Tuesday, July 26, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ:25-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ:
ாயிற்றுக்கிழமை அபுதாபி வழியாக மாஸ்கோ பயணம். முன்பதிவு உறுதியானதும் எனது ரஷ்ய தோழி ஜனார் கொசம்குலோவாவை அழைத்து வருகையை தெரிவு படுத்தினேன், அவரும் அவரது துணைவரும் உடனடியாக அவர்களது சமையலறையை சுத்தம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். இவருக்கும் பருப்பு ரசம் வைத்து தருவதாக கடந்த ஒண்ணரை ஆண்டுகாலமாக ஸ்கைப் வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆசை காட்டி வந்தேன். இப்போது தப்பிக்க இயலாது. எனவே துவரம் பருப்பு, கடுகு, பெருங்காயம், பட்டை வற்றல், மிளகு போன்றவற்றையும் எனது பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டேன். மல்லித்தழை இல்லாமல் ரசம் சுவைக்காது, எனவே எனது மனைவி அதை ஒரு நெகிழிப்பையில் காற்றுப் புகாவண்ணம் சுற்றிக் கொடுத்தாள். அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்த போது அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். அனுமார் வால் போல வரிசை நீண்டு நான் செல்ல வேண்டிய எத்திஹாட் நுழைவு வாயிலுக்கருகில் 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். முக்கால் மணிநேரம் காத்திருந்து உள்ளே நுழைந்து போர்டிங் பாஸ் வாங்கி இமிக்ரேசன் பிரிவுக்கு சென்ற போது அங்கே ஒரு ஆயிரம் பேர் காத்திருந்தனர். எனது அபுதாபி விமானத்தின் புறப்பாடு இரவு 9.35மணிக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரிசையில் சென்றால் கண்டிப்பாக விமானத்தை தவற விட்டுவிடுவேன். அது உறுதி. காரணம் குடியேறல் பிரிவை கடந்து பாதுகாப்பு சோதனைக்காக காத்திருந்தவர்கள் அதை விட அதிகம். எனவே குறுக்கு வழியில் என்ன செய்ய முடியும் என்று யோசித்த பொழுது தூதரக அதிகாரிகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பிரத்யேக கவுண்டரில் ஒரு அதிகாரி சும்மா அமர்ந்து கொண்டு பல் குத்திக் கொண்டிருந்தார். அவரை அணுகினேன். அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ உடனே என் கடவு சீட்டில் முத்திரை குத்தி இந்த தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றினார். அவருக்கு அருகில் இருந்த சிறப்பு பாதுகாப்பு சோதனை அதிகாரி உடனே என்னை அழைத்தார். என்னை ஒரு வெளி நாட்டு தூதர் என்று எண்ணி விட்டார் போலும். ஆனால் விதி வேறொரு ரூபத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. எனது பெயரை எத்திஹாட் விமான அதிகாரி ஒருவர் பகிரங்கமாக பொது அறிவிப்பு மூலமாகஏலம் விட்டுக் கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது எனது பைகளை சோதனை இட வேண்டுமென்றும் அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். என்னடா இது...துவரம் பருப்பும், பெருங்காயமும் தடை செய்யப்பட்ட பொருட்களா...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?
ான் எனது நண்பர்களுக்காக எடுத்து சென்ற வாசனை திரவியங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டு தனியே ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அதை நான் பாலித்தீன் கொண்டு அதற்கான இயந்திரத்தின் உதவியோடு சுற்றி வைத்திருந்தேன். ஒரு பைக்கு 300 ரூபாய் கொடுத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுங்க அதிகாரிகள் அதை நிர்வாணப் படுத்தியிருந்தனர். நேரம் 09:18. என்னோடு வந்த எத்திஹாட் அதிகாரி அதில் உள்ள வாசனை திரவியங்கள் அனைத்தையும் நீக்க வேண்டுமென சுங்க அதிகாரிகள் கோருவதாக தெரிவித்தார். என்னோடு இன்னொரு பயணி முறையான மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமல் நிறைய மருந்துகளை சுமந்து வந்ததால் அதையும் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். ஒரு வழியாக வாசனை திரவியங்களை நீக்கி அதை மீண்டும் முறையாக கட்டி சேர்ப்பதற்குள் மணி 9.35 ஆகி விட்டது. எத்திஹாட் அதிகாரி, அடில் என்பது அவரது நற்பெயர், பொறுமையாக விமானிக்கு எடுத்துச் சொல்லி விமானத்தை தாமதப்படுத்தி என்னையும் மற்றொரு பயணியையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தின் இரண்டாம் தளம் விரைந்தார். அறிவிப்பாளர் எனது பெயரை ஏலம் விட்டு இது இறுதி அழைப்பு என்று சொல்லும் போது திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் கதாநாயகன் நுழைவது போன்று நுழைந்தேன். அனைத்து பயணிகளும் எங்கள் இருவருக்கும் சாபமிட்டபடி காத்திருந்தனர்.
ான்வழியே 3064 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டுமெனவும் கடல் மட்டத்திலிருந்து 35,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் எனவும் முதன்மை விமானி அபு சலீம் குரைஷி தெரிவித்தார். எனக்கு மூச்சு வாங்கியது. என் 88கிலோ உடலை என்னாலேயே சுமக்க இயலவில்லை என்பதை உணர்ந்தேன். விமானத்தில் நுழைந்ததும் குடிக்க தண்ணீர் கேட்டேன். பணிப் பெண்ணோ எனக்கு எலுமிச்சை சாறு தந்து இளைப்பாற்றினார்.
ிமானம் என்னை சுமந்து கொண்டு தரையிலிருந்து ஆகாயத்தை தொட்ட போது வழக்கமாக புத்தகம் படிக்கும் வழக்கமுள்ள நான் பாடல் கேட்க எனது அலைபேசியை இயக்கினேன். எப்போதோ கேட்டு நிறுத்தி வைக்கப்பட்ட பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வித்யாசாகர் இசையில் நடிகர் ஸ்ரீகாந்தின் கேள்விகளுக்கு பாடகி ஹரிணி தனது இசையால் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
்ரீகாந்த்: ம்ம்ம்....காதல்
ஹரிணி: நம் நான்கு கண்ங்களில் தோன்றும் ஒற்றை கனவடா...
யார் எழுதியது? தெரியவில்லை....சென்னை திரும்பியதும் சைதை  துரைசாமியை சந்தித்து பாடலாசிரியருக்கு சிலை வைக்க ஒரு விண்ணப்பம் தர உத்தேசித்திருக்கிறேன்.
விமானத்தில் உணவு பரிமாறும் சமயம், வழக்கமாக நான் வெளிநாடு செல்லும் போது ''என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா'' என்று ஜனகராஜ் பாணியில் குதித்து கூத்தாடும் ஒரு குழுவும் திரும்பி வருகையில் நான் கொண்டு வரும் இலவச மதுபானக் குப்பிகளை கவர ஒரு குழுவும் எப்போதும் காத்திருக்கும். அவர்களுக்கு மதுபான குப்பிகளை சேகரிக்க ஆயத்தமானேன். விமானத்தின் முதல் வரிசையில் முதல் ஆளாக இருந்ததால் பணியாள் என்னிடமே அவரது கணக்கைத் துவக்கினார். நானோ வழக்கம் போல ''டூ லார்ஜ் வோட்கா வித் லெமெனேட்'' என்றேன். அவன் சிறிய 50மிலி கொள்ளளவு கொண்ட இரண்டு குப்பி தருவான் என்பது எனது எண்ணம். ஆனால் அவன் குனிந்து ஒரு பெரிய அப்சொலுயூட் வோட்கா பாட்டிலை திறந்து ''ரெண்டு லார்ஜையும் இப்பவே குடுக்கவா...இல்லைனா அடுத்த ரவுண்டு வரும் போது தரவா'' என்று வெடிகுண்டு வீசினான். இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. நான் விமானப் பயணங்களில் மது அருந்துவதில்லை. அதுவும் போக இவன் கொடுப்பதை கொண்டு செல்வது எவ்வாறு என்று குழம்பி எனக்கு வேண்டாம் என்றேன். அருகில் இருந்த நபர் திருநெல்வேலிக்காரர். அவன் கொடுத்ததை மறுபேச்சில்லாமல் எதுவும் கலக்காமலேயே வாங்கி குடித்து பணியாளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ''சார்...போதுமா'' என்று பணிவாக பணியாள் வினவ '' இன்னொரு லார்ஜ் கொடுங்க...அதில கொஞ்சம் தண்ணி மட்டும் கலந்துடுங்க'' என்றார். அதிர்ச்சியிலிருந்து மீளாமலே பணியாள் நகர்ந்தார்.
அபுதாபி வந்திறங்கிய போது நள்ளிரவு மணி 12.30.

ாஸ்கோ விமானம் அதிகாலை 3..05க்கு...காத்திருக்கிறேன்....பயணம் தொடரும். என்னோடு எஸ்.ராமகிருஷ்ணனும், சதத் ஹாசன் மண்டோவும், ராகுல சாங்கிருத்யனும் அவர்களின் படைப்புகள் வாயிலாக பயணிக்கிறார்கள். வாசகனுக்கு ஏது தனிமை?

No comments:

Post a Comment