Wednesday, July 27, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ:(3)


----------------------------------------------------
27ஆம் தேதி காலை எட்டு மணிக்கு தயாராக இருக்க மருத்துவர்.வினய் உத்தரவிட்டு சென்றார். ஒரு நாளைக்கு சராசரியாக 200கி.மீ தூரம் பயணம் செய்து கலைத்துப் போன இருவருக்கும் வேறு வழியில்லை. மாஸ்கோ நகரத்தின் பிரதான மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் மருந்துக்கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். மதியம் 1.30க்கு லெனிங்கிராட் என்று அன்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று இன்றும் அழைக்கப்படும் ஊருக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை ஊகித்து நமது சாரதி நிகோலாய் மிகச்சரியாக 8மணிக்கு ஆஜராக வேண்டுமெனவும் 11.30க்கு மீண்டும் ஹோட்டல் காஸ்மோஸ் வந்து லெனிங்க்ராட்ஸ்கி பக்சல் (பக்சல் என்றால் ரஷ்ய மொழியில் ரயில் நிலையம் என்று பொருள்) சென்று தொடர்வண்டியை பிடிக்க வேண்டும் எனவும் மரு.வினய் உத்தரவிட்டிருந்தார். நிகோலாய் மிகச் சரியாக 8 மணிக்கு வந்தார். மாஸ்கோவின் மத்திய நகரிலிருந்து மேற்கு நோக்கி வாகனத்தை செலுத்தினார். வண்டியை எடுத்த 3ஆவது நிமிடத்தில் 120 கி.மீ வேகம் என அதன் டிஜிட்டல் மானிட்டர் காட்டியது. நான் மிரண்டு போய் ''நிகோலாய்...கொஞ்சம் மெதுவாக போலாமே'' என்றேன். என் உத்தரவை சிரமேற்கொண்டு ஏற்ற நிகோலாய் அதை உடனடியாக 119க்கு குறைத்தார். ஆய்வுகளை முடித்துவிட்டு ஹோட்டல் வந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டேன். நிகோலாய் ஒரு யோசனை சொன்னார். அருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாக எதிர்ப்புற சாலைக்கு சென்று இடது புறம் செல்லும் டாக்சியை பிடித்தால் விரைவாக சென்று விடலாம் இல்லையெனில் கடினம் என்றார். உடனே திட்டத்தை செயல்படுத்தினேன். சுரங்கப்பாதை வழியாக சென்று டாக்சி பிடித்து ரயில் நிலையத்திற்கு 12.15க்கெல்லாம் வந்து சேர்ந்தேன்.
மாஸ்கோ நகரம் மிதமான வெயிலில் இதமாக இருந்தது. பெண்கள் அனைவரும் மார்பிலிருந்து இடுப்புக்கு கீழே நான்கு விரற்கிடை அளவிற்கு மட்டும் உடையுடுத்தி நகரத்தை வெப்பத்தை மேலும் குறைத்துக் கொண்டிருந்தார்கள். கையில் கைப்பைக்கு அடுத்து எல்லோர் கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. ஏன் இவர்கள் இவ்வாறு உடை அணிகிறார்கள் என்ற ஆய்வை பாங்காக் விமான நிலையத்தில் ஆய்வு செய்ய துவங்கிய போது நண்பர். பேராசிரியர். அ. மார்க்ஸ் அவர்கள் நீண்ட பயணத்தின் வசதி பொருட்டு அவ்வாறு அணிகிறார்கள் என்று அந்த ஆய்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இங்கும் அதே கதை தான். ஆனால் பாங்காக் மாஸ்கோவிடம் பிச்சை வாங்கணும். அக்டோபர் மாதத்திலிருந்து பெப்ருவரி வரை இவர்கள் உடல் அனைத்தையும் மூடிக்கொண்டு தான் ஜீவிக்க முடியும். எனவே இந்த இளவேனிற்காலத்தில் இவ்வாறு உடை உடுத்து தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கிறார்கள் என்று உணர்ந்தேன். எனவே இனி குளிர்காலத்தி மாஸ்கோவிற்கு செல்லும்படி என்னை வற்புறுத்தக்கூடாது என நிர்வாகத்திற்கு கடுமையான எச்சரிக்கை விட உத்தேசித்திருக்கிறேன்
நேரம் 12.30 ஆன போது ஒரு மூதாட்டி கையிரண்டிலும் இரு பெரிய பைகளை சுமந்து கொண்டு படியேற முயற்சித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பையை அவர் தவற விட ஓடிச்சென்று அவரையும் அந்த பைகளையும் தாங்கினேன்.
இதைக்கண்ட இன்னும் இரு வாலிபர்கள் என் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் பைகளை ஏந்திக்கொள்ள நான் அந்தத்தாயை ரயில் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி அமரும் நாற்காலியில் அமர வைத்தேன். ரயிலுக்கு நேரமானதால் வாலிபர்கள் விடைபெற்றனர். பாதுகாப்பு அதிகாரி என்னமோ புஷ்கின் (என்னமோ என்றால் தமிழ் என்னமோ இல்லை இது ரஷ்ய மொழியில் 'என்னமோ'') என்னை விசாரித்தார். அற்புதமான ஆங்கிலம் அவருடையது. விசாரித்த போது 1989ஆம் ஆண்டு மாஸ்கோ பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதல் மாணவராக வந்து அதிபர் கோர்பச்சேவிடம் விருது வாங்கியதாக தெரிவித்தார். விருது வழங்கிய கோர்ப்பசேவ் அவரை கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்ற அழைக்க இவரோ நான் நீட்சேயின் ரசிகன் எனக்கும் கம்யூனிசத்திற்கு ஒத்துவராது என்று அங்கேயே பதில் சொல்லிவிட்டார். அதற்கு கோர்ப்பசேவ் ''உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை நிர்பந்திக்க நீ வெறுக்கும் கம்யூனிசம் என்னை அனுமதிக்காது'' என்றாராம். 

No comments:

Post a Comment