Wednesday, July 27, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5): 28-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5):
--------------------------------------------------------
ரயிலுக்கான அறிவிப்பு வந்தவுடன் பாதுகாப்பு சோதனையை முடித்து பயணிகள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். எனது முறை வந்தது. பயணச்சீட்டு  ஆய்வாளர் ஒரு பெண்மணி.
''உங்கள் பெயர்?''
''ஜெயசீலன்''
''மன்னிக்கவும்...உங்கள் பெயர் பட்டியலில் இல்லை.."
''அதெப்படி...43ஆம் இருக்கை எனக்காக ஒதுக்கப்பட்டது''
''இல்லை...அது கணபதி என்பவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது''
''அதுவும் நான் தான் ...அது என் தந்தையாரின் பெயர்''
''உங்கள் தந்தை எங்கே?''
''அவர் இந்தியாவில் இருக்கிறார்...ஏன் கேட்கிறீர்கள்?''
''இந்தியாவில் இருக்கும் நபருக்கு எதற்காக இங்கே டிக்கெட் வாங்குகிறீர்கள்?''
''ஐயோ...மேடம் என் பாஸ்போர்ட்டை பாருங்கள் இரண்டுமே நான் தான்''
''அதெப்படி நீங்களும் உங்கள் தந்தையும் ஒன்றாக முடியும்...நீங்கள் சற்று ஒதுங்கி நில்லுங்க...எங்கள் கண்காணிப்பாளர் வந்து விசாரிப்பார்''
சரிதான்...இந்தம்மாவே இப்படி...இதுக்கும் மேல ஒருத்தர் இருக்காரா....சரி என்ன தான் நடக்குன்னு பார்ப்போம். காத்திருந்தேன்.
கண்காணிப்பாளர் வந்தார். பயணச்சீட்டை பார்த்தார். பாஸ்போட்டை பார்த்தார்.
''இது உங்கள் பாஸ்போர்ட் தானா?''
''ஏன் அதிலென்ன சந்தேகம்...என்னுடையது...என்னுடையது தான் ஐயா''
''இல்லியே...நிறைய வித்தியாசம் இருக்கே''
''அதாவது சார்...போன மாதம் என் அம்மா இறந்து விட்டார்..அதனால்....''
''ஹலோ மிஸ்டர்...அதை நான் கேட்கவில்லை...அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?''
''அது தான் சார்....சொல்ல வர்றேன்... அவ்வாறு துக்க சம்பவம் நடக்கும் போது நாங்கள் தலை மழிப்பது வழக்கம்''
''உங்கள் தாயார் இறந்ததற்கு நீங்கள் ஏன் தலைமழிக்க வேண்டும்...அப்படி செய்தால் முடி முளைக்க இரண்டொரு மாதம் ஆகுமே?''
''சார் இப்ப அதுவா பிரச்சினை...இதில் உள்ள பெயர் என்னுடையது தான் ஐயா''
''பெயரில் பிரச்சினை இல்லாவிட்டாலும் புகைப்படத்தில் பிரச்சினை உள்ளதே''
கடவுள் மாதிரி என்னமோ புஷ்கின் வந்தார்.
''ஹாய்...ஜெ என்ன பிரச்சினை?''
''சார்...சார் நீங்களாவது சொல்லுங்க சார்...இந்த பாஸ்போர்ட் என்னுடையது இல்லைன்னு சொல்றார் சார்''
''மிஸ்டர் மிஷேல்! இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் இந்தியாவில் தமிழர் என்னும் தேசியஇனத்தை சார்ந்தவர். தாய் இறந்தால் தலையை மழிப்பது அவர்களின் மரபாக இருக்கலாம். அதற்காக அவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? பாஸ்போர்ட்டை கொடுங்கள்''
ஒருவழியாக பாஸ்போர்ட் கைக்கு வர நிம்மதியாக ரயிலேறினேன்.

No comments:

Post a Comment