Thursday, March 4, 2021

கம்யூனிசம் என்றால் என்ன? என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை


கம்யூனிசம் என்றால் என்ன? என்ற இந்த நூலை தோழர் ரகு வாசிக்க அளித்தபோது நேரமின்மையால் தவித்து வந்தேன்.  (உபயம்: கொரோனா) ஆனால் வாசிக்க ஆரம்பித்தவுடன் அதை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.

எந்தவொரு தத்துவமும் அறியப்படும் வரை சோர்வை வரவழைக்கும் என்பது இயல்பு. காரணம், தத்துவம் அறிதல் என்பது பல்வேறு பருண்மையான தரவுகளின் வழியே ஒரு உண்மையை கண்டு தெளியும் முயற்சி என்பது எனது புரிதல். அந்த வகையில் பொதுவுடைமை தத்துவம் என்பது சுரண்டலற்ற சமூகம் ஒன்றை படைக்க விரும்புவோர் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. தத்துவத்தை பயில வேண்டுமே அன்றி படிக்க இயலாது. பயிலுதல் வேறு படித்தல் வேறு. ஆனால் தற்கால தமிழ்ச்சூழலில் படித்தோரே பயின்றவர் போல் மிகைப்படுத்திக் காட்டிக்கொண்டு தத்துவவியலாளர்களாக உலாவருதல் வருத்தத்திற்குரிய ஒன்று. 

தத்துவம் பயிலுலதல் அனைவரும் பயிலக்கூடிய ஒன்றல்ல. காட்டாக, தலைவலிக்கு பாராசிட்டமால் உட்கொள்ளும் ஒருவர் அதன் வேதியியல் இயல்புகளை அறிய மாட்டார். தேவையுமில்லை. மாறாக அதை உற்பத்தி செய்து வணிகபடுத்தும் ஒருவர், அதன் வேதியியல் & மருந்தியல் கூறுகளை (Chemical and Pharmacological properties) அறிந்திருத்தல் முதன்மையானது. அதைப்போன்றே, தான் வாழும் சமூகம் எம்மாதிரியான திசையில் செல்கிறது அதை சரியான திசையில் செலுத்த தனது பங்களிப்பு என்ன என்பது குறித்த சிந்தனை கொண்டோரே தத்துவம் பயில வேண்டும். 

இந்த நூல் கம்யூனிசத்தை மிக எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியரின் குரல் மிகவும் தோழமையானது. மலையேறி பிரசங்கம் செய்யவில்லை. மேடையேறி சங்க நாதம் முழங்கவில்லை. மாறாக, உங்கள் அருகே அமர்ந்து கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு  இந்த சமூகத்தின் இயக்கத்தையும் அதை தீர்மாணிக்கும் காரணிகளையும்  கவனப்படுத்துகிறது. 

பொருள்முதல்வாதம் என்று அதை எளிமைப்படுத்திய பதிப்புகளும் பிரச்சாரங்களும் மிகுந்த அறிவுச்சூழலில் முதலில் பொருள் என்றால் என்ன என்ற நமது அடிப்படை புரிதலை தகர்த்து உண்மையை எடுத்துக்காட்டும் விதமே இந்த நூல் இன்றைய தேவையை உறுதிப்படுத்துகிறது. பொருள் என்றால் என்ன என்ற இந்த கேள்வி எவ்வளவு கடினமானது  என்பதை நூலை வாசித்தோர் தங்களது நண்பர்களிடையே வினவி விடைபெற முயற்சிக்கலாம். 

''பொருள் என்பது தோற்றமும் முடிவும் இல்லாத ஐம்புலன்களால் அறியப்படக்கூடிய புறநிலை எதார்த்தமே பொருள்'' (பக்கம் - 21) என்ற சொற்றொடருக்கு அஞ்சி புத்தகத்தை வாசகர் கீழே போட்டுவிடுவாரோ என்ற அச்சமே ஏற்படாதவகையில் அதற்கான விளக்கத்தை எளிமையான சொற்களில் ஆசிரியர் தந்துள்ளார். இது இந்த நூலின் மேன்மைக்கு ஒரு சான்று அவ்வளவே. இதைப்போலவே பல்வேறு சான்றுகள் நூலெங்கும் விரவி உள்ளன. வாசகரின் வாசிப்பு உற்சாகம் குன்றகூடாது என்பதற்காக அவற்றை இங்கே தவிர்க்கிறேன்.

இந்த படைப்பு முகனூல் விவாதத்திலிருந்து நூலாக பரிணாமம் பெற்றது என்பதை அறியும் போது சற்றே வியப்பாக இருக்கிறது. பொதுவாக சமூக இணையதளங்களில் லாவணி கச்சேரிகளே மிகுதி என்ற நிலையிலிருந்து நாம் சிறிது சிறிதாக மீள்கிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கம்யூனிசம் என்றால் என்ன என்று அறிந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று சில அறிவுஜீவிகள் கேட்கக்கூடும். ஒருபுறம் கம்யூனிசம் ருஷ்யாவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகள், வியட்நாம் கம்போடியோ போன்ற தேசங்களிலிலேயே தோற்றுவிட்டது என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற சங்கிகள் மற்றும் பிற சுரண்டல் சக்திகள் புத்தகம் எழுதி தங்களது அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள். 

கம்யூனிசம் என்பது சுரண்டலற்ற சமூகத்தை படைப்பதற்கான ஒரு சமூக சிந்தனை. அதை மிகச்சரியாக தான் வாழும் சமூகத்திற்கு பயனளிக்கும் விதத்தில் பயன்படுத்துவோர்க்கு இது ஒரு சிறந்த படைப்பு. எது ஒன்றை நாம் முழுமையாக அறிகிறோமோ அதைத்தான் செயல்படுத்த முடியும். அறிந்த ஒன்றை செயல்பாடாக மாற்ற தன்னலமற்ற உழைப்பு முக்கியம். கம்யூனிசம் போதிப்பது திறனுக்கேற்ற உழைப்பை சமூகத்திற்கு அளித்து தேவைக்கேற்ப பலனைப் பெறுதலைத்தான். சுரண்டலும் ஏற்றத்தாழ்வும் அற்ற சமூகத்தை கட்டமைப்பதின் முதல்படி இதுவே. இந்த சமூக சிந்தனையே பிச்சைக்காரர்கள் அற்ற சோவியத் ரஷ்யாவை கட்டமைத்தது. அது 75 ஆண்டுகள் நிலைத்து முதலாளித்துவ ஆற்றல்களை தூங்கவிடாமல் செய்தது. நான் மாஸ்கோவில் பயணம் செய்த ஐந்து நாட்களிலும் லெனின்கிராட் என்று அன்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என இன்றும் அழைக்கப்படும் நகரத்தில் இருந்த இரண்டு நாட்களிலும் ஒரு பிச்சைக்காரரைக் கூட பார்க்கவில்லை என்பதே இதற்கு சான்று. கடந்த முப்பது ஆண்டுகளாக முதலாளித்துவத்தின் பிடியில் ரஷ்யா சிக்கியபின்பும் கூட கம்யூனிச சித்தாந்தம் கட்டியமைத்த சமூகத்தின் வலிமை குறையவில்லை என்பதனை இது காட்டுகிறது. 

இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவத்தின் விழுமியங்கள் கோலோச்சும் சமூகத்தில் கம்யூனிச தத்துவத்தின் இருப்பும் செயல்பாடுகளும் இன்றியமையாதவை. தோற்றுவிட்டது என்று கேட்கும் மேதாவிகளுக்கு கப்பல்கள் மூழ்குவதால் ஆர்க்கிமிடீசின் மிதவை தத்துவம் தவறு என்றோ இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய செயற்கைக்கோள் ஏந்திய ராக்கெட்டுகள் கடலுக்குள் விழுந்ததால் நியூட்டனின் இயக்கவிதிகள் தவறு என்றோ கூறுவீர்களா என்று நாம் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும். 

கம்யூனிசம் ஒரு சமூக அறிவியல் தத்துவம். அது ஒரு நாளும் தோற்காது பொய்க்காது. வாள் இருக்கும் வரை கேடயமும் இருக்கும் என்பதைப் போல சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிச தத்துவமும் இருக்கும். 


சுரண்டலுக்கு எதிராக கரம்கோர்க்கும் அனைவருடைய கையிலும் திகழ வேண்டிய கையேடு ''கம்யூனிசம் என்றால் என்ன?''. படைத்து பதிப்பித்தோர்க்கு பாராட்டுக்களும் வாங்கி வாசிப்போருக்கு வாழ்த்துகளும்.



2 comments:

  1. தற்போது இந்த புத்தகம் தென்கொரியாவில் என் வாசிப்பறையில் உள்ளது. அணிந்துரை சிறப்பாக எழுதியிருந்தீர். நன்றி

    ReplyDelete
  2. ஊக்கம் தரும் தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete