்றவர்கள் மாதிரி இவனுக்கு உடல் வலு இல்லைங்கய்யா...வெறும் சித்தாந்த வலு தான்....நானும் கேள்விப்பட்டேன்...தோழர் நல்லா பேசுவாராம்...ஆளைப்பாத்தீங்கள்ல எப்படி இருக்கான்னு....நீங்க நெனெக்கிற மாதிரி ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்காதுன்னுதான் நான் நெனெக்கிறேன்...''

 

''சுந்தரம்...பேசிக்கிட்டே நாம ஸ்பாட்டை மிஸ் பண்ண போறோம்...கரெக்ட்டா பாய்ண்ட பாருங்க...முன்னாடி போற வேனை ஒவர்டேக் பண்ணி நம்ம வண்டியை ஃபாலோ பண்ணச் சொல்லுங்க'' என்றார் .கே.

 

''அதுதானுங்கய்யா...நானும் யோசிச்சிக்கிட்டே வர்றேன்...இருபது கிலோ மீட்டர்னு சொன்னானுக...நாம ரொம்ப தூரம் வந்துட்டோம் போலருக்கே...ரோடு எங்கேயும் பிரியலையே''

''மைலா...கிலோமீட்டரா?'' என்றார் .கே.

''அப்படி ஒன்னு இருக்கோ....அது தெரியாம போச்சே...ஃபாரஸ்ட்டு காரனுக நேத்தே வந்து அங்கே டெண்ட் போட்டு வச்சிருப்பாங்க...நாம ஈசியா கண்டுபிடிச்சிடலாம்ங்கய்யா...''

''சீக்கிரம் போய்ச்சேர வழிய பாருங்க சுந்தரம்....இந்த காட்டுல பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் இருட்டிடும்'' என்றார் .கே.

''ஐயா இதோ வந்துடுச்சிங்கய்யா...இது தான் பள்ளத்தூர் விலக்கு...ரைட்ல கட் பண்ணணும்''

வண்டி வலதுபக்கம் திரும்பி ஒரு மைல் தூரம் கடந்ததும் மீண்டும் திரும்பி ஒரு சிறிய குன்றின் பின்புறம் வனத்துறை அமைத்திருந்த கூடாரத்தை வந்தடைந்தது.

சுந்தரம் அத்தியாவசிய பொருட்களை இறக்கி வைக்க கைதிகளை பணித்தார்.

''இதோ பாருங்கப்பா...இங்க நடக்குறது எதுவும் வெளியே தெரியக்கூடாது...ஒங்கள நான் எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கேன்னு கூட வந்திருக்குற அதிகாரிகளுக்கு இனிமே தான் சொல்லப் போறேன்...புரிஞ்சதா...அவங்க மனசு கோணாதபடிக்கு நடந்தா...நீங்க திரும்பி ஜெயிலுக்கு போனதுக்கப்பறம் ராஜா மாதிரி இருக்கலாம்...புரிஞ்சதா? அவனை கீழே இறக்கி சுத்தம் பன்ணி நாற்காலி ஒக்கார வைங்க...காரியத்தை சீக்கிரம் ஆரம்பிக்கணும்...''

''நீங்க சொன்னபடியே நடந்துக்குறோமுங்க....'' இருவரும் ஒருமித்த குரலில் ஒலித்தனர்.

சரி...சரி...நேரத்தை கடத்த வேணாம்...ஒருத்தரு அவனை சுத்தமாக்கி ஒக்கார வைங்க... ஒருத்தரு குழி வெட்ட ஆரம்பிங்க...இன்னும் ஒரு மணி நேரத்தில இருட்ட ஆரம்பிச்சுடும்..பெட்ரோமாக்ஸ் வச்சிக்கிட்டு வேலையை முடிங்க...சரியா...ம்ம்ம்..சீக்கிரம்'

சற்று ஈரம் கலந்த நிலத்தை கைதிகளில் ஒருவன் தோண்ட ஆரம்பித்தான். மற்றொருவன் தனக்கு பணிக்கப்பட்ட பணியை செவ்வனே செய்யத்துவங்கினான். மயங்கிய கதிரின் கைகால் விலங்குகள் அகற்றப்பட்டன. அரசு மருத்துவர் செலுத்திய மருந்தின் தாக்கம் இன்னமும் இருந்தது. ஆடைகள் அகற்றப்பட்டு நாற்காலில் அமரவைக்கப்பட்டான். கைகால்களில் மீண்டும் விலங்குகள் நாற்காலியோடு இணைத்து பூட்டப்பட்டன.

சுந்தரம் மீண்டும் வந்தார்.

''தம்பி...இதோ அங்கே கீழே பாரு...அங்கே ஒரு ஊற்று இருக்கு...அங்கே இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து இந்த கேன்ல நிரப்பு...அப்புறம் சமைக்க ஆரம்பிச்சிடு...ஐயாமாரு இப்போ வந்துடுவாங்க...வேலைய ஆரம்பிக்கணும்...அப்டியே இவன் மேலேயும் ரெண்டு குடம் தண்ணி ஊத்து...''

நிலம் தோண்டிக்கொண்டிருந்தவனை நோக்கி ''டேய்...நீ ஒரு நாலடி தோண்டிட்டு நிறுத்திடு....சரியா? என்றார்.

''ஐயா...இந்தாளு அஞ்சரை அடிக்கு மேலே இருப்பார் போலருக்கே...பத்தாதுங்கய்யா...''

''அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுவோம்...நான் சொன்னதை மட்டும் செஞ்சா போதும்...புரிஞ்சதா?''

''சரிங்க ஐயா....எனெக்கெதுக்கு வம்பு...நீங்க சொல்றபடியே செஞ்சுறேனுங்க...'

சுந்தரம் உயரதிகாரிகளின் கூடாரத்துக்கு வந்தார்.

''ஐயா...ஒரு முக்கியமான விசயம்....சொல்லலாமுங்களா?''

மதுக்குப்பியை திறந்து இரு கண்ணாடி மதுக்கிண்ணங்களில் ஊற்றியபடியே பார்வையாலேயே சொல் என்றார் கோவிந்த ராஜன். ,கே சிப்ஸ் பாக்கெட்டை திறப்பதில் கவனமாக இருந்தார்.

''ஐயா...இந்த மாசம் முப்பதாம் தேதி எனக்கு ரிடையர்மென்டுங்க...''

''அதுதான் உனக்கு இப்போ பிரச்சினையா?''

''இல்லைங்க...நான் இப்போ கந்தசஷ்டி விரதத்தில இருக்கேனுங்க...''

''யோவ்..என்னய்யா வேணும் ஒனக்கு..ரிடையர்மெண்ட்ங்கற விரதம்ங்கற...வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்?''

''ப்ராப்ளம்லாம் ஒன்னும் கிடையாதுங்க....இவனை பேசாம சுட்டு கொன்னுட்டு புதைச்சிட்டு போய்டலாம்ங்க...எதுக்குங்க வீணா அதை இதைப் பண்ணிக்கிட்டு...''

''என்ன சுந்தரம் திடீர்னு ரூட்டு மாறுது....நீ பாட்டுக்கு ப்ளானை மாத்துங்கற...பண்றது எவ்ளோ பெரிய மேட்டரு...மனித உரிமை கமிசன், கோர்ட் ஆர்.டி. விசாரணைன்னு எவ்வளவு சங்கடம் இருக்கு தெரியுமா? அதுலயும் எங்க சம்மதம் இல்லாம பள்ளத்தூர் சப்ஜெயில்ல இருந்து ரெண்டு பேரைக் கூட்டிட்டு வேற வர்ற... என்ன நெனெச்சிட்டுருக்க மனசில...ம்ம்''

ஐயா., அது வேற ஒண்ணுமில்லங்க...சுட்டு கொல்றதுல எனக்கு ஒரு சங்கடமுமில்லங்க...ஆனா மலத்தை ஒடம்புல பூசுறது, மிளகாய் தூளை ஆசனவாயில திணிக்கிறது இதுமாதிரி வேலையை செய்றதுக்கு தான் அவனுகள கூட்டிட்டு வந்தேன்...நீங்க ஒண்ணும் வித்தியாசமா நினைக்கக்கூடாது...''

அதுவரை பேசாம இருந்த .கே ''ஏய்...சுந்தரம் ப்ளான்ல எந்த சேஞ்சும் இல்லை...போய் ஆகவேண்டியதை பாரு'' என்றார் கடுமையான குரலில்.

''உத்தரவுங்கய்யா'' என்றவாரு சுந்தரம் பின்னோக்கி நடந்து நகன்றார்.

முழுபோதை கண்களில் தெரிந்தாலும் மிக நுட்பமாக பயிற்றுவிக்கப்பட்ட மூளை கேள்விகளை வரிசைப்படுத்திக் கொண்டே இருந்தது.

''கதிருக்கு எதிரே இருந்த இரு நாற்காலிகளில் அமர்ந்த இருவரும் ஒரே குரலில் ''எழுப்புய்யா அவனை'' என்றனர்.

ஒரு குவளை நீரை வேகமாக முகத்தில் வீசியடித்து கதிரை எழுப்பினர்.

''அப்புறம் தோழர்...உடம்பு எப்படி இருக்கு...?'' என்றார் ,கே

முதல்நாள் செலுத்தப்பட்ட மருந்தின் தாக்கம் சற்றுதான் குறைந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. கருவிழிகள் மேல் நோக்கி இமைகளுக்குள் சுழன்றபடி இருந்த போதிலும் சில நொடிகளில் தலையை உலுப்பி நிதானத்திற்கு வந்த கதிர் சூழ்நிலை உணர வெகுநேரம் பிடிக்கவில்லை. தனக்கு முன்னே அமர்ந்திருந்த இரு அதிகாரிகளையும் சினேகமாக புன்னகை செய்தான். அது கேலியாக புரிந்துக்கொள்ளப்படும் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும் அவன் துணிந்தே அதைச் செய்தான்.

''என்ன தோழர்., பார்வையில கேலியும் கிண்டலும் தெரியுதே...?''

''உங்களை கேலி செய்து என்ன பலன்....நான் அதிகாரத்தை நோக்கி மட்டுமே எனது விமர்சனங்களை வைக்கிறேன்...அமைப்பு மாற்றத்தை விரும்பும் ஒருவன் அதைத்தான் எதிர்க்க வேண்டும். அதிகார அமைப்பு நிலையானது...அதை இயக்குபவர்கள் வந்து போவார்கள்...எனவே...

''உஷ்...கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க சார்...என்ன கேட்டோம்னு இப்படி லெக்சர் விட்ராரு தோழரு...''

இடைமறித்த சுந்தரம் ''இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்...பேசாம் சுட்டு பொதைச்சிட்டு போய்டலாம்னு...''

''அடச்சீ வாயை மூடு...என்ன செய்யணும்னு நீ எங்களுக்கு சொல்லித்தர வேண்டியது இல்ல'' எகிறினார் கோவிந்த ராஜன்.

''கதிர்...எனக்கு நேரத்தை வேஸ்ட் பண்றது பிடிக்காது....எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரியணும்...அதுக்கு பதில் சொல்லிட்டா...பதில்னா உண்மையான பதில்....புரிஞ்சதா....உயிர் கொஞ்சம் கஷ்டம் இல்லாம போகும்...இல்லைனா...ஏண்டா பொறந்தோம்னு நினைக்க வேண்டி வரும்''

''சாகபோறப்ப எதுக்கு சார் ஏன் பிறந்தோம்னு நினைக்கப்போறேன்?''

''இனி பேசி பிரயோஜனமில்லை....ஏட்டு...கம்பி காயப்போட்டியா...''

''ஆச்சுங்கய்யா....ஆரம்பிச்சிடலாம்ங்கலா?''

''இரு...இரு...தோழர்கிட்ட கேள்வியே இன்னும் கேட்க ஆரம்பிக்கலையே...'' என்றவர் முதல் கேள்வியை தொடுத்தார்.

''கதிர்...கமிசனர் வினாயக் சர்மா ஒப்பணக்கார வீதி கணபதி சில்க்ஸுக்கு வர்ற விசயம் உங்க குரூப்புக்கு எப்படித் தெரியும்''

''அதைக் கண்டுபிடிக்கிறது தானே உங்க வேலை''

''நாயே...அதைத்தாண்டா செஞ்சிக்கிட்டு இருக்கோம்'' என்றபடியே கோவிந்தராஜன் கன்னத்தில் மூர்க்கமாக குத்தினார்.

''நீங்கல்லாம் கமிசனரையே தூக்குற அளவுக்கு பெரிய ஆளாடா...ம்!

கதிருக்கு பொறிகலங்கியது. ஆனால் மீண்டும் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

''மரியாதையா உண்மையை சொன்னா உங்க உடம்புக்கு நல்லது தோழர்...எப்படி வசதி?'' ன்றார் ஏ.கே.

''அவர் செஞ்ச வேலை என்னென்னு உங்க ஏட்டையாவை கேட்டா சொல்வாரு...அப்புறமா எங்க குரூப் ஏன் அவரை போட்டதுங்கற விசயத்துக்கு வரலாம்...''

''அட நாயே...நாங்க உன்னை விசாரணை பண்றோமா இல்லை நீ எங்களை விசாரணை பண்றியா...கேட்ட கேள்விக்கு பதிலை சொல்றா...பரதேசி நாயே''

''பாத்தீங்கலா  ஐயா...  நைசா என்னை கோர்த்துவிடுறான்......அவர் கூட பள்ளிக்கூடத்துக்கு போனது என்னவோ உண்மைதான்...ஆனால் காரியத்தை பண்ணினது...நான் இல்லைங்கய்யா....சத்தியமா நான் இல்லை...'' என்றார் சுந்தரம் நடுக்கத்துடன்.

''அடச்சீ...! நீயெல்லாம் ஒரு போலிஸ்காரனா...வெட்கமாயில்லை ஒனக்கு...ஒரு அக்யூஸ்ட் முன்னாடி நடுங்குற...'' என்றார் .கே.

இது தெரியாத கோவிந்தராஜன் சுந்தரத்தை நோக்கி ''என்ன இது புதுசா கதை சொல்றான்...என்ன அது பள்ளிக்கூடம் மேட்டரு?'' என்றார் .

''சார்... இது ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்த மேட்டரு சார்...கர்னாடகா பார்டருல இவங்க ஏரியாவுல ஒரு பள்ளிக்கூடம் இருந்துச்சு சார்...அங்கே போஸ்டிங்க்ல வர்ற வாத்தியார் யாருமே ஒழுங்கா வேலைக்கு வர்றது கிடையாது சார்....அதுனால இவனுக குரூப்பை சேர்ந்த ஆளுகளே பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டானுக சார்...நமக்கு இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் வந்தது சார்....அதுதான் அப்படி ஒரு காரியம் பண்ண வேண்டியதா போச்சு...''

''என்னையா பைத்தியக்காரத்தனமா இருக்கு....பாடம் தானய்யா நடத்துனானுக...அதுல என்ன ப்ராப்ளம்? அது என்ன மயிரு இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்?..''

''ஐயா...ஒங்களுக்கு இவனுக என்ன பாடம் நடத்துனானுகன்னு தெரியலைங்க...பள்ளிக்கூடத்துல படிக்கிற புள்ளைகளுக்கு என்னங்க பாடம் நடத்துறது? அணில் ஆடு அப்படி நடத்தலாம் இல்லை வாய்பாடு நடத்தலாம்...இவனுக அதை விட்டுட்டு உற்பத்தி, மூலப்பொருள், உழைப்பு, ஊதியம் உபரி மதிப்புன்னு சின்னப்புள்ளைக மனசுல நஞ்சை விதைக்கிறானுக ஐயா...இதை பாத்துக்கிட்டு டிபார்ட்மெண்ட் சும்மா இருக்க முடியுமா?

''அதுக்கு என்ன பண்ணுனீங்க...?''

''விசயம் கேள்விப்பட்டவுடனேயே  சர்மா சார் கொதிச்சு போய்ட்டாரு...நாங்க ஒரு டீமா வந்து அந்த புள்ளைகளோட கைவிரல்களை வெட்டிட்டோம். அதாவது கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் விட்டு மத்த மூனு விரல்களையும் இரண்டு கைகள்ல இருந்து வெட்டி விட்டுட்டு மருந்து போட்டு கட்டிவிட்டு வந்தோம்...அடுத்து கட்டை பிரிச்சு மருந்து போட இவங்க ஆளுக அனுமதிக்கலைங்கய்யா..பாவிக...இவனுகளுக்கு ஈவு இரக்கமே கிடையாது...அரக்கனுக....'' என்றார் சுந்தரம்.

''அப்போ குழந்தைகள் கைவிரலை வெட்டுன உங்களுக்கு பேரு என்ன?'' என்றான் கதிர்.

''எதுக்குயா வெட்டுனீங்க?'' - கோவிந்தராஜன்.

''ஐயா...சர்மா சாரை பத்தி உங்களுக்கு நல்லாத்தெரியும்..அவர் எப்போதுமே தொலைநோக்கு பார்வையோடு தாங்க ஆக்சன் எடுப்பாரு...இவனுகளால அந்த குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் தாங்கி தீவிரவாதி ஆகிடக்கூடாதே அப்படிங்கற நல்லெண்ணெத்தில தான் அப்படி பண்ணினாரு...நம்ம கண்ணு முன்னாடி தீவிரவாதிகள் உருவாகிறத எந்த போலிஸ்காரன் பாத்திட்டு சும்மா இருப்பான் சொல்லுங்க...'' பதட்டமே இல்லாமல் விவரித்தார் சுந்தரம்.

''என்னய்யா மடத்தனமா இருக்கு....எவன்யா இந்த ஐடியாவை கொடுத்தது....என்னமோ பாடம் நடத்துனாங்களாம் இவங்க போய் கையை வெட்டுனாங்கலாம்....அறிவுகெட்டத்தனமா இருக்கே...'' - கோவிந்தராஜன் இந்த செயலுக்கு பின் உள்ள தர்க்கத்தை புரிந்து கொள்ள இயலாமல் விழித்தார்.

''ஐயா...இது மேலிடத்து உத்தரவுங்க....எல்லார்கிட்டயும் சொல்லிட்டுதான் செஞ்சோம்...தேசத்துக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது நாம சும்மா இருக்க முடியுமா?''

''கோவிந்தராஜன்...இப்போ இதை பேச வேண்டாம்...நமக்கு இப்போ தெரியவேண்டியது என்னன்னா இவனோட ஆளுக நம்ம டிபார்ட்மெண்டுக்குள்ள இன்ஃபில்ட்ரேட் ஆயிருக்காங்க...அதை முளையிலே கிள்ளி எறியணும்...இல்லைனா பெரிய ஆபத்தா போய்டும்...சர்மா துணி எடுக்க வர்றது எப்படி இவனோட ஆளுகளுக்கு தெரிஞ்சது...அந்த டீடெயில்ஸ் வேணும்'' என்றார் .கே.

''கதிர்...எங்களுக்கு நேரமுமில்ல...பொறுமையுமில்ல....உங்களுக்காக வேலை பார்க்குற எங்காளுக யாருன்னு இப்போ தெரிஞ்சாகனும்...கமான் க்விக்''

கதிர் திடமாக ''அதிகாரத்தின் சகலமட்டத்திலும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய சிலர் இருக்கிறார்கள்...என்னால் எந்த தகவலையும் உங்களுக்கு தர முடியாது....நீங்கள் என்ன செய்யணுமோ அதை செய்யலாம்'' என்றான் .

கோவிந்தராஜன் எழுந்து விட்டார். .கே அதிர்ந்து போய் '' என்ன எந்திருச்சிட்டீங்க...இவனை அப்படியே விட்ரலாம்னு சொல்றீங்களா?'' என்றார்.

பதில் எதுவும் சொல்லாமல் கோவிந்தராஜன் டெண்ட்டை நோக்கி நடந்தார். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் கைதிகள் இருவரும் விழித்தனர். கதிர் தலையை தொங்கவிட்டவாறு அமர்ந்திருந்தான்.

சுந்தரம் இருவரின் பின்னாடி நடந்தபடியே ''ஐயா, நான் தான் அப்பவே சொன்னேனுங்களே...இவன்கிட்ட இருந்து எந்த தகவலும் கிடைக்காது...அவனுக கட்சி ட்ரெயினிங் அப்படி...!

.கே சற்று யோசித்தபடி ''கோவிந்தராஜன், நாம இவனை ரெக்கார்ட் எதுவும் இல்லாமத்தான் எடுத்துட்டு வந்துருக்கோம்...பேசாம இங்கேயே போட்டுத்தள்ளிட்டு ஆளு அப்ஸ்காண்ட்னு ரிப்போர்ட் எழுதிட்டு போய்ட்டே இருக்கலாம்..அதுதானே நம்ம ஐதீகம்...என்ன சொல்றீங்க? என்று நக்கல் தொனியில் கூறினார்.

கோவிந்தராஜனின் முகத்தில் எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லை. சேரில் அமர்ந்து வானத்தை சில விநாடி பார்த்து விட்டு மது நிரம்பிய கிளாசை ஒரே மூச்சில் குடித்து விட்டு சுந்தரத்தை உற்று பார்த்தார்.

சுந்தரம் குவளையை மதுவால் மீண்டும் நிரப்பினர். .கே ஒன்றும் தெரியாமல் விழித்தார். ஆனால் சுந்தரத்திற்கு தெரியும் மதுவின் அளவு கூடக்கூட அவருக்குள்ளே இருக்கும் மிருகம் வெளியே வரும்.

மதுவை நிரப்பி விட்டு மெதுவாக கேட்டார். ''ஐயா, அப்போ கம்பியை காயப்போட்டுறேன்., மலத்தை பூசி ஒக்காரவைக்க சொல்றேன்..நீங்க வந்ததும் ஆரம்பிச்சிடுங்க...'

கோவிந்தராஜன் பொதுவாக தலையாட்டினார்.

.கே ''சுந்தரம் ஒரு நிமிசம் பொறு..." என்றார்.

கோவிந்தராஜன் .கேவை நிமிர்ந்து பார்த்தார்.

.கே. ''சார், நாம இப்படி செய்யலாமா...அவனை ஒண்ணுமே செய்யாம உயிரோட புதைச்சிட்டு போயிடலாம்...அவனோட இயக்கத்து ஆளுகள்ல வீக்கான ஆளு யாருன்னு பார்த்து தூக்கலாம்...அவனிடமிருந்து விசயத்தை கறக்கலாம்...என்ன சொல்றீங்க?

கோவிந்தராஜனிடம் வெறி ஏறி இருந்தது ''.கே...இதை இப்படியே விட்டுற கூடாது....''

''சார், நாம தான் அவனை உயிரோட புதைக்க போறோமே?''

சுந்தரம் இடைமறித்தார்..''ஐயா இன்னொன்னு செய்யலாம்ங்க...பக்கத்துல ஆசிரமத்துக்கு யோகாவும் தியானமும் கத்துக்க .டி.சர்மா வந்துருக்காருங்க...அவரை வரச்சொல்லுவோம்...

.கே கத்தினார் ''யோவ் வாயை மூடிக்கிட்டு சும்மா இருய்யா...அவர் ஏற்கனவே வெறில இருக்காரு....நீ வேற...ஏத்திவிட்டுக்கிட்டு''

கோவிந்தராஜன் ''யாருய்யா...இங்கே இருந்து காஷ்மீருக்கு டெபுடேசன்ல போனானே அவனா?''

சுந்தரம் மகிழ்ச்சியாக ''ஆமாங்க...அவரை பற்றி உங்களுக்கு தெரியும்ல....

.கே...சுந்தரத்தை நிறுத்த முயற்சி செய்தார்.

கோவிந்தராஜனின் போதை நிறைந்த கண்கள் அது எவ்வாறு என்று வினவின.

சுந்தரம் ''ஐயா, அவர் ஒரு பீடோஃபைல்ங்க...குடும்பத்தினர் முன்னாடி அவங்க குழந்தையை பயங்கரமா டார்ச்சர் பண்ணுவாரு...அது மயங்கின பிறகு அவருக்கு பயங்கரமான வேகம் வரும்...குழந்தை செத்த பிறகு மிருகமாகவே மாறிடுவாரு...அவரை வரவழைப்போம். தோழரோட ஏரியாவுல இருந்து ஒரு குழந்தையை தூக்குவோம்...உண்மை தானா வெளியே வரும் பாருங்க...!''

.கே.பதட்டத்துடன் ''சார், வேணாம் சார், எனக்கென்னவோ இது மறுபடியும் சதாசிவம் கமிசன் லெவலுக்கு போகும் போல தெரியுது...வேணாம் சார், மிளகாய் பொடி கொண்டுவந்துருக்கோம், மலம் இருக்கு...ரெண்டையும் கீழே கொட்டி தலைகீழா புதைச்சிட்டு போய்டலாம்...''

சுந்தரம் ''ஐயா, நீங்க ஏன் பயப்புடுறீங்க...இந்த வழிமுறை மூலமா பல தீவிரவாதிகள் காஷ்மீர்ல திருந்தியிருக்காங்க....நீங்க ஏன் இதை டார்ச்சர்னு நினைக்கிறீங்க., இந்த தேசத்தை துண்டாட நினைக்கிற சக்திகளுக்கு நாம கொடுக்கற தண்டனைனு நினைச்சுக்கோங்க...அதுவும் போக இவரால பல பேர் ஆயுதத்தை கீழே போட்டுட்டு தேசிய நீரோட்டத்துல கலந்துருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்.. அதையும் நீங்க கன்சிடர் பண்ணணும் சார்''

கோவிந்தராஜன் ''போய் அவனை ரெடி பண்ணுயா...வர்றேன்..."

.கே...சற்று பதட்டத்துடன் அவர் பின்னே நடந்தார்.

தூரத்திலேயே நாற்றம் குடலை புரட்டியது. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதின் காரணத்தை .கே புரிந்து கொண்டார்.

பழுக்க காய்ச்சிய கம்பியை அவன் முதுகில் வைத்து இழுத்தார். மயக்கத்திலிருந்து அலறி எழுந்தான். அலறலில் மரத்தில் இருந்த பறவைகள் மிரண்டு கூட்டை விட்டு பறந்தன. பறவைகளின் சிறகடிப்பு பேரோசை கதிரின் அலறலை குறைத்தது.

.கே. கர்சீப்பால் தனது பாதிமுகத்தை மூடிக்கொண்டார்.

''சொல்லுடா...எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்குற உங்களோட ஆளுக பேரை சொல்லு...''

உடலில் நான்கு இடங்களில் பழுக்க காய்ச்சிய கம்பியின் தடம் பதிந்தது. மலத்துடன் சருமம் கருகும் வாடையும் சேர்ந்துகொள்ள .கே வாந்தி எடுப்பது போல குரல் எழுப்பி உமட்டலை தவிர்க்க அந்த இடத்தை விட்டு விலகினார்.

''இவன் மேலே தண்ணி ஊத்துயா...அப்புறமா ஈரம் காயிறதுகுள்ள மிளகாய் பொடியை காயத்துல தூவு...முடிச்சிட்டு சொல்லி அனுப்பு...நான் போய் இன்னொரு ஆஃப் ஏத்திட்டு வர்றேன்''

அனைத்தையும் செவ்வனே செய்தனர் பள்ளத்தூர் கைதிகள்.

கோவிந்தராஜனும் ஏகேவும் மது அருந்திய படியே பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை கதிரின் கதறல் அழைத்தது.

.கே கோவிந்தராஜனிடம் '' சார், எனக்கென்னவோ இவனிடமிருந்து எந்த தகவலையும் வாங்க முடியாதுனு தோணுது...பேசாம துப்பாக்கியால சுட்டு பொதைச்சிட்டு போய்டலாம்...அதுக்கு முன்னாடி இந்த பள்ளத்தூர் கைதிகளை கீழே அனுப்பிடலாம்...வீணா எதுக்கு சாட்சிகளை வச்சிட்டு இதைப் பண்ணனும்...ஒங்களுக்கு தெரியாதது இல்ல..கேரளாவுல இப்படித்தான் அந்த ராஜன் கேசுல...பின்னாடி அது சினிமா நாவல்னு பெரிய லெவல்ல அசிங்கமாய்டுச்சு'' என்றார்.

கோவிந்தராஜன் போதையில் தலையைக் கவிழ்ந்தவாறே '' சரி, வேணும்னா கடைசியா நகங்களை மட்டும் புடுங்கிப் பார்ப்போம்..அப்போவாவது உண்மையை சொல்றானானு...இல்லைனா துப்பாக்கி தான் ஒரே வழி...நாம சுட வேணாம்...சுந்தரத்தை சுடச்சொல்லலாம்...அவனுக்கும் கடைசியா ஒரு கம்யூனிஸ்ட்டை சுட்டு கொன்றோம்னு ஒரு திருப்தி கிடைக்கும்...நாம சுடுறதுக்குத்தான் இன்னும் நிறைய பேரு இருக்கானுகளே.'' என்றார் க்கலாக.

.கேவுக்கும் போதை தலைக்கேறி விட்டது. ''நீங்க சொல்றதும் சரி தான் சார், தருமபுரில நக்சலைட்டை ஒழிச்சப்பவும் இதே மாதிரி தான்...மற்றவரு எல்லோருக்கும் சமமா சான்ஸ் கொடுப்பாரு...!

சுந்தரம் கைதிகள் இருவரையும் மலைமுகட்டிலிருந்து கீழே இரண்டு கி.மீ நடந்து சென்று அனைவரும் சந்திக்கும் ஒரு இடத்தை விவரித்து அனுப்பி வைத்தார். ''போறதுக்கு முன்னாடி சாமானை எல்லாம் வண்டில ஏத்தி வச்சிட்டு போய்டுங்க...நாங்க பின்னாடியே வந்து பள்ளத்தூர் விலக்குக்கிட்ட உங்களை பிக்கப் பண்ணிக்கிடுவோம்..சரியா...!''

கைதிகள் இருவரும் சாமான்கள் அனைத்தையும் வண்டியில் ஏற்றி விட்டனர். மர நாற்காலியில் இருந்த கதிரை இறக்கி தோண்டிய பள்ளத்திற்கு அருகே கிடத்தி விட்டு நாற்காலி தண்ணீர் விட்டு அலம்பினர்.

கைதிகள் கீழே இறங்கத்துவங்கி ஒரு மணி நேரம் ஆனதும் ஏகேவும் கோவிந்தராஜனும் கதிரிடம் வந்து சேர்ந்தனர்.

ஏகே துப்பாக்கியை சுந்தரத்திடம் நீட்டி ''யோவ் நீயே போட்டுத்தள்ளிட்டு அவனை புதைச்சிடு'' என்றார்.

சுந்தரம் புரியாமல் விழித்தார்.

கோவிந்தராஜனின் போதை நிரம்பிய கண்கள் செய் என்று உத்தரவிட்டது.

புதைக்குழிக்குள் உப்பும் மிளகாய் தூளும் சீராக தூவப்பட்டிருந்தன.

தண்ணீரில் நனைந்த கதிரின் உடல் குளிரில் நடுங்க பார்வை மட்டும் தீர்க்கமாக சுந்தரத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியை பார்த்துக்கொண்டிருந்தது.

.கே கதிரை நோக்கி ''என்ன தோழர்! பயமா இருக்கா?'' என்றார்.

கதிர் ஆர்ப்பரித்து சிரித்தான். அடக்க இயலாத சிரிப்பு....அவன் சிரிப்பு கானகமெங்கும் எதிரொலித்தது.

கோவிந்தராஜன் கொந்தளித்தார். திரின் சிரிப்பு அதிகாரத்திற்கு எதிரானது என்று அவர் உணர்ந்திருந்த போதிலும் அந்த சிரிப்பில் இருந்த நக்கலும் எகத்தாளமும் அவருடைய பதவிக்கான தன்முனைப்பை பதம் பார்த்தது. ன்னிடமிருந்து எந்தவொரு தகவலையும் பெற இயலவில்லை என்ற வெற்றியை கொண்டாடும் விதமாக அந்த சிரிப்பு இருந்ததை அவர் உணர்ந்தார். கூடவே, தமது கையாலாகத்தனத்தை கதிர் எள்ளி நகையாடுவதாகக் கருதினார்.

கோவிந்தராஜன் தனது கையை சுந்தரத்திடம் நீட்டி சைகையாலேயே துப்பாக்கியை  கேட்டார்.

அடுத்த நொடி துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு தோட்டாக்கள் கோவிந்தராஜனின் மார்பையும் ஏகேவின் மார்பையும் துளைத்தன. என்ன நிகழ்கிறது என்று அவர்களுடைய பயிற்றுவிக்கப்பட்ட மூளை சிந்திக்கக்கூட நேரமில்லை.

''தோழர், இப்படியே கீழே இறங்கி ஓடுங்க...அங்கே கிணத்தூர் ஜங்க்சன்ல பாலனும் சதீஷும் காத்திட்டிருப்பாங்க...ஓடுங்க...சீக்கிரம்'' என்று கைகால் கட்டுக்களை அவிழ்க்கத் துவங்கினார் சுந்தரம்.

(முற்றும்)