Sunday, December 31, 2017

அன்னமிட்ட கை - சுந்தரி அக்கா, தமிழர் கடல் - 31-12-2017

ஒரு நாள் அலுவலகத்தில் மதியஉணவு இடைவேளையின் போது நண்பர் சக்திசிவக்குமார் தமிழர் கடலின் (மெரினா) சிறப்புக்களை பற்றி எடுத்துரைத்தார். அன்னாரது உரையின் நடுவே தெரியவந்தது யாதெனில் அங்கே மிகப்பிரபலமாக விளங்கும் ''சுந்தரி அக்கா கடை''.
தமிழர் கடல் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அது உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை, கலங்கரை விளக்கம், அவ்வப்போது அரசியல் கோமாளிகள் நிகழ்த்தும் திடீர் தியானங்கள், சமாதியே பிளந்து போகும் அளவுக்கு அடித்து செய்யப்பட்ட தியாகத்தலைவியின் சபதம், குடைமிளகாய் பஜ்ஜி, பலூன் சுடுதல், வாங்கும் வரை மட்டுமே வேலை பார்க்கும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கடற்கரை நெடுக நிற்கும் சிலைகள் அவ்வளவு தான். ஆனால் நண்பர் அதையும் தாண்டி ஒரு விசயத்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறாரே என்று அவரை பாராட்டியதோடு நில்லாமல் அங்கே அழைத்துச் செல்லும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தோம்.
சனிக்கிழமை அன்று நானும் உடன் பணிபுரியும் சுரேந்திரன், சந்தானபாண்டியன் ஆகியோர் நண்பர் சக்தி சிவக்குமார் வழிகாட்டுதலில் விரைந்தோம்.
டிசம்பர் மாதம் குளிர்காலமாதலால் நண்பகல் வெயிலில் எரிச்சல் இல்லை, இருப்பினும் வெயிலின் தாக்கம் பார்வையை கூசச்செய்தது. கடையை கண்டுபிடித்தது ஒரு சாதனை என்றால் வண்டி நிறுத்த இடம் கிடைத்தது மற்றொரு சாதனை. சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளத்தருகே கடற்கரையை ஒட்டி நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சாலையை ஒட்டி அமைந்திருந்த கடையிலிருந்து மக்கள் கூட்டம் வரிசையாக கடல்வரை நீண்டிருந்தது. மனைவிக்கு மதியஉணவை பொட்டலம் கட்டி வாங்கி வருவதாக உறுதி அளித்திருந்த சக்தி சிவக்குமார், கூட்டத்தை பார்த்து திகைத்து போய் உடனடியாக அவரது திருமதியை தொடர்பு கொண்டு சமைத்து உண்ணும்படி அறிவுறுத்தினார்.
வரிசையில்  நின்றபடி எனது பார்வையை சுழலவிட்டேன். அதிபயங்கர பணக்காரர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை, தள்ளுவண்டிக்காரர்கள் முதல் தளுக்காய் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவோர் வரை, குமரிகள் முதல் கிழவிகள் வரை மண்ணின் மைந்தர்கள் முதல் மார்வாடிகள் வரை வரிசையில் நின்றார்கள். அதில் மிகப்பிரபலமான நட்சத்திர விடுதியின் தலைமை சமையற்காரரும் அடக்கம். கடையின் இருபுறமும் கிடைக்கும் சொற்ப நிழலில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த  அவஸ்தை எங்களுக்கு பின்னால் நின்ற நூறு பேருக்கும் அதிகமானவர்களை பார்த்ததும் குறைந்தது.

சுந்தரி அக்கா கடை பிரபலமானது அவரது கணவர் இறந்த பிறகு தான். கணவர் இறந்த பின்னால் கடையை நடத்த முடியாது என்று மூடிவிட்ட சூழலில் அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் கடையை மீண்டும் திறக்கும்படி அக்காவை வற்புறுத்தினர். அந்த ஆட்டோ ஓட்டுனர்களின் புண்ணியத்தில் இன்று ஒரு நாளைக்கு 60கிலோ இறால், 200கிலோ வஞ்சிரம், சில ஆயிரம் முட்டைகள், 200கிலோ அரிசி என்று ஆள்வோர் முதல் ஆளப்படுவோர் வரை அனைவரையும்  சுந்தரி அக்கா தனது கைவண்ணத்தால் அனுதினமும் கவர்ந்திழுக்கிறார்.

பில் வாங்க வரிசையில் நிற்கும் தருணத்தை வீணாக்காமல் நண்பர்களை அறிமுகம் செய்வது உத்தமம்.
சந்தான பாண்டியன் தான் குழுவில் முக்கியமான நபர். துள்ளலான பேச்சுக்கும் துடிப்பான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர். அதுவும் போக அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெரிய படிப்பும் பெரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த போதிலும் இன்றுவரை மணப்பெண் அமையாதது ஏன் என்பது விடுவிக்கப்படாத புதிர். கல்யாண வயதில் பெண் வைத்திருக்கும் நபர்கள் பெண் கொடுக்க விரும்பினால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளலாம். கமிசன் எதுவும் கேட்க மாட்டேன். பிரதிஉபகாரமாக திருமண தினத்தில் மணமேடையில் வைத்து ஒரு பட்டு மயில்கண் அங்கவஸ்திரமும் ஐந்து சவரன் தங்கச்சங்கிலியும் கொடுத்தால் மிகுந்த சங்கோஜத்துடன் ஏற்றுகொள்வேன் என்று உறுதிபடத் தெரிவிக்கிறேன்.
அடுத்து சுரேந்திரன். புன்னகை பூத்த முகத்தை நீங்கள் பார்த்திருக்ககூடும். ஆனால் புன்னகையே முகமாக திகழ்வதை கண்டதுண்டா?  துப்பாக்கியால் சுட்டாலும் சிரிப்பார். சுரேந்திரன் அப்படிப்பட்ட ஆசாமி. வருடம் ஒருமுறை சாமியாகி ஐயப்பனை தரிசனம் செய்ய தவறாமல் செல்வார். காதலித்து திருமணம் செய்தவர். இவரும் பெரிய படிப்பு படித்தவர் தான்.
சக்தி சிவக்குமார் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் மேலாளர். ஊட்டியில் பெரும்புகழ் பெற்ற கல்லூரியான ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் படித்தவர். மனோதத்துவமும் மூளை நரம்பியலும் அவரது பிரத்யேக கவனம் பெற்ற துறைகள். இந்த குழுவில் மிகக்குறைவாக படித்தவன் நான் மட்டுமே. இவர்களோடு உரையாடும் போது கிடைக்கும் சில தகவல்களை கவர்ந்து கொண்டு மற்றவர்களிடம் நானே கண்டுபிடித்ததாக சொல்லி பெயர் வாங்கி விடுவேன். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்தே இதை செய்து கொண்டிருக்கிறேன். இது போன்ற தவறு செய்யும் போது கிடைக்கும் சுவாரஸ்யம் ஒருவிதமான போதை. 
வரிசையில் நின்ற போது இவர் தான் சுந்தரி அக்கா என்று சக்தி சிவக்குமார் சுட்டிக்காட்டினார். கரிய நிறம், மீனவப்பெண்மணிகளுக்கே உரித்தான உழைத்து உரமேறிய உடல், ஆர்ப்பரிக்கும் கடலலைகளை ஒத்த குரல், தன்னிடம் பணிபுரிபவர்களை அடக்கி ஆளும் ஆண்களை ஒத்த ஆகிருதி என ஒரு ராணுவப் படைத்தளபதி போன்று பம்பரமாய் சுந்தரி அக்கா சுழன்று கொண்டிருந்தார்.  பில் வாங்குவதற்கே ஒரு மணி நேரம் ஆனது. பில் வாங்கிய பின்னால் உணவைப்பெற எங்கள் எண் வர காத்திருந்தோம் அதற்கு வேறு தனியே வரிசை . வரிசையில் என்னருகே நின்ற பெண்ணின் அலைபேசி சிணுங்கியது. அலைபேசியை எடுத்துப்பார்த்தவர் அதை அருகே இருந்த தோழியிடம் கொடுத்து 'அத்திம்பேர்டி...வீட்டுக்கு வர நாலு மணியாகும்னு சொல்லு'' என்றார். இன்னார் தான் என்றில்லாமல் சாதிமத வேறுபாடின்றி அக்காவின் மீன் குழம்பிற்கும் இறால் வருவலுக்கும் பொரித்த வஞ்சிரம் மீனுக்கும் காத்திருக்கின்றனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சி தான் ஏற்படுகிறது. சோறும் மீன் குழம்பும் தட்டில் வைத்து கொடுத்து விட்டு இறாலுக்கு காத்திருக்கும்படி பணித்தார் சிப்பந்தி. வஞ்சிரம் மீன் பொரித்துக் கொண்டிருக்கும் அக்காவிடம் பில்லைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம் என்றும் பணித்தார். அங்கேயும் ஒரே கூட்டம். அங்கேயும் வரிசைப்படி தான் டெலிவரி.
இரண்டு பெண்கள் அக்காவிடம் தங்களுக்கு மட்டும் உடனடியாக மீனைத்தரும்படி எங்களுக்கு பின்னால் நின்று கொண்டு வற்புறுத்தினர்.
''பில்லு நம்பர் என்னம்மா?"
''90...தொண்ணூறு''
''அம்மாடி...நீ சோறை சாப்பிட்டுக்கிட்டே இரு...தர்றேன்...இப்ப தான் பில் நம்பர் 52 போய்க்கிட்டு இருக்கு''
''சீக்கிரங்க்கா....இன்னைக்கி பிரதோசம் கோயிலுக்கு போகணும்''
திரும்பி பார்த்த போது அதே ''அத்திம்பேர்'' ஆட்கள் தான்.
அக்கா சிரித்துக் கொண்டே ''புள்ளைக பிரதோசத்துக்கு பிரதோசம் தவறாம வந்துடும்'' என்றார்.
ஜலதோசம் தெரியும் இது என்ன பிரதோசம் என்று சக்திசிவகுமாரிடம் வினவினேன். அவரோ ''அது ஒரு சிறப்பு சிவ வழிபாடு, அதுவும் சனிப்ரதோசம் என்றால் கூடுதல் சிறப்பு'' என்றார்.
உடனே மதுரைக்காரனான எனக்கு மண்டைக்குள் சிந்தனை ஓடியது. சிவன் வழிபாடு..ம்ம்ம்..சிவனென்றால் அவரது மனைவி மீனாட்சி...மீனாட்சின்னா மீன் + ஆட்சி...மேக்சிமம் கவர் பண்ணிட்டேன்...அப்போ சரிதான்''
ஆவி பறக்கும் சோறுடன் சுந்தரி அக்காவின் கைவண்ணத்தில் உருவான மீன் குழம்பு சேர உண்பது ஒரு தனிசுகம். மீன் சோற்றை சுவைத்துக் கொண்டே பொரிக்கப்பட்ட வஞ்சிரம் வரக்காத்திருப்பது துன்பமான இன்பம்.  புளிப்பும் அதற்கு ஈடாக சரிவிகிதசமானமாக காரமும் கலந்த மீன் குழம்பு நாவில் பட்டதும் மூளை நம் புலன்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சியை மின்னஞ்சல் செய்யும்.  கண்ணுக்குள் சொர்க்கம் தெரியும். எனக்கு காலஞ்சென்ற என் தாயார் தெரிந்தார். வீட்டில் மிக்சி இருந்தாலும் அம்மா மீன் குழம்பிற்கு மசாலாவை அம்மியில் தான் அரைப்பார். உணவின் சுவையை கூட்டுவதில் அம்மிக்கல்லுக்கு அலாதியான பங்குண்டு என்பதை சுவைஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். தாயின் காலடியில் சொர்க்கத்தை காணலாம் என்பார் நபிகள் நாயகம் (சல்). சுந்தரி அக்காவின் மீன் சாப்பாட்டிலும் காணலாம் என்கிறேன் நான்.

அனைவருக்கும் மீன் குழம்பும் இறா வருவலும் வஞ்சிரமும் சமைத்துப் போடும் சுந்தரி அக்கா ஒரு சுத்த சைவம் என்பது இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த வியப்புகளின் ஒன்று. ''அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி'' பசியைத் தீர்த்தலே, அழித்தலே  அறம். செய்வது வணிகமாக இருப்பினும் சுந்தரி அக்கா செய்வது மாபெரும் அறம் என்பதில் எனக்கு ஐயப்பாடு துளியுமில்லை.
இந்த புத்தாண்டில் தமிழர் கடற்கரை சென்று சுந்தரி அக்கா விடும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீசில் ஏறி சொர்க்கத்திற்கு சென்று வருவோம் என்று உறுதி பூணுமாறு வாசகர்களை வேண்டுகிறேன்.




1 comment:

  1. அருமையான எழுத்து நடை. சரியான விகிதாசாரத்தில் உப்பும் புளியும்:அக்கா கடை மீன் குழம்பைப்போல...

    ReplyDelete