Thursday, April 14, 2016

தனிமையும் தயிர்சாதமும்:


ஒரு ஆண்டில் இந்த தேசம் எத்தனை பருவமாற்றங்களை சந்திக்கிறதோ அதைவிட அதிகமான பருவமாற்றங்களை எனது வாழ்க்கை சந்திக்கிறது. ஒரே ஆண்டில் கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம் ஆகவும், சராசரி குடும்பஸ்தனாகவும், வெளிநாடுகளில் அதிநவீன ஐந்து நட்சித்திர   விடுதியில் தங்கி ஒரு மகாராஜா போன்ற வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் அமையும் எனது ராசிக்கட்டத்தை ஆராய விருப்பமுடையோர் என்னை சுயவிலாசமிட்ட ஐந்து ரூபாய் தபால்தலை ஒட்டிய தபால் உறையுடன் அணுகலாம். எனது மகனின் ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாள் மனைவியும் மகனும் மதுரை சென்று விட்டனர். தனிமை எனக்கு புதிதல்ல. எனது 20வயது முதல் 30வயது வரை அதுவே என் வாழ்க்கை முறை. ஆனால் திருமணத்திற்கு பின் அதுவே கொடுமையானது. துன்பத்தின் சுவடு படியாத இன்பம் கிடையாது என்பார் கண்ணதாசன். இந்த இரண்டு மாத துன்பத்திற்கு பின் எனக்கு கிடைக்கும் இன்பம் அலாதியானது. பிரச்சினை ஒன்றே ஒன்று தான் உணவு. மனைவி இருந்தவரை அதுவொரு விடயமே இல்லை. ஆனால் சென்னை போன்ற பெருநகரத்தில் இதுவொரு வினோதமான பிரச்சினை. நடுத்தரமான உணவகங்களில் கூட மதியஉணவின் விலை ரூ.80லிருந்து ரூ.90வரை. பணம் ஒரு பொருட்டல்ல என்ற போதும் ஆரோக்கியத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழல். தர்மம் தலைகாக்கும் என்பார்கள்., தலையை காக்குதோ இல்லையோ வயிற்றை காக்கும் என்பது என் அனுபவம். மனைவியும் மகனும் கோடை விடுமுறைக்காக பிரியும் தருணம் நான் ஆப்பிரிக்காவின் கென்யதேசம் சென்றிருந்தேன். அலுவலகம் திரும்பியவுடன் எனது மதியஉணவுப் பிரச்சினையை நண்பர் சங்கரநாராயணன் ஏற்றுக்கொண்டார். சில உடற்கூறு பிரச்சினை காரணமாக அவர் மதிய உணவாக தயிர்சாதம் மட்டுமே எடுத்துக் கொள்வார். அவரோடு சேர்த்து எனக்கும் எடுத்துவரத் தொடங்கினார். மாதுளை முத்துக்களும் பச்சை திராட்சையும் அளவிடற்கரிய அன்பும் கலந்து திருமதி. சங்கரநாராயணன் செய்யும் தயிர்சாதத்தை உண்பது ஒரு பேரனுபவம். கொளுத்தும் சென்னை வெயிலில் அந்த தயிர்சாதம் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர குளிரவைக்கும் ஆற்றல் பெற்றது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பார் அய்யன் வள்ளுவர். வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கும் வாழும் உயிர்களுக்கெல்லாம் என்பான் பாரதி. இவ்வாறு சோறிடும் இருவருக்கும் என்ன கைமாறு செய்வதன்று திருவள்ளுவரும் பாரதியும் எனக்கு சொல்லத்தரவில்லை. எனவே, வளர்ந்து பெரியாளான பின்பு திருமதி. சங்கர நாராயணனுக்கு மாம்பழ வண்ண பட்டுப்புடவையும் திரு. சங்கர நாராயணனுக்கு பச்சைப்பட்டு அங்கவஸ்திரமும் எடுத்துத்தர உத்தேசித்திருக்கிறேன்.

No comments:

Post a Comment