Friday, October 21, 2016

விடை பெறுதல்: செனெகலிலிருந்து சென்னை வரை (19-10-2016)

விடை பெறுதல்: செனெகலிலிருந்து சென்னை வரை
19-10-2016 அன்று எனது பணிகளை முடித்துக் கொண்டு செனெகல் தேசத்தின் தலைநகரான டக்கர் நகரத்திலுள்ள சென்கோர் லியோபோல்ட் விமான நிலையம் வந்தடைந்தேன். விமானம் மாலை 5.45 மணிக்கு. ஏற்கனவே இணையதளத்தின் வழியே எனது இருக்கைகளை தேர்வு செய்திருந்தேன். விமான நிலையம் நுழைந்ததும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை எனது மூளையின் ஹிப்போகாம்பஸ் உணர்த்தியது. விமான நிலையத்தில் குளிர்சாதன வசதி முற்றுமாக செயலிழந்திருந்தது. எனது பைகளை சென்னை வரை பதிவு செய்துவிட்டு குடியேறல் (இமிக்ரேசன்) சுங்க சோதனைகள் (கஸ்டம்ஸ்) இவற்றை முடித்துக் கொண்டு நடந்த போது எனது உடல் வியர்த்து களைத்திருந்தது. உடல் எனது கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்ததை நானே உணர்ந்தேன். திடீரென பார்வை மங்கியது, தலை சுற்றியது, வாந்தி வந்தது. என்னையும் கட்டுப்படுத்த முடியாமல் வாந்தி எடுத்து அதன் மேலேயே விழப்போகும் சமயம் ''அசேவூ கம்சா சில்வூப்ளே'' என்று ஒரு குரல் தடுக்க உடல் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி போல பக்கவாட்டில் சாய்ந்தது.
எரிகின்ற கோளம் ஒன்று விளிம்பில் இருந்து மையம் நோக்கி அணைந்து கொண்டே வருவது போன்று வெளிச்சம் குறைந்து இருளை நோக்கி பயணித்தது என் பார்வை. நினைவுகள் தவறத் தொடங்கின.
''ஜெயா...எங்கே அ...ம்...மா...அம்மா சொல்லு'' எனது முதல் பள்ளி ஆசிரியை தமயந்தி வந்தார். எனக்கு 7 வயது வரை பேச்சு சரியாக வராது.
''அ..ங்...கு....
''அங்கு இல்லடா....அம்மா...'' அவர் முயற்சியில் தொடர் தோல்வி.
''அம்மா....எனக்கு என் அம்மா வைக்கும் கோலா உருண்டை குழம்பு ரொம்பப் பிடிக்கும்...அம்மா இப்போ இல்லை...ஜூன் 19ஆம் தேதி இறந்து விட்டார்...நானும் போய் சேர்ந்து விட்டால் அம்மா கோலா உருண்டை குழம்பு செய்து கொடுப்பாரா''
''நிறைய வேலைகள் மீதம் இருக்கின்றனவே...என்னை நம்பி 2கோடிகளை முதலீடு செய்த என் நிறுவன இயக்குனர் திரு.கல்யாணராமன், அதற்கு முழு உத்திரவாதம் அளித்த எனது உயர் அதிகாரி திரு.பார்த்தசாரதி...அவ்வளவும் அவ்வளவுதானா? என்னை நம்பி முனைவர். செல்வராஜும், அவர் குழுவும் கிழக்காசிய நாடுகளில் மருந்துகளை பதிவு செய்ய மிகவும் கடுமையான உடல் உழைப்பையும் அறிவாற்றலயும் கோரும் ஏ.சி.டி.டி டொசியர்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் போக்கா...?
அது சரி...ஏன் என் நினைவுகள் கோர்வையாக இல்லாமல் சிதறுகின்றன?
இந்த மாதம் தான் என் மகன் அப்புவிற்கு சைக்கிள் வாங்கினோம். அதற்கு இரண்டாவது முறையாக காற்றுக் கூட அடிக்கவில்லை. அவனுக்கு அடிக்கத் தெரியாது பாவம். என் மனைவிக்கும் தெரியாது. நான் போய்விட்டால் அவன் சைக்கிளுக்கு யார் காற்றடிப்பது?
நான் எங்கே இருக்கிறேன்...டக்கார்...செனெகல்...என் சடலத்தை யாரிடம் ஒப்படைப்பார்கள்....எங்கள் நிறுவன முகவரான திருமதி. ஃபதூ ஞாவிடமா...அல்லது நான் வேலை பார்க்கும் சென்னைக்கா...அல்லது நான் பிறந்து வளர்ந்த மதுரைக்கா? இதை யார் முடிவு செய்வார்கள்?
நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளனவே....ஆண்டாள் பாசுரங்களை ஆராய்ச்சி செய்ய குறிப்பு எடுத்து வைத்திருந்தேன்...சங்ககால பெண்புலவர்கள் பற்றி படிக்க நூல்கள் தேர்வு செய்திருந்தேன்....மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத...முத்துடைத்தாமம்...வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி...கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ...இல்லையே...ஆண்டாள் பாசுரம் இப்படி இராதே...என் நினைவுகள் எங்கே....ஏன் அவை சிதறுண்டு மதயானை அழித்த செவ்வாழைத் தோட்டமாக காட்சி தருகின்றன?...நிறைய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
நான் மற்றவர்களுக்கு கொடுத்ததும் எனக்கு கொடுத்துக் கொண்டதுமாக...நிறைய உள்ளனவே....!
சுஜாதா வாட்சும் மேக்கப் கிட்டும் கேட்டாள்; ஏ.வி.எஸ். பக்கார்டி பிளாக் வாங்கி வரச்சொன்னார்; பாலாஜி தன் மகனுக்கு சாக்லேட் வாங்க சொன்னான்...ராஜி மம்மி மட்டும் தான் ''நீங்க நல்லபடியா போய்ட்டு வாங்க அதுவே போதும் எனக்குன்னு ஒண்ணும் வேணாம்'' என்றார். பிரதிபலன் என்று எதையுமே எதிர்பாராத அன்பு ராஜி மம்மியின் அன்பு. திருமதி. சங்கர நாராயணனுக்கு மாம்பழ வண்ணப்பட்டுப் புடவை வாங்கி தருவதாக உறுதி அளித்திருந்தேன். அது வளர்ந்து பெரியாளான பின்னாடி தான் என்றாலும் இப்போது எல்லாமே இங்கேயே முடிந்து விடும் போலிருக்கிறதே...! இது என்ன விபரீதம்? எனக்கு ஒன்றும் அவ்வளவு வயது ஆகவில்லையே...!கற்க வேண்டிய நூல்களும், கேட்க வேண்டிய பாடல்களும், ரசிக்க வேண்டிய இசை தொகுப்புகளும் நிறைய உள்ளனவே...! இந்துத்துவவாதிகள் பாகிஸ்தானின் கலைஞர்களை நிராகரித்து தேசபக்தியை நிரூபித்த வேளையில் கஜல் கடவுளான மெஹ்தி ஹசனை ரசித்து கொண்டிருந்தேனே...சதத் ஹாசன் மண்டோவை என்னால் நிராகரிக்க  முடியுமா இந்த மடையர்களுக்காக? மானுடத்தின் மீது தணியாத காதல் கொண்ட எவரும் இந்த இருவரையும் எப்படி புறக்கணிப்பது? காதல்...இந்த உலகை இயக்கும் மந்திரச்சொல்...நான் காதலித்த அனைத்து பெண்களும் என் முன்னே வந்தார்கள்...அனைவரும் என்னை புறக்கணித்தவர்கள். அவர்கள் நகர்ந்த உடனேயே என்னை காதலித்த அனைத்து பெண்களும் வந்திருந்தார்கள். அதில் ஒரு பெண்மணி தனது மகளுடனும் பேரக் குழந்தையோடும் வந்து என்னை அந்த சிறுகுழந்தையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?
நான் திரிகோணமிதி, கால்குலஸ் இரண்டையுமே கற்றுத்தரும்படி என் மனைவியிடம் விண்ணப்பித்திருந்தேன். அவளும் சரி என்று சொன்னாள். இன்னும் முதல் பாடம் கூட ஆரம்பிக்கவில்லை...அதற்குள்ளாகவே இப்படியா....!
தேசியத்தலைவர் வந்தார் ''இவரை என்னென்று பேர் சொல்லி அழைப்பீர்கள்?...அருகிலிருந்த அருள், ''அன்பு என்று பெயர் கொடுத்தம் அண்ணா''.
''இவ்வளவு உதவிகள் செய்யும் இவருக்கு ஏன் இவ்வளவு சின்னப்பெயர்?'' சிரித்தார்...மறைந்தார். ''தம்பி...அடுத்ததாக கொஞ்சம் ரத்தம் தேவைப்படுகிறது...ஓயாத அலைகள் முடியும் வரை நாங்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்திட்டுத்தான் இருப்பம்...பாத்திக்கிடுங்க...''அருள் இப்போது எங்கே? கடைசியாக அவரை மதுரை ரயில் நிலையத்தில் பார்த்தேன்...ரயிலில் புத்தகம் படிக்க எனக்கு பிடிக்கும். அதுவும் இயற்பியல் என்றால் சிறப்பு. அணுவின் வெளிவட்டாரத்தில் சுழலும் எலக்ட்ரான் அதன் பாதை, டீப்ராக்லியின் இருமை தத்துவம், நீல்ஸ்போர் எப்படி அந்த எலக்ட்ரான் பயணிக்கும் போது அதன் கோண திசைவேகமாற்றம் (Angular Momentum) nh/2π இன் மடங்குகளாக இருக்கும் என்று ஊகித்தார்....ஷ்ரோடிங்கர் முப்பரிமாண வடிவப் பெட்டியில் ஒரு எலக்ட்ரான் பயணிக்க செலவாகும் ஆற்றலை எவ்வாறு துல்லியமாக கணித்தார்...அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததா...போர் நடக்கும் போது ஒருவனால் இப்படியெல்லாம் சிந்திக்க இயலுமா? என்னால் ஏன் சிந்திக்க இயலவில்லை...என் சிந்தனை எங்கே...? மெண்டலீஃப் எப்படி தனிமங்களை அட்டவணை இட்டார்…ஏன்? மின்மினிப்பூச்சி ஒளிவிடுவது எதனால் என்பதை சில நாட்களுக்கு முன் தான் அறிந்து கொண்டேன். அதன் உடலில் இருக்கும் லூசிபெரின் என்னும் நிறமி ஒளி உமிழும் தன்மை கொண்டது. தனது உணவை செரித்து லூசிஃபெரேஸ் என்னும் நொதியை உற்பத்தி செய்து கொண்டு அது ஓளி உமிழுகிறது. இந்த தகவலை கற்று என்ன பயன்? ஏன் இம்மாதிரி தகவலை சேர்த்து என் மூளையை குப்பைக் கூடையாக்கி வைத்திருக்கிறேன். இந்த குப்பைக் கூடையை என்று சுத்தம் செய்வது? நான் செய்ய வேண்டுமா...எப்போது? இந்நேரம் திருமூலர் சொன்ன மாதரி பேரை நீக்கி பிணம் என்று பேரிட்டிருப்பார்களோ...கூரையிலா காட்டிடை கொண்டு போய் எரிப்பார்களோ...நீரில் மூழ்கி நினைப்பொழிந்து போவார்களோ என் சுற்றத்தார்...எனக்கு பெண் குழந்தைகள் இல்லை...என் அண்ணன்மார்களின் பெண்பிள்ளைகள் தான் நீர்மாலை எடுக்க வேண்டும்...ஆனால் நிலைமையை பார்த்தால் அதற்கு அவசியமே இல்லை போலுள்ளதே...! இது என்ன புதுக் குழப்பம்? குழப்பம்...ஏன் குழம்புகிறேன்...மரணத்தை நெருங்கும் வேளையில் சிந்தனை தொட்டி உடைந்து சிதறுகிறது போலும்...நான் யார்? கற்றபடியும் கற்பித்த படியும் இருந்த பேராசிரியன் அல்லவா...நான் இன்னும் அடிக்கோடிட வேண்டிய காவிய வரிகள், மெய்யுருக்கள், விவாதிக்க வேண்டிய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் முழுக்க ஆற்றலாகவும் பருப்பொருளாகவும் விரவிக் கிடக்கிறதே...அதை எப்படி ஒருங்கிணைப்பது? நானும் பஞ்ச பூதங்களோடு கலந்து விடுவதுதான் இதற்கு தீர்வா? அல்லது என் சிந்தனைகளை எங்கெங்கு விதைத்தேனோ அவையனைத்தும் எனது மாற்றுரு தானே...அப்படித்தானே வள்ளுவனும், கம்பனும், இன்னும் சிலம்பெடுத்த தக்கோன், சீத்தலை சாத்தன், ஒக்கூர் மாசாத்தி, காக்கை பாடினி நச்செள்ளை, நன்னாகன், நப்பசலை என்று இன்று வரை தொடரும் அனைவரும் வாழ்கிறார்கள்..அவர்கள் காலம் கடந்தவர்கள்...வாழ்கிறார்கள்...காலமாகி விட்டார்கள்...ஆனால் நான்? காலம் என்பது பிரபஞ்சத்தின் நான்காவது பரிமாணம் என்றாரே ஐன்ஸ்டீன்....அதை வழி மொழிந்தாரே ஸ்டீபன் ஹாக்கின்ஸ். அப்படி என்றால் நானும் அந்த பரிமாணத்தின் ஒரு பகுதி ஆகி விட்டேனா? நிறைய வேலைகள் மீதம் உள்ளனவே...அப்பு ஃபெரெரோ ரோச்சர் சாக்லேட் கேட்டான். அதை துபாயில் தான் வாங்க வேண்டும். ஆனால் உயிரற்ற சடலத்திற்கு சாக்லேட் விற்பார்களா? அப்படியே அவர்கள் விற்றாலும் அதை எப்படி அப்பு சாப்பிடுவான்?
எல்லையில்லா பால்வீதியில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பது போல என் சிந்தை சிதறி தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. முற்றிலும் சுய நினைவிழந்த எனக்கு என் ரத்தநாளத்தைத் தேடி ஒரு ஆப்பிரிக்க செவிலி மருந்தை ஏற்றினார். ஊசி ரத்தநாளத்தில் ஏற்படுத்திய வலி மூளையை மீண்டும் மெதுவாக சுயநினைவிற்கு கொண்டு வந்தது.
ஆப்பிரிக்க செவிலி மெதுவாக கேட்டார் ''செபோ...கமாவு சாலே?''
எனக்குக் கூடக் கேட்காத அலைவரிசையில் ''வ்வி..சவா பியென்...மெர்சி'' என்றேன்.
''வூ அவே ப்யூதே அல்கோல்?'' (நீ மது அருந்தியிருக்கிறாயா?)
''ந..ஜே ந ப்யுவேபா அல்கோல்'' (இல்லை...நான் மது அருந்துவதில்லை)
''செ கி பாசே?'' (என்ன நடந்தது?)
''ஜேனேசேபா...'' (எனக்கு தெரியவில்லை)
'கமான் தலே வூ.?'' (இப்போ நன்றாக இருக்கிறாயா?)
''சவா பியேன்...மெர்சி..மம்மா'' (நன்றாக இருக்கிறேன் அம்மா)
என்னை கொண்டு வந்து எமிரேட்ஸ் விமானத்திற்கு செல்லும் வாயிலில் கொண்டு வந்து அமர வைத்தார். பத்து மணி நேர தொடர் விமானப்பயணம் குறித்த பயம் வர ஆரம்பித்தது.

1 comment: