Monday, May 23, 2016

யானைமலைப் பயணம்: 16-05-2016


தமிழக வாக்காளர்கள் தனக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது இந்த போலிஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நான் மதுரையில் என் மாமியார் வீட்டில் கட்டிலில் அமர்ந்தபடி மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அருகே இருந்த என் மகன் அப்பு ''எங்கேயாவது வெளியில் போகலாமாப்பா'' என்றான்.
வெளியே வானம் தான் தேக்கி வைத்திருந்த மேகங்களில் இருந்து தவணை முறையில் தண்ணீரை தாரை வார்த்துக் கொண்டிருந்தது.
இருப்பினும், நெடுநாள் ஆசையான யானைமலை அடிவாரத்தில் இருக்கும் சமணர்குகைக்கு செல்ல முடிவெடுத்தேன்.
நண்பர் வேலுவின் ஆட்டோவை வரவைத்து நானும் என் மனைவியும் மகனும் சென்றோம்.
எங்கள் வீட்டிலிருந்து 15.கி.மீ தொலைவில் தான் யானைமலை இருந்தது. மழை பெய்து ஓய்ந்த மாலையில் வெயிலின் தாக்கமில்லை. நிதானமான வேகத்தில் யானைமலையின் அடிவாரத்தை அடைந்த போது தான் அந்த குகைக்கு செல்லும் பாதை தற்காலிகமாக ஒருவாரம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்புவுக்கு மூட் அவுட்டாகி விட்டது. அவனது குறிக்கோள் சமணர் குகையை பார்ப்பதல்ல, ஆட்டோ பயணம் அவ்வளவே. இருப்பினும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டால் எதிர்கால வரலாறு என்ன சொல்லும்? ஆட்டோ ஓட்டுனரும் குடும்ப நண்பருமான வேலுவிடமே கேட்டோம்.
அவர் அருகே இருக்கும் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு போகலாம் என்றும் பின்பு அங்கேயிருந்து அருகில் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோயிலுக்கும் அதனருகே இருக்கும் பிரதியங்கிராதேவி கோயிலுக்கும் செல்லலாம் பரிந்துரைத்தார்.
சரி...எப்படியும் ஆட்டோவிற்கு வாடகை கொடுத்தே ஆகவேண்டும் எனவே செல்லலாம் என்றாலும் கூட வெறும் பெருமாள்,முருகன் மற்றும் அம்மன் போன்ற காரணிகள் என்னை உற்சாகப்படுத்தவில்லை.
இதை உணர்ந்த வேலு நரசிங்க பெருமாள் கோவிலில் விற்கப்படும் புளியோதரையின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.
மற்ற கோயில்களில் வழங்கப்படும் புளியோதரைக்கும் இங்கு விற்கப்படும் புளியோதரைக்கும் பெரிய வேறுபாடு உண்டென்றும் அது யானைமலையை ஒட்டி அமைந்துள்ள ஊற்று நீரில் செய்யப்படுவதால் பிரத்யேக சுவையை பெறுகிறது என்றார். இதை உறுதி செய்ய முதலில் ஒரு பொட்டலம் வாங்கி சுவைபார்த்து பின்பு கூட சன்னிதிக்கு செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
புளியோதரை எனக்கு பிடித்தமான ஒன்று. பள்ளியில் படிக்கும் போது எங்கள் வீட்டிலிருந்து 5.கி.மீ தொலைவில் உள்ள விரகனூர் அணை, 10கி.மீ தொலைவில் உள்ள விமான நிலையத்திற்கு இன்ப சுற்றுலா(?) செல்லும் போது அம்மா கட்டித்தரும் புளியோதரை பொட்டலத்தை பிரிக்கும் போது அதன் மணமும் அதில் ஒளித்து வைக்கப்பட்ட முட்டையும் அம்மாவின் அன்பும் ஒருசேர வெளிப்படும். அந்த தருணங்கள் வாழ்வின் மறக்க இயலாத மறக்க கூடாத தருணங்கள். எனவே புளியோதரையின் பொருட்டு பெருமாளை சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
அது ஒரு குடவரைக்கோயில். பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வட்டெழுத்துக்களும் தெலுங்கு எழுத்துக்களும் பாலி மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும் நிரம்பிய கோயில். இரண்டே இரண்டு சன்னிதிகள். ஒன்று பெருமாள் மற்றொன்று தாயார். தரிசம் முடிந்தது. இனி புளியோதரை. மடப்பள்ளியில் செய்யப்பட்டது என்று விற்பனையாளர் தெரிவித்தார். மற்ற கோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளியே செய்யப்பட்ட பிரசாதங்கள் விற்கபடும் சூழலில் இங்கே அவர்களே சுயமாக செய்து விற்கிறார்கள். அபாரமான சுவை. ஆளுக்கு இரண்டு பொட்டலங்கள் வாங்கி சாப்பிட்டோம். இரவு உணவு முடிந்தது.
அருகே நடை தூரத்தில் பாலதண்டாயுதபாணி கோயில். தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகன் ராஜ அலங்காரத்தில் இருந்தார்.
கோயில் மலையின் மீது இருந்த பெரும்பாறையின் மீது நிர்மாணிக்க பட்டிருந்தது. ஆகாயத்தில் கரிய மேகங்கள் சூழத் தொடங்கின.
இருள் கவிழும் நேரம். வானம் ஒரு பெருமழைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. மெல்ல பாறை மீது ஏறி அருகே இருந்த பிரதியங்கரா தேவி சன்னதிக்கு சென்றோம். சுற்றுச் சுவர்கள் கருமை நிற மரத்தால் அமைக்கப்பட்டிருக்க உள்ளே அம்மன் சிலை மஞ்சள் நிறத்தில் சிங்கத்தின் முகத்தை ஒத்த அமைப்புடன் பார்க்கவே ஒருவித கிலியை மனத்தில் உண்டுபண்ணியது.
சன்னிதியின் உள்ளே எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு விளக்கு சூழலின் அமானுஷ்யத் தன்மையை அதிகப்படுத்தியது. எதிரே இருந்த மண்டபத்தில் அமர்ந்தோம். மங்கிய ஒளியில் வழக்கத்தைக் காட்டிலும் மதுரை மிக ரம்மியமாக இருந்தது. அப்பு மழை வரும்வரை அங்கேயே அமர்ந்திருக்கலாம் என்றான். மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம். நாங்கள் வீடு திரும்பும் வரைக்கும் காத்திருந்து வானம் பெருமழையைக் கொட்டித் தீர்த்தது. அடுத்த முறை சமணர் குகைக்கு போவதற்கு முன்னால் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்று புளியோதரை சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment