Thursday, August 17, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் – கினியா (1) 18-08-2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா
கடந்த வாரம் அலுவலகம் வந்த நண்பர் ரகு ''மழைக்காலத்தில் மாஸ்கோ'' என்ற பயணக்கட்டுரை தேசத்தின் குரல் இதழில் வெளியான போது நன்கு வரவேற்பு பெற்றதாகவும் நான் தொடர்ந்து ஏன் உக்ரேன் மற்றும் கஜகஸ்தான் பயணத்தைப் பற்றி எழுதவில்லை என்றார். எழுத நேரம் கிடைக்கவில்லை என்னும் வழக்கமாக சொல்லும் பதிலையே சொல்லி வைத்தேன்.  இந்த முறை ஆப்பிரிக்கா பயணஅனுபவங்களை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல என்றும் வேலைச்சுமைக்கு இடையே களைப்பு நிவாரணியாக கருதியே நான் எழுதுகிறேன் என்றும் சொன்னேன். அவர் சமாதானமானதாக தெரியவில்லை. எனவே எழுதத் தூண்டிய தோழர். ரகுவிற்கு இந்த பயணக் கட்டுரை சமர்ப்பணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து தேசங்களுக்கும் பயணித்திருந்த போதிலும் கினியா எனப்படும் தேசத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறை. அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் ஆப்பிரிக்காவின் மூக்கு என வர்ணிக்கப்படும் கினியாவின் தலை நகரமான கொனாக்ரிக்கு பயணம் மேற்கொள்வது என்று முடிவான சூழலில் இவ்வளவு தூரம் சென்ற பிறகு அருகே இருக்கும் செனிகலுக்கும் ஐவரி கோஸ்ட்டிற்கு போய்விட்டு வர வேண்டியது தானே என்று எங்கள் நிறுவன இயக்குனர் பணித்தார். அதுக்கென்ன போனா போச்சு என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு பயணத்திற்கு ஆயத்தமானேன்.
சென்னையிலிருந்து துபாய் நான்கு மணி நேரப் பயணம். துபாயிலிருந்து கொனாக்ரிக்கு பத்து மணி நேரப் பயணம்...இடைவிடா பயணம். தூரம் 7457 கி,மீ. மட்டுமே. பயணம் துவங்கியது ஆகஸ்ட் 15தேதி. சுதந்திரதினம் என்பதால் விமான நிலையத்தில் எட்டடுக்கு பாதுகாப்பு என்று புதிய தலைமுறை செய்தி கூறியது. எனவே இரவு 9.45 மணி விமானத்திற்கு 6.30மணிக்கே கிளம்பினேன். அது என்ன எட்டடுக்கு பாதுகாப்பு என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தது. விமான நிலையத்தின் நுழைவாயிலில் கார் நுழையும் போது ஓட்டுனரை வினவினேன் ''அது என்னது பாஸ்...எட்டடுக்கு பாதுகாப்பு...ஒண்ணையும் காணோம்...?'
''இதோ இருக்கே....இந்த பக்கம் நாலு...அந்த பக்கம் நாலு...அவ்வளவுதான்...'' என்றார். இரும்பு தடுப்புகள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கூட்டி பார்த்தால் ஏழு தடுப்புக்கள் தான் இருந்தன. அடப்பாவிகளா...இதுலயுமா மோசடி என்று வியந்தபடி விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் இறங்கினேன். வழக்கம் போல கூட்டம் களை கட்டியது. எமிரேட்ஸ் விமானத்தின் போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு குடியேறல் பிரிவில் கடவுசீட்டில் முத்திரை பெற்றுகொண்டு பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்ற போது பாஜக எம்.பி இல.கணேசனும் இருந்தார். அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அதற்கான 1992ஆம் ஆண்டு வரலாற்றை விவரிக்க இங்கே இடமில்லை என்பதால் கடந்து செல்கிறேன்.

விமானத்தில் எனக்கு வர்த்தக வகுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. நல்ல வசதியான இருக்கை. சுவையான உணவு பரிமாறப்பட்டது. துபாய் வந்திறங்கிய போது 12.30 மணி. அடுத்த விமானம் 7.55 மணிக்கு. எமிரேட்ஸ் நிறுவனத்தின் விருந்தினர் கூடத்தில் இடம் பெற்று, வசதிகள் இருந்தும் தூங்க முயற்சித்து தோற்றுப்போனேன். கைவசம் இருந்த எம்.வி.வெங்கட் ராம் எழுதிய காதுகள் நாவலை வாசிக்க துவங்கினேன். 1993 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் விருது பெற்ற நாவல். ஆடிட்டரி ஹல்லூசினேசன் என்னும் வினோதமான மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் என்னும் கதாநாயகனின் கதை. சற்றே பிசகினாலும் ஆபாசமென வாசக சமூகம் முத்திரை குத்த சாத்தியமிக்க கதையை தனது அசாத்திய எழுத்து வன்மையினால் பேரிலக்கியமாக உருவாக்கியிருந்தார் எம்.வி.வி. 
சற்றேறக்குறைய 17 ஆண்டுகள் மூளை, நரம்பியல் மற்றும் மனோத்தத்துவத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாசிப்பனுவத்தை சுவாரசியமாக்கியிருந்தது. படிக்கும் போதே என் காதுகளுக்குள்ளும் குரல்கள் கேட்க துவங்கின. உற்று கவனித்த போது ''என்னோட ரெண்டு கோடி எங்கேடா?'' என்று ஒரு குரல் துள்ளியமாக கேட்டது. அது எங்கள் நிறுவன நிதித்துறை தலைவர் திரு.துர்கா பிரசாத்தினுடையது. நான் அந்த இரண்டு கோடி ரூபாயை எனக்காக வாங்கவில்லை. எனது ஏற்றுமதி துறைக்கான அடிப்படை கட்டுமான மற்றும் நிர்வாக செலவிற்காக வாங்கியது தான். இருந்த போதிலும் திருப்பி தந்து விடுகிறேன் என்று நான் சொன்ன காலஅளவிற்குள் திருப்பித்தர இயலாததால் நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி இது தான். எனவே, வெளி இடங்களில் அவரை காண நேர்ந்தால் எதிர் சந்துக்குள் சென்று மறைந்து கொள்வேன். அலுவலகம் என்றால் என் முதன்மை அதிகாரி திரு. பார்த்தசாரதி அவர்களின் முதுகின் பின்னால் ஒளிந்து கொள்வேன். 
பயணம் மிகச்சரியாக 7.55க்கு துவங்கியது. முதன்மை விமானி நபில் அலி அஹ்மெத் மற்றும் துணைவிமானி அல்.அலி கத்ரி இருவரும் விமானம் செல்லும் பாதையையும் பயணிக்கும் நேரத்தையும் அரபியிலும் பின்பு ஆங்கிலத்திலும் விளக்கினார்கள். 7457 கி,மீ தூரத்தை துபாய், ஜெட்டா, டெஹ்ரான், சூடான், எத்தியோப்பியா, சாட், நைஜீரியா, நீஜர், ஐவரி கோஸ்ட், சியாராலியோன் வழியாக பூமிக்கு மேலே 40000 அடி உயரத்தில் பறக்கும் என்றும் பயணிகள் தின்று விட்டு உறங்குமாறும் பணித்தார்கள். கடுமையான அலுப்பு தரும் பயணம் அது. தொலைக்காட்சியில் தமிழ்த்திரைப்படங்களின் வரிசையில் அதே கண்கள் (புதியது), அச்சம் என்பது மடைமையடா, நானும் ரவுடி தான், துருவங்கள் பதினாறு போன்ற தீஞ்சுவை, மாஞ்சுவை காவியங்கள் ஓவியங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏற்கனவே துருவங்கள் பதினாறு பார்த்து விட்ட நிலையில் நம்பிக்கை தரும் இயக்குனரான கவுதம் மேனனின் ''அச்சம் என்பது மடைமையடா''வை தேர்ந்தெடுத்தேன். டைட்டிலில் இசை ஏ.ஆர்..ரகுமான் என்று பார்த்தவுடனேயே சுவாரசியம் பாதியாக குறைந்தது. படமும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. சிம்பு தனது புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் கன்யாகுமரி கிளம்பியதும் நானும் டி.வியை ஆஃப் செய்துவிட்டு காதுகள் நாவலுக்குள் நுழைந்தேன். (தொடரும்)

1 comment:

  1. First installment has increased the expectation. Waiting for the next one.
    Nice start Sir.

    ReplyDelete