Wednesday, July 27, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(4): 27-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(4):
இப்போது அந்த ரஷ்யத்தாய் களைப்பிலிருந்து மிதமாக விடுபட்டிருந்தார். எனது பெயரைக் கேட்டார். அவரால் உச்சரிக்க முடியவில்லை. என்னமோ புஷ்கின் கூட சற்று சிரமப்பட்டு தான் உச்சரித்தார். நானும் அந்த ரஷ்யத்தாயும் உரையாடத் துவங்கினோம். புஷ்கின் தான் மொழிபெயர்த்தார்.
''மகனே...நீ எங்கிருந்து வருகிறாய்...திருமணம் ஆகிவிட்டதா...எத்தனை குழந்தைகள்?''
''அம்மா...நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்...எனக்கு திருமணம் ஆகி பத்து வயதில் மகனுண்டு''
''பெண் குழந்தைகள் எத்தனை பேர்?''
''இல்லை அம்மா...எங்களுக்கு பிறந்தது ஒரே ஒரு மகன் மட்டுமே''
ஏன்...குழந்தைகளை தொல்லையாக நினைக்கிறீர்கள்? இங்கே எங்கள் ஊரில்தான் பெண்கள் பிள்ளை பெற தயங்குகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் 6 குழந்தைகளை பெற்றேன். அதில் நான்காவது குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் இறந்து விட்டது. அதிபர் பிரஷ்னேவ் குழந்தை பிறந்த போது வாழ்த்தும் இறந்த போது இரங்கலும் தெரிவித்தார். என் கணவருக்கு பிடித்தமான குழந்தை அது. தொடர்ந்து மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் பிறந்தவள் என்பதால் அவள் எங்களை விட்டு பிரிந்த போது எங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என் கணவரின் தங்கை அதற்கு முந்திய ஆண்டு தான் இறந்து போனாள். எனவே தனது தங்கையே மீண்டும் வந்து பிறந்ததாக என் கணவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. என் கணவரின் தங்கை எங்களுக்கு திருமணமான பொழுதுதான் பூப்படைந்திருந்தாள். அவள் கொள்ளை அழகு தெரியுமா? ரோஜாப்பூ நிறத்தில் அவள் கன்னங்கள், சற்றே நீலவண்ண கண்கள், வெள்ளை நிறக்கூந்தல், எப்போதும் தூய வெள்ளையாடையில் தேவதை போன்று பவனி வருவாள். அவளுக்கு திருமணமாகி முதல் பிரசவத்தில் தாயும் சேயும் எங்களை விட்டு பிரிந்தார்கள். எங்கள் நிலத்தில் தான் நாங்கள் அடக்கம் செய்தோம். எங்கள் கிராமத்தின் தேவாலய இடுகாட்டில் எங்களுக்கு இடம் உண்டு. ஆனால் நாங்கள் அதில் அவளை புதைக்க விரும்பவில்லை. எங்கள் முன்னோர்களையும் நாங்கள் எங்கள் நிலத்திலேயே அடக்கம் செய்தோம். அடக்கம் செய்த அன்றிரவு என் கணவர் எங்கள் நிலத்தை விட்டு வீட்டிற்கு வரவே இல்லை. அந்தப் பனியிலும் இறந்த போன தங்கையின் சடலத்தோடு உரையாடிக் கொண்டிருந்தார். பாவம்...அன்பே உருவான மனிதர் அவர். எங்களது மரணத்திற்கு பிறகும் நாங்கள் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். எங்களையும் நிலத்தையும் பிரிக்கவே இயலாது....விவசாயிகளுக்கு நிலம் தான் எல்லாம். விவசாயியும் தாயும் ஒன்று தெரியுமா? தாய் தன்னுள்ளே கருவை சுமந்து இந்த உலகத்திற்கு புதிய உயிரை தருவது போல விவசாயி தன் நிலத்திலிருந்து புதிய தானியங்களை உருவாக்கி இந்த உலகத்திற்கு தருகிறான். இதோ இந்த பையில் இருக்கும் உருளைக்கிழங்குகளும் கேரட்டும் எங்கள் நிலத்தில் விளைந்தவை. அறுவடை முடிந்தபின் இதை முதலில் எங்கள் மூத்தமகன் வசிக்கும் கிராமத்திற்கு எடுத்து சென்று பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டுத்தான் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை செய்வோம். இந்தமுறை அறுவடை முடிந்தபின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் பண்டகசாலை அலுவலர்கள் வந்து கேட்ட போது மறுத்துவிட்டேன். நாங்கள் தனியாருக்கு விற்பதில்லை. உணவை உற்பத்தி செய்வதும் அதை பசித்தவர்களுக்கு சுயநலமின்றி சரியாக பகிர்ந்தளிப்பதும் எங்களை அப்போது வழி நடத்திய தலைவர்கள் கற்றுத்தந்த பாடங்கள். இன்று அவை மாறிக்கொண்டு வருகின்றன. நாங்கள் மாறமாட்டோம். பசிக்கு உணவளிப்பது மாபெரும் அறமல்லவா...அதை இந்த பிறவியில் எங்களுக்கு ஆண்டவன் அளித்திருக்கிறார். அதை எவ்வாறு மறுதளிப்பது? இந்த கிழங்கும் கேரட்டும் எங்கள் மண்ணில் புதைக்கப்பட்ட மூதாதையர்கள் அல்லவா...அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று நீ நம்புகிறாயா?''
இல்லை...சத்தியமாக இல்லை...நீங்கள் அறுவடை செய்யும் ஒவ்வொரு தானியத்தின் வாயிலாக அவர்கள் காலம் கடந்து வாழ்கிறார்கள்...உங்களோடே பயணிக்கிறார்கள்...மரணம் என்பது என்ன...அது தற்காலிக விடுப்பு தானே.... அவர்கள் உங்களிடமிருந்து நிரந்தரமாக ஒரு போதும் பிரியவில்லை என்றே நானும் நம்புகிறேன்''. நான் இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களில் மூத்த தேசியஇனமான தமிழ் என்னும் தேசிய இனத்தை சார்ந்தவன். எங்கள் மரபும் இதேதான். உழுதுண்டு வாழ்வோரை  மற்றவர் தொழுது வாழவேண்டும் என்று போதித்த மரபு என்னுடையது.
''இந்தியாவும் பழைய சோவியத் ஒன்றியம் போலத்தானே?''
''ஆம்...பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்கள் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம்.''
''நல்லது மகனே...நாங்கள் பல்வேறு சோவியத்துகளாக ஒன்றாக வாழந்த போது மகிழ்ச்சியாக இருந்தோம். உக்ரேனின் கோதுமை உஸ்பெகிஸ்தானின் குழந்தைகளின் பசியை போக்கியது, எங்கள் மின்சாரம் உக்ரேன் குழந்தைகள் கல்வி கற்க வெளிச்சம் தந்தது...இப்போது அவை இல்லை....பகைமை உணர்ச்சி தான் மேலோங்கி உள்ளது''
''நீ சமைக்காத கேரட் தின்பாயா?''
''ஓஓ...சமைக்க வேண்டாம்...அப்படியே சாப்பிடுவேன்''
''இந்த கேரட்டை பயிரிட்டு முதல் தளிர்விடும் போது என் கணவரின் தங்கை சிரிப்பது போன்றே இருக்கும். தினமும் காலை தோட்டத்திற்கு சென்று அதை பார்த்து விட்டு வருவேன்...அதில் ஒரு நிம்மதி எனக்கு...''
கையில் தனியாக ஒரு சிறு பையில் நான்கு உருளைக்கிழங்கும் இரண்டு கேரட்டுகளும் வைத்திருந்தார். ஒன்றை எனக்கும் புஷ்கினுக்கும் தந்தார்.
''மகனே! நீங்கள் ஏன் இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது?''
சென்னையிலிருந்து மாஸ்கோ கிளம்பும் போது தான் இரண்டு தென்னைமாறு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். வெறும் தென்னை ஓலையால் கட்டப்பட்ட விளக்கமாறு அது. எனவே பழைய நைலான் கயறால் நன்றாக இறுக்கி கட்டிக் கொடுத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. ஆனால் இதை சொன்னால் அந்தம்மாவிற்கு புரியாது.
''இல்லை அம்மா...முதல் குழந்தை பிறந்தபோதே அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். குழந்தை சற்று கனம் கூடுதலாக இருந்ததாலும் அவள் சற்று பருமனாக இருந்ததாலும் அறுவை சிகிச்சை செய்தே என் மகன் பிறந்தான். அதில் அவள் பட்ட வேதனைகளை நேரில் கண்ட நான் இனி அப்படி ஒரு துயரத்தை அவளுக்கு கொடுக்கக்கூடாது என்று எண்ணினேன்.''
ஓஓ...குழந்தைகள் கூடி ஒரு வீட்டில் வாழ்வதும் அவர்களை வளர்த்தெடுப்பதும் ஒரு பெரிய வரம்...அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
காடும், வீடும் காரும் பணமுமா செல்வங்கள்...குழந்தைகள் அல்லவா உண்மையான செல்வங்கள்...''
''உண்மை'' நான் ஆமோதித்தேன்.
மாஸ்கோவிற்கும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிற்கும் இடையில் உள்ள ஒகுலோவ்கா என்னும் இடத்தில் அவர் இறங்க வேண்டுமெனவும் ரயில் வரைக்கும் இந்த பைகளை சுமந்து வர இயலுமா எனக் கேட்டார்.
இடையில் புகுந்த புஷ்கின் ''அதற்கு அவசியமே இல்லை...நான் வண்டி ஏற்பாடு செய்கிறேன் என்று பேட்டரியால் இயங்கும் வாகனத்தை கொண்டு வர ஆணை பிறப்பித்தார்.
அவர் கிளம்ப எத்தனித்த போது மானசீகமாக அவர் முன் முழங்காலிட்டேன்.
தனது வலது கட்டைவிரலால் என் நெற்றியில் சிலுவை இட்டார்.
மகனே...என் மனம் மிக இலகுவாக உள்ளது....வீட்டில் என் கணவர் படுத்தபடுக்கையாகி விட்டார். வேலையாட்கள் மாலை அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்....பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்தேன். உனக்கும் புஷ்கினிற்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். இனி ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்யும் போது உன்னையும் உன் மகன், மனைவியையும் நினைத்து ஆண்டவரின் வேண்டுவேன்''
பேட்டரி வாகனம் வர ரஷ்ய தாயும் புஷ்கினும் விடைபெற்றனர்.









No comments:

Post a Comment