Tuesday, July 26, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(2)- 26-07-2017

மழைக்காலத்தில் மாஸ்கோ(2)- 26-07-2017
-------------------------------------------------------------------------
அதிகாலையா நள்ளிரவா என்று நிர்ணயிக்க இயலாத 3.05மணிக்கு அபுதாபி விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ பயணம் துவங்கியது. தூக்கம் கலைந்ததும் பயணம் தந்த அலுப்பும் இணைந்து கொள்ள நிலைகொள்ளாமல் தவித்தது உடல். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவம் வழியாக துணைக்கு வந்தார். பீஷ்மர் தன் தந்தை சந்தனுவிற்காக சத்தியவதியின் தந்தையிடம் தான் இனி பிரம்மச்சாரியாகவே வாழப்போவதாக உறுதி அளித்துக் கொண்டிருந்தார். பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள்ளாகவே தூக்கம் கண்களை தழுவ அயர்ந்தேன்.
பணிப்பெண் காலை சிற்றுண்டிக்காக எழுப்பினார். அவித்த உருளைக் கிழங்கும் முட்டையும் தயிரும் பரிமாறப்பட்டது. காலை சரியாக 7.15க்கு மாஸ்கோ தெமோஜெடொவோ விமான நிலையத்தில் இறங்கினேன். குடியேறல் பிரிவில் இருந்த அதிகாரி எனது பாஸ்போட்டில் இருக்கும் புகைப்படத்திற்கும் எனது தற்போதைய தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கூறி அதை உயரதிகாரி ஒருவர் வந்து உறுதிப்படுத்த வேண்டுமென்றார். ஆங்கிலம் தெரியாத அவருக்கு எனது தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் என்பதையும் அதன் பொருட்டு நான் தலை மழிக்க வேண்டியதாயிற்று என்று சொல்லிப் புரியவைப்பதற்கும் போதும் போதுமென்றாகி விட்டது. அடுத்து சுங்க அதிகாரிகளின் சோதனை. தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்ற போதும் நான் வைத்திருந்த பெண்களுக்கான பாடிவாஷ் குப்பிகளில் இரண்டை அவர் உரிமையுடன் எடுத்துக் கொண்டார். வெளியே வந்த போது ஜனாரும் அவருடைய கணவரையும் காணவில்லை. கலவரமானேன். என்னுடைய செல்பேசியில் ரோமிங்க் வசதி உண்டென்ற போதிலும் ரஷ்யாவில் அது வேலை செய்ய மறுத்தது. அருகில் இருந்த ரஷ்ய பெண்மணியிடம் அவருடைய செல்பேசியை தரமுடியுமா என்று கேட்டேன். புன்னகையோடு தந்தார். ஜனாரை அழைத்த போது அவர் 2ஆம் நுழைவு வாயிலில் காத்திருப்பதாகவும் நான் காத்திருக்கும் முதல் நுழைவு வாயிலுக்கு வருவதாகவும் சொன்னார். அடுத்த 5நிமிடத்தில் கணவருடன் ஆஜரானார். நான் தங்கவிருந்த விடுதியான ஹோட்டல் காஸ்மோஸ் மிக அருகாமையில் அதாவது 70 கி.மீ தூரத்தில் இருந்தது. 1.45 மணி நேர பயணத்திற்கு பின் விடுதி வந்தடைந்தோம்.

ஹோட்டல் காஸ்மோஸ் 1787 அறைகளைக் கொண்ட பிரம்மாண்டமான விடுதி. 1980 ஆம் ஆண்டு ரஷ்யா நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. சற்றே ஓய்வெடுக்க கண்ணயர்ந்தேன், ஆழ வேர்விட்டு பரந்து கிளை பரப்பி விழுது கொண்டு பூமியோடு தொடர்ந்து சங்கமிக்கும் ஒரு ஆலமரத்தின் கீழே வாழும் ஒரு சிறு எறும்பு போன்ற உணர்வு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment