Tuesday, July 17, 2018

அடையாறு அருகே... (சிறுகதை)

ஒரு பெருநகரத்தின் நெடிய சாலைக்குரிய அனைத்து கல்யாண குணங்களும் கொண்டது மவுண்ட் பூந்தமல்லி சாலை. இந்த சாலையில் தான் இருபது ஆண்டுகளாக பயணிக்கிறேன். இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் அந்த சாலையில் அரசுத்துறையினர் அவ்வப்போது மேற்கொள்ளும் குழிதோண்டும் பணிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவை. ஆனால்  சென்னை வர்த்த மையத்தைத் தாண்டி சற்றே தள்ளி இருக்கும் சிக்னலிலிருந்து இரண்டாகப் பிரியும் சாலையில் அதற்கான குணங்கள் எதுவும் தென்படாது. நெரிசல் அற்ற அந்த சாலை நிம்மதியை தரும். அந்த சாலையில் வளைந்து நேராக சென்றால் அடையாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம். அதைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் காவல்துறையின் உயர் அதிகாரகளின் பங்களாக்கள் மட்டுமே இருக்கும் குடியிருப்புகள். பாலத்தை ஒட்டி அமைந்துள்ள நந்தம்பாக்கம் போலிஸ் பூத்தை தள்ளி அரை கி.மீ தூரத்தில் அடையாறின் உள்ளே அமர்வதற்கு இயற்கையாகவே அமைந்துள்ள மணற்திட்டுகள். பெரிய அரச மரம் ஒன்று கிளைபரப்பி சூரியனின் வெப்பத்தை தணித்து நிழலும் தரும் அந்த இடம்தான் நானும் அவளும் இன்றும் என்றும் சந்தித்துக் கொள்ளும் இடம்.

அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது அடையாறு. மாலைவெயில் இன்னும் மீதம் இருந்தது. இன்று பௌர்ணமி வேறு. அடையாறின் தோற்றம் அமைதி நிறைந்த அழகாக இருக்கும். மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழையால் பூமி பசும்புற்களை பிரசவித்திருந்தது. கரையில் அமர்ந்து அடையாறு ஆற்றை உற்று பார்த்தேன். அது வெறும் ஆறு மட்டுமல்ல. எனக்கும் அவளுக்குமான உறவின் மௌன சாட்சி. தண்ணீர் பாம்பு ஒன்று கரைக்கு வந்து பகல் வெப்பத்தை உள்வாங்கிய மண் மீது ஊர்ந்து வெப்பம் தாங்காமல் மீண்டும் தண்ணீருக்குள் சென்றது. பாம்பு மனிதனின் இச்சைக்கான ஆதி குறியீடு. கடவுளால் மறுக்கப்பட்ட அந்த விலக்கப்பட்ட கனியை மனிதனுக்கு தந்து அவனை வெட்கப்பட வைக்கவும் அதனால் வேதனைப்பட வைக்கவும் முடிந்த பாம்பு இப்போது ஏன் என் முன் தோன்றியது? எதிர்க்கரையில் காகங்கள் கூடிக் கரைந்து கொண்டிருந்தன. உணவு கிடைத்திருக்க வேண்டும் அல்லது உறவினர் இறந்திருக்க வேண்டும்...இல்லையெனில் காகங்கள் கரைவதில்லை. சிறிய அணில் ஒன்று கீழே கிடந்த பழக்கொட்டையை கவ்விக்கொண்டு அருகே இருந்த மரத்தின் கிளை மீது ஏறியது. அவ்வப்போது ஒலி எழுப்பியபடி கடந்து செல்லும் காவல்துறை வாகனங்கள் என்னை கண்டுகொள்ளாமல் சென்றன. இருள் கவிழ்ந்து மாலை நிறைவுக்கு வந்தது. பறவைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. மணி 6.30 இன்னும் அரை மணி நேரத்தில் அவள் வந்து விடக்கூடும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு அலுவலகத்தில் எனது அறைக்கு எதிரே அமர்ந்திருந்த அவள் மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.
அதற்கு அவளது கண்ணீரே சாட்சி. அவளைக் கடந்து பத்தடி தூரம் சென்று மீண்டும் திரும்பி அவளுக்கு தெரியாமல் பின்பக்கம் நின்றேன். காகிதத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். அது மலையாளமா அல்லது கன்னடமா என்று தெரியவில்லை. அலுவலகப் பதிவுகளில்
பெயர் ஜெயசுதா என்றும் அழைக்கப்படுவது ஜெஸ்ஸி என்றும் தெரியவந்தது. ஊர் கேரளமும் கர்னாடகமும் சந்தித்துக் கொள்ளும் எல்லை கிராமம். வீட்டில் மலையாளமும் பள்ளியில் கன்னடமும் பயின்றவள். வாழ்க்கையில் துரோகம் காரணமாக தோற்கடிக்கப்பட்டவள். ஒரு நாள் என்னிடம் மிச்சம் வைக்காமல் கொட்டி தீர்த்தாள். காதல் திருமணம் செய்து கொண்ட போது அழுகை அவளது வாழ்க்கையின் ஒரு பகுதியானது.
தனது நெருங்கிய தோழியே தனக்கு துரோகம் செய்தது, அவளது காதல் கணவன் அவளது வீட்டிலேயே அந்த தோழியுடன் உறவு கொண்டது, அதை அவளது அம்மா பார்த்து வெடித்தது என ஓராண்டுக்குள் அவளது திருமண வாழ்வு முடிவுற்றது. அவள் வாழ்க்கை முழுதும் இரணங்கள். அவளுக்கு சொல்லி அழக்கூட ஒருவரும் இல்லை. காரணம் பெற்றோரை மீறி நடந்த திருமணம் அது. எது சொன்னாலும் ''நீயே தேடிக்கொண்ட வாழ்க்கை தானே இது''  என்ற ஓரே பதில் திரும்ப திரும்ப வரும். கணவனின் நயவஞ்சகமும் தோழியின் துரோகமும் பெற்றோரின் ஆற்றாமையும் அவளை கிழித்து நாராக்கி நடுவீதியில் எரிந்தன. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் பொருளாதார சிக்கல்கள். அவளுக்கு ஒரே ஆறுதல் அவளது மகன் விஷ்ணு. அவ்வப்போது மகனின் கல்விக்காக என்னிடம் உதவி கேட்பாள். சொன்ன தேதியில் பணத்தை திருப்பித் தருவாள். தர முடியாவிடில் காலையில் நான் அலுவலகம் வரும் முன் காருக்காக காத்திருப்பாள்.
காரிலிருந்து நான் இறங்கியதும் ''இன்னைக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கல...ரெண்டு நாள் கழிச்சு தரட்டுமா...உனக்கு அவசரம்னா இந்த சங்கிலியை அடமானம் வச்சு இப்போவே கொடுத்துடுறேன்...'' என்று படபடப்பாள்.

அவள் பேச நான் காது கொடுத்தேன். அவளது உள்ளக்கிடக்கையை கொட்டித்தீர்க்க செவி மடுத்தேன். அவளால் இந்த பிரச்சினைகளை கடந்து சாதிக்க முடியும் என்று ஊக்கம் கொடுத்தேன். அவளுக்கும் எனக்குமான உறவை எந்தவகையிலும் அடக்க முடியாது. இது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆற்றிக்கொள்வதன்றி வேறொன்றுமில்லை. சில பொழுதுகளில் பேசும் போது என் சுண்டு விரலை தனது சுண்டு விரலோடு பிணைத்துக் கொள்வாள். உள்ளம் சார்ந்த உணர்ச்சிகளை உடல் சாராமல் பகிர்ந்து கொண்ட அந்த பொழுதுகள் அற்புதமானவை.
ஒரு நாள் வேலையை விட்டு விலகி எர்ணாகுளம் சென்றாள். ஆனால் தொடர்ந்து தொடர்பில் இல்லை. அவ்வப்போது பண உதவி கேட்டாள். ஆனால் நேரில் பார்க்க இயலவில்லை. அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நின்று போனது.

அவளுக்காக காத்திருப்பதை நான் மனப்பூர்வமாக விரும்பினேன். அந்த காத்திருப்பை நான் ரசித்தேன். தெருவிளக்குகள் ஒளி உமிழத்துவங்கின. போக்குவரத்தும் குறைந்து விட்டன. ஆளில்லா அந்த சாலையில் ஒரு ஆட்டோ வந்து அவளை இறக்கி விட்டு திரும்பியது.

அவளே தான்..கரையிலிருந்து கை ஆட்டினேன்...என்னைக் கண்டு உற்சாகமாக கை ஆட்டினாள். அவள் சுண்டு விரலை தீண்டக் காத்திருந்தேன். வந்தவள் கைப்பையை என் கையில் திணித்து விட்டு ''வந்துர்றேன்'' என்று அருகே இருந்த மரத்தின் பின் திசையை நோக்கி நடந்தாள்.
நான் புரியாமல் ''எங்கே போற?'' என்றேன்.
''எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டுருக்க முடியாது...பொறு வர்றேன்'' என்றவாறு நடந்தாள்.
சில நிமிடங்களில் சிக்கல் தீர்ந்து விடுதலை உணர்வுடன் புத்துணர்ச்சியாய் வந்தாள். கண்களால் என்னை அளவெடுத்தாள்.

''அப்படியே இருக்கியே....உடம்பு கொஞ்சம் வத்தியிருக்கு....அவ்வளவு தான்....உனக்கு ஒண்ணு தெரியுமா...இன்னையோட 1826 நாள் ஆகுது...ஆனால் உன்னை நான் நினைக்காத நாளில்லை....உனக்கும் எனக்கும் எந்தவொரு பிணைப்பும் சமூக ரீதியாக இருந்ததில்லை... இவ்வளவு நாள் உன்னை பிரிந்து நான் வாழ்ந்தது ஒரு தவம்....வைராக்கியம்...ஓணம் திருநாள் அன்று மொத்த கேரளமும் மாபலி சக்கவர்த்திக்காக காத்திருக்கையில் நானோ உனக்காக காத்திருந்தேன்....வாசலில் பூக்கோலமிட்டு விருந்து சமைத்து நான் கடைசியாக உண்ணுமுன் இதோ நீ வந்து காட்சி தரப்போகிறாய் என்று பலரிடமும் சொல்லி பைத்தியமென பெயர் வாங்கியிருக்கிறேன்....! டிவியில் இந்திப்பாடல்கள் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும். '' துமாரி சாத் பி தன்ஹா ஹூ தும் நஹி ஸ்ம்ஜோகே'' மெஹ்தி ஹசனுடைய அந்த கஜல், அப்புறம் பத்மனாபசாமி கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் உன் பெயருக்கு அர்ச்சனை செய்திருக்கிறேன்...! அந்த சன்னிதியில் நிற்கும் போது ''புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலர்கள் தூவி'' என்று நீ பிரபந்தம் சொல்வது என் காதுகளில் ஒலிக்கும்..
தங்கக் கைக்குள்ளில் சங்கும் தாமரையும்
காணும் கண்ணின் புண்யம்
சூர்ய காயத்ரி ஞான் ஆர்ய தீர்த்தங்களில்
நீராட போய்வரான் ஆலில மஞ்ஞலில்
நீராடும் போல் காணுன்ன கண்ணாயிரம்
உனக்கு பிடித்தமான இந்தப்பாடல் நான் என் மகனுக்காக பாடியது...! அவனுக்காக மட்டுமல்ல உனக்காகவும் தான். ..கடற்கரையில் நான் கால் நனைத்தாலும் நீயும் நனைந்தாய்...உனக்கு பசி எடுக்கும் போது.....

ஜெஸ்ஸி....ஜெஸ்ஸி....ஒரு நிமிசம் பொறு....ஜெஸ்ஸி....இது உனது குணம் இல்லையே....பேச வார்த்தைகளை தேடுபவள் அல்லவா நீ....இன்னைக்கு ஏன் நொடிக்கு நூறு வார்த்தைகள்?

இப்போது என்னிடம் நேரம் இல்லை...சொல்ல வேண்டியது ஏராளம்...நேரமோ குறைவு...நல்ல வாழ்க்கை என்பது எனக்கு கற்பனையிலும் கனவிலும் கூட சாத்தியமாக வில்லை. போன மாதம் என்ன நடந்தென்று உனக்கு தெரியுமா? என் மகன் யாரோ ஒரு வங்காளிப் பெண்ணை திருமணம் செய்து கூட்டி வந்து விட்டான். என் அம்மா '' நீ செய்த பாவம் உன்னை தண்டிக்கிறது'' என்றாள். நான் திருமணம் செய்தது அவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. அதை குத்திக்காட்டினாள். வந்த மருமகள் ஒரே வாரத்தில் என்னையும் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்தினாள். நான் இப்போது அம்மாவோடு தனியாக இருக்கிறேன். சினிமாவில் டப்பிங் குரல் கொடுக்கிறேன். ஏதோ வயிற்றுக்கு கிழங்கு வாங்கவும் வீட்டு வாடகை கொடுக்கவும் பணம் கிடைக்கிறது.

அவளுடைய அந்த பேச்சுக்கு நான் ஒரு சாட்சி மட்டுமே....அவள் கண்களை மட்டுமே நான் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன்...கண்ணாடி முன் நிற்கும் வரை மட்டுமே நீடிக்கும் பிம்பம் போல அவளுக்கு நான் எதிரே இருக்கும் வரை தான் பேச முடியும்....பேசட்டும் எங்கே நிறுத்துகிறாள் என்று காத்திருந்தேன்!

விஷ்ணு பணம் கொடுக்க முனைந்தாலும் இவள் ஊடே விழுந்து தடுக்கிறாள். இந்த பிறவியில் நான் நடந்த பாதை எங்கும் முட்களன்றி வேறில்லை...நான் பாதையெங்கும் மலர்கள் கேட்கவில்லை...புல் இருந்தால் கூட போதும் என்பதே எனது பிரார்த்தனை. உனக்கு தெரியுமா..காசர்கோட்டுக்கு பக்கத்தில் ஒரு அம்மன் கோயில் உண்டு...அங்கு சென்று அடுத்த பிறவியில் என்னவாக ஆக வேண்டுமோ அதை எண்ணி வேண்டிக்கொண்டால் நடக்கும் என்பது நம்பிக்கை...அங்கு சென்று அடுத்த பிறவியில் நீ எனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டினேன். யாரையுமே வெறுக்கத்தெரியாதவன் நீ...உன் மனைவி உன்னை ஒரு நாளாவது மனிதனாக நடத்தியிருப்பாளா...உனக்கு இது பிடிக்கும் நான் உனக்காக இதை இன்று சமைத்தேன் என்று சொல்லிருப்பாளா...உனக்கு ஒரு பிள்ளை பெத்து தந்திருப்பளா...ஆனால் நீ அவளை எந்த அளவு நேசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும்....சமூகத்திலும் வேலை பார்க்கும் நிறுவனத்திலும் உனக்கு இருக்கும் அந்தஸ்தையும் செல்வாக்கையும் நன்கு அறிந்த அவள் நீ பிறந்த போது நிலவிய உன் குடும்பத்தின் வறுமையை இன்றளவும் சுட்டிக்காட்டி காயப்படுத்தும் போது வருத்தமோ கோபமோ கொள்ளாமல் அவளை நேசிக்கிறாய் பார்...இந்த அன்பு...பிரதிபலன் எதிர்பார்க்காத இந்த அன்பு எனக்கு மறுபிறவியிலாவது வேண்டும்....நாம் அடுத்த பிறவியில் திருமணம் செய்து கொள்ளலாம்...ஒன்றல்ல இரண்டல்ல...பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்....உன்னைப் போன்றும் என்னைப் போன்றும் வீடெங்கும் குழந்தைகள்...ஒரே சத்தம் ஆரவாரம் கூச்சல் கும்மாளம் குதூகலம்...பத்துக் குழந்தைகள் பத்து கல்யாணம் பத்து மருமக்கள்....இருபது அல்லது முப்பது பேரக்குழந்தைகள்....நான் மரணிக்கும் போது உன் சுண்டு விரலை பற்றிக்கொண்டே மரணிக்க வேண்டும்...என் இறுதி யாத்திரையில் நான் பெற்றதும் அவர்கள் பெற்றதுமாக பெரும் ஊர்வலமாக நடக்க வேண்டும். மரணமா அது...கொண்டாட்டம் அல்லவா...நிறைவான வாழ்க்கை ஒன்று முடிவுக்கு வருவது கூட திருவிழா மாதிரி தானே....உனக்காக நானும் எனக்காக நீயும் வாழும் அந்த வாழ்க்கையை கற்பனை செய்தாலே இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதே...அனுபவித்தால் எப்படி இருக்கும்? என் உடல் சிலிர்ப்பதை உன்னால் உணர முடிகிறதா?

என் முன்னே மண்டியிட்டாள். இரு கரத்தாலும் என் கன்னங்களை பற்றி நெற்றியில் அழுத்தி முத்தமிட்டாள்.
அவள் கண்களை அப்போது தான் உற்று நோக்கினேன். பௌர்ணமி இரவில் ஜொலிக்கும் கண்கள். சற்றே பாரதி நினைவில் வந்து சென்றான். நிலவூறி ததும்பும் விழிகள் அது இதுதானோ...கருவிழி மேலே சொருக பாதி வெண்மையான விழிப்படலத்தில் நிலவு ஊறித்ததும்பின. மயங்கி நின்ற எனக்கு எனது இடது தோள் பட்டையில் டார்ச் விளக்கின் வெளிச்சம் பட்டது. மயக்கத்தை கலைத்தது ஒரு முரட்டுக்குரல்.

''யாருடா அங்கே இந்த நடு ராத்திரில...'' கைகளிலிருந்து ஜெஸ்ஸி கன்னத்தை விடுவித்துக் கொண்டாள்.

பயப்படாதே...போலிஸ்தான்...நான் போய் பாத்துட்டு வர்ரேன்....! மண் பரப்பில் ஜெஸ்ஸி தன் உடல் மறைத்தாள்; நான் கரையை நோக்கி நடந்தேன்.

போலிஸ் ஜீப்பும் அதன் அருகில் ஒரு காவல்துறையின் உயர் அதிகாரியும் அவரது டிரைவரும் இருந்தனர்.
அந்த உயரதிகாரி எனது காரை சுற்றி வந்து கொண்டிருந்தார். ட்ரைவர் என்னை கண்களாலேயே அளவெடுத்தார்.

''பார்த்தா படிச்சாளு மாதிரி தெரியுது...இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?'' நான் மௌனம் காத்தேன்.

''டைம் என்னவாகுது தெரியுமா?''

பிரக்ஞை விழித்துக்கொண்டது. ஆமா...இப்போ நேரம் என்ன? அலைபேசி வந்ததிலிருந்து கடிகாரம் கட்டும் பழக்கம் நின்று போய்விட்டது. மொபைலைத் தேடி பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தேன். அது நள்ளிரவு 1.30 என்றதோடு மட்டுமில்லாமல் 26 மிஸ்டு கால்கள் என்றும் காட்டியது. அனைத்தும் ஒரே எண்கள்.

இப்போது உயர் அதிகாரி பேச ஆரம்பித்தார்.

''சீம்ஸ் டு பி எஜுகேட்டட்....ம்ம்....பேர் என்ன?''


''த்..த்..த...த....தமிழ் செல்வன்....''

''என்ன இந்த நேரத்தில...அதுவும் இங்க...என்ன பண்றீங்க?''

''ரொம்ப நாள் கழிச்சு என் ஃப்ரெண்ட் வந்தாங்க...''

''ஃப்ரெண்டா....அங்கே வேற யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே...ஃப்ரெண்டை மீட் பண்ரதுக்கு வேற இடமே கிடைக்கலையா...ம்?''

''கதிர்...அங்கே போய் யார் இருக்கான்னு பாரு...''

''ஒகே சார்...'' காவலர் விரைந்தார்.

நீங்க யாரு தீவிரவாதியா...இல்லை பிரிவினைவாதியா...எந்த குரூப்....? உண்மையை சொல்றீங்களா...இல்லைன்னா உள்ளே தூக்கிவச்சு விசாரிக்கட்டுமா?

''எப்படி அரெஸ்ட் பண்ணுவீங்க...காரணமே இல்லாம....'' குரலிலும் கண்களிலும் எனது கோபத்தை காட்டினேன்.

''காரணமா...உங்க பேர் ஒண்ணு போதும்....சார்ஜ் ஃப்ரேம் பண்றதுக்கு...சொசைட்டில என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கீங்க''

அலைபேசி சிணுங்கியது. அதே மிஸ்டு கால் எண் தான். எனது எதிர்வினைக்கு சற்றும் காத்திருக்காமல்
''அந்த போனைக் கொஞ்சம் குடுங்க... '' பறித்து அவரே பேசினார்.

''உங்களுக்குத்தான்...பேசுங்க....''

நான் போனை வாங்கி ''ஹலோ'' என்றேன்

எதிர்முனையில் ''அங்கிள் ஞானானு விஷ்ணு சம்சாரிக்கின்னது...ஜெஸ்ஸியோடே சன்...அம்மா இன்னைக்கு இப்போ 8 மணிக்கு நம்மை விட்டுட்டு போய்ட்டாங்க...கடைசியா ஒருமுறை உங்களை பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க...நான் உங்க நம்பரை கண்டினியுவா ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன்....நீங்க அட்டென் பண்ணவேயில்லை....நீங்க இப்போ திருவனந்தபுரம் வரமுடியுமா?'' நீங்க வந்தீங்கன்னா அவங்களோட கடைசி ஆசை.....''விஷ்ணு பேசிக்கொண்டே இருந்தான்.

இரத்தம் ஒரு நொடி உறைந்து மறுகணமே உருகி நரம்புகள் அனைத்திற்கும் சோகத்தையும் பயத்தையும் பாய்ச்சியது. என் பாதங்களிலிருந்து ஞாபக நாகங்கள் தலையை நோக்கி ஊர்ந்து பயணித்துக் கொண்டிருந்தன...கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

''சார் இங்கே யாருமே இல்லை சார் ...அந்தாளு பொய் சொல்றான் சார்'' -- கதிர் அங்கேயிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தார்.

யாருமே இல்லையா....அப்போ இங்கே வந்தது யார்...ஸ்தூலத்தை விட்டு சூட்சுமமாக என்னைத் தேடி வந்தது எது?...கனவுகளுக்கும் நிறைவேறாத ஆசைகளுக்கும் கால் முளைக்குமா....அவளே சொன்ன மாதிரி வந்தது அவளது ஆசைகள் தானா அது...பத்து குழந்தைகள் பெற்றுத்தர துடிக்கும் தாயுள்ளமா அது...என் சுண்டு விரல் பற்றி அரவணைக்கும் காதலா..எது உடல் பெற்று வந்தது...எந்த அறிவியல் இதை விளக்கும்?

காவல் அதிகாரி ''வீட்டுல பொண்டாட்டியோட சண்டையா...இல்லை தற்கொலை கேசா...தற்கொலை பண்ணனும்னா கூவத்துக்கு தானே போகணும்....இங்கே அரையடி தண்ணியில எப்படி தற்கொலை செய்ய முடியும்....என்னதான் உங்க பிரச்சினை?''

அவரது வார்த்தைகளை பொருட்படுத்தாமல் காருக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்ட மறு விநாடி அந்த உயர்அதிகாரி கண்ணாடியைத் தட்டினார். கார்க்கண்ணாடி இறக்கி விட்டு பார்வையாலேயே என்னவென்றேன்.

''வீட்டுக்குத்தானே போறீங்க...?''

''எஸ்...வீட்டுக்குத்தான் போறேன்...ஏன்?''

''நெற்றியில சிவப்பா ஏதோ லிப்ஸ்டிக் மாதிரி....கொஞ்சம் துடைச்சிக்கோங்க...!''

ரியர்வியூ கண்ணாடியில் பார்த்தேன்...ஜெஸ்ஸி என் நெற்றியில் கொடுத்த முத்தத்திற்கு ரத்த சாட்சியாக அந்த இதழ் தடம்.

அழிக்கணுமா....அழிக்கத்தான் வேண்டுமா...அழிக்கத்தான் முடியுமா...அழித்தாலும் அழியுமா?
(முற்றும்)