Monday, September 5, 2022

ஆசிரியர் தினம் - 05/09/2022 தலைமை ஆசிரியர் கணபதி அவர்கள் நினைவாக

 தியாகராஜர் கலைக்கல்லூரியில் 1990-93 வேதியியல் இளங்கலை பட்டப்படிப்பு. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று இருந்தது கல்லூரியின் முதலாண்டு. 

அதற்கு அடித்தளமிட்டது ஆயிரவைசியர் மேல்நிலைப்பள்ளி. 1988ஆம் ஆண்டு சேதுபதி மேல்நிலைபள்ளியில் பத்தாவது முடித்து அது கூட கரணம் தப்பினால் மரணம் என்னும் சாகசமான வெற்றி. ஆம், அறிவியலில் வெறும் 35மதிப்பெண்கள். எனது வகுப்பில் 55மாணவர்கள். அதில் வெறும் 7பேர் மட்டுமே தேர்ச்சி. இந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் போது எனது எட்டு தாய்மாமன்மார்களில் கடைசி மாமா கதிர்வேல் படித்த ஆயிரவைசியர் மேல் நிலைப்பள்ளி பரிந்துரை செய்யப்பட்டது. காரணம், மிக எளிமையாக இடம் கிடைத்துவிடும் என்பது தான். அரசு உதவி பெறும் பள்ளி. விண்ணப்பபடிவத்தில் அனைத்து விருப்பத்தேர்வுகளிலும் இயற்பியல், வேதியியல். தாவரவியல் மற்றும் விலங்கியல் என்று எழுதி தொலைத்து விட்டேன். காரணம் அதைத்தான் என் மாமாவும் படித்தார். குடும்பம் மிகச்சோதனையான காலகட்டத்தில் போய்க்கொண்டிருந்தது. எனது தந்தையார் தொழிலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து எழ முடியாமல் தத்தளித்த காலகட்டம். 

பள்ளியின் தலைமை ஆசிரியர் எனது விண்ணப்ப படிவத்தை பார்த்ததும் கொதித்தெழுந்து விட்டார்.

''ஏண்டா தற்குறி நாயே! எடுத்தது முப்பத்தஞ்சு மார்க்கு இதுல உனக்கு ப்யூர் சைன்ஸ் கேட்குதா? அட நாயே! என்னை மாதிரி ஒரு நல்லவன் உன் பேப்பரை திருத்தியிருக்காண்டா.. ஒரு வர்சம் உனக்கு வீணாயிடுமேனு பாவம்னு பாஸ் போட்டிருக்கான்..என்ன மார்க் எடுத்திருப்ப...முப்பது எடுத்திருப்ப...அஞ்சு மார்க்கு பிச்சை போட்டு பாஸ் போட்டிருப்பான்...''

என் பின்னால் நின்றிருந்த என் தந்தையார் பத்தடி பின்னால் நகர்ந்து பதுங்கி விட்டார். நான் தலைகுனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன்.

தலையெழுத்தை கண்டவர் உண்டோ இவ்வுலகில்? நான் இருக்கிறேன். ஒரு கணம் என்னை உற்று நோக்கிய எங்கள் தலைமை ஆசிரியர் கணபதி எனது விண்ணப்பப் படிவத்தை திருப்பி பச்சை மையினால் ஆங்கிலத்தில் ''Admitted'' என்று எழுதி கையொப்பமிட்டு விண்ணப்பப்படிவத்தை என் முகத்தில் விட்டெறிந்தார்.


1990ஆம் ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் வெற்றி. வேதியியலில் 188 மதிப்பெண்கள். மதுரைக்கல்லூரியிலும் தியாகராஜர் கல்லூரியிலும் கூப்பிட்டு இடம் கொடுத்தார்கள். கட்டணம் எதுவுமில்லை. கல்லூரி படிப்பு முழுக்க இலவசம். புத்தகங்கள் மட்டும் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தமிழ் வழிக்கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறுவதில் காலக்கெடு மிகவும் குறைவாக இருந்தது. இந்த காலக்கெடு முடிவதற்குள் முதல் அகமதிப்பு தேர்வு வந்து முடிந்தும் விட்டது.


திருத்தப்பட்ட விடைத்தாள்களை இயற்பியல் பேராசியர் வைத்தியநாதன் கொடுத்துக்கொண்டிருந்தார். 

எனது விடைத்தாள் திருத்தப்பட்டிருந்தது ஆனால் மதிப்பெண்கள் எதுவுமில்லை.

நான் எழுந்து அவரிடம் கேட்டேன். 

''I thought of giving zero; but zero also has a value, your paper doesn't deserve that'' என்றார். 

மொத்தம் மூன்று அகமதிப்பீட்டு தேர்வுகளில் இரண்டு சிறப்பான மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பது விதி. 

அடுத்த தேர்விலும் அதற்கு அடுத்த தேர்விலும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றேன். 

பேரா. வைத்திய நாதன் மட்டுமல்ல, பேரா. ஜனார்த்தனன், ஈஸ்வரன், கணேசன், சுகந்தி, சிவகாமசுந்தரி, தாமரைசெல்வன், மகேந்திரன் என்று ஒரு பெரிய பட்டாளமே என் முன்னேற்றதிற்காக உழைத்தது. அதிலும் பேரா. ஜனார்த்தனன் ஆங்கில இலக்கண பிழைக்கு கூட மதிப்பெண்ணை குறைத்து விடுவார். 


பத்தாம் வகுப்பில் அறிவியலில் முப்பத்து ஐந்து மதிப்பெண் பெற்று பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியியலில் 188 மதிப்பெண்கள் பெற்று இளங்கலை பட்டப்படிப்பில் 70% பெற்று முதுகலைக்கு காமராஜர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தும் கட்டணம் கட்ட பணம் கிடைக்காததால் மருத்துவ விற்பனை பிரதிநிதியாகி அதில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து சர்வதேச வணிகத்தில் நுழைந்து கானா என்னும் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் ஆக்ராவில் அமைந்துள்ள மருத்துவப்பள்ளியில் ஒரு முறை பணி நிமித்தம் விஜயம் செய்த போது அங்குள்ள மனநலத்துறை பேராசிரியர் காமே போங்க் என்பவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அங்கே வந்த அவருடைய மாணவர்கள் நேற்று அவர் நடத்திய பாடம் புரியவில்லை என்று கூறினர். 

மூளைக்குள் டோப்பமின் செல்லும் பாதைகளை பற்றிய பாடம் அது. மனநல மருத்துவத்தின் மிகச்சிக்கலான பாடங்களில் அதுவும் ஒன்று. 

நான் எனக்கு அவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்க பேராசியர் காமே திறந்த மனதுடன் அனுமதித்தார்.

மூளைக்குள் டோபமின் செல்லும் வழித்தடங்கள் பற்றி மிக எளிமையாக நாற்பது நிமிடங்களில் அவர்களுக்கு தெளிவுபட உரைத்தேன். 

பேரா. காமே போங்க் பாராட்டி நற்சான்று வழங்கினார். இவர்களுக்கு இதைவிட தெளிவாக யாராலும் புரியவைக்க முடியாது என்று பாராட்டினார். இதற்கு காரணம் நான் ஒரு பெல்ஜியம் மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்த போது பேரா. ஹெச். பி கத்தூரியா அவர்கள் கற்றுக் கொடுத்தது. 


ஆனால் இந்த பாராட்டுகள் அனைத்தும் எங்கள் தலைமையாசிரியர் கணபதி அவர்களுக்கே போய்ச்சேரும். உண்மையில், அந்த அரங்கத்தின் வாயிலில் என்னை பேரா. காமே பாராட்டிய போது அந்த பாராட்டுக்களை மானசீகமாக என் தலைமை ஆசிரியர் கணபதி அவர்கள் பாதங்களில் சமர்பித்து விட்டேன்.


என்னை செதுக்கிய அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்



No comments:

Post a Comment