Saturday, October 28, 2017

கையில் மறையும் நாணயம் (28-10-2017)

கையில் மறையும் நாணயம்
அதிகாலை வந்த அலைபேசி அழைப்பை என் மனைவி ஏற்கவில்லை. காரணம், அது பெயர் தெரியாத ஒரு அழைப்பு என்பதனால். ஆனால் மீண்டும் அதே எண்ணிலிருந்து ரெஹனா அழைத்த போது தவிர்க்க இயலவில்லை.
''என்ன அண்ணி காலையில நீங்க தான் கூப்பிட்டீங்களா...போன் தலையணைக்கு கீழே இருந்ததுனால எனக்கு சத்தம் கேட்கலை'' என்றாள்.
''மாமா தவறிட்டாரு'' அவ்வளவு தான் ரெஹனாவால் பேச முடிந்தது.
உடனடியாக கிளம்பியாக வேண்டும். இது தவிர்க்க இயலாத / கூடாத காரியம். இயற்கை எய்திய எனது தாய்மாமா ஷேக்ராஜா எனப்படும் ராஜா மாமா என் பெற்றோரைக் காட்டிலும் சிறுவயதில் அதிக முறை குளிப்பாட்டியவர். வளர்ந்த பிறகு பொருளாதார ஆபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அத்தையுடன் சேர்ந்து அபயக்கரம் நீட்டியவர்.  சென்னையிலிருந்து காரில் மதுரை 6மணி நேரப்பயணம். பயணம் முழுக்க என் ஞாபகங்களை மாமாவே ஆக்கிரமித்திருந்தார்.

கட்றாபாளையத்தெருவை ஐப்பசி மாத மழை நன்கு நனைத்திருந்தது. பகல் வெயில் இறங்கி மாலை எழக் காத்திருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தைகள் சுற்றி நிற்க ராஜா மாமா நடுநாயகமாக மத்தியில் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் முக்கியமான நபர் நான், எனது தம்பி, தமிழ் அத்தையின் மகள்களான வனிதாவும் மீனாவும் அடுத்து ராஜி அத்தையின் குட்டிப்பாப்பாக்கள் ஹேமாவும் ரதியும். வெள்ளை நிறத்தில் கை வைத்த பனியன் சாம்பல் நிறத்தில் கட்டம் போட்ட கைலி, தங்க பிரேம் போட்ட கண்ணாடி முகத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் புன்னகை இதுதான் மாமா. கையில் அலுமினியத்தாலான இருபது பைசா நாணயம். அந்த எண்கோண வடிவ அலுமினிய காசை மாமா இப்போது தனது கை வழியே உடலுக்குள் செலுத்தி மேஜிக் செய்ய போகிறார். அதற்குத்தான் குழந்தைகள் கூடியுள்ளனர். குழந்தைகள் அனைவருடைய பார்வையும் மாமாவின் கையிலிருந்த இருபது பைசா நாணயத்தின் மீது குவிந்திருந்தது. வலது கையின் மணிக்கட்டிலிருந்து மெதுவாக கையின் மையம் நோக்கி மாமா நாணயத்தை அழுத்தத் துவங்கினார். குழந்தைகளிடையே பேச்சு குறைந்து முணுமுணுப்பாகி பின்பு அது மௌனத்தை நோக்கி அந்த இருபது பைசா நாணயத்தோடே நகர்ந்தது. இடது கை கட்டைவிரலால் அழுத்தப்பட்டிருந்த அந்த நாணயம் வலது கையின் மையப்பகுதிக்கு வந்த போது மறைந்திருந்தது. நாணயத்தை காணவில்லை. எங்கே போனது என்றும் தெரியவில்லை. ஒரே ஆரவாரம்....குழந்தைகள் குதூகலத்தோடு துள்ளிக் குதித்தனர். அருகிலிருந்த தமிழ்அத்தையின் மகள் வனிதா மட்டும் ''பெரியப்பா நம்மள ஏமாத்துறாரு....அதெப்படி காசு ஒடம்புக்குள்ளே போகும்?'' என்றவாறு குழம்பியபடி தலை சொறிந்து கொண்டே விலகினாள். எனக்கு அது தந்திரம் என்று மட்டும் புரிந்தது ஆனால் எப்படி என்று தெரியவில்லை. எப்படியாவது இந்த நுட்பத்தை தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தும் தனது இறுதி மூச்சுவரை மாமா கற்று தரவில்லை. 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பள்ளிவாசலை ஒட்டிய தெரு தான் கட்றாபாளையத்தெரு. இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் அந்த பகுதியின் மையத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் இருந்தது. தேவாலயத்தை ஒட்டிய குறுகலான சந்துகளில் கிறுத்துவர்கள் அதிகம் வசித்தார்கள். அதிகாலை  பள்ளியிலிருந்து எழும் பாங்கோசை கேட்டுத்தான் பெண்களும் ஆண்களும் துயில் எழுவார்கள். ரம்ஜான் என்றால் இந்தி திரைப்பட பாடல்கள் காதை பிளக்கும். கிறுஸ்துமஸ் என்றால் தமிழ்ப்பாடல்கள் காதை கிழிக்கும். இருவரது பண்டிகைக்கும் அனைவரும் பேதமின்றி காசு கொடுப்பார்கள். ஒன்றாகவே கொண்டாடுவார்கள். தீபாவளிக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பார்கள். ஜாதியோ மதமோ அங்கே கிடையாது. தேவாலயத்தின் மேற்கு சுவரை ஒட்டி இருந்த எங்கள் காம்பௌண்டில் ஆறு வீடுகள். மேலே ஓடு வேய்ந்த இரண்டு வீடுகள். கீழே நான்கு வீடுகள். அனைத்தும் நூறு சதுர அடிக்கும் குறைவான ஒண்டுக்குடித்தனங்கள். பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகள். தமிழ் அத்தை மாடியில் குடியிருந்தார். அருகே சிரோண்மணீ டீச்சர் குடியிருந்தார். தமிழ் அத்தைக்கு தமிழரசி என்று பெயர் வைத்தது எம்.ஜி.ஆர் என்பதில் அளவு கடந்த பெருமை.  ராஜா மாமா டவுண் ஹால் ரோட்டில் ரேடியோ வியாபாரம் செய்து வந்தார். அதற்கு முன்பு கைக்கடிகாரம் ரிப்பேர் செய்து வந்தார். மாமாவிற்கு அம்மா செய்யும் கறிக்குழம்பு என்றால் மிகவும் இஷ்டம். கோலா உருண்டை குழம்பு என்றால் இன்னும் இஷ்டம். குழந்தைகள் அனைவருக்கும் சூரியா அத்தை செய்யும் பிரியாணி இஷ்டம். ரம்ஜான் அன்று அந்த பிரியாணிக்காக காத்திருப்பது ஒரு தனி சுகம். மாமா அத்தையின் உறவினர்கள் எங்களுக்கும் உறவினர்கள். அந்த பிராந்தியத்தின் எங்கள் காம்பௌண்டும் அத்தையின் வீடும் முன்னுதாரணமாக திகழ்ந்தது. என் பால்ய பருவம் முழுவதும் அங்கேயே கழிந்தது. இந்த நான்கு வீடுகளுக்கும் ஒரே ஒரு கழிப்பறை ஒரே ஒரு குளியலறை. மேலே ஒரே ஒரு கழிப்பறை. மாடி வீட்டுக்காரர்கள் குளியல் வீட்டுக்குள்ளே தான்.  எதிரே இருந்த மாமா வீட்டில் தான் நானும் என் உடன் பிறந்த சகோதர்களும் குளிப்போம். மாமா தான் குளிக்க ஊற்றுவார். மாநகராட்சி வழங்கும் தண்ணீர் தான் குளிக்க, குடிக்க சமைக்க மற்ற அனைத்திற்கும். மாமா வீடு சுமார் 150 சதுர அடி கொண்ட இரண்டு மாடி கொண்ட தனி வீடு. ஆறு வீட்டு குழந்தைகளும் ஒன்றாகவே வளர்ந்தோம். 
மாமா பல்வேறு சாதனைகளை முதல்முறையாக அந்த பிராந்தியத்தில் நிகழ்த்தி காட்டினார். முதன்முதலாக தொலைக்காட்சி வந்தது அவர் மூலமாகத்தான். எங்களுக்கு பக்கத்து தெருவான சுண்ணாம்புக்காரத் தெருவில் ஒரு கருப்பு வெள்ளை போர்டபிள் டிவியை வைத்து வெள்ளிக்கிழமை ''சித்ரகார்'' பார்க்க தலைக்கு பத்து காசு வசூல் செய்து வந்தார் ஒரு ஆசாமி.  சித்ரகார் பார்ப்பது அன்றைய நாட்களில் கௌரவமான விசயம். இதன் மூலம் தமது வீட்டில் டிவி இருக்கிறது என்ற கௌரவம் கிடைப்பதோடு சில இந்தி ந்டிகர்களின் பெயரும் நமக்கு தெரியவரும். மாமா தனது வீட்டில் புது 21 இஞ்ச் டிவியை கொண்டு வந்து வைத்து அதில் இலவச ஒளிபரப்பை துவங்கினார். கேஸ் அடுப்பு, மாவரைக்கும் கிரைண்டர், குக்கர் என்று  அடிக்கடி புதுவிதமான பொருட்களை கொண்டு வந்து அசத்துவார். எங்கள் பகுதியில் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்ததும் அவரே. 

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென மாமா அத்தையுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது நாங்கள் கட்றாபாளையத்தெருவை காலி செய்து விட்டு ஐயர் பங்களா சென்று விட்டோம். நனைந்த சட்டையுடனும் வெயிலில் ஸ்கூட்டர் ஓட்டிக் களைத்த முகத்துடன் வந்தவர் ''ஒரு தாம்பாளம் இருந்த கொடும்மா'' என்றார். எனது தாயாரும் ஒரு தாம்பாளத்தை எடுத்து நீட்ட பையிலிருந்து ஒரு பச்சை வண்ணப்புடவை, தேங்காய், வாழைப்பழம் வைத்து என் அம்மாவிடம் நீட்டினார். காரணம் கேட்ட போது ''இது நல்ல தங்காள் வருசம்னு சொன்னாங்க...கூடப்பிறந்த பெண் பிள்ளைகளுக்கு பச்சைக்கலர்ல சேலை கொடுக்கணும்னு சொன்னாங்க...அந்த முறையை ஒரு அண்ணனா செஞ்சுட்டு போலாம்னு வந்தேன்'' என்றார். என் தாயாரோடு பிறந்த தாய்மாமன்மார் எட்டு பேர். ஒருவர் கூட இதை செய்யவில்லை. தான் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத ஒரு சமூக நடைமுறையை மிக பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றினார். 
மாமா நன்றாக கதை சொல்லுவார். பாதாள பைரவி திரைப்படத்தின் கதையை அவர் சொல்லக்கேட்பது ஒரு அற்புதமான அனுபவம். தோட்ட ராமன் நேபாள மந்திரவாதியுடன் காட்டுக்குள் புகும் காட்சிகளை ஸ்பெசல் எஃபெக்டுடன் விவரிப்பார். 
மாமாவிடம் ஒரு வயலெட் நிற புல்லட் பைக் இருந்தது. வீட்டிலிருந்து தெருமுனை வரை அவர் முதுகை பற்றிக்கொண்டு பலமுறை சென்றிருக்கிறேன். வெறும் நூறு அடி தூரம் தான் அந்தப்பயணம். ஆனால் அது தரும் பெருமை அளவிட முடியாதது. இன்று நான் மேற்கொள்ளும் சர்வதேச விமானப் பயணங்களைக் காட்டிலும் கூடுதல் கௌரவம் மிக்கது. தெருமுனையையும் சாலையையும் இணைக்கும் வகையில் ஒரு சரிவு அமைக்கப்பட்டிருக்கும். அதில் புல்லட் இறங்கும் அந்த அரை வினாடி அலாதியானது. மாமா அந்த புல்லட்டை தினமும் கழுவுவார். வண்டியின் சத்தத்தை வைத்தே அதன் பிரச்சினையை கண்டுபிடித்து விடுவார். அவரது அக்காள் கணவர் சிம்மக்கல் நூலகம் அருகே ஒர்க் ஷாப் வைத்திருந்தார். புல்லட் ரிப்பேரில் அவரும் அவருடைய சகோதரர்களும் விற்பன்னர்கள். தமிழக காவல்த்துறையின் வண்டிகள் பெரும்பாலும் அங்கே தான் பழுது பார்க்கப்படும். வண்டியின் சத்தம் கேட்டு அது இந்த போலிஸ் அதிகாரி தான் என்று சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்களிடம் மட்டுமே வண்டியை சர்வீஸ் செய்வார். ஒருமுறை மதுரையிலிருந்து நெடுங்குளம் வரை அவரோடு புல்லட்டில் சென்ற அனுபவம் உண்டு. மாமாவிற்கும் எனது பெரியப்பாவிற்கும் ஒருவிதமான அலாதியான நட்பு உண்டு. படித்துவிட்டு ஒரு பேப்பர் கடையில் சிலகாலம் சொற்ப சம்பளத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் கணக்குகளை ஆராய்ந்த வணிகவரித்துறை அலுவலர்கள் அதில் சில குளறுபடிகள் இருப்பதாக நோட்டீஸ் விட்டார்கள். எங்கள் கடை உரிமையாளர் எனது பெரியப்பாவின் உதவியை என் மூலமாக நாடினார். பெரியப்பா வணிகவரி அலுவலராக இருந்தார். அதன்பொருட்டு ஒருமுறை வணிகவரித்துறை அலுவலகம் செல்ல நேரிட்டது. அங்கு பன்னிரெண்டு வணிகவரி வட்டங்கள் உண்டு. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு வணிகவரி அலுவலர். பெரியப்பா முதல் தளத்தில் இருந்தார். எங்கள் கடையை கண்காணிக்கும் அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. நானும் பெரியப்பாவும் மூன்றாவது மாடிக்கு சென்றோம். அங்கே வெளியில் இருக்கும் பெஞ்ச்சில் கவலை தோய்ந்த முகத்துடன் மாமா அமர்ந்திருந்தார். பெரியப்பா மாமாவிடம் ''என்னாச்சு...ஏன் இங்க ஒக்காந்துருக்கீங்க....?' என்றார்.
''நேத்து உங்காளுக கடைக்கு வந்து பில் புக்ஸ் அப்புறம் கணக்கு புத்தகத்தை எடுத்துட்டு வந்துட்டாங்க...அதுதான்...'' என்று இழுத்தார்.
பெரியப்பா வேகமாக வணிகவரி அலுவலர் அறைக்குள் நுழைந்தார் தனியாக. பெரியப்பா நுழைந்த பத்தாவது வினாடி துணைவணிகவரி அலுவலர் தெறித்து ஓடிவந்தார். தனது அறையிலிருந்து, மாமாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்தையும் எடுத்து வந்து ஒப்படைத்தார்.
''பாய்...நீங்க அவர்கிட்ட ஒரு வார்த்தை நான் வாங்கிட்டேன்னு சொல்லிட்டு போய்டுங்க பாய்...ப்ளீஸ்'' என்றார்.
பெரியப்பா சி.டி.ஓ அறையிலிருந்து வெளிப்பட்டார் '''வாங்கிகிட்டீங்களா....?' என்றார். மாமா நன்றியோடு ''ரொம்ப தாங்க்ஸ் மச்சான்'' என்றார். ''நீங்க கிளம்புங்க இனிமேல் பிரச்சினை வராம நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சி.டி.ஓ அறைக்குள் நுழைந்தார். 
உதவி வணிகவரி அலுவலர் என்னை மெதுவாக அழைத்தார் ''தம்பி...அவர் யாரு?''
''அவர் என்னோட மாமா'' என்றேன்.
''அவர் என்னோட தங்கச்சி வீட்டுக்காரர்னு சொன்னாரு''
''என்னங்க இது பைத்தியக்காரத்தனமா இருக்கு...அவர் எங்க பெரியப்பா...அவரோட தங்கச்சி வீட்டுக்காரர்னா எனக்கு மாமா முறை தான வேணும்...இதுல என்ன உங்களுக்கு  கன்ஃப்யூசன்?''
''இல்லை இவரு முஸ்லீமாச்சே அதுனால ஒரு கன்ஃப்யூசன்..ம்ம்''
''அவரு முன்னாடி இதை சொல்லிடாதீங்க...தொலைச்சுடுவாரு...''
''நான் இப்படி கேட்டேன்னு அவர்கிட்ட சொல்லிடாதப்பா...'' என்று எங்கள் கடைக்கணக்கை உடனடியாக முடித்துத் தந்தார்.
அன்றிலிருந்து பெரியப்பா இருக்கும் வரை மாமாவின் ரேடியோ கடைக்குள் நுழைய யாருக்கும் தைரியம் வந்ததில்லை.

மதுரைக்குள் எனது கார் நுழைந்த போது மழை பெய்ய துவங்கியிருந்தது. ஷாமியானாவின் கீழே மக்கள் குழுமியிருந்தனர். அப்துல் சித்தப்பா கண்ணீர் தேங்கிய கண்களுடன் ''போப்பா...போய் பாரு'' என்றார். மய்யத்தை குளிப்பாட்டி வாசனை திரவியங்கள் தடவி கபுர் துணியால் சுற்றி வீட்டின் மையத்திற்கு எடுத்து சென்றனர். அத்தையை பார்க்க வேண்டும்...ஆனால் பெண்களின் கூட்டம் தடுத்தது. கலங்கிய விழிகளுடன் நின்ற அமீர் அக்காவிடம் ''அக்கா...அத்தையை பார்க்க முடியுமா?'' என்று கேட்டேன். ''நீ மருமகனில்லையா...அதனால 40 நாளைக்கு பார்க்க  முடியாது'' என்றார். சடலத்தை தாங்கிய ஆம்புலன்ஸ் மசூதியை நோக்கி மழையோடு பயணித்தது. மசூதியில் வைத்து தொழுகை முடிந்தபின் சடலம் கபுர்ஸ்தான் எனப்படும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மழை நீரால் நிரம்பியிருந்தது மயானம். ஈரமண்ணில் புதைந்து எழுந்தன கால்கள். சாகுல் அண்ணன் என்னை கவனமாக புல்தரையில் நடத்தி கூட்டிச் சென்றார். வெட்டப்பட்ட குழியிலும் மழை நீர் தேங்கியிருந்தது. பெயர் தெரியாத உறவினர் ஒருவர் குழியில்  இறங்கி தேங்கியிருந்த நீரை ஒரு வாளியில் அள்ளி எடுத்தார். வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டிருந்த மாமாவின் சடலத்தை உள்ளே கிடத்தினர். குழியின் பக்கவாட்டில் தென்னை ஓலைகள் கிடத்தப்பட்டு சவுக்கு கழிகள் எதிர்ப்பக்கச் சுவரிலிருந்து 45 டிகிரி கோணத்தில் பதிக்கப்பட்டன. குழிக்கு வெளியே நீண்டிருந்த தென்னை ஓலைகள் குழிக்கு உள்ளே கூடி மடிக்கப்பட்டன. கடைசி மண்ணை எடுத்து போடச்சொன்னார் ஒரு பெரியவர். மூன்று முறை மண்ணை அள்ளி குழிக்குள் வீசி விட்டு விலகும் போதுதான் மாமா எங்களை விட்டு பிரிந்தார் என்ற எண்ணம் மேலோங்கத் துவங்கியது. 
மாமா இனி வரமாட்டாரோ...இல்லை எங்கோ வானில் நட்சத்திரமாகவோ அல்லது மழை தாங்கிய மேகமாகவோ நமது தலைக்கு மேல் எப்போதும் இருப்பாரோ...அவருடைய இறுதி மூச்சுக்காற்று தான் இந்த மரத்தின் இலைகளை அசைக்கின்றனவா...எண்ணங்களும் அதற்கு எதிர்வினைகளும் மூளைக்குள் முட்டிமோத நடையில் தடுமாற்றம் ஏற்பட்டது. 

மயானத்தின் வாயிலை நெருங்கையில் ஒரு மூன்று வயது சிறுவன்    '’மாமா...மாமா....மேஜிக்...மாமா'' என்று ஓடினான். மயானத்தில் யாருமேயில்லை அமைதி பெருகி ஒரு அமானுஷ்யமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. மாமா அதே கட்டம் போட்ட வேட்டி கை வைத்த வெள்ளை பனியன், தங்க பிரேம் போட்ட கண்ணாடியோடு வந்தார்.
சிறுவன் தனது கால்ச்சட்டையிலிருந்து ஒரு இருபது காசு நாணயத்தை மாமாவிடம் கொடுத்து ''மேஜிக் மாமா...மேஜிக்'' என்றான்.
மாமா சிரித்தவாறு மணிக்கட்டிலிருந்து நாணயத்தை மேல் நோக்கி செலுத்த துவங்கினார். முழங்கை அருகில் வந்த போது நாணயம் மறைந்து போயிருந்தது. சிறுவன் ஆர்ப்பரித்து சிரித்தான்....''மாமா இன்னொரு மேஜிக்'' மற்றுமொரு நாணயம்....மீண்டும் சிரிப்பு....!
மைதானத்தின் வாயிலிருந்து எனது கார் வரை அந்த சிரிப்பு சத்தம் துரத்திக்கொண்டே வந்தது....கண்ணில் பெருகிய நீரை வானம் தனது பெருந்தூறலால் வழித்துக் கொண்டு ஓடியது. காரில் ஏறி மயானத்தை விட்டு விலகியதும் சிரிப்புச்சத்தமும் விலகியது. மாமாவும் சிறுவனும் ஆளில்லா மயானத்தில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்....முடிவுகள் மட்டுமே சாத்தியப்படும் அந்த பூமியில் ஒரு முடிவுறாத விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது....!