Saturday, December 16, 2017

கினியாவிலிருந்து செனெகல்....டக்காரை நோக்கி...! (2) 22-08-2017

வாழ்க்கை ஒரு அபத்தம் என்பார் ஃப்ரான்சிஸ் காஃப்கா. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். கணவனின் சடலம் எதிரே இருக்க தன்னைச் சுற்றி நான்கு குழந்தைகள் அமர்ந்திருக்க ஆலியாவிற்கு என்ன செய்வதன்றே புரியவில்லை. மொழி தெரியாத தேசம். ஆலியாவிற்கும் அவரது குழந்தைகளுக்கும் தெரிந்த ஒரே மொழி அரபி. செனெகலில் யாரும் அரபி பேசமாட்டார்கள். யோலோஃப் என்னும் உள்ளூர் மொழியும் ஃப்ரென்ச் மொழியும் தான் பேசுவார்கள். அதுபோக பல்வேறு உள்ளூர் வழக்கு மொழிகளும் உண்டு. ஆனால் நூராவின் குடும்பத்திற்கு அரபி தவிர இவை அனைத்துமே அன்னிய மொழிகள் தான். இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய மீனவர்கள் உதவினார்கள். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்த போது அங்கிருந்த மீனவ மக்கள் சந்தையில் கூலி வேலை கிடைக்கும் என்றும் ஆனால் அது நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது என்றும் கூறினர். எனவே ஆலியா தனது மகனையும் உடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். நூரா தனது ஒரு வயது தங்கையை கவனித்துக் கொள்வதாக ஏற்பாடு. கடின உழைப்பின் வாயிலாக கூலித்தொழிலாளியாக இருந்து  மீன் வியாபாரி ஆனார். மொத்த விற்பனையாளர் ஆனார். மகனுக்கு படகு வாங்கித் தந்தார். நூராவிற்கு ஏர்கபான் விமான நிறுவனத்தின் விமானியை திருமணம் செய்து வைத்தார். நூராவின் தங்கையை ஒரு பொறியாளருக்கு திருமணம் செய்து வைத்தார். வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த போது ஆலியாவின் மகன்கள் சென்ற படகு புயலில் சிக்கி அவர்களின் உயிரைக் குடித்தது. நூராவின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து போனார். கணவர் இறந்த போது நூரா நிறைமாத கர்ப்பிணி. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த சூழலில் அந்த குடும்பத்தில் மீண்டும் இடி விழ ஆலியா நொறுங்கிப் போனார். இந்தமுறை ஆலியா குழந்தைகளைப் வீட்டிலிருந்தபடி கவனித்துக் கொள்ள நூரா புதிய தொழிலை துவக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கும் பழைய துணிகளை வாங்கி துவைத்து சந்தையில் விற்கும் தொழில் தான் அது. கண்டெயினர்களில் வந்திறங்கும் துணிகளை தரம் பிரித்து வாங்கி துவைத்து சந்தைக்கு கொண்டு போய் விற்க வேண்டும். ஆப்பிரிக்காவில் மக்கள் பயன்படுத்தும் துணிகள் பெரும்பான்மையானவை இவ்வாறு வருபவை தான். 

ஆலியா தன் பிள்ளைகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் தனது பூர்வீக நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருந்தார். பாலஸ்தீனத்தின் தேசிய கவி மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. உணர்ச்சி பொங்க சொல்லிக்காட்டுவார். கவிதை அரபு மொழியில் இருந்தாலும் அதை சொல்லிக்காட்டும் போது சொற்களுக்குள் அவர் உணர்ச்சியை செலுத்தும் வேகமும் அதற்கு ஈடாக முகபாவமும் உடல் மொழியும் அவரது கணீரென்ற குரலும் இணைந்து உருவாக்கும் அனுபவ வெளிப்பாட்டை காணுவது அற்புதமான தருணங்கள். 

ஒருமுறை நான் அவரிடம் அவருடைய நீண்ட நாள் ஆசை எதுவெனக் கேட்டேன். 
''ஜேசீ...செனெகல் வந்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டன. என் வாழ்க்கை முடிவதற்குள் நான் வாழ்ந்த அல்-பிர்வா கிராமத்தையும் நான் வாழ்க்கைப்பட்ட பெயித் ஃபஜ்ஜாருக்கும் ஒருமுறை சென்று வர வேண்டும். எனது கணவர் முதல் பிரசவத்திற்கு நான் பிறந்த அல்-பிர்வா கிராமத்திற்கு அனுப்பவில்லை. இஸ்ரேலிய ராணுவம் எனது கிராமத்தை முற்றிலுமாக தரைமட்டமாக்கி விட்டது. பெயித் ஃபஜ்ஜாரில் எனது கணவரின் வீட்டில் தான் என் மகன் பிறந்தான். நூரா பிறந்தாள். மற்ற இரு குழந்தைகளும் அந்த சிறிய வீட்டில் தான் பிறந்தன. இறைவன் அந்த வாய்ப்பை கொடுப்பானா என்று தெரியவில்லை...உனக்கு ஒன்று தெரியுமா மஹ்மூத் தர்வீஷ் சொல்லுவார் ''வீடு என்பது நினைவுகளின்றி வேறில்லை''...உண்மை தானே...செங்கலும் மண்ணுமா வீடு?  வீடு என்பது மனிதர்களும் அவர்களின் அழிக்க முடியா ஞாபகங்களும் தானே....''
நான் ''உண்மை...மனிதர்கள் என்பவர்களே நினைவுகளின் தொகுப்பு தானே...யாசர் அராஃபத் மறைந்து விட்டார், அவருடன் இணைந்து போரிட்ட பல்வேறு வீரர்களின் உடல் இந்த மண்ணில் விழுந்து உரமாகி விட்டது...ஆனால் அவர்கள் நமது நினைவுகளின் ஊடே வாழத்தானே செய்கிறார்கள்'' என்றேன்.
''.இன்ஷா அல்லா என்றாவது ஒரு நாள் பூரண விடுதலை பெற்ற பாலஸ்தீனத்தில் பாதம் பதிக்க வேண்டும்....''
''உங்கள் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்...''
''நாளை ஞாயிற்றுகிழமை என்ன செய்யப்போகிறாய்?''
''நூராவுடன் கோரே தீவிற்கு செல்லலாம் என்று இருக்கிறேன்''
''போய்ப்பார்... மனிதமனத்தின் கோரப் பக்கங்களை அங்கே காணலாம்...இன்று மானுட விடுதலை பேசுவோரும் அதற்காக போராடுவோரும் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய நரகம் அது...'' 
மறுநாள்  காலை 8மணிக்கு நூராவும் நானும் கோரே தீவிற்கு சென்றோம். (தொடரும்)

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்
               -மஹ்மூத் தர்வீஷ் 
எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!
(தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ஏ.நுஃப்மான்)


No comments:

Post a Comment