Tuesday, April 12, 2016

அன்னதானமும் செருப்பும்:


நேற்று மாலை வீட்டிற்கு வந்த வெங்கி அண்ணா தற்கால மருத்துவத்துறையின் போக்குகள் குறித்து விவாதித்த பின் ஞாயிற்றுகிழமை அன்று கரையான்சாவடியில் இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான் அதில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வெங்கி அண்ணா எனக்கு உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர். மறுக்க இயலாமல் ஒப்புக்கொண்டேன். ஞாயிற்றுகிழமை பூஜை முடிந்து சோறு போடும் நேரத்தை சரியாக தெரிந்து கொண்டு கோயில் சென்றடந்தேன்.
கோயிலின் நெடிய மரக்கதவுகள் மூடி இருந்தன. பக்கவாட்டில் இருந்த ஒரு சிறிய கதவை திறந்து கொண்டு வெங்கி அண்ணா என்னை நேராக அன்னதான கூடத்திற்கு அழைத்து சென்றார். முழுக்க முழுக்க கேரள பாணியில் அமைக்கப் பட்டிருந்த கோயில் நிசப்தமாக இருந்தது. ஒவ்வொரு சன்னிதியின் மேற்கூரையும் கேரள பாணியில் ஓடுகள் பதிக்கபட்டு பக்கவாட்டிலிருந்து மேல் நோக்கி எழும்பி சென்றன. கோயிலின் மத்தியில் இருந்த விதானத்தில் இருந்து சூரிய ஒளி கீழ் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. பக்கவாட்டு சுவர்கள் பரப்பும் இருளும் மேலிருந்து கீழ் நோக்கி பாயும் வெளிச்சமும் கூடி முயங்கி, பொருளை சுமக்கும் சொற்களைப் போல கோயில் அமைதியை சுமந்து அமானுஷ்ய சூழலை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் சாப்பாட்டு மேசையில் காத்திருக்க, அன்னதான ஒருங்கிணைப்பாளர் என்னையும் பரிமாறும்படி கேட்டுக் கொண்டார். மூளையின் அடி ஆழத்திலிருந்து இலையை போடு அல்லது அப்பளத்தை போடு (இரண்டுமே எடை குறைவு என்ற கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவு) என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டு எனது வாய்வழியே அது வெளிப்படும் முன் முட்டைகோஸ் கூட்டு நிரம்பிய வாளியும் கரண்டியும் என் கையில் திணிக்கப்பட்டது. சமைத்தலும் அதை நளினமாக பரிமாறுவதும் ஒரு கலை. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட. கூட்டை இலையில் நான் பரிமாறிய அழகைக் கண்ட அன்னதான ஒருங்கிணைப்பாளர் பதறி விட்டார். ''சார்...கொஞ்சமா வைங்க சார்...இன்னும் 200 பேருக்கு வேணும் சார்'' என்றார். இதைக்கண்ட அதிதி ஒருவர் ''இங்கே பாரு...சாமியே குடுத்தாலும்...பூசாரி விட மாட்டேங்குது...நீங்க நல்லா வைங்க தம்பி'' என்றார். அன்னதானம் என்பது நிதானத்தோட செய்யப்பட வேண்டிய ஒன்று என்று உணர்ந்தேன். அந்த பந்தி முழுக்க நானும் வெங்கி அண்ணாவும் இன்ன பிற தன்னார்வ நண்பர்களும் பரிமாறினார்கள். நாங்களும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். மூன்று மாதங்களுக்கு முன் என் மாமனார் எனக்கு வாங்கி கொடுத்த விகேசி ப்ரைடு செருப்பு (எண்-8) களவாடப்பட்டிருந்தது. உள் மனத்திலிருந்து ''ஏதாவது செய்...ஏதாவது செய்...என்ற ஆத்மாநாமின் கவிதை வரிகள் ஒலிக்கத்தொடங்கின. கவிதைவரியின் தீவிரத்தை காலில் பரவிய வெப்பம் திசைதிருப்பியது. உள்ளே சன்னிதிகளில் இருந்த தெய்வங்கள் கையறு நிலையில் என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தன...!

No comments:

Post a Comment