Wednesday, August 8, 2018

தி.மு.க = திருக்குவளை முத்துவேல் கருணாநிதி

கடந்த பத்து தினங்களாக இருந்து வந்த வேதனை சற்றே தணிந்தது. அந்த தொண்ணூற்றைந்து வயது உயிரை மருத்துவர்கள் போராடித் தான் காத்து வந்தனர். ஆயினும் பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும், புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்; மலர்ந்தன உதிரும்; உதிர்ந்தன மலரும் என்பதை அறியாதவர் அல்ல கருணாநிதியும் அவரது தொண்டர்களும். எண்பது ஆண்டு கால பொதுவாழ்வில் கருணாநிதி நமக்கு விட்டு சென்றிருக்கும் படிப்பினைகள் ஏராளம். அதை உவத்தல் காய்த்தலின்றி பதிவிடுவதே எனது நோக்கம். நன்கு சூடேற்றப்பட்ட கத்தி வெண்ணெயை வெட்டுவது போன்று ஒரு அலசலை முன்வைக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.



என் சமகாலச் சமூகம் கண்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் அசைக்க இயலா தலைவர் கருணாநிதி என்பதை முதலிலேயே பதிவு செய்து விடுகிறேன்.



திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுக்கு ''கலைஞர்'' எதிரிக்கட்சி நண்பர்களுக்கு ''தீயசக்தி'' ஆயினும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி கருணாநிதி என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள்.



நான் பிறந்த போது கருணாநிதி தான் தமிழகத்தின் முதல்வர். நான் பள்ளி செல்ல துவங்கிய போது ஆட்சியை கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் இழந்திருந்தார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை அவரை கருணாநிதியால் வெல்ல இயலவில்லை. ஆனால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்று பேசும் உடன்பிறப்புகள் அவரால் ஏன் எம்.ஜி.ஆரை வெல்ல முடியவில்லை என்ற கேள்விக்கு மௌனத்தையே பதிலாக தருகிறார்கள். உயர்நிலைப்பள்ளி முடித்த போது கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. இதற்கு பின்னால் சர்வதேச ''மாமா'' சு. சாமியும் அன்றைய பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் இருந்த சுபோத்கான் சகாயும் இருந்தனர். அதன் பின்பு சு.மாமா ராஜிவ்காந்தியை போட்டுத்தள்ளி விட்டு பழியை தி.மு.க மீது போட ஜெயலலிதா முதல்வரானார்.

ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் கேலிக்கூத்தாக்கிய ஜெ.வின் அந்த ஆட்சி 96ல் நிறைவு பெறும் போது கருணாநிதி மீண்டும் முதல்வரானார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமிழக அரசியலை தன்னை சுற்றி நிகழுமாறு பார்த்துக் கொள்வதில் கருணாநிதி வல்லவர். ஆட்சியில் இருக்கும் போது சட்டம் ஒழுங்கு குறித்த அக்கறை அவர் பதவியை விட்டு இறங்கியதும் தலைகீழாக மாறுவது கண்கூடு.



தனது ஆட்சியில் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு கட்டணமாக அவரது குடும்பத்தாரும் அமைச்சர் பெருமக்களும் சில ஆயிரம் கோடிகளை எடுத்துக் கொண்டனர் என்பதிலும் ஐயமில்லை. அவருடைய சுற்றத்தாரின் சொத்துக்கள், மேனாள் அமைச்சர்களின் சொத்துக்களின் விவரங்களை எடுத்து அலசினால் புரியும்.

1) சுயமரியாதை திருமணச்சட்டம்

2) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்

3) முதல் பட்டதாரி இட ஒதுக்கீடு

4) மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்

5) தகவல் தொழிட்நுட்ப தொழிற்பேட்டைகள்

6) கனரக இயந்திர தொழிற்சாலைகள்

7) மருத்துவ காப்பீட்டு திட்டம்

8) பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்

மேற்கண்ட கருணாநிதியின் திட்டங்கள் எதுவுமே அவரை தொடர்ச்சியாக பதவியில் இருக்க விடவில்லை என்பதே யதார்த்தம், இலவசம் என்று தூக்கி கொடுத்த பிறகும் கூட. இதன் பின்னே இருக்கும் சித்தாந்த அரசியல் அல்லது வெகுஜன அரசியல் என்னவென்று நாம் ஆராய்ந்தே தீர வேண்டும்.



கருணாநிதியின் அரசியலை கூர்ந்து நான் கவனிக்கத் தொடங்கியது எனது பதின்ம வயதுகளில் தான். அப்போது மதுரையின் மேலமாசி வீதி -வ்டக்கு மாசி வீதி சந்திப்பில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும். நள்ளிரவு 11 மணிக்கு மேல் தான் கருணாநிதி பேசத்துவங்குவார். அது ஒண்ணரை மணி வரை நீளும். பேச்சின் இடையே வரும் இலக்கிய மேற்கோள்கள், சிறுகதைகள், சிலேடைகள் என ரசிக்கத்தக்க கூறுகள் ஏராளமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அதற்கு முன்பு அதிமுகவினர் கூட்டம் நடத்தியிருந்தால் அதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தரும்படி அவரது உரை அமையும். (சான்று: எம்.ஜி,ஆரை திமுகவினர் மலையாளத்தான் என்று வசை பாட அதற்கு பதில் தந்த எம்.ஜி.ஆர் தனது பூர்வீகம் தஞ்சை என்றும் தான் மன்றாடியர் பரம்பரை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு கருணாநிதியின் பதில்; ''ஆம் அவர் மன்றாடியர் பரம்பரை தான் டெல்லியில் ''மன்றாடிய பரம்பரை'')

கருணாநிதியிடம் இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அவரது உழைப்பு. தனது வாழ்நாளின் இறுதிவரையிலும் அரசியல் பணிகளை செய்து கொண்டே இருந்தார். உடல் நலம் பேண தேவையான பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது சமரமற்ற உணவு முறை கவனிக்கத்தக்க ஒன்று. அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று இறந்தவுடன் அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். இது நடந்தது அவருடைய அறுபதாவது அகவையில். ஆட்சியில் இருப்பவருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது அவருக்கு பிடித்தமான ஒன்று. எம்,ஜி.ஆர் ஆட்சியின் பட்ஜெட் ரகசியங்கள், கோப்புகளின் நகர்வு, திட்டங்களில் நடைபெறும் பேரங்கள் என்று அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பார். எனவே எம்.ஜி.ஆர் சாராய வியாபாரிகள் தருவதை கருணாநிதியிடம் பகிர்ந்து கொண்டதாக கூட ஐ.ஏ.எஸ் வட்டாரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ''நீங்க தானே தலைவரே ஆட்சியில இருக்கீங்க...அவருக்கு எதுக்கு கொடுக்கணும்..''என்று சாராயம் உற்பத்தி செய்யும் தேசபக்தர்கள் கேட்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் முறைத்தாக தகவல்.



விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இல்லை. அது அதிமுகவினர் வணங்கும் இதய தெய்வமாக இருந்தாலும் சரி, திமுகவினர் போற்றி புகழும் கருணாநிதியாக இருந்தாலும் சரி குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலே நமது மரபு.

கருணாநிதி தவறிய தருணங்கள் என்று நிறைய உண்டு. கண்ணதாசன் கூறியதைப் போன்று வாழ்வில் ஒரு கட்டத்திற்கு பின்னால் தனது குடும்பம் சுற்றியே அவரது அரசியலை நகர்த்தினார். இதற்காக இனநலனை கூட காவு கொடுக்க அவர் தயங்கியதில்லை என்பது எனது அவதானிப்பு. இதை மறுப்பவர்கள் என்னோடு விவாதம் செய்யலாம். அது அறிவுப்பூர்வமானதாகவும் சான்றுகளின் அடிப்படையிலும் அமைதல் வேண்டும்.



முதலாவதாக நெருக்கடி நிலை விவகாரம். நெருக்கடி நிலையின் போது மிகவும் பாதிக்கப்பட்டது திமுக தான். எண்ணற்ற தொண்டர்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்தனர். ஆனால் அதே இந்திரா காந்தியை அழைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார். நெருக்கடி நிலையில் இழந்த உயிர்களின் மதிப்பை பற்றி யோசிக்கவே இல்லை. சர்க்காரியா கமிசன் அறிக்கையை வைத்து நடுவண் அரசு மிரட்டியதாக தகவல்.

தமிழ்மொழியை நீதிமன்ற அலுவல் மொழியாக பத்தாண்டு காலம் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த போது சாதிக்கவே முடியவில்லை. காரணம் மந்திரி பதவி மீது இருந்த அக்கறை தமிழ்மொழி மீது இல்லை என்பது வெள்ளிடை மலை. மும்மொழிக்கொள்கை, இருமொழிக்கொள்கை என்று பல்வேறு நாமகரணங்கள் சூட்டப்பட்டாலும் ஆட்சிமொழிக் கொள்கையை பற்றி பேசக்கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் உறுதிமொழி வாங்கிவிட்டு பதவிகள் தந்தார்களோ என்னவோ?

கருணாநிதி பதவி பேரத்தை மிகத்திறமையாக நடத்துவதில் வல்லவர். தனது மகன் அழகிரிக்கு யாதொரு தகுதியும் இல்லை என்று தெரிந்தும் உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையை போராடி பெற்றார். இதன் பொருள் அழகிரி இந்த துறையில் வல்லவர் என்பதாலோ அல்லது இந்திய உரத்துறை/மருந்துப்பொருள் உற்பத்தி/விற்பனை துறை/ வேதிப்பொருட்கள் துறையில் தற்சார்பு அடைவது என்ற திமுகவின் இலட்சிய வேட்கையினாலோ அல்ல. சில்லறை அதிகம் அவ்வளவே. அது போன்றே தயாநிதி மாறன். அவரும் தன் பங்குக்கு தொலைபேசித்துறையின் இணைப்பை தனது அண்ணனின் நிறுவனத்திற்கு தந்து தாத்தாவின் பெயரைக் கெடுத்தார். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு அழியாக்கறையாக திமுகவின் மேல் விழுந்துள்ளது. யார் அதை துடைப்பது?



2ஜி அலைக்கற்றை ஒதுக்கலில் ஆ.ராசா ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் கோடி ஊழல் செய்து விட்டார் என்று நானும் நம்பவில்லை. ஆனால் தனக்கோ / கனிமொழிக்கோ பிரதிபலன் இல்லாமல் இந்த ஒதுக்கீடை அவர் செய்தார் என்பதையும் நம்பவில்லை. நீரா ராடியாவுடன் ராஜாவும் கனிமொழியும் ஏன் ராசாத்தியும் கூட உரையாடியது இன்றும் கேட்க கிடைக்கிறது. வெறும் பத்து லட்சம் ஒப்பந்தத்திலேயே 40% அடிக்கும் போது இவ்வளவு பெரிய தொகை கைமாறும் போது அதில் சிறுபலாபலன் இருக்கத்தான் செய்யும். ராஜாவோ கனிமொழியோ பொருளாசை அற்றுப்போனவர்கள் அல்லர் என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

இறுதியாக ஈழ விவகாரம், இதில் கருணாநிதி செய்தது பச்சை துரோகம் என்று தான் நான் சொல்வேன். இந்திய ஒன்றியத்துடனான கைகோர்ப்பு என்றளவில் மட்டுமல்லாது தமிழக மக்கள் போராடும் போதெல்லாம் அதை ஒடுக்கினார். சிறு இயக்கங்கள் துண்டு பிரசுரம் அடிக்கக்கூட வாய்வழி தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. மே17 இயக்கம் நெல்லூர் சென்று சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் அடித்துக் கொண்டு வந்தார்கள். உளவுத்துறை ஐ.ஜி ஜாபர் சேட் இந்த பணியில் முக்கிய பங்காற்றினார். அவரது மகளுக்கு அரசு இடம் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்றங்களில் இடதுசாரிகள் இலங்கைக்கு எதிராக தீர்மாணம் கொண்டு வந்தால் காங்கிரசோடு சேர்ந்து அதை தோற்கடித்தனர்.

காலை உணவிற்கு பகல் சூப்பிற்குமிடையே அவர் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அந்த உண்ணாவிரதம் வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடியது. போர் நிறுத்தம் வேண்டி மக்கள் மனிதசங்கிலி நிகழ்த்திய போது ''நான் உள்ளுக்குள்ளேயே அழுவது எத்தனை பேருக்கு தெரியும்'' என்ற வசனங்கள். எப்போது ஈழப்பிரச்சினை வந்தாலும் அன்றே தீர்மானம் போட்டேன், அன்றே சட்டசபையில் பேசினேன், கடிதம் எழுதினேன், இரவு ராசாத்தி  இட்லியை தட்டில் வைக்கும் போது ஈழவிடுதலை குறித்து பேசினேன், காலை தயாளு காபி கொடுக்க வரும்போது கூட தனி ஈழமே தீர்வு என்ற எனது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று பேசுவாரே ஒழிய அன்றைய காங்கிரசு ஆட்சியை கவிழ்த்து அதை சர்வதேச பிரச்சினையாக்க வேண்டிய வரலாற்று கடமையை கருணாநிதி தவற விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.



இறுதியாக சமூகநீதியை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாக செயல்படுத்திய கருணாநிதி செய்யத் தவறிய ஒன்று உண்டு. அற நிலையத்துறை அமைச்சராக அவர் இதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை நியமிக்கவில்லை என்பதே அது. காமராஜர் ஆட்சியில் பரமேஸ்வரனை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு அடுத்து வேறு யாரும் அந்தப்பதவியில் நியமிக்கப்படவில்லை. இது கருணாநிதி தவிர்த்திருக்கக் கூடிய தவறு செய்திருக்க வேண்டிய சாதனை. ஏனோ அவர் இதை செய்ய மறுத்துவிட்டார்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டியே கருணாநிதியையும் அவரது அரசியலையும் நாம் கணித்தாக வேண்டும். ஒரு படைப்பாளியாக அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். சமஸ்கிருதம் கலந்த தமிழ் திரையில் ஆட்சி செய்த போது அழகுத்தமிழை அரியணையில் ஏற்றியவர்.

''வசந்தசேனை வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய், நம்மை சுற்றி வளைத்திட்ட மலைப்பாம்பு''

போன்ற உவமான உவமேயங்களும், ''ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் அதைப்போல'' போன்ற உவம உருபுகள், தெள்ளிய தமிழில் உரையாடல்களை நடிகர்களின் திறமைக்கு ஏற்ப வடிக்கும் நேர்த்தி. சிவாஜி என்றால் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பல பக்க வசனங்கள், எம்.ஜி.ஆர் என்றால் எண்ணிக்கையில் சொற்பமான ஆனால் கூரிய வலிமையான சொற்கள் என்று தேர்ந்த சமையல்காரனின் பக்குவத்துடன் சமைத்துத்தரும் சமையல்காரர் அவர்.



கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டினை, அவரது தொண்டர்கள் தில்லி வழியே செயல்படுத்த தவறியிருப்பினும், நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் 'நமஸ்காரம்' கிடையாது. வணக்கத்தை பிரபலபடுத்தியது, முன்னிலை படுத்தியது அரசியல் படுத்தியதில் கருணாநிதியின் பங்கே அதிகம்.  திருக்குறளை பேருந்துகளில் பொறித்தது, குமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது, என்று எங்கு திரும்பினாலும் அவரது முத்திரை. அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதமே ஒரு பேரிலக்கியம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அவரது கடிதம் ஒன்றை பாடமாகவே வைத்திருந்தனர்.



''தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்க்கு தோன்றலின் தோன்றாமை நன்று'' கருணாநிதி அரசியலிலும் திரைத்துறையிலும் புகழோடே தோன்றினார்...புகழோடே மறைந்தார். தனது புகழ் வெளிச்சத்தை ஆரிய இருள் மறைத்த போதெல்லாம் தனது அசாத்திய திறமையால் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட உதயசூரியன் கருணாநிதி.

''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே....'' அந்த குரலை இனி என்று கேட்போம்?








No comments:

Post a Comment