Monday, April 18, 2016

அஞ்சப்பரும் ஆண்டவனும்:17-04-2016


ஞாயிற்றுகிழமை சென்னை நகரம் அனல் காற்றில் அவிந்து கொண்டிருக்க, அடுக்களைக்குள் புகப்பயந்த இல்லத்தரசிகள் மதிய உணவிற்காக அஞ்சப்பர் உணவகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மனைவி இருந்தும் தனித்து விடப்பட்ட நானும், மனைவியே இன்னும் அமையாத என் மைத்துனனும் அந்த ஜோதியில் கலந்தோம். பிரியாணியும் மட்டன் சுக்கா வருவலும் வரக் காத்திருந்தோம். வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகம் இருந்தாலும் அமைதியும் அதிகம் இருந்தது. உணவகத்தை குறைந்த ஒளியும் ரம்மியமான இசையும் இளங்குளிரும் நிறைத்திருந்தன. பார்சல் பிரிவை நோக்கி ஒரு பெரியவர் வியர்த்து நனைந்த சட்டையோடு உள்ளே நுழைந்து ''இரண்டு மட்டன் பிரியாணி பார்சல் கொடுங்க'' என்றார்.
''முன்னூற்றி எழுபது ரூபாய் கொடுங்க'' - இது ஓட்டல் சிப்பந்தி.
''முன்னூற்றி எழுபது ரூபாயா....ஆ'' ஒண்ணு எவ்வளவுங்க?
ஒரு பிரியாணி 185 ரூபாய்...பில் போடவா...வேணாமா?
ஒரு பிரியாணிய ரெண்டு பேரு சாப்பிட முடியுமாய்யா?
ஏங்க...என்னங்க பேச்சு இது...உங்க வீட்டு ஆளுங்க யாரு...அவங்க எவ்வளவு சாப்பிடுவாங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?
ரெண்டும் பிராயத்து பிள்ளைக இல்லய்யா...சின்னதுக...12 வயசு...அப்பறம் 10 வயசு...
அதெல்லாம் எனக்கு தெரியாது...பில் போடவா...வேணாமா...'' குரலை உயர்த்தினார் சிப்பந்தி.
ஐயா..எங்கிட்ட 230ரூவா இருக்கு...ஒரு பிரியாணியும் மீதி ஐம்பது ரூவாய்க்கு வெறும் பிரியாணி சோறும் தர முடியுமாய்யா''
ஏங்க... இது ஓட்டலுங்க...காய்கறி கடையா என்ன...மிச்சம் இருக்குற சில்லறைக்கு பச்சமொளகா குடுக்க...
''சரிய்யா...ஒண்ணே ஒண்ணு கொடுங்க...''
நாங்கள் பிரியாணியை காலி பண்ணிவிட்டு பின் வெண்சோறு வாங்கி ரசமும் மோரும் கலந்து சாப்பிடும் வரை பெரியவர் உணவகத்தின் வாசலில் யோசனையோடு நின்று கொண்டிருந்தார். கைகழுவி விட்டு வரும் போது மறைந்திருந்தார்.
வயிறு நிறைந்திருந்தாலும் மனம் நிறையவில்லை. ஒரே சிந்தனையாகவே இருந்தது. அந்த பிரியாணிக்காக அவர் வீட்டில் காத்திருக்கும் அந்த குழந்தைகளின் ஏக்கம் நிறைந்த கண்கள் நிழலாடின. அவர் அதை எப்படி பகிர்ந்து கொடுப்பார்? ஒருவேளை அந்த குழந்தைகள் இன்னும் வேண்டுமென்றால் என்ன பதில் சொல்லுவார்? விரக்தி கோபமாய் மாறினால் அவர்களை அடிப்பாரோ? ச்சே...!
வெளியே நகரம் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்த மாதிரி மனசும் தகித்துக்கொண்டிருந்தது...
அருகில் இருந்த தேநீர் கடையில் இருந்து ஜேசுதாஸ் குழந்தைகளுடன் பாடிக் கொண்டிருந்தார்.
'இறைவன் உலகத்தைப் படைத்தானாம்!
ஏழ்மையை அவன் தான் படைத்தானாம்!
ஏழ்மையை படைத்தது அவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?''
ஆமாம்...எதற்காக?

No comments:

Post a Comment