Tuesday, April 12, 2016

விமானத்தில் உணவும் மதுவும்:


நைரோபியிலிருந்து துபாய்க்கு புதன்கிழமை மதியம் 4.30க்கு கிளம்பிய விமானத்தில் குஜராத்தியரின் கூட்டம். வழக்கம் போல கடைசி இருக்கையை கேட்டு வாங்கிகொண்டேன். பயணசீட்டை முன்பதிவு செய்த முகவர் என் பெயரை உத்தேசித்தோ, எனது நிறுவனத்தின் பெயரை உத்தேசித்தோ இந்து உணவை பதிவு செய்து விட்டார். எல்லோரும் தந்தூரி சிக்கனும் பிரியாணியும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்கு வெண்சோறும் கீரையும் பரிமாறப்பட்டது. பணிப்பெண்ணிடம் இதை மாற்ற முடியுமா என நான் வினவ, அவளோ இது பிரத்யேகமாக எனக்காக கொண்டுவரப்பட்டது என்றும் இதை திரும்ப எடுத்துச்செல்ல முடியாது என்றும் மறுத்து விட்டாள் (அம்மணி லெபனான் தேசத்தை சேர்ந்தவர் பெயர் - ஆயிசா). அதை வாங்கி வைத்துக் கொண்டு ''தேமே'' என்று விழித்துக் கொண்டிருந்தேன். விமானத்தின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த ஒளி உமிழும் நட்சத்திர ஸ்டிக்கர்கள் என்னைப் பார்த்து பரிதாபமாக சிரித்துக் கொண்டிருந்தன (தற்குறிப்பேற்ற அணி...?)ஆனாலும் ஒரு நம்பிக்கை கீற்று தெரிந்தது. எமிரேட்ஸ் நிர்வாகம் எனக்கு ஒரு உணவு கூப்பன் வழங்கி இருந்தது. அதைக் கொண்டு துபாய் விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட 10 உணவகங்களில் சாப்பிட இயலும். ஆனால் ஒரே ஒரு விதி அதை 12மணிக்குள்ளாக பயன்படுத்தப்பட வேண்டும். துபாய் வந்திறங்கிய போது மணி 11.20. நான் இறங்கிய இடத்திலிருந்து டேஸ்ட் ஆஃப் இந்தியா உணவகத்தை அடைய 20 நிமிடம் நடக்க வேண்டும். சுமார் 1.8கி.மீ தூரம். துரிதமாக நடந்தும் கடக்க இயலாத சூழல்...காரணம் கூட்டம்..நெரிசல். உணவகத்தை அடைந்த போது அன்றைய தினம் கோழி பிரியாணியும் சால்னாவும் தயிர் பச்சடியும் சுடச்சுட இருந்தது. வங்களாதேசத்தை சேர்ந்த சகோதரர். ரஷீத் அன்பொழுக பரிமாறினார். சாப்பாட்டுத்தட்டில் அதிகமாக உணவைப் பார்த்துவிட்டால் எனக்கு முகத்திலடித்து விடும். அப்படி ஒரு வியாதி எனக்கு. சிறுகசிறுக பரிமாறப்பட வேண்டும், குறிப்பாக அசைவ வகை உணவுகள். என்னோட சுரையா அத்தை பிரியாணி செய்வதில் வல்லவர். அதைவிடப் பிரமாதமாக எனக்கு பரிமாறுவார். அருகில் நின்று கொண்டு சிறுகசிறுக எடுத்து வைப்பார். சூடான பிரியாணியும் சுகந்தமான மணமும் அதை அன்பொழுக பரிமாறும் அழகும் எனது வாழ்வின் சுகமான தருணங்கள். ரஷீத் அவ்வாறே பரிமாறினார். ''வேணும்கிறத கூச்சப்படாம கேட்டு சாப்பிடுங்க சார்...ஃபிக்சட் அளவு தான் சார் இங்கே...ஆனால் நான் கேக்குற அளவு கொடுப்பேன் சார்...சிலர் கொஞ்சமா சாப்பிடுவாங்க...சிலர் நல்லா சாப்பிடுவாங்க...அட்ஜஸ்ட் ஆயிடும் சார்...நீங்க சாப்பிடுங்க'' என்றார். சாப்பிட்டதும் சென்னை ஃபில்டர் காபி ஒன்றும் கொடுத்தார். இனி நான் முன்பதிவு செய்யும் போது நான் இந்து அல்ல தமிழன் என்பதையும் எனது உணவை பிறர் தீர்மாணிப்பது உரிமை மீறல் என்றும் முகவரை அறிவுறுத்தி நல்ல அசைவ உணவு உண்ணத் திட்டமிட்டிருக்கிறேன்.
விமானத்தில் தாராளமாக மது பரிமாறப்பட்டது. நானும் என் பங்கிற்கு 50மி.லி கொள்ளளவு கொண்ட பக்கார்டி வெள்ளை ரம் வாங்கி சேமித்து வைத்திருக்கிறேன் (நான் வன்மது அருந்துவதில்லை). உடன் பணிபுரிவோருக்கு பகிர்ந்தளித்தது போக இன்னும் 8குப்பிகள் கைவசம் உள்ளன. முகனூல் உறவுகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். முதலில் வந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். நேரில் வந்து பெற்றுக்கொள்வோருக்கு ஊறுகாய் பொட்டலம் இலவசமாக வழங்க உத்தேசித்திருக்கிறேன்.

No comments:

Post a Comment