Thursday, August 18, 2022

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நினைவாக....


1995ஆம் ஆண்டு ஒரு மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்த காலம். நெல்லை சந்திப்பில் பெருமாள் தெற்குரத வீதியில் வாணிவிலாஸ் காம்பௌண்டில் குடியிருந்தேன். அதே தெருவின் மத்தியில் இருக்கும் மோகன் கடையில் காலை சிற்றுண்டியும் காபியும். நண்பர்களோடு ஒரு நாள் காலை உணவின் போது விவாதத்தின் இடையே சட்டென ஒரு புறநானூற்றுப் பாடலை நான் எடுத்து விட அதே மேஜையின் கடைசியில் உணவருந்திக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் என்னும் ஆசிரியர் வியந்து போய் என்னைப் பற்றி விசாரித்தார். அவர் தான் என்னை என் பாசத்துக்குரிய தந்தையார் நெல்லை கண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்தார். 

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்ததும் 100ரூபாய்க்கு நூல்கள் வாங்குவதை பழக்கப் படுத்திக்கொண்டேன். அதற்கு காரணம் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தான். அவர் வீட்டிற்கு சென்றால் எப்போதும் அவரை சுற்று ஒரு கூட்டம் இருக்கும். வானத்திற்கு கீழே உள்ள அனைத்துமே பேசுபொருட்கள் தான். சங்க இலக்கியங்கள், கம்ப ராமாயணம், பிரபந்தம் என அவர் தொடாத தலைப்பே இல்லை. கூட்டத்தில் தமிழாசிரியர்கள் இருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். வரைமுறை இல்லாமல் கிழித்து தொங்க விட்டுவிடுவார். 


காணும் போதெல்லாம் மிகவும் வாஞ்சையுடன் ''படிடா குட்டி கிடைக்கற எல்லாத்தையும் படி அது ஒரு நாளும் வீணா போகாது'' என்பார். அவர் ஒரு நாளும் எனக்கு இந்த நூல் தான் படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது இல்லை. நான் இந்த நூல்களை படித்துக் கொண்டிருக்கின்றேன் என்று மட்டுமே கூறுவேன். விவாதத்தின் போது தவறான கருத்துக்களை பதிவு செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார். 


அவர் ஔவை பற்றி பேசுவதை கேட்பது ஒரு தனி சுகம். ஒரு பண்பாட்டில் பெண்ணின் சிந்தனையும் ஆணின் சிந்தனையும் எவ்வாறு காலப்போக்கில் மாறுகின்றன. அந்த மாற்றங்கள் சமூகத்தின் கூட்டு நனவிலியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அகச்சான்றுகள் / புறச்சான்றுகள் வழியே நின்று நிறுவுவார். மாற்றுக்கருத்து என்ற ஒன்று அங்கே எழ வாய்ப்பே இல்லாதது கண்டு நான் வியந்ததுண்டு. அப்பா என்று அழைத்தால் மிகப் பெருமையாக கருதுவார். நண்பர்களை அறிமுகம் செய்யும் போது உறவுமுறையோடு அறிமுகப் படுத்துவார். 


நெல்லையில் பணிபுரிந்த அந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எண்ணிலடங்கா முறை அவரது இல்லத்திற்கு சென்றிருக்கின்றேன். அவர் இல்லாதபோது ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கின்றேன்.


அது ஒரு ஞாயிற்றுகிழமை பகல்பொழுதில் வழக்கம் போல ஒரு சபை கூடியிருந்தது. இந்த முறை பத்துக்கும் குறைவான நபர்களே இருந்தனர். நான் அவரது கால் அருகே அமர்ந்திருந்தேன். ஔவையின் படைப்புக்களை பற்றி விவாதம் சென்றது. மிகச் சரளமாக ஔவையின் ஆத்தி சூடியைய்ம் கொன்றை வேந்தனையும் கூறிக் கொண்டே பாரதியின் புதிய ஆத்தி சூடிக்கு தாவினார். அங்கே இருந்து பாரதி தாசனுக்கு தாவினார். பெரியாரை துணைக்கொள் என்னும் ஔவையின் வாக்கு பாரதிக்கு வரும்போது பெரிதினும் பெரிது கேள் என்று மாறிய அதிசயத்தை அவர்களின் சிந்தனையின் வழியே எடுத்துரைத்தார். பாரதிதாசனுக்கு வரும் போது பெண்ணும் ஆணும் சமம் என்ற பாவேந்தரின் வரிகளைக் கூறி நிறுத்தி விட்டு என்னிடம் ''குட்டி...கவனி ஆணும் பெண்ணும் சமம் அல்ல; பெண்ணும் ஆணும் சமம்'' என்று கூறி சிரித்தார்.

எனக்கு புரியவில்லை. ''என்னப்பா சொல்றே...இரண்டும் ஒன்னு தானே A + B = B + A அப்படித்தானே..நீ என்னமோ புதுசா கண்டுபிடித்த மாதிரி சொல்ற'' (பழகிய மூன்று மாதங்களில் ஒருமையில் பேசும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டது அதை அவர் அங்கீகரித்தார்).

''டேய் லூசுப்பயலே அப்படி இல்லடா., கிழவி என்ன சொல்றான்னா பெண் தான் முதல்ல...பெண் அப்பறம் பெண்ணிலிருந்து ஆண்...ஒரு ஆணாதிக்க சமூகத்திற்கு பெண்ணாக ஔவை விடுத்த அறைகூவல்...நாங்க இல்லைன்னா நீங்க கிடையாதுடான்னுட்டு....என்ன அண்ணாச்சி சரிதானே என்று நண்பர் ஒருவரிடம் அந்த கருத்துக்கு ஒப்புதலும் பெற்றார். 


தொடர்ந்து ஆத்தி சூடியை கூறி வந்தவர் இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல் என்று கூறி கூட்டத்தில் இருந்த தமிழாசிரியரை நோக்கி ''டேய் வாத்தி இந்த கரவேல், விலக்கேல், விளம்பேல், கைவிடேல் இதுக்கு இலக்கணக் குறிப்பு சொல்லுடே'' என்றார்.


தமிழாசிரியருக்கு வியர்த்து கொட்டிவிட்டது. அந்த நபருக்கு தெரியாது என்பது தந்தையாருக்கு தெரியும். இருப்பினும் வீம்புக்கு தான் கேட்டார். 

அவர் விழித்துக்கொண்டே இருந்தார். திடீரென என்னை பார்த்து ''குட்டி நீ சொல்லுடே'' என்றார்.

நான் அமைதி காத்திருக்க வேண்டும். பொறுமையுடன் அந்த சூழலை கையாண்டிருக்க வேண்டும். ஆனால் அதீத ஆர்வத்தில் ''அப்பா! அது எதிர்மறை ஏவல் வினைமுற்று என்றேன். தமிழாசிரியர் என்னை எரிக்கும் கண்களுடன் ''ஏலேய் நீ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் தானே...வாய மூடிட்டு பேசாம இருடே...வந்துட்டான் பெரிய பண்டிதனாட்டம்'' என்று சாமியாடினார். இது போதாதா...தமிழாசிரியரை உண்டு இல்லை என்று செய்துவிட்டார். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. 


''ஏண்டா தமிழை படிச்சிட்டு தமிழை புள்ளைகளுக்கு கற்றுகொடுக்கும் உனக்கு இலக்கணக்குறிப்பு தெரியல., வேதியியல் படிச்சவன் சொல்றான் வெக்கமாயில்லை...உன்னை நம்பி வர்ற புள்ளைகளுக்கு துரோகம் பண்றதுக்கு எப்படிடே மனசு வருது...'' மனுசனா பொறந்தா துளியாவது உண்மையோடு வாழணும்டே...இதெல்லாம் ஒரு பொழப்பா? எரிமலையாய் குமுறினார்.


வழக்கமாக சபை கலைந்த பின்பு உணவருந்தி விட்டு விடை பெறுவோம். ஆனால் அந்த தமிழாசிரியர் அன்று சரியாக சாப்பிடவே இல்லை. எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது. குறிப்பாக அந்த தமிழாசிரியர் சாப்பிடும் முறையை பலமுறை கவனித்திருக்கிறேன். சோறுடன் கூட்டு, பொரியல் இவை இரண்டையும் சேர்த்தே சாப்பிடுவார். நாம் முதலில் சோறு அடுத்து கூட்டு அடுத்து சோறு அடுத்து பொரியல் என்று உண்போம். அவர் அனைத்தையும் கலந்துகட்டி அடிப்பார். அளவு கூட சராசரிக்கும் சற்று மேலே தான். நான் மிகக்குறைவாகவே சாப்பிடுவேன். எனவே அவர் உண்ணும் அளவு எனக்கு வியப்பை ஏற்படுத்தும். ஆனால் அன்று அந்த தமிழாசிரியர் சரியாக சாப்பிடவே இல்லை. அமைதியாக விடைபெற்றார். அனைவரும் விடைபெற்றனர். தந்தையார் அன்று மாலை நெல்லைக்கு அருகே இருக்கும் கோயிலில் பேச வேண்டும். எனவே ஓய்வெடுக்க அவரது அறைக்கு கிளம்பினார். நான் மட்டும் அந்த சபை நடந்த அறையின் சுவரில் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.

அனைவரும் விடைபெற்ற பின் நான் மட்டும் நின்று கொண்டிருந்ததை கவனித்த தந்தையார் துணுக்குற்று என்னை நோக்கி ''என்னடே?'' என்றார்.


எனக்கு கொட்டித்தீர்த்துவிட வேண்டும் இல்லையெனில் தலைவெடித்துவிடும் போலிருந்தது.


''எதுக்குப்பா அவ்வளவு மோசமா நீ ரியாக்ட் பண்ணினே? உனக்கு தமிழ் தெரியும்னா  அதே அளவுக்கு அவருக்கும் தெரியணும்னு கட்டாயமா? அவசியமில்லையே...நீயே அடிக்கடி சொல்ற மாதிரி உனக்கே தெரியாத விசயங்கள் தமிழில் இருக்கே...அது மாதிரி தானே அவருக்கும்...உனக்கு தெரியாதுன்னா சரி அவருக்கு தெரியாதுன்னா குற்றமா...என்ன மாதிரியான தர்க்கம் இது...உங்கிட்ட    இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா...'' என்றேன்.


தந்தையார் எதுவும் பேசவில்லை. என்னை நோக்கி மெல்ல நடந்து வந்தார். என் கண்களை உற்று பார்த்தார். என் தலைமுடியை கோதிவிட்டபடியே ''குட்டி., அவன் மார்க்கெட்ல அநியாய வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பண்றாண்டா'' என்றார்.

(பாசத்துகுரிய எனது தந்தையார் நெல்லை கண்ணன் அவர்களின் நினைவுகளின் ஊடே பயணிக்கும் இந்த கட்டுரை அவர் தந்த தமிழால் அவருக்கே அஞ்சலியாக...)

1 comment:

  1. அருமையான அனுபவ பதிவு. கண்ணன் ஐயா அவர்களின் புகழ் இம்மண்ணில் என்றும் நிலைத்து நிற்கும்.

    ReplyDelete