Sunday, June 28, 2020

குழந்தை வீடு (சிறுகதை)

நந்தியாவட்டையும் செம்பருத்தியும் இன்னும் பெயர் தெரியாத பகட்டான பூக்கள் நிறைந்த மரங்களால் எப்போதும் நிழலும் குளிர்ச்சியும் நிறைந்த அந்த தெரு. உதிர்ந்த பூக்களே குப்பைகள். அதையும் அகற்றி விட்டு அனுதினமும் தெருவைக் கழுவும் மாநகராட்சி நிர்வாகம். பெரும் வசதியான மக்கள் மட்டுமே வாழும் அந்த பகுதியில் இருந்த அந்த சிறிய வீடு அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவழைக்கும். மழைக்காலத்தில் பெரிய மரத்தின் கீழே முளைத்த வெள்ளைக்காளான் மாதிரி தென்படும் வீட்டில் இருந்தவர்கள் அம்மா மகள் என இரண்டே பேர்.
அம்புஜத்தின் மகள் வைதேகிக்கு வயது இருப்பதேழு என்றாலும் அம்மாவுக்கு குழந்தை தான். கொழந்தே...கொழந்தே என்று அம்புஜம் காலையிலும் மாலையிலும் மூச்சுக்கு மூச்சு அழைக்கும் ஒலி அண்டை வீட்டுக்காரர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.
வெயில் காலத்தில் மொட்டைமாடியில் தான் அம்மாவும் மகளும் படுப்பார்கள். வானத்து நட்சத்திரங்களை ஆராய்ந்த படியே மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவாள் அம்புஜம். அம்புஜத்திற்கு உறக்கம் பெரிய வரம். அருகில் வெடிகுண்டே வெடித்தாலும் ''கொழந்தே..ஏதோ தீயிற வாடை வருது...அடுப்பை அமத்திட்டேனானு பாரு'' என்பாள் அதுவும் அரைமணி நேரம் கழித்து.
''எப்படிமா...ஒன்னால இப்படி தூங்க முடியறது?''
''தெரியலைடி கொழந்த....சின்ன வயசிலேயே பெத்தவா போய்ச்சேர்ந்துட்டா...அப்புறம் உறவுக்காரா வீட்டில் தான் வேலை பார்த்து காலத்தை ஓட்டினேன். காலையிலிருந்து ஓய்வு ஒழிச்சல் இல்லாது வேலை...வீட்டை பெருக்கி  பாத்திரம் துலக்கி துணிமணி துவைச்சு ஒலர்த்தி அப்புறமா அதை மடிச்சு வைக்கணும்...இதுக்கு இடையிலே கறிகாய் நறுக்கணும்...வக்கீல் மாமாவை பார்க்க வர்றவாளுக்கு காஃபி போட்டுக் கொடுக்கணும்...அந்த வயசுக்கு அது அதிகம்டி கொழந்த...ஒரே ஆறுதல் வக்கீல் மாமாவோட அப்பாகிட்ட் பிரபந்தம் சொல்லிக்க வர்றவாளோட சேர்ந்து நானும் பிரபந்தம் கத்துண்டேன். ஆண்டாளும் பெரியாழ்வாரும் எனக்கு ரொம்ப இஷ்டம். என்னை ஆண்டாளோட கரைச்சுண்டேன்...அவளுக்கும் அம்மா அப்பா கிடையாது. எனக்கும் கிடையாது. ரெண்டு பேருக்கும் ஒத்து போய்டுத்து. என்னவோடா கொழந்த...என் காலமும் ஓடிடுத்து. எனக்கு வேறெதுவுமே தெரியாதுடி கொழந்தே...கிழக்கே மேற்கே ஆண்டாள்...வடக்கே தெற்கே என் பொண்ணு...அவ்வளவு தான் என்னோட ஒலகம். ஒனக்கு கல்யாணம் காட்சி நடந்து கொழந்தைக பொறந்தா அப்பறமா அது தான் என் ஒலகம்''.
அதுபோலவே, தூரத்து சொந்தக்காரனான அண்ணன் ஒருவனிடம் கையில் காலில் விழுந்து கல்யாணம் பேசி திருக்கருக்காவூர் கர்ப்ப ரட்சாம்பிகை கோயிலில் வெறும் இருபது நபர்களோடு விசேசம் எளிமையாக முடிந்தது. மானசீகமாக அம்பாளை வேண்டினாள் '' தாயே அபிராமி, என் கொழந்தைக்கு ஒரு கஸ்டமும் வரப்டாது. உனக்கு படிபூஜை செஞ்சு நெய் வாங்கி கொழந்தை பொறந்த பிறகு துலாபாரம் கொடுக்க வசதி எதுவும் கிடையாது.  இந்த அபலையோட கண்ணீரை மட்டும் காணிக்கையா வாங்கின்டு அவளை என்னென்னைக்கும் காப்பாற்றணும்''
மகளை அங்கேயே விட்டுவிட்டு உறவினர்களோடு காரில் சென்னை வந்தாள். மறுநாள் இரவு கிளம்பி சென்னைக்கு இருவரும் மறுவீடு வருவதாக ஏற்பாடு. இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக மகளை பிரிந்து வந்ததை அம்புஜத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வைதேகி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். மாப்பிள்ளை சென்னையில் தனியார் நிறுவனத்தில் க்ளார்க் உத்தியோகம். தைரியமான பெண் தான். ஆனால் அம்புஜத்திற்கு குழந்தை தான். ஆனால் தெரியாத ஆம்படையானோடு அவள் என்ன செய்வாள்?
மகள் மறுவீடு வருகிறாள் என்று காலை அம்புஜம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
காலை ஏழரை மணிக்கு புது ஜோடி இருவரும் நுழைந்த போது வழக்கமான மகிழ்ச்சி தென்படவில்லை. சரி, பயணக் கலைப்பாக இருக்கும் என்று நினைத்து மருமகனிடம்  மிக பவ்யமாக ''வாங்க...காஃபி சாப்பிடுறீங்களா..இல்லை குளிச்சிட்டு டிஃபன் சாப்பிடுறீங்களா...? '' வாஸ்தவத்தில் அவனிடம் அம்புஜத்திற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவன் பதில் எதுவும் சொல்லாமல் குளிக்க சென்றான்.
வைதேகி '' எனக்கு காஃபி கொடும்மா...தலைவலிக்கறது....ராத்திரி ட்ரெயின்ல தூங்கவே இல்ல''
வைதேகியிடம் என்ன கேட்பது என்று கூட அம்புஜத்திற்கு தெரியவில்லை. இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தது அம்புஜத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் குளித்து உடைமாற்றி வந்தான். வைதேகி குளிக்கச் சென்றாள். அம்புஜத்திற்கு ஒரே குழப்பம். இருவருக்கும் சேர்த்து உணவு பரிமாறுவதா அல்லது இவனுக்கு மட்டும் கொடுப்பதா...இருவருக்கும் மகிழ்ச்சி இல்லை என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் எங்கே எப்படி துவங்குவது என்று தெரியவில்லை.
அம்புஜமே பேச்சை துவக்கினாள் ''நீங்க சாப்டுறேளா இல்லனா வைதேகியும் வந்துடட்டுமா?''
அவனோ ''இதோ பாருங்க மாமி, என் தோப்பனார் சொன்னாரேன்னுட்டு தான் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். உங்களுக்கு தெரியாதது இல்ல..ஒரு ஆம்பளை ஒரு பொம்மானாட்டியோட தான் குடித்தனம் பண்ண முடியும். ஒரு ஆம்பளை ஒரு ஆம்பளையோட குடித்தனம் பண்ண முடியாது...உங்க பொண்ணு பொம்பளையே இல்லை...நான் வர்றேன்....'' என்ற சொன்னவன் அம்புஜத்தின் பதிலைக்கூட எதிர்பாராமல் செருப்பை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
அவனை எப்படி தடுத்து நிறுத்துவது? வெளியே போற ஆம்பளையை எங்கே போறன்னு கேட்கலாமா கூடாதா...என்ற அம்புஜத்தின் ஆராய்ச்சி முடிவதற்குள் அவன் அந்த பிராந்தியத்திலிருந்தே வெளியேறி இருந்தான்.
வைதேகி குளித்துவிட்டு ஈரத்துண்டை தலையில் சுற்றியவாறு வந்தவள் ''காலைல டிபனுக்கு என்ன பன்னின ?'' என்றாளே ஒழிய புருசன் வீட்டில் இல்லாததைப் பற்றி கேட்கவே இல்லை.
''ஏய் என்னடி இது உன் ஆம்படையான் அவன் பாட்டுக்கு செருப்பை மாட்டிண்டு கிளம்புறான். கேட்டா ஒம்பொண்ணு பொம்பளயே கிடையாதுங்கறான்''
''விடும்மா...அவன் ஆம்பளையே  கிடையாது...பொம்பளை..விட்டுத்தள்ளு
....இன்னைக்கு என்ன டிஃபன் ?''
''என்னடி இது அவனைக் கேட்டா நீ  ஒரு ஆம்பளைங்கறான்...உன்னை கேட்டா அவன் ஒரு பொம்பளங்கற...என்ன எழவுடி இது? எனக்கு ஒரு மண்ணும் புரியலை''
''புரியலன்னா வாயை மூடிண்டு பேசாம இரு....நீயெல்லாம் எப்படி ஒரு பிள்ளையை பெத்தே?''
அம்புஜம் நிலைகுலைந்து போனாள்.
''எனக்கு எதுவுமே தெரியாதுடி கொழந்தே...ஒண்ணுமே தெரியாது...பதினாறு வயசு இருக்கும்...திடீர்னு ஒரு நாள் ஒனக்கு கல்யாணம்னு சொன்னா வக்கீல் மாமாவும் மாமியும்...அப்பவே ஒங்கப்பாவுக்கு 40 வயசு...அவரோட மூத்தாள் செத்துப் போய் பத்து வருசமா தனியா இருந்தவருக்கு ஒரு பிடிப்பு வேணும்னு என்னை கட்டி வச்சா...எனக்கு கல்யாணம் என்ன...அது எதுக்குனு ஒரு விவரமும் தெரியறதுக்கு முன்னாடியே நீ பொறந்துட்டே...!
''அ...ம்மா....இது ரேப்...மா...ப்ளடி யூ ஹேவ் பீன் ரேப்ட்...அது கூட ஒனக்கு தெரியலையா....''
எனக்கு இன்னவரைக்கும் தெரியாதுடி கொழந்தே....சத்தியமா தெரியாது...ஒரு பொம்மனாட்டியோட ஆசைகள் எப்படி இருக்கும்...உணர்ச்சிகள் எப்படி இருக்கும்னு சத்தியமா தெரியவே தெரியாது...பதினாறு வயதில பட்டுப்போன இந்த மரத்தில ஒரு துளிரும் விடல....எனக்கு தெரிஞ்சது எல்லாம் நீயும் ஆண்டாளும் மட்டும் தான்...இந்த லோகத்தில வாழ்றதுக்கு இதைவிட்டா வேறு எதுவும் வேணுமா கூட எனக்கு சரியாத் தெரியலை... ;;. கண்ணீரை துடைத்துக்கொண்டும் மூக்கை சிந்தி தனது சேலைதலைப்பால் துடைத்துக்கொண்டே உடைந்த குரலில் '' நீ பொறந்த மூணே நாள்ல உங்கப்பா ஆபிஸ்ல வேலை பாக்குறவளை கூட்டிட்டு டெல்லியோ பம்பாயோ ஓடிப்போய்ட்டார்...வாழ வழியில்லாம நின்னவள ஒங்கப்பா வேலை பாக்குற ஆபிசுக்கே கூட்டிட்டு போய் நின்னாரு வக்கீல் மாமா...! நல்ல மனசு படைச்சவா அந்த ஆபிசுல எனக்கு கூட்டிபெருக்குற வேலை கொடுத்தா...நான் போடுற காஃபி பிடிச்சு போய் மூணு வேளை காஃபி போட்டு கொடுக்குற வேலையும் கிடைச்சது..வக்கீல் ஆத்துல இருந்து என்னை யாருமே பார்க்க வரலை...பதினாறு வயசு கைல கொழந்தை...நிர்க்கதியா நின்னேன்..ஆனால் ஆண்டாள் துணையிருக்கானு நின்னேன்...நீயோ நல்ல சமர்த்து...அழவே மாட்டாய்....ஆபீசுக்கு பக்கத்துல இருக்கிற ஆனந்தா ஸ்கூல்ல படிக்க வச்சேன்...அங்கே வேலை பார்த்த முஸ்லீம் பொம்மனாட்டி தான் என் வீட்டுக்கு பக்கத்துல இடம் இருக்கு வீடு கட்டிக்கோனு இந்த நானூறு சதுர அடி இடத்தை வெறும் ஒன்னரை லட்சத்துக்கு கொடுத்தா...நாற்பதாயிரத்துல வீடு கட்டினோம்...உனக்கு ஞாபகம் இருக்கா...வேலுச்சாமினு ஒரு கொத்தனார்...மாமி நீங்க வச்சிருக்குற பணத்துக்கு ஒத்தக்கல்லு சுவரு வச்சுதான் கட்டமுடியும். நான் கட்டித்தர்றேன் சொல்லி சல்லிசான செலவு கட்டித்தந்தார். மீதம் இருந்த சாமான்ல மாடில ஒரு ரூம் கட்டினார். பக்கத்தாத்து மாமரம் அதில் வெயில் விழாம பாத்துக்குச்சு...!''  கோர்வையாக இல்லாமல் தனக்கு தெரிந்து தான் வாழ்ந்த வாழ்க்கையை மகளோடு முதல்முறையாக பகிர்ந்து கொண்டாள்.
''கல்யாணம் எவ்வளவு பெரிய கனவுனு ஆண்டாள்ட்ட தான் கேட்டுண்ண்டேனே ஒழிய அதை நான் அனுபவிச்சதில்லை;
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
அம்மாடியோவ்..எப்பேர்பட்ட கனவு அது....எனக்கும் அது வெறும் கனவு தான். என்னோட உணர்ச்சிகளும் ஆசைகளும் ஏதோ பெட்டிக்குள்ள வச்சு பூட்டின நவரத்தினங்கள் மாதிரி ஆயிட்டது.....எனக்கு எதுவுமே தெரியாதுடி கொழந்தே...!
அம்புஜத்தை ஆண்டாளிடம் இருந்து மீட்டாக வேண்டும். வைதேகி அந்த கேள்வியை தெரிந்து தான் தொடுத்தாள்.
முந்திரி தெரியும் இதென்னமா அந்தரி?
அந்தரின்னா நாத்தனாருனு அர்த்தம். சாட்சாத் அந்த பார்வதி தான் அது. அவ தானே நாராயணனுக்கு தங்கை...அவ தான் கல்யாணத்துல முகூர்த்த சேலை கட்டிவிடுறா...மாலை போடுறா....நமக்குன்னு யாரும் இல்லாததாலே உனக்கு நான் மாலை போட்டேன்..சேலை கட்டிவிட்டேன்...என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கை ஆயிடக்கூடாதேனு ஆண்டாளை பிராத்தனை பண்ணிண்டே நான் தான் அதைச்செய்தேன்....!
''அம்மா...விட்டுத்தள்ளு இப்போ நமக்கென்ன கொறச்சல்...ஆம்பளை துணையில்லாம நீ வாழ்ந்த மாதிரி நான் வாழமுடியாதா?''
''என்னை மாதிரி நீ வாழ்ந்திடப்டாதுன்னு தானே இவ்வளவு பாடுபட்டேன்...இரு..இரு உன் மாமனார்கிட்ட பேசுறேன்....என்ன நினைச்சிண்டு இருக்கா இவாள்லாம்...ஆம்பளை இல்லாத வீடு...இல்லாதுபட்ட வீடுன்னா அவா இஸ்டத்துக்கு ஆடுவாளா...?
போன் போட்டு பேசினாள். அவளோட தூரத்து சொந்த அண்ணன் மழுப்பலாகவே பதில் சொன்னான். பின்பு  அம்புஜம் அழைக்கும் போதெல்லாம் அவன் குளித்துக் கொண்டிருந்தான். பத்து நாள் கழித்து மீண்டும் முயற்சி செய்தாள். அவனே போன் எடுத்து அவன் இல்லை என்றான். அடுத்த முறை போனை எடுக்கவே இல்லை. அனைத்தும் முடிந்தது.
இரவு மொட்டை மாடியில் அம்புஜமும் வைதேகியும் படுத்திருந்தனர்.
வானத்தில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தன. தூய வெள்ளை மேகங்கள் அவ்வப்போது முழு நிலவை மறைக்கவும் அதிலிருந்து விடுபட்டு நிலவு பீறிட்டு வெளியேறுவதுமாக ஒரு போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது. சாம்பல் பூசிய மேகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைப்பது இருவருக்கும் பொழுதுபோக்கு. திடீரென்று வைதேகி கேட்டாள்.
''அம்மா...நீ எப்பவாச்சும் அழுதிருக்கியோ....?''
''இல்லையே  கொழந்த...அழுகுறதுனா என்ன...எதுக்கு அழணும்?''
''அழுகுறதுனா என்னவா...நான் அழுது கூட உனக்கு அழுகைன்னா என்னன்னு தெரியலையா?''
''குழந்தை அழுகுறது ஓரு பாஷைடா...கொழந்தை அதுக்கு பேசத்தெரியாது அதுனால கத்தறது...நீ அப்படி கத்தும் போது பால் கொடுப்பேன்...தூங்கிடுவ...அவ்வளவுதான்...உனக்கு சளி இருமல் காய்ச்சல்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு அலைஞ்சதே இல்லையே...தடுப்பூசி போட கூட்டிண்டு போனேன்...அப்போ கூட நீ அழுததே இல்லை...!''
''அவ்ளோ தைரியமா உனக்கு..எதைப்பற்றியும் கவலைப்படாம திருவாரூர் வக்கீலாத்துல இருந்து இந்த ஊருக்கு வந்து...அந்த வயசில எப்படிம்மா?''
''தெரியாதுடி கொழந்த...எனக்கு தெரியாது...ஓடுற ஆறுல மேலே மிதக்குற இலை மாதிரி என்னோட வாழ்க்கையை ஆண்டாள் கையில ஒப்படைச்சேன்..அவ அவளோட ஆம்படையாங்கிட்ட ஒப்படைச்சா...எனக்கு என்ன பயம்?''
''உன்னை நினைச்சா பிரமிப்பா இருக்கு....ஏன்மா முப்பத்துமுக்கோடி தேவர்கள்னு நீ சொல்றது கூட இதோ இந்த நட்சத்திரங்கள் தானோ...இதோ அங்கே தூரத்துல மஞ்சளா தெரியுற நட்சத்திரம் தான் ஆண்டாளோனு எனக்கு தோன்றது''
''நட்சத்திரம் மட்டுமில்லை...எல்லாமே ஆண்டாள் தான்...உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ம வைணவ சம்பிரதாயத்துல ''கிருஸ்ணபிரேமை''னு ஒரு வகை உண்டு...அதாவது இந்த உலகத்தில ஒரே ஆண் கிருஷ்ணன் தான்...மற்ற எல்லோருமே பொம்மனாட்டிக தான்...இந்த மரம் செடி கொடி பறவை விலங்கு நீ நான் மற்ற ஆம்பளைகள் எல்லாமே பொம்மனாட்டிகள் தான்...''
''ச்சே...எல்லோருமே பொம்மனாட்டி கிருஷ்ணன் ஒருத்தன் தான் ஆம்பளைன்னா என்ன இது சுத்த பேத்தலா இருக்கு''
''அப்படி இல்லைடி கொழந்தை...கிருஷ்ணனை ஆம்படையானா நினெச்சுண்டு அவன் நாமத்தை ஜெபம் பண்ணிண்டு அப்படியே அந்த பக்தில நம்மள நாமளே கரைச்சிண்டு அவனோட ஐக்கியமாய்டறது...கிருஷ்ணன் சாதாரண ஆம்பளையா அவன்....ஆண்டாள் அவனை ரௌத்திரம் கொண்ட யானைங்கறா...
வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்!
சினம் கொண்ட களிறு....களிறுன்னா யானை...அப்போ எப்படி இருந்திருப்பான் கிருஷ்ணன்....ஐயோ இங்கே பாருடி கொழந்தை...எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு...கிருஷ்ணன் ஆண்டாள் கல்யாணம்...எப்படி இருந்திருக்கும்...ஒன்றல்ல ரெண்டல்ல...ஆயிரம் யானைகள் கூடி கிருஷ்ணனை வரவேற்குற அந்த காட்சி ஆண்டாளோட கனவுல தோன்றியது தானே...என்னை மாதிரி ஆண்டாளும் சிலிர்த்து போயிருப்பால்ல...கொழந்தை'''
வைதேகி தூக்கத்தில் இரண்டாம் சாமத்தை கடந்திருந்தாள். தூங்கிட்டியா கொழந்தை என்றவாறு அவளை போர்வையால் போர்த்தி இரு நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அம்புஜமும் தூங்கினாள். தூக்கம் அம்புஜத்திற்கு பெரிய வரம்.
மறுநாள் வைதேகி குளித்துக்கொண்டிருக்கும் போது அவளது போன் தொடர்ந்து சிணுங்கியது. ஆங்கிலத்தில் மின்னிய பெயரை படிக்க அம்புஜத்தால் படிக்க இயலவில்லை. அம்புஜத்திற்கு எழுதப்படிக்க தெரியாது. பிரபந்தம் முழுக்க கேள்வி ஞானத்தால் சேகரித்தது. வைதேகி வந்ததும் சொன்னாள். போனை எடுத்து பெயரை பார்த்து உற்சாகமானாள் வைதேகி. சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினாள். பேசி முடித்துவிட்டு அம்புஜத்தை நோக்கி '' அம்மா, இன்னை ஒரு கெஸ்ட் நம்ம வீட்டுக்கு வரப் போறாரு..ராத்திரிக்கு பூரியும் உருளைக்கிழங்கு கறியும் பண்ணிடு...'' என்றாள்.
''என்னது வர்றா...ரா.....என்னடி இது ...யாருடி அவன்...வெறும் பொம்மனாட்டிகள் இருக்குற வீட்டுல வேற்றாள கொண்டு வந்து வச்சா...தெருவுல இருக்குறவா என்ன பேசுவா..ஏதாவது புரிஞ்சுதான் பேசுறியா...?
''அம்மா..வர்றவரு பேரு சுதாகர்...எங்க கம்பெனில வேலை பார்த்தவர்.. இப்போ ஒரு வெளிநாட்டுக்கம்பெனிக்கு வேலை பார்க்குறாரு...ஹோட்டல் எதுவும் கிடைக்கலையாம்....நைட் தங்கிட்டு காலைல அஞ்சு மணி ஃப்ளைட்ட பிடிச்சு பாம்பே போய்டுவாரு...அவ்வளவு தான்...ராத்திரி ஏழுமணிக்கு வந்துட்டு நடுராத்திரி மூணு மணிக்கு கிளம்பினா யாருக்கு என்ன பிரச்சினை?''
''எனக்கு எதுவும் தெரியாதுடி கொழந்த....நம்ம மரியாதைக்கு எந்த பங்கமும் வந்திடாதபடிக்கு பார்த்துக்கோ...அது மட்டும் தான் நான் சொல்லுவேன்''
''ஒன்னோட கௌரவத்துக்கு ஒரு கொறச்சலும் வராது...கவலைப்படாதே''
இரவு ஏழு மணிக்கு சுதாகர் வந்த போது அம்புஜமே திகைக்கும் அளவுக்கு களையாக இருந்தான். பௌவ்யமாக வணக்கம் சொன்னான். மென்மையான குரலில் வைதேகியுடன் கண்ணியமாக உரையாடினான். பெரும்பாலும் உரையாடல் ஆங்கிலத்தில் இருந்தது. அவன் பாத்ரூம் எங்கே என்று கேட்டது மட்டும் அம்புஜத்திற்கு புரிந்தது.
குளித்தான். வீடே மணந்தது.
அம்புஜம் வியப்புடன் வைதேகியிடம் கேட்டாள் '' என்னடி பண்றான் உள்ள...வீடே மணக்குது....?''
''அம்மா இது சுதாகர் போடுற சோப் மணம்....நீ இன்னமும் லைஃப்பாய் சோப் தான போடுற...அவர் போடுறது பார்க் அவென்யு ப்ரீமியம்''
குளித்து உடை மாற்றி உணவுக்கு அமர்ந்தான். வீடு முழுக்க நிறைந்த மணம் அம்புஜத்தையும் வைதேகியையும் மயக்கியது.
அடுப்பங்கறையிலிருந்து பூரியை கொண்டு வந்து தட்டில் சுடச்சுட பரிமாறினாள்.
இரண்டு சுற்று முடிந்து மூன்றாவது சுற்றுக்கு பூரியை எடுத்துவிட்டு திரும்பியவள் சுதாகர் மீது மோதி நின்றாள்.
''ஏய்...சாப்பிடாம இங்கே என்ன பண்றீங்க...?''
''எனக்கு ஒரு ஆச்சர்யம்...பூரி எப்படி ஓரே மாதிரி வட்டமா இருக்கு...ஒரு சின்ன பிசிறு கூட இல்லாம..ஹௌ இஸ் தட் பாசிபிள்னு பாக்க வந்தேன்''
''இதுல ஒரு புடலங்கா ஆச்சர்யமும் இல்ல...இஸ்டத்துக்கு தேய்ச்சுட்டி டிஃபன் பாக்சை வச்சி வழிச்சி எடுத்துடுவோம்...அவ்ளோ தான்....'' கண்களில் சிரித்தபடியே சொன்னாள் வைதேகி.
''அடிப்பாவி எஞ்சினியர்ங் படிச்ச என்னையவே ஏமாத்திட்டீங்களா...''
''சரி...சரி...சீக்கிரம் சாப்பிட்டு போய் தூங்குங்க...காலையில ஏர்போர்ட்டுக்கு போகணும்ல...''
மேலே இருந்த அறையை சுத்தம் செய்து வைத்திருந்தாள். அதில் இருந்த பழைய கட்டிலும் மெத்தையும் சுமாராக புதுப்பிக்கப்பட்டிருந்தது.
அம்புஜத்திற்கு மனசு என்னவோ செய்தது. நாளை இந்த தெருவில்  இருப்போர் இவனை யார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தவள் உறங்கிப் போனாள்.
திடீரென்று கனவில் ஏதோ ஒரு எண்ணம் மின்னலாய் வெட்ட திகைத்து எழுந்தவள் எப்போதும் பக்கத்தில் இருக்கும் வைதேகியை தேட அவள் இல்லாதது அம்புஜத்தை மின் தாக்குதல் போன்று இருந்தது. மணி என்ன....இரவு விளக்கின் வெளிச்சத்தில் கடிகாரம் 11.45 என்று காட்டியது. எழுந்து பாத்ரூமை பார்த்தாள். ஆளில்லை. கதவில் கை வைத்த போது அது திறந்து கொண்டது. வெளியே வந்தால் அந்த பகுதி முழுக்க மயான அமைதி. வெளி கேட் பூட்டிருந்தது. அவள் மாடிக்கு தான் சென்றிருக்க வேண்டும். எதற்கு அவள் மாடிக்கு செல்ல வேண்டும்? மெதுவாக அடியெடுத்து வைத்து படிகளில் ஏறியவள் ஏழாவது படியில் நின்று மீண்டும் கீழே இறங்கினாள். 
பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒரு பல்லி தான் திங்க முடியாது என்று தெரிந்தும் ஒரு கரப்பான் பூச்சியை வாயில் கவ்விக்கொண்டும் செய்வதறியாமல் திகைத்து அசைவற்று நின்று கொண்டிருந்தது. ஒரு கணம் அம்புஜத்திற்கு அது அருவருப்பாக தோன்றினாலும் சகுனம் ஏதோ உணர்த்துகிறதோ என்று சிந்தித்து முதல் படிக்கு வந்து நின்றாள்.
முதல் படியில் நின்று யோசித்தாள். அம்புஜத்தின் உடலை இரு கூறாக பிளந்து உள்ளிருந்து ஒரு அம்புஜம் வெளியே வந்தாள்.
''எங்கே போற அம்புஜம்?''
''எங்கொழந்த...எங்கொழந்த''
''உன் கொழந்தைக்கு ஒன்னும் ஆகலை...போ...போய் தூங்கு....''
''ஒன்னும் ஆகலையா...இந்த ராத்திரியில் அவளுக்கு அங்கே என்ன வேலை...?''
''அவளுக்கு பசி...அவன் பரிமாறிண்டிருக்கான்...அவ்ளோ தான்...சாப்பிட்டு முடிச்சதும் வந்துடுவா...போ''
''என்ன பசி இது...அதுவும் ஒரு ஆம்பளையோட...என்ன பரிமாறுகிறான் அவன்?''
பதினைந்து படிகள் கொண்ட அந்த படிக்கட்டில் ஏறி பதினாலாவது படியில் நின்று கதவை தட்டும் வரை வந்து விட்டாள். எங்கும் அமைதி. மாமரக்கிளைகளின் இலைகள் மெதுவாக அசைந்து காற்றின் ஓசை சன்னமாக கேட்க அதையும் தாண்டி ஏதோ குரல் கேட்கிறது.
வைதேகி தான். '' ஆங்கிலம்...அவள் ப்ளீஸ் என்று சொல்கிறாள். அதுக்கு தயவுசெய்துன்னாதானே அர்த்தம். ஆபிஸ்ல கேட்டிருக்கேனே அந்த வார்த்தை...ஆனால் அடுத்து சொல்ற இரண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன...''  நான் கதவை தட்டட்டுமா? அவளிடமே அவள் பேசினாள்.
மீண்டும் கீழே இறங்கி ஏழாவது படியில் அமர்ந்தாள். வழி தவறிய தவளை ஒன்று அப்பாவியாக அம்புஜத்தை பார்த்தது. அது எந்த நேரம் வேண்டுமானாலும் தன் மீது பாய்ந்து விடுமோ என்று அவள் அஞ்சினாள். ஆனால் அதை விட முக்கியம் வைதேகி. 
மறுபடியும் அவளிடமிருந்து வெளிப்பட்ட அம்புஜம் பேசினாள். பசிச்சவளுக்கு சாப்பாடு கிடைக்கிறத எதுக்குடி தடுக்குற...போ...போய் படு...''
''இது என்ன பசி...அதுவும் இப்போ இந்த ராத்திரில எதுக்கு?
''ஒங்கொழந்தைக்கு வேற ஒண்ணும் கிடையாது...போ...பசியாறியதும் வந்துடுவா...படரும் கொடிக்கு பந்தல் போட வேண்டியது சம்சாரியோட கடமை. இல்லைனா கொடி தானே படரும்..இயற்கையின் விதி அது....''
''என்ன விதி அது...என்ன பசி இது...அதை ஏன் இவன் போக்க வேண்டும்...?''
''அம்புஜம்...பசி அடங்கிய பின் விருந்து பரிமாறி என்ன ப்ரயோஜனம்...பருவம் தவறி பெய்யும் மழையால் விவசாயிக்கு ஏதாவது பிரயோஜனம் உண்டா...அடிப்பைத்தியமே...இந்த பசிக்கு இவன் பரிமாறினால் தான் பசி அடங்கும்...'' குரல் மெதுவாக அவளிடமிருந்து விடை பெற்றது.

''ஓ..ஓ..ஏதோ பசி...அந்த பசிக்கு சாப்பாடு...அவ்வளவு தானே...சரி...சரி....எங்கொழந்தைக்கு வேறொண்ணும் இல்லையே....''
''வேற ஒண்ணும் இல்ல....அவ பார்வையில் படாம போ...போய் தூங்கு...!'' - மீண்டும் அந்த குரலிடமிருந்து ஆறுதலான குரலில் பதில்.

''பசி தானே...பசிக்கு சாப்பாடு தானே...வேறொண்ணுமில்லையாமே...!''
வந்தாள் படுத்தாள் உறங்கினாள்.
வெப்பம் குறைவு தான். குளிர்காற்றை மிதமாக சுழன்ற ஃபேன் இதமாக வழங்கிக் கொண்டிருந்தது.
இடி தாக்கியது போன்று எழுந்தாள் அம்புஜம்.
''இன்னைக்கு பசிக்கு இவன் பரிமாறிட்டான்....நாளைக்கு பசிச்சதுனா....ஐயோ என் கொழந்தே....''
(முற்றும்)

Wednesday, June 10, 2020

முகனூல் அபத்தம்!


விருப்பக்குறி நோக்கி
விரையும் உலகம்
மனிதம் நோக்கி எதிர்த்திசையில் நான்
தொடுவானம் சத்தியமென எண்ணி
சூரியனை நோக்கி பறக்கும்
என் சிந்தனை பறவை.