Saturday, August 19, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(2) - 19-08-2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(2)
கினியாவின் தலைநகரில் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஜன்னல் வழியாக கொனாக்ரி நகரத்தைப் பார்த்தேன். ஒரு நகரமே தகரத்தை ஆடையாக்கி இழுத்து போர்த்தி இருந்த மாதிரி தோற்றமளித்தது. நெல்வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே தென்னை வளர்ந்து நிற்பதை போன்று தகரக் கூரைகளுக்கு நடுவே சில உயரமான கட்டிடங்கள் தென்பட்டன. குடியேறல் துறையில் எனது கடவுச்சீட்டைப் பார்த்த அதிகாரி உங்களை அழைத்துச் செல்ல தூதரகத்திலிருந்து கார் வந்திருப்பதாக சொன்னார். சொன்னபடியே ஓட்டுனரும் பாதுகாப்பு அதிகாரியும் தயாராக இருந்தனர். சுமார் 15கி.மீ தூரத்தை கடக்க ஒண்ணரை மணி நேரமானது.  குண்டும் குழியுமான சாலைகள். நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நிச்சயம். நடுச்சாலையில் இளைஞர்களும் யுவதிகளும் தண்ணீர் பொட்டலங்கள், கடலைபருப்பு, செருப்பு, டார்ச் லைட்டுகள், எலி மருந்து, ஜட்டி,பனியன் என அனைத்தையும் சாலையின் இருமருங்கிலும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

கினியா தங்கமும் வைரமும் அலுமினியத் தாதுப்பொருளான பாக்சைட் மற்றும் இரும்பு போன்ற கனிம வளங்கள் இருந்தும் வறுமையில் வாடுகிறது. வல்லாதிக்க நாடுகளின் சுரண்டலாக இருக்குமோ என ஆராய்ந்த பொழுது இவற்றை சுரண்டுபவர்களில் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்பதை நினைக்கும் போது பெருமை கொள்ள இயலவில்லை. இங்கிருந்து தங்கம் மண்ணோடு அடிமாட்டு விலைக்கு (கௌ பக்தாஸ் மன்னிக்க வேணும்) வாங்கி அதை துபாயில் விற்பவர்கள் மார்வாடிகள். வைரத்தை வாங்கி ஹாங்காங் அல்லது பெல்ஜியத்தில் பட்டை தீட்டி சர்வதேச சந்தையில் விற்பவர்கள் குஜராத்திகள். இரும்பும் அலுமினியமும் மண்ணாகப் போய்விட்டு இந்த மண்ணின் மைந்தர்கள் பிச்சை எடுக்க சட்டி, பானையாக திரும்பி வருகிறது. மூலதனங்கள் பாய்மமாக மாறி சர்வதேச சந்தையை ஒரு குக்கிராமமாக மாற்றி விட்ட சூழலில் இம்மக்கள் தங்கள் காலுக்கு கீழே உள்ள செல்வத்தை அன்னியர்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு பஞ்சபராதாரியாக வாழ்கிறார்கள். இதை ஒரு சராசரி மனிதனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வயிறு வீங்கிய குழந்தைகள், கல்வியில்லா இளைஞர்கள், வேலையில்லா ஜனத்திரள் என்று ஒரு தேசமே விபத்தில் அடிபட்டு ரத்தமிழந்த ஒருவன் உயிர்வளிக்கு (ஆக்சிஜன்) ஏங்குபவனைப் போல் தோற்றமளித்தது.

கி.பி 15ஆம் நூற்றாண்டில் அடிமை சந்தையை போர்த்துகீசியர்கள் துவக்கிய போது கினியாவும் செனெகலும் முக்கியமான மையங்களாக இருந்தன. மனித வரலாற்றில் தொற்று நோய்கள் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது இந்த பிராந்தியத்தில் தான். செனெகலுக்கு அருகில் இருக்கும் கோரே தீவில் தான் பிளேக் என்னு உயிர்க்கொல்லி நோய் தாக்கியது. அன்றிலிருந்து இன்று வரை நோய்களின் தாயகமாகவே இந்த பிராந்தியம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. பிளேக்கிலிருந்து எபோலா வரை என்று தனி ஆவர்த்தனமே வாசிக்கலாம். அவ்வளவு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எபோலாவின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்று கற்றுத்தரும் நமது பாடத்திட்டம் அது ஏன் என்று கேள்வி கேட்க கற்றுத்தரவில்லை. நிதர்சனம் என்பது ஆப்பிரிக்கா இருண்ட கண்டமாக பராமரிக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் குப்பை தொட்டி ஆப்பிரிக்கா. ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பயன்படுத்தி தூக்கி எறிந்த ஓட்டை ஒடிசலான வாகனங்களே இங்கே போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கு ஆடை என்பதே ஏற்கனவே ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் ஆடைகள் தான்., உள்ளாடைகள் உட்பட. இங்கே வந்து குவியும் இந்த ஆடைகளை துவைத்து சந்தையில் விற்கிறார்கள். அதுவே அவர்கள் மானத்தை மறைக்கின்றது.

மழை எப்போதும் பெய்யும்; வெயில் எப்போதும்  அடிக்கும். எப்போது மழை பெய்யும் எப்போது வெயிலடிக்கும் என்பதை எந்த ஊர் ரமணனும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் பழகிப்போன மக்கள் இவற்றை பற்றி கவலை கொள்வது கிடையாது. கொளுத்தும் வெயிலில் கோட் சூட் போட்டுக்கொண்டு நடக்கும் மக்களை பார்க்க முடியும். அதுவும் அமெரிக்காவில் யாரோ போட்டு தூக்கி எறிந்த சாயம் போன ஒன்று. பெண்கள் அணியும் ஜீன்ஸ் பேண்டும் அவ்வாறே. உதட்டு சாயம் இல்லாத பெண்களை காண்பது அரிது. கனத்த கருப்பு உதடுகளுக்கு சிவப்பு சாயம் துளியும் பொருந்தாது என்பதை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.

கினியாவின் பணத்திற்கு கினியா ஃப்ராங்க் என்று பெயர் அதற்கு சர்வதேச சந்தையில் மதிப்பு கிடையாது. ஒரு யூரோவிற்கு கினியாவின் பணம் 10500 தருகிறார்கள். நான் தங்கியிருந்த ஓட்டலில் தெரியாத்தனமாக 50யூரோவை மாற்றினேன். அவர்களோ 5,25,000 கினியன் ஃப்ராங்க் தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழித்தேன். நமது ஒரு ரூபாய் இவர்கள் மதிப்பில் 150 கினியன் ஃப்ராங்க். ஒண்ணரை லிட்டர் தண்ணீர் 6000க்கு விற்கப்படுகிறது (நமது ரூபாய்க்கு 40). ஆண்களை விட பெண்களே அதிகம் உழைக்கிறார்கள். குடும்பத்தை பேணுகிறார்கள். அதிகம் குழந்தை பெறுகிறார்கள் பத்து பெற்றால் மூன்று அல்லது நான்கு பிழைக்கிறது. குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகம் உள்ள நாடு கினியா. சமூக பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியில் நடமாடும் சூழல் முற்றிலுமாக இல்லை. நான் இந்திய ஒன்றியத்திற்கான கௌரவ தூதரான திரு. அசோக் வாஸ்வானி அவர்களை சந்திக்க சென்ற போது ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரி உடன் வந்தார். அன்றிலிருந்து நான் செனிகல் தலை நகரான டக்கார் திரும்பும்வரை அவர் என்னுடனே இருந்தார். அது ஒரு அசூயை உணர்வை ஏற்படுத்தினாலும் பாதுகாப்பு என்பது முதன்மையானது என்பதால் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
(தொடரும்...)



No comments:

Post a Comment