Thursday, December 27, 2018

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக...!

 ''மாப்பாளையம்'' என்று பேச்சு வழக்கிலும் 'மஹபூப் பாளையம்' என்று எழுத்து வழக்கிலும் வழங்கப்படக்கூடிய மதுரை நகரின் புறநகர் பகுதியின் துவக்கப்புள்ளியில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் அரிமா அரங்கம். அங்கு 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ''இனி'' வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் தான் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை சந்தித்தேன். வெள்ளை வேட்டி, முழுக்கை சட்டை, மயில்தோகை வண்ணத்தில் சால்வை நடுவகிடு எடுத்து படிய வாரிய தலைமுடி. பிரபஞ்சன் அரிமா அரங்கின் வாயிலில் புகைபிடித்துக் கொண்டிருந்தார். ஒரு பத்தடி இடைவெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனோ பேசத்தோன்றவில்லை. அந்த உள் அரங்கு கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் பேரா.சுப.வீ (அப்போது அவர் தி.க/திமுக இரண்டையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்) இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பெண்ணிய செயற்பாட்டாளர் என்று அறியப்படும் தோழர். ஓவியா மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன்.
அப்போது ''இனி'' பத்திரிக்கையின் நடுப்பக்கத்தின் பிரபஞ்சன் அரசியல் கட்டுரைகள் எழுதுவார். அதை வாசித்து விட்டுத்தான் அந்த கூட்டத்திற்கு சென்றேன். சுப.வீ வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஓவியா பேசும் போது பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்றார். இறுதியாக பிரபஞ்சன் பேசினார்.
.
அவரது பேச்சு அன்றைய அரசியல் போக்குகள் குறித்து அமைந்ததாக நினைவு. ஞாபகத்தில் நின்ற சில தகவல்கள் எனக் கீழ்க்கண்டவற்றை குறிப்பிடலாம்.
1) ''தி செகண்ட் செக்ஸ்''  (The Second Sex) என்னும் நூலை சிமோன் த பொவார் (Simone de Beauvoir) எழுதுவதற்கு முன்பாகவே ''பெண் ஏன் அடிமையானாள்?'' என்னும் நூலை தந்தை பெரியார் எழுதி முடித்து விட்டார்.
2) தமிழர்களில் இரு வகை உண்டு. ஒன்று தமிழ் பேசும் தமிழர்கள் மற்றொன்று தமிழ்நாட்டுத் தமிழர்கள். (''நாங்கள் தமிழ் பேசும் தமிழர்கள் தமிழ்   நாட்டுத்தமிழர்கள் அல்ல'' என்று பேச்சினிடையே அடிக்கடி குறிப்பிட்டார்)
3) தமிழர்களின் கற்பனை வற்றி போனதுக்கு முதன்மை காரணம் ''இட்லி''
4) ஆண் பெண் சமத்துவம் / சனாதன எதிர்ப்பு போன்றவற்றை தத்துவார்த்தரீதியாக சமூக அமைப்பு மாற்றம் வாயிலாக கொண்டு வருவதன் முக்கியத்துவம் போன்ற கூறுகளுடன் அமைந்தது அவரது பேச்சு.
பிரபஞ்சனின் பேச்சு பாணி சற்று வித்தியாசமானது. பேச்சும் மூச்சும் சரிவிகித சமானமாக கலந்து மந்திரஸ்தாயியில் அவரது குரல் ஒலிக்கும். சுவாரசியமாக பேசுவதில் அவர் சமர்த்தர் என்பதை தற்போது தான் ஸ்ருதி டிவியின் பதிவுகள் வாயிலாக  நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரது எழுத்து அப்போதே என்னை கவர்ந்தது. ''அப்பாவின் வேட்டி'' என்ற சிறுகதை இன்றும் நினைவில் நிற்கும் கதை. வானம் வசப்படும் / மானுடம் வெல்லும் போன்ற நாவல்களை படித்த பிறகுதான் அதற்கு முன் நான் படித்த பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் இல்லை எனத்தெரிய வந்தது. சம்பவங்களை சான்றுகளுடன் பின்னி புனைவை அளவோடு கலந்து (அது கூட வாசிப்பின் தடைகளை அகற்றும் பொருட்டு) எழுதப்பட வேண்டும் என்ற நியதியை பிரபஞ்சனே தமிழிலக்கியத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது எனது தாழ்மையான கருத்து.
கல்கி புனைவையே வரலாறு என்று தமிழர்களை நம்பவைத்து விட்டார். கூடவே சாண்டில்யன் மற்றும் ஜெகசிற்பியன் துவங்கி இன்றைய பாலகுமாரன் வரை அதையே இறுக்கமாக பற்றிக்கொள்ள பிரபஞ்சன் அந்த தடைகளை மிக கவனமாக தனது படைப்புகளில் தகர்த்தெறிந்தார்.
ப்ரெஞ்ச் அரசின் மொழிபெயர்ப்பாளாராகவும் முதன்மை நிர்வாகியாகவும் விளங்கிய அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட மானுடம் வெல்லும் / வானம் வசப்படும் இரண்டும் தமிழ் நாவல் பரப்புகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தன. பிரபஞ்சனுக்கு இசையில் அலாதி நாட்டம் உண்டு. காஃபி பற்றியும் அதை அருந்தும் விதம் பற்றியும் அவர் எழுத்துக்கள் மூலமாக அறிந்து கொண்டு எனது பணி நிமித்தம்  தஞ்சை செல்லும் போதெல்லாம் அவர் அறிமுகம் செய்த காபி பேலசில் (Coffee Place - South Ram Pet)  காஃபி அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தேன். ரசனையோடு வாழ பணம் ஒரு பொருட்டல்ல மனமே பிரதானம் என்பதை அவர் வாயிலாகவே பயின்றேன். இந்தவிதத்தில் பிரபஞ்சன் எனக்கு ஒரு ஞானாசிரியர்.
அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்த போது நான் ஆந்திராவின் காளஹஸ்தியிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்ததும் அவர் எழுதிய '' பிரபஞ்சன் மகாபாரதம்'' என்னும் நூலை என் மகனிடம் எடுத்துக்கொடுத்து படிக்கச் சொன்னேன். பிரபஞ்சனுக்கு நான் அஞ்சலி செலுத்திய முறை இதுதான். ஒரு படைப்பாளிக்கு வாசகனாக நான் அளிக்கும் அங்கீகாரமும் கௌரவமும் உயரிய மரியாதையும் அதுவே.



No comments:

Post a Comment