Wednesday, May 18, 2016

சென்னை - மதுரை: ஒரு கொடுங்கனவு பயணம் - 14-05-2016
மே 16 அன்று தேர்தல் என்பதால் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான விடுப்பை அறிவித்திருந்தது. சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மனைவியையும் மகனையும் பார்க்க மதுரை செல்ல முடிவெடுத்தேன். தொடர்வண்டியில் டிக்கெட் முன்பதிவு செய்த என் பிரியசிநேகிதி சுஜாதா பெயரை டைப் செய்து பணம் கட்டுவதற்கு வங்கியின் வலைதளத்தை அணுகும் போது இருக்கை அனைத்தும் தீர்ந்து போய் காத்திருப்பு பட்டியலில் இரண்டால் இடமே கிடைத்தது. எப்படியும் கிடைத்து விடும் என்று நம்பிக்கை வேறு ஊட்டினாள். நம்பிக்கை மட்டும்தான் மிச்சம். ஆனால், ரயில்வே நிர்வாகம் மனம் இறங்கவில்லை. இறுதிவரை எனது பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்து பழி வாங்கி விட்டது. எனவே பேருந்தை தேர்ந்தெடுத்தேன். எனது மைத்துனன் முன்பதிவு செய்து தந்தான். ஆலந்தூர் பெரிய போஸ்ட் ஆபிஸருகே இரவு 10.15க்கு பேருந்து வரும் என்றும் நான் 10மணிக்கு அங்கே இருந்தால் போதும் என்றும் கூறினான்.
சென்னை வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. என் துணிகள் அடங்கிய பையையும் மடிக்கணிணி பையையும் எடுத்துக் கொண்டு போரூரிலிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி கத்திப்பாரா ஜங்ஷன் வந்தடைந்தேன். அங்கேயிருந்து நேராக சென்று பாலம் ஏறி விமான நிலையம் செல்லும் சாலையில் சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே அந்த போஸ்ட் ஆஃபிஸ் உள்ளது. எனவே ஒரு ஆட்டோவை அணுகினேன். அவர் எனக்குச் சொந்தமான இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பை எழுதிக் கேட்டார். அடுத்து ஒருவரை அணுகினேன். அவரோ நான் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், பேண்ட்,சட்டை மற்றும் உள்ளாடைகள் அனைத்தையும் கேட்டார். வீட்டின் மீதி வங்கிக்கடன் இருப்பதாலும் பொதுப்பேருந்தில் உள்ளாடை கூட இல்லாமல் பயணம் செய்ய தைரியம் இல்லாததாலும் ஜோதி தியேட்டரை நோக்கி சாலையின் குறுக்கே நடக்க ஆரம்பித்தேன். ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேசனைத் தாண்டி தபால் நிலையம் வந்தடைந்தேன். என்னைப் போன்றே தொடர்வண்டியில் டிக்கெட் கிடைக்காத அபாக்கியசாலிகள் குழுமியிருந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என ஒரே கூட்டம். நேரம் இரவு 9.30. அனைத்து ஆண்களின் ஆடைகளும் வியர்வையில் நனைந்திருக்க பெண்களின் ஆடைகள் வியர்வையின் தடமே இல்லாமல் புதிதாக இருந்தது. அதுவரை நான் அறிந்திராத வண்ணங்களில் பெண்கள் ஆடை அணிந்திருந்தனர். அவர்களை பேருந்து ஏற்றிவிட வந்த ஆண் நண்பர்கள் தங்களது பெண் தோழியருக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதிலும் மேலும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். தனியார் பேருந்துகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. ஒரே கூக்குரல்கள், குழப்பங்கள்..கூச்சல்கள்...! சாலை ரோந்துப்பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் வந்து ஒழுங்குபடுத்த துவங்கினார். ஒரு பேருந்து ஓட்டுனர் பக்கவாட்டில் வண்டியை நுழைக்க முயற்சித்த போது அவரிடம் மிக கண்ணியமாகவும் அன்பாகவும் பண்பாகவும் ''ஏண்டா நாயே...சோறத்தான திங்கற...இல்ல வேறெதையாவது திங்கறயா...அறிவு வேணாம்...போடா முன்னாடி'' என்றார். அடுத்து விதியை மீறி ஒரு பேருந்து வேகமாக கடந்து செல்ல அந்த ஓட்டுனரின் தாயைப் புணரப் போவதாக ஆத்திரமாக ஓலமிட்டார்.  இந்த குழப்பதிற்கு மத்தியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நிதானமாக இரு பேருந்துகளுக்கு மத்தியில் பயணிகளை இறக்கி விட்டு பணம் பெற்று சாலையின் குறுக்கே பாய்ந்து மாயமானார். இதைக் கண்ட ஆய்வாளர் கோபத்தின் உச்சிக்கே சென்று அந்த ஓட்டுனரின் ஆசனவாயை புணர்ந்து அங்கு சுண்ணாம்பு தடவப்போவதாக சூளுரைத்தார். சுண்ணாம்பின் மகத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க அவர் தவறியதால் எனக்கும் அது புரியவில்லை. எனது பேருந்து வரவில்லை. அந்த நடத்துனருக்கு தொலைபேசினேன். அவருடைய பதில் '' சார்...இன்னக்கி வெள்ளிக்கிழமை...ஐயர் இன்னும் வரலை...அவர் வந்ததுக்கு அப்புறம் பூஜை முடிந்த பின்னாடி தான் வண்டிய எடுப்போம்''. எப்போ சார் வருவாரு ஐயரு? - நான். அது தெரிஞ்சா நானே டைம் சொல்ல மாட்டேனா...வெயிட் பண்ணுங்க சார்'' என்று கோபத்தோடு இணைப்பை துண்டித்தார். அருகே இருந்த குல்பி ஐஸ் கடையில் வியாபாரம் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. பெண்கள் அனைவரும் குச்சி ஐஸையும் ஆண்கள் அனைவரும் மண் பாண்டத்தில் இருக்கும் ஐஸையும் ஏன் தெரிவு செய்கிறார்கள் என்ற எனக்கு புரியவில்லை. ஆண்கள் சாப்பிடுவதைவிட பெண்கள் குச்சி குல்பி ஐஸ் சாப்பிடுவதை காண ஒருவித தனிக்கிளர்ச்சி ஏற்படுகிறது. என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இரவு மணி 11.45. பேருந்து வரவில்லை.
500க்கும் அதிகமான மக்கள் அந்த சிறிய இடத்தில் கூடியிருந்தது அந்த பிராந்தியத்தின் வெப்பநிலையை  மேலும் அதிகப்படுத்தியது. மணி சரியாக 12. பேருந்து வந்தது. குளிர்சாதன வசதியோடு இருந்த போதிலும் மிக மோசமாக பராமரிக்கப்பட்ட பேருந்து எங்கும் தூசியும் குப்பையும். அத்தனைக்கும் நடுவே எனக்கு முன்னிருக்கையில் ஒரு அழகிய பெண் அமர்ந்து அந்த ஒட்டுமொத்த சூழலையும் அழகாக்கினார். மெல்லிய நீண்ட விரல்கள், அணிந்திருந்த ஆடைக்கு ஏற்றவாறு இளரோஜா நிற வண்ணத்தில் நகச்சாயம், கையில் இருந்த கடிகாரத்தின் பட்டை கூட அதே வண்ணம். செருப்பின் வார் கூட அதே வண்ணம். உள்ளாடைக்கு மட்டும் கருப்பு வண்ணத்தை அவர் தெரிவு செய்ததற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கக்கூடும். இருப்பினும் அந்த எரிச்சலூட்டும் சூழலை குளிர்வித்த பெருமை அவரையே சாரும். 12.45 மணிக்கு பெருங்களத்தூர் வந்து மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி வந்த பேருந்து மேலூருக்கு அருகே காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. தேர்தல் சோதனை. மீண்டும் ஒத்தகடை அருகே சோதனைக்காக நிறுத்தப்பட்டது. ஒருவழியாக மதுரை வந்தடைந்து எனது துணிப்பையை மேலிருந்து எடுத்த போது குளிர்ச்சாதன வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் வடிந்து எனது ஆடைகள் அனைத்தையும் நனைத்திருந்தது. வீட்டிற்கு சென்று குளித்தபின் எதை அணிவது என்ற குழப்பம் அதிகரிக்க, சென்னை - மதுரை பயணம் என்னும் கொடுங்கனவு நனவானது...!

No comments:

Post a Comment