Monday, August 5, 2019

மரைக்காயர் வீட்டு தொலைபேசி (சிறுகதை)


கடலாடி என்னும் அந்த கடற்கரை ஓர கிராமத்தின் நெடிய மாடவீதியில் வெயில் மட்டுமே நிறைந்திருந்தது.  உப்புக்காற்றின் பிசுபிசுப்பு மக்களின் உடலையும் உயிரையும் வருத்திய உச்சி வேளை. வெயிலினால் வெளிச்சத்தாலும் வெப்பத்தாலும் துவண்டு போயிருந்தது  வீதி . ஆடுமாடுகள் கூட வெளியே அலையாமல் நிழலில் ஒதுங்கின. அவ்வப்போது காற்று வீதியின் இருமுனைகளிலும் இருந்த முருங்கைமரத்தின் இலைகளை அசைத்துப்பார்த்தது. கருமை நிற நாய் ஒன்று எங்காவது உணவு கிடைக்காதா என்று ஏங்கி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று வாசனை பிடித்து சென்றது.
வீதியின் மையத்தில் இருந்த அந்த பெரிய காரை வீட்டின் முன்னால் பந்தல் வேய்ந்து கொண்டிருந்த இருவரைக் கடந்து வீட்டின் படிக்கட்டில் கால் வைத்த வெள்ளை நிற துப்பட்டியில் தனது மெல்லிய உடலை மறைத்துக்கொண்டு சென்ற மரியம் பீவியை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.

''ஏய் யாரும்மா அது...சொல்லாம கொள்ளாம''
மரியம் பீவி ஒரு கணம் நின்று குரல் வந்த திசையை நோக்கி ''மரியத்தை போக வேணாம்னு சொல்ற ஆம்பள இந்த கடலாடில யாருடா இருக்கா?''
பந்தல் வேய்ந்து கொண்டிருந்த மாரிச்சாமி ''ஐய்யயோ...அத்தை நீங்களா...நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன்''

''அட நாயே...உங்காத்தா பெத்து போட்ட உடனே நீ பாத்த முதல் மூஞ்சியே என்னோடது தாண்டா...நீ என்னைப்பாத்து யாருன்னு கேக்குற...ம்?''
ஏதோ ஒன்று இயல்பு நிலைக்கு மாறாக நடக்கிறது என்பதை உணர்ந்த தவசி வெளியே ஓடி வந்தார். மரியத்தை கண்டதும் மிகவும் பவ்யமாக ''வா அக்கா'' என்றார்.
''மருவாதி இல்லாத இடத்தில கால் வைக்க மாட்டா இந்த மரியம்....தெரிஞ்சுக்கோ'' என்றவாறு வீதியிலிருந்து வீட்டினுள் நுழைய ஏற வேண்டிய படிகளில் ஏறி மூன்றாவது படியில் நின்று திரும்பி திண்ணையில் அமர்ந்தாள். தன்னை யாரென்று மாரிச்சாமி கேட்டதை மரியத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  மூச்சு வாங்க அமர்ந்து வலது காலை இடது தொடைக்கு கீழே போட்டு ஒரு காலை முன்னும் பின்னும் ஆட்டி கொண்டிருந்தாள்.

தவசி கண்களாலேயே மாரிச்சாமியிடம் 'என்னடா இது' என்றார். அவனும் கண்களாலேயே 'தெரியாம நடந்து போச்சு' என்றான்.
அமைதியாக இருந்த சூழலை கிழித்தது மரியத்தின் தீர்க்கமான குரல்                ''டேய் தவசி....நேத்து மரைக்காயர் வீட்டுக்கு போன் வந்துச்சு''
தவசி தனது முழு கவனத்தையும் மரியத்தின் மீது செலுத்தினார்                          'சாதிக் பேசினானா?''
''ம்ம்...இந்த பெருநாளுக்கு வர்ரேம்னு சொன்னான்''
''ரொம்ப சந்தோசம்க்கா''
''நீ என்ன பண்ற...நேரா கமுதி போயி காதர்மைதீன்கிட்ட முடிவா என்ன சொல்றான்னு கேட்டுட்டு வந்துடு...இருவத்தேழாங்கிழமை அன்னைக்கி நிச்சயம்...பெருநாள் முடிஞ்சு கல்யாணம்''
தவசி எதுவும் பேசாமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்.
''என்னடா பதிலே பேசாம நிக்கிற?''
''அக்கா., நானும் பலதடவை ஒங்கிட்ட சொல்லிட்டேன்...இதுல ஜாயிராவுக்கு விருப்பமில்லாத மாதிரி தெரியுது''  என்று இழுத்தார்.
''நானும் காதரும் முடிவு செஞ்ச பின்னாடி இவ யாரு நடுவுல?''
''அக்கா...காதரு நம்மோளோட பொறந்தவன்...நம்மளோடயே வளர்ந்தவன்..ஆனா ஜாயிரா அப்படியா... வெளியே இருந்து வந்தவ...அதுவும் போக என்ன இருந்தாலும் பெத்தவள்ல..."
''பெத்தாளா...எப்பிடி...இல்லை எப்படிங்கறேன்...முட்டை போட்டு குஞ்சு பொரிச்சாளா?''
மரியம் எரியும் கேள்விக்கணைகள் எப்போதும் இப்படித்தான். பெரும்பாலும் சராசரி மனிதமனத்தின் ஊகங்களுக்கு அப்பாற்பட்டவை.  ஆனால், இந்த கேள்வியை தவசி எதிர்பார்க்கவில்லை. எனவே தவசி திகைத்துத்தான் போனார். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று விழித்தார்.
''என்னக்கா கேள்வி இது...இப்போ புள்ளைக்கு கல்யாணமாகி மாப்பிள்ளையோட இங்கேயே இருந்தா அது ஒரு மாதிரி..அதைவிட்டுட்டு கல்யாணம் பண்ணி இவளை இங்கே விட்டுட்டு அவன் அரேபியால ஒக்காந்துக்கிட்டான்னா...அதுனால யோசிப்பா போலருக்கு'' என்று சமாளித்தார்.
''ஏலேய்...காதரு இந்த நாய இழுத்துக்கிட்டு வந்தப்ப இருக்க வீடு, உடுத்த துணிமணி திங்க சோறு கொடுத்தது நானு..இன்னைக்கு என் கூட சம்பந்தம் பண்ண கசக்குதா அவளுக்கு...?"
''அப்போ நாசர் மாமா செஞ்சதை ஞாயம்னு சொல்றியா....70வயது கிழவனுக்கு 17வயசு பொண்ணை கட்டி வைக்கிறது நியாயமா அக்கா...நீயே சொல்லு...அந்த புள்ளைக்கு ஒரு ஆசை இருக்காது...பணக்காரன், அரசியல்வாதி, நெறையசொத்து இருக்குன்னா புள்ளைய தூக்கி கொடுத்துர்றதா...''

''அல்லா எழுதின எழுத்துன்னு போகவேண்டியது தான்...அதுக்குன்னு பெத்தவங்களை விட்டுட்டு ஒடி வர்றதா...ஏலேய்...அவன் இவளை இழுத்துட்டு வரும் போது அவளுக்கு பதினேழு வயசு...அவனுக்கு இருவது வயசு..கையில சோலி மயிரு எதுவும் கிடையாது....நான் தான் அவனை கறிக்கடையில கல்லாவுல நிக்க வச்சேன்...ஆளாக்கி விட்டேன். இன்னைக்கு வீடு வாசல் வண்டி வாகனம்னு வந்ததும் பழசெல்லாம் அவனுக்கு மறந்துடுச்சில்லே...!''

''நான் போயி பேசுறேங்க்கா...'' இப்போதைக்கு இதற்கு முற்றுபுள்ளி வைப்பதே உத்தமம் என்ற முடிவுக்கு தவசி வந்து விட்டார்.
''ஆமா எங்கே ஒம்பொண்டாட்டி...வீட்டுக்கு மனுச மக்க வந்தா உள்ள வாங்கன்னு கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி குடுக்க  மாட்டாளா... ஏய்...அடியேய்...அம்சு....அம்சவே...ணீ....''குரல் வீடு முழுக்க எதிரொலித்தது.

மரியத்தின் குரல் கேட்ட மாத்திரத்தில் அடுக்களையிலிருந்து சொட்டும் வியர்வையை முந்தானையில் துடைத்துவிட்டு பதட்டமாக தோளை சுற்றி மறைத்துக்கொண்டு மரியாதையுடன் ''கும்புடுறேன் மதினி'' என்றாள் அம்சவேணி, தவசியின் மனைவி.

மரியம் ஏற இறங்க பார்த்தபடியே '' என்னடி...வீட்டுக்கு மனுச மக்க வந்தா உள்ள வாங்க கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி குடுக்க மாட்டியா...ம்?''

''ஐய்யயோ அப்படி இல்லை மதினி...மதியம் சம்பந்தகாரக வர்றாக...அதுனால அடுக்களையில வேலையா இருந்தேன்...நீங்க வந்ததை கவனிக்கலை...ரசம் தாளிச்சிட்டிருந்தேன்...''

''ரசம் தாளிச்சியா...திமிரு...முத்துப்பிளச்சி வகையறா கொத்துச்சாவி இடுப்புல தொங்குதுல அந்த திமிரு..''
''வேணும்னா கொத்துச்சாவியை நீங்களே வச்சிக்கங்க மதினி...என்னெருந்தாலும் நீங்க பொறந்தவுக...நான் புகுந்தவ தானே..."
''ஏலேய் தவசி என்னடா ஒம் பொண்டாட்டி எதிர்பாட்டு பாட்றா''
சூழல் தீவிரமாக திசைமாறுவதைக் கண்ட தவசி மரியத்தின் கவனத்தை திசைதிருப்பினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று உணர்ந்தார். அதற்கு சரியான ஆயுதம் குழந்தைகள்.
'''ஐயய்யே...என்னக்கா நீ ஒண்ணு அவளோட சரிக்குசரி மல்லுக்கட்டிக்கிட்டு...சின்னவன் வந்திருக்கான் கூடவே மருமக வந்திருக்கு...பேத்தி வந்துருக்கு...போய் புள்ளைகள பார்த்து ரெண்டு நல்லவார்த்தை சொல்லிட்டு போவியா...அதை விட்டுட்டு இவகிட்ட நின்னு மல்லுகட்டிட்டு...''
கணவனின் நோக்கத்தை புரிந்து கொண்ட அம்சவேணி ''உள்ள வாங்க மதினி...இருந்து சாப்டுட்டு தான் போகணும்'' என்றாள்.
''மருவாதி இல்லாத வீட்ல கால் வைக்க மாட்டா இந்த மரியம்''
''ஐயோடா...என்ன மரியாதை கொறைஞ்சு போச்சாம் இப்போ ஒங்களுக்கு...வாங்க மதினி''
''சின்னவன் இப்போ எங்கே வேலைல இருக்கான்?''
''அமெரிக்காவுல'' என்றவர் தெரியாமல் உளறி விட்டோமே என்று தவசி உணரும் முன் ''அது எங்கேடா இருக்கு அமெரிக்கா?'' என்றாள் மரியம்.

மரியம் பீவிக்கு இப்போது பூகோள பாடம் எடுப்பது சாத்தியமில்லை. எனவே, ஏதாவது சொல்லி சமாளிப்பது தான் சாலச்சிறந்தது என்று ''அது இங்கதாங்க்கா இருக்கு...நம்ம விருது நகர்  பக்கத்துல மல்லாங்கிணறு இருக்குல்ல அங்கேயிருந்து கிழக்காம மூணு மைல்ல இருக்கு...இங்க பக்கதில்ல தான்''
''அதுதானே பார்த்தேன்....எல்லோரும் என்னை மாதிரி புள்ளைய அரேபியாவுக்கு அனுப்ப முடியுமா...?
''அது சரிதான்க்கா..உன்னை மாதிரி யாராலும் அனுப்ப முடியாது''
முழங்காலில் கையை ஊன்றியபடி படியேறி வீட்டினுள் நுழைந்தாள்.
''சமுத்துரம்...ஏய் சமுத்துரம்...சமுத்துர பாண்டி....''
சத்தம் கேட்டு தவசியின் இளையமகன் சமுத்திரபாண்டியன் வந்தான்....'அத்தேய்'...என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான்.
சமுத்திர பாண்டியனின் மனைவி செல்வி வந்து கைகூப்பி வணக்கம் சொன்னாள்.
அந்த பெரிய வீட்டின் நடுவே சதுர வடிவில் உயர்ரக இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மூலையிலும் ஜாடிகள் பிளாஸ்டிக் பூக்கள் நிரம்பி செயற்கையாக பணக்காரத்தனத்தை காண்பித்துக் கொண்டிருந்தன.
இரண்டு இருக்கைகள் சந்திக்கும் மூலையில் கீழே அமர்ந்து கொண்டாள் மரியம்.
'அத்தே...மேலே ஒக்காருங்க அத்தே...'
'இருக்கட்டும் சமுத்திரம் இது தான் எனக்கு வசதி...''
''எப்படி இருக்கீங்க அத்தே...''
''அது கெடக்கட்டும்....நேத்து மரைக்காயர் வீட்டுக்கு போன் வந்துச்சி....''
''மச்சான் வர்றாரா...? ''வியப்புடன் கேட்டான் சமுத்திரம்.
''ஆமா...இந்த பெருநாளைக்கு வர்றேன்னு சொன்னான்...அவனோட சினேகிதகாரன் ஒருத்தன் வட நாட்டுக்காரனாம்..அவனோட ஊருல இருந்து ரெண்டு பனாரஸ் பட்டுச்சேலை கொண்டாந்து சாதிக் நீ இதை கொண்டு போயி உன்னோட அம்மாக்கு குடுன்னு குடுத்தானாம்...இவன் என்ன சொன்னான் தெரியுமா?''
''என்ன சொன்னாரு?''
''அம்மா உனக்கு மாம்பழக்கலர் தானே பிடிக்கும் அதை நீ எடுத்துக்கோ சொல்லிட்டு...இன்னொரு சேலையை யாருக்கு கொடுக்கப் போரேன்னு சொன்னானு தெரியுமா?'' குரல் ஏற்ற இறக்கமாக ரகசியம் பேசுவது போல் தனது கழுத்தை சமுத்திரத்தை நோக்கி நீட்டினார் மரியம் பீவி. சமுத்திரமும் முன்வந்து அந்த செய்தியை ஆவலாய் பெற வந்தவன் ''ஜாயிரா சித்திக்கு தானே?''  என்று சொல்லிவிட்டு ஒரு வெடிச்சிரிப்பு சிரித்தான்.
''அடி கழுத...எல்லா பயபுள்ளைகளும் ஒரே மாதிரி தான் இருக்கு...அது போகட்டும் ஏங்கண்ணு...நீ பள்ளிக்கூடத்துக்கு பஸ்ல  போறதுக்கு அட்டை தானே கொண்டு போவே?''
''எது...பஸ்பாஸை சொல்றீகளா?....ஆமா...அத்தை...பஸ்பாஸ் அட்டை மாதிரி தான் இருக்கும்''
''எம்மகனுக்கு அதெல்லாமில்ல...வீட்டுக்கு வந்த ஏட்டையா சொல்லிப்புட்டாரு...இதோ பாரு மரியம்...ஒம்மகன் புசுக்கு புசுக்குன்னு அரேபியா போய்ட்டு வருவான் போல தெரியுது...அட்டை போட்டு அரசாங்கத்துக்கு கட்டுபடியாகாது...புஸ்தகமா போட்டு தர்றோம் வந்து வாங்கிட்டு போகச்சொல்லுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு''
குழம்பிய முகத்துடன் செல்வி ''வாட்ஸ் தட் சாம்?' என்றாள்.
சமுத்திரம் இடது கை நடுவிரலால் நெற்றியின் மையத்தில் தேய்த்துக் கொண்டு சன்னமான குரலில் '' பாஸ்போர்ட்...பாஸ்போர்ட்' என்றான்.
''பாப்பா என்ன கேட்குது?''
''அது ஒண்ணுமில்லை அத்தை நீங்க சொல்லுங்க...''
''அப்புறம் அரேபியாவோட ராசா அவரே கையெழுத்து போட்டு நீங்க இங்க வந்து வேல பாருங்க...தங்குறதுக்கு இடம், சாப்பாடு எல்லாம் கொடுத்துர்றோம் அப்பிடின்னு லெட்டர் போட்டாரு''
செல்வி மீண்டும் குழப்பத்துடன் ''வாட் இஸ் திஸ் சாம்?' என்றாள்.
''வொர்க் பெர்மிட்...வொர்க் பெர்மிட்'' என்றான் மெதுவாக.
''பாப்பா என்ன கேட்குது?''
''அது ஒண்ணுமில்ல அத்தை நீங்க சொல்லுங்க''
''பாப்பா எந்த ஊரு? ''
''பென்சில்வேனியா''
''எங்கே போனியாம்?''
''எங்கே போனியாம் இல்லைங்க...பென்சில்வேனியா இது அமெரிக்காவுல இருக்கு''
''அமெரிக்கா....பொல்லாத அமெரிக்கா...இங்கே மல்லாங்கிணறுகிட்ட இருக்கே அது தானே?''
''அதே தான் அத்தை...சட்டுன்னு கண்டுபிடிச்சிடீங்களே...''
''இல்லேனா...மகன அரேபியாவுக்கு அனுப்பிட்டு நா இங்க பொழைக்க முடியுமா?''
இரண்டு பேரின் பேச்சைக்கேட்டு வெறுத்துப் போன செல்வி '' சாம்...திஸ் இஸ் ரிடிகுலஸ்'' என்று வெடித்தாள்.
''பாப்பா என்ன சொல்லுது?''
''ஒண்ணுமில்ல அத்தே நீங்க சொல்லுங்க''
''ஏய் புள்ள...ஒங்க வீட்டுல என்ன சொல்லி வளர்த்தாக...வீட்டுக்கு மனுச மக்க வந்தா ஒரு தேயிலை தண்ணி போட்டு குடுக்கக்கூடவா சொல்லித்தரலை..போயி அரை சக்கரை போட்டு டீ எடுத்துட்டு வா பாப்போம்''
மரியத்தின் பேச்சு புரியாமல் செல்வி சமுத்திரத்தை நோக்கி ''வாட் இஸ் ஷீ ஆஸ்கிங்?' என்றாள்.
சாம் அவளுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். ''ஷீ வாண்ட்ஸ் எ கப் ஆஃப் டீ வித் ஹாஃப் ஷுகர்''
வலது காலை தரையில் ஓங்கி உதைத்து அடுக்களை நோக்கி நடந்தாள்.
சமுத்திரமும் மரியமும் தங்களது உரையாடலை தொடர்ந்தனர்.

அடுக்களையில் நுழைந்ததும் நுழையாததுமாக தனது மாமியாரிடம் ''யாரு அத்தை இந்த லூசு?'' என்றாள்.
பதறிப்போய் மருமகளின் வாயைப்பொத்தினாள் அம்சவேணி.
''பட்டுனு அப்பிடி வார்த்தையை விட்டுராத கண்ணு...ஒங்க மாமாக்கு கேட்டுருச்சினா ஒடஞ்சு போய்டுவாக...எப்படி இருந்த பொம்பளை தெரியுமா...நா வாக்கப்பட்டு வந்தப்ப இவுகள பாத்து பயந்து நடுங்குவேன்...நா மட்டுமில்ல...எல்லோரும் தான்...எங்க மாமனாரோட கூட்டாளிக பத்து பதினஞ்சி பேரு...அவுக யாருக்கும் பொம்பள புள்ளைக கிடையாது...இது ஒண்ணு தான் பொண்ணு அதுவும் போக மத்தவுக எல்லோரும் இளையவுக...அதுனால அவுக எல்லாருக்கும் இவுக மேல அப்படி ஒரு பாசம்...மரியாத...எனக்கு தெரிஞ்சு என்னோட மாமனார்  எல்லார்கிட்டயும் பேசிட்டு கடைசியா ''நீ என்ன சொல்ற மரியம்'' அப்பிடின்னு இவுககிட்ட கேட்டுதான் முடிவு எடுப்பாக...எனக்கு கல்யாணத்துல தாலில நாத்தனார் முடிச்சி போட்டதே இந்தம்மா தான்...யார் குடும்பத்துலயும் நல்லதுன்னாலும் சரி கெட்டதுன்னாலும் சரி...இந்தம்மா தலைமையில தான் நடக்கும்...பந்தல் போடுறவன்ல இருந்து பந்தி போடுறவன் வரைக்கும் அம்புட்டு பேரையும் அடக்கி ஆண்டுபுடுவாக மரியம் மதினி....சாதாரணமான பொம்பளைன்னு நெனெச்சிடாத....ஒன்னோட மாமனாரை பொருத்தவரைக்கும் மரியம் மதினிக்கு டீத்தண்ணி கொடுக்குறது மாசானக்கருப்புக்கு கிடா வெட்டி படையல் போடுறது ரெண்டும் ஒண்ணு தான்...போய் டீ போட்டுக்கொடு...''
''ஆனா பேச்சு வார்த்தைலாம் ஒரு மாதிரி இருக்கே அத்தே''
''மதி பெரண்டு போய்டுச்சி தாயி...ஒரு வீட்டுல ஒரு எழவு விழுகலாம் ரெண்டு எழவு விழுகலாம்..அஞ்சு எழவு விழுந்து கேள்வி பட்டிருக்கியா? அது இவுகளுக்கு நடந்தது... இவங்க பொண்ணை ராமேஸ்வரத்துல கட்டிகொடுத்தாங்க..அவுகளுக்கு மீன் வியாபாரம்...பெரிய படகு வச்சிருந்தாங்க...பிரசவத்துக்கு இங்க வந்தப்போ...குழந்தை இறந்தே பிறந்தது..கொஞ்ச நேரத்துல பொண்ணும் இறந்து போச்சு...அப்பெல்லாம் இப்போ இருக்குற மாதிரி போன் வசதி கிடையாது...இவுக வீட்டுக்காரரு மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு சொன்னப்போ அங்கே இருந்து ஒரு இடி விழுந்துச்சி...இவுக மருமகனை சிலோன் காரங்க சுட்டுட்டாங்கன்னு...கேட்ட மாத்திரத்தில இவுக வீட்டுக்காரர் உசிரு போய்டுச்சி...எதுக்கும் அசராத உன்னோட மாமனாரே இடிஞ்சி போய் ஒக்காந்துட்டாரு...சரின்னு அரேபியாவுக்கு தகவல் சொல்ல இவுக மகன் வேலை பாக்கிற கம்பெனிக்கு போன்போட்டு பேசினா அங்கேருந்து இன்னோரு இடி விழுந்துச்சி...சாதிக் ஏதோ கொலைகேசில மாட்டி அவன் தலையை வெட்டிட்டாங்கலாம். அதுவும் அன்னைக்கு தான் நடந்திருக்கு...என்ன செய்வா ஒரு பொம்பள..ம்ம்ம்...அன்னையோட இந்தம்மாவுக்கு எல்லாம் முடிஞ்சி போச்சி..சரியான மானஸ்தி...யாருக்கிட்டயும் எதுவும் கை நீட்டி வாங்காது...உங்க மாமா தான் இப்போ தான் ஏதோ கவர்மெண்ட்ல ஆதரவற்றோர் பென்சன் தர்றாங்களாமே அதுக்கு ஏற்பாடு பண்ணி உன் மகன் தான் அரேபியாவுல இருந்து பணம் அனுப்புறான்னு நம்பவச்சி சமாளிச்சிட்டு இருக்காங்க...உம் புருசனும் அப்பிடியே தான் பேசுவான்...அந்தம்மா ஒலகமே தனி....புருசன், மகள், பேரன், மருமகன் எல்லாரும் செத்துப்போனது தெரியும்...மகன் செத்துப்போனது தெரியாது...இன்னமும் மகன் பெருநாளைக்கு வர்ரான்னு மரைக்காயர் வீட்டுக்கு போன் வந்துச்சுன்னு சொல்லிக்கிட்டு வாழ்ந்திட்டு இருக்கு...!
செல்விக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
''அவங்ககிட்ட பாத்து பேசு கண்ணு...எனக்காக...மாமாக்காக...சரியா?'' போ...டீய கொண்டு போயி குடு...இருந்து சாப்டுட்டு போகச்சொல்லு''

உடைந்த மனதுடனும் தளர்ந்த நடையுடனும் செல்வி தேநீர் டம்ளரையும் வட்டையையும் சேர்த்து மரியத்தின் முன்னால் பவ்யமாக வைத்து விட்டு சமுத்திரத்தின் அருகே அமர்ந்தாள்.
வீட்டின் பின்கட்டிலிருந்து முகம் கழுவி துண்டால் முகத்தை துடைத்தபடியே தவசி இவர்களை கடந்து சென்றார்.
சென்ற தவசியை நிறுத்தியது மரியத்தின் குரல் ''டேய் தவசி...'
தவசியின் முதுகு கேள்விக்குறி போல் வளைந்து ''அக்கா'' என்றார்.
செல்வி மிரண்டு போனாள். அவளுக்கு தெரிந்த மாமானார் தவசி சராசரி மனிதனல்ல. கரிய நிறம், நெடிய உருவம், விரிந்த தோள்கள், பரந்த மார்பு, கடின உழைப்பாலும் பொறுப்பான உணவுக்கட்டுப்பாட்டாலும் வலுப்பெற்ற தேக்குமர தேகம். தூய வெள்ளை வேட்டியும் மென்மஞ்சள் நிற சட்டையும் அணிந்து நின்றால் கடந்து செல்லும் எவரும் ஒரு கணம் நின்று கைகூப்பச் செய்யும் மறவர்குல மதயானை. அவரே குனிகிறார் என்றால் யார் இந்தப் பெண்?
''நீ என்ன பண்ற...நேரா செங்கப்படை போயி...நம்ம பேச்சி மதினியோட மகன் மாரியப்பன்ட்ட சொல்லி ஒரு தோப்பு பம்புசெட்டோட வேணும்னு சொல்லிட்டு வந்துடு...இந்த பெருநாளைக்கு சாதிக்கு வர்ரேம்னுருக்கான்...இருவத்தேழாங்கிழமை அட்வான்ச போட்டுபுட்டு பெருநாளைக்கு அப்புறம் பத்திரம் போட்டுக்கிருவோம்னு சொல்லிட்டு வந்துடு...பம்பு செட்டு இல்லாத தோப்பு எனக்கு வேணவே வேணாம் கண்டிச்சு சொல்லிட்டு வந்துரு...சரியா?''

''செஞ்சிருலாம்க்கா''

சமுத்திரத்தை நோக்கி ''பேங்கில பணத்தை லட்சலட்சமா வச்சிருக்கிறதுல என்ன பிரயோஜனம் கண்ணு...நீயே சொல்லு...ரூம்ல வச்சா சினேகித காரணுக கடன் குடுன்னு தொந்தரவு பண்றாகலாம்...நேத்து மரைக்காயர் வீட்டுக்கு போன் பண்ணி பேசும் போது சாதிக்கு சொன்னான்''

''நீங்க சொல்றது சரிதான் அத்தே...தோப்பு ஒண்ணு வாங்கி போட்டா...அதுவும் நல்லது தானே''

அந்த நேரம் வீட்டின் மாடியிலிருந்து வந்த வடிவேலு ''மாப்ள ஃபோனை சார்ஜ்ல போட்டீரா...ரொம்ப நேரமா மணி அடிச்சிட்டே இருக்கு...யாரோ ஆண்டர்சனாம் யு.எஸ்னு காட்டுது...போய் பாருங்க'' என்றதும் சமுத்திரம் செல்வி மரியம் இருவரையும் மறந்து தலைதெறிக்க ஓடினான்.

சற்று நேரம் அந்த இடம் கணமான அமைதியால் சூழப்பட்டது. மரியத்தையும் செல்வியையும் தவிர வேறு யாரும் இல்லை. மௌனம் மட்டும் நிரம்பியிருக்க அந்த புராதான வீட்டின் நடு அரங்கில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் முள் நகரும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அமைதி இறுக்கத்தை அதிகப்படுத்தியது.    வட்டையில் தேநீரை ஊற்றி சூடு தணித்து மெதுவாக குடித்து கொண்டிருந்த மரியம் ஒரு கணம் செல்வியை உற்று நோக்கினார். சுற்றும்முற்றும் பார்வையை சுழல விட்டார். அந்த பார்வையின் நோக்கத்தை செல்வியால் புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த நிலைத்த பார்வையில் குடி கொண்டிருந்த வெறுமை  எந்தவிதமான அர்த்தத்தையும் அவளுக்கு கற்பிக்கவில்லை. தான் இருப்பது பாதுகாப்பான வீடுதான் என்றாலும் மெலிதான பயம் ஒன்று செல்வியை கவ்வ ஆரம்பித்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவான குரலில் அந்த மௌனத்தை கலைத்தாள்.
''என்னம்மா எதுவும் வேணுமா?''
மீண்டுமொருமுறை வீடெங்கும் பார்வையை சுழற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்த மரியம் ''கண்ணு! நீ கட்டாத பழைய சேலை இருந்தா ஒண்ணு கொடேன்...யாரும் வர்றதுக்குள்ள சீக்கிரம் போய் எடுத்தார்றியா''
செல்விக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை...ஒரு கணம் மரியத்தை உற்று நோக்கினாள்.
செல்வியின் பார்வையை உள்வாங்கிய மரியம் சட்டென்று தான் கையில் வைத்திருந்த தேனீர் குவளையை கீழே வைத்துவிட்டு எழுந்தார். வெள்ளை துப்பட்டியை இறுகப்பற்றிக்கொண்டு என்ன நடக்கிறது என்று செல்வி ஊகிக்கும் முன்னால் அந்த இடத்தை விட்டு வேகமாக மாயமாய் மறைந்தார்.

சுய நினைவுக்கு வந்த செல்வி ''அத்தே....ய்'' என்று அலறினாள்.
சத்தத்தை கேட்டு அடுக்களையிலிருந்து அம்சவேணியும் பக்கத்து அறையிலிருந்து சட்டையை அணிந்தவாறு தவசியும் மேல்மாடியிலிருந்து சமுத்திரமும் ஓடோடி வந்தனர். செல்வி அம்சவேணியிடம் பதட்டத்துடன் நடந்ததை பகிர்ந்து கொண்டாள்.  உடனடியாக தவசியும் சமுத்திரமும் தெருவின் இருபுறமும் ஆளுக்கொரு திசையில் மரியத்தை தேடி ஓடினர்.
தவசி இங்குமங்கும் ஓடினார். தெருவில் மனித நடமாட்டம் இல்லை. தெருவின் முதல் வீடான ஆசிரியர் ராமநாதனின் வீட்டின் முருங்கைமரத்தின் நிழலில் ஒரு நாய் மட்டும் உறங்கிக்கொண்டிருந்தது. களைத்துப்போன தவசி வீட்டிற்குள் நுழையும் போது சமுத்திரம் ஏற்கனவே வந்திருந்தான்.
மீண்டும் மௌனத்தால் நிரம்பியது வீடு.  வியர்வைத்துளிகள் பூத்திருந்த தவசியின் முதுகை தனது சேலை முந்தானையால் துடைத்தபடி அம்சவேணி கேட்டாள் ''இப்போ என்னங்க பண்றது?''
நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து விதானத்தை நோக்கி விட்டுவிட்டு இருக்கையில் கை ஊன்றி எதுவும் பேசாமல் நின்றார் தவசி.  எவ்வளவு முயற்சி செய்தும் பதட்டமும் பரிதவிப்பும் அடங்க மறுத்தன.

''என்னங்க.....'' மீண்டும் தவசியின் கவனத்தை கலைத்தாள் அம்சவேணி.
எவர் முகத்தையும் பார்க்காமல் தலை கவிழ்ந்தபடியே சொன்னார்.

''இனிமே மரைக்காயர் வீட்டுக்கு ஃபோன் வராது அம்சு''
(முற்றும்)