Thursday, December 27, 2018

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக...!

 ''மாப்பாளையம்'' என்று பேச்சு வழக்கிலும் 'மஹபூப் பாளையம்' என்று எழுத்து வழக்கிலும் வழங்கப்படக்கூடிய மதுரை நகரின் புறநகர் பகுதியின் துவக்கப்புள்ளியில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் அரிமா அரங்கம். அங்கு 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ''இனி'' வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் தான் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை சந்தித்தேன். வெள்ளை வேட்டி, முழுக்கை சட்டை, மயில்தோகை வண்ணத்தில் சால்வை நடுவகிடு எடுத்து படிய வாரிய தலைமுடி. பிரபஞ்சன் அரிமா அரங்கின் வாயிலில் புகைபிடித்துக் கொண்டிருந்தார். ஒரு பத்தடி இடைவெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனோ பேசத்தோன்றவில்லை. அந்த உள் அரங்கு கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் பேரா.சுப.வீ (அப்போது அவர் தி.க/திமுக இரண்டையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்) இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பெண்ணிய செயற்பாட்டாளர் என்று அறியப்படும் தோழர். ஓவியா மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன்.
அப்போது ''இனி'' பத்திரிக்கையின் நடுப்பக்கத்தின் பிரபஞ்சன் அரசியல் கட்டுரைகள் எழுதுவார். அதை வாசித்து விட்டுத்தான் அந்த கூட்டத்திற்கு சென்றேன். சுப.வீ வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஓவியா பேசும் போது பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்றார். இறுதியாக பிரபஞ்சன் பேசினார்.
.
அவரது பேச்சு அன்றைய அரசியல் போக்குகள் குறித்து அமைந்ததாக நினைவு. ஞாபகத்தில் நின்ற சில தகவல்கள் எனக் கீழ்க்கண்டவற்றை குறிப்பிடலாம்.
1) ''தி செகண்ட் செக்ஸ்''  (The Second Sex) என்னும் நூலை சிமோன் த பொவார் (Simone de Beauvoir) எழுதுவதற்கு முன்பாகவே ''பெண் ஏன் அடிமையானாள்?'' என்னும் நூலை தந்தை பெரியார் எழுதி முடித்து விட்டார்.
2) தமிழர்களில் இரு வகை உண்டு. ஒன்று தமிழ் பேசும் தமிழர்கள் மற்றொன்று தமிழ்நாட்டுத் தமிழர்கள். (''நாங்கள் தமிழ் பேசும் தமிழர்கள் தமிழ்   நாட்டுத்தமிழர்கள் அல்ல'' என்று பேச்சினிடையே அடிக்கடி குறிப்பிட்டார்)
3) தமிழர்களின் கற்பனை வற்றி போனதுக்கு முதன்மை காரணம் ''இட்லி''
4) ஆண் பெண் சமத்துவம் / சனாதன எதிர்ப்பு போன்றவற்றை தத்துவார்த்தரீதியாக சமூக அமைப்பு மாற்றம் வாயிலாக கொண்டு வருவதன் முக்கியத்துவம் போன்ற கூறுகளுடன் அமைந்தது அவரது பேச்சு.
பிரபஞ்சனின் பேச்சு பாணி சற்று வித்தியாசமானது. பேச்சும் மூச்சும் சரிவிகித சமானமாக கலந்து மந்திரஸ்தாயியில் அவரது குரல் ஒலிக்கும். சுவாரசியமாக பேசுவதில் அவர் சமர்த்தர் என்பதை தற்போது தான் ஸ்ருதி டிவியின் பதிவுகள் வாயிலாக  நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரது எழுத்து அப்போதே என்னை கவர்ந்தது. ''அப்பாவின் வேட்டி'' என்ற சிறுகதை இன்றும் நினைவில் நிற்கும் கதை. வானம் வசப்படும் / மானுடம் வெல்லும் போன்ற நாவல்களை படித்த பிறகுதான் அதற்கு முன் நான் படித்த பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் இல்லை எனத்தெரிய வந்தது. சம்பவங்களை சான்றுகளுடன் பின்னி புனைவை அளவோடு கலந்து (அது கூட வாசிப்பின் தடைகளை அகற்றும் பொருட்டு) எழுதப்பட வேண்டும் என்ற நியதியை பிரபஞ்சனே தமிழிலக்கியத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது எனது தாழ்மையான கருத்து.
கல்கி புனைவையே வரலாறு என்று தமிழர்களை நம்பவைத்து விட்டார். கூடவே சாண்டில்யன் மற்றும் ஜெகசிற்பியன் துவங்கி இன்றைய பாலகுமாரன் வரை அதையே இறுக்கமாக பற்றிக்கொள்ள பிரபஞ்சன் அந்த தடைகளை மிக கவனமாக தனது படைப்புகளில் தகர்த்தெறிந்தார்.
ப்ரெஞ்ச் அரசின் மொழிபெயர்ப்பாளாராகவும் முதன்மை நிர்வாகியாகவும் விளங்கிய அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட மானுடம் வெல்லும் / வானம் வசப்படும் இரண்டும் தமிழ் நாவல் பரப்புகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தன. பிரபஞ்சனுக்கு இசையில் அலாதி நாட்டம் உண்டு. காஃபி பற்றியும் அதை அருந்தும் விதம் பற்றியும் அவர் எழுத்துக்கள் மூலமாக அறிந்து கொண்டு எனது பணி நிமித்தம்  தஞ்சை செல்லும் போதெல்லாம் அவர் அறிமுகம் செய்த காபி பேலசில் (Coffee Place - South Ram Pet)  காஃபி அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தேன். ரசனையோடு வாழ பணம் ஒரு பொருட்டல்ல மனமே பிரதானம் என்பதை அவர் வாயிலாகவே பயின்றேன். இந்தவிதத்தில் பிரபஞ்சன் எனக்கு ஒரு ஞானாசிரியர்.
அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்த போது நான் ஆந்திராவின் காளஹஸ்தியிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்ததும் அவர் எழுதிய '' பிரபஞ்சன் மகாபாரதம்'' என்னும் நூலை என் மகனிடம் எடுத்துக்கொடுத்து படிக்கச் சொன்னேன். பிரபஞ்சனுக்கு நான் அஞ்சலி செலுத்திய முறை இதுதான். ஒரு படைப்பாளிக்கு வாசகனாக நான் அளிக்கும் அங்கீகாரமும் கௌரவமும் உயரிய மரியாதையும் அதுவே.



Wednesday, December 12, 2018

மழை (சிறுகதை - 12-12-2018)



சென்னைக்கு மழை புதிதல்ல. ஆனால் இந்த மழை சென்னைக்கு புதிது. தன்னை தொடர்ந்து இழிவு படுத்தும் இந்த ஜனத்திரளை பழிவாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெய்த மழை மக்களின் ஜீவாதாரத்தை புரட்டிப் போட்டது. அடர்த்தியான மழைத்தாரைகள் நகரத்தை கனமாக நனைத்து வைத்திருந்தது. ஈரத்தால் கருத்த சுவர்கள் புதிய கட்டிடங்களுக்குக் கூட பழைமையை கொடுத்தன; காய்வதற்கும் மாறுவதற்கும் பல நாட்களாகும். மரங்களின் கிளைகள் முறிந்து தெருவெங்கும் நிரம்பி நனைந்து நாற்றம் குடலை புரட்டியது. மக்கள் முகத்தில் வறுமையின் நிழல் படிந்திருந்தது. இதற்கு பணம் படைத்தவர்களும் தப்பவில்லை. காரும் பங்களாவும் கிரிடிட் கார்டும் கம்ப்யூட்டரும் சோறு போடாது என்பதை மக்கள் உணர்ந்தார்களா என்பது தெரியவில்லை. வெள்ளம் வடிந்த பின்பும் அதன் பாதிப்பு சற்றும் குறையவில்லை. மழை சென்னை நகரை குப்பையால் அலங்காரம் செய்திருந்தது. அந்த அலங்காரத்தை மாநகராட்சி கலைக்க முயற்சித்து கொண்டுருந்தது. மழை இடைவேளை விட்ட போது போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக அசையாமல் நின்ற நகரத்தை அசைய வைத்தது.  தொலைத்தொடர்பு வசதியும் மின்சாரமும் அவ்வப்போது உயிர் பெற்றன. சில நிமிடங்கள் நீடித்து மரணிக்கவும் செய்தன. ஆனால், இவை அனைத்தும் அவளுக்கும் அவளுடைய குழந்தைகளின் வயிற்றுக்கும் தெரியவில்லை. அப்போது தான் அவளுக்கு நம்பிக்கை தரும்படி ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.

''பல்லாவரம் வரைக்கும் ட்ரெயினில வந்துடுங்க...அங்கேயிருந்து பஸ் பிடிச்சி பம்மல் வந்திட்டீங்கன்னா....குமரன் காலணிக்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும்..ஒண்ணுமே பிரச்சினை இல்லை....4000 கொடுத்துர்றேன்...!

நாலாயிரம்.....நாலாயிரம்.....அந்த நாலாயிரத்தின் மதிப்பு அவளுக்கு மட்டுமே தெரியும். பேசியவனின் குரலை கணிக்கும் ஆற்றலை எட்டாண்டு கால அனுபவம் அவளுக்கு நன்றாகவே கற்றுத் தந்திருந்தது. கணிப்பொறி வல்லுனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியவனின் குரலில் இருந்த அமைதியும் குளிர்ச்சியும் தன் இரண்டு குழந்தைகளையும் தனியே வீட்டில் விட்டு விட்டு கிளம்பும் தைரியத்தை கொடுத்தது.



‘’இதோ பாருங்க கண்ணுகளா...அம்மா வெளியே போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன். மழை பெஞ்சிகிட்டே இருக்கு.....வெளியே போகக்கூடாது...பேசாம டி.வி பார்த்துட்டு இருக்கணும்...சவுண்டை கம்மியா வச்சிக்கணும்...சரியா....!’’

''ஓகேம்மா...நீ போய்ட்டு வா....எத்தனை மணிக்கு வருவே?''

‘’மணி இப்போ என்ன நாலரை...நான் எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்...வரும் போது டிஃபன் வாங்கிட்டு வர்றேன்...கதவை யார் வந்து தட்டினாலும் திறக்கக்கூடாது...சரியா?’’

வடிவு இருந்தால் இவளுக்கு இந்த பிரச்சினையே இல்லை. அவளுக்கும் இவளுடைய தொழில் தான். ஆனால் தற்போது காச நோயால் பாதிக்கப்பட்டு தாம்பரம் சானிடோரியத்தில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறாள்.

மழை சைதாப்பேட்டையின் அந்த நெருக்கமான குடியிருப்பை  சேறும் சகதியுமாக்கியிருந்தது. வழக்கத்திற்கு மாறாக கவனமாக கால் பதித்து மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் ரயில் நிலையத்திற்கு வந்தாள். மழையின் காரணமாக ரயில் சேவை குறைக்கப்பட்டிருந்தது. அதனால் ஸ்டேசனில் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்படியாவது இந்த நாலாயிரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும். பணப்பையை திறந்து பார்த்த போது பணம் வெறும் நாற்பது ரூபாய் மட்டும் தான் இருந்தது. அதுவும் கூட அஞ்சரைப் பெட்டியை தோண்டித்துருவி சில்லரையாக எடுத்தது. ரயில் வரக் காத்திருந்தாள். ஏழு மணிக்குள் திரும்பிட முடியுமா? அல்லது அந்த கொடுங்கையூர் சம்பவம் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று அச்சம் ஒருபுறம் மிரட்டியது. மின்சார ரயில் இன்னும் வரவில்லை.



ஒருமுறை கொடுங்கையூரில் இருந்து வந்த அழைப்பை ஏற்று சென்றாள். கதவை தட்டியதும் நவநாகரீக இளைஞன் திறந்தான்.

நளினமாக வரவேற்று '' என்ன சாப்பிடுறீங்க...டீ....காஃபி?''

''இப்போ எதுவும் வேணாம்...கொஞ்சம் தண்ணி மட்டும் தர்றீங்களா?''

''ஓ...ஷ்யூர்....''

தண்ணீர் குடித்தது மட்டும் தான் நினைவில் இருந்தது. நினைவு திரும்பியபோது அவள் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டிருந்தாள். அந்த இளைஞனோடு அவனது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அவளை தின்று தீர்த்திருந்தனர். அதோடு மட்டுமின்றி அவளுடைய கைப்பையில் வைத்திருந்த முன்னூறு ரூபாயையும் திருடியிருந்தனர். உடலெங்கும் ஊசி வைத்து குத்துவது போன்று வலி. எழுந்து நிற்க முடியாதபடி மயக்கம் அவளை தள்ளியதற்கு காரணம் பசியா அல்லது தண்ணீரில் கலக்கப்பட்ட மருந்தா என்று தெரியவில்லை. அவளுடைய பசி அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்த பசியை அவளால் தாங்கமுடியவில்லை.

அந்த பெரிய வீட்டின் நடுவே நான்கு இளைஞர்கள் ஆடை அகன்று உணர்ச்சியற்று கிடந்தனர். அருகே ஊசிகள் மருந்து குப்பிகள் ஒழுங்கற்று கிடந்தன. போதை மருந்து பயன்படுத்துபவர்கள் போலும். மணி என்ன? குழந்தைகள் என்ன செய்துக்கொண்டிருப்பார்கள்? வடிவு இருக்கிறாள் என்றாலும் இரவு முழுதும் தனியே அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வடிவுக்கு வாடிக்கையாளர் வந்தால் குழந்தைகளை எங்கே விட்டு செல்வாள்? இதற்கு நேரமில்லை. முதலில் இங்கேயிருந்து தப்ப வேண்டும். காசில்லாமல் எப்படி எங்கே செல்வது? கொடுங்கையூரிலிருந்து சைதாப்பேட்டைக்கு நடக்கவா முடியும்? ஆடையை உடுத்திக் கொண்டு கதவை திறந்த வேளையில் வீட்டின் வாசலுக்கு ஒரு டாக்சி வந்து நின்றது. என்ன இது....இன்னொருவன் வேறு வருகிறான்....யார் இவன்?

வந்தவன் இவளைப் பார்த்து ''யாரு நீங்க...இங்க என்ன பண்ரீங்க?

அதுவரை நிதானத்தில் இருந்தவள் உடைந்து அழுதே விட்டாள்.

''அண்ணே...என்னை கூட்டிட்டு வந்து ஏமாத்திட்டாங்கண்ணே....ஒரு ஆளு மூவாயிரம்னு சொல்லி போன் பண்ணி வரச்சொன்னாங்க....வந்தா குடிக்கிற தண்ணில ஏதோ கலந்து கொடுத்து நாலு பேர் என்னை.....அண்ணே...எனக்கு பசிக்குது...மயக்கமா வருது...காசும் தரலை...பையிலிருந்த முன்னூறு ரூபாயையும் திருடிக்கிட்டாங்க...ஒரு டீ வாங்கி தர்றீங்களா?''

வந்தவர் கண்களில் நீர் திரளக்கண்டாள். வீட்டினுள்ளே எட்டிப்பார்த்தார்.

''நாய்களா...நாய்களா...வீட்டுல அக்கா தங்கச்சிகளோட பொறக்கலை....கேவலம் உடம்பை விக்கிறவகிட்ட திருடியிருக்கீங்களேடா...உங்களுக்கு காசுக்கு என்னடா கொறச்சல்....பன்னிகளா.....! இந்த மேதைகளை பார்க்க அமெரிக்காவிலிருந்து ஆளுக வர்றாங்கலாம்...கம்பெனி கார் அனுப்பி மகாபலிபுரத்துல விடச்சொல்லி அனுப்புனாங்க...இவனுக எந்திரிக்க மாட்டானுக போலருக்கே....ஊசி வேறயா...சரிதான்...நீங்க வாங்கம்மா போகலாம்....!

''அண்ணே...கார்ல தண்ணி வச்சிருக்கிறீங்களா....இங்கே தண்ணி குடிக்க பயமா இருக்கு...''.

''கிச்சன்ல கேன் வாட்டர் இருக்கும் பாருங்க...அதை குடிங்க....தைரியமா போங்க....நான் இருக்கேன்....''

நாகரீகமாக வடிவமைக்கப்பட்ட கிச்சனின் மூலையில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு டம்ளர் குடித்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. ஜன்னல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் இது கண்டிப்பாக சாத்தியம் தான். செய்வதை செய்துவிட்டு வந்தாள்.

டிரைவர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் இட்லியும் டீயும் வாங்கி தந்து பஸ் செலவுக்கு முப்பது ரூபாய் பணமும் கொடுத்தார்.

மறுநாள் தொலைக்காட்சியில் அதுதான் விவாதப்பொருள். கணிப்பொறி விற்பன்னர்களிடையே பெருகி வரும் தற்கொலைகள். பணி அழுத்தம் காரணமா?

விவாதத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ''இந்த இளைஞர்களின் தற்கொலைக்கு ஈ.வே.ரா கும்பல் தான் காரணம், அவர்களுடைய நாத்திக பிரச்சாரம் தான் காரணம் என்றும், திராவிடர் கழகம் ''இவர்கள் கணிப்பொறி அறிஞர்களானதற்கே பெரியார்தான் காரணம் என்றும், இவர்கள் கணிப்பொறி அறிஞர்களானதற்கு பெரியார் தான் காரணம் என்றால் கர்னாடகம், கேரளம், ஆந்திரத்தில் கணிப்பொறி அறிஞர்கள் உருவானதற்கு யார் காரணம் என்று நாம் தமிழர் கட்சியும் இந்த துர்மரணத்திற்கு காரணம் மத்தியில் நடைபெறும் மோடியின் ஆட்சியே காரணம் என்று காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் வாதிட்டு சிற்றுண்டி சாப்பிட்டு சிறுநீர் கழித்து விட்டு கலைந்தனர். இவள் வாய்விட்டு சிரித்தாள். அப்படி எதுவும் இன்று நடந்து விடக்கூடாது.



பாடகியாகியே தீருவது என்று திருவையாற்றை விட்டு ஓடிவந்த போது தான் சினிமா உலகின் நீள, அகல, ஆழங்கள் தெரிந்தது . வெளியே பருண்மையாக சொர்க்கம் போன்று காட்சியளிக்கும் இந்த நகரத்தின் பின்னால் ஒரு கொடும் நரகம் ஒளிந்து கொண்டிருந்ததையும்  அதன் பரிமாணம் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் அவள் உணர்ந்தாள். இந்த சொர்க்கத்தை இயக்கும் முதன்மை ஆற்றல்கள் அந்த நரகத்திலிருந்தே தோன்றுகின்றன. அவள் கற்ற கானடாவும் பீம்ப்ளாசும் தேவகாந்தாரியும், தி.ஜானகிராமனும் கு.ப.ராஜகோபாலனும் ஆதவனும் எதுவும் செல்லுபடியாகாது என்றும் இந்த நரகத்தில் .என்றும் விலை போகக்கூடிய ஒரே ஒரு பொருள் உடல் ஒன்றே என்பதை வடிவு தான் புரியவைத்தாள். வக்ரம் பிடித்த ஆண்களின் தினவுக்கு தீனி போட்டால் வயிற்றுக்கு உணவும் உடுத்த ஆடையும் கிடைக்கும் என்னும் வடிவின் பொருளியல் சூத்திரங்களை எளிதாக அவளால் உள்வாங்க முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லை. வடிவு நடிகையாகும் கனவோடு சென்னை வந்தவள். இப்போதும் நடிப்பாள். வெட்கப்படுவது போன்றும் உடல் சிலிர்ப்பது போன்றும் வாடிக்கையாளர்களிடம் நடிப்பாள். அந்த நடிப்புக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. ஆனால் அவளே அரண்டு போன சம்பவம் ஒன்றும் நடக்கத்தான் செய்தது.



அவளுடைய வீட்டிற்கும் வடிவின் வீட்டிற்கும் நடுவே ஒரே ஒரு கதவுதான் தடுப்பு.  வீட்டின் உரிமையாளர் ஒரே வீட்டை இரண்டு பிரிவாக்கி வாடகைக்கு விட்டிருந்தார். ஒரு நாள் பகல் வேளையில் வீட்டைப்பிரிக்கும் அந்த கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்தாள். வீட்டிற்குள் நுழைந்த போது வடிவு ஒரு துண்டை போர்த்தியபடி நிற்க அவளுக்கு எதிரே ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் கைகளால் முகத்தை மூடியபடி அழுது கொண்டிருந்தான்.

''என்னடி ஆச்சு...?"

''தெரியலைடி...போன் பண்ணிட்டுத்தான் வந்தான்...வந்து ஒக்காந்ததும் நான் ரெடியானேன்...வீட்டின் குறுக்கே நடந்து காட்டச்சொன்னான்...நடந்தேன்...பாத்துட்டு அழுகுறான்...எனக்கே ஒண்ணும் புரியலை....''

மெதுவாக அவன் முகத்தை நிமிர்த்தினாள்....''யாருப்பா நீ....எதுக்கு இங்கே வந்தே....ஏன் இப்படி அழுகுற...?''

''அக்கா...அவங்க நடந்தப்போ அவருடைய உடல் அதிர்வதை நான் பார்த்தனன்...சல்லிக்கு உடம்பு காட்டும் இவர்களுக்கே இப்படி என்றால் என் தங்கச்சி எப்படி துடிச்சிருப்பாள்...செத்துருப்பாளே....ஐயோ...குனிந்த தலை நிமிராமல நடக்கும் அவளை இறுதிப்போரின் போது சிங்கள ராணுவம் இப்படித்தான் நடக்க சொன்னதாம்....நாங்கள் எங்கட காணியையும் வீட்டையும் தானே கேட்டோம்...அதற்கா இந்த தண்டனை....என் தாய்க்கும் இதே தானே நடந்தது...அமைதியை நிலை நாட்டுறோம்னு சொல்லிக் கொண்டு இங்கேயிருந்து வந்த ராணுவமும் அதே தான் செய்தது...இவர்களுக்கும் அவர்களுக்கு என்ன வித்தியாசம்....! நான் இவரிடம் உல்லாசம் அனுபவிக்க வரவில்லை....மன்னிச்சிடுங்க....நம்ம வீட்டில பெண் மக்கள் உண்டுமா?



அவன் முன் மண்டியிட்டு அவனை தோளில் சாய்த்தபடி கேட்டாள் ''ஈழமா....?''



''ஓம்...கடைசிப்போரில் உயிர் தப்பி வந்தனன்...எட்டு வருசமாச்சு....இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்குறேன்...அக்கா...நம்ம வீட்டில பெண் மக்கள் உண்டுமா?''

'ஒண்ணுல்ல ரெண்டு இருக்கு...ஏன் கேக்குற?''

''அந்த பிள்ளைகளுக்கு கொலுசு வாங்கி கொடுங்கோ...தங்கச்சிக்கு கொலுசு என்டால் ரொம்ப பிடிக்கும்...அதிலும் மணி இல்லாத ஓசை எழுப்பாத கொலுசு என்றால் ரொம்ப பிடிக்கும்....நடக்கும் போது கூட மற்றவர்கள் கவனத்தை தான் திசை திருப்பக்கூடாது என்று கவனமாக இருப்பாள்...அவளுக்கா இப்படி...ஐயோ...அவமானத்தில் கூனிக்குறுகி நின்னிருப்பாளே....பையிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து கொடுத்தவன் உடனடியாக வெளியேறினான். வடிவு முதல்முறையாக உண்மையாக அழுதாள்.



ரயில் வழக்கத்தை விட கூட்டமாக இருந்தாலும் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் நிற்க இடம் கிடைத்தது. ரயில் கிளம்பவும் மழை பெய்யத் துவங்கியது.

தான் எடுத்த முடிவு சரிதானா என்ற சிந்தனை எழுந்த நேரம் ரயில் கிண்டியை வந்தடைந்திருந்தது. ஜன்னலோரம் அமர இடம் கிடைத்தும் அவள் அமரவில்லை. சூழலின் அசுத்தம் அவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. கடலைத்தோளும் காகிதங்களும் மழை நீரில் ஊறி நாறிக்கொண்டிருந்தது. அசுத்தம் இந்த நரகத்தின் மூச்சுக்காற்று போலும்.



பல்லாவரம் வரும் போது மழை நின்று தூறல் தூறிக்கொண்டிருந்தது. நடப்பதற்கு சிரமமில்லை. ஸ்டேசனை விட்டு வெளியே வந்து எதிர்ப்புற சாலைக்கு மாறி பஸ் பிடித்து பம்மல் வந்து இறங்கியதும் வானம் மீண்டும் இருட்டத் துவங்கியது. ஆனால் அவளுக்கு நம்பிக்கை வெளிச்சம் இருந்தது.



அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடிக்க வேண்டும். மூன்று நாள் தொடர்ந்து பெய்த மழையின் தீவிரம் குறைந்ததாலோ என்னவோ மக்கள் வெளியே நடமாடத் துவங்கியிருந்தனர். ஆட்டோவிற்கு கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.

'குமரன் காலணி போகுமா?'

''குமரன் காலணி இல்லைங்க....குமரன் நகர் தான் இருக்கு''

''ஆமா...அதே தான்....!"

''இருவது ரூவா...சில்லரையா இருக்கா...இப்போதான் வண்டிய எடுத்துருக்கேன்...கையில் ஒரு பைசா கிடையாது''

''இருக்கு...வண்டிய எடுக்கிறீங்களா சீக்கிரமா போகனும்''

''இரும்மா...இன்னும் ரெண்டு பேராவது வரட்டும்...உன்னை மட்டும் குமரன் நகர் வரைக்கும் கூட்டிட்டி போகணும்னா நூறு ரூவா ஆகும்...பரவாயில்லையா?'

''நூறு ரூபாயா....என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே....''

''அப்போ கொஞ்ச நேரம் ஒக்காரு...''



மாலை ஆறு மணி நள்ளிரவு மாதிரி காட்சியளித்தது. பேய் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவளோடு இன்னும் மூன்று பயணிகள் சேர்ந்ததும் வண்டியை நகர்த்தினார் ஆட்டோ ஓட்டுனர். வழியில் அனைவரும் இறங்கிக் கொள்ள இறுதியாக அந்த புறநகர்ப் பகுதியின் பொட்டலில் அவளை இறக்கி விட்டார்.

''இது தாம்மா குமரன் நகர்...இங்கே ஒன்னும் அங்கே ஒன்னுமா வீடுகள் இருக்கும்....அட்ரஸ் இருக்கா...இருந்தாலே கண்டுபிடிக்கிறது கஷ்டம்....பார்த்து போங்க....''

ஆட்டோ கிளம்பவும் மழை கொட்டவும் சரியாக இருந்தது.



இது என்ன இடம்....நான் எங்கே இருக்கிறேன்...கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வீடுகளும் வெளிச்சமும் இல்லையே....என்று யோசித்தவள் அவனை செல்போனில் அழைத்தாள்.



''ஹலோ....நான் குமரன் நகர் வந்துட்டேன்...உங்க வீடு எங்கே இருக்கு.....?''''

'குமரன் நகரா...நான் குமரன் காலணி தானே சொன்னேன்....நீங்க ஏன் அங்கே போனீங்க...?

''ரெண்டும் வேறயா.....?''

''ஹலோ இது பம்மல்லேயிருந்து அனகாபுத்தூர் போற வழியில இருக்கு....நீங்க எங்கே இருக்கீங்க இப்போ?''

''தெரியலையே....கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடே தெரியலையே....நான் எங்கே இருக்கேனு எனக்கே தெரியலை....நீங்க என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணி கூட்டிப்போக முடியுமா?''

இணைப்பு துண்டிக்கப்பட்டது.



இருட்டு மிரட்டியது. அவளுக்கு அவளுடையே கைகளே தெரியாத அளவிற்கு நெருக்கமாக விழுந்த மழைத்தாரைகள் நிலத்தை விட அவளை மூர்க்கமாக தாக்கியது. ஒதுங்கி நிற்க இடமில்லை. வெளிச்சமும் இல்லை.  சில மணித்துளிகளில் அந்த பிராந்தியம் முழுக்க நீரால் நிரம்ப சாலை எது திசை எது என்று புரியாமல் மொபைலை கைப்பையால் மறைத்துக் கொண்டு மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்து தோல்வியடைந்தாள்.

இப்போது திரும்பிச்செல்ல முடியுமா...மழை நீர் கணுக்கால் வரை ஏறியிருந்தது. எந்த திசையில் செல்வது....அந்த இடத்தில் அவளைத்தவிர யாருமே இல்லை.

மீண்டும் அவனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது இந்த முறை மணியடித்தது.

''ஹலோ...'

ஹலோ...ஹலோ....எனக்கு இங்கே வழி தெரியலை.....நீங்க சொல்லித்தானே நான் வந்தேன்....பேய் மழை கொட்டுது....ஒதுங்கக்கூட இடமில்லை...பயமா வேற இருக்கு.. ஹலோ''''



எதிர்முனையில் வெடிச்சிரிப்புடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.



''ஐயோ...நான் எங்கே போவேன்....திக்கு திசை எதுவும் தெரியலையே.....இங்கேயிருந்து பம்மல் எவ்வளவு தூரம்....நடக்க முடியுமா...அதுவும் இந்த மழையில்....கையில் காசு வேற இல்லையே....என் பிள்ளைகளுக்கு சாப்பாடு....பசி பொறுக்காதுகளே ரெண்டும்....வீட்டில பால் பிஸ்கெட் எதுவுமே இல்லையே ...ஐயோ....''

சிறிது தூரம் நடந்தவளுடைய செருப்பு வார் அறுந்து போக அடிவயிற்றிலிருந்து அலறினாள் '''ஐயா...புண்ணியவான்களே....நீங்க ஏமாத்துறதுக்கு இந்த பாவி தானா கிடைச்சேன்....''

அதே வேளையில்,  சென்னை நகரம் முழுமைக்கும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு அந்த இருண்ட வீட்டின் சிறிய அறையில் தாயுமின்றி தைரியமுமின்றி அந்த குழந்தைகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி  கந்தசஷ்டி கவசத்தை உச்சரித்துக் கொண்டிருந்தன.





காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்.....



                                                                                                                                       (முற்றும்)